சனி, 16 ஏப்ரல், 2016

விலங்குகளும் மருத்துவமும் 1 – இயற்கையின் ரகசியங்கள்

அறிவியல், இயற்கை, விந்தை உலகம் என்று பல தகவல்களின் தொகுப்புகள் இருந்தாலும் அவை எல்லாம் ஆங்கிலத்தில் இருந்ததால், தமிழில் மொழிபெயர்த்து எழுதுவதில், குறிப்பாக, அறிவியல் சார்ந்த வார்த்தைகளுக்குத் தமிழில் என்ன வார்த்தைகள் என்பதில் தயக்கம் இருந்ததால் எழுத இயலாத ஆதங்கம் இருந்து வந்தது/வருகிறது.

கல்லூரிக் காலம் வரை தமிழிலும், ஆங்கிலத்திலும் இருந்த கொஞ்சம் எழுத்தாற்றல், பேச்சாற்றல் எல்லாம் அதன் பின்னான திசை திரும்பிய வாழ்வில் காணாமல் போனது. தமிழில் இலக்கண மரபில் சந்தம் மிக்க கவிதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகள் என்று எழுதியவள் இன்று, தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை என்றாகி நிற்கின்றேன்.

28 வருடங்களுக்குப் பிறகு தமிழின் மீதான ஆர்வத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் எழுதும் போது சற்றுத் தடுமாற்றம் ஏற்படத்தான் செய்கிறது. 

தற்போது அந்த அறிவியல் தகவல்களை எல்லாம் இயன்றவரையில் தமிழில் நாமும் எழுத முயற்சி செய்யலாமோ என்ற ஓர் ஆர்வம் ஏற்படக் காரணமாக, எனக்கு மறைமுகமாகத் தங்களின் எழுத்துகள் மூலம் தூண்டுகோலாக இருப்பவர்கள் சகோதரர்/நண்பர்கூட்டாஞ்சோறு செந்தில், சகோதரிகள்/தோழிகள் க்ரேஸ், கீதாமதிவாணன், ரஞ்சனி நாராயணன். எல்லோருக்கும் இந்த மாணவியிடமிருந்து நன்றிகள், வணக்கங்கள் பல.

அவ்வப்போது என் மொழியில் இருக்கும் குறைகளை, தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும் சகோதரர் இபுஞானப்பிரகாசம் அவர்களுக்கும் நன்றிகள் பல. எழுத்தின் முன்னேற்றத்தைப் பாராட்டியும், தவறுகளைச் சுட்டியும் ஊக்கப்படுத்தும் மதுரைத் தமிழனுக்கும், ஜிஎம்பி சாருக்கும், உங்கள் எல்லோருக்கும் நன்றிகள் பல.

சரி இனி கட்டுரைக்கு வருகிறேன். என்னால் இயன்ற வரையில் தமிழில் எழுத முயற்சி செய்திருக்கிறேன். பிழைகள், குறைகள் இருப்பின் தயங்காமல் சுட்டிக் காட்டலாம். 

விலங்குகளும் மருத்துவமும் –  இயற்கையின் ரகசியங்கள் 
இயற்கை பல ரகசியங்களையும், விந்தைகளையும் தன்னுள் பொத்தி வைத்துள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. மனிதன் அதனை ஆராய முற்படுகையில் அந்த ரகசியங்களும், விந்தைகளும் ஒவ்வொன்றாய் வெளியில் தெரிய வரும் போது ஏற்படும் வியப்பிற்கு அளவே இல்லை எனலாம். பெரும்பான்மையான விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும் ரகசியங்களின் பொக்கிஷங்கள்.

அந்தப் பொக்கிஷங்களில் ஒன்றான, காட்டில், இயற்கையில் வாழும் விலங்குகளும், பறவைகளும் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்குத் தாங்களே மருத்துவம் பார்த்துக் கொள்ளும் திறனை இயற்கையாகவே பெற்றிருக்கின்றன என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

விலங்குகள் எப்படி இலைகள், வேர்கள், விதைகள், பழங்கள், காய்கள், கனிமங்கள் இவற்றைத் தங்களது உடல் உபாதைகளுக்குப் பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றி, கடந்த 30 வருடங்களாகப் பரவலாகப் பேசப்பட்டு, ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டு வளர்ந்து வரும் இந்த அறிவியல் துறையின் பெயர் ஜூஃபார்மகோக்னொசி Zoopharmacognosy

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்த/வருகின்ற மக்கள் இந்த விலங்குகளைக் கூர்ந்து நோக்கிக் கற்றுக் கொண்டவைதான் பழங்குடி மக்கள் இப்போதும் தங்கள் வாழ்வியலில் பயன்படுத்தும் மூலிகைகளும், நாட்டு மருந்துகள் என்று சொல்லப்படுவதும்.


நமது மூதாதையர் என்று சொல்லப்படும் உயர் குரங்கினம் (Primates) எப்போதுமே நம்மைக் கவர்பவை. அவை அறிவில் சிறந்தவை மட்டுமல்ல சில கடினமான பணிகளையும் செய்யும் திறன் வாய்ந்தவை. காட்டில் வாழும் குரங்கினங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஒன்று, அவை தங்களின் மருத்துவத்தை எப்படித் தாங்களே பார்த்துக் கொள்கின்றன என்பது.

ரீசஸ் மெக்காக்
நேபால் மலைப்பகுதிகளில் வாழும் மெக்காக்(Macaque) குடும்பத்தைச் சேர்ந்த ரீசஸ்(Rhesus) குரங்குகள், நிலத்தில், தங்கள் நுண்மையான விரல்களால் குழி தோண்டி, ஒரு குறிப்பிட்ட ஆழம் வரை தோண்டியதும், அடி மண்ணிலிருந்து ஒரு கரண்டி அளவு மண்ணை எடுத்து உண்ணும் ஒரு வினோத பழக்கம் உடையவை. முதலில் அவை மண்ணிலுள்ள புழு, பூச்சிகளைத்தான் தின்கின்றன என்று அர்த்தம் கொள்ளப்பட்டது. பின்னர் செய்யப்பட்ட ஆராய்ச்சியில், இந்த மெக்காக் குடும்பம் வாழும் நிலப்பகுதியில் மண்ணில் கெயோலின் (kaolin) எனப்படும் ஒரு வகைப் பொருள் கலந்திருப்பதும், அந்தப் பொருள் வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையது என்பதையும் அறிந்திருந்த இந்தக் குரங்குகள் அதைத் தங்களுக்கு வயிறு சரியில்லாத நேரத்தில் உண்பதாகத் தெரியவந்தது.

தென் அமெரிக்க கிளிகள் மற்றும் மக்காவ் (Macaw) இனக் கிளிகளும் கயோலின் அதிகமாக உள்ள மண்ணை உண்ணுகின்றன. இந்த கயோலின், பழங்களின் விதைகளில் உள்ள நச்சுப் பொருளை (ஆப்பிள் விதைகளில் கூட சயனைட் உள்ளதாம்) கிளிகளின் உடலிலிருந்து வெளியேற்ற உதவுகின்றது. இந்த கெயோலின்தான் பல நூற்றாண்டுகளாக, பல கலாச்சாரங்களில், மக்களுக்கு இரைப்பை சம்பம்ந்தப்பட்ட உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்பட்டது என்ற தகவலும் இந்த ஆராய்ச்சியில் சொல்லப்பட்டிருக்கிறது.

 வெர்னோனியா அமைக்டாலினா தின்னும் சிம்பன்ஜீ
டான்ஜானியா காடுகளில் வசிக்கும் சிம்பன்ஜீக்கள் (Chimpanzees) மிகவும் உடல் நலிந்த நிலையில், அருகில் ஓடும் எறும்புகளைக் கூடப் பிடித்து உண்ணும் நிலையில் இல்லாத போதும் அடர்ந்த காடுகளுக்குள் சில தூரம் கடினப்பட்டு தங்களை இழுத்துக் கொண்டு சென்று வெர்னோனியா அமைக்டாலினா(Vernonia Amygdalina) எனும் வெப்ப மண்டலச் செடியின் இலைகளையும் தண்டினையும் கொத்தாகப் பறித்து அதை மிகக் கவனமாக மென்று அதிலிருந்து கசப்பான ரசத்தை மட்டும் உண்ணுகின்றன. இந்த ரசம் அதன் வயிறு சரியில்லாத போது ஜீரண சக்திக்கு உதவுகின்றது. இந்தக் கசப்பான ரசத்தை உறிஞ்சிய பின் இலை நார்களைத் துப்பிவிடுகின்றன. மறு நாள் உடல் நிலை தேறி மிகவும் உற்சாகமாகி வழக்கமான உணவை உட்கொள்ளுமாம்.

Aspilia உண்ணும் சிம்பன்ஜீ
மற்ற ஆப்பிரிக்கா காடுகளில் உள்ள சிம்பன்ஜீக்கள் வழக்கமாக அருகிலுள்ள பழங்களைத்தான் உண்ணும். சில சமயம், அஸ்டர் (Aster) குடும்பத்தைச் சேர்ந்த அஸ்பிலியா (Aspilia) எனும் செடியைத் தேடி இவை 20 நிமிடங்கள் நடந்து சென்று சாப்பிடுமாம். நல்ல மணமும், சுவையும் இல்லாத இந்தச் செடியினை அவை உண்ணும் போது முகம் அஷ்டகோணலாக ஆகுமாம்.  இந்தச் செடியில் சிவப்பு நிறத்தில் எண்ணெய் போன்று உள்ள திரவம்தான் காரணம். என்றாலும் இந்தத் திரவத்தில் thiarubine A, எனும் ஆண்டிபயாட்டிக் இருப்பதால் சிம்பன்ஜீக்களின் குடல் புழுக்களையும், ஒட்டுண்ணிகளையும்(parasites), பூஞ்சைகளையும்(fungi) கொல்லும் திறன் வாய்ந்த மருந்தாகச் செயல்படுகிறது. டாஞ்ஜானியா கிராம மக்கள் இந்த இரு செடிகளையும்தான் தங்கள் வயிற்று உபாதைகளுக்கும் பயன் படுத்துகின்றனர். 

ரகசியங்கள் தொடரும்...... 

(அடுத்த பதிவில் குரங்குகள் உட்கொள்ளும் மிக முக்கியமான மருந்து பற்றிய தகவலுடன்!!!)

-------கீதா

படங்கள் : இணையத்திலிருந்து.



49 கருத்துகள்:

  1. இயற்கை விலங்குகளுக்கு தேவையானவற்றை அவ்வாறே அமைத்துக்கொள்ளும்படி செய்துள்ளதைப் பார்க்கும்போது விந்தையாக உள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். ஆம் விந்தையான உலகம் தான்..

      நீக்கு
  2. இது போன்ற விஞ்ஞான பதிவுகள் எழுத நீங்கள் நிறையப் படித்து அவற்றை முறைப் படுத்தி எழுதுவது என்பது நிறைய நேரம் பிடிக்கும் வேலை . முயற்சியை ப் பாராட்டுகிறேன் . தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் உண்மைதான் நேரம் பிடிக்கும் வேலைதான். ஏற்கனவே வாசித்தவை என்பதால் ஜஸ்ட் ஒரு க்ளான்ஸ் கொடுத்து தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். அதுதான் கொஞ்சம் நேரம் பிடிக்கிறது.

      மிக்க நன்றி அபயா அருணா....

      நீக்கு
  3. நமது மூதாதையர்களைப் பற்றிய ரகசிய விடயம் அறிந்தேன் தொடரட்டும் தங்களது ஆராய்ச்சி இப்ப மணி ஆறாச்சு அடுத்த பதிவுக்கு நாளை வருகிறேன் வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி !! அடுத்த பதிவு அடுத்த வாரம்தான் அதாவது இதன் தொடர்ச்சி...இடையில் வேறு பதிவுகள்...அது என்ன இப்ப மணி 6 ஆச்சு??!! ஓ ஆஃபீஸ்??!!! ஓகே ஓகே...

      மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. //எனப்து// தன்னுள் பொத்தி வைத்துள்ளது எனப்து நாம்//

    அப்பாடி..நானும் ஒரு தவறைச்சுட்டிக் காட்ட வாய்ப்பு!

    kaolin கரைசல் பற்றிப் படித்தது நினைவுக்கு வருகிறது. சுவாரஸ்யமான ஆரம்பம்.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி..நானும் ஒரு தவறைச்சுட்டிக் காட்ட வாய்ப்பு!// ஹஹஹஹ மிக்க நன்றி ஸ்ரீராம். ஓகே அடுத்த பதிவில் நன்றிகள் பல சொல்லிவிடுகிறேன் ஹஹஹ்.

      திருத்திவிட்டேன்.

      மிக்க நன்றி ..

      நீக்கு
  5. சில நாய்கள் சில இலைகளை உண்பதைக் கவனித்திருக்கிறேன் ஏதோ உபாதைக்கான மருந்து என்றும் தெரியும் நிறையவே வாசித்துச் சான்றுகளுடன் விவரிப்பது பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜி எம் பி சார் தங்களின் கருத்திற்கு. ஆமாம் அவற்றிற்கு வயிறு சரியில்லை என்றால் புல்லை உண்ணும் சார். அருகம் புல், பூஷணி இலைகள் என்று...

      நீக்கு
  6. சிறந்த படைப்பு
    பயன்மிக்க பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  7. நாலு கால்ஸ் எல்லாற்றுக்கும் நமக்கு நாமே திட்டம்தான் .அவற்றின் பழக்க வழக்கங்கள் நோயை தாமே குணமாக்கும் தன்மை அனைத்தும் அறிவுக்கு எட்டா விந்தை .அருகம்புல்லை சாப்பிட்டு கக்கி வயிற்று உபாதகைகளை சரிபடுத்தி கொள்பவைதானே பூனைகளும் நாய்களும் ..அருமையான தகவல்கள் .தொடருங்கள் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன் மோர் ரிக்வெஸ்ட் ..நீங்க உங்க க்வில்லிங் க்ராப்டையும் இங்கே பகிரணும் விரைவில்

      நீக்கு
    2. ஆமாம் அருகம் புல் நாம் கண்ணழகி அடிக்கடி சாப்பிட்டு கக்கி, இல்லை என்றால் பின் வழியே....சில சமயம் பூஷணி இலைகளையோ, கோவைக்காய் இலைகளையோ கடிப்பது வழக்கம். அருகம் புல் இல்லை என்றால் மற்றொரு புல் பெரிதாக கொஞ்சம் அகலமாக இருக்குமே அந்தப் புல்லும் சாப்பிடுவாள். அது பின் வழி வந்துவிடும்.

      விலங்குகளின் மருத்துவம் மட்டுமல்ல இன்னும் பல விந்தைகள் இயற்கையின் ரகசியம் வாசித்தவற்றை எழுத நினைத்துள்ளேன் பார்ப்போம்...

      நன்றி ஏஞ்சலின்.

      நீக்கு
    3. ஐயோ ஏஞ்சல், நான் பள்ளி, கல்லூரிக் காலத்தில், சார்ட் பேப்பர் இருக்கும் இல்லையா அதில். வழ வழ மேகசின் பேப்பரில் எல்லாம் நீளமாகக் கட் செய்து பின்னர் சுருட்டி என்று. அப்போது அவற்றை கம்மல் செய்தால் மாட்டுவதற்கு இப்போது கிடைப்பது போல் ஹூக் எல்லாம் கிடைக்காது எனவே நூலில் இல்லை மெல்லிய எலெக்ட்ரிக் வயர் இருக்கும் இல்லையா அதனுள் இருக்கும் அந்தக் கம்பிகளில் கட்டி ரிங்க் போல ஏற்கனவே போட்டிருக்கும் ஸ்டட், அந்தக் கம்பியில் மாட்டித் தொங்கவிட்டுக் கொண்டு ஸ்டடைத் திருகி விடுவேன். ஆனால் ஃபோட்டோக்கள் இல்லை.

      இப்போது செய்தவை எல்லாம் என் கசினின் பெண் வீட்டில் இருந்ததால் இப்போது அவள் டிசிஎஸ் ஜாப் கிடைத்து வேலைக்கும் சேர்ந்து கல்யாணமும் சமீபத்தில் ஆகிவிட்டது. என்னிடம் ஃபோட்டோஸ் இல்லை. அவளிடம் இருந்தால் வாங்கி உங்களுக்கு அனுப்புகின்றேன் ஓகேயா.

      உங்கள் அளவிற்கு பெரிய ப்ராஜெக்ட் எல்லாம் செய்யவில்லை. மாலைகள் இயர் ரிங்க்ஸ் வால் ஹேங்கிங்க்ஸ் மட்டுமே. அவள் மீண்டும் என்னை சனி ஞாயிறுகளில் வர முடியுமா என்று கேட்டிருக்கிறாள். என்றாலும் ஜூலைக்குப் பிறகுதான் செல்ல முடியும். அப்படிச் செய்யும் போதும் ஃபோட்டோ எடுத்து உங்களுக்கு அனுப்புகின்றேன் ஓகேயா...

      நீங்கள் மிக மிக அழகாகச் செய்கின்றீர்கள். பெர்ஃபெக்ட் மேக்கிங்க்!!!

      நீக்கு
    4. ஓகே ஓகே :) ..எனக்கும் மீள் சுழற்சி பழைய காகிதங்களில் செய்வதுதான் ரொம்ப விருப்பம் ...நன்றி ..

      நீக்கு
  8. ஹையோ அவசரத்தில் கவனிக்காமல் பிழை .//.உபாதைகள் // :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ்ஹாஹஹ் அதனால் என்ன ஏஞ்சல் விடுங்கள்..மலையாளம் என்று வைத்துக் கொள்வோம்..

      நீக்கு
  9. சகோ ....
    குரங்குகள் மூதாதையர் என்று
    சொல்லாதீர்கள்.....
    சிரிப்புதான் வருது....
    ஒரு நாள் குற்றாலத்தில் இரண்டு நண்பர்கள்...
    நண்பர் 1 : டேய் குரங்கெல்லாம் நம்ம
    மூதாதையர்க ள் னு அறிவியல் சொல்லுதுடா....
    நண்பர் 2 : அட ஆமா டா அங்கே பாருடா
    செத்து போன உங்க கொள்ளுத்தாத்தா பாருடா....
    நண்பர் 1 : !!!!!!!?????


    இதான் ஞாபகம் வருது....

    பதிவு பயனுள்ள பதிவு சகோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ உண்மையாகவும் இருக்கலாம்....மிக்க நன்றி அஜய் . மூதாதையர்கள் என்று சொல்லுவது பரிணாம வளர்ச்சியில் அவர்களுக்குப் பிறகு நாம் என்பதால்...பாருங்கள் ஏப், சிம்பன்ஜீ பழக்க வழக்கங்கள் மனிதரைப் போலவே..மனிதன் அதற்கு அடுத்தக்கட்டம் என்று சொல்லலாம்...நிறைய இருக்கிறது.

      நீக்கு
  10. விலங்குகள் எப்படி இலைகள், வேர்கள், விதைகள், பழங்கள், காய்கள், கனிமங்கள் இவற்றைத் தங்களது உடல் உபாதைகளுக்குப் பயன்படுத்துகின்றன//

    நாய் , பூனை எல்லாம் தனக்கு உடம்பு சரியில்லை என்றால் வேர்களை சாப்பிட்டு கக்குவதை பார்த்து இருக்கிறேன். அப்புறம் அதற்கு உடம்பு சரியாகிவிடும்.


    இயற்கையை பயன்படுத்தி தாங்களே தங்களுக்கு வைத்தியம் பார்த்துக் கொள்ள விலங்குகளுக்கு இறைவன் அறிவை கொடுத்து இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி சகோ. இயற்கையிலேயே அவர்களுக்கு அந்த அறிவு அமைந்திருக்கிறது. வியக்கும் அளவு இன்னும் ரகசியங்கள் தொடரும்...

      நீக்கு
  11. அருமை, அருமை. பதிவுக்கு முதல் பாராட்டுகள். இதேபோன்ற சில மருத்துவ முறைகளைப் பற்றி நானும் எழுதியிருக்கிறேன். இது நான் எழுதாதது. அரியத்தகவலுக்கு நன்றிகள்!
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செந்தில் சகோ தங்களின் பாராட்டுகளுக்கு. ஓ நீங்களும் எழுதியிருக்கின்றீர்களா. பார்க்கின்றேன். எப்படி மிஸ் பண்ணினேன்??!! இன்னும் பல வியத்தகு ரகசியங்கள் இருக்கின்றன சகோ. தொடரும்...

      நீக்கு
  12. மிகச் சிறப்பான கட்டுரை கீதா மேடம்...
    ரகசியங்களை எழுதுங்கள்... வாசிக்க காத்திருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி குமார் தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்...ரகசியங்கள் தொடரும்..

      நீக்கு
  13. அரிய தகவல்களைப் பதிவில் வழங்கிடும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்..
    தொடரும் பதிவுகளுக்காக காத்திருக்கின்றேன்..

    அன்பின் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும்..தொடரும் ரகசியங்கள்.

      நீக்கு
  14. இயற்கையின் ரகசியங்கள் தொடரட்டும்...தொடருகிறேன்..த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  15. இயற்கையின் ரகசியங்களை எவ்வளவு அழகாக எடுத்துச்சொல்லியுள்ளீர்கள். இயற்கையையும் விலங்கு பறவைகளின் வாழ்வையும் கூர்ந்து கவனித்துதான் அந்நாளில் மக்கள் தங்கள் மருத்துவ அறிவைப் பெருக்கிக்கொண்டார்கள் என்பது எவ்வளவு உண்மை. ஒவ்வொன்றைப் பற்றியும் அறிய வியப்பாக உள்ளது. என்னையும் இங்கு குறிப்பிட்டமைக்கு நன்றி தோழி. இப்படியொரு அற்புதமான தொடரைத் தொடர நானும் தூண்டுதலாக இருந்திருக்கிறேன் என்று அறிய மகிழ்ச்சி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தோழி கீதா. இயற்கை, விலங்குகள், பறவைகள் பற்றி எல்லாம் நீங்கள் எழுதியதை வாசித்த போது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது மட்டுமல்ல ஒரு தூண்டுகோலாக இருக்கிறது என்பது மிகையல்ல. மிக மிக அருமையான தமிழ் ஆளுமை உங்கள் கைவசம். மிக்க நன்றி தோழி தங்களது உற்சாகம் ஊட்டும் வார்த்தைகளுக்கு. பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. சுவாரஸ்யமான தகவல்கள். தொடர்கின்றேன். ஆங்கிலத்தில் உள்ள அறிவியல் சொற்களை பலசமயம் அப்படியே பயன்படுத்துவதுதான் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இளங்கோ ஐயா. ஆம் ஆங்கிலத்தில் அப்படியே பயன்படுத்தியே எழுதுகின்றேன். தங்கள் பரிந்துரைக்கும் மிக்க நன்றி. பின்பற்றுகின்றேன்.

      நீக்கு
  17. படங்களும், பகிர்வும், சொல்லப்பட்டுள்ள விஷயங்களும் படிக்க சுவையாக உள்ளன. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள். தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வைகோ சார் தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும். ரகசியங்கள் தொடரும்...

      நீக்கு
  18. அதிசயமான தகவல்கள். ஐந்தறிவு விளங்குகன் நம்மை விட புத்திசாலிகளாக இருக்கின்றன.


    எனக்குக் கூட இந்தமாதிரி அறிவியல் தகவல்கள் எழுதுவது ரொம்பவும் பிடித்த விஷயம். விஞ்ஞான சொற்களுக்கு தமிழ் பதங்கள் கண்டுபிடிப்பது ஒரு சவாலான விஷயம். திரு இளங்கோ சொல்வதுபோல ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்துவது நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். பின்பற்றுகிறேன் உங்கள் பரிந்துரைத்தலை...

      நீக்கு
  19. உங்களுக்குத் தூண்டுகோலாக அமைந்த எழுத்தாளர்களில் நானும் இடம் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோதரி. மிக்க நன்றி கருத்திற்கு. உங்கள் மொழிபெயர்ப்பும் அருமையாக இருக்கும். உங்கள் பதிவுகளையும் படித்துத்தானே ஊக்கம் பெற்றது..மிக்க நன்றி

      நீக்கு
  20. படிக்கப் படிக்க வியப்புதான் மிஞ்சுகிறது சகோதரியாரே
    விலங்கினங்களிடமிருந்து நாம் கற்க வேண்டியது இன்னும் இன்னும் நிறையத்தான் இருக்கிறது என்பது புரிகிறது
    நன்றி சகோதரியாரே
    தங்களின் அடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கின்றேன்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ! ஆம் நிறைய இருக்கின்றன. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...

      நீக்கு
  21. அஷ்பிலியா செடியை தின்னும்போது முகம் அஷ்டக் கோணல் ஆகத்தானே செய்யும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் மிக்க நன்றி ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...அந்த ஃபோட்டோ கிடைக்கலை ஜி இல்லைனா அதையும் போட்டுருக்கலாம்...

      நீக்கு
  22. ரகசியங்கள் புதுமையாக இருக்கு தொடருங்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனிமரம் நேசன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ...ஆம் ரகசியங்கள் இன்னும் வியப்பிற்குரியவை தொடர்கின்றன...

      நீக்கு
  23. அறியா தகவல்கள்...கீதா. இயற்கையில் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. விலங்குகள் சில செடிகளை சாப்பிடம், பட்டினி கிடக்கும் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். அருமையாக இருக்கிறது. எவ்வளவு விஷயங்கள் தங்களுக்கு தெரிந்து இருக்கிறது...எழுதுங்கள் சகோ...தொடர்கிறோம்...நன்றி

    பதிலளிநீக்கு
  24. ஆகா! அமர்க்களமான தொடர்! ஏதோ 'பாக்யா' இதழைப் படித்தது போல் இருக்கிறது. அருமை!!

    இயற்கை சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு இயற்கையின் கமுக்கங்கள் நம்மை விடக் கூடுதலாகத் தெரியும். அவற்றை வெளிக்கொண்டு வந்தால் மருத்துவ உலகம் மென்மேலும் பயன்பெறும். அறிவியல் சார்ந்த தகவல்கள் தமிழில் இல்லை எனும் குறை 'science' எனும் சொல்லுக்கு 'அறிவியல்' எனத் தமிழ்ச்சொல் உருவாக்கிய காலத்திலிருந்தே இருந்து வரும் புலம்பல். அதைப் போக்க நீங்களும் இப்படி ஓர் அருமையான முயற்சியை மேற்கொண்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல தமிழ்ச் சேவை! மிக்க நன்றி!

    பி.கு: //அவ்வப்போது என் மொழியில் இருக்கும் குறைகளை, தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும் சகோதரர் இபுஞானப்பிரகாசம்// - ஐயோ! அப்படி நான் என்ன சகோ செய்துவிட்டேன்! ஒன்றுமே இல்லையே!!

    பதிலளிநீக்கு