வெள்ளி, 10 அக்டோபர், 2014

முயற்சி திருவினையாக்கும்.....விடா முயற்சி முருகானந்தத்திற்கு உலகப் புகழ் தேடித் தந்திருக்கிறது!!!


உலகின் போக்கை தங்கள் பேராற்றலால் மாற்றிய நூறு சாதனையாளர்களில் ஒருவரும், அப் பட்டியலில், இந்தியாவிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திரமோடி, அருந்ததிராய் போன்றவர்களுடன், தன் இணையற்ற சாதனையால், இடம் பிடித்தவர்தான் கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தன்.டைம் மாகசின் 2014ல் வெளியிட்ட 100 சாதனையாளர்களின் பட்டியலில் இடம் பிடித்து, இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கின்றார் முருகானந்தம்.  வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் எனும் பழமொழியை நினைவுக்குக் கொண்டுவரும் விதம் செயலாற்றி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றார். 


1998 ஆம் ஆண்டு, சாந்தியை மணமுடித்த அவர், தன் மனைவி மாதம் ஒரு முறை பழையத் துணிகளைத் தேடி அலைவதைக் கண்டு, “நாப்கின் உபயோகிக்க வேண்டியதுதானே” என்று கேட்க, “நாப்கின் வாங்கினா பால் வாங்குற பணம் அதுக்குப் போயிடும்” என்றிருக்கிறார் அவரது மனைவி.  சரிதான். அன்றெல்லாம் நாப்கின் ஒன்றிற்கு 4 ரூபாய்.  அதனால்தான் இந்தியப் பெண்களில் 12% மட்டுமே நாப்கின் உபயோகிப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள்.  அந்த விலைக்கு நாப்கின் வாங்கி உபயோகிப்பது மிகவும் நலிந்த நிலையில் இருக்கும் குடும்பத்துப் பெண்களுக்கு இயலாத காரியமே என்று உணர்ந்த அவர், நாம் ஏன் குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கத் தொடங்ககூடாது என்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்.


வெல்டிங்க் படித்திருந்த அவர் எப்படியோ நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்து, நாப்கின் தாயாரித்துவிட்டார். அப்படி அவர் தயாரித்த நாப்கின்களை உபயோகித்துப் பார்த்து, அதை மேம்படுத்த வேண்டிய வழிகளை ஆராய உதவ அவரது மனைவியைத் தவிர வேறு யாருமே முன்வரவில்லை.  அவரது சகோதரிகள் கூட உதவிக் கரம் நீட்டத் தயாராகவில்லை.  வேறு வழியின்றி மருத்துவக் கல்லூரி மாணவிகளைத் தேர்ந்தெடுக்க முடிவுசெய்தார்.  20 மாணவிகள் அதை உபயொகித்துக் கருத்து சொல்ல முன்வந்தார்கள்.  ஆனால், கருத்துக்கள் எல்லாம் ஒரே போன்று இருந்ததால், முருகானந்தன் தானே அதை உபயோகித்துப் பரிசோதிக்க முடிவு செய்தார். 
ஃபுட்பால் ப்ளாடரை ஆட்டு ரத்தத்தால் நிரப்பி கர்ப்பபையாக்கித் தன் உடலில் கட்டிவைத்து நாப்கினையும் உபயோகிக்கத் தொடங்கினார். விளைவோ தன் கணவனுக்கு மன நிலை தடுமாறிவிட்டது என முடிவு செய்து அவரது மனவி அவரை விட்டுச் சென்றார். அவரது தாயும் தனது மகனின் செயலைக் கண்டுத் திகைத்து மகனை விட்டுச் சென்றார்.  அவரது கிராமக் குளத்தில் ரத்தக் கறை படிந்தத் துணிகளைத் துவைக்கச் செல்ல, கிராமத்தினர் அவருக்கு ஏதோ பயங்கரமான பாலியல் நோய் என்று சொல்லி, கிராமத்திலிருந்தே விலக்கி வைத்து விட்டார்கள்.


இதையெல்லாம் பொருட்படுத்தாமல், கருமமே கண்ணாய் முருகானந்தம் தன் முயற்ச்சியைத் தொடர்ந்தார்.  ஒரு பேராசிரியரின் உதவியுடன் ஐரோப்பாவிலுள்ள சில கம்பெனிகளுக்குக் கடிதம் எழுதினார்.  அதற்கான செலவுத் தொகைக்காக அந்த பேராசிரியரின் வீட்டில் வேலையும் செய்தார்.  முயற்சி திருவினையாக்கும் என்பது உண்மையானது.  ஒரு நாள் அவருக்கு ஒரு பார்சல் வந்தது.  அதைப் பிரித்துப் பார்த்த போதுதான், நாப்கினில் பஞ்சை மட்டும் உபயோகித்து இரண்டரை வருடம் தான் பாழாகியது புரிய வந்தது.  நாப்கினில் உபயோகிக்கப்படும் முக்கியமான ஒன்று பஞ்சு அல்ல.  அது ஒரு மரத்திலிருந்து எடுக்கப்படும் செல்லுலோஸ் என்று அப்போதுதான் அவருக்குத் தெரிய வந்தது. அப்படி மரத்திலிருந்து செல்லுலோசைப் பிரித்து எடுக்க உபயோகிக்கப்படும் இயந்திரத்திற்குப் பல ஆயிரம் டாலர்கள் விலையாகும் என்பதை அறிந்ததும் முருகானந்தம் அதிர்ச்சிக்குள்ளானார்.


தோல்வியைத் தழுவத் தயாராகாத முருகானந்தம் மரத்திலிருந்து செல்லுலோசை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை உருவமைக்க முடிவெடுத்தார்.  ஒன்றல்ல, இரண்டல்ல 4 வருட உழைப்பு பலன் தந்தது.  4 மாறுபட்ட இயந்திரங்களின் உதவியால் நாப்கினுக்குத் தேவையான செல்லுலோசை மரத்திலிருந்துப் பிரித்தெடுத்து, அதை உபயோகித்து, நாப்கினைத் தயாரிக்கும் வித்தையைக் கண்டுபிடித்தார்.  கிரைண்டர் போன்ற முதல் இயந்திரம் செல்லுலோசை பொடியாக்கி எடுக்கக் கூடியது.  பின் அதை நீள் சதுரமாக வெட்டி எடுப்பது வேறு ஒரு இயந்திரம்,  அதை ‘நான்வூவன்’ துணியில் சுற்றுவது வேறு ஒரு இயந்திரம்.  இறுதியாக அதற்கு அல்ட்ரா வயலெட் ட்ரீட்மென்ட் கொடுத்து அதற்கு அணு ஆக்கிரமிப்பத் தடை செய்யும் சக்தி பெறச் செய்வதோ மற்றொரு இயந்திரம். அப்படி முருகானந்தம்  ஒரு கண்டுபிடிப்பாளரானார்.


சென்னை ஐஐடியில் 943 பேர்களுடன் போட்டியிட்டு தன் கண்டுபிடிப்பிற்கான நேஷனல் இன்னவேஷன் அவார்டை அன்றைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டிலிடம் இருந்து பெற்றார்.  பேரும் புகழும் முருகானந்தத்தைத் தேடி வந்தது.  கூடவே அவரை விட்டுப் பிரிந்த மனைவியும் அவரது தாயும்.  தன் கண்டுபிடிப்பால், செல்வந்தனான தொழிலதிபர் ஆகும் எண்ணம் இல்லாத முருகானந்தம், தன் கண்டுபிடிப்பால் இந்தியப் பெண்களும் பயன் அடையும் வகையில் செயலாற்றத் தீர்மானித்தார்.  பெண்களுக்கு இவ்வியந்திரங்களை இயக்கக் கற்றுக் கொடுப்பதுடன், பெண்கள் அடங்கிய கூட்டுறவு நிறுவனங்களுக்கு விலை குறைந்த நாப்கின்களைத் தாயரித்து விற்கத் தேவையான உதவிகளையும் செய்யத் தொடங்கினார்.  பீஹார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள பெண்களும், அவர்கள் நடத்தும் கூட்டுறவு நிறுவனங்களும் முருகானந்தத்தின் இயந்திரங்களை அதிகமாக வாங்கினார்கள்.  இப்போது இந்தியாவில் ஏறத்தாழ 1300 க்கும் மேலான கிராமங்களில் முருகானந்தம் கண்டுபிடித்த சானிட்டரி பேட் தயாரிக்கும் இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.


முருகானந்தத்தின் ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸில் உள்ள, 75,000 விலையுள்ள இயந்திரங்கள் தினமும் 200 முதல் 250 வரை நாப்கின்கள் தயாரிக்கும் திறன் படைத்தவை.  வட இந்திய மாநிலங்களில், 23% மாணவிகளும் முன்பெல்லாம் மாதவிடாய் ஆரியம்பிக்கும் போது பள்ளிப்படிப்பை நிறுத்தும் நிலை மாறி, அவர்கள் தொடர்ந்துக் கல்வி கற்கும் நிலை ஏற்பட முருகானந்தமும், அவாரது இயந்திரங்களும் காரணமாகி இருப்பதை நினைக்கையில் நமக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. “முயற்சி உடையார் இடையே இகழ்ச்சி அடைய நேர்ந்தாலும் இறுதியில் புகழ்ச்சி  அடைவார்” என்பதை உலகிற்கு உணர்த்திய முருகானந்தத்தின் சேவை உலகெங்கும் பரவி பெண்களுக்கு நன்மை பயக்க வாழ்த்துவோம்!
32 கருத்துகள்:

 1. முயற்சி உடையார் இடையே இகழ்ச்சி அடைய நேர்ந்தாலும் இறுதியில் புகழ்ச்சி அடைவார்” என்பதை உலகிற்கு உணர்த்திய முருகானந்தத்தின் சேவை உலகெங்கும் பரவி பெண்களுக்கு நன்மை பயக்க வாழ்த்துவோம்! //

  முருகானந்தத்திற்கு வாழ்த்துக்கள்.

  நல்ல பதிவு சார். வாழ்த்துக்கள் நன்றி ஐயா.

  தம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க ந்னறி சகோதரி! இவரைப் போன்றோர் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்! இன்னும் எத்தனை பேர் வெளியில் வராமல் இருக்கின்றனரோ!?

   தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

   நீக்கு
 2. விடா முயற்சி விஸ்வ ரூப வெற்றி என்பது இதுதான்!

  முருகானந்தன் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவரே!
  உன்னத சேவை! உங்களுடன் இணைந்து என் வாழ்த்துக்களும் அவருக்கு!..

  நல்ல பகிர்வு சகோதரரே!!
  நன்றியுடன் வாழ்த்துக்களும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும்! இவரப் போன்றோரை ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும்!

   நீக்கு
 3. "முயற்சி திருவினைக்கும்" என்பதற்கு இவரை விட சிறந்த உதாரணம் யாரும் கிடையாது என்றே சொல்லலாம். இவரை பற்றி முன்பு படித்திருக்கிறேன், ஆனால் இவ்வளவு விரிவான விஷயங்களை இன்று தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன். பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரரே! தங்கள் மேலான கருத்திற்கு! நிச்சயமாக அவரது மன உறுதி பாராட்டப்படவேண்டிய ஒன்றே!

   நீக்கு
  2. சொக்கன் நண்பரே! இதற்கு முந்தைய பதிவு, தலைப்பிற்குப் பொருத்தமாக இல்லாமல் கவிதையாக இல்லாமல் உரைநடையாகிவிட்டதோ?!! விமர்சனத்திற்காகத்தான் நண்பரே! நல்ல கருத்துக்கள் வந்தால் எங்களை திருத்திக் கொண்டு நல்ல விதாமாகக் கவிதையும் படைக்க முனையலாமே என்ற எண்ணத்தில்தான் நண்பரே!

   நீக்கு
 4. வணக்கம்
  அண்ணா.
  சாதனை மனிதர் பற்றி தங்களின் பதிவுவழி அறிந்தேன்.. ஒரு செயல் வெற்றியடைய முயற்சி தேவை என்பதை முருகானந்தம் ஒரு எடுத்துக்காட்டு வாழ்க.. வளமுடன்..த.ம 3வது

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்கள் மேலான கருத்திற்கும், தமிழ்மண ஓட்டிற்கும்! தங்களது வெற்றியும் அதைப் போன்றுதானே!...முயர்சி முயற்சி!

   தம்பி எங்களது முந்தையப் பதிவுக் கவிதைகள் தங்கள் கவிதைகள் போன்று இல்லையோ?!!!

   நீக்கு
 5. எனக்கு முருகானந்தத்தை பற்றி படிக்கும் போது மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!!! ஒரு பெண்ணியப் பிரச்சனையை எவ்வளவு நுட்பமாக உணர்ந்து தீர்வும் கண்டிருக்கிறார் அவர்!! இப்படிப்பட்ட பதிவுகள் மூலமாக இவர்களை போன்றோரை என் போன்றவர்களுக்கும் அறிமுகம் செய்யும் உங்கள் பணி அற்புதமானது சகாஸ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! நிச்சயமாக ஒரு ஆணினால் எப்படிப் பெண்களின் பிரச்சனையை இவ்வளவு கூர்ந்து நோக்கி ஆராய முடிந்தது என்பது, அதை வாசிக்கும் போது தோன்றியதால்தான் இந்தப் பதிவு! தாங்களும் அதை அழகாக உணர்ந்து சொல்லியிருக்கின்றீர்கள் சகோதரி! மிக்க நன்றி!

   நீக்கு
 6. இவர் குறித்த நினைவுகள் சில நாட்களுக்கு முன்னாள் நெஞ்சில் அலையடித்து...
  குடும்ப வாழ்வை இழந்து இதை சாதித்திருக்கிறார்...
  வேதனை = சாதனையாக மாறியிருக்கிறது...
  அருமையான பதிவு தோழர் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. பல இழப்புகளைச் சந்தித்து, உலக சாதனை நிகழ்த்திய ஒரு சாமானியரைப் பற்றிய செறிவான தெளிவான அசாதாரணப் பதிவு இது.

  பதிவுலகில், தங்களின் இந்தப் பதிவும் ஒரு சாதனைதான். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்களது பாராட்டிற்கும் கருத்திற்கும்! மிக, மிக நன்றி

   நீக்கு
 8. திறன் படைத்தவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை மார்கெடிங் செய்து பரவலாக உபயோகத்துக்குக் கொண்டு வரவேண்டும் வாடிக்கையாளரின் திருப்தியே முக்கியம். தரமான பொருள் குறைந்தவிலை என்று இருந்தால் சாதனைக்குப் பெருமை கூடும்.

  பதிலளிநீக்கு
 9. தன் முயற்சியில் வெற்றி பெற்றும் கூட, அதைக் காசாக்கி செல்வந்தனாக நினைக்காமல் இருந்தாரே, அங்கு(ம்) உயர்ந்து நிற்கிறார் திரு முருகானந்தம்.

  பாஸிட்டிவ் செய்திகளுக்கு தங்கள் அனுமதியுடன் எடுத்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! ஆம் அவர் உயர்ந்துதான் நிற்கின்றார்! பல பெண்களுக்கு வேலை வாய்ப்பும் அளித்து!

   தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் நண்பரே! பாஸிட்டிவ் செய்திகளுக்கு!

   நீக்கு
 10. சமூகத்தின் ஒதுக்கலையும், குடும்பத்தின் நிராகரிப்பையும் தாண்டி ஒருவரால் சமூகப் பயன்பாட்டிற்கான முக்கியமான ஒரு கருவியைப் படைக்க முடிகிறதென்றால், அவருடைய சமூக அக்கறை எவ்வளவு மேம்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது ஐயா. அருமையான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜெயசீலன்! தங்கள் அழகிய கருத்திற்கு!

   நீக்கு
 11. இவரைப் பற்றி ஆனந்த விகடனில் அவ்வப்பொழுது படித்திருக்கிறேன்; மிகவும் பெருமையாக இருக்கும். ஆனால், உலகளவில் இப்பேர்ப்பட்ட உயரத்துக்குப் போவார் என்று எதிர்பார்க்கவில்லை. இவருடைய கண்டுபிடிப்பால் பெண் குழந்தைகளின் படிப்புக் கூடுகிறது என்பதைப் படிக்கும்பொழுது, இப்படிப்பட்ட கணிக்கவியலா (freakonomical) விளைவுகள் பலவற்றையும் இந்தக் கண்டுபிடிப்பு மென்மேலும் நிகழ்த்தி சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் எனத் தோன்றுகிறது! அவருக்கு வாழ்த்துச் சொல்லும் அளவுக்கு நான் இன்னும் எதுவும் கிழித்து விடவில்லை; எனவே, வணங்குகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே! வட கிழக்கு மாநிலத்தில் உள்ள ஒரு தாய் இவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாராம். தனது மகள் பள்ளிக்குச் செல்ல இவரது கண்டுபிடிப்புக் காரணமாக இருந்தது என்று. முருகானந்தம் அவர்கள், அந்தத் தாயின் சொற்களை விட வேறு ஒரு பரிசோ, பணமோ பெரிதல்ல என்று மிகவும் நன்றியுடனும், உள்ளத்திலிருந்தும் சொல்லியிருப்பது இன்னும் மகிழ்வே! நண்பரே! நிச்சய்மாக வணங்க வேண்டும் அவரை. சாதிக்க வேண்டாமே நாம் அவரை வாழ்த்துவதற்கு! நண்பரே! எத்தனை நல்ல மனம் படைத்த ஒருமனிதர்! தலை வணங்குவோம்!

   நீக்கு
 12. வணக்கம் !

  அருமையான படைப்பு !அறிவின் ஆற்றலை இறைவன் முருகானந்தம்
  அவர்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ளார் கூடவே சமூக நலனையும்
  மதிக்கும் பண்புடைய முருகானந்தம் போன்றவர்கள் வாழ்வில் இது
  போன்ற சாதனைகளைப் படைத்து புகழின் உச்சிக்கு செல்ல நானும்
  தங்களுடன் சேர்ந்து வாழ்த்துகின்றேன் சகோதரா !மிக்க நன்றி
  அருமையான இப் பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! அவரது அரிய பணிக்கு நாம் எல்லொரும் வணங்கி வாழ்த்துவோம்!

   நீக்கு
 13. முன்பு டிவியில் பேட்டியை ஒளிபரப்பிய போதே ,இவர் கண்டுபிடிப்பு உலக அளவில் பேசப்படும் என்றே பட்டது .உங்கள் பதிவின் மூலம் ,அவர் அடைந்திருக்கும் உயரத்தை அறிய தந்ததற்கு வாழ்த்துக்கள் ...அவருக்கும் !
  த ம 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி! எத்தனை இன்னல்களுக்கு இடையில் அவர் வெற்றி கண்டிருக்கின்றார்! மிகப் பெரிய விஷயம் ஜி! அவர் இன்னும் உயரம் தொட நாம் வணங்கி வாழ்த்துவோம்!

   மிக்க நன்றி ஜி!

   நீக்கு
 14. தாமதமாக வந்தமைக்கு முதற்கண் மன்னிக்கவும். எத்தனை தடவை தான் கேட்பது இல்லையா. ஆசிரியர் அல்லவா முட்டி போட வச்சிடாதீங்க சகோ.

  தன் மனைவி, தாய் அனைவரும் பிரிந்தும் ஏனையோர் எள்ளி நகையாடியும் மனம் ஒடிந்து போகாது. அத்துனை ஆர்வத்தோடு செயல்பட்டு வெற்றியீட்டியுள்ளாரே. எத்துணை போற்றத் தக்கவிடயம். அவர் புகழ் ஓங்கட்டும். சகோ வாழத்துக்கள் ....! அறியத் தந்த தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் ...!மிக்க நன்றி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிப்பு எல்லாம் வேண்டாம் சகோதரி! ஆசிரியராக இருந்தாலும் தண்டனைகள் எதுவும் கிடையாது! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

   நீக்கு
 15. நல்ல மனிதரின் மகத்தான சேவை. பகிர்வுக்கு நன்றிகள்§

  பதிலளிநீக்கு
 16. முருகானந்தத்தின் முயற்சி பாராட்டுக்குரியது...வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. விடாமுயற்சி வெற்றி தரும் என்பதற்கு எடுத்துக் காட்டு முருகானந்தம் அவர்கள்.
  அவரின் உழைப்பு , சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
  பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு