செவ்வாய், 18 நவம்பர், 2014

கனவில் வந்த காந்தி


      எங்கள் இனிய நண்பர் கில்லர்ஜி அவர்களுக்குக் (காந்திஜியிடம் எங்களுக்குச் சிறிது வருத்தம்!  அவர் கில்லர்ஜியின் கனவில் போகக் கண்டுதானே இதோ எங்களுக்கும் கேள்விகள் ஷூட் ஆகியுள்ளது!! ஹஹஹ்) கனவில் காந்தி வந்துக் கேட்ட கேள்விகளைத் தான் பெற்ற இன்பம்/துன்பம் பெறுக இவ்வலை உலகம் என்பது போல் சுற்ற விட்டுள்ளார். . இப்போது காந்திஜி வலைத்தளத்தைச் சுற்றி வருகின்றார்! பாவம் அவரும் நாட்டின் நிலைமையைத் தெரிந்து கொள்ளட்டும்.  வாய்ப்பில்லாமல் நிறைய நல்ல உள்ளம் படைத்த ஆட்சியாளர்கள உள்ளார்கள் எனப்தையும்! அதில் நாங்களும் சிக்கிக் கொண்டோம் அவருக்கு ஸ்வாமி ஸ்ரீபூவு!  எங்களுக்கு யார் உதவப் போகின்றார்கள் என்று மண்டையைக் குடைந்து களிமண்ணை எடுத்துப் போட்டோம். பரீட்ச்சையில் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழித்துக் கொண்டு, என்ன செய்வது என்று தெரியாமல் எதையோ கிறுக்கி வைத்தது போல் இங்கும் செய்துள்ளோம்.  பின்னே என்ன இப்படிக் கடினமானக் கேள்விகளைக் கேட்டால்.....ம்ம்ம் மிகவும் சின்னப் புள்ளைத்தனமா இருக்கோ? எங்கள் பதில்கள்?!!


கில்லர் ஜி யிடம் முதலில் மன்னிப்பு!  தாமதமாக இதை வெளியிடுவதற்கு!  இங்கு பல நடமுறைப் பிரச்சினைகளால் எங்களால் உடன் பதிலுரைத்து வெளியிட முடியவில்லை கில்லர் ஜி!  மிகவும் தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றோம். 

நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்?

மறு பிறவியா?  இந்த ஒரு பிறவியே போதும் காந்திஜி!  வேண்டாம் இனி ஒரு பிறவி.  அப்படியே பிறந்தாலும் நாம்தான் அது என்று நமக்குத் தெரிந்திருக்குமா?  இதற்கு விடை இருந்தால் பதில் தருகின்றோம்.

ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால் சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கின்றதா?

ஆஹா!  இப்படி எல்லாம் கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லை காந்திஜி! எங்களிடம் யாருமே கேட்டதில்லை ஜி! இந்த கொடுவா மீசைக்கார கி. ஜியின் உதவியால் தேசத் தந்தை கா. ஜி யான உங்களை எங்களிடம் கேட்க வைத்ததற்கு அவருக்கு நன்றிகள் பல! ஏதோ நாங்க ஒரு மூலையில கிடக்கறோம். எங்களை எல்லாம் யாருங்க ஆட்சிக்குக் கூப்பிடப் போறாங்க?  சரி கூப்பிட்டு விட்டார்கள்! உங்களுக்கு நினைவிருக்கின்றதா? உங்களது பொருளாதாரக் கொள்கைகள்?  நாங்களும் படித்தோம் “காந்தியன் தாட் ஆஃப் எக்கனாமிக்ஸ்” “காந்தியன் எக்கானமி என்று....ம்ம்ம்,,,  எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் தான்.  ஒருவேளை ஆட்சியாளர்கள் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை அப்படியே பின்பற்றிவிட்டார்கள் போலும்.  எனவே, உங்கள் பொருளாதாரக் கருத்துக்களில் மிகவும் நம்பிக்கையும், ஆர்வமும் உள்ள நாங்கள், இப்போது அது டூ லேட் ஆனாலும், சீரழிந்த பொருளாதாரத்தை உங்கள் கொள்கைகளைக் கொண்டு நிமிர்த்த முயற்சி செய்வோம். ஒரு நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தால், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையும் உயர்ந்தால், மலைக்கும், மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் நிரப்பப்பட்டால் அமைது நிலவும்! ஏழ்மைதான் பல தீவிரவாதத்திற்கும், பொருளாதாரம் கெடுவதற்கும் காரணம்.  உங்கள் அஹிம்சைக் கொள்கைகளையும், அமைதிப் போராட்டங்களையும் நிலை நிறுத்த முயல்வோம். அதே போன்று தங்கள் கல்விக் கொள்கைகளையும்! (இது விடுபட்டு போனதற்கு மிகவும் வருந்துகின்றோம்.  அதனால் லேட்டானாலும் பதிந்துவிட்டோம்) உங்களுக்குச் சந்தோஷம்தானே!  ஜி? இரு ஜி க்களுக்கும்!

இதற்கு வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் என்ன செய்வாய்?

அட! போங்க ஜி! எதற்குத்தான் எதிர்ப்பு வரவில்லை?  நியாயமாக இருந்தாலும் எதிர்ப்புதான்.  அநியாயத்திற்கும் எதிர்ப்புதான். நீங்கள் சந்தித்திராத எதிர்ப்புகளா?  நீங்கள் நல்லது என்று நினைத்து சொன்னதற்கும் அப்போது எதிர்ப்பு இருக்கத்தானே செய்தது? அது போலத்தான்.  +, _ இதுதான் யதார்த்தம்.  எனவே போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் என்று எங்கள் கொள்கைகளில் உறுதியாக இருப்போம்.  முதலில் எதிர்ப்பார்கள்.  பின்னர் வேறு ஒன்று வரும் போது அடங்கிவிடுவார்கள்.  இதுதான் எங்கள் மக்கள்! ஜி!  உங்களுக்கு அது தெரிந்து இருக்க வாய்ப்பில்லை!

முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

நிறைய! அவர்கள் அனாதைகளாக விடப்படமாட்டார்கள்! முதியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளை நாங்கள் மிகவும் போற்றுவதால் அவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...அது போல இளைஞர்களையும்!

அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது?

நீங்கள் எப்படிப்பட்ட அரசியல்வாதிகளைப் பற்றிக் கேட்கின்றீர்கள் என்று தெரியவில்லை!  அரசியல்வாதிகளுக்கு என்று திட்டம் வகுக்க முடியாது! ஒரே சட்டம்தான்.  ஒருவர் ஒரு முறை மட்டுமே பதவிக்காலம் வகிக்க முடியும். படிப்பறிவு/பட்டறிவு/தீர்க்க சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே.  அந்தக் காலகட்டத்திலும் அவர்களின் மீது ஊழல் என்றோ, வேறு ஏதேனும் குற்றம் வந்தால் போதும், அது ரூமராக இருந்தாலும்/எதிர்கட்சிக்காரரின் சதி என்று சொல்லப்பட்டாலும் பதவி விலக வேண்டும்.  விலக்கப்படுவார்கள்!

மதிப்பெண்கள் தவறென மேல் நீதிமன்றங்களுக்குப் போனால்?

மதிபெண்கள் விஷயம் எல்லாம் நீதிமன்றங்களுக்கு வரவே வராது!  பள்ளி, கல்லூரிகளிலேயே தீர்த்து வைக்கப்பட்டு விடும்!

எல்லா ஊர்களிலும் நீதி மன்றங்கள் உண்டு.  ஆனால், எல்லாம் ஒன்றே!  ஒரே நீதிதான் நாடு முழுவதும்! அரசன் அன்றே கொல்லும் நீதிதான்! குற்றம் பெரிதாக இருந்தால்! சிறிதாக இருந்தாலும் அதே, ஆனால், அதற்கேற்ற தண்டனை உடனே!  நோ, வழக்குத் தள்ளுபடி! மக்களுக்குச் சுந்தந்திரமும் உண்டு.  உங்களுக்குத் தெரியாததா? There is a subtle difference between Freedom and Independence. 

விஞ்ஞானிகளுக்கென்று....ஏதும் இருக்கின்றதா?

ஆம்! நிச்சயமாக! நம் நாட்டில் அவர்களுக்குச் சுதந்திரம் இல்லை!  அதனால் அவர்கள் வெளிநாடுகளுக்குப் போக வேண்டிய சூழ்னிலை.  அதை மாற்றிடுவோம்.  அவர்களுக்கு இங்கு ஆராய்ச்சிகளைச் சுதந்திரமாகச் செய்ய ஊக்கப்படுத்து உதவுவோம்.  ஆனால், அங்கும் நேர்மை வேண்டும் என்ற பிடிவாதத்துடன்!

இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?

அதைப் பற்றிக் கவலை இல்லை. ஏனென்றால், மக்கள் நல்ல ஆட்சிக்குப் பழகிவிட்டார்கள் என்றால், அவர்கள் அதை நிலைநிறுத்த முயற்சிப்பார்கள்.  தங்களது உரிமைகள் போற்றப்படும் போது அதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.  அப்படி அவர்கள் விட்டுக் கொடுத்தால் நஷ்டம் அவர்களுக்கே.  கவலை இல்லை! அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை!  ஏனென்றால் எங்கள் பதவிக் காலமும் ஒரு முறை தானே!

மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?

மற்ற நாடுகளில் இல்லாத பல இங்கு ஏற்கனவே இருக்கின்றதே! காந்தி ஜி! பல செல்வங்கள்!  முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்றால் மக்கள் செல்வம்/ உழைக்கும் வர்கம்/ லேபர்.  எனவே, அதை அழியாமல் பாதுகாக்க முயல்வோம்!   அவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று கஷ்டப்படாமல் இருக்க ஆவன செய்வோம். 

இங்கு ஒரு சின்னத் திருத்தம் காந்தி ஜி!  உங்கள் கேள்வி இப்படி இருந்திருக்கலாமோ என்பது. உன் நாட்டில் இல்லாத, மற்ற நாடுகளில் உள்ள, உன்னைக் கவர்ந்த ஒன்று  எது என்று கேட்டிருந்தால்....

மற்ற நாடுகளில் ஒரு சாமானியனுக்கும் அவன் தாய் நாட்டின் மீதுள்ள கடமை உணர்வும், நேர்மையும், நேசமும்.  கொடியேற்றி தேசீய கீதம் பாடுவதில் இல்லை நாட்டுப் பற்று. அது 1947ல் முடிந்துவிட்டது. தற்போது வேண்டுவது, நாட்டைச் சுத்தமாக வைத்திருத்தல், நாட்டு விதிகளை பின்பற்றுதல் – அது அன்றாடத் தேவையான சாலை விதிகளை மதிப்பதில் இருந்து, வருமான வரி கட்டுவது வரை.- எங்கேனும் ஒரு பொருள், பை விலை உயர்ந்த பொருட்களுடன் இருந்தால் நேர்மையாக அதை காவல் துறையிடம் ஒப்படைத்தல், இயற்கைப் பேரழிவு வரும் போது எப்படி மக்கல் நடந்து கொள்ள வேண்டும், தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வுகள் போன்ற பல “சிவிக் சென்ஸ்” மேலை நாட்டவரும், கீழை நாட்டவரும் (சிங்கப்பூர், ஜப்பான்.......) பின்பற்றுவதை இங்கு மக்களின் ரத்தத்தில் ஊற வைக்க ஜப்பானில் செய்வது போல பள்ளியில் சிறு வகுப்பு முதலே கற்பித்து தேசீய உணர்வை நடைமுறைப்படுத்துவது போல நாங்கள் கொண்டுவர முயல்வோம்.  எதிர்கால இந்தியாவாவது உருப்படட்டுமே!  இன்றைய மழலைச் செல்வங்களால்!

எல்லாமே நீ சரியாக சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்துவிட்டாய் உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென்று இறைவன் கேட்டால்?

பரவாயில்லை! முதலில் மறு பிறவி வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்.  இருந்தாலும் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியக் கட்டாயம் இருப்பதால், நல்லது செய்வதும் பாவம் என்றால், திருவிளையாடலில் தருமி சொல்வது போல் நாங்கள் செய்த பாவத்திற்கான தண்டனையைக் குறைத்துக் கொண்டு ஒரு சான்ஸ் தரலாமே! அது மனிதப் பிறவியோ இல்லை வேறு ஏதேனுமோ! ஆனால் நாங்கள் முற்பிறவியில் யார் என்று அறிந்திருக்க வேண்டும்.  அந்தக் கண்டினியூட்டி வேண்டும்.  இல்லை என்றால் திரைக்கதையில் தொய்வு வரும்.  அப்படி இல்லை என்றால், வேண்டாம். பிறவி. இல்லை விட்டில் பூச்சிகளாய்!

இதில் பத்து நண்பர்களை இணைக்க வேண்டும் என்று நண்பர் கில்லர் ஜி கேட்டுக் கொண்டிருப்பதால்

நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளும் நண்பர்கள்

நண்பர் ஸ்ரீராம்

நண்பர் ராம் குமார்
http://www.sivakasikaran.com/

திரு இராய செல்லப்பா சார்
http://chellappatamildiary.blogspot.com/

நண்பர் விசு

நண்பர் பரதேசி
http://paradesiatnewyork.blogspot.com/

நண்பர் கோயில்பிள்ளை

நண்பர் யாதவன் நம்பி

நண்பர் மணவை ஜேம்ஸ்
http://manavaijamestamilpandit.blogspot.com/

நண்பர் இப்படிக்கு ஆ.ரா


நண்பர் ராஜபாட்டை ராஜா
மிக்க நன்றி கில்லர் ஜி!  இப்படி ஒரு வாய்ப்பைத் தந்தமைக்கு!  ஆட்சி அமைக்க.....(ஹஹஹஹ)



வெள்ளி, 14 நவம்பர், 2014

மருத்துவ தர்மம் மறந்த நாடும், மருத்துவர்களும் பறித்த 13 உயிர்கள்


     சத்திஸ்கரில் கடந்த சனியன்று (8.11.2014) கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 83 பெண்களில், 23 க்கும் 32 க்கும் இடைப்பட்ட வயதுடைய 13 பெண்கள் அறுவை சிகிச்சையில் நேர்ந்த தவறு மூலமும், கொடுக்கப்பட்ட தரமில்லாத மருந்துகளாலும் உயிரழந்திருக்கின்றார்கள். திங்களன்று (10-11-2014) மீண்டும் அதே முகாமில் அறிவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 10 பெண்களுடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. இவர்கள் எல்லோரும், இரண்டோ, மூன்றோ குழந்தைகளைப் பெற்று, அக்குழந்தைகளுக்குப் பாசமும், நேசமும் ஊட்டி வளர்த்துக் கொண்டிருப்பவர்கள்.



குழந்தைப் பிறப்பை அத்தோடு நிறுத்திக் கொண்டால்; தங்களுடைய் மற்ற குழந்தைகளுக்கு, நல்ல உணவு, உடை, கல்வி கொடுத்து வளர்க்கலாம் என்ற எண்ணமும், அறுவை சிகிச்சை செய்வதால் அவர்களுக்குக் கிடைக்கப் பொகும் ரூ 1400 ஐ நினைத்தும், அவர்கள் அவ் அறுவை சிகிச்சை செய்யத் தயாராகி இருக்கலாம்.  அதே போல் பெண்களை அறுவை சிகிச்சை முகாமுக்குக் கொண்டு வரும் ஒவ்வொரு ஆரோக்கிய இலாகா ஊழியருக்கும் கிடைக்கும் ரூ 200 ம் அவர்களை முகாமுக்கு அதிகமானத் தாய்மார்களை அழைத்துவரச் செய்திருக்கலாம்.
 


மருத்துவ இலாகாவின் கவனக் குறைவாலும், ஒரு இலட்சம் பேருக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்து விருது பெற்ற டாக்டர் ஆர்.கே குப்தா, அறுவை சிகிச்சைக்குத் தலைமை வகித்து, அவர் 5 மணி நேரத்தில் 83 பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டதாலும், போதுமான இட வசதியோ, கருவிகளோ, உதவியாளர்களோ இல்லாததாலும் ஒரு வேளை இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம். இதன் விளைவாக ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரழந்த 14 தாய்மார்களின், 1 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் அவர்களது தாய்மார்களை இழந்துவிட்டார்கள்.  வரும் நாட்களில் இனி எத்தனை தாய்மார்கள் உயிரழக்கப் போகின்றார்களோ?  தெரியவில்லை. 

      நாமெல்லாம், வரும் நாட்களில், இவ்விபத்தை மறந்து புதுப் புதுச் செய்திகளின் பின்னால் சென்று அதைப் பற்றி எல்லாம் விவாதிக்கும் போதெல்லாம், பாவம் அக்குழந்தைகள் தாயின் அன்பின்றி இவ்வுலகில் வாழ வேண்டியிருக்கும் என்பதை எண்ணும் போது, மனது கனக்கின்றது.  இதை எல்லாம் பார்க்கும் போது பெரும்பான்மையான மருத்துவர்கள் மருத்துவ தர்மத்தையே மறந்து போகின்றார்களோ என்ற ஐயம் எழுகின்றது. மனிதாபிமானமற்ற மருத்துவர்களும், இது போன்ற விபத்துகளுக்கு வித்திடும் மருத்துவ இலாகாவும் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லது. இப்படிப்பட்ட மருத்துவர்களையும் மருத்துவ இலாகாவையும் நம்பி நாட்டின் மக்கள் தொகை அதிகரிக்காமல் இருப்பதற்காக இந்தியா எங்கும், எல்லா வருடமும் அக்டோபர் முதல், ஃபெப்ரவரி மாதம் வரை நடத்தப்படும் இது போன்ற கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்கள் செயல்படுவது மண்குதிரையை நம்பி ஆற்றிலிறங்குவது போல்தான்.

      கடந்த 4 மாதங்களுக்கு மேலாக உபயோகிக்கப்படாமல் மூடிக் கிடந்த, பிலாஸ்பூர் அருகே, பெண்டாரியில் உள்ள “மேமிசந்த் ஜெயின் கான்சர் மற்றும் ரிசர்ச்ச் செண்டரில் உள்ள அறுவை சிகிச்சைப் பிரிவில் இத்தகைய அறுவை சிகிச்சை ஏன் செய்யத் துணிந்தார்கள் என்பது வியப்பாக இருக்கின்றது.  அப்படிச் செய்ய வேண்டியக் கட்டாயம் ஏற்பட்ட போது முன்னேற்பாடாக அவர்கள் செய்ய வேண்டிய அறுவைச் சிகிச்சைக் கருவிகளைச் சுத்தம் செய்தல், சிகிச்சைக்கான இடத்தைத் தூய்மைப் படுத்துதல், தேவையான உதவியாளர்கள், போன்ற முன்னேற்பாடுகளை ஏன் செய்யவில்லை என்பது மிகுந்த வேதனையைச் தருகின்றது.  மனித நேயம் இல்லாமல் ஏதோ சில மனிதர்களது அலட்சியத்தாலும், செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்யாமல் இருந்ததாலும் அதற்காகச் செலவாகும் பணத்தை அபரித்ததாலும் உயிரழக்க நேர்ந்ததோ, ஒரு குற்றமும் செய்யாத  13 இளம் தாய்மார்கள். 

      அதே சமயம் மருத்துவ தர்மம் மறவாத இங்கிலாந்து நாட்டில், நாட்டிங்ஹாம்ஷேரில் கடந்த 32 வருடங்களாக பல் மருத்துவம் செய்துவந்த பல் மருத்துவர் ஒருவர் தன் கருவிகளை ஸ்டெரிலைஸ் செய்வதில்லை என்பதை அறிந்ததும் அவரிடம் கடந்த 32 வருடங்களில் பல் மருத்துவம் செய்து கொண்ட 22,000 பேர்களுக்கு அதனால் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றதா என்பதைப் பரிசோதித்து அறிய எல்லா நாட்களிலும் செயல்படும் ஹாட்லைன் செண்டர் நாட்டின்ஹாம்ஷேரில் திறந்து மக்களின் பயத்தை நீக்கிக் கொண்டிருக்கின்றார்களாம்.  ஆனால், நம் நாட்டில் இதே இடத்தில் இது போன்ற தவறுகள் இதற்கு முன் பல முறை நடந்தும், மீண்டும் அத்தவறு நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் கூட எடுக்கவில்லை என்பதை எண்ணும் போது வெட்கித் தலைகுனிவதைத் தவிர வேறு வழியில்லை.

      கடந்த 2011 செப்டம்பர் சத்திஸ்கரில் பாலோத் எனும் இடத்தில் நடந்த கண்புறைக்கான அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களில் 42 பேர்கள் பார்வை இழந்திருக்கின்றார்கள்.  2012 ல் இதே மாநிலத்தில் இதே கண்புறைக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 23பேர் கண் பார்வை இழந்திருக்கின்றார்கள்.  இவ்வருடமோ கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட 14 பெண்கள் தங்கள் உயிரையே இழந்திருக்கின்றார்கள்.
 
உ.பி, சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில், நிகழும் தவறுகளும், சுகாதாரம் இல்லாத சூழல்களும் இதன் முன் பல முறை செய்தித் தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. மெடிக்கல் பம்பிற்கு பதிலாகச் சைக்கிள் பம்ப் உபயோகிப்பது, ஒரே சிரிஞ்சில் 50க்கும் மேலானவர்களுக்கு ஊசி போடுவது, காலாவதியான மருந்துகள் கொடுப்பது போன்றவை அம் மாநிலங்களில் சர்வ சாதாரணமாம்.  “வரும் முன் காவாத” அரசும் மருத்துவத் துறையும் இப்படி விபத்து நடந்த பின் இறந்தவர்களது குடும்பத்திற்கு ரூ 4 இலட்சமும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு ரூ 50000 மும் கொடுப்பதால் என்ன பயன்?


இதில் ஒரு சிறிய பகுதியைத் தேவையான நேரத்தில் சரியாக விநியோகித்து இது போன்ற விபத்துகள் நிகழாமல் இருக்கத் தேவையான முன்னேற்பாட்டைச் செய்திருக்கலாமே.  இனியேனும் இதற்குக் காரணம் என்ன என்றுக் கண்டுபிடித்து, காரணமானவர்களுக்குத் தக்க தண்டனை வழங்குவதுடன், இது போன்ற விபத்துக்கள் நிகழாமல் இருக்க தேவையான முன்னேற்பாடுகளைச் செய்வார்களா?  அடுத்த வருடமேனும் நம் நாட்டில் இது போன்ற ஒரு விபத்து மனிதர்களின் கவனக் குறைவாலும், பண ஆசையாலும், செய்ய வேண்டியவைகளைச் செவ்வனே செய்யாத அலட்சிய மனோபாவத்தாலும் நிகழும், முயன்றால் நம்மால் எளிதாகத் தவிர்க்க முடிகின்ற, விபத்துகள் ஏற்படாமல் தடுக்கப்படும் என்று நம்புவோம்.  தாயை இழந்துத் தவிக்கும் அக்குழந்தைகளுக்காக வேண்டிக் கொள்வோம். 


(நடிகர் கமலஹாசனின் 60 வது பிறந்தநாளைப் பற்றிய கடந்த இடுகையில் பதிவரும் நண்பருமான இ.பு. ஞானப்பிரகாசம் அவர்களின் பின்னூட்டத்தில் அவர் கொடுத்துள்ள இந்தச் சுட்டியைப் பாருங்களேன்.  மிக அருமையாக அவர் செய்துள்ளார். நன்றி நண்பரே!  
'யுவா தொலைக்காட்சி'க்காக நான் எழுதிய 'கலையுலகில் கமலியல்!' (Kamalism in Tamil Cinema!). கமல்ஹாசன் வைர விழாப் பிறந்தநாள் சிறப்பு விழியம் (video)! இங்கே உங்கள் பார்வைக்காக! http://yuvatv.co.in/e-mag/kamalism-in-tamil-cinema-documentary--51)

வியாழன், 6 நவம்பர், 2014

6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


      தன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திப் படங்களில் எல்லாம் நடித்து விஸ்வரூபம் எடுத்து, உலகநாயகனாய் மாறி இருக்கும் கமலுக்கு நவம்பர் 7, 2014 - 60 ஆவது பிறந்த நாள்.  இன்று போல், இவ்வுலக நாயகன், என்றும் சிறப்புடன் வாழ நாம் எல்லோரும் வாழ்த்துவோம்!


      பரமக்குடியில் பிரபலமான வக்கீலாய் இருந்த கமலின் அப்பா திரு ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு அவரது 50 ஆவது வயதில் பிறந்த செல்லப் பிள்ளைதான் கமல். கமல் தாயின் வயிற்றில் வளர்ந்த போது, மூத்த அண்ணன் சாருஹாசன் அவர்களின் மனைவியும் தன் வயிற்றில் குழந்தையைச் சுமந்திருந்தார்களாம். அப்படி சாருஹாசன் அவர்களுக்குக் கமல் அவரது குழந்தைகளுடன் வளர்ந்த செல்லத் தம்பி. எனவே கமலுக்குச் சிறு வயதிலிருந்தே முழு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அதனால் தான் 10 வயதுக் கமல் தனக்கு பூணூல் வேண்டாம் என்றதும், அவரது குடும்பத்தினர் அவரைப் பூணூல் அணியக் கட்டாயப்படுத்தவில்லை.
 
kamal-hassan-bharatnatyam

சுதந்திரப் போராட்ட வீரரானக் கமலின் அப்பா சிறைச்சலையில் இருந்த வேளையில் அங்கே ஏற்பட்ட ஒரு கலகத்தின் போது முஸ்லிமான ஒரு ஹாசன் அவரது உயிரைக் காப்பாற்றியதாகவும் அதனால்தான் அவர் தன் குழந்தைகளுக்கு சாருஹாசன், வசந்த ஹாசன், சந்திரஹாசன், கமலாசன் என்று பெயரிட்டார் என்று சொல்லப்படுவதில் உண்மை ஏதும் இல்லை என்று கமல் சொன்னாலும், அக்ரஹாரத்தில் இருந்த கமலது குடும்ப வீட்டை ஒரு முஸ்லிமிற்கு விற்றதையும், ஒரு முறை கமல் அப்பாவிடம் “நான் முஸ்லிமா என்று பலரும் கேட்கிறார்கள்” என்று சிறு வயதில் சொன்ன போது அவரது அப்பா “ஆமாம்” என்று சொல்லிவிட வேண்டியதுதானே” என்று சொன்னதையும் வைத்துப் பார்க்கும் போது அதில் ஏதேனும் உண்மை இருக்குமோ என்ற சின்னச் சந்தேகம் நம்முள் எழத்தான் செய்கிறது.



உயர்ந்த பட்டப்படிப்பு பெற்றவர்கள் உள்ள கமலின் குடுமப்த்தில் கமல் மட்டும் அவர் விருப்பப்படி, பரத நாட்டியமும், கதக்கும் கற்றும், டி, கே சண்முகம் அவர்களின் நாடகக் கம்பெனியில் நாடகம் பயின்றும், தன் 16 ஆம் வயதில், நடன இயக்குனரானத் தங்கப்ப மாஸ்டரின் உதவியாளர் ஆகிவிட்டார். எப்படியோ பாலச்சந்தரின் கண்ணில் பட்டக் கமலின் உள்ளே இருந்த நடிகனை, பாலச்சந்தர் பதப்படுத்தித் தமிழ் திரை உலகிற்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்.  அதே போல் மலையாளத் திரை உலகிலும் இயக்குனர் சேதுமாதவன், கமலை, கன்னியாகுமாரியில், நாயகனாக்கி மலையாளத் திரை உலகிலும், நிலையான ஓரிடத்தைப் பெறச் செய்துவிட்டார். தெலுங்கிலும், இயக்குனர் விஸ்வநாத் போன்றோர் தெலுங்கு தேசத்தையே கமலால் அபரிக்கச் செய்து விட்டார்கள்.  கன்னடத் திரை உலகும் கமலுக்குச் சொந்த வீடு போல்தான். இப்படித் தென்னகத்தைத் தன்னகமாக்கிக் கொண்ட கமல், ஏக் துஜே கேலியே மூலமாக, ஹிந்தித் திரை உலகிலும் சென்று வெற்றிக் கொடி நாட்டினார்.



      




       நல்ல இயக்குனர்களுடன் பல நல்ல படங்களில் நடித்ததால், அவருக்குக் கிடைத்த நீண்ட காலத் திரை உலக அனுபவங்களும், அவருள் நல்ல ஒரு நடிகனை மட்டுமல்ல, நல்ல ஒரு திரைப்படக் கலைஞனையும், இயக்குநரையும், தயாரிப்பாளரையும் வளரச் செய்தது. அதன் பலனாகத்தான் அவரால் 16 வயதினிலே, மூன்றாம் பிறை, ராஜபார்வை, சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, குணா, மஹாநதி, குருதிப்புனல், அவ்வைஷண்முகி, விருமாண்டி, அன்பே சிவம், போன்ற நல்ல படங்களை, நம் மனதில் எப்போதும் தங்கி நிற்கும் படங்களைத் திரையுலகிற்கு வழங்க முடிந்தது.  மருத நாயகம் போன்ற படங்களை அவர் எடுக்க முயன்று தன் கையைச் சுட்டுக் கொண்டதும் அதனால்தான். 

இறை உணர்வு எனக்கில்லை என்று கமல் சொன்னாலும், இறையருள் அவருக்குத் தேவையான நேரத்தில் கிடைக்கத்தான்  செய்கிறது. அதனால்தான், அவர்தன் கையிலுள்ள பணத்தை எல்லாம் செலவழித்து படம் எடுக்கும் போது, அதில் ஒன்று ஓடாமலும், வேறொன்று வெளியிடமுடியாமலும், இக்கட்டான  சூழ்நிலை வந்தாலும் எப்படியோ அப்படமோ, அடுத்த படமோ ஓடி அவர் செலவழித்தப் பணத்தை அவரிடம் திரும்ப வந்து சேர வைக்கிறது. விருமாண்டி விவாதிற்குள்ளானாலும், அதன் பின் வந்த படங்கள் பலதும் வீணான விவாத்த்திற்கு உள்ளாகி, அதன் வாயிலாக அவருக்கு ஓரளவு லாபத்தைக் கொடுத்திருக்கிறது.  இறுதியில் விஸ்வரூபமும், அவரது வீட்டை விற்க வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்தாலும், அப்படியெல்லாம் நிகழாமல் தடுத்து இப்போது அவரை அப்படத்தின் இரண்டாம் பகுதியை எடுக்கச் செய்திருக்கிறது. 



      விவாதமும் பிரச்சனைகளும் அவர் எடுக்கும் படங்களுக்கு மட்டுமல்ல, அவரது வாழ்விற்கும் ஏராளமான இன்னல்களைக் கொடுத்திருக்கிறது.  வாணிகணபதியை, வாணி கமலஹாசனாக்கி, அவருடன் திரையுலகில், அவருக்குக் காஸ்ட்யூம் டிசைன் செய்து சிலகாலம் மட்டுமே வாழ்க்கைத் துணையாக வலம் வர வைத்தது. பின் இருவரும் பிரியவேண்டியதானது. அதன் பின் சரிகா, சரிகாகமலஹாசனாக அவருடன் வாழ்ந்து அவர்களது குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும், அவரது திரையுலக சாதனைகளில் எல்லாம் நல்ல இணையாகவும் திகழ்ந்திருந்தாலும், ஏதோ சில பிரச்சனைகள் அவர்களிடையே தோன்றி அவர்களையும் பிரித்து விட்டது.  இப்போது அவர்தன் அன்புத் தோழி கௌதமியுடன் அமைதியாக வாழ்ந்து வருகின்றார்.  ஒத்துப் போக முடியாது என்று ஒருநிலை வந்துவிட்டால், கமல், உண்டு, இல்லை என்ற முடிவு எடுப்பதுடன், அதில் அவர் இறுதி வரை நிற்பவரும் கூட.  இதெல்லாம் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த விஷ்யம்தான்.  இனி நான் சொல்லப் போவது அவரை எண்ணி நான் வியந்த இரு சம்பவங்களைப் பற்றி.

      அவர் சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் மற்றவர்களுக்குப் பிரச்சினகள் உருவாக்காமல் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்துபவர்.  மேக்கப் போட்டு ஆலப்புழை பகுதிகளில் தனியே கைலியைக் கட்டிக் கொண்டு நடப்பது, படகில் பயணம் செய்வது, கடற்கரை மற்றும் கடைத்தெருக்களில், சுற்றித் திரிவது போன்றவற்றை எல்லாம் இடையிடையே செய்து புதுப்புது அனுபவங்களை நுகர்பவர். (சில அருடங்களுக்கு முன்பு வரை. இப்போது செய்கிறாரா என்று தெரியவில்லை)

      “எனக்கு ஸ்ரீவித்தியாவின் கண்கள் மிகவும் பிடிக்கும்” என்று எப்போதோ (1979-80?) அவர் சொன்னதை குமுதம் வார இதழில் படித்திருக்கிறேன். அது போல் ஒருமுறை  படப்பிடிப்பின் போது கமலுக்கு அருகே அமர்ந்து உணவருந்த மாட்டேன் என்று சொல்லி ஸ்ரீவித்தியா கோபத்துடன் எழுந்து போன செய்தியை வாசித்திருக்கிறேன்.  அவர்களிடையே நட்புறவு சிலகாலம் இருந்து பின் இல்லாமல் போயிருக்கலாம். அப்படிப்பட்ட, அழகானக் கண்களையுடைய, ஸ்ரீவித்தியா அவரது இறுதி நாட்களில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக திருவனந்தபுரத்தில் இருந்த போது ஓரிரு தினம் கமல் அவரோடு தங்கி அவருக்கு ஆறுதலாக இருந்து சென்றிருக்கிறார். கமல் ஸ்ரீவித்தியா உறவு பற்றி பல வித்தியாசமானச் செய்திகள் வந்திருந்தன.  அதில் சிலவற்றை உறுதி செய்யும் வண்ணமாக திரக்கதா (திரைக்கதை) எனும் ஒரு மலையாளப்படம் ஆறு வருடங்களுக்கு முன் வெளிவந்தது.
  

     அதைப் பார்த்த எனக்கு அனூப்மேனன், ப்ரியாமணி, ப்ருத்விராஜ் போன்றோர் எவ்வளவு அருமையாக, கமலையும், ஸ்ரீவித்தியாவையும், ஸ்ரீவித்தியாவிற்கு எல்லா உதவிகளும் இறுதிவரை செய்த, நடிகரும் அப்போது மந்திரியாகவும் இருந்த கணேஷ் குமாரையும் நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள் என்று வியந்தேன். இப்படத்தை கமலின் மேல் அன்பும், அக்கறையும், உள்ளவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். பார்த்தால், உண்மையிலேயே கமலின் மேல் உள்ள அன்பும், மதிப்பும் பன்மடங்கு கூடும். என்பதில் ஐயமில்லை.  மனித நேயமிக்க கமலை நமக்கு அப்படம் காண்பிக்கின்றது.  அந்த மனித நேயம்தான் அவர் தன் உடலை மரணத்திற்குப் பிறகு மருத்துவக் கல்லூரிக்குத் தானம் செய்யத் தீர்மானம் எடுக்கச் செய்திருக்கிறது.  இத்தகையச் சிறப்புகள் பவலவற்றை தன்னுள் தக்க வைத்துள்ள கமலஹாசன் எனும் கலைஞன் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்று நீண்ட நாட்கள் வாழ நாம் எல்லோரும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.


 

படங்கள் : கூகுள்

(ஒரு சிறிய குறிப்பு: சில நொடி சினேகம் குறும்பட்த்தின் இயக்குனரும், பதிவருமான குடந்தை ஆர்.வி. சரவணன் அவர்கள் தனது வலைத்தளமாகிய http://kudanthaiyur.blogspot.in/ ல் “திருமண ஒத்திகை” எனும் மிகவும் சுவாரஸ்யமான தொடர், சினிமா போன்று கதை வசனங்களுடன் எழுத ஆரம்பித்துள்ளார். ஆர்வம் உள்ளவர்கள் அவரது வலைத்தளத்தில் வாசிக்கலாம்.  சுட்டி http://kudanthaiyur.blogspot.in/2014/10/blog-post_23.html)

நாளையிலிருந்து,  வலைத்தளம் வருவதில் திறு தடங்கல்.  எனவே அன்பர்களே உங்கள் வலைத்தளத்திற்கு வருவது சற்று சிரமமாக இருக்கும்.  எனவே தவறாக எண்ண வேண்டாம்.  அடுத்த வாரம்  மீண்டும் வந்துவிடுவோம். மிக்க நன்றி!