வியாழன், 12 பிப்ரவரி, 2015

காடேறி நாட்டை விரிவாக்கிய காலம் போய், நாடேறி காட்டை விரிவாக்கும் விலங்குகளின் காலம்!!!!

Image result for delhi zoo incident
     கடந்த வருடம் டெல்லி மிருகக் காட்சி சாலையில், புலி சுதந்திரமாகத் திரியும் வேலிக்குள் பலர் தடுத்தும் கேளாமல், குதித்த ஒரு மனிதர், புலியால் கொல்லப்பட்ட ஒரு சம்பவத்தைப் பற்றிக் கேட்டு வேதனித்தோம். விலங்குகள் அப்படித்தான்.  விவேகமுள்ள மனிதன் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சமாதானம் சொல்லி, சிறிது நாட்கள் அதைப் பற்றிப் பேசினோம். இனி அப்படி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என சில தீர்மானங்களை, அது போன்ற மிருகக் காட்சிச் சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் எடுக்கவும் செய்தார்கள்.  பின் அதை எல்லோரும் மறந்தே போனோம்.

      அது போல், வனவிலங்குகள் சரணாலயத்தின் அருகில் வாழ்பவர்களும், மிகவும் ஜாக்கிரதையாகத்தான் வாழ்ந்து வருகின்றார்கள்.  ஆனால், பெருகி வரும் வனவிலங்குகளின் எண்ணிக்கையும், உள் வனத்திலும் கடந்து செல்லும் மனிதர்களின் தொந்தரவால், மற்ற பாகங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் விலங்குகளுக்கு ஏற்பட்டதாலும், வனத்தை ஒட்டி வாழும் மனிதர்களும் அவர்களது கால்நடை மற்றும் குழந்தைகளும், வன விலங்குகளால் தாக்கப்படுவதுண்டு. இடையில், உயிர் சேதங்களும் ஏற்படுவதுண்டு. அவையும் இது போல் சில காலங்கள் பேசப்பட்டு பின் எல்லோரும் மறந்தே போகிறார்கள்தான்.

      அப்படி எல்லோராலும் சில காலம் பேசப்படுவேன் என்ற எண்ணமே இல்லாமல் கடந்த திங்கள் அன்று (09-02-2015) மாலை கேரளா, வயநாடு, முத்தங்கா வன விலங்கு சரணாலயத்தை ஒட்டி உள்ள தன் கிராமத்திலிருந்து 5.30 க்கு தனியே நூல்புழா, மூக்குத்திக் குன்னு, குத்தூர் சுந்தரத்து பாஸ்கரன் தன் 62 வருட வாழ்வில் வனவிலங்குகள் தன்னைத் தாக்காததால், இனியும் தன்னைத் தாக்காது என்ற தைரியத்தில் நடந்து போயிருக்கின்றார்.  இரவு வீடு திரும்பாததால், மறுநாள் காலை அவரது மகனும், கிராமத்தினரும், அவரைத் தேடி ஒற்றையடிப் பாதை வழியே செல்ல, ஓரிடத்தில் அவரது ஒரு செருப்பும், வேறொரு இடத்தில் அவரது அலைபேசியும் கிடைத்திருக்கிறது. அவர்களது தேடல்களில் ஓரிடத்தில் ஒரு கால் மட்டும் இருப்பதைக் கண்டு நிலைகுலைந்து போனார்கள். அதை அடுத்துள்ள எல்லா இடங்களையும் அதன் பின்னும் தேடி இருக்கின்றார்கள்.  அங்கிருந்து செங்குத்தான ஒரு குன்றின் மீது ஏறிப் பார்க்க அங்கு கண்டதோ அவர்களது மரணம் வரை அவர்கள் மனதை விட்டு அகலாத ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு காட்சி!-பாஸ்கரனின் தலை பாகம் மட்டும் தரையில். மற்ற உடல் பாகங்களை அப்பகுதியில் ஓரிருவர் கண்டதாகச் சொல்லப்பட்ட ஒரு புலி தனது உணவாக்கி இருந்தது. முத்தங்கா வன விலங்கு சரணாலயத்தில் முதன் முறையாக ஒரு புலி மனிதனைக் கொன்று அவரது உடலை உணவாக்கி இருக்கின்றது. வன விலங்குகளின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள், அந்தப் புலியைக் குற்றம் சொல்லாமல் இருக்க ஏராளமான, வலுவானக் காரணங்களைச் சொன்னாலும், ஒரு பாவமும் அறியாத பாஸ்கரனின் மரணம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

அந்தப் புலிக்கு கிராமத்தை ஒட்டி உள்ள அந்த வனவிலங்கு சரணாலயத்தில் வாழ சுதந்திரம் இருக்கிறதோ, அதே போல் பாஸ்கரனுக்கும் வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டி உள்ள கிராமத்தில் வாழ அதிகாரம் இருக்கின்றது.  மனிதரையும், விலங்கையும் காப்பாற்றி ஒருவருக்கொருவர் உணவாகாமல் இருக்க அரசும், வன இலாக்காவும், இந்த சமூகமும் தான் தேவையானவற்றைச் செய்து அவர்கள் இருவரையும் காக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியதால் தானோ என்னவோ, சுல்தான்பத்தேரி தாசில்தார், பாஸ்கரனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க அரசிடம் வேண்டியிருக்கிறார்.  இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசும், சமூகமும் என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து இது போல் உயிர் சேதம் இனியும் உண்டாகாமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புவோம்.

பின் குறிப்பு 1:  கீதாவின் “சாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா அம்மா” என்ற இடுகை இட ஒதுக்கீடுக்கு எதிரானது என்று வாதித்தது போல், இவ் விடுகை வனவிலங்குகளுக்கும், சரணாலயத்திற்கும் எதிரானது என்று பதிவர் நண்பர்கள் யாரும் வாதிக்க இடம் கொடுக்கக் கூடாது என்று மிகவும் கவனத்துடன் எழுதப் பட்ட இடுகை இது.  (பயந்து கொண்டே! தோழி கீதாவே என்னிடம் சண்டைக்கு வரலாம்!!! சென்னையில் அவர்தானே எங்கள் இடுகைகளைப் பதிவேற்றம் செய்பவர். அதனால், இந்தப் பதிவை அவருக்கு டிக்டேட் செய்யும் போதே, அவர் என்னைத் திட்டிக் கொண்டேதான் டைப்பினார். “வரலாம்” இல்லை....வந்தே விட்டது!!!)

பின் குறிப்பு 2: “சாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா அம்மா” என்ற இடுகைக்கு வந்த பின்னூட்டக் கருத்துகளுக்கு, கூகுள் க்ரோமில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதால், கூகுள் கணக்கு என்று மட்டுமே வருவதாலும், எங்கள் ப்ளாகர் கணக்கு வராததாலும், பதில் கொடுக்க முடியாமல் இருக்கின்றோம்.  மட்டுமல்ல எந்தத் தளத்திலும் எங்களால் பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை. கூகுள் + ம் செய்து பகிர முடியவில்லை. அதனால் அந்த இடுகைக்கான பதில்களை ஒரு இடுகையாக அடுத்துப் பதிவு செய்கின்றோம்.  தயவு செய்து நண்பர்கள் எங்களை மன்னிக்க வேண்டித் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.  இப்போது இட்ட இடுகைக்கும் எங்களால் பதில் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.  இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோர்ரிலும் முயன்று பார்த்துவிட்டோம். முடியவில்லை. ப்ளாகரின் கூகுள் கணக்கு வரவில்லை.  இடுகைகள் மட்டுமே இட முடிகின்றது. சரி செய்ய முயன்று கொண்டிருக்கின்றோம். 


ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

சாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா? அம்மா

       எங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இடுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்திருந்தன. சாதி ஒழிய வேண்டும் என்று எண்ணினாலும், நினைத்தாலும், பலர் பல பக்கங்கள் எழுதினாலும், மேடை போட்டுக் குரல் கொடுத்துப் பேசினாலும், அது ஒழிவதாகத் தெரியவில்லை.  ஒழியப்போவதும் இல்லை,  அரசியல்வாதிகளும், அரசாங்கமும் தங்கள் சுயலாபத்திற்கு வேண்டி, இந்தச் சாதிப் பிரிவுகளை ஆதரித்துப் பிரிவினையைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும்வரை.  இந்தச் சாதி எப்படி விளையாடியது என் மகனின் வாழ்வில் என்ற அனுபவம் தான் இந்த இடுகை. நண்பர் மூங்கில் காற்று முரளிதரன் இட்டப் பின்னூட்டக் கருத்தைப் பார்த்தவுடன் நான் என்ன எழுதி வைத்திருந்தேனோ அதே கருத்து, அதில் என் மகனின் அனுபவம் பிரதிபலித்ததால் அதை இங்கு பகிர்கின்றேன்.

       பொருளாதாரப் பின்னணியின் அடிப்படையில் தான் கல்வியிலும் சரி, வேலை வாய்ப்பிலும் சரி இட ஒதுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டது. முற்பட்டோர், பிற்பட்டோர் என்று. இந்த ஒதுக்கீடு நியாயமானதே. ஆனால், அது சாதி சார்ந்ததாகிப் போனதுதான் மிகவும் வேதனை.  பிற்பட்டோர் என்பதிலேயே பல பிளவுகள் ஏற்பட்டு தாழ்த்தப்பட்டோர் என்றெல்லாம் சாதி அடிப்படையில் பிரிவுகள் ஏற்பட்டன. மலைவாழ் மக்களுக்கு என்று ஒரு பிரிவும் உண்டு.  மிகவும் நியாயமானது. சாதி அடிப்படையில் மாறிப் போனபின், முற்பட்டோரிலும் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியோர் உண்டு. அதே போன்று பிற்பட்டோரிலும்  செல்வந்தர்கள் உண்டு. ஆயினும், நடைமுறையில் நடப்பது என்னவென்றால், இந்த ஒதுக்கீட்டால் பல ஏழைகள், திறமை மிக்கவர்களாக இருந்தாலும், எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பயன் பெற முடியாமல் போவதுதான்.
 
       பல பணக்காரர்களும், அரசியல்வாதிகளும், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மருத்துவப் படிப்பிலும், பொறியியல் படிப்பிலும், தங்கள் பதவியையும், சாதியையும் காட்டி பல சலுகைகள் பெற்றுவிடுகின்றனர்.  இறுதியில் எஞ்சுபவர்கள் முற்பட்டோர் பிரிவினைச் சேர்ந்தவர்கள்.  இந்த முற்பட்டோரில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர ஏனையோரில் பலர், தங்களுக்குள் இருக்கின்ற உப பிரிவுகளில் எது பிற்பட்டோர் பட்டியலில் வருகின்றதோ அதைத் தேர்ந்தெடுத்து அந்தச் சாதிப் பிரிவு சான்றிதழ் பெற்றுவிடுகின்றனர். சான்றிதழில் இருப்பது ஒரு சாதி-கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு உதவும் ஒன்று.  வேறு தருணங்களில், திருமணம் என்று வரும் போது சொல்லப்படுவது அவர்களது உண்மையான சாதி.

என் மகன் 12 ஆம் வகுப்பு முடித்து, கால் நடை மருத்துவத்திற்கு விண்ணப்பித்த போது, தேசிய அளவிலானச் சேர்க்கைக்கு வாங்கிய விண்ணப்பத்திலும் சரி, தமிழ்நாட்டில்  உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தில் வாங்கிய விண்ணப்பத்திலும் சரி, இணைக்கப்பட்டிருந்த சாதிப் பட்டியலைப் பார்த்து மலைத்து தலை சுற்ற ஆரம்பித்தது. அன்றுதான் முதல் தடவை இத்தனை சாதிகள் இருந்தப் பட்டியலைப் பார்க்க நேர்ந்தது. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் அவனுக்குக் கிடைக்கவில்லை.  அது மிகவும் கடினமான ஒன்று.  மகனுக்கோ அதற்குத் தயார் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது ஒரு வருடமேனும் தேவை.

       தமிழ்நாடு கால்நடை மருத்துவத்திற்கு, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கவுன்சலிங்க் அழைப்பு வந்தது. கற்றல் குறைபாடு இருந்தும் அவன் 87% வாங்கியிருந்தான். அதுவும் இயற்பியல், வேதியியல், உயிரியல் மூன்றும் சேர்ந்து. கவுன்சலிங்க் சென்றோம். 40 இடங்கள் ஓசி கேட்டகிரி. அது ஓபன் காம்பெட்டிஷன். யார் வேண்டுமானலும் அதில் சேர்க்கப்படலாம். அப்படியான பட்டியலில் என் மகனின் தரம் 41.  எனவே காத்திருப்பு பட்டியலில் 1 ஆம் தரத்தில் இருந்தான்.  நாங்கள் நினைத்தோம் வெயிட்டிங்க் லிஸ்ட் 1 என்பதால் யாரேனும் – நிச்சயமாக 40 பேரில் 30 பேருக்கும் மேல் விட்டுவிட்டு, பொறியியல் இல்லை மருத்துவம் சென்று விடுவார்கள். எனவே கிடைத்து விடும் என்பது உறுதி என்று.  அங்கு குழுமி இருந்த மாணவ, மாணவிகள் அதைத்தான் பேசிக் கொண்டனர்.  பெரும்பாலோரது விருப்பம் கால்நடை மருத்துவம் அல்ல.  ஆனால், எனது மகனின் விருப்பம் அது மட்டுமே.  படித்தால் கால் நடை மருத்துவம்.  நோ காம்ப்ரமைஸ்.  இல்லையேல் ஜூவாலஜி பிரிவு எடுத்துப் படித்துவிட்டு 3 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கால்நடை மருத்துவம் விண்ணப்பிப்பதில் உறுதியாக இருந்தான். ஆனால், அதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது, இந்த சாதி முட்டுக்கட்டையாக இருப்பதால்.

       நாங்கள் அங்கிருந்த கவுன்சலிங்க் குழுவினரிடம் சென்று கேட்டோம்.  அவர்கள் சொன்ன பதில் இதுதான். “வெயிட்டின்க் லிஸ்டில் 1 ஆம் தரத்தில் இருந்தாலும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.  40 க்குள் யாரேனும் ஒருவர் விட்டாலும், பிஸி பட்டியலில் முதலில் யார் உள்ளாரோ அந்த மாணவர்/வி உள்ளே செல்வார்.  பிஸி பட்டியல் முன்னேறும்.  அப்போது அங்கு ஒன்று காலியாகும் அதில் பிசி யிலிருந்து ஒன்று ஏறும்...இப்படி ஏணிகள் ஏறுவது போல மற்ற பிரிவுகளும் ஏறும்.  இறுதியில் சீட் வேகன்சி இருந்தால் உங்கள் மகனுக்குக் கிடைக்கலாம்.  இதில் “லாம்” என்பதுதான் சொல்லப்பட்டதே அல்லாமல் “க்கும்” என்று சொல்லப்படவில்லை.

மகனுக்கு, சென்னையில் நல்ல கலைக் கல்லூரிகள் என்று பட்டியலிடப்பட்ட எல்லா கல்லூரிகளிலிருந்தும் (விண்ணப்பத்திருந்ததால்) சேர்வதற்கான கடிதம் வந்தது. சென்னை கிறித்தவக் கல்லூரியில் ஜூவாலஜி பிரிவில் சேர்ந்தான். 2 ஆம் வகுப்பிலிருந்து கனவு கண்டு வந்த கால்நடை மருத்துவம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம்.  ஆனால், எந்த தகவலும் வரவில்லை.  இதற்கிடையில், எங்கள் நலம் விரும்பி, அனிமல் ஆக்டிவிஸ்ட் ஒருவர், மகனின் கனவு பற்றியும், திறமை பற்றியும் அறிபவர் என்பதால், அவர் என் ஆர் ஐ கோட்டாவில் முயற்சி செய்யச் சொன்னார்.  தமிழ் நாட்டில் இதே கோட்டாவில் முயற்சி செய்யலாம், ஆனால், ஃபீஸும் அதிகம், அதற்கான வழி முறைகளும் மிகவும் கடினம்.  அவர், பாண்டிச்சேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மத்திய அரசின் கீழ் வருவதால், ஆனால் வேறு மாநிலமானதால், அங்கு என் ஆர் ஐ கோட்டாவில் முயற்சி செய்யலாமே, தமிழ்நாட்டை விட ஃபீஸ் கொஞ்சம் குறைவுதான், மகனது விருப்பம் நிறைவேறுமே என்றார்.  ஆனால், மகன் அதற்கான ஃபீஸும் மிகவும் அதிகம் என்பதால் தன் அப்பா கஷ்டப்படுவார் என்று அதற்கான நுழைவுத் தேர்வு எழுத மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான். 

       இதற்கிடையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் இருக்கும் மாதவரத்திற்கு, மகனின் நிலைமை என்ன என்று விசாரிக்கச் சென்றோம்.  அங்கும், அதே பதில்தான், There is a chance for a chance”  என்று.  உறுதியில்லை என்றனர். மகன் அழத் தொடங்கிவிட்டான். “நான் ஆர்வத்துடன் படித்து நல்ல ஒரு மருத்துவனாக வர முடியும் ஆனால் இந்த சாதி என்பது என்னை ஏன் இப்படிப் பாடாய் படுத்துகின்றது” என்று.  பாண்டிச்சேரியில் விண்ணப்பிக்க அவனைச் சமாதானப்படுத்தி, அதற்கு இறுதித் தேதி அன்று, விண்ணப்பிக்கும் நேரம் முடியும் தருவாயில், விண்ணப்பித்தோம்.  நுழைவுத்தேர்வு எழுதினான்.  இரண்டாம் இடம்.  சீட் கிடைத்தது என் ஆர் ஐ ஸ்பான்சார்ட் கோட்டாவில் (NRI)  வெளிநாட்டில் இருப்பவர் மகனைப் படிக்கவைத்துப் பணம் கட்டுவது போன்று, ஆனால் ஃபீஸ் கட்டுவது நாம்தான். வருடம் 2 லட்சம் ஃபீஸ்.  டொனேஷன் அல்ல. அது தவிர புத்தகங்கள், ஹாஸ்டல், மெஸ், இதரச் செலவுகள். மகனுக்கு ஹாஸ்டல் கிடைக்கவில்லை. மேலும் மகனுக்குக் கற்றல் குறைபாடு இருந்தமையால், படிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்வான் என்பதாலும், சிறியதாக ஒரு அறை, சமையல் அறை இருக்கும் வீடு எடுத்துத் தங்கினோம்,  நானும், மகனும். ஃபீஸ் முதல் வருடம் மட்டுமே கட்ட முடிந்தது. பின்னர் லோன்தான். அங்கு ஃபீஸ் கட்டுவதற்கு முன்னும் கூட, தமிழ் நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் உறுதியாகச் சொல்லவில்லை.  பாண்டிச்சேரி வாசம். 5 வருடப் படிப்பு. நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைத்தோம்.  மகனுக்குத் திறமை மிகவும் உண்டு. இதை நான் இங்கு பெருமையாகச் சொல்லவில்லை. என் ஆதங்கம். கவுன்சலிங்கில் கிடைத்திருந்தால், வருடத்திற்கு ரூ 15,000 மட்டுமே ஃபீஸ் + இதரச் செலவுகள் + சென்னையிலேயே. 

       பாண்டிச்சேரியில், கல்லூரியில் சேர்ந்த  புதிதில், இவன் மிகவும் வெள்ளை நிறத்தவனாக இருந்ததாலும், பெயர் வட இந்தியப் பெயர் (அவனது அப்பா உபயம்) போல இருந்ததாலும், இவன் தமிழனல்ல என்று நினைத்துத் தமிழ் மாணவர்கள் பேசவில்லை.  பின்னர் இவன் தமிழன் என்று தெரிந்த பிறகும், இவன் வொயிட் க்ராஸ் சமூகமோ என்று பேசாமல் இருந்தனர். மகன் என்னிடம் வந்து கேட்டான், “ஏன் என்னுடன் யாரும் பேசுவதில்லை? நான் இன்ன சமூகம் என்று எப்படி, நான் சொல்லாமல் இவர்களுக்குத் தெரிகின்றது?” என்று. நான் என் மகனை சிறு வயதிலிருந்தே, எங்குமே சாதி பேசக்கூடாது, அரசியல் பேசக்கூடாது, யாராவது அசைவ உணவைக் கொண்டு வந்து உன் முன் சாப்பிட நேர்ந்தாலும், முகம் சுளிக்காமல், அவர்கள் மனம் நோகும்படி நடந்து கொள்ளாமல், அவன் கொண்டு செல்லும் உணவை உண்ண வேண்டும் என்றும் அவனுக்குச் சொல்லி வளர்த்தேன்.     

      சென்னையில் இருந்தவரை தெரியவில்லை. அதனால், அவனுக்கு வியப்பாக இருந்தது. பின்னர் இவன் நடந்து கொள்ளும் முறை, இவனது குணம், திறமை, வகுப்பில் பதிலளிக்கும் புத்திசாலித்தனம், அறிவு, செமினார் நடத்தும் திறமை எல்லாம் வகுப்பு முழுவதையும் இவனுடன் இணைத்தது.  பின்னர், தினமும் நண்பர்கள் கூட்டம்தான் வீட்டில். சாப்பாடு, டிஃபன் என்று களை கட்டும். ஆனால் பாண்டியிலும் சரி, சென்னையில் வேலை பார்த்த கிளினிக்கிற்கு வரும் க்ளையன்ட்ஸும் சரி, மகனின் நிறத்தை வைத்து, தோளின் மீது கை போடுவது போல போட்டுப் பார்த்து இவனது சமூகத்தை அறிய முற்படுவார்கள். ஏனென்றால் இவனிடம் சாதி கேட்டால், இவன் சொல்லும் பதில், “நான் மனித சாதி” என்பது மட்டுமே அல்லாமல், தன் சாதியை சொல்லவே மாட்டான். அதனால் அவன் தனது வொயிட் க்ராசை எடுத்தே விட்டான். எனக்கு சாதி இல்லை என்று சொல்லி.  என் முழு ஆதரவுடன்.  வீட்டில் மிகுந்த எதிர்ப்புகள். இன்னும் தொடரத்தான் செய்கின்றது. எங்களைப் புரிந்து கொண்டு அன்பாக இருப்பவர்களைத் தவிர. எங்கள் இருவருக்கும் அதைப் பற்றிக் கவலையுமில்லை.

சரி, 5 வருடம் முடித்தாயிற்று.  மிகவும் நல்ல பெயர் எல்லா பேராசிரியர்களிடம் இருந்தும்.  “நல்ல திறமையான டாக்டர்” என்ற பெயர்.  எழுதுவது கடினம் அவனுக்கு.  படிப்பதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்வான்.  அவ்வளவே.  ஆனால் அறுவை சிகிச்சை என்றால் பெர்ஃபெக்ட். தொழில் சம்பந்தமான செமினாரில் இவனது பேப்பர் மெச்சப்பட்டு முதல் பரிசு இப்படிப் பல + கள். அவன் விரும்பியதும் அறுவை சிகிச்சையில் மேற்படிப்பு.  மீண்டும் தேசிய அளவிலான மேற்படிப்பிற்கு பரீட்சை எழுதி தேசிய அளவில் 80 வது தரம். எல்லோரும், அவனது பேராசிரியர்கள் உட்படச் சொன்னது அவனுக்குக் கிடைத்துவிடும் என்று.  அவன் படிக்க விரும்பியது பஞ்சாப் கால்நடை மருத்துவக் கல்லூரியில்.  டெல்லிக்குப் பயணம் கவுன்சலிங்கிற்காக.  அப்போது, 36 கல்லூரிகளில் ஒரு சில, அறுவை சிகிச்சை பாடம் அந்த வருடம் கொடுக்கவில்லை. ஒரு சில, இவர்களது பட்டப்படிப்புச் சான்றிதழ் வரும் தேதிக்கு முன்னரேயே வகுப்புகள் தொடங்கப்பட இருந்ததால் சேர முடியாத நிலை. எல்லா கல்லூரிகளிலும் சரி, எஞ்சியிருந்த கல்லூரிகளிலும் சரி, தமிழ்நாடு உட்பட, ஒவ்வொரு கல்லூரியிலும் 2 இடங்களே. அதுவும் ஒன்று ஒதுக்கப்பட்ட இடம்.  மற்றொன்று ஓசி பிரிவு. 

பொதுவாக அறுவை சிகிச்சைப் பிரிவு எடுப்பவர்கள் மிகவும் குறைவு. காலையில் கவுசலிங்க் ஹாலுக்குச் சென்று பார்த்த போது அறிவிக்கப்பட்ட இடங்கள்தான் மேலே சொன்னது. முதலில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு உரியவர்கள், தரத்தின் அடிப்படையில் அழைக்கப்பட்டார்கள். அண்டர் டெவலப்ட் மாநிலத்தவர்க்கும் – வட கிழக்கு மாநிலத்தவர்க்கும், கோவா வைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை உண்டு. இது நியாயமானதே. இறுதியில்தான் ஓசி பிரிவு தரத்தின் அடிப்படையில், அதிலும் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு உரியவர்கள், அண்டர் டெவ்லப்ட் மாநிலத்தவர்கள், தங்களுக்கான பிரிவில் கிடைக்கவில்லை என்றால், ஓசி கேட்டகிரியுடன் போட்டி போடலாம். கவுன்சலிங்க் ரிசல்ட் வெளியாகும் போர்டை பார்த்தால் அதிர்ச்சி. காலையில், எஞ்சியிருந்த கல்லூரிகள் காட்டிய தங்களது 2 சீட்களையும் கேன்சல் செய்திருந்தது/நிரப்பப்பட்டுவிட்டது என்று காட்டியது. சென்னைக் கல்லூரியில் ஒரு இடமே காட்டப்பட்டது. மாணவர்களிடையே சலசலப்பு. என் மகன் அடிக்கடிச் சொல்லி நகைப்பது “அம்மா நாம ஓசி கேட்டகிரிதான் ஆனா நமக்கு எதுவுமே “ஓசி” கிடையாது” என்று. மகன் வெளியில் வந்த போதுதான், நாங்கள் அறிந்தது அந்த 2 சீட்களும் வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டுவிட்டது என்று. இத்தனைக்கும் அவர்களின் தரம், 400 க்கும் மேல். அறுவை சிகிச்சை இல்லை என்றாலும், காம்ப்ரமைஸ் செய்து கொண்டு, மெடிசின் கிடைக்குமா என்று பார்த்திருந்திருக்கின்றான்.  அதுவும் இல்லை என்றாகியது. 

என் மகன் அன்று அழுத அழுகை அங்குக் கூடியிருந்த அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.  நான் என்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டேன்.  “நான் என்னம்மா தப்பு பண்ணினேன்? இந்தச் சாதியில பிறந்தது என் தப்பா?  நீயும், நானும் ஒரு நாள் கூட சாதி பார்த்ததே இல்லையேமா. எனக்குப் படிக்கத் தகுதி இல்லையா? திறமை இல்லையா? இந்த வொயிட் க்ராஸ்தான் (பூணூல்) எனக்கு சீட் கிடைக்கத் தடைனா இந்த வொயிட் க்ராஸை இங்கயே அறுத்து எறியறேன்மா. எனக்கு சீட் தரச் சொல்லுமா” என்று.  என்னிடம் பதில் இல்லை. மகனின் நண்பர்களும் மிகவும் வருத்தப்பட்டனர். அவர்கள் ஏற்கனவே சொல்லிக் கொண்டுதான் இருந்தனர், இவன் தாங்கிக் கொள்ள மாட்டான் என்று. 22 வயது பையன் அழுதது ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா?  அவனுக்கு அவனது படிப்பும், கனவும் அத்தனை மனதில் வேரூன்றிய ஒன்று. பின்னர் அவனைச் சமாதானப் படுத்தி அழைத்துவந்தோம். 10 நாட்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தான். கிடைக்கவில்லை என்பதைவிட, சாதியினால் தனக்குக் கிடைக்கவில்லையே என்ற வருத்தம். அரசு வேலைக்கான விளம்பரம் வந்தது. ஆனால், அங்கும் இதே சாதிப் பிரச்சினை. அவன் படிக்கும் போது கிராமங்களுக்குச் சென்றதால், அவன் விரும்பியது, கிராமங்களில் உழவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் மாட்டிற்கு நல்ல மருத்துவர்கள் இல்லாமல் எனவே அதில்தான் ஸ்பெஷலைஸ் செய்ய வேண்டும் என்றும், பல ஆர்வமுள்ள கால்நடை மருத்துவ மாணவர்களுக்குச் சாதி பாராமல் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும். ஆனால், அதை மேற்கொள்ள வழியில்லாமல் போயிற்றே என்று.

பின்னர், சென்னையில் மிகவும் அருமையான கிளினிக்கில், மிகவும் நல்ல மருத்துவரிடம் 1 1/2 வருடம் அசிஸ்டெண்டாகப் பணியாற்றிவிட்டு, அங்கும் டாக்டரிடமும், மக்களிடமும் மிகவும் நல்ல பெயர் எடுத்துவிட்டு, என் முன்னேற்றத்திற்குத் தடையான இந்தச் சாதியுள்ள நாடு எனக்கு வேண்டாம் என்று, நார்த் அமெரிக்கன் வெட்னரி லைசன்ஸ் பெற வேண்டி, அம்மாவாகிய என்னை ஒரு தோழியாகக் கருதி, மிகுந்த பாசத்துடனும், நேசத்துடனும் இருந்த எனது ஒரே மகன், என்னைப் பிரிய மனமின்றி, இருந்தாலும், அவனும் இந்த சமூதாயத்தில் ஒரு நல்ல மருத்துவனாகப் பணியாற்ற வேண்டும் என்றும், மேற்படிப்பில் ஸ்பெஷலைசேஷன் செய்துவிட்டு, தனித் தன்மையுடன் இங்கு மீண்டும் வந்து, கிராமங்களுக்கும், உழவர்களுக்கும் தன்னால் இயன்றவரை மாடுகளுக்குக் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனும், பல இன்னல்களுக்கிடையில் அனுப்பியுள்ளோம். இந்தப் பரீட்சை 4 நிலைகள் கொண்டது,  முதலில் இந்தியாவிலிருந்தே ரெஜிஸ்ட்ரேஷன் முடித்து, இரண்டாவது, மூன்றாவது பரீட்சைகளை - ப்ரோமெட்ரிக் -  Basic clinical exam, North American Veterinary License Examஇங்கேயே எழுதி கிளியர் செய்துவிட்டு, இறுதிக் கட்டமான Clinical Proficiency Exam ற்காக, கானடா சென்று அதற்கான படிப்பையும், அங்கு கால்நடை மருத்துவத்தில்  மேற்கொள்ளப்படும் முறைகளைக் கற்று, அங்கும் மிகவும் நல்ல பெயர் எடுத்து, இந்த மிகவும் கடினமான இறுதிக்கட்ட பரீட்சையை பாஸ் செய்துவிட்டான். - 3 நாட்கள் – காலை 6 மணிக்கே அந்த செண்டருக்குள் சென்றால், மாலை 6 மணிக்குத்தான் வெளியில் வர முடியும்.  யாருடனும் பேசக் கூடாது.  எல்லாமே கேமராவில் பதிவாகும் - (எல்லாமே செய்முறை. டயக்னாசிஸ், சர்ஜரி, அனஸ்தீசியா, ஸ்கானிங்க் அண்ட் எக்ஸ்ரே, குதிரை, மாடு, ஆடு, நாய்/பூனை, இப்படி எல்லாம் கடந்து,).

இப்போது ஸ்பெஷலைசேஷன் செய்வதற்காக, இன்டெர்ன்ஷிப் கிடைப்பதற்காகக் காத்திருக்கின்றான். கிடைக்க வேண்டும்.  அதுவும் அதிர்ஷடம் என்ற ஒன்று இருந்தால்தான். இப்போது அமெரிக்காவில் விசிட்டர் விசாவில் இருந்து கொண்டு “சாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வரவேண்டுமா அம்மா” என்று கேட்டுக் கொண்டு, இன்டெர்ன்ஷிப்பிற்குக் காத்திருந்தாலும், அவன் முன் இருக்கும் தற்போதைய பிரச்சினை வொர்க் பெர்மிட் – H1B visa கிடைப்பது! காத்திருக்கின்றான் இன்டெர்ன்ஷிப் ரிசல்ட் அறிய. நானும் காத்திருக்கின்றேன்!  அவன் பலவற்றைக் கற்றுக் கொண்டு, அவனது கனவான, மிகவும் உயர்வாகக் கருதப்படும் டிப்ளமேட் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் வெட்னரி சர்ஜரி (DACVS) மற்றும், டிப்ளமேட் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் வெட்னரி அனஸ்தீசியா அண்ட் அனல்ஜீசியா (DACVAA) பட்டங்களைப் பெற்று, இங்குள்ள மாடுகளுக்குச் சிசிச்சை செய்வான் என்றும், பல மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பான் என்ற நம்பிக்கையிலும்!

சாதி அன்றும், இன்றும், பொதுவாகத் துன்பத்தை மட்டுமே தருகின்றது. அன்று திறமையுள்ளவர்கள் பலரையும் பிற்பட்டவர்கள் என்று முத்திரை குத்தி அவர்களைத் தள்ளி வைத்தது. இன்றும், தொழில் நுட்ப வளர்ச்சிகள் விண்ணை எட்டினாலும், அதே சாதி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பல திறமை மிக்கவர்களைத் தள்ளி வைத்து வேடிக்கை பார்க்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த சாதி நம் இந்தியாவில் மட்டும்தான் உயிர் வாழ்ந்து பலரது உயிரையும் எடுத்துக் கொண்டிருக்கின்றது. இது எங்கள் அனுபவம் மட்டுமல்ல.  பலருக்கும். திறமைக்கு மதிப்பில்லாத காரணத்தினாலும், சாதியினாலும் தான் பல மாணவர்கள் வெளிநாடு செல்ல முற்படுவது. என்று தணியும் இந்தச் சாதிக் கொடுமை? 

- கீதா (மன்னித்து விடுங்கள்.  இடுகை நீ......ளமாகிப் போனதற்கு.)


பின் குறிப்பு : நண்பர்களே! என்னை மன்னித்து விடுங்கள்! தங்கள் மனதை, நான் எந்த விதத்திலேனும் புண்படுத்தியிருந்தால், வருத்தியிருந்தால். நான் எந்த சாதீயத்தின் அடிப்படையிலும் எழுதவில்லை.  சில பின்னூட்டங்கள் என் மனதை மிக மிக மிக வேதனைக்குள்ளாக்கியது என்பது உண்மை. ஏனென்றால், என் எண்ணம், செயல்கள் சாதீயம் சார்ந்ததல்ல என்பதாலும், இட ஒதுக்கீடினால் எத்தனை நன்மைகள் விளைந்துள்ளன என்பதையும் நான் அறிந்திருந்ததாலும், சாதியே வேண்டாம் என்று சொல்லும் நாங்கள், விவாதத்திற்கு எங்கள் தளம் மாறிவிட என் இடுகை வழிவகுத்து விட்டதோ என்ற காரணத்தினால் அதை நீக்கி விட்டேன் எங்கள் தளத்திலிருந்து. பின்னர், எங்கள் மதிப்பிற்குரிய கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்கள் அன்புடன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, எல்லோருடைய கருத்துக்களையும் மதிக்க வேண்டும் என்றும் இதை வெளியிடுகின்றேன். இடுகை யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் வருந்துகின்றோம். முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

வாத்தியாரின் சரிதாயணம், சிரிதாயணமே!





     வலையுலக நண்பர்களே!  சில நாட்களுக்கு முன், “சரிதாயணம் எனும் நூலை எழுதிய எழுத்தாளர் பாலகணேஷ் அவர்களை எதிர்த்து கு.வா.க (குழப்ப வாதிக் கட்சி) “அவர் தனது நூலில் “அரசியல் வாதிகள் எல்லோருமே கோமாளிகள் என்று சொல்லியதால் நாங்கள் அதை வன்மையாகக் கண்டித்து ஒரு நாள் முழுவதும் தலைவி சரிதாவின் பெயரில் “உண்ணும் விரதம்” இருப்போம்.”  என்று ஆர்பாட்டத்தைத் தொடங்கியிருக்கின்றார்கள் என்ற செய்தியை வெளியிட்டோம். http://thillaiakathuchronicles.blogspot.com/2015/01/Vayai-Moodi-Pesavum.html இதை அறிந்ததும், வெங்கட்ஜி, டிடி போன்றவர்கள் “எங்கள் வாத்தியார் எதையும் எதிர்கொள்வார்.  இது அவருக்கு ஜுஜூபி” என்று ரஜனி ஸ்டைலில் சொல்லிக் கிளம்ப, வலையுலக நண்பர்கள் அனைவரும் வாத்தியாரின் சிஷ்யக் கோடிகளான சீனு, ஆவி, அரசன், ஸ்கூல்பையன், கார்த்திக் சரவணன், ரூபக், குடந்தையூரார் தலைமையில் வாத்தியாருக்காக அணிவகுத்து நின்றார்கள். நாங்கள் விடுவோமா? செய்தி வெளியிட அங்கு சென்றுவிட்டோம். நம் நண்பர் ஸ்ரீராமும், சகோதரி மைதிலியும் கூட ஆதரவு கொடுத்துக் கலந்து கொண்டனர். 

கு.வா.க. கட்சியின், தலைவி சரிதாவின் மைசூர்பாகு ஒரு புறம் அடுக்கப்பட்டிருந்ததால், போராட்டத்திற்கு ஆள் சேராமல் நமுத்துப் போகும் நிலையில் இருந்ததால், “உண்ணும் விரதப் போராட்டம்” ஆயிற்றே, நாங்கள் கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பா சொல்லலாமா (அப்பத்தானே போராட்டம் வலுக்கும் எங்களுக்கும் அவல் கிடைக்கும்) என்று யோசித்த வேளையில் நண்பர் ஸ்ரீராமும், “சரிதாயணம் புத்தகத்தை எதிர்த்து நானும் தொடர்ந்து கிருஷ்ணா ச்வீட் மைசூர்பா சாப்பிடும் போராட்டத்தை அறிவிக்கிறேன்... யாராவது வாங்கிக் கொடுத்தால்!” என்று சொல்லிவிட, “ஆஹா அருமையான வாய்ப்பு” என்று சொல்லி கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பா பார்சல்/இலவசம் என்று கூவி கட்சியை அறிவிக்கச் சொன்னோம். இப்போது அங்கு போராட்டப் பந்தலிலிருந்து நேரடிச் செய்திகள்.

“எங்கள் தலைவி சரிதா வாழ்க! அவரது செம்மொழிப் பணி வாழ்க!” என்ற கோஷம் காதைப் பிளக்கின்றது.  கணேஷ் அண்ணாவிற்குச் செய்தி பறக்கின்றது.  “ஸார், அண்ணியின் மைசூர்பாகு இல்லையாம், கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பாவாம்.  அதனால தைரியமா வாங்க சார்” என்று ஆவி தனக்கும் இனிப்பு பிடிக்கும் என்பதால் ஃபோன் போட, கணேஷ் அண்ணா,  “நீங்கள் போராட்டத்தைச் சமாளிச்சுக்கங்க.  நான் க்ளைமாக்ஸ் ஃபைனல் என்ட்ரிதான், நம்ம தமிழ் படங்களைப் போல” என்று சொல்லிவிட, வாத்தியார் அணி தயாரானது.  இப்போது லைவாக…

கு.வா.க : எங்கள் தலைவிக்கு, ஹிந்தி, பொது அறிவு இல்லை என்பதை ஹைலைட் செய்து “அடியே..பையன் இல்லடி.  பய்யான்னா இந்தில சகோதரான்னு அர்த்தம்” என்றும், டி வி ஷோவில், கப்பு கேட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கு எங்கள் தலைவிக்குப் பதில் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். எங்கள் தலைவி வேண்டுமென்றேதான், சரியான பதில் தெரிந்திருந்தும் சொல்லவில்லை.  அவர்கள் நோக்கம் அதுவல்ல. எங்களில் ஒருவராகத்தான் அவர் இருக்கின்றார். என்பதை மிகத் தெளிவாக, “எங்களுக்கு ப்ரொக்ராம்ல கலந்துக்கறதை விட “கப்பு”வைப் பாக்கறதுக்குதான் ஆசை.  அதனால வருத்தமில்லை” என்று எப்போதும் தோல்வி கண்டு பழக்கப்பட்டுப் போன எங்கள் தலைவி பெருந்தன்மையுடன் சொல்லியதை இங்கு சொல்லிக் கொள்கின்றோம். மட்டுமல்ல எங்கள் தலைவியை ஏதோ ரஷ்யப் பெண்மணி போல் “யெஸ்கிவ்” என்றிருக்கின்றார்.  அவர் வீரத் தமிழ் பெண் என்று அவருக்குத் தெரியாதா?

வாத்தியார் அணியிலிருந்து அரசன் : யோவ் முட்டா பசங்களா, அடிப்படை இங்கிலிஷ் தெரியாதவனுங்க எல்லாம் கட்சி கட்டிக்கிட்டு வந்துட்டானுங்க.  “யெஸ்கிவ்” நா என்னானு அர்த்தம் தெரியுமா? சரி-யெஸ்-தா-கிவ் இப்படித்தான்யா எங்க வாத்தியாரு அழகா, செல்லமா அண்ணிய சொல்லிக் கூப்பிடுவாரு.  இது கூடத் தெரியாத கேனப் பசங்க.

(இரு அணிகளும் வாத்தியாரின் வரிகளை வைத்தே சரிக்குச் சரி மோதுகின்றார்கள்)

கு.வா.க.: எங்கள் தலைவி ஹோட்டலில் புதியதாய் ஒரு அயிட்டத்தை “ஹூக்குவெஜி-ட்ரைமா சாப்பிட்டால் அது உப்புமா என்று உங்கள் வாத்தியார் கிண்டல் செய்கிறார். “இப்ப மட்டும் என்ன மூணு பொண்டாட்டியா வெச்சிருக்கேன்? ஒண்ணையே சமாளிக்க முடியலையே” என்று வீட்டு ஓனரிடம் எங்கள் தலைவியை பற்றிச் சொல்லுதல், எங்கள் தலைவியின் கண் நன்றாக இருந்தாலும் அதை “கண் செக்கப் பண்ணி கண்ணாடி போடணும் உனக்கு” என்று சொல்லுதல், அவர் நண்பர் குழந்தைகள் வந்து அதகளம் செய்யலாம் ஆனால் எங்கள் தலைவியின் அண்ணன் குழந்தைகள் மட்டும் வரக்கூடாது என்று சொல்லுவது எல்லாம் நியாயமல்ல.  அது மட்டும் இல்ல, எங்க தலைவிய “அம்மாவைப்’ பார்க்கும் அ.தி.மு.க. அமைச்சரைப் போல பயத்துடன் அவளை ஏறிட்டேன்” என்று சொல்லி மற்ற கட்சித் தலைமையுடன் ஒப்பிட்டுருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வாத்தியாரணி: யோவ் எங்க வாத்தியார வீடு மாத்த வைக்கறது நியாயமா.  ஏன், அண்ணி ஸ்கூட்டர் ஓட்டக் கத்துக்க வைச்சு பல பேர ஆஸ்பத்திரிக்குப் போக வைச்சாலும் கத்துக் கொடுத்தாரு. இப்ப கார் வேற ஓட்டக் கத்துக் கொடுத்துருக்காரு இல்லன்னா எங்க வாத்தியார் குடும்ப பரம்பரையையே வம்புக்கு இழுபாங்கன்னு. கார் ஓட்டக் கத்துக்கிட்டு ஸ்கூட்டரை அவங்க அண்ணனுக்கு வித்து மாசா மாசம் 100 ரூபாய் தர வைத்து எங்க வாத்தியாரின் மண்டையை வீங்க வைத்ததுக்கு அண்ணிய பதில் சொல்லச் சொல்லுங்க..

கு.வா.க: எங்கள் தலைவியின் பாட்டையும், நடனத்தையும் கலாய்த்தது எங்கள் மனதை நோகடித்தது.  எங்கள் தலைவி எவ்வளவு அக்கறை மிக்கவர், உங்கள் வாத்தியாரின் உடல் நலனில்.  அக்கறையாகத் தேனும், பச்சைக்காய் வகைகளையும் கொடுத்து, தனது எடை 70 திலிருந்து 88 ஆனாலும் பரவாயில்லை என்று உங்கள் வாத்தியாரின் எடையை 65 லிருந்து 45 ஆகக் குறைத்தாரே! இதற்கு என்ன சொல்லுகின்றீர்கள்?

வாத்தியாரின் அணி: எங்க வாத்தியார் மயங்கி விழுந்தது உங்களுக்குத் தெரியாதுல்ல வாயப் பொத்துங்க.. எங்க வாத்தியார் எவ்வளவு பெரிய எழுத்தாளர்! அவரு ஒரு பேய் கதை எழுதலாம்னு சொன்னப்ப, “சுயசரிதம் எழுதறதுக்கு உங்களுக்கு அவ்வளவு ஆசையா?” நு கேட்டாங்களே தலைவி அது மட்டும் கிண்டல் இல்லையா?

கு.வா.க.: அதான் அவரு “ஆமா” னு சொல்லி மாட்டிக்கிட்டாருல்ல...”டியர்! லைஃப்ல முதல் தடவையா ஒரு பஞ்ச் அடிச்சிட்ட...”நு ஒத்துக்கிட்டாருல்ல!  அது எங்கள் தலைவியின் வெற்றி!!  எங்கள் தலைவி வாழ்க!  எங்க தலைவி மிருகங்களின் மேல் அன்பு கொண்டவர். அவர் நாய் குட்டி ஒண்ணு வளர்க்க, அது தூங்குவதற்குக் கஷ்டப்பட, உங்க வாத்தியார், “நீ வேணா தாலாட்டுப் பாடித் தூங்க வையேன் ..” என்று சொல்லி நகைத்தார். எங்கள் தலைவியின் டார்லிங்கை/செல்லத்தை அவர்களுக்குத் தெரியாமல் வெளியே அனுப்ப அவர் செய்தது எங்களுக்குத் தெரியாதாக்கும்?
எங்கள் தலைவி செம்மொழி வளர்க்க எத்தனை பாடுபட்டார் தெரியுமா? வீட்டிலும் செம்மொழியில், “நாதா, மாலை அலுவலகத்திலிருந்து விரைவாய் திரும்பி விடுங்கள்.  நாம் கடற்கரைக்குச் சென்று, பின் பெரிய அங்காடிக்குச் செல்லலாம். அங்கே நம் இல்லத்திற்காய் பொருட்களும், எனக்கு சில அழகுசாதனப் பொருட்களும் வாங்கி வர வேண்டும்.” என்றும், வீட்டில் மட்டுமல்ல வெளியிலும், பேருந்தில் கூட “ஐயா, பனிக்கூழ் இல்லத்துக்கு ஒரு சீட்டு தாருங்கள்” என்று கேட்டு அசத்தியவர்!
உங்க வாத்தியார், எங்க தலைவியின் டேபிள் ஃபேனைச் சரி பண்ணுகின்றேன் பேர்வழி என்று டுர்..டுர் என்று சத்தம் வரும் படி செய்ததையும், “கோலப்பொடியில உப்புமா” செஞ்சத..ஹஹஹஹ்....எங்க தலைவி எழுதியதும், உடனே, அவரு எங்க தலைவிய எழுதுவதை நிறுத்துனு சொல்லிட்டாரு. எங்கள் தலைவியின் உரிமையை பறித்ததை, கு.வா.க. வின் பெண்கள் குழுவாகிய நாங்களும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வாத்தியார் அணி சார்பாக கார்த்திக் சரவணன்: அதானே பார்த்தோம்! எங்க வாத்தியார் கரெக்டாத்தான் சொல்லிருக்காரு. “உலக அரசியல்ல நிறைய கோமாளிங்க இருக்காங்க.  அது மாதிரி இந்திய அரசியல்ல இருக்கற சிறந்த கோமாளி யாருன்னு நீங்க சொல்லணும். இதான் உங்களுக்கானக் கேள்வி. நாலு ஆப்ஷன் தர்றேன்” அப்படினு.  இங்க பார்வையாளர் யாராவது சொல்லுங்களேன்.

பார்வையாளர்: என்ன சொல்றதுன்னே புரியலை.  எல்லாருமே கோமாளி மாதிரிதான் இருக்காங்க.  ஒரே குழப்பமா இருக்கு ஸார்”

வாத்தியார் அணி சீனு: பாத்தீங்கல்ல, மக்களே என்ன சொல்றாங்கன்னு...

கு.வா.க: மக்களா..ஹ்ஹஹஹ் அவங்களுக்கு என்ன தெரியும்?! உங்க வாத்தியாருக்கு, எங்கத் தலைவி தீபாவளிக்கு வாங்கித் தரச் சொன்ன சாமான் கூட சரியா வாங்கத் தெரியல இதுல நையாண்டி வேற “எனக்கெல்லாம் சோப்பு ஒரு மாசம்தாண்டி வருது.  நீ எப்படி அதே சோப்பை ரெண்டு வருஷமா தேய்ச்சுக் குளிச்ச?” அப்படினு.

வாத்தியார் அணி டிடி: அண்ணியோட அம்மா செஞ்ச அல்வா சாப்டு எங்க வாத்தியார் நாக்கு ஒட்டி பேச முடியாம எப்படிக் கஷ்டப்பட்டார் தெரியுமா? அதையெல்லாம் பொறுத்துக் கொண்டாரே எங்கள் வாத்தியார். வெங்கட்ஜி: டெல்லியில் வாத்தியார் என்னுடன் வண்டியில் பயணித்ததையும் என்னுடன் உணவகத்தில் உணவு உண்டதையும் மிகவும் பெருமையாகக் கருதுகின்றேன். உங்க கட்சித் தலைவியின் மாமா நரசிம்ம சாஸ்திரிகள், ஏர்போர்ட்ல கஸ்டம்ஸ் ஆஃபீசர் “நீங்க சைவமா”னு கேட்டதற்கு, “சைவமாவது? நான் வைஷ்ணவன்மா.  நெத்தில பாரு எவ்ளோ பெரிசா ஸ்ரீசூர்ணம் இட்டுண்டிருக்கேன்” என்று நெற்றியைக் காட்டி எங்கள் வாத்தியாருக்குத் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியதை தலைவி கண்டுகொள்ளவே இல்லை.

கு.வா.க.: அது சரி உங்க வாத்தியார் ஏன், தலைவி மாமா ஃபோட்டோல “நாமம் போடாம, பட்டைய போட்டுருக்காரு”

வாத்தியார் கட்சி மைதிலி: நீங்க பக்கா அரசியல் வாதிங்கனு கரெக்ட்டா காமிச்சுட்டீங்க...நாமம், பட்டைனு சாதிய ஏன் கொண்டு வர்ரீங்க இங்க? ஏற்கனவே யானைக்கு என்ன நாமம் போடறதுனு சண்டை நடந்து ஓஞ்சுருச்சு...இப்ப நீங்க ஆரம்பிச்சீங்கனு வையுங்க.....உடனே வாத்தியார் கட்சி ஸ்ரீராம் அவர்கள் தொடர்ந்து, “உங்க மாமா “ஐயையோ...ப்ளேனே பரவாயில்லை போலயே...இந்தக் கட்டேல  போறவன் ப்ளெனை விட வேகமாப் பறக்கறானே” நு சொல்லி எங்க வாத்தியார பாடாய் பாடு படுத்தினாரே.

(பாலகணேஷ் சார் உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட்!  இந்த “சரிதாவும், ஏரோப்ளேனும், பின்னே ஞானும்” எங்களுக்கு மௌலியின் ஃப்ளைட் நம்பர் 172 வை நினைவு படுத்தியது!  மட்டுமல்ல சரிதாவின் மாமா நீலுவாகவும், அவர் அந்த டயலாக் பேசுவது போலவும் தோன்றியது! )

கு.வா.க: உங்க வாத்தியார் என்ன கேலி செஞ்சாலும், எங்க தலைவிதான் அந்த பரந்தாமன் மாமாவை “சபதம் போட்டு” வீட்டை விட்டு அனுப்பியது. அவருக்கு வெற்றிதானே!  எங்க தலைவிய மோகினிப் பிசாசுனு சொன்னாலும் அந்த மோகினிப் பிசாசை அடித்து விரட்டிய வீராங்கனை எங்கள் தலைவி! எங்க தலைவி “ஏசி போடுனா”  அதை ஏசிப்போடுன்னு வேணும்னு அர்த்தம் பண்ணிக்கிட்டு தாறுமாறா திட்டியதை எதிர்க்கின்றோம்.  ஏன் எங்க தலைவி பிடிவாதம் பிடிச்சு ஏ.சி. வாங்கினா தப்பா?  டி.வி சீரியல்ல நடிச்சது தப்பா?  உங்க வாத்தியார், “ஹூம் ஒரு காலத்துல டெலிஃபோன்ல டிவி சேனலுக்குப் பேசி கப்ஸி ரமாவையே அழவெச்சவ நீ! இந்த டைரக்டர் உங்கிட்ட என்ன பாடுபடப் போறானோ? என்று கப்சி ரமாவிடம் பேசியதைக் கலாய்த்திருக்கிறார்.  எங்க தலைவி செல் ஃபோன்-ஸ்மார்ட் ஃபோன் கேட்டது தப்பா? ஏன், உங்க வாத்தியார் எங்க தலைவியோட உறவினர் நாணாவின் மூக்கைக் கேலி செய்தாலும், எங்க தலைவிதானே பொருவிளங்கா உருண்டையால அடித்து, ரௌடிகள்கிட்டருந்து உங்க வாத்தியாரக் காப்பாத்தினாங்க!  அது தெரியுமா?  அதான் டெல்லி வரை போயிருக்காங்க..

வாத்தியார் அணி: அண்ணிக்கு செல்ஃபோன் யூஸ் பண்ணவே தெரியாது. கால் கட் பண்றதுக்குப் பதிலா ஸ்விட்ச் ஆஃப் செய்யறது வழக்கம். இதுல வேற ஐஃபோன் கேக்குதாக்கும், எங்க வாத்தியாருக்குத் தண்ட செலவு!. உங்க கட்சியே கேனை! அதுக்கு ஒரு தலைவி? அர்விந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மிங்கற கட்சியோட தலைவர்னு கூடத் தெரியாம......இவங்க எல்லாம் எம்.பியாம். சீனு தொடர்கிறார்: அண்ணி, எங்க வாத்தியாரத்தான் எம் பி பதவிக்கு நிக்கச் சொன்னாங்க, ஆனா நான் தான் “அண்ணி சூப்பர் ஐடியா!  ஆனா ஒரு சின்னத் திருத்தம்.  சாருக்குப் பதிலா நீங்களே நிக்கணும்.  அவரை விட நீங்கதான் ஃபேமஸ்.  உங்கள வைச்சுத்தான் அவரே பேரு வாங்கி இருக்கார்?!  அப்படினு சொல்லி உங்கத் தலைவிக்கு, எங்க அண்ணிக்கு, நான் எம்பி பிச்சை சாரி பிட்டைப் போட்டது....அப்புறம் நாங்க எல்லாரும் தான், மேல சொன்னவங்க போக, மதுமதி, பிரபாகரன், மெட்ராஸ் பவன், செல்வின், ஆரூர்மூனா, சேட்டைக்காரன், கே.ஆர்.பி செந்தில், மதுரைத் தமிழன், தமிழ்வாசி னு படையே கூடி, மகளிர் அணியைக் கூட்டியது, இப்போ எம்.பி ஆக்கியது எல்லாம் நாங்கதான் தெரிஞ்சுக்கங்க... சரி, அதனால இப்ப என்ன பண்ணனும்றீங்க?

கு.வா.க: நிறுத்தணும்! எல்லாம் நிறுத்தணும்! எங்க தலைவிக்கு உங்க வாத்தியார் அவர ரௌடிகள்கிட்டருந்து காப்பாத்தின உடனே, “உனக்கு என்ன வேணும்னாலும் கேளு, தர்றேன்” நு சொல்ல “அப்படியா? அப்படின்னா இனிமே என்னையும் என் ஃபேமிலியையும் கலாய்சுக் கதை எழுதறத நீங்க நிறுத்தணும்,  வாக்குக் கொடுத்திருக்கீங்க.  மீறக் கூடாது” நு சத்தியம் வாங்கிருக்காங்க.

வாத்தியாருக்கு நியூஸ் பறந்தது. அவர் உடனே, அப்பப்போ மூச்சு வாங்கி நிற்கும் தனது ஜெட் மயில் வாகனம் போன்ற வண்டியில் ஸ்டைலாகக் கிளம்பி ஸ்பாட்டுக்கு வந்தார்.
வாத்தியார்: ஏலேய்! கு.வா.க கட்சசிக்காரங்களே!  நீங்க யாராவது உங்க தலைவி சரிதாவப் பாத்துருக்கீங்களாலே? எப்படி நீங்க பாக்கமுடியும்? பாக்காத ஒருத்தர தலைவியா வைச்சு எப்படியா போராட்டம் பண்ணுவீங்க? அதான் உங்கள நான் கோமாளிங்கனு சொன்னது! அந்த சரிதா என் மனசுக்குள்ள இருக்கற நாயகிலே!! அவ எனக்கே எனக்குத்தான்! அவள உங்க யாராலயும் பாக்க முடியாது! நான் அப்படித்தான் எழுதுவேன். கேட்டுக்கங்க தில்லைஅகத்தாரே, நீங்க என்னதான் எனக்கும், சரிதாவுக்கும் இடைல கோள் மூட்டிக் கொடுத்து இந்த மாதிரி பிட் போட்டு எதிர்க்க வைச்சாலும், என் நாயகியப் பத்தியும், அவ குடும்பத்தைப் பத்தியும் இனியும் எழுதுவேன்.  உங்களால நிறுத்த முடியாது! ஆகுற சோலியப் பாருங்கலேய்! அவதான் என் நாயகி! வேற யாரும் கிடையாது!

       இருந்தாலும் கு.வா.க க்கு என் நன்றிகள்! நான் என் சரிதாவின் மைசூர்பாகு உங்களுக்குக் கொண்டு வந்துருக்கேன், இவ்வளவு நேரம் கத்தி, இப்படிப் போராட்டம் பண்ணி, உலகுக்குக் காமிச்சு என் சரிதாவின் டிஆர்பி ரேட்டைக் கூட்டினதுக்கு! போற போக்குல தின்னுட்டுப் போங்கலேய்!

       சரிதாவின் மைசூர்பாகு என்றவுடன், தலைவி என்று கூடப் பாராமல், கூட்டம் பல்பு வாங்கி துண்டைக் காணோம், துணியக் காணோம்னு ஓடி விட்டது!  க்ருஷ்ணா ஸ்வீட் மைசூர்பா ஒரு பிட்டுக் கூடக் காணவில்லை. நண்பர் ஸ்ரீராமிற்கு வருத்தம் மைசூர்பா கிடைக்கவில்லையே என்று! “ழே” என்று முழித்துக் கொண்டிருந்தது சரிதாவின் மைசூர்பாகுகள்!

வாத்தியார் அவர்களின் இந்தப் புத்தகங்களை நீங்கள் எல்லோரும் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். நிச்சயமாகச் சிரித்து, சிரித்துப் புண்ணாகும் உங்கள் வயிறு என்பது கியாரண்டி! அப்படி ஒரு நகைச்சுவை! இப்போது படத்தில் வரும் காமெடி ட்ராக்குகள் எல்லாம் ஒன்றுமே இல்லை! இதற்கு இணையாக!  இதனுடன் சிரித்திரபுரமும் இருக்கின்றது.  அதுவும் சிரிப்புக் கண்ணி வெடிகளைக் கொண்டது! வாசித்துப் பாருங்களேன்! சிரியுங்கள்! கவலைகளை மறந்து, சிரித்துக் கொண்டே இருங்கள்!  நன்றி வாத்தியார் பாலகணேஷ் அவர்களுக்கு.  அருமையான  புத்தகம் தந்ததற்கு!

பின் குறிப்பு:  இது நகைச்சுவைப் பகுதி என்பதால் “நான் இருக்கிறேன் அம்மா” இங்கு பேசப்படவில்லை.  அது பிறிதொரு தருணத்தில்!

சரிதாயணம் சிரிதாயணம் 2 - நான் இருக்கிறேன் அம்மா – ரூ. 70

சரிதாயணம் – சிரித்திரபுரம் ரூ. 60

கிடைக்கும் இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர், வெஸ்ட் –பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்.


      


புதன், 4 பிப்ரவரி, 2015

வெற்றிக்குப் பரிசு வெள்ளிக் கோப்பை!...தோல்விக்குப் பரிசு...டுமீல்!

https://www.youtube.com/watch?v=veYnZ0JzF4I

      “வெற்றிக்குப் பரிசு வெள்ளிக் கோப்பை!...தோல்விக்குப் பரிசு...டுமீல்!” நல்ல நேரம் திரைப்படத்தில் மேஜ சுந்தர்ராஜந்தன் தன் யானை ஓட்டப் பந்தயத்தில், எம்ஜிஆரின் யானையிடம் தோல்வி அடைந்ததால், ஆத்திரமடைந்து, தன் யானையைத் துப்பாக்கியால் சுடும் முன் சொல்லும் வசனம் தான் இது. வெற்றி இனிமையானது. அது ஒரு தனிமனிதனின் உழைப்பால் கிடைத்ததாகக் கூட இருக்கலாம்.  இருந்தாலும், அதைப் பகிர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கானவர்கள் இருப்பார்கள்; எப்பொதும், எந்த இடத்திலும். ஆனால், தோல்வி என்பது கசப்பானது. அதற்குக் காரணமானவர்களாக ஆயிரக் கணக்கானவர்கள் இருந்தாலும், இறுதியில் அதற்கு பலியாடாவது எப்போதும் இது போல் துரதிர்ஷ்டம் பிடித்த ஏதாவது ஒரு ஜீவியாகத்தான் இருக்கும்.

https://www.youtube.com/watch?v=EnRiYirXmJk
Dancing their way to a Guinness record

      கடந்த தினங்களில் நடந்த இரு சம்பவங்கள் இதை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வது நல்லது என்று தோன்றுகின்றது.  கேரளா திருச்சூர் அருகே, இரிங்ஞாலக்குடயிலுள்ள க்ரைஸ்ட் கல்லூரி ஸ்டேடியத்தில் 5,211 பேர் பங்கெடுத்த திருவாதிரை நடனம் நடைபெற்றது. இதற்கு முந்தைய கின்னஸ் சாதனையில் பதிவு செய்யப்பட்டது, மும்பையில் 3,640 பேர் அடங்கிய குழு நடத்திய திருவாதிரை நடனம். கின்னஸ் சாதனையை உறுதிப்படுத்த லண்டனிலிருந்து பரிசோதகரான ஃபார்ச்சுனா பர்கும் இதைக் கண்காணிக்க இரிங்ஞாலக்குடாவுக்கு வந்திருந்தார். ஏறத்தாழ 17 நிமிடங்கள் நடை பெற்ற திருவாதிரைக் களியை கண்டு களித்த ½ மணி நேரத்திற்குள் ஃபார்ச்சுனா, இரிங்ஞாலக்குடா திருவாதிரை நடனம் கின்னஸ் சாதனையானதாக அறிவித்தார்.  அவ் வெற்றி நடனமாடிய 5,211 பேரது வெற்றியோ, அதற்கான ஏற்பாடுகள் மற்றும் தேவையான உதவிகள் செய்த ஆயிரக் கணக்கானவர்களது வெற்றியோ மட்டுமல்ல, இரிங்ஞாலக்குடை எனும் இடத்தில் வசிக்கும் எல்லோரது வெற்றியாகவே கருதப்படுகிறது. 

இது போல் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள எல்லோரும் வருவது போல், தோல்விகள் ஏற்படும் போது எவரும் வருவதில்லை. அதற்குக் காரணமான ஒவ்வொருவரும், தோல்வியை மற்றவர்களின் தலையில் வைத்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் முயல்வார்கள். அப்படி இறுதியில் ஒருவர் அதற்கான பொறுப்பேற்று (பொறுப்பேற்காவிட்டால் எல்லோரும் அவர் தலையில் தவறைக் கட்டி வைத்து) தண்டனையை ஏற்று மற்றவர்களைக் காப்பாற்றுவதுதான் வழக்கம். 

     

    27 வருடங்களுக்குப் பிறகு, கேரளாவில் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவிற்கு ஏ.ஆர். ரஹ்மானின் நிகழ்ச்சியை ஏறத்தாழ 5 ½ கோடி செலவழித்து நடத்த முயன்றும், அது நடக்காமல் போனதால் “லாலிசம்” எனும் ஒரு பாடல் மற்றும் ஆடல் குழுவை உருவாக்கி அதை அறிமுகப்படுத்த தக்க சமயம் வரக் காத்திருந்த, பாரத் மோஹன்லாலிடம் சென்று, அதை தேசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் ஏன் உட்படுத்தக் கூடாது என்று கேட்டு வற்புறுத்தி அவரை சம்மதிக்க வைத்திருக்கின்றார்கள். அப்படிச் சம்மதிக்க வைத்தவர்களில் கேரளா முதல்வர் உம்மன் சாண்டியும், விளையாட்டுத்துறை அமைச்சர் திருவஞ்சியூர் ராதாக்கிருஷ்ணனும், கமிட்டி சேர்மன் ஆன இயக்குனர் பிரியதர்ஷனைப் போன்றவர்களும் இருந்தார்கள் தான்.


“லாலிசத்தில்” உட்படுத்தவிருக்கும் எல்லா நிகழ்ச்சிகளையும் தொடக்கவிழாவில் உட்படுத்த முடியாது என்றும், அவற்றில் சிலவற்றையும், அதனுடன் போர்ச்சுகீசியர்களை எதிர்த்துப் போராடிய குஞ்ஞாலி மரைக்கார் பற்றிய “ஷோ” வை உட்படுத்துகிறேன் என்றும் சொன்ன மோஹன் லால், தனக்கு அதற்காகப் பணம் ஏதும் வேண்டாம், ஆனால், மற்ற கலைஞர்களுக்கும், ஒலி, ஒளி அமைப்பிற்கும் தேவையான செலவுக்கான பணம் மட்டும் போதும் என்றும் சொல்லி இருக்கிறார். ஹரிஹரன், உதித் நாராயணன் போன்ற பாடகர்கள் பங்கெடுத்தும், மோஹன் லாலுடன் “லாலிசத்தின்” இயக்குநரான ரத்திஷ் வேகாவும், நூற்றுக் கணக்கானக் கலைஞர்களும் பல நாட்கள் பயிற்சிகள் நடத்தி, வேர்வை சிந்தி, உழைத்து உயிர் கொடுத்த அந்நிகழ்ச்சி ஆரம்பித்த ½ மணி நேரத்திற்குள், “தரக்குறைவானது” லாலிசம், லொலிசம் ஆகியது என ஊடகங்கள் வாயிலாக எல்லோரும் அறிய நேர்ந்தது. 

நல்ல நிகழ்ச்சிகள் என்பதை எல்லோரும் மெதுவாகத்தான் பரப்ப முயல்வார்கள்.  ஆனால், மோசமான நிகழ்ச்சி என்றால், உண்ணாமல், உறங்காமல் அதைப் பரப்ப எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு முயல்வது இயல்புதானே.  அப்படி லாலிசம் பாழிசம் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. விளைவோ, நிகழ்ச்சி முடிந்த உடனேயே, “இவ்வளவு மோசமான ஒரு நிகழ்ச்சியை, கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து தொடக்க விழாவில் உட்படுத்தியதின் பின் ஊழல் நடந்திருக்கிறது” என்று எதிர்க்கட்சியினர் கூச்சல் போட, அதைக் காங்கிரஸ்காரர்களான முரளிதரன், பந்தளம் சுதாகரன் போன்றோர் ஆமோதிப்பது போல் பேசவும் தொடங்கிவிட்டார்கள்.  கல்யாண சமயலிடையே உணவை கிளறிக் கொண்டிருந்த அகப்பை உடைந்து உண்டானப் பிரச்சினையால் கல்யாணமே நின்று போன கதை போல் லாலிசத்தால் தேசிய விளையாட்டுப் போட்டியே நின்று விடுமோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. ஒவ்வொருவராக “இதற்குப் பொறுப்பு நானல்ல” என்று கை கழுவத் தொடங்கிவிட்டார்கள்.

பாவம், மோஹன்லால் எனும் மனிதர்!. அதிகம் விவாதங்களில் படாமல், அதிகம் பேசாமல், தானுண்டு, தன் நடிப்புண்டு என்று இருப்பவர்.  எல்லோரது ஏளனத்தையும் கேட்டு வருந்திய அவர் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.  நிகழ்ச்சிக்குச் செலவான தொகை ஒரு கோடி 63 லட்சத்து 77 ஆயிரத்து 600 ரூபாயையும் தான் திரும்பத் தந்து விடுவதாகவும், இனி இதைப் பற்றிய விவாதம் வேண்டாம் என்றும் சொல்லியிருக்கின்றார்.  விளையாட்டுத் துறை அமைச்சரான திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பியக் கடிதத்தில் “கடந்த 3 வாரங்களாக இரவும் பகலும், இன் நிகழ்ச்சிக்காக செலவழித்த என் உழைப்பையும், அர்ப்பணிபையும் உதாசீனப்படுத்துபவர்கள் மற்றும் அரசின் பணத்தை அபகரித்துவிட்டேன் என என் மீது குற்றம் சாட்டுபவர்களிடம் எனக்குக் கோபமோ, விரோதமோ இல்லை. ஆனால், இது போன்று என் மீது அன்பு பொழிந்து என்னை நானாக்கிய என் அன்பார்ந்த ரசிகர்கள் மற்றும் என் நலன் விரும்பிகளுக்கு, என் மேல் சின்ன சந்தேகத்தின் நிழல் கூட படக் கூடாது என்பதற்காகவே நான் இப்பணத்தை திருப்பிக் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன்.  ஒரு நடிகன் எனும் நிலையில் மட்டும் கடந்த 36 வருடங்களாக எல்லோரது அன்பிற்கும் பாத்திரமாகி, இந்நிலைக்கு வந்த என்னை, இனிமேலாவது இவ்விவாதத்திலிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும்.”  என்றுக் குறிப்பிட்டுருக்கின்றார்.


      பணம் பாராமல் சமயோஜிதமாக மோஹன்லால் எடுத்த இத் தீர்மானம் எல்லாவகையிலும்  மிகச் சிறந்த தீர்மானமேதான். பணமேதான் பிரச்சினை என்றால், “இதோ பணம்! என்னை விடுங்கள்,” என்று சொல்லி, தன் தனித் தன்மையை சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் காண்பித்து அதை நிரூபித்திருக்கிறார். அப்படித் தன் தோல்வியை, படு தோல்வியாக மாற்ற முயற்சிப்பவர்களது செயல்களை முறியடித்து அதை தன்மானமும், சமயோஜித புத்தியுமுள்ள ஒரு மனிதனின் வெற்றியாக மாற்றியிருக்கிறார் லெஃப்டினன்ட் கர்னல் மோஹன்லால்.

படங்கள்: இணையம் : காணொளிகள் : யூட்யூப் 

திங்கள், 2 பிப்ரவரி, 2015

மகிழ்ச்சி, த்ரில்லர், ஆக்ஷன், சென்டிமென்ட் - காணத் தவறாதீர்கள்

இரண்டரை/மூன்று மணி நேரம் படம் எடுக்கும் நம் இயக்குனர்கள் கூட இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. நம் படங்களில் அத்தனை மணி நேரங்களில் காட்டும், ஆக்ஷன், த்ரில்லர், மகிழ்ச்சி, செண்டிமென்ட் எல்லாம் 3 நிமிடம் 27 செகண்டில் சாத்தியமா?  என்றால் சாத்தியமே!  அதுவும் நடிக்கத் தெரியாதவர்களின் மூலம்!  இயற்கையில் சாத்தியமே! இயற்கையை விஞ்ச மனிதனால் முடியாது என்பது நிரூபிக்கப்படுகின்றது.

இது போன்று ஒரு மகிழ்ச்சி, ஆக்ஷன், திரில்லர், சென்டிமென்ட் நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? அருமையான ஒரு குறும்படம் போன்ற, உணர்வு  பூர்வமான ஆக்ஷனுடன் கூடிய த்ரில்லர்...உங்கள் மனது கண்டிப்பாக நினைக்கும், ஐயோ எப்படியாவது அந்தக் கரடிக் குட்டி தப்பிவிட வேண்டும் என்று. திரைக்கதை எழுதப்படாத, இந்த ஆக்ஷனும், த்ரில்லரும் இயற்கையான ஒன்று.  நடிப்பு இல்லாத ஒன்று.  எந்த ஒரு இயக்குனரும் இயக்க முடியாத ஒன்று. கதை, க்ளமாக்ஸ் என்ன என்று தெரிந்து கொள்ள நீங்களும் ஆவலோடு இருக்கின்றீர்கள்தானே! பாருங்களேன்.  உங்களுக்கே தெரியும் நாங்கள் சொல்லியிருப்பது மிகையல்ல என்று!  உங்கள் மேலான விமர்சனங்கள்..!!!?


ஒரு வேளை காணொளி திறக்கவில்லை என்றால் அதன் லிங்க் இதோhttps://www.youtube.com/watch?v=NpI3g0xHBa8 


மற்றொன்று நாங்கள் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.  மிகவும் பிரபலமான பதிவர் சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்கள் பகிர்ந்துள்ள இந்தப் பதிவைப் பாருங்கள்.  மிக மிக உபயோகமான ஒன்று...

ஏமாறாதீங்க… இது உங்க பணம்!


https://ranjaninarayanan.wordpress.com/ 


காணொளி : இணையம்