சில நொடி சினேகம்
நாங்கள் வலைப்பூ ஆரம்பித்து, வலைப்பூக்களை
நுகர, வலையில் உலா வந்த போது குடைந்தையூர் சரவணன் அவர்களின் குறும்படம் எடுக்க
விரும்பும் வேண்டுகோளைக் கண்டு அவரைத் தொடர்பு கொள்ள, அப்போது பூத்த அந்த சில நொடி
நட்பு இன்று அவரது படத்தில் பங்கு பெறும் அளவிற்கு பெரிய ஆழமான நட்பூவாய்
விரிந்திருக்கின்றது என்பதை நாங்கள் மிகவும் மகிழ்வுடனும், பெருமையுடனும்
தெரிவித்துக் கொள்கின்றோம். ஏனென்றால், இந்த நட்பு எங்களுக்குப் பல நட்புகளை
ஏற்படுத்தி விரிவாக்கியுள்ளது.
குடந்தையூர் ஆர் .வி. சரவணன், பதிவர், http://kudanthaiyur.blogspot.in/ இயக்குனர் - குறும்படம் சில நொடி சினேகம்
நாம் ஒரு படத்தைப்
பார்த்ததும் நமக்கு அதன் ஆழ அகலம் தெரிந்தது போன்று விமர்சிக்கின்றோம். நமக்கு
உரிமை உண்டுதான். என்றாலும், படம்
இயக்கும் ஆர்வமும், கனவும் பலருக்கும் இருந்தாலும், ஒரு படம் இயக்கி, அது
குறும்படமாக இருந்தாலும், அதை வெளிக் கொண்டுவருவது என்பது சாதாரண விஷயமல்ல. அந்தப்
பாதை மிகவும் கரடுமுரடானது. பல இன்னல்கள் நமது பாதையில் முளைத்து நம்மைச்
சோர்வடையச் செய்யும். ஒரு சாமான்ய மனிதன் அந்த
இன்னல்களை எல்லாம் மிகுந்த மன தைரியத்துடன் எதிர்கொண்டு, கடந்து வந்து, வெற்றி
இலக்கைத் தொடுவது என்பது எத்தனைக் கஷ்டமானது என்பதை அனுபவத்தினால் மட்டுமே உணர
முடியும். அதிர்ஷ்டக் காற்றும் நம் பக்கம் வீச வேண்டும். ஆனால், சரவணன் அவர்களின் முதல்
படமாகிய சில நொடி சினேகம், குறும்படம் உங்கள் முன் விரியும் முன் அவர் சந்தித்த
இன்னல்கள் பல. அவர் இயக்க இருந்த முதல்
குறும்படத்திற்கான வேலைகள் பாதி முடிந்த நிலையில், சென்னையில் படப்பிடிப்பு
என்றும், தேதியும் முடிவு செய்யப்பட்ட நிலையில், அதில் நடிப்பதாக இருந்த, கோவை
ஆவியும், துளசியும் வெளியூர் என்பதால் அவர்களது பிரயாணங்கள் முடிவு செய்யப்பட்டு
ரயிலில் பதிவும் செய்யப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் தடைபட்டுப்
போனது.
சரவணன் அவர்கள் சிறிது
தளர்ந்தாலும், உடன் அடுத்து தனது சிறுகதைகள் பற்றி எங்கள் குழுவுடன் (கோவைஆவி,
அரசன், துளசி, கீதா) அதைப் பற்றிக் கருத்துப் பரிமாற்றம் செய்து அதில் ஒரு கதையைத்
தேர்ந்தெடுத்து, அதற்கான வேலைகளைத் தொடங்க ஆரம்பித்தார். அதுதான் இந்தக் கதை. முதலில் இந்தக் கதையைச் சென்னையில்
தான் இயக்குவதாக இருந்தது. முன்பு முடிவான அதே தேதி என்றும். ஏனென்றால் வெளியூரில்
இருந்து வரும் இருவரின் பிரயாணமும் தடைபடாமல் இருக்க வேண்டி. இதன் கதைக் களம்
பேருந்து நிலையம் என்பதால், முதலில் ரெட்ஹில்ஸ் பேருந்து நிலையத்தில் படம்
பிடிக்கலாம் என்று கேஆர்பி அவர்கள் பரிந்துரைக்க, முடிவும் செய்யப்பட்டது. பகலில் படப்பிடிப்பு என்பதாலும், அது பொது இடம்
என்பதாலும், அதற்குக் காவல் துறை அனுமதி வேண்டும் என்பது தெரிய வர, நாங்கள் காவல்துறையை
அணுகுவது எப்படி என்று பல வழிகளிலும் முயன்று, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதிமுறைகள்
சொல்ல, ஒவ்வொன்றும், பாம்புக் கட்டத்தில் ஏறி, ஏறி சறுக்கிக் கீழே வருவது போல் வந்துக்
கொண்டிருந்தது. மேலும் இந்த வழிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரேட் சொல்லியது! படம்
எடுக்க ஆகும் செலவை விட இருமடங்கு ரேட் வரை சென்றது! இரண்டு படமே எடுத்துவிடலாம்!
இரண்டு வாரங்களே இருந்தது. தேதி நெருங்கியதே தவிர, எந்தவிதத்திலும்
அனுகூலமான பதில் இல்லை. கும்பகோணமா, சென்னையா என்று முடிவாகவில்லை. இரு நாட்கள்தான் இருந்தது. கும்பகோணத்திலும்
அவர் முயற்சி செய்து கொண்டிருந்தார். ஒரு
வழி கொஞ்சம் வெளிச்சம் காட்ட, டிக்கெட் எதுவும் ரத்து செய்ய வேண்டாம்,
படப்பிடிப்பு சென்னையில்தான் என்று இயக்குநரால் அறிவிக்கப்பட்டு, நேரடியாக ரெட்
ஹில்ஸ் காவல் நிலையத்தையே அணுகலாமே என்று இயக்குனர் நேரில் சென்றார். அப்போதுதான்
தெரியவந்தது, முதலில் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டும், அவர்கள் அனுமதித்த
பின்னர் பேருந்து நிலைய டெப்போ, ரெட் ஹில்ஸ் காவல் நிலையம், தாசில்தார் என்று தனித்தனியாக
மனு கொடுக்க வேண்டும் என்று அறிந்த போது அது இரண்டு நாட்களில் முடியும் வேலையா? கும்பகோணம்தானே
நமது இயக்குனரின் ஊர் ஆதாலால் அங்கு பேருந்து நிலைய அனுமதி, பேருந்திற்கு அனுமதி
எல்லாம் பெறவேண்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டு கும்பகோணத்தில் படப்பிடிப்பு என்று
முடிவானது.
ஆவி, துளசி அவரது மனைவி மூவரும் கோயம்புத்தூரிலிருந்து
கும்பகோணத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அரசன், கீதா மற்றும் புகைப்படக் குழுவினர் சென்னையிலிருந்து கும்பகோணம்
நோக்கிப் பயணம். ஆவியும், துளசியும் ரயிலில் சினிமா பற்றி பல விஷயங்களை ரசனையுடன்
பேசி, கருத்துக்கள் பரிமாறிக் கொண்டிருக்க, அரசனும், கீதாவும் பேருந்தில் பல
சுவாரஸ்யமானக் கதைகள் பேச என்று பயணம் தொடர்ந்தது. பேருந்து சற்று தாமதமாகத்தான்
போய்ச் சேர்ந்தது. காலையில் இயக்குனரின்
தம்பி அவர்கள் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்ள, காலை உணவிற்குப் பிறகு, முதல் சீன்
ஆட்டோவில் ஆவி, அரசனும் வந்திறங்கும் காட்சி படமாக்கப்பட்டது. இயக்குனருக்கு இது
முதல் பட அனுபவம், அரசனுக்கும், ஆவிக்கும் காமராவின் முன் புது அனுபவம் ஆதலால்
அந்தக் காட்சி கொஞ்சம் பல டேக்குகள் வாங்கியது.
இயக்குனருக்குக் கொஞ்சம் பதட்டம் வர காட்சியை ஆட்டோ ஓட்டுனருக்கும், அதில்
வருபவர்களுக்கும் விளக்க, அந்த இடைப்பட்ட நேரத்தில், ஆவியும், அரசனும் வசனம்
பேசிப் பயிற்சி எடுக்க, இப்படியாக நல்ல அனுபவம் எல்லோருக்கும். அந்த முதல் காட்சி படமாக்கப்பட்டவுடன், அடுத்த
சீனான, அரசன் முன்னே செல்ல ஆவி அவரிடம் மீதிச் சில்லறை கொடுக்க அவரைத் தொடர்வது
எடுக்கப்பட, சில டேக்குகள் வாங்க, இப்படியாக தொடர்ந்தது படப்பிடிப்பு. அதன் பின்னர் பேருந்து நிலையத்தில்
எடுக்கப்படும் காட்சிகளுக்கு முன்னேற, குழுவினர் அங்கு இடம்பெயர, பேருந்துகள்
வந்து சென்றே கொண்டிருக்க, மக்கள் பேருந்திற்கு வேண்டி ஓடி ஏற, இறங்க, இப்படியான ஒரு
பரபரப்பான பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்துவது என்பது எவ்வளவு கடினம் என்பது
புரிந்தது. இயக்குனருக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும், நடித்தவர்களுக்கும் பாராட்டுக்கள்!
பின்னர், மதிய உணவிற்குப் பிறகு, ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்னர் படப்பிடிப்பு
மீண்டும் தொடங்கியது. அதுவும் மிகவும்
பரபரப்பான பொது இடம் தான். அரசனும்,
துளசியும் சந்திக்கும் காட்சி. துளசி
காரோட்டிக் கொண்டு வந்து அரசனைச் சந்திக்கும் காட்சி சில டேக்குகள்
வாங்கியது. பின்னர், இருவரும் காரில்
ஆவியைத் தேடிச் செல்லும் காட்சி, அதுவும் பரபரப்பான சாலையாக இருந்ததால் கொஞ்சம்
டேக்குகள் வாங்கியது. இறுதியில்,
இடைப்பட்டக் காட்சியான, அரசனும், ஆவியும் பேருந்து நிலையத்தில் பேருந்திற்குக்
காத்திருக்கும் போது பேசும் காட்சிப் படமாக்கப்பட, நல்லபடியாக படப்பிடிப்பு
முடிந்தது.
7.06 நிமிடங்கள்தான் படத்தின் நீளம்.
ஆனால், ஒரு நாள் தேவைப்பட்டது. இயக்குனர் பின்னர் “இன்னும் ஒரு நாள் கூட
படப்பிடிப்பு நடத்தியிருந்தால் இன்னும் நிதானமாக, நேர்த்தியாக்க் காட்சிகளை
அமைத்திருந்திருக்கலாமோ” என்று சொல்லிக் கொண்டார். ஏற்பாடுகளை மிகவும் அருமையாக்ச்
செய்திருந்தார்கள். இயக்குனரின் மொத்தக்
குடும்பமும், உறவுகளும் அங்கு வந்திருந்து ஆதரவு அளித்தனர். படப்பிடிப்பின் போது
பல நல்ல பாடங்கள் கற்றுக் கொண்டோம்.
காட்சிகள் இன்னும் எப்படி விதப்படுத்தலாம், நேர்த்தியாக வைக்கலாம் என்பது
முதல், ஒரு பரபரப்பான பொது இடத்தில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த என்று தனி ஆட்கள் இல்லாத போதும் படப்பிடிப்பு
எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள முடிந்தது! நல்ல அனுபவம் தான். பின்னர் இயக்குநர் பாக்அப் சொல்ல எல்லொரும்
நாங்கள் தங்கியிருந்த ரூமிற்கு வந்தோம்.
மறு நாள் நாங்கள் (அரசன், துளசி. அவரது மனைவி, ஆவி, கீதா) எல்லோரும்
இயக்குநரின் வீட்டிற்குச் சென்றோம். மிகுந்த அன்பு உபசரிப்பு. அவர்களது அன்பில்
நாங்கள் திளைத்தோம்.
படம் முடிந்து பின்னர்தான் முக்கியமான வேலை. எடிட்டிங்க், டப்பிங்க் போன்ற நகாசு வேலைகள்
இயக்குனரையும்,, ஒளிப்பதிவாளர் ஜோன்ஸையும், ஆவி, அரசனையும் இரவு தூங்க விடாமல்
வேலை வாங்கியது! துளசி டப்பிங்கிற்கு வேண்டி சென்னை வர முடியாததால், ஒளிப்பதிவாளர்
ஜோன்சின் குரல் ஒத்துப் போக அது டப் செய்யப்பட்டது. படத்திற்கான போஸ்டர் இயக்குநரின்
மகன் ஹர்ஷவத்தன் மிக நன்றாகச் செய்து தந்தார்.
இப்படியாக வேலைகள் முடிந்து முதல் காப்பியை, வாத்தியாரும், சீனுவும்,
ஸ்கூல் பையன் சரவணனும் பார்த்து விமர்சிக்க்க் குறைகள் எடுத்துக் கொள்ளப்பட்டுச்
சரி செய்யப்பட்டது. ஒரு பெண் கருவுற்ற நாள் முதல், பிரசவிக்கும் வரை எத்தனை எத்தனை
இன்ப, துன்பங்களைச் சந்திக்க நேரிடுமோ அது போன்று சந்தித்து, குழந்தை வெளியில் வரும்
போது குழந்தையிடம் குறை இருக்கின்றது என்றால் அந்தத் தாய், அந்தச் சமயம் எவ்வளவு
வேதனைப் படுவாளோ அது போன்ற ஒரு அனுபவம்தான் ஒவ்வொரு இயக்குனருக்கும் அவர்களது படம்
உருவாகி வெளிவருவதும். அதுவும் முதல்
பிரசவம் என்றால்? என்றாலும் தாய் தன் குழந்தையுடம் சிறு குறைகள் இருந்தாலும், அதை
அன்பானவர்கள் சுட்டிக் காட்ட அதை மெருகேற்றி, சரி செய்ய முடிந்தக் குறைகளைச் சரி
செய்வது போல், இயக்குநரின் மீதிருந்த அன்பும் அக்கறையும் தான் அந்த விமர்சனங்களுக்குக்
காரணம் என்பதால், இயக்குனர் படத்தில் இருந்தக் குறைகளைச் சரி செய்ய முடிந்த அளவு சரி
செய்து இதோ உங்கள் முன்னும் வந்து நீங்கள் எல்லோரும் அதைப் பார்த்து விமர்சனங்களும்,
முகநூலிலும், யூட்யூபிலும் வந்து கொண்டிருக்கின்றது.
குறும்படத்தை முதலில் நம் இயக்குனரின் அபிமான இயக்குனர் திரு பாக்கியராஜ்
அவர்கள்தான் வெளியிடுவதாக இருந்தது. ஆனால், பாக்யராஜ் அவர்களுக்கு நேரமின்மை காரணத்தால், அவரை, இயக்குனர், இயக்குனரின்
தம்பி, அவரது மனைவி, ஆவி, கீதா ஐவரும் சென்று அவரது அலுவலத்தில் சந்தித்துப் படத்தை
அவர் பார்வையிட்டு, 20 நிமிடங்கள் அவர் எங்களுக்காக நேரம் ஒதுக்கியது மிகவும்
மகிழ்வாக இருந்தது.
இப்படியாகச், சென்ற வருடம் குடந்தை ஆர்.வி. சரவணன் என்பவருடன்
ஆரம்பித்த எங்கள் சில மின் அஞ்சல் நட்பு, சில நொடிகளில் உருவாகி இன்று பல மின்
அஞ்சல் நட்பாய்-பல நொடிகளாய் வளர்ந்து, அவரைத் துளசியின் படத்தில் பங்கெடுக்க
வைத்துப், பின்னர் அவரது படத்தில் துளசியும் பங்கெடுத்து, எங்கள் நண்பர் குடந்தையூரார் என்றாகி விட்டார்! அவரால் எங்கள் நட்பு
வட்டம் வாத்தியார், ஆவி, அரசன், சீனு, ஸ்கூல்பையன் என்று
விரிந்து இருக்கின்றது! இயக்குனரும் எங்கள் நண்பருமான குடந்தையூரார் இன்னும் பல வெற்றிப் படங்கள்
தந்து மிளிர எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! இந்தப் படம் உருவாவதற்குக்
காரணமாக இருந்த எல்லா அன்பர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த
நன்றிகள்!