திங்கள், 27 ஜூலை, 2015

குரலை விழுங்கிய புகைப் பூஞ்சுருளிற்கு (சிகரெட்டிற்கு) எதிராக மௌன யுத்தம் செய்யும் கரீம்

Image result for smoking and larynx cancerImage result for smoking and larynx cancer
Record your voice for loved ones while you still can
படங்கள் இணையத்திலிருந்து
    சில நாட்களுக்கு முன் எர்ணாகுளம் சென்ற நான் நண்பர் ரீகனுடன், எடப்பள்ளி டோல்(Toll) என்று அழைக்கப்படும் இடத்திலுள்ள ஒரு டிடிபி மையத்தில் எங்கள் வேலையை முடித்தபின் அருகிலிருந்த ஒரு சிற்றுண்டிச் சாலையில் தேநீர் அருந்தியபின் வெளியே வந்தேன். சிறிது நடந்த நான் திரும்பிப் பார்த்த போது ரீகனைக் காணவில்லை. திரும்பி நடந்த நான் சிற்றுண்டிச் சாலையின் இடப்புறமுள்ள  மாடிப்படிகளில், படிகள் இல்லாத பகுதியில் நின்று அவர் புகைப்பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அங்கேயே நின்றுவிட்டேன். பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்பதால், ஒரு ஓரத்தில் சுற்று முற்றும் பார்த்து பயந்து கொண்டே புகைப்பது வழக்கமாகிவிட்டது

அப்படி அவர் புகை பிடித்துக் கொண்டிருந்த போது, சாலையின் மறுபுறம் ஒரு வித்தியாசமான மனிதர் என் கண்ணில் பட்டார். முழுக்கைச் சட்டையும், கால்சராயும், ஷூவும் அணிந்து, ஒரு கறுப்பு கலர் பெட்டியைக் கையில் பிடித்துக் கொண்டு, தலையில் தொப்பியுடன், கழுத்தைச் சுற்றி ஒரு கைக்குட்டையைக் கட்டியிருந்த அவர், சாலையைக் கடந்து நான் நின்ற பகுதிக்கு வர முயன்று கொண்டிருந்தார்.

பெருநகர்(மெட்ரோ) ரயில் பாலம் கட்டும் வேலை நடப்பதால், அங்கு இரண்டு, மூன்று காவலர்கள் வாகனங்களின் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இடையில் கிடைத்த ஒரு சிறு இடைவெளியில், ஓரிருவருடன் அவரும் வேகமாக நடந்து இப்பகுதிக்கு வந்துவிட்டார். அவர் கண்கள் இடையிடையே மாடிப்படிகளைக் கவனித்ததால், ஒரு வேளை மேல்மாடியில் உள்ள ஏதேனும் ஒரு அலுவலகத்திற்குப் போவார் போலிருக்கிறது என்ற என் ஊகத்தை உறுதிப்படுத்தும் வகையில் வேகமாக மாடிப்படிகளை நோக்கி நடந்தார். ஆனால், படிகளில் ஏறாமல், ரீகனின் அருகே சென்று, ரீகனைப் பார்த்து மிகவும் வருத்தத்துடன், ஒரு துண்டறிக்கையைக் கையில் கொடுத்தார்.

வாசித்த ரீகன் உடனே தன் கையிலிருந்த, பாதியாகியிருந்த  சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்தார்.  வாசித்து முடித்த அவர் அதிர்ச்சியுடனும், அதிசயத்துடனும் அவரைப் பார்க்கவும் செய்தார்.  வந்த நபர் மெதுவாகத் தன் கழுத்தில் கட்டியிருந்த கைக்குட்டையை உயர்த்தி, கழுத்தினுள்ளிருந்து வெளியே எட்டிப்பார்க்கும் ஒரு சிறிய குழாயைக் காட்டி சத்தமில்லாமல் சைகையால் தான் அதிகமாகக் குடித்த சிகரெட்டால் இப்படித் தனக்கு நேர்ந்தது என்றும், புகை பிடிக்க வேண்டாம் என்றார். பின்னர் துண்டறிக்கையில் ஒரு பகுதியில் விரலைச் சுட்டி, முகவரியைக் காட்டித் தனக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று சைகையால் சொல்லிவிட்டுத் தலையாட்டிக் கொண்டே வேகமாக நடந்து போய்விட்டார்.

      உடனே ரீகனின் கையிலிருந்த அந்த துண்டறிக்கையை வாங்கி நான் வாசிக்கத் தொடங்கினேன். “நண்பரே நீங்கள் புகைப்பிடிப்பதைக் கண்டேன். அதிகமாகப் புகை பிடித்ததால் கான்சர் வந்து, குரல்வளை” - “லாரிங்க்ஸ்” (Larynx) நீக்கம் செய்யப்பட்டதால் பேசும் திறனை இழந்தவன் நான். தயவு செய்து நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை இன்றோடு நிறுத்த வேண்டும். புகைப்பிடிக்க நீங்கள் செலவாக்கும் பணத்தைச் சேமித்து வைத்து வீட்டுச் செலவுக்குப் பயன்படுத்த, ஒரு உண்டியலை நான் இலவசமாக உங்கள் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ அனுப்பித் தருகின்றேன். நீங்கள் அதற்குத் தயார் எனில், ஒரு தபால் அட்டையில் தங்கள் முகவரியை எழுதிக் கீழ்காணும் என் முகவரிக்கு அனுப்பவும்.

இப்படிக்கு,
டி எஸ் அப்துல் கரீம், துண்ட்த்தில் ஹவுஸ், நார்த் விடாக்குழா, தாய்க்காட்டுக்கரை, ஆலுவா, 683106.

நான் வாசித்து முடித்ததும், தேநீர் அருந்திவிட்டு வெளியே வந்த சில, பாரம் ஏற்றும் பணி புரிபவர்களில் ஒருவர் சிரித்தபடியே எங்கள் அருகில் வந்தார்.  அவரிடமிருந்து கிடைத்த, கரீமைப் பற்றிய தகவல்கள் எங்களை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது.

பள்ளி மாணவர்களுக்காக தேசீய அளவில் நடத்தப்பட்ட ஒரு பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற அப்துல் கரீம் முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கையிலிருந்து பரிசு பெற்றவராம். கல்லூரிக் காலங்களில் எப்போதோ தொற்றிக் கொண்ட புகைப்பிடிக்கும் பழக்கம் அவரை அதற்கு அடிமையாக்கியிருக்கிறது. 1966ல் எச்எம்டி நிறுவனத்தில் கணக்காளராகப் பதவியேற்ற அவர் தினமும் 10 பாக்கெட் சிகரெட் பிடித்தாராம். விளைவோ அவரது 50 வது வயதில் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு சிகிச்சை பெறப் போன போது மருத்துவர் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்தே போனாராம்.

குரல்வளையை அப்புறப்படுத்த வேண்டும்.  அதன் பின் பேச முடியாது.  அப்புறப்படுத்தாவிடில் உயிருக்கே ஆபத்து என்பதுதான் அது. வேறு வழியின்றி குரல்வளையை - லாரிங்க்சை அப்புறப்படுத்தும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பேச்சாற்றல் இழந்த அவர், எழுதிக் காட்டி மற்றவர்களுடன் தன் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளும் நிலைக்கு வந்தார். நுரையீரலுக்குத் தேவையான சுவாசக் காற்றைச் சுவாசிக்க கழுத்தில் ஒரு ஓட்டையிட்டு அதில் ஒரு குழாயைப் பொருத்தி இருக்கிறார்கள். அதன் வழியாக தூசி புகாமல் இருக்கத்தான் தன் கழுத்தைச் சுற்றி ஒரு கைக்குட்டையைக் கட்டி இருக்கிறார்.  அவரதுக் குரலைக் கொன்ற புகைப் பிடிக்கும் பழக்கத்திலிருந்து மற்றவர்களைக் காக்கத் தனிமனிதனாக கையில் எச்சரிக்கும் துண்டறிக்கையுடன், தினமும் ஏறத்தாழ 25 கிலோமீட்டர் நடந்து, புகைப்பிடிப்பவர்களைக் கண்டு துண்டறிக்கையைக் கொடுத்து, தனக்கு நேர்ந்த துயரத்தைச் சைகையால் விவரித்து வருகிறார்.

CRUSADE AGAINST SMOKING எனும் பொது நல இயக்கத்தையும் தொடங்கியிருக்கிறார். இதுஅரை 75,685 நபர்களை நேரடியாக் கண்டு நோட்டீஸ் கொடுத்து அவர்களை புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுவிக்க முயற்சிகள் எடுத்திருக்கிறார்.  அதில், 11,895 பேருக்கு சிகரெட்டிற்குச் செலவிடும் பணத்தைச் சேமிக்க உண்டியலை அனுப்பிக் கொடுத்திருக்கிறார். அதில் 5000 பேர் முழுவதுமாகப் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார்கள். 7500 பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் குறைத்து விட்டார்கள்.  இதற்காக அப்துல் கரீம் ஏறக்குறைய 450 சிறு புத்தகங்களும், சிற்றேடுகளும் பிரசுரித்து வினியோகித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, புகை பிடிக்கும் பழக்கத்தின் தீமைகளை நான்கு குறும்படங்களாகப் படம் பிடித்து இலவசமாகப் பள்ளிகளில் காட்டியும் இருக்கிறார்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்று அவரை எள்ளி நகையாடுபவர்களும் உண்டு.  அதை எல்லாம் பொருட்படுத்தாமல், தனக்கு நேர்ந்த துயரம் யாருக்கும் ஏற்படக் கூடாது என்று நினைக்கும் அவரைப் பாராட்டியே தீர வேண்டும்.  அதனால், அவர் செய்யும் இச்சேவை போற்றுதற்குரியதே. கரீம் அவர்களது பாதிப்பால் ரீகன் புகைப் பிடிக்கும் பழக்கத்தை முழுமையாக விட வாய்ப்பில்லை என்றாலும், குறைந்த பட்சம் சிகரெட்டுகளின் எண்ணிக்கையேனும் குறைத்துக் கொள்ளுவார் என்று தோன்றுகின்றது. எல்லாம் வல்ல இறைவன், திரு அப்துல் கரீமுக்கு ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுத்து அவரது இந்த சிகரெட்டுக்கு எதிரான மௌன யுத்தத்தை நீண்ட காலம் தொடரச் செய்வார் என்று நம்புவோம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவை வெளியிடும் போது இந்தத் துயரமான செய்தி அறிய......

The Vision

I climbed and climbed
Where is the peak, my Lord?
I ploughed and ploughed,
Where is the knowledge treasure, my Lord?
I sailed and sailed,
Where is the island of peace, my Lord?
Almighty, bless my nation
With vision and sweat resulting into happiness
A.P.J. Abdul Kalam


எவ்வளவு ஆழமான வார்த்தைகள்! எல்லோரது மனதிலும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டிய வார்த்தைகள்! எவ்வளவு அழகான கனவு! திரு கலாம் அவர்களின் வார்த்தைகளும், கனவும் நனவாகட்டும்! அவரது ஆன்மா சாந்தியடையட்டும்! நாம் பிரார்த்திப்போம்! ஒரு நல்ல மாமனிதரை நமது நாடு இழந்த துக்கம். ஆழ்ந்த இரங்கல்கள்! 

32 கருத்துகள்:

  1. வணக்கம்
    அண்ணா.

    எடுத்த செயல் நிச்சயம் வெற்றியடையும் கலாம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  2. நல்ல விவரமான பதிவு. கேரளா இதில் முன்னோடி.
    நீங்கள் போட்ட பின்னூட்டம் காக்கா தூக்கிக் கொண்டு போய்விட்டது. மறுபடியும் போடவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நம்பள்கி! ஓ! தூக்கிக் கொண்டு போய்விட்டதா? முதலில் உங்கள் பதிவு வந்ததும் போட்டோம். பின்னர் பார்த்தால் டேஷ் போர்டில் மீண்டும் அதே பதிவு தலைப்பு தாங்கி வந்திருந்தது. புதிய பதிவா என்று பார்த்தால் அதேபதிவு என்றதும் வாசித்தாயிற்றே என்று நினைத்தோம்...ஓ முதலில் போட்ட பின்னூட்டம் போய் விட்டது..மீண்டும் போடுகின்றோம். நம்பள்கி! மிக்க நன்றி!

      நீக்கு
  3. வணக்கம் !

    தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_28.html

    நன்றியுடன்
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  4. புகைத்தலின் இன்னொரு முகத்தைச்சொல்லும் அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  5. எவ்வளவு நல்ல காரியம் செய்கிறார் அவர். தனக்குக் குரல் போன துன்பத்தில் முடங்கி விடாமல், தேடித்தேடி புகை பிடிப்பவர்களை எச்சரிக்கிறாரே... அவரால் சிலராவது மாறினால் நிச்சயம் அது நல்ல விஷயம்.

    என்னுடைய பேச்சால் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களாக புகை பிடிப்பதை நிறுத்தி இருக்கிறார். உன்னால்தான் என்று என்னிடமும், இவனால்தான் என்று உறவு வட்டத்திலும் அடிக்கடி சொல்வார்.

    இந்தியாவின் தலை மகன் கலாம்ஜி மறைவு எங்களை, இல்லை, நம்மை அனைவரையுமே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தேசத்தின் மிகப் பெரிய இழப்பு. அவரின் திறமைகள் ஒரு பக்கம், அவரைப் போல ஒரு எளிமையான மனிதரை இனி பார்க்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா எவ்வளவு ஒரு நல்ல காரியம் செய்திருக்கின்றீர்கள்! பாராட்டுகள் உங்களுக்கு! ஆமாம் அவராலும் உங்களாலும் இன்னும் பலர் மாறினால் மிக மிக நல்ல விஷயம்...அப்படியே உங்களையும் பாசிட்டிவ் செய்திகளில் நாங்கள் சேர்த்து விடுகின்றோம்....

      கலாமின் மறைவு நம் அனைவரையுமே ஆழ்த்திவிட்டதுதான்...எளிமை அதைச் சொல்லுங்கள்! எப்பேர்ப்பட்ட மனிதர்? என்றேனும் ஒரு நாள் மறைந்துதான் ஆக வேண்டும் என்றாலும் அவர் இன்னும் சில வருடங்கள் இருந்திருக்கலாமோ...மாணவர்களுக்கு இன்னும் சில பாடங்கள் கிடைத்திருக்குமோ என்றும் தோன்றத்தான் செய்கின்றது...

      நீக்கு
  6. அய்யா அப்துல் கலாமின் மறைவு குறித்து ஒரு தனிப்பதிவு தந்திருக்கலாமோ.
    கனவு காண சொல்லி கனவு கண்டவர்.
    அன்னாரது இழப்பு இந்த நாட்டை நேசிக்கும் இந்திய குடும்பங்களுக்கெல்லாம் பேரிழப்பே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தந்திருக்கலாம் ஆனால் இது இரங்கல் செய்தி மட்டுமே! நம் அன்பர்கள் நிறைய தருவார்கள்....மிக நல்ல விஷயங்களை....

      உண்மையே அவரது இழப்பு பெரும் இழப்புதான்....

      நீக்கு
  7. அவரது நம்பிக்கை கைகூடும் என நம்புவோம்.
    ஒரு மாமனிதரை இழந்து நாடு தற்போது அனாதையாகியுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு! ஆம்!மாமனிதர் கலாம்!

      நீக்கு
  8. நல்லவர்கள் எல்லாம்
    நம்மைவிட்டு
    போய்க்கொண்டிருக்கிறார்கள் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  9. எந்த கெட்ட பழக்கமும் 21 நாட்கள் தடுத்தால், நீங்கி விடும்...

    அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! மெய்யாலுமா? அட புதுசா இருக்கே! நன்றி டிடி..

      ஆம் நம் எல்லோரது அஞ்சலிகளும்....

      நீக்கு
  10. அற்புதமான மனிதரை அனைவரும் இழந்து தான் விட்டோம். அவர் எண்ணங்கள் கனவுகள் ஈடேறட்டும். அவர் ஆத்மா சாந்தி யடைய பிரார்த்திப்போம். ..!

    பதிலளிநீக்கு
  11. திரு. அப்துல் கரீம் அவர்களைக் கண்டு சிகரெட் பிடிப்பவர்கள் திருந்த வேண்டும்..

    பதிலளிநீக்கு
  12. மாமனிதர் ஒருவரை - பாரதம் இழந்து விட்டது..

    அவரது ஆன்மா அமைதியில் நிலைக்கட்டும்..

    பதிலளிநீக்கு
  13. நல்ல உள்ளம் தான்பட்ட துயரம் பிறர் படக்கூடாது என்று....

    பதிலளிநீக்கு
  14. தனக்கு நேர்ந்த துயரம் யாருக்கும் ஏற்படக் கூடாது என்று நினைக்கும் அப்துல் கரீம் அவரைப் பாராட்டியே தீர வேண்டும்///

    கண்டிப்பாக!
    வித்யாசமான மனிதர்.

    அருகில் யாராவது புகை பிடித்தால் பயங்கர கோவம் வரும் எனக்கு!
    அந்த வாசனையே ஐய்யோ எப்படிதானோ..

    ஒவ்வொரு சிகரெட்டை குடிக்கும்போதும்
    ஐந்து நிமிடம் வ்ஆழ்நாளில் குரைகிறது என தெரிந்தும் எப்படி...

    பதிலளிநீக்கு
  15. அடிபட்டு திருந்தியவர்கள் உபதேசிப்பதில் ஓர் அர்த்தம் இருக்கிறது! கரிமீன் கனவு பலிக்கட்டும்! கனவு காண சொன்ன கலாம் மறைந்தது மாபெரும் இழப்பு! ஆழ்ந்த இரங்கல்கள்!

    பதிலளிநீக்கு
  16. டி.எஸ்.அப்துல் கரீம் அவர்களின் புகைத்தலுக்கு எதிரான சிலுவைப் போர் வெல்லட்டும். தனி மனிதனாக அவர் இத்தனை பேரை மாற்றி இருக்கும் போது, ஒரு அரசாங்கம் இன்னும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தால் மக்களிடமிருந்து இந்த தீய பழக்கத்தை முற்றிலும் ஒழிக்கலாம். கட்டாய சட்டம் தேவைப் படாது.
    தங்களது விழிப்புணர்வு கட்டுரைக்கு நன்றி.

    த.ம.9

    பதிலளிநீக்கு
  17. மாமேதை கலாம் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோ!

    நெஞ்சை நெகிழச் செய்யும் பதிவு.

    சிகரெட்டிற்கு பூஞ்சுருள் என்னும் பெயர் எனக்கு இப்பொழுதுதான் தெரியும்.

    சிறு வயதிலிருந்தே இந்தப் புகை எனக்கு ஒவ்வாது.

    யாரேனும் புகைத்துக்கொண்டிருப்பதைக் கண்டாலே காத தூரம் ஓட வேண்டி இருக்கும்.

    ““ செயத்தக்க அல்ல செயக் கெடும்”

    என்கிறது வள்ளுவம்.

    வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
    வைத்தூறு போலக் கெடும்

    கெட்ட பின்பு தனக்குக் கிடைத்த ஞானத்தை மற்றவரோடு பகிர்தல் எவ்வளவு அரிய செயல்.

    திரு அப்துல் கரிமீன் செயல்கள் நெஞ்சை நெகிழ்த்துகின்றன.

    நம் முன்னாள் குடியரசுத் தலைவர் என்னும் மாமனிதரின் மறைவு இந்திய உள்ளங்களில் என்றும் நினைக்கப்படட்டும்.

    அவர் கனவுகள் மெய்ப்படட்டும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  19. அப்துல் கரீம்,அப்துல் கலாம் ,இருவருமே நல்ல மனிதர்கள் ,பெயரிலும் நல்ல பொருத்தம் !

    பதிலளிநீக்கு
  20. பூஞ்சுருள் ..புதிய தமிழ் பெயர் கற்றுக்கொண்டேன் ...நான் இங்கே நேரில் இருவரை பார்த்திருக்கேன் ..
    குரல் கர கரப்பாக ஆகி பின்னர் இப்படி larynx நீக்கினார்கள் இங்கே ஆண் பெண் பாகுபாடில்லை புகைப்பதில் :( ..

    மனதை பாரமாக்கியது ஐயா கலாம் அவர்களின் மறைவு ..

    பதிலளிநீக்கு
  21. எங்கள் ப்ளாக் பாசிடிவ் செய்திகள் மூலம் இந்தப் பதிவினை படித்தேன். அப்துல் கரீம் செய்யும் சேவை ரொம்பவும் உயர்ந்தது. அவரது சேவை தொடரட்டும்.

    பதிலளிநீக்கு