கவிஞர் வைகறை!
நிழற்படம் : நன்றி மலர்த்தரு மது/கஸ்தூரி
உதிர்ந்து
கிடக்கும் சாம்பல்
ஏற்றப்பட்ட
போதுதான் மறைக்கப்பட்டன
உறவுகள்
பலரது முகங்கள்.
குளுகுளு
அறையில்
நீ வாங்கிக் குடிக்கும்
குளிர்பானங்களின்
அடியே
செத்துக்
கிடக்கிறான் இளநீர் வியாபாரி.
'வாட்ஸ்
அப்' செய்தியை அறிவிக்கும்
ஒற்றை
'பீப்' ஒலியில்
காதுகளை
விட்டு
அப்புறப்படுத்தப்
படுகின்றன
அருகிருப்போரின்
அழைப்புகள்.
அத்தை,
சித்தி, பெரியம்மா
மாமா, சித்தப்பா, பெரியம்மா உறவுகளை
வசதியாய்
புதைத்து விட்டோம்
ஆண்ட்டி,
அங்கிள்களுக்குள்.
மதிற்சுவர்
எழுப்பிய
செங்கல்
தீவுக்குள் வாழ்பவனே!
வங்கிப்
புத்தகப் பக்கங்களிலும்;
கணினி மேசைகளுக்கடியிலும்;
கைபேசித்
தொடுதிரைகளுக்குள்ளும்
உதிர்ந்து
கிடக்கிறதுன் சாம்பல்.
அதையொரு
கலசத்தில் சேகரித்து
நீயே கரைத்துக் கொள்
ஏதாவதொரு
ஆற்றில்.
ஆயிரம்
வேலையிருக்கக் கூடும்
அப்போது
உன் மகனுக்கும்!
புதுக்கோட்டைப் பதிவர் விழாவின் புதுக்கவிதைப் போட்டியின் நடுவராக நாங்கள் இருந்த போதுதான் கவிஞர் வைகறையை, உதிரும் சாம்பல்கள் எனும் அவரதுக் கவிதை மூலம் அறிமுகம். பெயர் அறியாமலேயே நாங்கள் தெரிவு செய்த முதல் 10 கவிதைகளுள் இடம் பெற்று பின்னர், முதல் 5 ற்குள் இடம் பெற்றார். இறுதியில் வெற்றியும் பெற்றார். ஆனால் இன்று மரணம் அவரை வெற்றி கொண்டு, கவிதையின் தலைப்பாகிப் போனார் இந்த இளம்வயதுக் கவிஞர்.
புதுக்கோட்டைப் பதிவர் விழா! பதிவர்களின் புத்தகங்கள் விற்பனையிடத்தில் கவிஞர் வைகறை! அதுதான் நாங்கள் முதன் முதலாக நேரில் சந்தித்த தருணம். தன்னை
அறிமுகப் படுத்திக் கொண்டார். சிறு குழந்தை போல் விளையாட்டுத்தனமான பேச்சு. சிரிப்பு. மிக மிக மென்மையான பேச்சு.
நாங்கள் விற்கப்படாத விசுவின் புத்தகங்களில்,
ஓரிரு புத்தகங்களை பதிவர் சகோ மைதிலியிடம் கொடுத்துவிடச் சொல்லி மீதம் இருந்த புத்தகங்களை
நாங்கள் எடுத்து வைத்துக் கொண்ட போது எங்களிடம் விளையாட்டாய் பேசிக் கொண்டே, எங்களில் கீதாவைக்
கலாய்த்துக் கொண்டே, விசுவின் ஒரு புத்தகத்தை எடுத்து எங்கள் கையேழுத்தை அதில்
பதியச் சொன்னார். எங்களுக்கு வியப்பு. நாங்களல்ல இதன் ஆசிரியர், இதன் ஆசிரியர்
விசுஆசெம் அமெரிக்கவாசம் என்று சொன்ன போதும்,
“உங்கள் அன்பளிப்பாக
இருக்கட்டுமே! அன்புடன் உங்கள் கையெழுத்தைப் போட்டுக் கொடுங்கள், ப்ளீஸ்” என்று
அன்புடன் மீண்டும் மீண்டும் கேட்கவும், மிகவும் கூச்சப்பட்டுக் கொண்டே நாங்கள்
இருவரும் கையெழுத்திட்டு அந்தப் புத்தகத்தைக் கொடுத்த போது அவரது மகிழ்வைப்
பார்க்க வேண்டுமே! இப்போதும் அந்த முகம் கண்களிலும் மனதிலும். பளிச்சிடுகின்றது.
சமீபத்தில் புத்தகமும் வெளியிட்டார்.
சென்றவாரம் கூட வீதி
இலக்கியக் கூட்டத்தை நடத்தியுள்ளார். அதை புதுக்கோட்டை சகோ கீதா அவர்களும் தனது
தளத்தில் பகிர்ந்திருந்தார்.
மலர்த்தரு மதுவின் பதிவைப் பார்த்ததும் நம்ப முடியவில்லை. எப்படி? ஏன்? என்ற கேள்விகள் மனதில். மைதிலி சகோவிடம் பேசினோம். வைகறைக்கு லிவர் இன்ஃபெக்ஷன் இருந்தது என்றும், கொஞ்சம் கஷ்டப்பட்டார் என்றும் சொன்னார். சற்று உதாசீனப்படுத்திவிட்டாரோ?
மலர்த்தரு மதுவின் பதிவைப் பார்த்ததும் நம்ப முடியவில்லை. எப்படி? ஏன்? என்ற கேள்விகள் மனதில். மைதிலி சகோவிடம் பேசினோம். வைகறைக்கு லிவர் இன்ஃபெக்ஷன் இருந்தது என்றும், கொஞ்சம் கஷ்டப்பட்டார் என்றும் சொன்னார். சற்று உதாசீனப்படுத்திவிட்டாரோ?
திருநெல்வேலிக்காரரான
வைகறை, பணி நிமித்தம் சென்ற இரு வருடங்களாக பதுக்கோட்டை வாசம். (பதிவர் மைதிலியிடமிருந்து அறிந்தோம்) திருநெல்வேலிக்காரர்
புதுக்கோட்டைக்கு வந்து எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்து, தனது இறுதி முச்சைப் புதுக்கோட்டையிலும்
பதிந்திருக்கிறார். புதுக்கோட்டை மண்ணின் காற்றில் கலந்தும் இருப்பார்.
வாழ்க்கை புதிரானது,
விளையாடுகிறது என்று சொல்லுவோம். ஆனால் இப்படியா புதிராய் விளையாட வேண்டும்? 4
வயதுக் குழந்தை, இளம் மனைவி ஜோஸ்ஃபின், இந்த இழப்பை ஈடு செய்யவும், அவர்களுக்கு
இதனைத் தாங்கும் திடமும் கிடைத்திடவும் வேண்டுவோம். வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை. மனம் கனக்கிறது. வைகறையின்
ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். ஆழ்ந்த இரங்கல்கள்.
சாவிலிருந்து - 20 நாட்களுக்கு முன் எழுதிய கவிதை..
ஒரு தூக்குக் கயிறென
தேங்காய்ச் சில்லு தொங்கிக் கொண்டிருக்கும்
மரணத்தின் கூண்டிற்குள்
இரவெல்லாம் அல்லாடிக் கொண்டிருந்த
எலியொன்று
இப்போது திறந்து விடப்படுகிறது
ஒரு கயிற்று சாக்கிற்குள்.
உயிரைக் கையில் பிடித்தபடி
ஓடுகிறது எலி
சாவிலிருந்து
சாவுக்குள்!
தேங்காய்ச் சில்லு தொங்கிக் கொண்டிருக்கும்
மரணத்தின் கூண்டிற்குள்
இரவெல்லாம் அல்லாடிக் கொண்டிருந்த
எலியொன்று
இப்போது திறந்து விடப்படுகிறது
ஒரு கயிற்று சாக்கிற்குள்.
உயிரைக் கையில் பிடித்தபடி
ஓடுகிறது எலி
சாவிலிருந்து
சாவுக்குள்!
-வைகறை
எழுதிக் கொண்டிருப்பது கவிஞர் வைகறை
சாவிலிருந்து சாவுக்குள்! இதோ அவரும் அந்தச் சாவுக்குள். மரணத்தின் கூண்டிற்குள்!
ஆழ்ந்த இரங்கல்களுடன்...
ஆழ்ந்த இரங்கல்களுடன்...
இந்தச் செய்தியினைக் கேட்கவே மிகவும் வருத்தமாக உள்ளது. :(
பதிலளிநீக்குஎன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இழப்புதான்...
பதிலளிநீக்குகவிஞர் வைகறை
குறித்து எனக்கேதும்
தெரியாது....
ஆனால் இப்படிதான்
அறிமுகம் ஆவார் என்று
நான் நினைக்கவேயில்லை...
அவரது ஆன்மா இறைவனிடம்
இளைப்பாற பிரார்த்தனை செய்கிறேன்...
வருந்துகின்றோம் :-(
பதிலளிநீக்குபேரதிர்ச்சி. நல்ல எழுத்தின் மூலமாக எங்களை ஈர்த்த நண்பர் நம்மை விட்டுச்சென்றுவிட்டார் என்பது நம்ப முடியவில்லை. மரணத்திற்கு இரக்கமேயில்லையா?
பதிலளிநீக்குநண்பரின் பிரிவினை மனம் நம்ப மறுக்கிறது
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
செய்தி கேட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. முக நூலில் எனது நண்பர். அவரது பல கவிதைகளை அடிக்கடி அங்கு பார்த்திருக்கிறேன். ஆழ்ந்த இரங்கல்கள்.
பதிலளிநீக்குஆழ்ந்த துயரத்துடன் இருக்கிறேன்..அவர் இருப்பும் ,இறப்பும் மின்னலை ஒத்ததாய் இருக்கிறது..அத்தனை இலகுவானவன்.பதிவர் சந்திப்பில் விருந்தினர்க்கான அறைகள் ஏற்பாட்டுக்குழுவில் நானும் அவரும்...எந்த நேரம் அழைத்தாலும் வந்துவிடுவார்..வலைப்பதிவர் கையேட்டில் அவர் வியர்வை இருக்கும்....இன்னும் நிறைய,நிறைய...
பதிலளிநீக்குஎங்கள் துயரை பகிர்ந்து கொள்கிறோம்
வேதனை. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்
பதிலளிநீக்குமிகுந்த வேதனை. இளம் வயதில், அதுவும் நான்கு வயது குழந்தையையும் இளம் மனைவியையும் விட்டுச் சென்றது மனதை வாட்டுகிறது. அவரின் குடும்பம் இந்த இன்னலில் இருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்கட்டும்.
பதிலளிநீக்குஅவரைப் பற்றி நான் அதிகம் அறிந்திருக்கவில்லை என்றாலும் பதிவர் என்ற முறையில் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு லிவரில் இன்ஸ்பெக்ஷன் என்பதை உங்கள் பதிவின் மூலம் அறிந்தேன் . இதே பிரச்சனைதான் எனது மனைவிக்கும் கடந்த டிசம்பர் மாதம் வந்தது நல்ல வேளை நாங்கள் இங்கு வசித்ததால் நல்ல டாக்டரிடம் காண்பித்து இப்போது மிக நல்ல நிலைக்கு திரும்பிவிட்டாள். ஒரு வேளை இவரும் நல்ல டாக்டரிடம் காண்பித்து இருந்திருந்தால் இந்த மறைவு ஏற்ப்பட்டு இருக்காது. அவரின் குடும்பம் இந்த இன்னலில் இருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்கட்டும்.
பதிலளிநீக்குஆம் தமிழா அவர் தன்னைக் கவனித்துக் கொண்டிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அலட்சியமாக இருந்துவிட்டாரே!!
நீக்குO my God! உங்கள் மனைவிக்குமா? ம்ம்ம் சரியான ட்ரீட்மென்ட் கொடுத்துவிட்டால் நல்லதுதான்..உங்கள் மனைவிக்கு இப்போது நல்ல நிலையில் இருப்பது மிக்க மகிழ்ச்சி தமிழா. ஏனென்றால் அது எவ்வளவு பிரச்சனை பண்ணியிருக்கும் என்பது தெரியும்.....இதைப் பற்றி ஒரு விழிப்புணர்வு பதிவு போடலாமா என்று கூட தோன்றியது/தோன்றுகின்றது.
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குகவிஞர் வைகறையின் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன். அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகவும் சிறிய வயதினராக இருக்கிறாரே! செய்தி கேட்கவே மனது பாரமாகிறது.
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் இந்த மாதிரி சிறுவயதினர் இறந்து போவது அதிகமாகக் காதில் விழுகிறது. நமது ஆரோக்கியம் பற்றிய புறக்கணிப்பே காரணம் என்று தோன்றுகிறது. நமக்கு ஒன்றும் ஆகாது என்று நினைத்து எல்லோரும் ஆரோக்கியத்தை கடைசி நிலைக்குத் தள்ளிவிடுகிறார்கள்.
இவரது இழப்பு இவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கே இழப்பு. நன்றாக வாழ்ந்து பல்கிப்பெருக வேண்டிய வயதில் என்ன துயரம் இது!
இவருடன் ஒரேயொரு நாள்தான் பழகினேன் மென்மையான மனிதர் மிகவும் வேதனையான விடயம்.
பதிலளிநீக்குபலர் என்னைப்போல் க்யூவில் காத்திருக்க
பதிலளிநீக்குமலராத சில மொட்டுக்கள் முந்திக்கொண்டு போய்ச் சேருவது
உலர்ந்து போன இலைச் சருகளில் இதயங்களில்
வெந்நீர் ஊற்றுவது போல் இருக்கிறது.
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
சுப்பு தாத்தா.
எனக்கு இவர் பற்றி தெரியாவிட்டாலும் ஒரு சக பதிவர் இளம் வயதில் இறந்தது பற்றி வருந்துகிறேன் .அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.
பதிலளிநீக்குலிவரில் பல பிரச்னைகள் நாம் உண்ணும் உணவுகளாலும் , சில சமயங்களில் நேரமின்மையால் உண்ண மறப்பதினாலும் வருகின்றன.எனக்கு இந்தப் பிரச்னை இருப்பது 1999 ல் கண்டு பிடிக்கப் பட்டு தெரியாத்தனமாக ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டது. பிரச்னை இன்றும் தொடர்கிறது .
நார்மலாக உள்ளவர்கள் கூட வெளி சாப்பாட்டு ( முக்கியமாக வார இறுதி )தவிர்ப்பது உடம்புக்கும் பர்சுக்கும் நல்லது .வெளியில் விற்கும் எண்ணைப் பண்டங்களை ஒதுக்கவும்.
நாங்கள் வெளியில் செல்லும் போது என் கணவருக்கான தேநீர் முதற்கொண்டு தயாரித்தது எடுத்துச் செல்வேன்
.கீதா அவர்களின் பிளாக் நிறையப் பேர் படிப்பதால் இதை படிக்கும் பதிவர்கள் முடிந்த வரை வீடு சாப்பாடு சாப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு இந்த லிவர் பிராப்ளம் மற்றும் அல்சர் வலி யால் கிட்டத்தட்ட ஒரு நாளில் இரண்டு மணி நேரம் வலியாலும் அது கூடவே ஒட்டிக்கொண்டு வரும் மனச் சோர்வினாலும் வீணாகிறது... மற்றவர்களும் கஷ்டப்பட வேண்டாமென்றுதான் இதை எழுதுகிறேன்
மிக நல்ல கருத்தை இங்கு வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. எல்லோருக்கும் பயனாக இருக்கும்...
நீக்குகவிஞர் வைகறை அவர்களுக்கு அஞ்சலி..
பதிலளிநீக்குஅவர் தம் குடும்பத்தினர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் ஆறுதலையும் தேறுதலையும் தந்தருளட்டும்..
வாழ்க்கை புதிரானது, அது நிணைத்த இடத்தில் விளையாடுகிறது. அதன் விளையாட்டால் அன்பானவர்களுக்கம் நண்பர்களுக்கம் வேதனையைத் தருகிறது.
பதிலளிநீக்குபடிக்கவே கஷ்டமாய் இருக்கிறது. அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் மன ஆறுதலை தர வேண்டும்.
பதிலளிநீக்குமனம் வேதனையில் கணக்கிறது...
பதிலளிநீக்கு.
கடந்த மாதம் மதுரைக்கு வந்திருந்த போதும் கூட அவருடன் பேசினேன் ,அவர் மறைவு வேதனை தருகிறது !
பதிலளிநீக்குபாவலர் (கவிஞர்) எவரும்
பதிலளிநீக்குசாவடைந்ததாய் வரலாறில்லை
வைகறை - நீ என்றும்
வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்!
ஓ! பாவலனே (கவிஞனே)!
வைகறை என்னும் பெயரில்
பாக்களால் அறிவை ஊட்டினாய்
படித்தவர், கேட்டவர் நெஞ்சில் வாழ்கின்றாய்!
கிட்ட நெருங்காமல் எட்டப் போய்
எங்கிருந்தோ நம்மாளுங்க உள்ளத்தில்
வாழும் வைகறையின் குடும்பத்தாருடன்
துயர் பகிருகின்றோம்!
வெள்ளந்தியான அவரது குணத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்குநேற்று வந்து கருத்து வெளியிட்டு இருந்தேன் வரவில்லை போலும்...
பதிலளிநீக்குஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
இளம் வயது. நல்ல மனம்,உழைப்பாளி,இனியவர், எளியவர், கவிஞர். ஏன் இம்மாதிரி படித்ததும் நினைக்கத் தோன்றியது. எழ்ழளவோ வயது முதிர்ந்தவர்கள் காத்திருக்க இவர்களுக்கு ஏனோ கடவுள் முன்னுரிமை ெளித்து வட்டார். எனக்கு அவரைப் பற்றித் தெரியாவிட்டாலும், அவரின் மனைவியையும், குழந்தையையும் நினைத்து மனம் கலங்குகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள். நல்ல பின்னூட்டமாக எழுதமுடியாமல் இப்படிச் செய்து விட்ட கவிதையாளனே உன் ஆத்மா சாந்தியடையட்டும். பெரிய கஷ்டம்பா.
பதிலளிநீக்குகவிஞரோடு பழக்கமில்லை... கருத்துக்கள் கூட இட்டதில்லை...
பதிலளிநீக்குநட்புக்களின் பதிவுகளிலும் புதுக்கோட்டை விழாப் பதிவுகளிலும் இவர் குறித்து வாசித்திருக்கிறேன்...
இளமை மரணம் சீரணிக்க முடியாத ஒன்று.
மனைவி மகனுக்கு இனி யார் தேறுதல்?
நீங்க பதிந்த அன்று இரவே வாசித்தேன்... வேதனையான மனநிலை...
செல்வ குமார் அண்ணாவின் முகநூல் பகிர்வு, மது சார், கீதா அக்கா, ஜம்புலிங்கம் ஐயான்னு நிறையப் பேரின் பகிர்விலும் பார்த்தேன்...
என்ன சொல்வது...? என்று தெரியாத மனநிலை...
உடல் நலம் பார்க்காமல் இப்படி உயிர் போய் விட்டதே என்று நினைக்கும் போது பார்த்திருந்தால் பிழைத்திருப்பார் என்று எப்படிச் சொல்ல முடியும்... அவரின் வாழ்க்கை கணக்கு இது...
பார்க்காத மனிதர்... பழகாத மனிதர்... எழுத்தால் மட்டுமே அறிந்த மனிதர்... என்றளவே என்றாலும் இந்த சின்ன வயது... அந்த்ச் சிரிப்பு... குழந்தையின் படம் என கலங்கடித்து விட்டது.
இன்னும் வருத்தங்கள் மனசுக்குள்ளே சுத்திக்கிட்டே இருக்கு...
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்...
அவரின் மனைவி மற்றும் மகனுக்கு ஆறுதல் சொல்லும் மனநிலையில் நாம் இல்லை... நம் ஆறுதல் அவர்களைத் தேற்றும் என்று நினைக்கும் நிலையில் அவர்களால் இருக்க முடியாது... இனிமேல் நகரும் காலங்களில் இந்தச் சுமையோடு... பாவம்... இறைவன் இப்படிச் செய்து விட்டானே...
ரொம்ப வருத்தமாப் போச்சு துளசி சார்...
வாழ்க்கையில் நாமெல்லாம் எப்ப நமக்கான நிறுத்தமும் நேரமும் வரும் என்று தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்...
இதில்தான் எத்தனை பகைகள், குரோதங்கள்... சை எல்லாம் எதற்காக...?
வாழ்ந்து உயர வேண்டிய கவிஞன்... இப்படியாகிவிட்டதே...
வருந்தங்களுடனே இன்றும் விடிந்தது...
மிகுந்த துயரம் தரும் செய்தி ! இத்தனை இளமையில் ஒரு மரணமா? 'சாவிலிருந்து சாவுக்குள்' எனும் வரியை மறக்க சில நாட்களாகும்!
பதிலளிநீக்குஅலட்சியம் ஓர் உயிரை பறித்துவிட்டது அதிர்ச்சியான செய்தி! ஆழ்ந்த இரங்கல்கள்! அவர் எழுதிய கவிதை எத்தனை பொருத்தம்?
பதிலளிநீக்குகவிஞர் வைகறை அவர்களுக்கான அஞ்சலியில் எங்களுடன் இணைந்து பகிர்ந்து கொண்டு விரிவான வருத்தத்தையும், உடல் நலம் பேண வேண்டிய நல்ல கருத்துகளையும் பகிர்ந்து கொண்டதற்கும், மோகன்ஜி அவர்களும் எங்களுடன் பகிர்ந்தமைக்கும், எல்லா நண்பர்கள், சகோதர சகோதரிகளுக்கும் எங்கள் வணக்கங்கள், நன்றிகள். பதிவுலகமே ஒரு குடும்பம் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது.
பதிலளிநீக்குகவிதைகளைப் படித்த பின் எனக்குத் தோன்றுவது இந்தப் பேரிழப்பு அவர் மனைவிக்கும் மகவுக்கும் நமக்கும் மட்டுமில்லை தமிழ்த்தாய்க்கும்தான். இப்பேர்ப்பட்ட கவிஞர்களையெல்லாம் வாரிக் கொடுத்துவிட்டு என்னம்மா செய்யப் போகிறாய்!! எனக்கு இவரை முன் பின் தெரியாது. பெயர் மட்டும் கேள்விப்பட்டது போல் இருக்கிறது, அவ்வளவுதான். ஆனால், சாவின் நெருக்கத்தில் கூட இப்படி ஒரு கவிதை எழுத முடியுமென்றால்... இந்த மனிதனை என்ன சொல்ல! உண்மையாகச் சொல்கிறேன், எனக்கு அழுகை வரும் போல் இருக்கிறது.
பதிலளிநீக்குமிகவும் வருத்தமாக உள்ளது :(
பதிலளிநீக்குஅவரது ஆத்மா சாந்தியடைய என்னுடைய வேண்டுதல்களும்.
என்ன ஒரு உவமானம் .கவிதை வரிகள் கலங்க வைக்கின்றன.
பதிலளிநீக்குமொடாக்குடியர்கள்கூட லிவர் நோய்களில் இருந்து தப்பித்து விட எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாத வைகறைக்கு இப்படி ஆனது வேதனை.