புதன், 5 பிப்ரவரி, 2014

குரு தட்சிணை





     திருச்சூர் பேருந்து நிலையம். குமரேசன், உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் தன் ஊராகிய சேலம் செல்வதRkuற்காக, பஸ்ஸிற்குக் காத்துக் கொண்டிருந்தார். ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர். ஒடிசலான தேகம். ஓய்வு பெற்ற ஆசிரியருக்கான எல்லா அடையாளங்களும் இருந்தன. கல்யாணம் செய்ய வேண்டிய வயதில் இரு பெண்கள் இருப்பதை அவர் நெற்றியில் இருந்த கவலை ரேகைகள் ஜோசியம் சொல்லியது. காத்திருந்ததில் கால்கள் வலிக்கத் தொடங்கவே உட்கார இடம் தேடினார். தமிழ் தெரிந்த முகம் ஏதாவது தென்படுகிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். சுற்றிலும் மலையாளக் குரல்கள்தான்!  மலையாள மாதம் மகரம் (தை மாதம்) தொடங்கி சபரி மலை மகர விளக்கு முடிந்த பின்னும் கூட, சற்று தூரத்தில் ஒரு டீக்கடையில், தாஸேட்டன் தனது இனிமையான குரலில், மகர விளக்கிற்கு ஐயப்பனை விளித்துக் கொண்டிருந்தார்.  அடுத்த கோவை பஸ் எத்தனை மணிக்கு என்று, குமரேசன் அருகிலிருந்த மலயாளச் சேட்டனிடம் கேட்டார்.


 “9.30 மணிக்காணு” என்ற பதில் வந்தது. 8 மணிதான் ஆகியிருந்தது. இன்னும் 1 ½ மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பஸ்ஸும் பேருந்து நிலையத்திற்குள் வரும் போதும், அது செல்லும் இடம், புறப்படும் நேரம் எல்லாம் நேர்த்தியாக, நல்ல குரல் வளம் உடைய ஒருவர் பேருந்து நிலைய டைம் கீப்பர் அறையிலிருந்து, ஒலிபெருக்கியில் அறியிச்சுக் (அறிவித்துக்) கொண்டிருந்தார். எல்லா மலையாளிகளின் குரலும் இனிமையாக இருக்குமோ? தாஸேட்டனின் குரல் போன்றே! அவர் நின்றிருந்த இடத்திற்கு எதிர்த்தாற் போல இருந்த சுவரில்  கேரள நாட்டிளம் பெண் லக்ஷ்மி மேனன் அழகாய் கொஞ்சி சிரித்துக் கொண்டிருந்தார் விஷாலுடன். மலையாளத்துக் குட்டிகளுக்கு தமிழ் நாட்டில் காற்று அடிக்கின்றது!  மலையாள நாட்டில் இப்போது தமிழ் படங்களின் வருகை அதிகம் போலும்!


இவ்வாறான எண்ண ஓட்டத்தில் இருந்த குமரேசனுக்கு வயிறு கொஞ்சியது! கெஞ்சியது! அருகிலிருந்த சிற்றுண்டிக் கடைக்குச் சென்று சாப்பிடலாம் என்றால், இந்த வயதான காலத்தில் சாப்பிட்டாலும் தொந்தரவு, சாப்பிடாவிட்டாலும் தொந்தரவுதான்.  மாத்திரை சாப்பிட வேண்டும் என்று இரண்டு இட்லிகள் சாப்பிட்டு வயிற்றின் கெஞ்சலை அடக்கினார்.  தேங்காய் எண்ணையில் செய்த கேரள சிப்ஸ் கண்ணில் படவும், வீட்டிற்கு வாங்கலாம் என்று நினைத்த போது அடுத்த உபாதை.  கழிவறை எங்கே என்று தேடி, விசாரித்து இயற்கை அழைப்பை முடித்துக் கொண்டு திரும்பும் சமயம், திரும்பவும் அந்த சிப்ஸ் கடை கண்ணில் படவும், மணி 9.30 ஆக இன்னும் 10 நிமிடங்களே உள்ளது என்று கைக்கடிகாரத்தில் பார்த்ததும், தான் நின்று கொண்டிருந்த இடத்திற்கே விரைந்தார். திடீரென்று, அருகில் தமிழ் குரல்.

“ஸார் என்னை நினைவுருக்கா சார்?  சீனிவாசன். 10 வருஷத்துக்கு முன்னாடி, 12 ஆம் வகுபில் நீங்கள் எங்களுக்கு ஆங்கிலம் எடுத்தீர்கள்! 

வயதானதால் கண்ணில் சற்று மங்கல். கண்ணைக் கசக்கிக் கொண்டு அவனை உற்றுப் பார்த்து, மூளையைக் கசக்கிக் கொண்டு நெற்றியில் தேய்த்துக் கொண்டார்.

“ம்ம்ம்ம்ம்ம்....எந்த பாட்ச்?

“சார்... 2003 ஆம் பாட்ச்.” ஆங்கிலம் கற்று நன்றாகப் பேச வேண்டும் என்று எங்களுக்கு எவ்வளவோ அறிவுரை சொன்னீங்க! அப்ப கேக்கலை...இப்ப.....என்னோட வாழ்க்கை எப்படியோ போயிடுச்சு. ஒருதடவ வகுப்புல ஒவ்வொருத்தரா எழுந்து நின்னு எங்களுக்குள்ள ஆங்கிலத்துல உரையாடல் பயிற்சி கொடுத்த போது, நான் தப்பா பேசினேன்னு வகுப்பே சிரிச்சிச்சு.  நீங்க அவங்களைத் திட்டினீங்க, அந்த மாதிரி சிரிக்கக் கூடாது, அது கேலி செய்யற வகுப்பு இல்ல, கற்பதற்கான வகுப்பு.  தவறு யார் வேணாலும் செய்ய வாய்ப்புண்டு.  திருத்திக்கறதுதான் விவேகமான வாழ்க்கை...அப்படினு எனக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடக் கூடாதுனு அவங்கள எல்லாம் திட்டினீங்க சார்..”

“இப்ப நினைவுக்கு வருதுப்பா....தப்பா உச்சரிப்பு செய்து.......... இவ்வளவு நினைவு வைச்சுருக்கியாப்பா.....ரொம்பவே சந்தோஷமா இருக்கு....”

“அதேதான் சார்.  உங்கள மாதிரி ஒரு நல்ல மனசுள்ள ஆசிரியரை எல்லாம் பார்க்கவே முடியாது சார்.  எங்களை நல்வழிப்படுத்தவும், ஆங்கிலத்துல பேசணும்னும் எவ்வளவோ முயற்சி எடுத்தீங்க சார்.  உங்களை மறக்கவே முடியாது............சார், நீங்க எப்படி இந்தப் பக்கம்?”

“சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணம்பா.  ஆமாம் நீ என்னப்பா செய்யற? இங்கே?”

“சார் நீங்க சொன்ன அட்வைஸ் எல்லாம் கேக்காம போனதால அப்புறம் படிப்பைத் தொடர முடியல. ஏதேதோ வேலை பார்த்து இப்ப இங்க சிப்ஸ் கடை போட்டுருக்கேன் சார்.  பக்கத்துல சின்ன ரூம் எடுத்து தங்கியிருக்கேன் சார். குடும்பம் அங்க தமிழ் நாட்டுலதான்.  கோயபுத்தூர்ல...........சார், நான் இதோ ஒரு 5 நிமிஷத்துல வந்திடறேன் சார்”  என்று சொல்லிவிட்டு சிப்ஸ் பாக்கெட் எடுத்து வர ஓடினான்.


அதற்குள் கோவை செல்லும் பஸ் வந்து விட குமரேசன் ஓடினார்.  கூட்டம் நெருக்கித் தள்ளியது.  பையை வைத்துக் கொண்டு ஏற முயன்ற போது ஷர்ட் பாக்கெட்டை பின்புறமிருந்து ஒரு கை தொட்டு பர்ஸை அப்பேஸ் பண்ணியது. கத்திப் பயனில்லை.  எல்லோரும் ஏறி சீட் பிடிப்பதில் மும்முரமாக இருந்தனர். யாருக்கும் அருகில் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கும் எண்ணமும் இல்லை.  குமரேசன், பையைக் கீழே வைத்து விட்டு ஓடுவதா இல்லை பையைத் தூக்கிக் கொண்டு ஓடுவதா என்று குழம்பிவிட்டு பையோடு அவன் பின்னால் துரத்திக் கொண்டு ஓடினார்.  அங்கிருந்தவர்களில் சிலர்,


“சாரே அவண்ட கையில் ப்ளேடு காணும் .  கீறிக் களையும், அடுத்துப் போகிலது” என்றும் எச்சரித்தனரே தவிர யாரும் உதவுவதாக இல்லை. இருட்டில் அவன் ஓடியே போய் விட்டான்.   கையில் காசில்லை! டிக்கெட் எடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். திரும்பவும் திருமண வீட்டிற்கே ஒரு ஆட்டோவில் சென்று விஷயம் சொல்லி உதவி கேட்கலமா, அது சரியா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம்....

அப்போது சிப்ஸ் பாக்கெட்டுகளுடன் அங்கு வந்த சீனிவாசன், அவர் கையில் சிப்ஸ் பாக்கெட்டுகளைக் கொடுத்து விட்டு, விஷயம் அறிந்தவுடன்,

“என்ன சார், நடந்தது நடந்து விட்ட்து, இங்கு இப்படித்தன் பல சமயங்களில் நடக்கும்.  நான் தான் இருக்கேனே சார், உங்களுக்கு உதவ...தயங்காதீங்க சார், நீங்க எனக்கு என் அப்பாவைப் போல சார்...”


  அவரை மெதுவாக பஸ்ஸில் ஏற்றி, சீட்டில் அமர வைத்து ரூ. 500 ம் அவர் கையில் கொடுத்தான்.  குமரேசன் கண்களில் கண்ணீர் தளும்பியது!

“இந்த இக்கட்டான சமயத்துல ஆபத்பாந்தவனா, தெய்வம் மாதிரி வந்து உதவியிருக்கப்பா! ஆசிரியரை அந்த நிமிஷமே மறந்து போற இந்தக் காலத்துல, வருஷம் ஆகியும், என்னையும் மறக்காம ...அதுவும் உதவி வேற செய்யற.......நா ஒருபோதும் மறக்க மாட்டேன்! ரொம்ப நன்றிப்பா!.  நான் வீடு திரும்பியதும் உனக்கு நான் இந்தப் பணத்தை அனுப்பித் தரேன்.   கண்டிப்பா எங்க வீட்டுக்கு உன் குடும்பத்தை கூட்டிட்டு வரணும்.”

“என்ன சார் இதுக்கு போயி இப்படி பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க. எனக்கு நீங்க பணத்தைத் திரும்பி எல்லாம் தர வேண்டாம் சார்.  என்னை உங்க மகனா நினைச்சுக்குங்க!  நீங்க எங்களுக்குச் செய்ததை விடவா சார்?  நீங்க எங்களை எல்லாம் நல்லவர்க்ளாக இருக்க வேண்டி சொன்ன வார்த்தைகள், அறிவுரைகள் எல்லாம் தான், நான் இப்ப வாழும் வாழ்க்கையைத் தந்திச்சு சார்.   இது ஒரு சின்ன குரு தட்சிணைனு நினைச்சுக்கங்க! கண்டிப்பா நானும் என் குடும்பத்தோட உங்க வீட்டுக்கு வருவேன். எங்க வீட்டுக்கு நீங்களும் வரணும் சார்.  பஸ் புறப்படப் போகுது.........சார், உடம்ப பாத்துக்கங்க.  இதுதான் என் மொபைல் நம்பர் சார்.   என்ன உதவி வேணும்னாலும் என்னைக் கூப்பிடுங்க.  நான் வரேன் சார்”


தான் ஆசிரியராக இருந்ததற்கு மிகவும் பெருமை அடைந்தார். சந்தோஷமடைந்தார். படிப்பு சரியாக இல்லாமல் போனாலும் நல்ல மனிதனாக வாழும் சீனிவாசனை நினைத்து சந்தோஷமும், பெருமையும் அடைந்தார்.  என்றோ தான் சொன்ன சிறு அறிவரைகள் ஒரு மாணவனை, நல்ல மனிதனாக மாற்றியிருப்பதும், இப்போது அதே மாணவன் இந்த இக்கட்டான நிலைமையில் தன் அறிவுரையை நினைவு கூர்ந்து, குரு தட்சிணை என்ற பெயரில் உதவியதையும் நினைத்து மிகவும் மகிழ்வுற்றார். அவனுக்காக இறைவனிடம் வேண்டி, மனதில் வாழ்த்தினார்!  பஸ்ஸும் ஒரு நல்ல ஆசிரியரைச் சுமந்து புறப்பட்டது.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

குடியைக் கெடுக்கும் குடி, குழந்தைகளின் உயிரையும் பறிக்கத் தொடங்கிவிட்டது.


     கடந்தவாரம் கொல்லம் அருகே 8 வயது சிறுவன் தன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மதுவை, அமிதமாக அருந்தி இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியிலிருந்து மீளும் முன் மீண்டும் ஒரு பேரிடி.  


திருச்சூர் அருகே உள்ள இடக்களத்தூரில் ஒருவாரம் முன்பு தன் வீட்டருகே உள்ள காலியிடத்தில் விளையாடப் போன 6 வயது சிறுவன், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்ட மது பாட்டிலில், மீதமிருந்த மதுவைக் குடித்து மயங்கி விழ, நீண்ட நேரம் மகனைக் காணாது தேடிவந்த தாய், மது பாட்டில் அருகே மயங்கிக் கிடந்த அவனை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று எப்படியோ அவனது உயிரைக் காப்பாற்றி விட்டார் என்ற செய்தி, இடி விழுந்தவன் காலில் பாம்பு கடித்து கதை போல் மனதை நிம்மதி இழக்கச் செய்துவிட்டது.  திருச்சூர் பையன் வேறு எங்கேனும் மது பாட்டில் இருக்கிறதா என்று தேடிய போது அவனை ஒரு பாம்பும் கடித்திருந்ததாம்.  எப்படியோ எட்டு வயது சிறுவன் குடித்த அளவுக்கு மது குடிக்காததாலும், பாம்பு கடித்ததற்கான சிகிச்சை மருத்துவமனையில் தாமதமின்றிக் கொடுக்கப்பட்டதாலும், அந்த 6 வயது சிறுவன் உயிர் பிழைத்தான் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.


     தனக்கு வந்திருக்கும் நோய் குணமாகக் கசப்பான மாத்திரைகளைச் சாப்பிடவோ, மருந்தைக் குடிக்கவோ மறுக்கும் வயதில் இப்படிக் குடிக்கச் சிரமமுள்ள திரவத்தை எப்படிச் சிறுவர்களால் குடிக்க முடிகிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பெரியவர்கள் குடிக்கிறார்களே?! இதில் ஏதேனும் சுகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, ஆர்வம் அந்தக் குழந்தைகளுக்கு வர வேண்டும் எனில், அவர்கள் குடிப்பவர்களையும், குடித்தபின் அவர்கள் பேசுவதையும் செய்வதையும் (திரைப்படங்களில் மது அருந்துவது உடலுக்குக் கேடு என்று எழுதிக் காண்பித்தபின் கதாநாயகர்களும், வில்லன்களும் குடிப்பதையும், அதன் பின் அவர்கள் போடும் ஆட்டத்தையும் எத்தனை ஆங்கிளில், அருமையான ஷாட்டுகளில் கச்சிதமான இசையுடன் காண்பிப்பது போதுமே!) நுணுக்கமாகக் கவனித்து அதிலுள்ள சுகத்தை அறிந்தே தீர வேண்டும் என்ற அடங்காத ஆசை அவர்களுக்கு ஏற்படுவதுதான் காரணமாக இருக்க வேண்டும்.  






குழந்தைகள் வீட்டிலுள்ள, அக்கம்பக்கத்திலுள்ள பெரியவர்கள் செய்வதை, எப்போதும் அது போல் செய்து பார்ப்பதில் ஆர்வமுடையவர்கள். அப்பாவின்/அம்மாவின், தாத்தாவின்/பாட்டியின் கண்ணாடியை மாட்டி நடப்பது, அவர்களைப் போல் பேசுவது, இப்படி எல்லாம் செய்வது போல், அவர்கள் தன் வீட்டிலோ, அடுத்த வீட்டிலோ, டி.வி.யிலோ, குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவற்றைக் காண நேர்ந்தால் அதை நிச்சயமாகச் செய்து பார்க்க வேண்டுமென்ற ஆர்வம், ஆசை பெரும்பான்மையான குழந்தைகளுக்கு வரத்தான் செய்யும்.


இது போலத்தான், திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் காண்பிக்கப்படும் வன்முறைக்காட்சிகளும், ஆபாசக் காட்சிகளும். அவற்றை எல்லாம் ஓரளவாவது அவர்கள் பார்க்காமல் இருக்கக் கூடியச் சூழல்களை-உதாரணமாக கலைகளை வளர்க்கும் வகுப்புகள், விளையாட்டு, பெர்சானலிட்டி வளர்ப்பது-பெற்றோர்கள் குறைந்தபட்சம், அவரவர் வீடுகளிலாவது கடைபிடிக்க வேண்டும். 

அதுமட்டுமல்ல, உடலையும், மனதையும் பாதிக்கும் அவற்றை, குழந்தைகள் பார்க்காமல் இருக்க உதவும் மனக் கட்டுப்பாட்டை அவர்களுக்கு உருவாகும் விதத்தில், அவர்களுக்குப் புரியும் விதத்தில் அன்பாகச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.  “அதற்கெல்லாம் எனக்கு/எங்களுக்கு நேரமில்லை” என்ற காரணமெல்லாம், வாதமெல்லாம் வேண்டாம். குழந்தைகள் நம்மவர்கள். அவர்களின் நன்மைக்காக நாம் எப்படியாவது நேரம் ஒதுக்கி (இங்கு குழந்தைகளின் மூடுக்குத்தான் முக்கியத்துவம்.  அவர்கள் நாம் சொல்வதை ஆர்வத்துடன் கேட்கக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும்) அவர்களை நல்வழிப்படுத்த முயல வேண்டும்.  அப்போதுதான் இது போன்ற விபரீத சம்பவங்களைத் தவிர்க்க முடியும். அது நாம் அவர்களுக்குச் செய்யும் கடமையோ, உதவியோ மட்டுமல்ல, நம் அமைதியான, மகிழ்ச்சியான பிற்கால வாழ்க்கைக்கு இடையூறு நேராது இருக்க எடுக்கும் தற்காப்பு நடவடிக்கையும் கூட!.

திங்கள், 3 பிப்ரவரி, 2014

கேரளத்தில் கம்யூனிஸத்திற்கு கால் இடறுகிறதா?


     கடந்த 28.01.2014 அன்று T.P. சந்திரசேகரனின் கொலை வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்ட்து.  அரசியல் காரணமாகத்தான் T.P. சந்திரசேகரன் கொல்லப்பட்டார் என்றும், அரசியல் விரோதிகளும் அவர்களுக்கு உடந்தையான கொலையாளிகளும் தான் நடந்தக் கொலைக்கு உத்தரவாதிகல் என்றும், ரகசியப் பேச்சு வார்த்தை நட்த்திய 3 CPI (M) கட்சி உறுப்பினர்களுக்கும், 7 கொலையாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட்து.  2012, மே 4 ஆம் தேதி, உடலில் 51 வெட்டுக் காயங்களுடன், T.P. சந்திரசேகரன் மரணமடைந்த சம்பவம் கேரளத்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்று.  கோழிக்கோடு, வடகரை அருகே, ஒஞ்சியம் பஞ்சாயத்து தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸக் கட்சிக்கு ஏற்பட்ட்த் தோல்வி, மார்க்ஸிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து தொடங்கிய RMP (Revolutionary Marxist Party) கட்சித் தொண்டர்களுக்கும், CPI (M) தொண்டர்களுக்கும் இடையே பல முறை ஏற்பட்ட மோதல்களும், வடகரையில் கிடைக்க வேண்டியிருந்த பாராளுமன்றத் தொகுதி CPI (M)  க்கு கிடைக்காமல் போனதற்கு T.P. தான் காரணம் என்பதும், கொலைக்குப் பின்னிலுள்ளக் காரங்களாகக் கருதப்படுகின்றன.


     T.P. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மிகவும் நேர்மையான, திறமை மிக்கத் தலைவராக நீண்டகாலம் தொண்டாற்றியவர்.  கட்சியில் அவருக்கும், கட்சியின் மேல் தட்டு தலைவர்களுக்கும் இடையே உண்டான கருத்து வேறுபாடுகளும்,

V.S. அச்சுதானந்தன்



அவர், V.S. அச்சுதானந்தனின் ஆதரவாளர் என்பதும், அவரைக் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய ஒரு சூழல் உண்டாக்கியது.  மார்க்ஸிஸ்ட் கட்சியிலிருந்து, முன்பும் இது போல் பல தலைவர்கள், பல காரணங்களுக்காக வெளியேறவோ, வெளியேற்ப்படவோ வேண்டியச் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

கே.ஆர். கௌரி அம்மா




எம்.வி.ராகவன்

திருமதி கே.ஆர். கௌரி அம்மாவும், திரு. எம்.வி. ராகவனும், மார்க்ஸிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி சொந்தமாகக் கட்சி ஆரம்பித்து, காங்கிரஸ் கூட்டணியுடன் சேர்ந்து அமைச்சர்களாகவும் ஆகியிருக்கின்றார்கள். அதுபோல், அப்துல்லாக் குட்டியும், செல்லராஜுவும் மார்க்ஸிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்து, தேர்தலில் வெற்றியும் பெற்ரு, காங்கிரகாரகளாகவும்,  மஞ்சளாம்குழி அலி என்பவர் மார்க்ஸிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி முஸ்லிம் லீக்கில் சேர்ந்து தேர்தலில் வெற்றியும் பெற்று, இப்போது அமைசராகவும் இருக்கிறார்.


T.P. அப்படியெல்லாம் செய்யாமல் தனியே கட்சி ஆரம்பித்து, அவர் பின்னில் மார்க்ஸிஸ்ட் தொண்டர்கள் அணிவகுத்தும், மேடைப் பேச்சுக்களில் அஞ்சா நெஞ்சம் படைத்த அவர் வெளிப்படுத்திய பல விஷயங்களும், மார்க்ஸிஸ்ட் கட்சிக்கும், கட்சியின் வட்ட, மற்றும் மாவட்டத் தலவர்களுக்கும் வேதனையையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம்.  அவர்களுக்கு T.P. ஒரு தீராத தலைவலியாக மாறியே விட்டார்.  அவருடைய புதிய கட்சியும், அதற்கு கிடைக்கும் ஆதரவும், அது போல் மாநிலத்தின் பலபாகங்களிலும் வி.எஸ். அச்சுதானந்தனின் ஆதரவாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பலதும் நஷ்டமாவதைக் கண்டு, கொந்தளித்த பலரும் கட்சித் தலைமைக்கு,  T.P. யைப் போல் எதிர் குரல் கொடுக்கத் தொடங்கியதும், பெரும் பிரச்சினையாக ஆனது.  ஷோர்னூரில் முரளி, T.P. போல் கட்சிக்கு எதிரே தெர்தலில் தன் ஆதரவாளர்களை நிறுத்தி வெற்றியும் பெற்று விட்டார்.  பாலக்காடு முண்டூரில் கோகுல்தாசன் எதிர்குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.  விளைவோ, கட்சியின் எதிர் அபிப்ராயம் சொல்லும் தொண்டர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமயத்தை வீணாக்குவதை விட, அதிரடி நடவடிக்கை எடுக்க கட்சி செயலாளர் பினராயி விஜயன் தீர்மானித்தார். 
T.P. குடும்பம்

ஸ்டாலினைப் போல் மார்க்ஸிஸ்ட் கட்சியை கட்டிக் காக்க முகம் பாராது எந்தவிதக் கடினமான நடவைக்கையும் எடுக்கத் தயங்காத அவர் கட்சித் தலைமையை எதிர்ப்பவர்க்கு எதிரே, பதவிப் பறிப்பு, சஸ்பெண்ட் போன்ற நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டார்.  இதற்கிடையில், T.P. மார்க்ஸிஸ்ட் கட்சிக்கு ஒரு பெரும் பிரச்சினையும் ஆகிவிட்டார்.  தொழிலாளர் நலம், சமத்துவம், சமூக நன்மை, போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்ஸிஸ்ட் கட்சி, கேரளத்தில் கல்வி, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு முக்கிய பங்கு வகித்த மார்க்ஸிஸ்ட் கட்சி, இந்தியாவில் முதன் முறையாக உழுதவனுக்கு நிலமும், உரிமையுடன் வாழும் வீடும், நிலக் கிழார்களிடமிருந்து ஏழைகளுக்குப் பெற்றுத் தந்த கட்சி, சாதிமதம் பேதம் பாராது கொடுமைக்காரர்களான நிலக் கிழார்களையும், சாதிமத வெறியர்களையும் ஆயுதமேந்தி அழித்த மார்க்ஸிஸ்ட் கட்சி தான், கட்சியைவிட்டு வெளியேறும் முன்பு வரை மார்ஸிஸ்ட் கட்சிக்காக அயராது பாடுபட்ட, கம்யூனிஸத்தைத் தன் உயிருக்கும் மேலாக நேசித்த, பெரும்பான்மையானோரின் அன்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமான, மஞ்சேஸ்வரம் முதல் பாரசாலை வரையுள்ள மலையாளிகளால், “முதுகெலும்புள்ள நல்ல நேர்மையான ஒரு அரசியல்வாதி” என்று பாராட்டப்பட்ட ஒரு நல்ல கணவனும், தந்தையும், மகனுமாய் குடும்பத்தினருக்கு அன்பும், பாசமும் காட்டி வாழ்ந்து வந்த T.P. எனும் கம்யூனிஸ்டை, ஏசுநாதரை சிலுவையில் ஏற்றப் போகும் போது, தனக்கு இதில் பங்கில்லை என்று கை கழுவிய மன்னனைப் போல் வட்டம் அம்ற்றும் மாவட்டக் கட்சித் தலைமைப்  பொறுப்பிலுள்ள சிலர், T.P. யை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற போது, கட்சித் தலைமை தன் கைகளைக் கழுவி, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டதோ என்ற சந்தேகம் கேரளத்திலுள்ள  மனசாட்சி உள்ள மக்களுக்கு வரத்தான் செய்யும்,  போதாதற்கு, தீர்ப்புக்குப் பின் குற்றவாளிகளைக் கண்ணூர் மத்திய சிறைச் சாலிக்குக் கொண்டு போன வாகனங்களின் பின்னே, “செங்கொடியுடன்” ஒரு வாகனம் அவர்களைப் பின் தொடர்வதையும், கடந்த தினம், திரு. கொடியேரி பாலகிருஷ்ணன், சிறைச்சாலைக்குச் சென்றுக் குற்றவாளிகளைக் கண்டதும், கண்டதற்கானக் காரணங்களை விவரித்ததையும் சானல்கள் வழியாக ஏராளமானவர்கள் பார்க்கவும் செய்தபின்.

கேரளத்தில், கட்சிகள் மத அடிப்படையில் உருவாக்கப்படவில்லை என்று சொன்னாலும், முஸ்லிம் மற்றும் கிறித்தவ மதத்தினரின் ஓட்டுக்களால் உயிர் வாழும் கட்சிகளான முஸ்லிம்லீக் மற்றும் கேரளா காங்கிரஸ்களின் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க மார்க்ஸிஸ்ட் கட்சி மிக மிக அவசியம். அது மார்க்ஸிஸ்ட் கட்சியால்தான் முடியும்.  நிகழ்ந்த தறுகளுக்கு என்னென்னக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மையாக ஒரு கம்யூனிஸ்டைக் கொன்றது  பாவமே!  வேலியே பயிரை மேய்வது போல் அது சம்பவிக்கக் கூடாதுதான்.  நீதியை நிலை நாட்டவும், தவறுகளைச் சுட்டிக் காட்டவும் ஒரு நேர்மையான கம்யூனிஸ்ட் தவறக் கூடாது என்பதற்கு பதிலாகச், சில நேரங்களில் கம்யூனிஸ்ட், சில சம்பவங்களை “காணவில்லை, கேட்கவில்லை” என்றிருக்க வேண்டும் என்றால், Capitalism –முதலாளித்துவத்திற்கும், கம்யூனிசத்திற்கும் இடையே இடைவெளி குறைய ஆரம்பித்து விட்டது என்ற எண்ணம் சாதாரண மக்களின் மத்தியில் உண்டாகத்தான் செய்யும். அது தவிர்க்கப்பட வேண்டும்.  இது போல் தவறுகள் இனியும் உண்டாகாமல் இருக்க வேண்டும். கட்சியை விட்டு வெளியேறியவர்களைத் திரும்பக் கொண்டுவர முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.  மேலும், கருத்து வேறுபாடு இல்லாமல் ஜனநாயக முறையில் தீர்மானங்கள் எடுக்கபட்டு, இது போல் இனி ஒரு T.P. கட்சிக்கு எதிராக கட்சியில் இருந்து வெளியேறி கொல்லப்படுமரு நிலை கேரளத்தில் உருவாகாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்.  கடந்த வாரம் 1000க் கணக்கான பி.ஜே.பி.க்காரர்கள் தங்கள் கட்சியை உதறி மார்க்ஸிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டதால், கட்சிக்கு உண்டான ஒரு லாபத்தை விட, நம் இந்த ஒரு T.P. யின் இழப்பு மார்க்ஸிஸ்ட் கட்சிக்குரு பெரும் சேதம் என்பதை மறக்கக் கூடாது

சனி, 1 பிப்ரவரி, 2014

குடந்தை ஆர்.வி. சரவணனின்-இளமை எழுதும் கவிதை நீ - ஒரு பார்வை





கிராமத்திலிருந்து சென்னைக்கு, திரைப்பட இயக்குனர் ஆகும் கனவுகளுடன் வரும் ஒரு இளைஞனின் கையில் ஒரு கதை எப்படி சீன் பை சீன் இருக்குமோ, அப்படி அந்தக் கனவுகள் எழுத்துருவாக வெளிவந்த ஒரு புத்தகம்தான் “இளமை எழுதும் கவிதை நீ”! அந்த இளைஞர் வேறு யாருமில்லை. நம் எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான பதிவர் குடந்தை ஆர்.வி. சரவணன் அவர்கள்தான்!  எங்களுக்குக் குடந்தையூரார்.!  புத்தகத்தின் தலைப்பே சொல்லி விடுகிறது இது ஒரு காதல் கதை என்பதை!


ஒரு தமிழ் சினிமாவிற்கு வேண்டிய எல்லா அம்சம்களும் நிறைந்த ஒரு கதை! அவரது  படைப்பாகிய கதையைப் பற்றி நாங்கள் சொல்லப் போவதில்லை! நீங்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம்! அவரது படைப்பைப்  பற்றித்தான்! கதையை வாசிப்வர்கள், காதலை ரசிப்பவர்கள், காதலுக்கு ஆதரவாகக் கொடி பிடிப்பவர்கள் என்றால் வாசிப்பவர்களுக்குக் கண்டிப்பாக இந்தக் காதல் கதை “இதயக்கனி” ஆகிச் சுவையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை! காதல் கைகூடாதவர்களுக்கு, அவர்களின் கல்லூரிக் காதல் தருணங்களின் நினைவலைகளைக் கண்டிப்பாக எழுப்பி விம்மச் செய்யும்! கை கூடாத வருத்தம் வரலாம்! காதல் கை கூடியவர்களுக்கு அதை நினைத்து, செகண்ட் ரவுண்டு வரத் தூண்டும் அளவுக்குப் புரிதலுடன் உருவான கல்லூரிக் காதல் கதை!

காதல் என்றாலே பாரதியாரின் குயில் பாட்டு, “காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். ...” என்று பாரதியின், குயிலின் கூ...கூ  நினைவுக்கு வரலாம்!  இங்கு குடந்தையூரார் அந்தக் காதலை, ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும், இப்படி.....

“நீ பேசாத பொழுதுகளில்
உன் கொலுசுடன்
உரையாடிக்
கொண்டிருக்கிறேன்!”

“என் வாழ்க்கைப்
பாலைவனத்தில்....
வற்றாத ஜீவ நதியாய்
நுழைந்தவள் நீ!”

“உன் கனவு தேசத்தில்
குடியேற எங்கு
குடியுரிமை பெறவேண்டும்?
கொஞ்சம் சொல்வாயா?”

மிகவும் அருமையான, கவித்துவமானக் காதல் “ஹைக்.....கூ” க்களாக அள்ளித் தெளித்திருக்கின்றார்! அதுவும் படம் எடுக்கும் படச் சுருளில்!! இது ஒரு உதாரணம்தான்! உண்மையாக, நேர்மையாகக் காதலிக்கும் இளைஞர்கள் இதைத் தங்கள் காதலிகளுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பலாம்!!

கதையில் உள்ள கதாபாத்திரங்களின் உரையாடல்கள், இப்போதைய தலைமுறையின் உரையாடல்கள் போல இருப்பதால், பல இடங்களில் “அட” போட வைத்து ஒரு புன் முறுவலையும் வரவழப்பதைத் தவிர்க்க முடியவில்லை என்பதை இங்குச் சொல்லியே ஆக வேண்டும்! ஒரு சில உரையாடல்கள் கவித்துவமாகவும், ரசிக்கும்படியும் இருக்கின்றன!

“காதல்ங்கிறது ரொம்ப அபூர்வமான ஒண்ணு.  எப்ப வரும்னே யாரும் சொல்ல முடியாது. ஒருத்தரைப் பார்க்கிறப்ப இவரைத்தான் நாம் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணும்.”

 “அப்படி ஒருத்தரை நான் பார்த்து ஆசைப்பட்டேன்னா என் அப்பா, அம்மா தடுத்தா கூட எதிர்த்து நின்னு அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்”-  – கதையின் நாயகி, உமாவின் வார்த்தைகள். இந்தத் தலைமுறையின் தைரியமான எண்ணப் பிரதிபலிப்பு, முடிவு எடுக்கும் திறன் பளிச்சிடுகின்றது!

நாயகன் சிவாவின் தம்பி, கார்த்திக்கிற்கும், அவர்களது மாமா பெண் கீதாவிற்கும், வீட்டார்கள் சீக்கிரமாகத் திருமணம் செய்துவிடுகின்றனர்.  இருவருமே காதலித்தவர்கள்தான் என்றாலும் அடிக்கடி வாக்கு வாதத்தில் ஈடுபடுபவர்கள்! அதைப் பார்த்து கீதாவின் தந்தையும், தாயும்.....

“என்னங்க இப்படி வார்த்தையால வாலிபால் விளையாடறாங்க?”

“சும்மாவே அடிச்சிப்பாங்க.  இப்ப லைசென்ஸ் வேற குடுத்துட்டோம்.  கேட்கவா வேணும்” – அட போட வைத்த வரிகள்!

“உங்கப்பாவை நல்ல புத்தகங்களா வாங்கி கொடுக்கச்சொல்லி அதைப் படி.  செல்ஃபோன் வச்சிருக்கறதுக்கு பிசினஸ் மேனா நீ” – அருமையான வரிகள். புத்தகங்கள் வாசிக்கும் வழக்கம் குறைவதையும், அது வளர வேண்டும் என்று, ஆசிரியரின் ஆதங்கம் வெளிப்படுகிறதோ?!

“அவள் கால்களில் அணிந்திருந்த கொலுசு, கால்களின் அசைவுக்கு ஏற்ப சப்தமிட்டது.  அது, தானும் சந்தோஷமாய் இருப்பதாக சிவாவுக்குச் செய்தி சொன்னது” – கவித்துவமான, காதல் கனிரசம் மிக்க வரிகள்!

 “என்னை கைட் பண்ண ஆளில்லை அதான்.....”இப்ப கிடைச்சிருக்கு” என்ற வார்த்தையை உமாவைப் பார்த்துக் கொண்டே சொன்னான்” – கதையின் நாயகனின் வரிகள். சொக்கவைக்கும் நல்ல ஒரு ஆழமான காதலை வெளிப்படுத்தும் வரிகள்!!

 “நான் சொன்னதை காப்பி பேஸ்ட் பண்ணாம புதுசா எதுனா சொல்லுங்க” – அட! கணினி யுகம் என்பதை அறிவிக்கும், முறுவலிக்க வைத்த வார்த்தைகள்!

“பெற்றோர் சொன்னால் பெட்ரோமாக்ஸ் வைத்துக் கூட படிக்கும் எங்கள் பேரவைத் தலைவியே....” – “காதலி சொன்னால் காற்றுக்கும் வேலி போடுவான் இவன்” – சிரிப்பை வரவைத்த இன்றைய இளைஞன்! “பயோ டேட்டா” பாலு! ஆசிரியரின் கற்பனைத் திறன் மிளிரும் இக்கால இளைஞர்களின் வசனம் பளிச்!!

“சிவா எழுதப் போற இந்த அரியர்ஸ், பிட் அடிச்சு பாஸ் பண்ணதா யாரும் சொல்லக் கூடாது. சிவாவுக்கு இந்த வெற்றி அவசியம். ஒரு தோழியா நான் விட்டுக் கொடுக்க வேண்டியது இன்னும் அவசியம்” - உமா.  ஒரு நல்ல, உண்மையானத் தோழமையை, அந்தத் தோழமைக்காக விட்டுக் கொடுக்கும் உன்னதமான உணர்வை விவரிக்கும் வரிகள்.

இப்படிப், பல இடங்களில் நச், பளிச் உரையாடல்கள்!  இடியாப்பச் சிக்கல்கள் இல்லாத எளிமையான, நேர்த்தியான கதை நடை! கதையின் இடையில் கதாபாத்திரங்கள் பேசுவது போலவும், நினைத்துப் பார்ப்பது போலவும், பொருத்தமான வசனங்களையும், திரைப்படப் பாடல்களையும், செருகி இருப்பது,  ஆசிரியர் தமிழ் திரைப்படங்களின் பரம ரசிகர் என்பதைப் பறைசாற்றுகின்றது! நல்ல நினைவுத் திறன்!  மட்டுமல்ல இன்றையத் தலைமுறையினரின் உரையாடல்கள் இப்படித்தான் என்பதையும் சொல்லுவது போல உள்ளது!  மோதலில் ஆரம்பிக்கும் கதை, எப்படி முடிகின்றது என்பதை, “மீதி வெள்ளித் திரையில்” என்பதைப் போல, மீதி புத்தகத்தில்! புத்தகம் வாங்கிப் படித்து, ரசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!  ஏற்கனவே வாசித்தவர்களுக்குக் காதல் டிகிரி எவ்வளவு தூரம் எகிறியதோ! நாளையே கூட இந்தக் கதை படமாகும் வாய்ப்பு உள்ளது! நம் நண்பர் “நாளைய இயக்குனர்” பட்டியலில்!  எனவே நாம் அவரை மனதார வாழ்த்துவோம்!

பாராட்டுக்கள்! தங்கள் படைப்பை வெளியிட்டதற்கு! குடந்தையூராரே! தங்கள் எழுத்துக்கள் மேன்மேலும் வளரவும், “கருவில் சுமந்த குழந்தை பிறந்தவுடன் பூரிப்படையும் ஒரு தாயின் நெகிழ்வை இந்த நூல் எனக்குத் தந்திருக்கிறது” என்ற உங்கள் வார்த்தைகளை இங்கு எடுத்துக் காட்டி, அதே குழந்தை, தங்களது கனவாகியத் திரைப்பட இயக்குனர் ஆகுதலை நிறைவேற்றி, வெள்ளித் திரையில் மின்னிடவும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

நூலை அழகு செய்திருப்பவர் : நம் பதிவர் பாலகணேஷ்
வெளியீடு : ஜனனி பதிப்பகம்
நூல் கிடைக்கும் இடம் : டிஸ்கவரி புக் பாலஸ் பிரைவேட் லிமிட்டெட்

மதிப்புரை வழங்கியிருப்பவர் பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.  அவரின் வார்த்தைகள்


“ஒரு சிறுகதையோ, கவிதையோ, கட்டுரையோ முதலில் வாசகரைப் படிக்க வைக்க வேண்டும்....அடுத்து...ஒரு ப்டைப்பு ஒரு எளிமையான வாசகனுக்கும் புரிய வேண்டும்......உங்கள் படைப்பில் இந்த இரண்டு அம்சங்களும் இருக்கின்றன. ஒன்று உங்கள் படைப்பை வாசித்து முடிக்கலாம். இரண்டு...உங்கள் படைப்பு புரிகிறது.  பாராட்டுக்கள்!!”

பின் குறிப்பு: என் தோழி கீதாதான், 05.01.2014 அன்று, சென்னையில், டிஸ்கவரி புக் பாலஸ் பிரைவேட் லிமிட்டெட்டில் நடந்த குடந்தையூராரின் புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென்று, புத்தகமும் பெற்று, வாசித்து இந்த அருமையான, ஆழமான விமர்சனத்துடன் எனக்கு வாசிக்க புத்தகத்தையும் அனுப்பித் தந்தார்.  புத்தகத்தை வாசித்த எனக்குப் புதிதாக எழுத ஒன்றும் இல்லாமல் செய்தும் விட்டார். நான் சொல்ல நினைத்ததை எல்லாம் அருமையாக அவரே சொல்லியும்விட்டார்.  சாதனையாளராகும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னும் ஒரு பெண் சக்தியாக இருக்கிறார் என்பதை, கதையில் சிவாவைச் சிறப்புக்குரியவாராக்கிய உமாவிடமிருந்து தெரிய வருவது போல், இவ்விமர்சனம் சிறப்பான ஒன்று என்று தோன்றினால் (புத்தகம் சிறப்பு என்பதைச் சொல்லத் தேவையில்லை.  ஏனென்றால் அது குடந்தையூராரின் படைப்பு) அதற்கான பாராட்டுக்கள், விமர்சனம் என் பெயர் தாங்கி வந்தாலும், விமர்சனத்திற்கு விமர்சனம் எழுதும் நான் அல்ல அதற்குரியவன், சென்றடைய வேண்டியது, என் அருமை (நம்) தோழி கீதாவை.




“

இறந்தவரை சுமந்தவரும் இறந்திட்டார்.......அதை, இருக்கும் நாம் எண்ணிப் பார்க்க மறக்கக் கூடாது!




பிரபாகரன் மாமாவின் உடல் எரிக்கப்பட்ட அவரது வீட்டிற்குத் தென்புறம் உள்ள இடத்தில் அவரது அஸ்தி (மீதமுள்ள எலும்புகள்) சேகரிக்கும் சடங்கு நடக்கிறது. துக்கத்துடன் அவர் இரண்டு மகள்களும், அவர்களது கணவன்மார்களும், மக்களும் அவர்களது குடும்பங்களும் இப்படி அங்கே ஏறத்தாழ 25 பேர்.  




மூத்த மகள் பார்வதியின் மகன் ராகுல், கால்களில் பாக்கு மரப்பாளையில் செய்த செருப்பணிந்து, கையில் இரண்டு சிறிய கம்புகளை இடுக்கி போல் உபயோகித்து, சாம்பலின் இடையே  உள்ள எஞ்சிய எலும்புகளின் துண்டுகளைத் தலை, நெஞ்சு, கால் இருந்த பகுதிகளிலிருந்து எடுத்துச், சடங்குகளை நடத்தும் ரமணன் தன் கையில் பிடித்திருக்கும் பாக்கு மரப் பாளையில் செய்யப்பட்ட முறம் போன்ற ஒன்றில், இட்டுக் கொண்டிருந்தான்.  படுத்த படுக்கையாகும் முன், பிரபாகரன் மாமாதான் இறந்த வீடுகளில் இது போன்ற சடங்குகளை முன் நின்று செய்து கொண்டிருந்தார்.  


எத்தனையோ முறை இது போல், பாக்கு மரப்பாளை முறத்தில் இறந்தவர்களின் அஸ்திகளை வாங்கி, ஒரு மண் குடத்திலிட்டு, 11 நாட்கள் பாதுகாத்தபின், "வர்க்கலா கடலில்", "நிமஞ்சனம்" (க்டலில் கலக்கும்/கரைக்கும் சடங்கு) செய்யும் வரை, மிகுந்த கவனத்துடன் செய்து வந்த அவரது அஸ்திகள் இன்று சேகரிக்கப்படுகின்றது, அதே "வர்கலா" கடலில் நிமஞ்சனம் செய்வதற்காக.

நோய்வாய்பட்ட அவருக்குக் கடந்த 5 வருடங்களாகத்தான், பொதுப் பணிகளிலும், சேவைகளிலும் பங்கெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.  அதற்கு முன்பு வரை, கோயில் திருவிழா, கல்யாணம், மரணம் போன்றவை நிகழும் இடங்களில் அவர் இன்றியமையாத ஒருவராக இருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு வரை அவரும் அவரது மனைவியும், அவரது இளைய மகளுடன், இதே வீட்டில்தான் தங்கியிருந்தார்கள். திடீரென அவரது மனைவிக்குக் கால் மூட்டுத் தேய்மானத்திற்கான அறுவை சிகிச்சை செய்து  Knee Cap மாற்றி வைக்க வேண்டியக் கட்டாயம் வர, நோய்வாய்பட்ட இருவரையும் கவனிக்கத் தன்னால் முடியாது என்று இளையமகள்  சொல்ல, பிரபாகரன் மாமாவின் மனைவி எர்ணாகுளத்தில் உள்ள மூத்த மகளுடன் தங்க வேண்டியதானது. சொத்துக்களைச் சரிசமமாக பிரிப்பது போல் பெற்றோர்களையும் சரி சமமாகப் பிரித்துத் தங்கள் கடைமைகளை யாரும் குற்றம் சொல்ல முடியாத விதத்தில் அவரது மகள்கள் செய்யத் தொடங்கினார்கள்.  


இந்த முடிவெடுக்க வேண்டிய சூழல் வந்து, பேச்சு எழுந்த போது,

"நானும், அவளும் ஒரு வாடகை வீட்டுல, ஒரு ஹோம் நர்ஸ்  எங்களைப் பாத்துக்க போட்டுகிட்டு இருந்துக்கறோம்" என்றார் பிராபாகரன் மாமா.

இது மாமாவின் மகள்கள், மருமகன்களின் வெறுப்பைச் சம்பாதித்ததே ஒழிய அவர் விரும்பியது போல் மனவியுடன் ஒன்றாகத் தங்க முடியவில்லை.  

"தினமும் ஃபோனில் பேசலாம், மாசத்துக்கு ஒருமுறை அப்பா அங்கேயோ, அம்மா இங்கேயோ வந்து போகலாமே"  என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் சொல்லப்பட மட்டும் செய்தன. செயல் அளவில் ஒன்றும் நிகழவில்லை. 


4 மாதங்களுக்கு முன் பிரபாகரன் மாமாவைப் பார்க்கச் சென்ற போது, வீட்டில் வேலைக்காரி மட்டும் இருந்ததால், அவர் என்னிடம் தன் மனம் திறந்து பேசினார்.  அவரது மனைவியைப் பற்றி பேசிய போது அவர் கண்களில் நீர் நிறைந்தது. தொண்டை அடைத்து அழுதேவிட்டார்.  

"ஃபோன்ல கூடப் பேச அனுமதி இல்ல.  பேசினா, நாங்க ரெண்டு பேரும் ரொம்ப உணர்ச்சிவசப் படறதுனால, அடுத்த நாளே டாக்டர்கிட்ட போகணுமா இருக்கு.  அவளோடு பேசி 6 மாசத்துகு மேல ஆகிடுச்சு.  என்ன வாழ்க்கை இது"  என்று நொந்து கொண்டார்.

இதைக் கேட்ட எனக்கு, திடீரென, பிரபாகர் மாமாவின் அம்மா, நான் இளங்கலைப் பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஏறத்தாழ 25 வருடங்களுக்கு முன்பு, என்னிடம் சொன்ன வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தது. 

"பிரபாகரன் அவங்க அப்பாகிட்ட பேசி 10 வருஷமாகுது.  அவர் ஏதோ கோபத்துல பிரபாகரனோட மனைவிய அடிச்சுட்டாருதான்.  அது தப்புதான்.  அவரே பலதடவை அதை நினைச்சு வருந்திகிட்டுருக்காரு. அவனோட மனைவி, அவரோட பேசாம இருக்கலாம்.  ஆனால், அவன் இவரோடு பேசாம இருந்தா எப்படி?  அவன் என்னோடு பேசினாலும், அவனுக்கு என் மேலயும் கோபம்தான்.  இவரை, ரமணிகிட்ட (பிரபாகரனின் சகோதரி) விட்டுட்டு நான் அவன் வீட்டுல தங்காததுக்கு.  அதெப்படி நான் ஒரு இடத்துலயும், இவரு ஒரு இடத்துலயும் தங்கறது?"

எனக்கு, இதுதான் "தன் வினைத் தன்னைச் சுடும்" என்பதோ?! என்று தோன்றியது.  சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு மாமா தொடர்ந்தார்.

"நானும் வருடங்களுக்கு முன்னாடி என்னோட மகள்கள் வயசுல என் அப்பா, அம்மாகிட்ட, அவங்க ஆசைகளத், தேவைகள கவனிக்காம, பலதையும் பேசியும், செய்தும், அவங்க மனசு நோகும்படியா நடந்துருக்கேன்.  இப்ப என் நிலமை அதுக்கானத் தண்டனையா இருக்கலாம்" என்றார்.

இப்படித்தான்,  நம் வாழ்வில், நாம் ஒவ்வொருவரும் தவறுகள் செய்யும் போது, அதைத் தவறென்று உணராமல் வாழ்வின் இறுதிக்கட்டத்தில், அது போன்ற தவறுகள் நமக்கு மற்றவர்களால் ஏற்படும் போது, நாம் செய்த தவறை எண்ணி வருந்துவோம் போல.  தன் மகனின் மனைவியைக் கை நீட்டி அடித்தது தவறு என்பதை பிரபாகரன் மாமாவின் அப்பா, அவரது இறுதிக் காலத்தில் உணர்ந்தது போல், 10,15 வருடம் அப்பாவுடன் பேசாமலும், வயதான அம்மாவையும், அப்பாவையும், தன் தங்கையின் வீட்டில் தங்க வைத்தும், தான் இழைத்தத் தவறை, பிரபாகரன் மாமா, தன் இறுதிக் காலத்தில் உணர்ந்தது போல, பிரபாகரன் மாமாவின் மூத்த மகள் பார்வதியும், இளைய மகள் லக்ஷ்மியும் தங்களது இறுதிக் காலத்தில், தங்கள் பெற்றோர்களை அவர்களது இறுதிக்காலத்தில் பிரித்தும், பேசவும், பார்க்கவும் விடாமல், அவர்களுக்கு இழைத்தக் கொடுமையை எண்ணி வருந்தத்தான் செய்வார்கள். அப்படியானால், நானும் இது போல் என் பெற்றோரிடம் மனது புண்படும் விதம் நடந்திருக்கின்றேனோ?.........
சுசீந்தரம்


குமாரகோயில்


ஆம்!  அப்பாவும், அம்மாவும், ரொம்ப நாட்களாகச், சுசீந்தரம், குமார கோயில், கன்னியாகுமரி போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நானும் "பார்க்கலாம்" என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றேன், கடந்த இரண்டு வருடங்களாக.  என்ன ஆனாலும் சரி, இரண்டு நாள் லீவு போட்டு, மனைவி வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, அவர்களைக் கூட்டிக் கொண்டு, அடுத்த வாரமே சுசீந்தரம் போயே தீர வேண்டும் என்று முடிவு செய்தேன். எப்படியோ, இப்போது  மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாகவும், ஆறுதலாகவும் இருக்கிறது!