வெள்ளி, 28 நவம்பர், 2014

அளவுக்கு மீறினால், அமிர்தம் மட்டுமல்ல, அன்பும் நஞ்சே!


படம் : இணையத்திலிருந்து

      இங்கு நான் சொல்லப் போகும் விசயம், துளசி எங்கள் வலைத்தளத்தில் எழுதிய “கோர்ட்டுக்குப் போகும் குரு, சிஷ்ய உறவுகள்” என்ற பதிவை அடிப்படையாகக் கொண்டது. http://thillaiakathuchronicles.blogspot.com/2014/11/Corporal-Punishment-My-Experience.html

      அதில், அவர் சென்னையில் நடந்த ஒரு சம்பவம் குறித்து எழுதியிருந்தார். ஆசிரியை ஒருவர்  மாணவனைக் கன்னத்தில் கிள்ளியதற்காக, அவனது தாய் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த ஆசிரியருக்குப் பெரிய தொகை ஒன்று அபராதமாக விதிக்கப்பட்டது. அதுவும் போதாது என்று குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து, அந்த ஆசிரியையை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றிருக்கின்றார் அந்தத் தாய். இது அந்தக் குழந்தைக்கு நல்ல உதாரணம் அல்ல. துளசி, தனது அனுபவங்களையும் சொல்லி, அதனால் “ஆசிரியர்களே அடிக்காதீர்கள்” என்று முடித்திருந்தார். மிகவும் சரியே!. இன்னும் ஒரு சில இடுகைகளில் ஆசிரியர்கள் அடிப்பதையும், தண்டனைகள் கொடுப்பதைப் பற்றியும் வேதனையுடன் எழுதியிருந்தோம். எனது கருத்திலும் பெரும் மாற்றம் இல்லை என்றாலும் ஒரு சிறு திருத்தத்துடனான கருத்து. இது உளவியல் சார்ந்தக் கருத்து. இது பெற்றோர்களாகிய நமக்கு. என் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் எதனால்? இதோ ஒரு சம்பவம்.  அது என்னைப் பலவாறாகச் சிந்திக்க வைத்தது. 

      மேற்சொன்ன சம்பவம் நடந்தது பள்ளியில். இதோ இந்த சம்பவம் கோயம்புத்தூர் அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில். மிகவும் திறமையான ஆசிரியர் மட்டுமல்ல, நேர்மையான, கிட்டத்தட்ட தமிழ் திரைப்படத்தில் காட்டப்படும் நேர்மையான, தைரியமான, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஹீரோ போன்ற குணநலனுடன் உள்ளவர். வசனங்களும் அப்படியே. பாடம் நடத்தும் போது ஒரு மாணவன் டெஸ்கின் மேல் தாளம் போட்டு பாடிக் கொண்டிருப்பானாம்.  அதனால், மற்ற மாணவர்கள் பாதிக்கப்பட அவர்கள் இந்தப் பேராசிரியரிடம் வந்துத் தொடர்ந்து புகார் சொல்லியிருக்கின்றார்கள். பேராசிரியர் அந்த மாணவனை அழைத்து எச்சரித்துள்ளார். 

மாணவன் உடனே, “நான் யாரு தெரியுமா? யாருனு தெரியாம நீங்க எங்கிட்ட பேசுறீங்க” என்று சொல்ல, ஹீரோ பேராசியருக்குக் கோபம் வந்துவிட்டது. (இப்படி ஒரு மாணவன் அல்ல.  பல மாணவர்கள் பல கல்லூரிகளில் இருக்கத்தான் செய்கின்றார்கள். நம் திரைப்படத்தில் வரும் மாணவர்களைப் போல். இதைப் பார்த்து திரைப்படமா இல்லை படம் பார்த்து இவர்களா?!!)

“நீ யாரா இருந்தா எனக்கென்ன. காலேஜ்ல எனக்கு நீயும் மத்த ஸ்டூடன்ட்ஸ் போலத்தான். மத்த பசங்க படிக்கணும். அவங்க கஷ்டப்படற குடும்பத்துலருந்து வந்து, பணம் கட்டிப் படிக்கறாங்க. அவங்கள நீ எப்படி டிஸ்டர்ப் பண்ணலாம்? நீ பெரிய வீட்டுப் பையானா இருக்கலாம்.  ஆனா, எனக்கு எல்லாரும் ஒண்ணுதான். நீ நல்ல மாணவான இருக்கறதுக்குத்தான் இந்த அறிவுரை. இல்லன்னா உன்னை டிசி கொடுத்து வெளிய போக வைச்சுடுவேன். டிகிரியே வாங்க முடியாமப் போயிடும்.” என்று வசனம் பேச மாணவன் அடுத்த நாளே தனது பெற்றோரோடு கல்லூரிக்கு வந்துவிட்டான். அவனது தந்தை பெரிய பதவியில் இருப்பவர்.  கல்லூரியின் சாதியைச் சேர்ந்தவர் வேறு. பேராசிரியருக்குப் பிரச்சனைகள் தொடங்கியது. கல்லூரி நிர்வாகம் பேராசிரியரை அழைத்து,

“நீங்கள் கல்லூரிக்கு நல்லது செய்திருப்பதால் நல்ல முறையில் உங்களை வெளியில் அனுப்புகின்றோம்.  இல்லையென்றால் நடப்பதே வேறு”. யதார்த்தத்தில், ஹீரோயிசத்தைக் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். ஆனால், தனது அறிவையும், கொள்கையையும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவர். சலாம் போடும் ஆளும் அல்ல. இப்படித்தான் இந்தப் பேராசிரியர் பல கல்லூரிகள் மாற வேண்டியதாயிற்று. இவர் வேறு யாருமல்ல, கணவர்.

இப்போதையக் கல்வி நிறுவனங்கள். சாதி சார்ந்தவையாக இருக்கின்றன இல்லையேல் கட்சி சார்ந்தவையாக இருக்கின்றன.

இந்த சம்பவம் என்னைப் பலவாறாகச் சிந்திக்க வைத்தது. இந்த மாணவனின் வளர்ப்பு முறையைப் பற்றி. எவ்வளவு கேவலமாக வளர்க்கப்பட்டிருக்கின்றான் என்பதை எண்ணி. பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம்.  தந்தை பெரிய பதவியில் இருந்தால் எதை வேண்டுமானாலும் நடத்திக் காட்டலாம்.  என்று. இந்த மாணவன், எதிர்காலத்தில், இந்த சமுதாயத்தில் எப்படிப்பட்ட ஒரு நபராக இருப்பான்?  எங்கு வேண்டுமானாலும் தன் பதவி, பணம், சாதியை வைத்துச் சாதிக்கலாம் என்ற எண்ணத்தில் அல்லவா உருவாகின்றான். இது போன்றவர்களால்தானே ஊழல் மிக்க ஒரு சமுதாயம் உருவாகின்றது? விஷமுள்ள விதைகள் ஊன்றப்படுகின்றன? அப்படித்தான் வருவார்கள் என்று சொல்ல முடியாதுதான் என்றாலும், பெற்றோர்களாகிய நாம் அதற்கு விதை ஊன்றாமல் இருக்கலாமே.

அந்தப் பள்ளிச் சம்பவத்தின் தொடர்ச்சிதான் இது போன்ற கல்லூரிச் சம்பவங்கள். அந்தச் சிறு பள்ளி மாணவனின் மனதில் ஒரு தவறான எண்ணம் உருவாக வழிவகுக்கலாம்.  நமக்கு நம் பெற்றோர் இருக்கின்றார்கள்.  நாம் என்ன செய்தாலும் அவர்கள் நமக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற எண்ணம் உருவாகிடலாம்.  ஆசிரியர்கள் அடிக்கக் கூடாதுதான். ஆசிரியர்கள் கடினமானத் தண்டனைகள் கொடுக்கக் கூடாதுதான். குழந்தைகளைக் கீழ்தரமாக நடத்தக் கூடாதுதான்.  தகாத வார்த்தைகளால் வசை பாடக் கூடாதுதான். ஆனால், அதே சமயம் பெற்றோர்களாகிய நாம் சற்று சிந்திக்க வேண்டும்.

நம் குழந்தைகள் நமக்குச் செல்லங்கள் தான். மறுப்பதற்கில்லை.  ஆயினும், ஆசிரியரின் முன்பும், பள்ளியிலும் அவர்கள் எல்லோரும் சமம்தான். சிறிய தண்டனைகள் இருக்கும் பட்சத்தில், நாம் ஆசிரியர்களிடம் தனிப்பட்ட முறையில் நமது ஆதங்கத்தைச் சொல்லலாம். பேசவேண்டும். நட்புறவு கொண்டாட வேண்டும். நம் குழந்தையைப் பற்றியும் பேச வேண்டும். நாம் ஆசிரியர்களைக் கேள்வி கேட்க உரிமை உண்டு. ஆனால், நம் குழந்தை முன்னிலையில் ஆசிரியர்களைச் சந்தித்துக் கேள்விகள் கேட்பது நல்லதல்ல. நம் குழந்தைகள் முன்னிலையில் அந்த ஆசிரியரை இகழ்ந்து பேசுதலும் கூடாது. பிரச்சினைகளை பெற்றோராகிய நாமும் ஆசிரியரும் தீர்த்துக் கொள்ள வேண்டுமே அல்லாது வெளியில் கொண்டுவருவது, நீதிமன்றம் செல்வது என்பது நம் குழந்தையின் மனதில் தவறான எண்ணங்களை விதைத்து எதிர்மாறான விளைவுகளை விளைவிக்கும்.  அன்பு அவசியம் தான்.  ஆனால், அது குருட்டுத்தனமான அன்பாகவும், அதீத செல்லமாகவும் இருத்தல் குழந்தைகளுக்குத் தவறான அபிப்ராயத்தை மனதில் விளைவிக்கலாம். அது நம் குழந்தையின் ஆளுமைத் திறனில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும்.  இங்கிருந்துதான் சமூகக் குற்றங்கள் துளிர்விட ஆரம்பிக்கின்றன.

அப்படியே ஆசிரியர்கள் தண்டனை எதுவும் கொடுத்திருந்தாலும், நம் குழந்தைகளுக்கு ஆசிரியரைப் பற்றியத் தவறான எண்ணம் வந்துவிடக் கூடாது. அது எப்படிப்பட்டத் தண்டனை, ஆசிரியர் எதற்காகத் தண்டனை கொடுத்தார்கள் என்பதை நாம் முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உணரவேண்டும். குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.  ஆசிரியரிடம் உள்ள நல்லவற்றையும் பேசவேண்டும். ஏனென்றால் குழந்தைக்கு ஆசிரியர் மேல் தவறான எண்ணம் வந்துவிட்டால் அந்தப் பாடத்தைப் படிப்பதிலும், கற்றலிலும் ஆர்வம் குறைந்து விடலாம். அது நம் குழந்தையைத்தானே பாதிக்கும்? சற்று யோசிக்க வேண்டும். அதே சமயம், ஆசிரியர்கள், பாலியல் குற்றம், வன்முறைகளில் ஈடுபட்டால் நிச்சயமாக நாம் நீதிமன்றப் படிகள் ஏறத்தான் வேண்டும்.

நம் கண்மூடித்தனமான அன்பினாலும், பாசத்தினாலும், குழந்தைகளை ஆதரிப்பதினால், அந்தச் சூழலில் வளரும் குழந்தைகள்தானே மேலே சொன்ன சம்பவத்தில் வரும் இளைஞனைப் போல் பிற்காலத்தில் உருவாக வழிவகுக்கின்றது? இது போன்ற எண்ணங்கள் குழந்தைகளை பருவ வயதில் திசை மாற வழி வகுக்க நேரிடலாம் அல்லவா? மகாபாரதத்து திருதாஷ்டிரனைப் போல்!

எனது மகனிற்கும் இது போன்ற நிகழ்வுகள் இருக்கத்தான் செய்தது.  அதுவும் கற்றலில் குறைபாடுடன் இருந்ததாலும், அவனுக்கும் பள்ளிக்கும் இடையே பனிப்போர் நடக்கத்தான் செய்தது. அவன் வீட்டில் வந்து பள்ளியில் என்ன பாடங்கள் நடத்தினார்கள் என்று சொல்ல மாட்டான். தான் பள்ளியில் எழுதி ஆசிரியர் திருத்திய தாள்களைச் சுருட்டி பையில் வைத்திருப்பான்.  நான் அவனது பையை துழாவினால் கிடைக்கும் தாள்களில் இருந்துதான் அவன் மன நிலையைப் படிக்க முடிந்தது.  அவனுக்கு நண்பர்கள் இல்லை.  ஏனென்றால் அவன் வகுப்பில் தரத்தில் இறுதியில் இருப்பவன் இல்லை ஏதேனும் பாடத்தில் தோல்வி காண்பவன் ஆயிற்றே. தரத்தில் இருந்தால் மட்டுமே நட்புகள் கிடைக்கும். இருவர் மட்டுமே இவன் குணம் அறிந்து பழகியவர்கள்.  அவர்கள் வீட்டிற்குச் சென்ற போதுதான் நான் அறிந்தேன், பள்ளியில் ஆசிரியர் அவன் சந்தேகம் கேட்டதற்கு அவனைப் படிக்காத மாணவன் என்று எல்லோர் முன்னும் திட்டியதாக. அவனுக்குக் குறைபாடு இருந்ததால் சந்தேகம் கேட்பதே அரிது. அரிதாய்க் கேட்ட சந்தேகத்திற்கும் வசை கிடைத்ததால் மகன் நத்தை போல் சுருங்கத் தொடங்கினான்.

 அவர்களால் இவனைப் புரிந்து கொள்ள முடிவில்லை. நான் அவனது பள்ளி ஆசிரியர்களைச் சென்று சந்திக்கவில்லை. ஏனென்றால் அதில் எந்தவித உபயோகமும் இல்லாமல் போனதால். அவனைப் பற்றிய குறைகள் மட்டுமே பேசப்பட்டது. எனவே, நானே அவனை நத்தை ஓட்டிலிருந்து வெளியில் கொண்டுவர முயற்சித்தேன். ஆசிரியர்கள், அவனது மதிப்பெண்களைப் பற்றி மட்டுமே பேசினார்கள். ஆனால், வீட்டில் அவனிடம் அவன் மதிப்பெண்களைப் பற்றிப் பேசாமல் அவனது அறிவை வளர்க்கும் விதத்தில், கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் மட்டுமே பேசினோம். நல்ல புத்தகங்களையும், இசையையும், நல்லத் திரைப்படங்களையும் (எல்லா மொழிகளிலும்) அறிமுகப் படுத்தினேன். இயற்கையையும், வாழ்க்கையை ரசிக்கவும், அனுபவிக்கவும் கற்றுக் கொடுத்தேன். மதிப்பெண்களை விட ஒரு நல்ல மனிதனாக வர வேண்டும் என்று கற்றுக் கொடுத்து, ஆசிரியர்கள் குறை சொன்னாலும் நல்லதற்கே என்று நேர்மறையாக எடுத்துக் கொண்டு, மதிக்கவும் சொல்லிக் கொடுத்தோம்.

மிகச் சிறு வயது முதலேயே கால்நடை மருத்துவனாக வேண்டும் என்ற அவனது விருப்பத்தை அடைய வேண்டியதற்குத் தேவையான தன்னம்பிக்கையை அவன் இழக்கக்கூடாது என்பதில் நான் பிடிவாதமாக இருந்தேன். நான் எடுத்துக் கொண்ட ஒரே ஆயுதம் அதுதான். படி என்று சொல்லாமல், அவனது லட்ச்சியத்தையும், வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியதற்குத் தேவையான நல்ல விசயங்களையும் மட்டும் பேசிப் பேசி ஆர்வத்தைத் தூண்டி, ஊக்கம் அளித்து, பள்ளியின் மீதும், ஆசிரியர்கள் மீதும், பாடங்களின் மீதும் வெறுப்பு வாராமல், நேர்மறை எண்ணங்களை ஊட்டி, அவன் மனதைப் பக்குவப்படுத்தத் தொடங்கினோம். ஏனென்றால், கற்றலில் குறைப்பாடுள்ள மகன் இந்தச் சமூகத்தில் கால் ஊன்றி, ஒரு நல்ல மனிதனாக எதிர் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால்.

பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தைகளைப், பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் எதிரான எண்ணங்களுடன் வளர்க்காமல், அவர்களுக்கு, வாழ்க்கை என்பதே சவால்தான்; இன்ப துன்பங்கள் நிறைந்ததுதான் என்பதைக் கற்றுக் கொடுத்து அதை எதிர் நீச்சல் அடித்துக் கடக்கவும், நேர்கொள்ளவும் கற்றுக் கொடுக்கலாமே.  பள்ளி, கல்லூரிகளில் மட்டும்தானா தண்டனைகள்? சமூகத்திலும், தொழில் சார்ந்த இடங்களிலும் பல அவமானங்களும், தண்டனைகளும் வாழ்க்கையில் வரத்தானே செய்கின்றன. குழந்தைகள், பள்ளியிலும், கல்லூரிகளிலும் நம் ஆதரவுடன் நீந்திவிடலாம். ஆனால், இறுதிவரைத் தனிப்பட்ட வாழ்க்கையை எதிர்கொள்ள? எனவே, குழந்தைகள் வாழ்க்கையை எதிர்கொள்ளும், ஆளுமைத் திறனைக் கற்றுக் கொடுங்கள். பயிற்சி அளியுங்கள். இதனை என்னால் மிகவும் ஆணித்தரமாகவும், தைரியமாகவும் உரைக்க முடியும். காரணம், எனது எதிர்நீச்சல் வாழ்க்கையும், அனுபவமும், முயற்சிகளும், அதனால் ஏற்பட்ட இன்றைய பலனுமே இந்தக் கருத்துக்களைக் குறித்துப் பேச வைத்துள்ளது. தொடர்வோம். கல்வித் துறையின் அவலங்கள் பற்றி.


புதன், 26 நவம்பர், 2014

உறங்காத குரங்குகளும், உறங்குகின்ற வீணையும்

      
எனது ராகங்கள் அபஸ்வரமாகிப் போன கதையைச் சொல்லிக் கொண்டு இருந்த போது இடையில் எனது மகனின் வீணை ஆசை பற்றிச் சொல்ல வேண்டி வந்தது.  ஆனால், அது அப்போது அந்த விவரணத்திற்கு அவசியமற்றதாகிப் போனதால், அதற்குக் கத்தரி போட, அதை நம் நண்பர் கஸ்தூரி/மது எழுத வேண்டிக் கோரிக்கை வைக்க, இப்போதுதான் வெட்டப்பட்டக் கதையை இங்கே ஒட்ட முடிந்தது.

      கதைக்கு வருவதற்கு முன் – கதையல்ல நிஜம் என்று சொல்லி உறுதி மொழி வழங்கியபின் – இந்த விவரணத்திற்கு இங்கு மிகவும் முக்கியமானவர் ஒருவரைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். நாலு கால் இனத்தைச் சேர்ந்தவர் என்றாலும், நமக்கும் அவருக்கும் பந்தம் இருக்கின்றதா என்று அவ்வப்போது எல்லோரையும் விவாதிக்க வைப்பவர் என்றாலும், அவருக்கும் எனக்கும் என்னவோ பந்தம் இருக்கின்றது.

படம் இணையம். நான் எடுத்தப் புகைப்படங்கள் தற்போது தேடும்படி உள்ளதால்

      பல வருடங்களுக்கு முன் எனது மகனுக்கு 21/2 வயதாக இருந்த போது நாங்கள் சிம்லா சென்றிருந்தோம். எனது புகைப்படம் எடுக்கும் ஆர்வக் கோளாரினால் அப்போது இரவல் பெற்று எடுத்துச் சென்றிருந்த புகைப்படக் கருவியால் இயற்கையைச் சுட்டுக் கொண்டிருந்தேன். அதில் நம்மவரும் அடக்கம். அவரைப் பல விதக் கோணங்களில் படம் எடுத்துக் கொண்டிருந்தேன். எடுத்துவிட்டுத் திரும்பியதுதான் தாமதம், அவரது அனுமதி பெறாமல் எடுத்ததால் கோபமோ என்று தெரியவில்லை எனது புடவைத் தலைப்பைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு ஊஞ்சலாடினார். ஊஞ்சலாடியது மட்டுமல்ல அதைப் பிடித்துக் கொண்டு ஏறுவது போன்று ஆட்டம் வேறு.  நானே நாலடியார்.  இதில் அவரது எடையையும் தாங்க முடியாமல் விழுந்துவிட,  மகன் அழத் தொடங்க, பின்னர் அங்கிருந்த ஒருவர் கம்பு எடுத்து விரட்ட ஓடிவிட்டார்.

      திருவனந்தபுரத்தில் இருந்த சமயம் நானும் மகனும் அங்கிருந்த மிருகக்காட்சிச் சாலைக்குச் சென்றிருந்த போது நம்மவர்கள் கூண்டிற்குள் இருக்கும் இடத்திற்குக் சென்ற போது என் மகன் கூண்டிற்குள் இருந்த ஒருவரிடம், “ஹௌ ஆர் யூ?  நீங்க தானே என் அம்மாவோடத் தலைப்பை பிடிச்சு ஏறினீங்க? இப்ப எங்க அம்மா சாரில வரலையே! சுடிதார்லதானே வந்திருக்காங்க நீங்க என்ன பண்ணுவீங்களாம், ஹெ ஹெ ஹெ” என்று கையால் வினவ, தன்னால் இந்தப் பையனை ஒன்றும் செய்ய முடியவில்லையே, கூண்டிற்குள் வைத்திருக்கின்றார்களே என்ற கோபமோ என்னவோ, அங்கிருந்த தண்ணீரை எடுத்து வீசினாரே பார்க்கணும், மகனின் முகத்தில் வந்து தண்ணீர் அடித்தது! இம்முறை மகன் பயப்படவும் இல்லை, அழவும் இல்லை! அவனுக்கு ஒரே சந்தோஷம். அப்போது அவனுக்கு வயது 31/2.

      அடுத்த சம்பவம், சென்னையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் லயன் சஃபாரி சென்ற போது எப்படி அங்கு நம்மவர் வந்தார் என்று தெரியவில்லை, திடீரென்று நாங்கள் சென்றிருந்த அந்த ஜீப்பின் முன் பக்கக் கண்ணாடியில் வந்து தாவிக் கையால் ஒரு அடியடித்து ஜீப்பின் பேனட்டில் அமர்ந்து எங்களைப் பார்த்து முகத்தைச் சுளித்து  “கொர் கொர்” என்ற சப்தம் வேறு. ஓட்டுனர் காரை சற்று வேகம் எடுப்பது போல் செய்ய நம்மவர் தாவி அருகில் உள்ள மரங்களுக்கு இடையில் சென்று அங்கிருந்து அதே கொர் கொர். 

பின்னர் சோளிங்கர் மலையில் எங்கள் பை பறிமுதல், ஜவ்வாது மலையில் கேமரா பறிமுதல், சின்னாரில் ஆற்றினோரம் நடக்கையில் நம்மவர் கூட்டமே என்னையும், மகனையும், தமிழ் படத்தில் வில்லன் கூட்டம் ஹீரோவை வளைப்பது போல் வளைத்து நின்ற நிகழ்வு, பின்னர் ஏலகிரி மலையில் எங்களைப் பின் தொடர்ந்து வந்து எங்கள் கையை அவ்வப்போது பிடிக்க முயற்சி, ஏற்காட்டில் எங்கள் அருகில் வந்து அமர்ந்து எங்கள் உணவைப் பறித்து அருகில் அமர்ந்தே எங்களோடு உண்டது, கோவைக் குற்றாலம் சென்ற போது எங்கள் பையைத் தூக்கிக் கொண்டு எங்களோடு நடந்து வந்து எறிந்து விட்டுச் சென்றது, திருக்குறுங்குடி மலை நம்பிக் கோயில் அருவியில் எங்கள் துணிகளைக் களவாடியது, களக்காடு காட்டிற்குள், தலையணை ஆற்றில் எங்கள் மேல் கையில் கிடைத்ததை எல்லாம் எறிந்தது, நாகர்கோவில் காளிகேசம், வட்டப்பாறை அருவியில் பாறையில் அமர்ந்திருந்த போது மகனின் தலையில் நம்மவர் பேன் எடுத்தது (மகன் தலையில் பேன் இல்லை என்பது வேறு) திருநெல்வேலி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையின் கதவைத் தட்டித் திறக்கச் செய்தது என்று நம்மவருக்கும் எங்களுக்கும் இருந்த பந்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது வேடிக்கையாகத்தான் இருந்தது.

      சென்னைக்கு வந்த பிறகு ஒவ்வொரு இடமாக வீடு மாறி மாறி வந்து அடையாரில் இருந்த போது, அருகில் கிண்டி உயிரியல் பூங்கா காடுடன் ஐஐடி வளாகம் என்பதால், நம்மவர் கூட்டம் நாங்கள் இருந்த வீட்டிற்குத் தவறாது தினமும் வருகைப் பதிவேடு. அதுவும் குடும்பத்தோடு. செங்குரங்கு இனம். ரீசஸ்/Rhesus.  பெரும்பாலும் நாங்கள் குடியிருந்த வீட்டில்தான் பெரும்பான்மையான நேரத்தைக் கழிக்கும் இந்தக் கூட்டம்.  உணவு வேட்டையிலிருந்து, தூங்குதல் வரை. காலை 9, 10 மணிக்கு வந்தால் மாலை 4, 5 மணி அளவில்தான் தங்கள் இருப்பிடம் செல்வார்கள்.  பல சமயங்களில் விரட்ட வேண்டி வரும்.  இருந்தாலும் எங்களுக்கு அறியாமல் மொட்டை மாடியிலோ இல்லை வீட்டின் பக்கவாட்டிலொ, மரத்திலோ அமர்ந்திருப்பது வழக்கமாகிவிட நாங்கள் கதவை எல்லாம் மூடியே வைத்திருக்க வேண்டியதாகிற்று.

ஒரு நாள் நான் மளிகைச் சாமான்கள் வாங்கி வந்து, அதை அப்படியே ஹாலில் வைத்திருந்தேன். கதவு தாள் இடாமல் மூடி இருக்க, நம்மவர்களின் வருகை அன்று இன்னும் வருகைப் பதிவேட்டில் பதிவாகவில்லையே என்ற நினைப்புடன், மகனுடன் அவனது (9 ஆம் வகுப்பு) பாடங்களைக் குறித்து கருத்துரையாடிக் கொண்டிருந்த சமயம், மகன் என்னை மெதுவாகத் தட்டி சத்தம் போடாதே என்று சொல்லி சமையலறையைப் பார்க்கச் சொல்ல, அடக் கடவுளே! மூடியிருந்தக் கதவைத் திறந்து கொண்டு, நம்மவர் கூட்டத்தின் தலைவர், பெரியவர் சமையலறைக்குள் நுழைந்து, மேடை மேலிருந்த உணவுகளை எடுத்துச் சாப்பிடுகின்றேன் பேர்வழி என்று இரைத்து, தக்காளிப்பழங்களை எடுத்துப் பிய்த்து உண்டு ஆங்காங்கே போட,  நான் உள்ளே செல்ல முயல மகன் என்னைத் தடுத்தது மட்டுமல்லாமல், என்னையும் அறைக்குள் அழைத்துச் சென்று கதவை மூடிவிட்டான்.  பின்னர் சத்தம் எதுவும் இல்லாததால், நான் மெதுவாகச் சமையறைக்குள் சென்று அதகளத்தைக் கண்டு களித்து?! விட்டு ஹாலுக்குச் சென்றால், அங்கு துவரம்பருப்புக், கடலைப் பருப்பு, தனியா பாக்கெட்டுகளைக் காணவில்லை!

அட!  நாம் செய்த சாம்பார் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது போலும்!  அதான் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றுவிட்டார். சமைக்கவும் தெரியுமோ?!  சரி, அப்போ அரிசி?  வேறு வீட்டில் வேட்டையாடலாய் இருக்கும் என்று மகனிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டே  வாயில் அருகில் சென்றேன்.  மகன் தடுத்தான். அந்தப் பருப்பு பேக்கட்டுகள் பிய்க்கப்பட்டு சிதறி இருக்க பாதிப் பாக்கெட்டுகளுடன் அவர் நடந்து கொண்டிருந்தார். நான் சிறிது விரட்டிவிட்டு, வீட்டிற்குள் வந்து மகனிடம் சொல்லிவிட்டு கடைக்குச் செல்ல பையுடன் வெளியில் சென்று பெரியவர் இருக்கின்றாரா என்று பக்கவாட்டில் எட்டிப் பார்க்க, திடீரென்று என் வலது காலின் கெண்டைக்கால் தசை பெரியவரின் வாயில்! நான் வலியைப் பொறுத்து கீழே விழ மீண்டும் கடி, அந்தத் தசை போதவில்லை போலும்! அப்படியாக மிகவும் ஆழமாக இரண்டு இடங்களில் கடி வாங்க என் குரல் கேட்டு மகன் என்னையும், செங்குரங்குப் பெரியவரையும் பார்த்த்தும் அழத்தொடங்க, சாலையில் போவோர் பெரியவரை விரட்ட, மகன் என்னை ரேபிஸ் ஊசிப் போட துரிதப்படுத்த, நான் மருத்துவமனைக்கு ஓட்டம்.  மகன் அன்று இரவு தூங்கவில்லை.  நான் ரேபிட் ஆகிவிடுவேனோ என்ற பயம்.

எங்களுக்கு ஆச்சரியம் விடாது கருப்பு போன்று அந்தச் சிம்லா குரங்கு, இந்தத் தென் இந்தியக் குரங்குகள் எல்லாவற்றிற்கும் செய்தி அனுப்பி இருக்குமோ? செம நெட்வொர்க்பா! நாங்கள் செல்லும் இடமெல்லாம் எங்களைத் தொடர்ந்து..... ம்ம்ம் தமிழ் சினிமா தோத்துதுங்க. இயக்குனர்கள் கவனிக்க! நிற்க இப்போது மகனின் வீணை வகுப்பு பற்றி...

மகனுக்குக் கமலஹாசனின் குரல்வளம். அதாவது வசனக் குரல்.  கமல் பாடும் அளவு மகனால் பாட முடியவில்லை. பாடினால் கமல் வசனம் பேசுவது போல் இருக்கும். இசை அறிவு அபாரம். எப்படியாவது அவனது இசை அறிவை வளர்க்க நான் அவனுக்கு வாய்பாட்டு அல்லாமல், வீணை, மாண்டலின், வயலின், புல்லாங்குழல் இசைத்தட்டுக்களையும் நான் கேட்கும் போது அவனையும் கேட்க வைத்ததுண்டு. இசைக் கச்சேரிகளுக்கும் அழைத்துச் செல்வேன்.  அப்படி அவனுக்கு வீணை மிகவும் பிடிக்க ஆரம்பித்து எல்லா வீணை இசக்கலைஞர்களின் இசையை ரசித்தாலும், வீணை மேதை சிட்டிபாபு அவர்களின் இசை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.  அவரைப் போன்று விறு விறுப்புடனும், ஃப்யூஷனிலும் கலக்கிக் கொண்டிருக்கும் அவரது மாணவர்  திரு ராஜேஷ் வைத்தியா அவர்களின் இசையின் ரசிகனானான். என்னைப் போன்று.  அவனுக்கு அவரிடம் வீணை கற்க வேண்டும் என்று ஆசை வேறு வந்துவிட்டது.  அம்மாவிற்கும், மகனுக்கும் வரும் ஆசைகள் எல்லாமே ரொம்பப் பெரிதுதான்.  அப்போது சேஷகோபாலன். இப்போது ராஜேஷ் வைத்தியா.  நானும் அவர் எங்கிருக்கின்றார் என்று தேடிக் கொண்டிருந்தேன்.  இணையத்தில் தேடியும் கிடைக்க வில்லை.  சரி பார்ப்போம் ஏதாவது வழி பிறக்கும் என்று நினைத்திருந்தோம்.

இந்த நம்மவர் பெரியவர் என்னைக் கடித்ததால், நாங்கள் சென்னை வனவிலங்குகள் துறையைக் கூப்பிட்டு இந்தக் கூட்டத்தைப் பிடித்துக் கொண்டு போகச் சொன்னோம்.  பல முறை புகார் கொடுத்து, வற்புறுத்த, அவர்களும் வீட்டிற்கு வந்து ஒரு பெரிய கூண்டை வைத்து விட்டுச் சென்றனர்.  ஒரு வாரம் கூண்டிற்குள் காரெட், பழங்கள், கடலை என்று எல்லாம் போட்டு வைக்கச் சொல்லிச் சென்றனர். அவை உள்ளே நுழைந்ததும் கூண்டு அடைத்துக் கொண்டு விடும்.  நாங்களும் போட்டு வைத்தோம். ஒரு வாரம், 10 நாட்கள் சென்றன.  பெரியவர் கூட்டம் வந்தது. பழங்கள், கடலைகள் எல்லாம் காலியாகின. ஆனால் கூண்டுக்குள் அல்ல.  சாமர்த்தியமானக் கூட்டம்.  அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.  எனவே ஒரு குரங்கு அந்தக் கூண்டுக் கதவைப் பிடித்துக் கொண்டால் மற்றொன்று உள்ளே சென்று உணவை எடுத்து வந்து விடும். இது எப்படி?
 
இதற்குள் ஒரு நாள் வனவிலங்குத் துறை ஆள் ஒருவர் வீட்டிற்கு வந்து, “இங்கு பிடி படவில்லை.  வேறொரு விஐபி புகார் கொடுத்துள்ளார்.  எனவே இந்தக் கூண்டை அங்கு எடுத்துக் கொண்டு போய் வைக்க வேண்டும்” என்று சொல்லி, அந்தக் கூண்டை மிதிவண்டியில் வைத்து அதைப் பிடித்துக் கொள்ள மகனையும் அழைத்துச் சென்றார்.  அந்த விஐபி இருந்ததும் அடையார்தான். நாங்கள் இருந்த வீட்டிலிருந்து 15 நிமிட நடை தூரத்தில்.  அங்கு சென்று கூண்டை வைத்துவிட்டு, அந்த ஆளும், மகனும் அந்த வீட்டின் அழைப்பு மணி அடித்துக் கூண்டு வைக்கப்பட்டதைச் சொல்லிவிட்டு தண்ணீர் கேட்டுக் குடிக்கலாமே என்று மணி அடிக்க கதவு திறந்ததும், மகனுக்கு மயக்கமே வந்து விட்டது. திறந்தவர் வேறு யாருமல்ல ராஜேஷ் வைத்தியா. அவர் கையால் தண்ணீரும் வாங்கிக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டான் ஒன்றும் பேசாமல். நம்ம பையனுக்குத்தான் அது கஷ்டமாச்சே.

இருக்கும் இடம் தெரிந்து விட்டதால், மிகவும் அருகிலேயே என்பதால், நானும் அவனது பரீட்சை முடிந்ததும் அவரைத் தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்து, ஒருவாரம் கழித்து அங்கு சென்று பார்த்தால் வீடு பூட்டியிருந்தது.  கூண்டும் காணவில்லை.  அவர் வீடு மாறிவிட்டார் என்று தகவல் கிடைத்தது.  கண்ணிற்கு எட்டியது கைக்கு எட்டவில்லை.  பின்னர் மகனைச் சமாதானப்படுத்தி, நாங்கள் இருந்த வீட்டின் அதே தெருவிலேயே இருந்த ஹம்சத்வனி எனும் இசைப்பள்ளியில் வீணை வகுப்பில் மகனைச் சேர்த்து வீணை கற்றுக் கொண்டான்.


குரங்கு செய்த குறும்புகளின் அழகிய வீடியோ இருக்கின்றது ஆனால் அது 100 எம்பி க்கு மேல் உள்ளதால் ப்ளாகர் அனுமதிக்கவில்லை 

இப்போது நாங்கள் இன்னும் ஐஐடி வளாகத்திற்கு மிக அருகில் அதன் சுவரை ஒட்டினாற் போல் உள்ள இடத்தில் இருக்கின்றோம். ஒரு நாள் பால்கனி வழியாக வீட்டிற்குள்ளேயே நம்மவர் வருகை. எங்கள் செல்லங்கள் இரண்டும் குரைத்து விரட்டின. ஆனால் நம்மவர் “கொர் கொர்” என்று சண்டைக்குத் தயாராக இருந்தார். வீட்டிற்குள் வந்து பழம் சாப்பிட்டு விட்டு, கழிதலும் நடத்திவிட்டுச் சென்றார். நான் கடி வாங்கியது போல செல்லங்கள் வாங்கிவிடக் கூடாது என்று பால்கனி கதவுகள் மூடியபடியே. செல்லங்கள் குரைப்பதால், ஜன்னல் வழியாகச் செல்லங்களின் செயினை இழுத்து இழுத்து வம்பும் செய்கிறார். வீட்டு பால்கனியில் தினமும் நம்மவர் வருகைப் பதிவேட்டில் பதிகின்றார். மீட்டுபவர் தற்போது இங்கில்லாததால் வீணை மட்டும் அப்படியே சுவரில் சாய்ந்து நின்று கொண்டே தூங்குகின்றது தன்னை மீட்டுபவரை எதிர்பார்த்து.

-கீதா

பின் குறிப்பு: இதயவீணை தூங்கும் போது பாட முடியுமா?!! பாட முடியும் என்றாகி உள்ளது! விரைவில்!!





ஞாயிறு, 23 நவம்பர், 2014

மனித நேயம் மிக்கவர்கள் மதம் கடந்தும், நூற்றாண்டுகள் கடந்தும் போற்றப்படுவார்கள்!


       புகைப் படித்தல், மது அருந்துதல், போதை மருந்து உபயோகித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகின்றவர்கள் நாளடைவில் அதிலிருந்து மீள முடியாமல், தங்கள் ஆரோக்கியத்தை சீர்குலைத்துத் தங்களையே அழித்துக் கொள்ளுவார்கள்.  அதே சமயம் வேறு சிலர் பலன் எதிர்பாராது பொதுநல சேவை போன்ற நல்ல பழக்கங்களுக்கு அடிமையாமையாகி தங்கள் வாக்கையையே மனித குல நன்மைக்கு தியாகம் செய்து இறைவனுக்குச் சமமாகப் போற்றபடுகின்ற ஒரு நிலைக்குச் சென்று விடுவார்கள்.  இது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான் என்றாலும், எவருமே மேலே சொல்லப்பட்டத் தீயப்பழக்கங்களுக்கு அடிமையாகாமல் ஒழுக்கமாக வாழ்ந்தாலும் மேற்சொன்ன நல்ல பழக்கங்களுக்கும் அடிமையாக விரும்புவதோ முயல்வதோ இல்லை.  அப்படி அடிமையாக விரும்புகின்ற சிலரோ அமெச்சூர் ஆர்ட்டிஸ்டுகளைப் போல் இடையிடையே நன்மை செய்து போகத்தான் விரும்புகின்றார்கள்.  அவர்களில் சிலர் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை தங்களது கோவில்கள், தங்கள் மதம் சார்ந்த பொதுநல நிறுவன்ங்களுக்குக் கொடுக்கின்ரார்கள், வேறு சிலரோ மதசார்பற்ற அனாதை இல்லங்கள், முதியோர் விடுதிகள் போன்றவற்றிற்கு கொடுத்து அப்படி பொது நலத் தொண்டு செய்பவர்களுக்கு உதவியாய் இருப்பதோடு திருப்தி அடைகின்றார்கள்.


      ஐஸ்வரியா பச்சன் தனது 20 ஆம் ஆண்டு அகில உலக அழகிப்பட்டத்தை 100 குழந்தைகளுக்கு (1 முதல் 14 வயது வரை உள்ள) பிளவுபட்ட மேல் உதட்டைச் சரிசெய்யும் அறுவைசிகிச்சைக்கானச் செலவை ஏற்றுக் கொண்டது போல் அதுவும் நல்லதுவே.  இங்குதான், மதர் தெரசா போன்றவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதை நினைத்து வியந்து போகிறோம். கிறித்துமத பொதுநல சேவை நிலையங்களில் சேவை புரிந்து வந்த அவர், “நிர்மல் ஹ்ருதை ஹோம் ஃபார் டையிங்க் டெஸ்டிட்யூட்ஸ்” Nirmal Hriday Home for dying destitutes போன்றவைகளைத் தொடங்கிய போது மத மதில்களை முழுமையாக இல்லை எனினும் அங்கிங்காக உடைக்க வேண்டி இருந்தது.  ஆம்! உண்மையான பொது நலம், மனித நேயம், மத மதில்களுக்குள் ஒதுங்காது. ஒதுங்கவும் கூடாது.  ஒதுக்கப்படவும் கூடாது. அது அவர்களது மறைவுக்குப் பின்னும் ஒளிவீசிக் கொண்டே இருக்கும்.  சாதி, மதம், இனம் மொழி பாராமல் இறை அருள் போல் எல்லோருக்கும் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும். 


      இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் கடந்த சனியன்று (15.11.2014) எங்கள் பள்ளியில் நடந்தது. திருச்சூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் “ஹாப்பி கெஸ்” எனும் பொது நல சேவை மையம் பாலக்காடு ஜில்லா பஞ்சாயத்து மற்றும் மாத்தூர் கிராமப் பஞ்சாயத்தின் அனுமதி பெற்று எங்கள் பள்ளியில் ஒரு எச் ஐ வி /எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்கள். ஒரு குறும்படமும், அதைத் தொடர்ந்து எச் ஐ வி பாதிப்பு மற்றும் எய்ட்ஸ் நோய் எப்படித் தொற்றுகிறது என்றும், அதை எப்படித் தடுக்கலாம் என்றும், எச் ஐ வி பாதிப்பு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளைப் பற்றி விரிவான ஒரு வகுப்பும் எடுக்கப்பட்டது.

      1500 க்கும் மேற்பட்ட எச் ஐ வி பாதிப்பாளர்களும், எய்ட்ஸ் நோயாளிகளும் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கின்றார்கள் என்பது அதிர்ச்தி அளித்தது.  அவர்களுக்கெல்லாம் கெஸ் (KESS) தேவையான உதவிகள் செய்துவருகின்றது என்பதை அறிந்ததும் மனதிற்கு இதமாக இருந்தது.  அது 16, மற்றும் 17 வயதுள்ள மாணவ மாணவியர்களுக்கு மிகவும் தேவையான, உபயோகமான வகுப்பு.  ஹாப்பி கெஸ் (HAPPI KESS) ஒரு பொதுநல தொண்டாற்றும் நிறுவனம் என்றதாலும் அதைப் பற்றி நான் கேள்விப்படாததாலும், அதன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டேன்.  அது KURIAKOSE ELIAS – குரியக்கோஸ் ஏலியஸ் எனும் பாதிரியார் பேரில் நடத்தப்படும் ஒரு பொது நலச் சேவை இயக்கம் என்றும், இம்மாதம் 23 ஆம் தேதி அவர் வாட்டிகனில் போப் ஆண்டவரால் புனிதராக அறிவிக்கப்பட இருக்கின்றார் என்றும் சொன்னார். 


      நான் குரியாகோஸ் ஏலியாஸ் பாதிரியாரைப் பற்றி தெரிந்து கொள்ள முயன்ற போது அவர் “சாவர அச்சன்” என்று அறியப்படும் இவர், 150 வருடங்களுக்கு முன் கேரளாவில் பொதுக் கல்விக் கூடம் நிறுவி, இலவசமாகக் கல்வி கற்பிக்க வழி வகை செய்தவர் என்பதை அறிந்தேன்.  தமிழகத்தில் பிறந்து 24 வயது வரை தமிழகத்தில் வளர்ந்த எனக்குக் கேரள சமூக வரலாறு என்பது அதன் பின் நான் கண்டும் கேட்டும் வாசித்தும் புரிந்து கொண்ட ஒன்றுதான். கேரள மாநிலம் 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறியதற்கு உதவிகரமாய் அமைந்ததாய்ச் சொல்லப்படும் பல காரணங்களில் முதன்மையானது கிறித்தவ மத பாதிரிமார்கள் ஆரம்பித்த பள்ளிகள் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.


      16, 17, 18, 19 ஆம் நூற்றாண்டுகளில், கேரளத்தில் பிராமணர்களும் சம்ஸ்கிருதமும் கொடிகட்டி வாழ்ந்த காலம். பிராமணர்களுக்குத் துதிபாடும் சிறுபான்மையினர் தவிர மற்றவர்களெல்லாம் கோயில்களுக்குள்ளோ, சொந்தமாக விவசாயம் செய்யவோ, கல்வி பயிலவோ, அனுமதிக்கப்படவில்லை. பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கக் கூட அனுமதிக்கப்படாததால் அதை எதிர்க்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக கிறித்தவ மற்றும் இஸ்லாம் மதங்களுக்குக் குடியேறிய காலம். **

மார்த்தாண்டவர்மா 18 ஆம் நூற்றாண்டில் பின்பகுதியில் திருவிதாங்கூர், கொச்சி, மலபார் பகுதிகளில் “படையோட்டம்” நடத்தி விலைமதிப்பற்ற ரத்தினங்கள், அணிகலன்களை எல்லாம் நாட்டரசர்கள் மற்றும் கோயில்களில் இருந்து அபகரித்து திருவனந்தபுரம் ஸ்ரீபத்மானாபரின் பாதங்களில் சமர்ப்பித்தக் காலம். (சிலவருடங்களுக்கு முன் பதுக்கி வைத்த அந்த வைர வைடூரியங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அதை என்ன செய்வது என்று தெரியாமல் புதையல் காக்கும் பூதமாக இப்போது கேரள அரசு மாறி இருக்கிறது! ) அதனிடையே, மார்த்தாண்ட வர்மா தான் கைப்பற்றிய, காலம் காலமாய் முன்னோர்கள் பாதுகாத்துவந்த ஓலைகளை எல்லாம் தீக்கிரையாக்கி அவருக்குத் தோன்றிய விதத்தில் கேரள சரித்திரம் ஒன்றை எழுதிய காலம். தீக்கிரையாக்கும் முன் மருத்துவம், கலை, இலக்கியப் படைப்புகளில் தேவையானவைகள் சம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டதால், அம்மொழி தெரியாத சாதாரண மனிதர்கள் அவர்களது முன்னோர்களிடமிருந்து கேட்டறிந்தவைகளை மட்டும் அடுத்தத் தலைமுறைக்கு பகிர்ந்து கொடுத்த காலம்.  எவரேனும் இதையெல்லாம் மீறி படிக்கவோ, எழுதவோ கற்கவோ முயன்றால், அவர்கள் ஸ்ம்ஸ்க்ருத மொழியில் எழுதப்பட்டவையை கேட்டும், எழுதியும், பேசியும் அதன் புனிதத் தன்மையை மாசுபடுத்து விட்டார்கள் என்று குற்றம் சுமத்தி அவர்கள் காதில் ஈயத்தை உருக்கி ஊற்றுவது, நாவறுப்பது போன்ற காட்டுமிராண்டித்தனங்களைச் செய்து கொண்டிருந்த காலம்.
 
                அப்படிப்பட்டக் காலத்தில் 1805 ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி குரியாகோஸ்-மரியம் தம்பதிகளுக்கு மகனாய் பிறந்த குரியாகோஸ் ஏலியாஸ் மதக் கல்வி பயின்று தன் 24 ஆம் வயதில் சாவரா சர்ச்சின் பாதிரியானார்.  1831 ல் கோட்டயம் மாந்தானம் என்னும் இடத்தில் பிற்காலத்தில் கார்மலேட்  ஆஃப் மேரி இம்மாகுலேட் (சிஎம்ஐ) ஆக மாறிய ஒரு கிறித்தவ ஆஸ்ரமத்தை நிறுவினார்.

      1848 ல் மாந்தானத்தில் மலையாளம் மற்றும் சம்ஸ்க்ருதம் கற்பிக்கும் பள்ளியை நிறுவி அங்கு கிறித்தவக் குழந்தைகளுக்கு மட்டுமன்றி இந்து மதத்தைச் சேர்ந்த பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களது குழந்தைகளுக்கும் கல்வி அறிவு ஊட்டிக் கல்வியை பொதுவுடைமை ஆக்கினார்.  கல்வி கற்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நோக்குடன் எல்லா வீடுகளில் இருந்தும் அவர்கள் சமைப்பதற்கு முன் அதிலிருந்து ஒரு பிடி அரிசியைத் தனியே எடுத்து வைக்கச் செய்து அப்படி சேமிக்கப்பட்டதை வாரம் ஒரு முறை ஆஸ்ரமத்தில் ஏற்பிக்கச் செய்து அதைச் சமைத்து மாணவர்களின் பசியைப் போக்கினார் . அப்படி மதிய உணவுத் திட்டத்தை 19 ஆம் நூற்றாண்டிலேயே முதன் முறையாகத் தொடங்கி வைத்த மகான் அவர். அவ்வருடமே கோட்டயத்தில் செயின்ட் ஜோசஃப் ப்ரெஸ்ஸைத் தொடங்கினார். மலையாளம் மட்டுமன்றித் தமிழ், சம்ஸ்க்ருதம், லத்தீன், போர்ச்சுகீஸ் மொழியறிவு பெற்றிருந்த அவர், ஏராளமான டயரிக் குறிப்புகள், கவிதைகள், நாடகங்கள் வாழ்க்கை வரலாறுகள், பிரார்த்தனை கீதங்கள் போன்றவற்றை அச்சடித்து எல்லோருக்கும் அவற்றை எல்லாம் படிக்க வழி வகை செய்தார்.



1871 ஆம் ஆண்டு ஜனவரி 3 அம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள கூனம்மாவில் இறையடி சேர்ந்த அவரது சேவை கேரளாவில் உள்ள கிறித்தவர்களுக்கு மட்டுமல்ல எல்லா மதத்தினருக்கும் கிடைக்கப் பெற்றிருக்கிறது.  அந்த உண்மை ஏனோ, எப்படியோ, எல்லோருக்கும் தெரியாமலும், அதிகம் பேசப்படாமலும் போயிருக்கிறது. அதனால் தான் சாவரை அச்சன் புனிதராக அறிவிக்கப்படும் நாள் கேரளத்திலுள்ள கிறித்தவர்களுக்கு மட்டும் மகிழ்ச்சியூட்டும் தினமாக ஆக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 23.11.2014 அன்று வாட்டிகன் சர்ச்சில் - St. Peter's Basilica - புனிதராக அறிவிக்கப்படும் அந்நாள் மனித நேயம் உள்ள எல்லோருக்கும் ஒரு பொன் நாளே!  மனித நேயம் மிக்க அவரைப் போற்றுவதுடன் அவர் தொடங்கி வைத்த நற்பணி வரும் நூற்றாண்டுகளிலும் மனித குலத்திற்கு நன்மை புரிந்து வளர வாழ்த்துவோம்! 

படங்கள் : இணையம்
**http://thillaiakathuchronicles.blogspot.com/2014/01/Hinduism-Saivism-Vaishnavism-Religion-Society.html

வெள்ளி, 21 நவம்பர், 2014

நல்லாசிரியர்கள் ஆகத் தெரியாத ஆசிரியர்கள்

      

      எங்கள் தளத்தில் துளசியின் கோர்ட்டுக்குப் போகும் குரு, சிஷ்ய உறவுகள்”   என்ற இடுகைக்கு நண்பர் ஸ்ரீ ராம் அவர்களது பின்னூட்டம் இது “ஆறாம் வகுப்புப் படித்தபோது வந்த என் பிறந்தநாளை என்னால் மறக்கவே முடியாது. இந்தியாவில் இருப்புப் பாதைகள் என்ற கேள்விக்கான 4 பக்க பதிலில் என்னால் 2 பக்கங்கள் மட்டுமே சொல்ல முடிந்திருக்க, மங்கள்ராஜ் வாத்தியார் இன்னொரு மாணவனை விட்டு தரையில் மண் தூவச் சொல்லி, என்னை அதில்முட்டிக்கால் போடச்சொல்லி, இரண்டு பாதங்களிலும் வெளுத்தார் பாருங்கள்...இப்போது டைப் அடிக்கும்போதும் பாதங்கள் குறுகுறுக்கிறது!

      இதை வாசித்த போது மனம் நம் கல்வி முறையை நினைத்து வருந்தியது. 2 பக்கங்கள் எழுதாதது தவறா? அதற்காக, இந்த வயதிலும் கூட அந்த அடி ஆழ் மனதில் பதியும் அளவிற்கு அடிக்கும் தண்டனை அவசியமா? அந்த சிறு வயதில் ஸ்ரீராம் அவர்களின் மனது எப்படி வலித்திருக்கும்? இதனால் அவரது அறிவுக் கூர்மையையோ, இன்று நம்மை எல்லாம் மகிழ்விக்கும் சீரிய, ஹாஸ்ய உணர்வு இழை ஓட அருமையாக எழுதும் அவரது எழுத்துத் திறமையையோ, பள்ளியாலோ, தேர்வாளராலோ, ஆசிரியராலோ அறிய முடிந்ததா? கணித்திட முடிந்ததா? அவரது இசை அறிவை, ஆர்வத்தைக் கண்டுபிடிக்க முடிந்ததா? அவர் நல்ல பணியில் சேர முடியாமல் இருந்ததா என்ன? 

எனக்கு என் மகனைப் பற்றிய நினைவுகள் வந்தன. என் மகனின் சிறிய கற்றல் குறைபாட்டைப் பற்றி ஒரு சில இடுகைகளில் குறிப்பிடிருக்கின்றேன்.  +2 வரை போராட்டம் தான். அப்படியாகக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் அடி எடுத்து வைத்தான் பலபோராட்டங்களுக்கு இடையில். எழுதுவதற்கும், படிப்பதற்கும் கஷ்டப்பட்டாலும், அதாவது படிப்பதற்கு அதிகப் பாடங்கள் (Subjects) என்பதாலும், அவனோ ஒவ்வொன்றிற்கும் அதிக நேரம் எடுத்துக் கொண்டதாலும், எழுத்து வேலைகளும் அதிகம் என்பதாலும், நேரத்தை நிர்வகிக்க மிகவும் சிரமப்பட்டான். இது அவனது அறிவு சார்ந்தது அல்ல. ஆசிரியர்கள் அவனது பாட அறிவைக் கண்டு மெச்சத்தான் செய்தார்கள். ஒரே ஒரு ஆசிரியரைத் தவிர.  அதுவும், அவன் சிறந்து விளங்கிய கிளினிக்கல் வருடங்களின் போது. அந்த ஆசிரியரைப் பற்றிச் சொல்வதற்கு முன்...

31/2 வருடங்களுக்குப் பிறகு மருத்துவத்திற்கான பயிற்சி வருடங்கள். அப்போது கைனேக்காலஜி பிரிவில் இவனது தேர்வுத் தாளை, ஆசிரியர், வகுப்பில் எல்லோருக்கும் தூக்கிக் காட்டியிருக்கின்றார்.

“இவன் ஒருத்தன் தான் ஒரு டாக்டர் எப்படி எழுதணுமோ அப்படி எழுதியிருக்கான். ஒரு டாக்டர் எப்படி கேஸ் ஹிஸ்டரி எழுத வேண்டுமோ அப்படிச் சுருக்கமாக, மிகவும் சரியான டயக்நோசிஸ், ட்ரீட்மென்ட், என்று ரத்தினச் சுருக்கமாகத் தெளிவாக எழுதிருக்கான்.  நீங்கல்லாம் பக்கம், பக்கமா எழுதிருக்கீங்க, உங்களுக்குத் தெரிஞ்ச கதையெல்லாம், விஷயத்த எல்லாம் எழுதியிருக்கீங்க. ஏதோ சமூகவியல் பேப்பர் மாதிரி. இவன் பேப்பர பார்த்துக் கத்துக்கங்க. இப்படித்தான் இருக்கணும்” என்று பாராட்டிவிட்டு,

“எப்படிப்பா உனக்கு ஆம்புலேட்டரில குறைஞ்சிருக்கு? நீ அதுலயும் சரியாத்தானே, நல்லாத்தானே எழுதிருக்க” என்று சொல்லியிருந்திருக்கின்றார். 

மருத்துவப் பயிற்சி வகுப்புகளில், ஆம்புலேட்டரி வகுப்பு என்று பல கிராமங்களுக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பயிற்சி அளிப்பதற்காக அழைத்துச் செல்வார்கள். அதில் தேர்வும் உண்டு. கிராமத்தில் அவனுக்கு வந்த நோயாளி ஒரு மாடு.  அதனைப் பரிசோதித்து அதற்கு என்ன பிரச்சினை என்பதைக் குறிப்பிட்டு, அதைச் சற்றே விவரித்து, அதற்கு என்ன தீர்வு, என்ன மருந்து என்று எழுத வேண்டும்.  இவன் எழுதியது ¾ பக்கத்திற்கு. அந்த ஆசிரியரோ,

“என்னப்பா இது?  இது பரீட்சை.  ¾ பக்கம்தான் எழுதியிருக்க.  2, 3 பக்கம் எழுதணும். நீ என்ன படிச்ச?” என்று கேட்கவும் இவனோ

“சார், நான் சரியாத்தான் எழுதியிருக்கேன்.  இது தியரி இல்லையே சார். எனக்கு என்ன பேஷன்ட் வந்துச்சோ அதுக்குண்டான பிரச்சினையை மட்டும்தானே சார் நான் எழுதணும்.  அதைத்தான் எழுதியிருக்கேன் சார்”

“அப்போ புக்க படிக்கலையா? புக்குல என்ன இருக்கோ அத எழுதியிருக்கணும்.  மினிமம் 2 பக்கம் எழுதி இருக்கணும்”

“சார், புக்குல கொடுத்துருக்கறது அமெரிக்க மாடு பத்தி சார்.  அந்த மாட்டுக்கு அங்க என்ன பிரச்சினையோ அத பத்தி சார்.  எனக்கு வந்த மாடு இந்திய நம்மூர் மாடு. அதுக்கு என்ன பிரச்சினையோ அதத்தானே சார் நான் எழுத முடியும். அதுமட்டும் இல்ல, நான் என்ன பேஷன்ட பாக்கறேனோ அதத்தானே நான் எழுதணும், ரெண்டாவது, புக்குல உள்ளத எழுதினா அப்புறம் கேஸே தப்பாயிடுமே சார்.  மூணாவது பாயின்ட், இது கேஸ் பத்தின- கேஸ் ஹிஸ்டரி, டயக்னாசிஸ், ட்ரீட்மென்ட் பத்தின பரீட்சை சார்” அவன் தனது அறிவு சார்ந்த நேர்மையான, நல்ல விஷயங்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பதும் இல்லை.

“அதெல்லாம் இல்ல.  நீ புக்குல உள்ளத எழுதியிருக்கணும். என்ன நீ எதிர்த்து பேசற, வா, வா உன்ன வைவாவுல நல்லா கவனிச்சுக்கறேன்” என்று சொல்லியவர் இதற்கும் குறைவான க்ரேட் கொடுத்து, வைவாவிலும் - வேண்டுமென்றே குதர்க்கமான கேள்விகள் கேட்டும், அவன் மிகவும் புத்திசாலித்தனமாக விடையளித்தும் கூட குறைந்த மதிப்பெண்கள் இட்டு மொத்தமாக 69% தான் கிடைத்தது.  இவனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பக்கம் பக்கமாக எழுதியிருந்திருக்கின்றார்கள். (நம்ம பையனுக்குத்தான் அது வராதே)

  இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை.  நான் பெருமைப்படவும் மாட்டேன். (முதலில் வேறு ஒரு பையனாகக் குறிப்பிட்டு எழுதலாம் என்றுதான் நினைத்தேன். துளசிதான் இப்படியே இருக்கட்டும் என்று சொன்னதால்தான்) நம் கல்வி முறை எப்படி உள்ளது என்பதைப் பற்றிச் சொல்லத்தான் எழுதினேன்.  அவனது இறுதி மொத்த மதிப்பெண்கள் வந்த போது - 7.32/10

“என்னாச்சுப்பா? உன் காமன்சென்ஸ், இன்டெலிஜன்ஸ், ப்ராக்டிகல் நாலெட்ஜ், அப்ளிக்கபிலிட்டி எல்லாம் பாத்தா நீதான் டாப்பரா இருப்பனு நினைச்சோம்...அப்போ நீ பேப்பர்ல ஒண்ணுமே காட்டல? நம்மூர் பொறுத்தவரை நீ பேப்பர்ல கதை காமிக்கணும்பா.” அவங்களுக்குத் தெரியாதே நம்ம பையன் எழுதறதுல வீக்குனு.....

அன்று நண்பர் ஸ்ரீராம் சிறு வயதில் அடிவாங்கியது போலவோ, இன்னும் பலர் அடிவாங்கியதாகவும், தண்டனைகள் பெற்றதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள், அதைப் போலவோ, இப்போது பெரும்பாலும் அடிப்பது என்பது தடைசெய்யப்பட்டுள்ளதால், மகன் பள்ளியில் அடிவாங்கவில்லை என்றாலும் பல எதிர்மறை விமர்சனங்கள். அவமானங்கள். நாங்கள் அதற்கு மதிப்புக் கொடுக்காததாலும், மகனின் தன்னம்பிக்கை பாதிக்கப்படக் கூடாது என்று அவன் மனதைப் பக்குவப்படுத்தி இருந்ததாலும் இவற்றை எல்லாம் எதிர்கொள்ள எளிதாக இருந்தது. இன்று அடிகள் குறைந்திருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான ஆசிரியர்களின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. அன்றிலிருந்து இன்று வரை இப்படிப்பட்ட ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

 அடிப்பதில்லை என்றாலும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் அளவில்  மதிப்பெண்களில் கைவப்பது, மனம் வலிக்கும் அளவு, சுயமரியாதையைச் தரக்குறைவாகப் பேசுவது போன்றவை நடக்கத்தான் செய்கின்றது. ஆசிரியர்கள்/பேராசிரியர்கள் தங்கள் ஈகோவைத் தவிர்த்து அவர்களின் தன்னம்பிக்கையையும், அறிவையும் வளர்க்கும் விதத்திலும், அவர்களதுத் தனித்திறமையை அறிந்து ஊக்கப்படுத்தி அதை வெளிக் கொணரும் வகையில் நடந்து, மாணவர்களின் மனதில் இறைவனுக்கு அடுத்த இடத்தில் இடம் பெறலாமே. எல்லா மாணவர்களையும் தங்கள் குழந்தைகளாக மனதில் கொண்டுவிட்டால் அவர்களை அடிக்கவோ, மனது புண்படும் அளவு பேசவோ, எதிர்காலம் பாதிக்கும் அளவிலோ செயல்படத் தோன்றாதல்லவா. ஆசிரியப் பெருமக்களே உங்கள் பிரம்பு அடிப்பதற்கு அல்ல, அதைக் குழந்தைகள் பிடித்துக் கொண்டு உங்கள் பின்னால் நடந்துவருவதற்கே. உங்கள் நா வசை பாடுவதற்கல்ல.  இனியதைப் பேசி நண்பரைப் போல பழகிடவே. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. கற்பிப்போருக்கும்தான்! அவர்கள் சிறந்த முறையில் கற்பித்திருந்தால்!



 

( ஆசிரிய சகோதர, சகோதரிகளே! இந்தக் கட்டுரையைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.  இது ஆசிரியர்களைப் புண்படுத்தும் எண்ணத்தில் எழுதியது அல்ல.  எங்களிலும் ஆசிரியர் இருக்கின்றாரே)

படங்கள் : இணையம்.