வெள்ளி, 10 ஜனவரி, 2014

மண்ணில் விழும் நட்சத்திரக் குழந்தைகள் நல்லவராவதும், வல்லவராவதும் பெற்றோர் வளர்ப்பினிலே - கற்றல் குறைபாடு - Learning Disability - 2



12 ஆம் வகுப்பு வரை Back  பெஞ்சில் இருந்த மகன், கற்றல் குறைபாடு இருந்தவன், இப்போது கால்நடை மருத்துவராகி, கானடா/அமெரிக்கா சென்று Clinical Training எடுத்துக் கொண்டு Veterinary Surgeon ஆகி, Specialization செய்யத் துடிப்பது, இதெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று என்பதும், அதனுடன், கற்றல் குறைபாடு பற்றியும், இந்த இடுகையில். இந்த இடுகைக்கு வேண்டிய முக்கியமான ஒரு விஷயம், சென்ற இடுகையில், பதிவேற்றம் செய்யும் போது ஏற்பட்ட நெட் பிரச்சினையால் மிகத் தாமதமாகி, விட்டுப் போன ஒரு Paragraph. அதை இங்கே கொடுத்துள்ளேன்.

//அவன் வளரும் போது வேறு எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டாலும் எல்லாமே சிறிது மெதுவாகத்தான் செய்வான். படியில் இறங்க வேண்டும் என்றால், உட்கார்ந்து, காலை முதலில் கீழே விட்டு ஆழம் பார்ப்பது போல் பார்த்து பின்னர்தான் இறங்குவான். சேட்டைகள் அதிகம் இல்லை. பேப்பர் கிழிக்க மாட்டான். நான் வரைவதைப் பார்த்து அவனும் பேப்பரில் ப்ரஷ்ஷை வைத்து கலர் அடித்து வரைவான். இவை எல்லாம் 1 ¼ வயதில். அவன் என்னுடன் ஓடி ஆடி விளையாடுவான் ஆனால் வார்த்தைகள் வரவில்லை. நான் அவனுக்குத் தோழி.  மற்ற குழந்தைகள் அவனுக்குச் சரிவரவில்லை. அவர்கள் எல்லோரும் சேட்டை செய்பவர்கள். அதுதானே இயல்பு. திருவனந்தபுரத்தில், நாங்கள் அப்போது குடியிருந்த வீட்டின் மாடியில் இருந்த பையன் திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜில் ஸ்டுடன்ட். ஹவுஸ் சர்ஜன்ஸி பண்ணிக் கொண்டிருந்தார். அச்சமயம் அதுவும் குழந்தைகள் பிரிவில். எனக்கு அவர் குடும்பமே நல்ல நண்பர்கள். என் மகன் அவர்கள் வீட்டில் தான் விளையாடுவான். அவர் என் மகனை தினமும் கொஞ்சி விட்டு அவன் வாயில் கை வைத்து “கடி பாப்பா என்பார்.  பின்னர் பாப்பா பெயர் என்ன? அப்பா பெயர் என்ன, அம்மா பெயர் என்ன? இப்படி கேட்பார். தினமும் வாயில் கை வைத்துக் “கடி பாப்பா என்பார். எனக்குப் புரியவில்லை.  அவர் ஏதோ தனக்காக செய்து பார்க்கிறார் என்று விட்டுவிட்டேன். //

சிறு வயது முதலேயே அவனுக்கு என் கிராமத்துத் தொடர்பு இருந்ததால், விலங்குகளுடன் பழக்கம். எங்கள் வீட்டில் பூனை ஒன்று குட்டிகள் போட அந்தக் குட்டிகளுடன் தினமும் விளயாட்டு. (இப்போது அவன் வேலை செய்யும் க்ளினிக் “Only cat clinic in India” மெயினாக.  நாய்க்கும் வைத்தியம் பார்ப்பார்கள் அது தனி க்ளினிக்கில்).

மகன் 1 ஆம் வகுப்பு வந்த போது வீட்டிற்கு வந்த அதே டாக்டர் பையன் கூறியதுடன் சென்ற இடுகையை முடித்திருந்தேன். அவர், “பிரச்சினைனு இல்ல. ஸ்கூல்ல அவன் டீச்சர்ஸ் சப்போர்ட் கிடைச்சுதுனா, முன் (Front) பெஞ்சில் இருப்பான்.  இல்லை என்றால் பாக்(Back) பெஞ்சில்தான் இருப்பான் என்றார். ஆனால், அவர் வேறு விளக்கம் கொடுக்கவில்லை என்பதால் எனக்கும் அதைப் பற்றி யோசிக்கவோ,கேட்கவோ தெரியவில்லை என்பதைவிட எனக்கு அப்போது அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை எனலாம்.


என் மகனுக்கு மூளையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.  நன்றாக புரிந்து கொள்ளும் சக்தி இருந்தது. ஆனால், மொழிப் பிரச்சினை. எழுதுவது பிரச்சினை. அது தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி எதுவாக இருந்தாலும் அவனுக்குப் பிரச்சினைதான். அதனால், அவனால் தனக்குத் தெரிந்ததை, எழுதுவதும் பிரச்சினையாக இருந்ததால், வெளிப்படுத்த முடியவில்லை. பேப்பரில் வெளிப்படுத்தினால்தானே மதிப்பெண்.  அதன் அடிப்படையில்தானே ஒரு குழந்தை புத்திசாலியா இல்லையா என்று வகைப்படுத்தப்படுகிறது!  அவனால் ஓரிரு வாக்கியங்களுக்கு மேல் எழுத இயலாது.  மிஞ்சி மிஞ்சிப் போனால் 3 வாக்கியங்கள்.  அதுவே அவனைப் பொருத்தவரை Big answer! அதனால், பள்ளியில் மகன் பின்புறம் தள்ளப்பட்டான். நாங்கள் அதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. எங்களுக்கு அப்போது Educational counselor பற்றிய அறிவு இல்லை. அவனது குறைபாடு என்ன என்றுத் தெரியாவிட்டாலும், அவனை நாங்களே கூர்ந்து கவனித்து அதற்கேற்றார் போல் நடவடிக்கைகள் மேற்கொண்டு, மெதுவாகப் படித்தாலும், கண்டிப்பாக அவன் நல்லவனாக, வித்தகனாக வருவான் என்ற வலுவான நம்பிக்கையுடன் கையாண்டு வந்தேன்.

எனது மகனிடமும் எளிதாகக் கையாள முடியாத வகையில், ஒரு சில பிடிவாதங்கள்/முரண்டுகள் இருக்கத்தான் செய்தது. நாங்கள் அவனை அடிக்காமல், அவன் பிடிவாதத்திற்கு ஏற்றக் கதையைத் தேர்ந்தெடுத்து, அந்தக் கதையில் வரும் நல்ல character ல் அவனைப் பொருத்திச் சொல்லுவேன். அவன் பிடிவாதம் குறைந்து நல்ல மூடிற்கு வந்ததும் அவனிடம் தோழமையுடன் பேசுவோம். அவன் தவறை மெதுவாக எடுத்துரைத்து புரிய வைப்போம். இதில் ஒரு நன்மை இருந்தது, அதாவது Blessing in Disguise என்று சொல்லுவார்களே அதைப் போன்று. அவனிடம், நான் என்ன சொன்னலும் அதை வேதவாக்காக எடுத்துக் கொள்ளும் ஒரு பழக்கம். அதை நான் சாதகமாக்கிக் கொண்டேன்.  ஆனால், அதுவும் கத்தி மேல் நடப்பது போலத்தான்.  ஏனென்றால், நானும் மனுஷிதானே! நான் ஏதாவது தவறாகச் சொல்லி அது அவனுடைய மனதில் பதிந்து விட்டால்? அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியாது. அதனாலேயே அவனது சிறிய வயதில் நாங்கள் வீட்டில் T.V. வைத்துக் கொள்ளவில்லை. கேபிள் எல்லாம் அப்போது கிடையாது என்றாலும் அவனுக்கு நல்ல மனமுதிர்ச்சி வந்த பின் வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தோம். இரண்டு பக்கப் பெரியவர்களும் வீட்டிற்கு அடிக்கடி வந்து தங்கிய காரணத்தால் T.V. வந்த போதும், அவன் பார்க்கலாம் என்று வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே பார்க்கப்படும். அதுவும் எங்களுடன்தான். அவனது முரண்டுகள் மாறி, முதலில் அவன் ஒரு நல்ல மனிதனாக உருவாக வேண்டும் என்று நினைத்தோம்.

1 ஆம் வகுப்பில் (ICSE Syllabus) ஆரம்பித்த பிரச்சினை, கோயம்பத்தூருக்கு அவனது தந்தை வேலை நிமித்தம் இடம் பெயர்ந்ததால், 2 ஆம் வகுப்பிலிருந்து, 4 ஆம் வகுப்பு வரை காணாமல் போயிருந்தது. ஏன்?  கோயம்புத்தூரில் அப்போது State Board Syllabus, Matriculation பள்ளிகள்தான். அவன் சேர்க்கப்பட்டிருந்த பள்ளி Matriculation பள்ளி, ஆனால், வித்தியாசமான முறைக் கல்வி, என் மகனுக்கு ஏற்ற பள்ளியாக அதாவது வீட்டுப்பாடம் கிடையாது, எழுத்து வேலை கிடயாது, File System, பள்ளியிலேயே எழுதிவிட வேண்டும் அதுவும் 2 வரிகளுக்குமேல் கிடையாது, ஒரு வார்த்தை, கோடிட்ட இடங்கள் நிரப்புதல், match the following இவைதான். தமிழ் உட்பட.  ஹிந்தி கிடையாது. சக்கைபோடு போட்டான். பள்ளியிலேயே கராத்தே வகுப்பில் சேர்த்தேன். Mind Body Coordination கிடைக்கும் என்பதால். இவன் மிக நன்றாகச் செய்வதாகவும் தனித்தன்மை இருப்பதாகவும் அவனது மாஸ்டர் சொன்னதால், அவரது தனி வகுப்புகளுக்குக் கூட்டிக் கொண்டு சென்றேன்.  மாவட்ட அளவில் பரிசுகளை வென்றான். All rounder என்ற பரிசை அப்போது அமைச்சராக இருந்த ******** வழங்கப் பெற்றான். (இங்கு அவனது பரிசு பற்றித்தான்.  அமைச்சரைப் பற்றி அல்ல).

2 ஆம் வகுப்பில் இருந்த போது, அவனது லீவிற்கு எங்கள் கிராமத்திற்கு இல்லையென்றால் சென்னைக்குப் பயணமாக இருக்கும். கிராமத்தில் அவன் எப்போதும் அங்கு இருக்கும் ஆடு, மாடு, கோழி, வான்கோழி, நாய்களுடன் தான் விளையாட்டு. சாதாரணமாக வீட்டில் அவனைக் குளிக்க வைப்பது மிகவும் கடினம். ஆனால் அவன் என் கிராமத்திற்குச் சென்றால் வீட்டில் குளித்ததாகச் சரித்திரமே இல்லை.  ஆறு, குளம் இல்லை அருவிதான். நான் அதைச் சாதகமாகக் கொண்டு, எனக்கு நீச்சல் தெரியும் என்பதால் நீச்சல் பயிற்சி அளித்தேன். நீச்சலும் அவனுக்கு உதவலாம் என்ற ஒரு எண்ணத்தில். அதனால் அவனுக்கு இயற்கை சம்பந்தமாக நிறையச் சொல்லிக் கொடுத்தேன். பொது இடங்களை மாசுபடுத்தல் கூடாது, நீர் நிலைகளில் சோப், ஷம்ப்பூ உபயோகிக்கக் கூடாது, குப்பை போடக்கூடாது என்று பல Civic Sense ம் படங்கள் உதவியுடனும், practical ஆகவும் சொல்லிக் கொடுத்தேன். அவனுக்கு வெறும் எழுத்துக்கள் உதவாது. படங்கள் தான். அப்படியே சிறிய சிறிய கதைப் புத்தகங்கள், அம்புலிமாமா, அமர்சித்திரக் கதைகள், டிங்கிள் போன்ற புத்தகங்களை வாசிக்க உதவினேன். வாசிக்கும் பழக்கம் வரவேண்டும் என்று. ஆனால், அவனால் என் உதவியுடன் தான் செய்ய முடியும். அவனுக்கு எதில் எல்லாம் ஆர்வத்துடன் இருக்கின்றான் என்பதைக் கண்டறிந்து அதை அவனுக்குக் கற்றுக் கொடுத்தேன்.

இந்த சமயத்தில், சென்னைக்கு வந்த போது, Lotus Learning நிறுவனத்திலிருந்து வீட்டிற்கு அவர்களது புத்தகங்களை விற்பனை செய்யவும், குழந்தைகளிடம் பேச்சும் கொடுத்து அவர்களது ஆர்வங்களை அறிய ஒரு சர்வேயும் நடத்தினார்கள். இவனிடம் பேச்சுக் கொடுத்த போது இவன் முதலில் பதில் எதுவும் சொல்லவில்லை. பின்னர் அவர்கள் “உனக்கு எந்தப் புத்தகங்கள் பிடிக்கும் என்று கேட்டதும் உடனே அவன் அவர்களது Animal Encyclopedia” 25, Vol. மை எடுத்துக் காட்டினான். அவர்கல் உடனே அவனிடம் What do you want to become when you grow up?” (நீ பெரியவனாகும் போது என்னவாக விரும்புகின்றாய்?) என்றதும், Animal Doctor” என்றதும் எங்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவர்கள் “ஏன் என்றதும் “Animals பாவம். பேசாது. தொப்பை வலி சொல்லாது.”  அப்போது. இதைக் கேட்டதும்தான் எனக்குப் புரிந்த்து, எனது கிராமத்தின் ஆடும், மாடும், நாயும், எனது கதைகளும் விளக்கமும் அவனுக்கு எப்படிப் பதிந்துள்ளது என்று. அவன் விரும்பிய அந்த என்சைக்ளோபீடியா வாங்கிக் கொடுத்தோம். நான் அவனிடம், தனியாக இருந்த போது அவன் சொன்ன பதிலை உறுதிப் படுத்திக் கொண்டேன். அதுவே என் தாரக மந்திரமானது அவனைப் படிக்க வைக்க. அப்படி அந்த 2 ஆம் வகுப்பில் தொடங்கிய ஆர்வத்தையும், அர்பணிக்கும் எண்ணத்தையும், அதில் இருந்த ஈடுபாட்டையும் கண்டு அதை வைத்தே அவனை ஊக்குவித்து படிக்கவைத்து விட்டோம்.


ஒரு குழந்தைக்கு கற்றல் குறைபாடு இருந்தால் அக்குழந்தையால் கல்லூரிப் படிப்பு படிக்க முடியாது என்றோ, ஒரு Professional ஆக முடியாது என்றோ கிடையாது. நிறையத் தடங்கல்கள், முட்டுக்கட்டைகளைத் தாண்டி வர நேரிடலாம். முக்கியமான பெரிய விஷயம் பள்ளிப்படிப்பு. இதெல்லாம் அந்தக் குழந்தையின் எதிர்காலத்திற்கோ, அந்தக் குழந்தையின் விருப்பம் நிறைவேறுவதற்கோ, அந்தக் குழந்தை என்னவாக விரும்புகிறதோ அது நிறைவேறவோ தடையாக இருக்கக் கூடாது என்பது மட்டுமல்ல அதை அடைய நாம் உதவவும் வேண்டும். சில உத்திகளைக் கையாண்டால் கண்டிப்பாக முடியும்.

Famous people are not immune to LDs either, and there are quite a few of them that have been very successful even though they were not so in college. One of those is a gentleman by the name of John Horner. His name you may not know, but he is famous in the world of paleontology. He has worked with producer Steven Spielberg on the set of Jurassic Park.    Even though he went to college for six years, he was unable to graduate because of his low GPA. That did not stop him from pursuing his love of dinosaurs. Now he’s a professor and has written nine books, as well as more than 100 scientific papers. This just goes to show you, that your disability should not stand in your way. He stated that “passion and persistence are the keys to success.” (ஜான் ஹார்னர் என்பவரைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் புதைபடிமவியலில் மிகவும் புகழ் பெற்றவர், கற்றல் குறைபாட்டினால் தனது கல்லூரிப்படிப்பை முடிக்கமுடியாமல் போனாலும், தற்போது ப்ரொஃப்சராகவும், 9 புத்தகங்களும், 100 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளும் எழுதியவர், டைனோசரின் மீதுள்ள ஆர்வத்தால்.உலகையே தன் வசப்படுத்திய மாபெரும் ஜுராசிக் பார்க் செட்டில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்குடன் பணியாற்றியவர்.)

நன்றாகப் போய்க் கொண்டிருந்த அவனது கல்வி சென்னைக்கு இடம் பெயர்ந்ததால், திரும்பவும் Back to square one. 5 ஆம் வகுப்பு. CBSE Syllabus பள்ளி. வீட்டுப்பாடம். எழுத்து வேலை நிறைய. சிறிய தேர்வுகளில் பாஸ். பெரிய தேர்வுகளில் ஃபெயில். ஆசிரியர்கள் எங்களைக் கூப்பிடுவார்கள்.  ஆனால், அவர்கள் இவனை மந்தமாக இருக்கிறான் என்பார்களே தவிர எந்த விதத்தில் குறை இருந்தது என்பதை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஹிந்தியும், தமிழும் கற்கவேண்டும். அவன் பள்ளியில் எழுதச் சொல்லும் குறிப்புகளை எழுதி வர மாட்டான். அவனுக்கு நண்பர்கள் கிடையாது. அவனும் பழக மாட்டான், ராங்க் இல்லாததால் குழந்தைகளும் இவனுடன் பழக மாட்டார்கள். நான் ஏதாவது ஒரு பையனின் வீட்டிற்கு ஒவ்வொரு நாளும், சென்று என்ன எழுதிப் போட்டிருக்கின்றார்கள் என்று எழுதி வருவேன்.  அதில் சிறிய பதில்களை மட்டும் அவனைப் படிக்க வைத்து மெதுவாக எழுத வைத்துப் பழக்கி...இப்படியாக வருடக் கடைசிப் பரீட்சையில் just pass செய்ய வைத்து விடுவேன். ஏனென்றால், அவனுக்கு எந்த விதத்திலும் தாழ்வு மனப்பான்மை வந்துவிடக்கூடாது என்று. அவனிடம் நான் படி என்று சொல்லவில்லை. “குட்டிமா, நீ Veterinary Doctor ஆகணும் இல்லியாமா? அப்போ இந்தக் க்ளாஸ் பாஸ் பண்ணினாத்தானே நீ அடுத்த க்ளாஸ் போய் அப்படியே காலேஜ் ஜாய்ன் பண்ண முடியும்? Veterinary doctor ...அத நினைச்சுக்கமா”  அதுதான் என் மந்திரக் கோல்.  அதை வைத்தே அவனைப் பாஸ் பண்ண வைத்து விடுவேன். அவனது கராத்தேயும் தொடர்ந்தது.  கோயம்பத்தூருக்கு லீவில் கூட்டிச் சென்று அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் போது நானும் பார்த்துக் கற்றுக் கொண்டு கற்று சென்னை வந்ததும் அவன் வீட்டில் பயிற்சி செய்ய அவனுக்கு உதவுவேன்.


பள்ளிக்கு அவனைக் கிளப்புவது என்பது தினமும் ஒரு போராட்டம்தான். சென்னையில் நாங்கள் குடியிருந்த வீட்டில் பின் பக்கம் சிறிய தோட்டம் இருந்ததால் தினமும் கட்டெறும்புகளுக்கு சாக்கலேட் போடுகிறேன் என்று போட்டு எறும்புகள் எல்லாம் அவற்றைத் தூக்கிக் கொண்டு அதன் இடத்திற்குச் செல்லும் வரை அதையே பார்த்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் என்னிடம் எது ராணி எறும்பு, எது வொர்கர் எறும்பு, ஆண் எறும்பு என்று காட்டுவான். அதன் காலனி பற்றி எல்லாம் விளக்குவான். ஸ்கூலுக்குக் கிளம்ப மாட்டான்.  குளிக்க மாட்டான்.  அவனை கொஞ்சம் கெஞ்சி, இழுத்து சில சமயம் குளிக்க வைத்து இல்லை துடைத்து விட்டு யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்குக் கொண்டு விட்டு மாலையில் குளிக்க வைத்து விடுவேன். தெருவில் உள்ள நாய்கள் எல்லாம் எங்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும் இவன் வருகைக்காக.  பிஸ்கட்டிற்காக.  அவை போடும் குட்டிகள் எல்லாம் எங்கள் வீட்டில் தான் இருக்கும் தாயுடன்.  பின்னர் 3 மாதம் ஆனதும் அந்தக் குட்டிகளை Blue Cross ல் கொண்டு விடும் பழக்கம். அங்கு சென்று விட்டால் இவன் வீடு திரும்பவே மாட்டான்.  அங்குள்ளவர்களிடம் நான் ஏதாவது குறிப்பாகச் சொல்லி இவனை வெளியில் அனுப்பச் சொல்லிக் கூட்டி வருவேன்.

என் மாமாவின் மனைவி – மாமி, சென்னையில் Special Children  னுக்கான Diploma படிப்பு படித்துவிட்டு அதற்கான பள்ளியில் volunteer ஆக இருந்ததால், அவர்களிடம் இவனைக் காட்டினால் என்ன என்று எனக்குத் தோன்றியது. அவ்ர்களிடம் அழைத்துச் சென்றேன். அவர், பீச்சுக்குச் செல்லலாம், அது அவனை free ஆக, ஒரு சில விஷயங்களை கணிக்க உதவியாக இருக்கும் என்றதால் சென்றோம்.  மகன் பீச்சுக்குச் சென்றதும், ஒரே ஓட்டம்தான் கடல் தண்ணீருக்குள் வெகு தூரம் சென்று விட்டான்.  எங்கள் கண்ணுக்கே தெரியவில்லை. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால் எனக்கென்னவோ அசாத்தியமான நம்பிக்கை. அவனுக்கு நீச்சல் தெரியுமா என்று மாமி கேட்க...தெரியும்...ஆனால் கடல் அலையில் நீச்சல் அடித்துப் பழகவில்லை என்றேன்.  சற்று நேரத்தில் பெரிய அலை ஒன்று வர இவன் அதில் அழகாக மேலே ஏறி இறங்கி அதற்கேற்றார் போல் நீந்தி கரைக்கு வந்தான். அதே போன்று எந்தத் தீம் பார்க் போனாலும் அவனுக்கு பயம் என்பதே இருந்ததில்லை.  பாம்பையும் கூட கூர்ந்து பார்த்துக் கொண்டே கையில் எடுத்துவிடுவான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். (என்ன ராம் படத்தில் வரும் “ஆட்டிஸம் ஜீவா நினைவுக்கு வருகிறாரா?!).  என் மாமிக்குக் கூட முதலில் ஆட்டிஸமாக இருக்குமோ, ADHD (Attention Deficiency Hyper Disorder) ஆக இருக்குமோ என்ற சிறிய சந்தேகம் வந்து விட்டது. ஆனால், அப்புறம் அவனை பல விதங்களில் கூர்ந்து கவனித்து, assess செய்து, “அவனுக்கு வேறு எந்தக் குறையும் இல்லை. Academics தான் பிரச்சினை. கற்றல் குறைபாடுதான். அவனை எதற்கும் வற்புருத்தி, Pressure கொடுக்காமல், அவன் வழியிலேயே போய், Soft handling செய்து, மெதுவாகச் சொல்லி சொல்லி படிக்கவும், எழுதவும் வைத்துவிட்டால் சமாளித்து விடலாம். என்றார்.
க்ளோஸ் அப்சர்வேஷனில் நான் செய்து வருவது apt என்றார்.  தாய்தானே குழந்தையின் முதல் ஆசிரியை! மட்டுமல்ல என் குழந்தையின் குறைகளைப் போக்க நான் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி எப்போதும் சிந்தித்து செயல்பட்டதும்., இறையருளும் எனக்கு உதவி இருக்கலாம். மனம் இருந்தால மார்க்கமுண்டு என்பது போல், பெற்றோர்கள் குழந்தைகளைக் கூர்ந்து கவனித்துச் சிந்தித்து செயல் பட்டால் எந்தப் பிரச்சினைகளுக்கும் (இது போன்ற கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் மட்டுமல்ல மற்ற “ஸ்பெஷல் குழந்தைகளுக்கும் நல்ல முடிவு காணலாம் என்பதை நான் உணர்ந்தேன்.


While there is still no proven cause of learning disabilities (LD), there is knowledge related to what causes LD. Here are three things that could cause LD.

1.     Heredity
Learning disabilities often run in families. Children with LD are likely to have parents or other relatives with similar difficulties. (பாரம்பரியமாக வருவதற்கும் வாய்ப்பு உண்டு எனவும் சொல்லப்படுகிறது)
2.     Problems during pregnancy and birth
An illness or injury during or before birth may cause LD. Drug and alcohol use during pregnancy, low birth weight, lack of oxygen and premature or prolonged labor may also lead to LD.(பிரசவ சமயத்தில் ஏற்படும் பிரச்சினைகளாலும் இக் குறைபாடு வரலாம்)
3.     Incidents after birth
Serious illness, head injuries, poor nutrition and exposure to toxins such as lead can contribute to LD.(தலையில் அடிபடுதல், மிகக் குறைவான சத்து, லெட் போன்ற செடி கொடி விலங்குகளில் நோய் கிருமிகளால் உண்டான நஞ்சு, இவற்றாலும்)
Learning disabilities are not caused by economic disadvantage or cultural differences, nor are they the result of lack of educational opportunity. That said, children who are denied timely and effective instruction during critical times during their development are at high risk for showing signs of LD during the school years and beyond.

எவ்வளவுதான் அவனுக்கு அன்பாகச் சொன்னாலும் யாரிடமும் அதிகம் பேசமாட்டான். விளையாடுவான். சிரிப்பான் ஆனால் உரையாடல் கிடையாது. நான் சொல்லிச் சொல்லி உரையாடவைக்க வேண்டும். தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்த மாட்டான். இப்படியாகச் சென்று கொண்டிருந்த போது இவன் மாநில அளவில் நடந்த கராத்தே டோர்னமென்டிலும், இன்டெர்நாஷனல் அளவில் மலேஷியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்திய டோர்னமேண்டிலும் முதல் பரிசு, தங்கப் பதக்கம் வென்றான். அவனை Kata”  செய்யும் பிரிவில் மட்டும்தான் அனுப்புவோம். சண்டை போடும் பிரிவில் அனுப்ப மாட்டோம்.  அவன், சர்வதேச போட்டி மலேஷியாவில் நடந்தபோது (World Karate championship) அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டான்.  ஆனால், தமிழ் நாட்டு ஸ்போர்ட்ஸ் கவுன்சிலில் கராத்தே சேர்க்கப்படவில்லை என்பதால் இவனுக்கு ஸ்பொன்சார்ஷிப் கிடைக்கவில்லை. நாங்களும் விட்டுவிட்டோம். எப்படியோ அவனை இப்படி ஊக்குவித்து 7 ஆம் வகுப்பு வரை வந்த போது, என் கணவரை அவர் வேலை செய்த கம்பெனி அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள Sunnyvale ல் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு அனுப்பியது. ஆனால், ஒரு வருடத்திலேயே திரும்பும் நிலை.....பின்லாடனின் இரட்டைக் கோபுரத் தகர்ப்பாலும் அதன் பின் விளைவாலும்....கணவர் வேலை செய்த கம்பெனி கவுந்ததாலும்.

ஆனால், இந்த அமெரிக்கப் பயணம் என் மகனுக்கு ஒரு திருப்பு முனை...அதைப் பற்றி அடுத்த இடுகை....3 ல்...
.

(மன்னிக்கவும். மீண்டும் ம்ன்னிக்க வேண்டி உங்கள் பொறுமையைச் சோதிக்க மாட்டேன். அடுத்த இடுகையில் கற்றல் குறைபாடு தொடரைக் கண்டிப்பாக முடித்து விடுவேன்.)

புதன், 8 ஜனவரி, 2014

மண்ணில் விழும் நட்சத்திரக் குழந்தைகள் நல்லவராவதும், வல்லவராவதும் பெற்றோர் வளர்ப்பினிலே - கற்றல் குறைபாடு - Learning Disability - 1



எங்கள் அகத்திற்கு வருபவர்கள் தயவு செய்து இந்தப் பதிவை வாசியுங்கள் என்பது எங்கள் வேண்டுகோள். இந்தப் பதிவு எல்லோருக்கும் என்றாலும், குறிப்பாகப் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்குமான ஒரு பதிவு. அதாவது, நர்ஸ், மருத்துவர், பெற்றோர் இவர்களின் கவனக் குறைவால் சில குழந்தைகளுக்கு ஏற்படும் கற்றல் குறைபாடு பற்றியது, அதிலும் எனது சொந்த அனுபவம்.  என் மகனிடம் இருந்தக் குறையை எப்படி அவன் கடந்து வந்தான்; நாங்கள் எப்படி அவனுக்கு உதவினோம் என்ற அனுபவம். 

உங்கள் குழந்தைகளை தயவு செய்து அடிக்காதீர்கள்.  படிக்கவில்லை என்றால் அடிக்காதீர்கள். குறிப்பாக, தரம் (Rank) அடிப்படையில் அடிக்கவே அடிக்காதீர்கள். “முட்டாள், “உனக்கு ஒன்றும் தெரியவில்லை, “அவனை/அவளைப் பார் எப்படி படிக்கின்றான்/ள் என்றும், இன்னும் பல Un parliamentary”  சொற்களை (என்னைப் பொருத்த வரை இவை தகாத வார்த்தைகள்தான்) உபயோகிக்காதீர்கள். இந்தப் பதிவு இரண்டு பாகங்களாக வரும், சற்று பெரிதாக இருப்பதாலும், ஒரு சில விஷயங்கள் கற்றல் குறைபாடு ப்ற்றி பேச வேண்டி இருப்பதாலும்.
இதனை, என் மகன் இந்த உலகிற்கு அறிமுகம் ஆனதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால், அவன் பிறந்தபோது நேர்ந்த தவறினால், அவனுக்குக் கற்றல் குறைபாடு ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது, நான் கற்று அறிந்ததும் அதுதான். என் பிரசவம் சிறிது கஷ்டமான பிரசவமாகிவிட்டது, நர்ஸ் சரியான நேரத்தில் கவனிக்காத காரணத்தினால். Prolonged Laborஎனக்கு இரண்டு முறை False labor pain வந்ததால், எங்கள் கிராமத்திலிருந்து டவுணுக்கு அடித்துப் பிடித்து செல்ல முடியாது என்ற காரணத்தினால் ஆஸ்பத்திரியிலேயே தங்கச் சொல்லிவிட்டார்கள். இரவு 11.30 மணிக்கு எனக்குப் பிரசவ வேதனை தொடங்கி,  தொடர்ந்து வலி வரத் தொடங்கியது. வராண்டாவில் நடந்து கொண்டே நர்ஸிடம் சொன்னேன். டாக்டர் வேறு ஒரு கேஸைப் பார்க்க வெளியில் சென்றிருக்கின்றார்கள் என்று சொல்லிவிட்டார்.    அப்போது மொபைல் ஃபோன் கிடையாது. அரை மணி நேரமாகக் குழந்தை அசைந்து, அசைந்து, இறுதியில் குழந்தையின் அசைவு நின்று விட்டது. குழந்தை சற்று பெரியதாக இருந்ததால், கை, கால் முட்டு, கால் விரல்கள் எல்லாமே என்னால், வெளியில் கை வைத்துப் பார்த்தாலே உணர முடிந்த்து. குழந்தை குறுக்குவாட்டில் (Horizontal ஆக) அப்படியே இருந்தது. என் அம்மா மிகவும் பயந்து விட்டார்கள். நான் சுத்தமாகப் பயப்படவில்லை. நான், என்ன செய்வது என்று தெரியாமல், வராண்டாவில் பிரார்த்தனை செய்து கொண்டே நடந்து கொண்டே இருந்தேன். குழந்தையின் அசைவு நின்றதும் நர்ஸிடம் சொன்னேன். அப்போதும் அதே பதில்......இன்னும் பனிக்குடம் உடையல இல்ல.....ஒண்ணும் இல்ல...அப்படியே நடந்துட்டு இருங்க என்றார்.  “அசைவே இல்லை.  எப்படி பனிக்குடம் உடையும் என்று கேட்டதற்கு பதில் இல்லை. 2 மணி அளவில் திரும்பவும் நர்ஸிடம் கேட்டேன், அப்போதும் அதே பதில்தான். நேரம் ஆக ஆக, என்ன செய்வது என்று அறியாமல், மனம் வருந்தி, நான் பொறுமையாக நடப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லை. வீட்டிலும் ஃபோன் வசதி கிடையாது. அந்த இரவில் ஆஸ்பத்திரியை விட்டு போகவும் முடியாது அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.  ஆண்கள் யாரும் இல்லை. 3.30 மணி அளவில் ப்ளீடிங்க் (Bleeding) ஆரம்பித்தது. திரும்பவும் எனது கெஞ்சல், நர்ஸின் அதே பதில். காலை 6.30 மணிக்கு டாக்டர் வரும் வரை நான் அப்படியே நடந்தும், உட்கார்ந்தும்....பிரார்த்தித்துக் கொண்டே, மனம் தளராமல், எப்படியும் குழந்தை நல்லபடியாக பிறந்து விடும் என்று பொறுமையாக இருந்தேன். டாக்டர் உள்ளே வரும்போதெ, “நீ எல்லாம் படிச்ச பொண்ணா?  நர்ஸ் கூடதானே இருந்தாங்க, சொல்லி என்னைக் கூப்பிட வேண்டியதுதானே? (அவர்கள் வீடு மாடியில். கீழே ஆஸ்பத்திரி.  உள் வழியாகப் போக முடியாது.  நான் நர்ஸை நம்பியதால்).  இந்த மாதிரி படிச்சவங்க எல்லாம் செய்ய வேண்டியது அப்புறம் எங்க மேல பழி போட வேண்டியது என்று திட்டிக் கொண்டே என்னைச் செக் செய்யத் தொடங்கினார்கள், எனிமா கொடுக்க்ச் சொன்னார்கள்.....  நான் அப்போது நர்ஸைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.  அவர்கள் தான் எனக்கு எல்லாம் செய்ய வேண்டும். டாக்டரின் கணவர் Anesthesiologist. அவர் குழந்தையின் heart beat செக் செய்தார். அவர் உடனே டாக்டரிடம் ஏதோ சொல்ல, உடனே எனக்கு C section க்கு- (சிசேரியனுக்கு) ஏற்பாடு செய்யத் தொடங்கினார்கள். எனக்கு நிலைமை புரிந்து விட்டது. குழந்தை உயிருடனா, இல்லையா...நம்பிக்கையுடன் பிரார்த்தனைதான். நான் பயப்படவும் இல்லை அழவும் இல்லை. இவர்களது ஆஸ்பத்திரியில் அதற்கான வசதி இல்லாததால், இந்த டாக்டர் செல்லும், அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்ள வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு ஃபோன் செய்து தியேட்டர் எல்லம் ரெடி பண்ணச் சொல்லவும், அந்த ஆஸ்பத்திரிக்கு நாங்கள் சென்றோம். அங்கு சென்றதும், ஆப்பரேஷனுக்கான எல்லா ஏற்பாடுகளும் எனக்கும் செய்து விட்டு, பின்பக்கம் கீழே (Lower Back) மயக்க ஊசி போட்டதும், என் கண்கள் மூடப்பட்டாலும் எனக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதை அனுமானிக்க முடிந்தது. அறுப்பது எல்லமே வலி இல்லையென்றாலும் உணர முடிந்தது. 9.57 குழந்தையை வெளியே எடுத்தார்கள். குழந்தையின் அழுகைச் சத்தம் இல்லை. தியேட்டரில் அதுவரை இருந்த பேச்சுக் குரல் நின்றது.  மயான அமைதி. நானும் கவலைப் படவில்லை. பிரார்த்தனை ஒன்றுதான். நம்பிக்கை, குழந்தை கண்டிப்பாக உயிருடன் இருக்கும் என்று.  அப்போது, எனக்கு குழந்தை அழவில்லை என்றால் பிரச்சினை வரும் என்பதைப் பற்றிய அறிவு இல்லை. சிறிது நேரம் கழித்து குழந்தையின் சத்தம் மெதுவாகக் கேட்டது. டாக்டர் “ஹப்பா என்று பெருமூச்சொன்று விட்டு, ஆண் குழந்தை, 4 kg, நல்ல நிறம், European Baby மாதிரி இருக்கிறான் என்று தகவல் சொன்னார். நான் பின்னர் நர்ஸைப் பற்றி சொல்ல, அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிந்தேன்.


அவன் வளரும் போது வேறு எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டாலும் எல்லமே சிறிது மெதுவாகத்தான் செய்வான். படியில் இறங்க வேண்டும் என்றால், உட்கார்ந்து, காலை முதலில் கீழே விட்டு ஆழம் பார்ப்பது போல் பார்த்து பின்னர்தான் இறங்குவான். சேட்டைகள் அதிகம் இல்லை. பேப்பர் கிழிக்க மாட்டான். நான் வரைவதைப் பார்த்து அவனும் பேப்பரில் ப்ரஷ்ஷை வைத்து கலர் அடித்து வரைவான். இவை எல்லாம் 1 ¼ வயதில். அவன் என்னுடன் ஓடி ஆடி விளையாடுவான் ஆனால் வார்த்தைகள் வரவில்லை. நான் அவனுக்குத் தோழி.  மற்ற குழந்தைகள் அவனுக்குச் சரிவரவில்லை. அவர்கள் எல்லோரும் சேட்டை செய்பவர்கள். அதுதானே இயல்பு. திருவனந்தபுரத்தில், நாங்கள் அப்போது குடியிருந்த வீட்டின் மாடியில் இருந்த பையன் திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜில் ஸ்டுடன்ட். ஹவுஸ் சர்ஜன்ஸி பண்ணிக் கொண்டிருந்தார். அச்சமயம் அதுவும் குழந்தைகள் பிரிவில். எனக்கு அவர் குடும்பமே நல்ல நண்பர்கள். என் மகன் அவர்கள் வீட்டில் தான் விளையாடுவான். அவர் என் மகனை தினமும் கொஞ்சி விட்டு அவன் வாயில் கை வைத்து “கடி பாப்பா என்பார்.  பின்னர் பாப்பா பெயர் என்ன? அப்பா பெயர் என்ன, அம்மா பெயர் என்ன? இப்படி கேட்பார். தினமும் வாயில் கை வைத்துக் “கடி பாப்பா என்பார். எனக்குப் புரியவில்லை.  அவர் ஏதோ தனக்காக செய்து பார்க்கிறார் என்று விட்டுவிட்டேன். 
  
ஒரு நாள் மழை பெய்த போது என் மகனுக்கு உணவு கொடுத்துக் கொண்டே மழை என்று சொல்லிக் கொடுத்து மழை எப்படிப் பெய்யும், அதாவது தண்ணீர் ஆவியாகி........ என்ற அறிவியல் விளக்கத்தை அவனுக்குப் புரியும் வகையில் சொன்னேன்.  பின்னர், ஒரு நாள், நான் அடுப்பில் தண்ணீர் சுடவைக்க மூடியிட்டு தண்ணீர் கொதித்தவுடன் மூடியை எடுத்தவுடன் அதிலிருந்து சொட்டிய நீர்த் துளிகளைப் பார்த்து, தண்ணீர் ஆவியையும் பார்த்து உடன் என்னிடம் அதையும், மழையையும் ஒப்பிட்டு தன் சைகையால் சொன்னவுடன் எனக்கு ஆச்சரியம். அவனிடம் சிறிய குறை தெரிந்தாலும், அவனிடம் ஒரு தனித்தன்மை இருப்பது போல் தெரிந்தது. எதையுமே ஆராய்ந்து பார்க்கும் ஒரு பழக்கம்.  நுனிப்புல் மேயாமல். ஆனால் மற்றவர்களுக்கு அவன் குறை தெரியவில்லை. 
2 வயதிற்கு மேல்தான் பேச்சு வந்தது. அப்போது அவன் தன் அப்பாவிடம் சுவரில் மாட்டிவைத்திருந்த சுவர் கடிகாரத்தைக் காட்டி சைகயால் அது என்ன என்றான்.  அதற்கு என் கணவர், “வாட்ச் என்றார். உடனே, இல்லை என்பதற்காக தலையை ஆட்டிவிட்டு “Clock” என்று சொல்லிவிட்டு, கையில் மணிக்கட்டைக் காட்டி “வாட்ச் என்றான். அதே போன்று “Kite” என்ற சொல்லைக் கேட்டால் அவன் பருந்தையும் காட்டி, பட்டத்தையும் காட்டுவான். இது போன்று பல விஷயங்கள், சொற்கள், அதை உபயோகிக்கும் விதம் அவனது சில நடவடிக்கைகள், செய்கை எல்லாமே எனக்கு ஏதோ உணர்த்தியது. அவன் மற்ற குழந்தைகளுடன் நன்றாகப் பழகி, விளையாட வேண்டும் என்று சீக்கிரமாகவே பக்கத்திலிருந்த நர்ஸரியில் சேர்த்து விட்டோம். அவன் விளையாடினாலும், நண்பர்கள் என்று அப்படி எதுவும் ஸ்பெஷலாக அவன் யாருடனும் பழகவில்லை. கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் சரியாகிவிடும் என்று நினைத்து விட்டோம். பின்னர் LKG வகுப்பில் சேர்க்க பொது அறிவு, கணக்கு, இதெல்லாம் தயார் படுத்த அவ்வளவு கஷ்டமாகத் தெரியவில்லை. அவன் பொது அறிவு நன்றாக இருந்தது. அதுவும் விலங்குகள், புவியியல் சம்பந்தப்பட்ட வினாக்கள், ஒரு வார்த்தை என்பதால், அவனுக்கு அத்துபடியாக இருந்ததால் அவன் படிப்பைப் பற்றிய குறைபாடு தெரியவில்லை. ஒன்றாம் வகுப்பில் வந்தாயிற்று. அவன் பெரிய வாக்கியங்கள் எழுதவும், வீட்டுப் பாடம் செய்யவும் கஷடப்பட்டான். கணக்கில் வெறும் நம்பர் மட்டும் என்றால் நன்றாகச் செய்வான். வகைக் கணக்கு (Word Problem) என்றால் மிகவும் கஷ்டப்படுவான். எங்களுக்கு அவன் குறைபாடு தெரியவில்லை. சோம்பேறித்தனம் என்று நினைத்தோம்.  ஆனால், கோபப்பட்டதில்லை. அப்போது, ஒரு நாள், டாக்டர் பையன் Orthopedics  மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தவர் வந்தார். அன்றும் அவர் அவன் வாயில் விரல் கொடுத்து “கடி பாப்பா என்றார்.  அம்மா பெயர் என்ன, அப்பா பெயர் என்னா.......என்பதை வேகமாக, மாற்றி மாற்றிக் கேட்டார்.

“என்ன கிருஷ்ணா, சின்னவனா இருந்தபோதும் இதையேதான் செஞ்ச.  இப்ப அவன் வளர்ந்து 1 ஆம் வகுப்பு வந்தாச்சு. இன்னமும், நீ ஒரு டாக்டரா இருந்தும் இப்படி கை எல்லாம் வாயில் விட்டு செய்யறியே.  அப்புறம் கேள்வி வேகமா கேக்கற...என்ன இது எதுக்கு இப்படி செய்யற?  என்றேன். அதற்கு அவர்,

இல்ல விரல் விட்டு “கடி அப்படினா உடனே கடிக்கணும். அப்பவும் இவன் கடிக்கல இப்பவும் இவன் கடிக்க மாட்டேன்றான்.  அம்மா பெயர் என்ன......அப்படி எல்லாம் கேட்டா அவன் உடனே பதில் சொல்ல மாட்டேங்கறான். கொஞ்சம் யோசிச்சுதான் பதில் சொல்லறான் என்றார்.
அதற்கு நான், “அப்படினா என்ன பிரச்சினை என்றேன். 



அவர், “பிரச்சினைனு இல்ல.  ஸ்கூல்ல அவன் டீச்சர்ஸ் சப்போர்ட் கிடைச்சுதுனா, முன் (Front) பெஞ்சில் இருப்பான்.  இல்லை என்றால் பாக்(Back) பெஞ்சில்தான் இருப்பான் என்றார். ஆனால், அவர் வேறு விளக்கம் கொடுக்கவில்லை என்பதால் எனக்கும் அதைப் பற்றி யோசிக்கவோ,கேட்கவோ தெரியவில்லை என்பதைவிட எனக்கு அப்போது அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை எனலாம்.

12 ஆம் வகுப்பு வரை Back  பெஞ்சில் இருந்த மகன், கற்றல் குறைபாடு இருந்தவன், இப்போது கால்நடை மருத்துவராகி, கானடா சென்று Clinical Training  எடுத்துக் கொண்டு Diplomate of American College of Veterinary Surgery வாங்க வேண்டும் என்ற துடிப்பில், அதற்கான பரீட்சையில் ECFVGA (Education Council For  Foreign Veterinary Graduates) நடத்தும் முதல் கட்டம் BCSE (Basic Clinical Science Exam) க்ளியர் செய்து விட்டு, NAVLE (North American Veterinary licensing examபரீட்சை எழுத முயற்சி செய்து கொண்டிருக்கின்றான் என்றால்  (இதற்கு பிறகும் ஒரு பரீட்சை இருக்கின்றது CPE (Clinical Proficiency Exam)  இது அங்கு Clinical Training பயிற்சி செய்த பிறகுதான், அங்கு சென்றுதான் க்ளியர் செய்ய வேண்டும்.) இதெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று என்பதும், அதனுடன், கற்றல் குறைபாடு பற்றியும், அடுத்த இடுகையில்.

பி.கு. எனது மகனின் கால்நடை மருத்துவ மேற்படிப்பைக் குறித்து  எழுதியதன் நோக்கம். இதை வாசிக்கும், கால்நடை மருத்துவர்களோ இல்லை அவர்களது பெற்றோரோ தங்கள் மகனோ, மகளோ கால்நடை மருத்துவ மேற்படிப்பு வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்டால் அதற்கான வழிமுறைகள் என்ன, அதனைப் பற்றிய தகவல்கள் முழுவதும் அறிய உதவுமே என்பதுதான்.


செவ்வாய், 7 ஜனவரி, 2014

முயற்சி திருவினை ஆக்கிய GSLV D 5





கடந்த ஞாயிறு 4.18 pm முதல் 4.36pm  வரையிலான நேரம் இந்தியாவின் பொன்னான நேரம்.  கடந்த 3 முறை முயன்ற போதும் நேர்ந்தது போல் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழக் கூடாது என்று இந்தியர்கள் பிரார்த்தித்த நேரம்.  EDUSAT ற்குப் பதிலாக விண்வெளிக்கு விடப்பட்ட GSAT – 14  செயற்கைக் கோளை, GSLV D 5 ராக்கேட் சுமந்து செல்கிறதே என்ற ஆதங்கம் மட்டும் அல்ல, வெற்றி கண்டால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட க்ரையோஜெனிக் டெக்னாலஜி மூலம், விண்வெளிஏவுகலங்களை விடும் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், யூரோப்பியன் ஸ்பேஸ் ஏஜன்ஸி மற்றும் சீனா போன்ற 5 நாடுகளுக்குப் பின் 6 ஆவது நாடாக இந்தியா அறியப்படும் என்ற எதிர்பார்ப்பும் கூடத்தான்.  குறைவான பாரமும், கூடுதலான தள்ளும் சக்தியையும் அளிக்கும் வித்தைதான் க்ரையோஜெனிக் டெக்னாலஜி. -253 டிகிரி செல்ஷியஸில் ஹைட்ரஜனும், -183 டிகிரி செல்ஷியஸில் ஆக்சிஜனும், திரவ ரூபத்தில் ஆக்கப்பட்டுதான் இதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன. ஏவுகலம் புறப்படுவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்பு மட்டுமே இத்திரவங்கள் ஏவுகலத்தில் நிறைக்கப்பட வேண்டும். முன்பு நேர்ந்த தோல்விகளுக்குக் காரணமான எல்லாக் குறைபாடுகளையும் நீக்கி, மிகவும் கவனமாக நம் விஞ்ஞானிகள் திருவனந்தபுரம் VSSC யிலும், வலியமலை LPSC யிலும், மகேந்திரகிரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிலும் செயல்பட்டதுதான் வெற்றிக்கு உறுதுணையானது. அவர்கள் சிந்திய வியர்வை வீண் போகவில்லை. அவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு இந்தியனின் உளமார்ந்த பாராட்டுக்கள்.



1990 ல் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யாவின் உதவியுடன் க்ரையோஜெனிக் எஞ்சின் உபயோகித்து ஏவுகலங்கள் விடுவதை தடை செய்வதில் வெற்றி கண்டபோது இந்திய விஞ்ஞானிகள் Where there is a will there is a way” என முயற்சியை மேற்கொண்டார்கள். மூன்று தோல்விகளைக் கண்டும் அவர்கள் துவளாமல், 4 ஆம் முறை வெற்றிக் கொடி நாட்டி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார்கள். இதன் வாயிலாக 4000 கிலோ வரையுள்ள ஸாட்டில்லைட்டுகளை விண்வெளிப்பாதையில் கொண்டு செல்லும் திறமையை நம் ISRO பெற்றிருக்கிறது. இனி, ISRO க்கு விண்வெளிக்கு மனினை அனுப்புவதும் எளிதே! இந்த சாதனைக்கு உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுமே பாராட்டுக்குறியவர்களே! ஊழல்கள், விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரே நடக்கும் கொடுமைகள் இவற்றை எல்லாம் நினைத்து வருந்தும் இந்திய மக்களுக்கு இது போன்ற சம்பவங்கள் பாலைவனச் சோலை தரும் சுகம் தரத்தான் செய்கிறது.!!


புதன், 1 ஜனவரி, 2014

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே!


13 எனும் எண் அதிர்ஷ்டமில்லாதது என்று எல்லோரும் சொல்வார்கள்.  2013- ம் (2+0+1+3 = 6) அப்படித்தான்.  6 ம், 100 ம் வேண்டாம் என்று சொல்பவர்களும் உண்டு.  ஆனால், இவ்வருடம் எனக்கும், என் நண்பர் துளசிதரனுக்கும் இன்றியமையாதது, அதிர்ஷ்டமானது. ஏன்?! எப்படி!!?

28 ஆண்டுகளாக, வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சிச் சூழ்சியால் காணாமல் போயிருந்த நாங்கள், பிரிந்திருந்த நாங்கள், Net, Youtube  போன்ற  Communication Technology யின் உதவியால் சந்தித்த வருடம். 28 ஆண்டுகளுக்கு முன்பு செய்த கலை, மற்றும் எழுத்துப் பயணத்தை மீண்டும் நாங்கள் ஒன்றாகச் செய்யத் தொடங்கிட (அதே Communication Technology யின் உதவியுடன்) உதவிய வருடம். எங்கள் இரு குடும்பத்தாரின் நல்ல உள்ளங்கள் ஒருவருக்கொருவர் காணவும், பேசவும், பழகவும் உதவிய வருடம்.  நாங்கள் இருவரும் இணைந்து ஒரு வலைப்பூவை ஆரம்பிக்க உதவிய வருடம்.  தமிழ் மணத்தில் எங்கள் வலைப்பூவை பதிவு செய்து, நல்ல இதயம் உள்ள, தமிழ் ஆர்வமும், எழுத்தார்வமும், எழுத்தாற்றலும் உள்ள திறமை மிக்க நண்பர்கள் கிடைக்கப்பெற்ற வருடம்.
 
வலைப்பதிவர்கள் எல்லோருக்கும், தில்லைஅகத்திற்கு வருகை தந்து, நாங்கள் கிறுக்குவதை வாசித்து, எங்களை ஊக்குவிக்கும் எல்லா அன்பர்களுக்கும், பின்னூட்டம் இடவில்லை என்றாலும், இந்த அகத்திற்கு வருகை தரும், வாசிக்கும், பார்வையிடும், உலகம் முழுக்க இருக்கும் எல்லா அன்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இத்தனை இனிமைக்கும் காரணமான ஏப்ரல் மாதம், 2013 ஐ நினைத்தாலே இனிக்கும் மாதம்!!!.  அம் மாதத்திலிருந்து இன்று வரை நடந்த எங்கள் நிகழ்வுகளுடன், அந்த இனிய ஏப்ரல், மே மாதங்களுடன் 28 வருடங்களுக்கு முந்னால், இதற்கெல்லாம் முதற் காரணமான இப்போது நினைத்தாலும் தித்திக்கும் என் கல்லூரி வாழ்க்கை நாட்களையும், அதுவும் என் நண்பருடன் மகிழ்ச்சியுடன் சென்றதைப் பற்றியும் தவிர்க்கப்பட இயலாததால், (புட்டுக்குத் தேங்காய் பூ போல) இடையே இணத்து, உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்தப் புத்தாண்டு நாளான இந்த நாளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.


நடுவில் short kurtha போட்டு இருப்பவர்தான் என் நண்பர் துளசிதரன் 


ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து எழுத முடியுமா என்று உங்கள் எல்லோருக்கும் தோன்றியதா என்று தெரியவில்லை ஆனால், நிறைய அன்பர்களுக்குத் தோன்றியதென்னவோ உண்மை. அதுவும் வேறு வேறு இடத்திலிருந்து கொண்டு! கேட்கவும் செய்தார்கள்! 

எனது கேள்வி ஏன் எழுத முடியாது? அதுவும் ஒத்த, கருத்துக்கள், சிந்தனைகள்,  ஆர்வங்கள், வாழ்க்கை லட்சியங்கள் என்னும் பல ஒத்து இருக்கும் போது, ஏன் முடியாது?

எங்களுக்குள்ளும் வாக்குவாதம், தர்கம் வராது என்பதில்லை. வருவதுண்டு.  ஆனால், இருவருக்குமே ஈகோ இல்லாததால, ஒருவருடைய கருத்தை மற்றவர் செவி கொடுத்துக் கேட்டு, தர்கத்திலிருந்து, கருத்து பறிமாற்றத்திற்கு வருவதால், ஒருவரது கருத்து சரியென்றால் மற்றவர் விட்டுக் கொடுத்துப் போவதால், எங்கள் அன்பும், நட்பும் துணை போவதால் எழுத முடிகின்றது.  பலருக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது!!

28 வருடங்களுக்கு முன், நான் முதுகலை பொருளாதாரம் சேர்ந்த போது, அதே கல்லூரியில், எனது நண்பர், எனக்கு ஒரு வருடம் சீனியராக (வயதில் என்னை விட 3 வயது பெரியவர்) முதுகலை ஆங்கில இலக்கியப் பிரிவில் இருந்தார்.  சேர்ந்த பொழுதில் பரிச்சயமில்லை. அவர் அச்சமயம் மதுரை வாசி அதனால் விடுதி மாணவர். நான் தினமும் என் கிராமத்திலிருந்து கல்லூரி வருபவள். கிராமம் ஆனதால், பஸ் வசதி மிகக் குறைவு. கிராமத்திலிருந்து டவுணுக்கு வந்து அங்கிருந்து கல்லூரிக்கு பஸ் இருந்தாலும் நான் நடந்துதான் செல்வேன்.  ஏனென்றால், அதற்கு வீட்டில் காசு தரமாட்டார்கள். 

அதனால், காலையில் வெகு சீக்கிரமாக கல்லூரிக்கு வந்து விடுவேன். வந்து கல்லூரி தொடங்கும் வரை கல்லூரி ஆடிட்டோரியத்தின் அருகே உள்ள ஒரு தாழ்மையான பகுதியில் மரங்கள் அதிகம் இருக்கும் இடத்தில் உட்கார்ந்து என் பாடங்களைப் படித்தல், நோட்ஸ் எழுதுதல் போனறவை செய்து கொண்டு இருப்பது வழக்கம். அப்பகுதியில் யாருமே இருக்கமாட்டார்கள் ஆதலால். மயான அமைதி என்று சொல்வார்களே அப்படி இருக்கும். 

அப்பகுதி வழியாகத்தான் சில விடுதி மாணவர்கள் பக்கத்தில் இருக்கும் வாழைத் தோப்பில் உள்ள பம்ப்செட்டுக்குச் சென்று குளிப்பார்கள் என்பது எனக்கு அப்போது தெரியாது. ஒரு நாள் திடீரென என் முன்னே உயரமான ஒருவர் வந்து ஒரு அதட்டும் குரலில் (அதற்கு பெயர் ராகிங்காம்?!!! அவர் பின்னர் சொன்னது) “இவ்வளவு சீக்கிரம் வந்து, இங்க உக்காந்து என்ன பண்றீங்க?  First Year ஆ? இங்க எல்லாம் இப்படி வந்து உட்காரக் கூடாது, என்றார்.




நான் எழுந்து நேரே அவர் அருகில் சென்று அவரை நேருக்கு நேர் பார்த்து, என் பெயரைச் சொல்லி, என் பிரிவு, வருடம் எல்லாம் சொல்லி படித்துகொண்டிருப்பதாகச் சொல்லி “ஏன் உட்காரக் கூடாது என்று நான் கேட்டதும், அவர் சிறிது தயங்கிவிட்டார்.  

இப்படித் தைரியமாக சீனியரிடம் நேருக்கு நேர் எந்தப் பெண்ணும் பார்த்து பேசமாட்டார்கள். பயந்து விலகிச் சென்று விடுவார்கள் அதுவும் ஆண் சீனியர் என்றால்.....பின்னர் நண்பர் சமாளித்து என்னிடம் தன்னைப் பற்றிக் கூறினார்.  என் தைரியம் அவருக்கு வியப்பாக இருந்ததாகச் சொன்னார். இப்படியாக எங்கள் நட்பு ஆரம்பித்து, அவர் டிராமா, மோனோ ஆக்டிங்க், பேச்சு என்று கல்லூரி விழாவிலும், ஹாஸ்டல் டே விழாவிலும் கலக்கியது பற்றி என் வகுப்பு விடுதி மாணவர்களிடமிருந்து தெரிய வந்தது. நானும் நாடகம், மோனோ ஆக்டிங்க், மாறுவேடப் போட்டி, கட்டுரை, பேச்சுப் போட்டி, பெயின்டிங்க் போட்டி என்று கலந்து பல பரிசுகள் வென்றதுண்டு.

அப்போதுதான், 1984ல், நாகர்கோவிலில் வானொலி நிலையம் ஆரம்பித்தது. ஒலிபரப்பு ஆரம்பித்த முதல் நாள்,  முதல் நிகழ்சியே என்னுடையதுதான்.  பூதப்பாண்டி கோயிலைப் பற்றிய உரைச்சித்திரம்.  அதைத் தொடர்ந்து நான் பாரதியார் பிறந்தநாள், நேரு பிறந்த நாள் என்று நிகழ்சிகள் கொடுத்தேன்.  நண்பரும் "நியாயம் காக்கப் புறப்பட்டவன்" என்ற சிறுகதையும், என்னுடைய சீனியரான திரு. அண்ணாதுரையின் நாட்டுபுறப்பாடல்களுக்கு விளக்கவுரையும் கொடுத்தார். இப்படி இந்த நிகழ்சிகள் வாயிலாக எங்கள் நட்பு வலுப்பெற்றது. அச்சமயம், அவரது டிபார்ட்மெண்டில் பேராசிரியர் திரு நடராஜன் அவர்கள் Doctorate பெற்றதற்கு நடந்த பாராட்டு விழாவில், என் நண்பர் இராமாயணத்தில் சேதுபாலம் கட்டுவதில் அணிலின் பங்கு போல் தானும் தன் பங்கிற்கு பேராசிரியருக்குப் பாராட்டுத் தெரிவிக்கிறேன் என்று பேசியது வெகுவாக என்னைக் கவர்ந்தது எனச் சொல்லலாம்.  என் நண்பருக்குக் கல்லூரியில் மிக நல்ல பெயர்.



வலது பக்கத்திலிருந்து இரண்டாவதாக உட்கார்ந்து இருப்பவர் என் நண்பர் துளசிதரன்


இப்படியாக, எங்கள் ஆர்வங்கள் எங்கள் நட்பை வளர்த்தது. அவர் என்னைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். நான் அவரைப் பற்றிக்கேட்டுத் தெரிந்து கொண்டேன் நாங்கள் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வதுண்டு. எழுத்துக்கள், வாசித்தல், நிகழ்வுகள் பற்றி எல்லாம் பேசுவதுண்டு.  அவரது படிப்பு முடியும் தருவாய் வந்தது.  அப்போது அவரது பெற்றோர் கேரளாவில் உள்ள, நிலம்பூருக்குச் சென்றுவிட்டார்கள். எனவே, அவர் எனக்கு அவரது கேரளா விலாசத்தைக் கொடுத்து, எனக்கு ஒரு ஆட்டொக்ராஃபும் போட்டுக் கொடுத்தார். கடிதப் போக்குவரத்து 2, 3 டன் முடிந்தது. அதுவும் என்னால் தான். காரணம் என் வீட்டுச் சூழ்நிலை.  மிக மிக நல்ல உள்ளம் கொண்ட, என்னையும் மதித்த, சற்றும் ஈகோ இல்லாத, அமைதியான, ஒத்தச் சிந்தனை உள்ள ஒரு நல்ல நண்பரை இழந்தோமே என்ற வருத்தம் என்னை மிகவும் வருத்தியது.

காலச்சக்கரம் சுழன்று சூழ்ச்சி செய்து அடித்தது. எனக்குத் திருமணம் ஆனது.. கிடைத்த Central Gvot. வேலையும் சேர முடியவில்லை. என் கல்லூரி தைரியமெல்லாம் காணாமல் போனது.  என் எழுத்துக்களும், கற்பனையும் வறண்டு போனது. நண்பரின் விலாசம் பல வீடுகள் மாறியதில் காணாமல் போனது. கணவர் சென்னைவாசி தான் என்றாலும் திருவனந்தபுரம், கோயம்பத்தூர், சென்னை, அமெரிக்கா, சென்னை, பங்களூர், என்று சுற்றி இப்போது சென்னைவாசி. 

நான்  என் நண்பரை 28 வருடங்களாகத் தேடினேன். அப்போது நெட் வசதி இல்லை.  அமெரிக்கா செல்வதற்கு முன் நெட் வந்தது.  வலை வீசித் தேடினேன்.  அமெரிக்கா சென்ற போதும் அங்கிருந்தும் வலை வீசினேன்.  தொடர்ந்து வீசிக் கொண்டிருந்தேன்.  நான் அப்போதும் தேடுவதை நிறுத்தவில்லை.  நான் என் சுய ஆர்வத்தாலும், எனது ஒரே மகன் Learing disablility (கற்றல் குறைபாடு) யினால் கஷ்டப்பட்டதாலும், நான்  Educational Psychology  பற்றி படித்து தெரிந்து கொண்டேன். (இப்போது அவன் நல்ல கால்நடைமருத்துவராக, மேற்கொண்டு படிக்கவும் முயற்சி செய்கிறான். அவன் எப்படித் தன் தடையைத் தாண்டி வந்தான், இதைப் பற்றி பின்னர் தனி இடுகை) 

அதன் காரணமாக நான் சென்னையில் உள்ள ஒரு சில குழந்தைகளுக்கு ஒரு சிறிய அளவில் நான் அறிந்ததை வைத்து உதவியாக இருந்து வந்தேன்.  அச்சமயமும் தேடுதலை நிறுத்தாத நான் சென்ற ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி, கூகுளில் interactive activities for special children” என்று தேடிய போது மற்றொரு Tab ல் என் நண்பர் பெயரையும் போட்டு, அவர் ஊர் பெயரும் போட்டு, தேடிக் கொண்டிருந்தேன்.  அப்போதுதான் நண்பர் கிடைத்தார்.

அவர் இயக்கிய குறும்படங்களின் பெயரும், அவரைப் பற்றிய குறிப்புகளும் கிடைக்கப் பெற அதில் அவர் ஃபோட்டோ இல்லாததால் அது அவர் தானா என்பதை ஆழமாகத் தேட அவர் ஃபோட்டோவும் கிடைக்க, திரும்பவும் அவர் ஈமெயில்,ஃபோன் நம்பர் எதுவும் கிடைக்காமல் 4 நாட்கள் தேடித், தேடி பின்னர், அவர் எழுதிய புத்தகம் Pothi.com ல் கிடைக்கப்பெற அதிலிருந்து அவர் ஈமெயிலும், ஃபோன் நம்பரும் கிடைக்க, உடன் ஏப்ரல் 26அம் தேதி, என்னைப் பற்றி ஒரு suspense வைத்து அவருக்கு ஒரு ஈமெயில் தட்டி விட, அவர் சற்றுக் குழம்பி, ஆனால் உறுதியாக அடுத்த நாள் அதாவது 27ஆம் தேதி அவரிடமிருந்து எனது மொபைல் ஃபோனுக்கு மெசேஜ் வந்தது பாருங்கள் “நான் கண்ட (என் கிராமத்தின் பெயர் போட்டு) அந்தப் பெண் தானே என்று. 

நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. உடன் அவரைக் கூப்பிட்டு பேசி 28 வருடங்கள் கழித்து நண்பரின் குரல் கேட்டு ஆனந்தம்.  அவர் அடைந்த மகிழ்ச்சியை இங்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. ஏற்கனவே, 29, 30 எனக்கு கோயம்புத்தூரில் ஒரு குடும்ப விசேஷத்திற்குப் போக இருந்ததால் நான் சென்று 29ஆம் தேதி அவரைச் சந்தித்தேன்.

அப்போதுதான் அவர் தனது 3வது குறும்படமான ‘carpenter the great” , எடுத்து முடித்திருந்த சமயம்.  அதற்குத் தமிழ் சப்டைட்டில் எழுத என்னிடம் கொடுத்துவிட்டார். அதன் பிறகு, அதை மாணவர்களுக்காக Preview show வும், அதன் பின்னர், அந்தக் குறும்படத்தினை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் interactive session உம் நடத்தப்பட்டு அதுவும் படம் பிடிக்கப்பட்டு குறும்படத்தின் Pre and Post activities ஆக குறும்படத்தின் பாகமாக்கப்பட்டது -இது, நண்பரின் மனைவி பணிபுரியும் பள்ளி  "ஸ்ரீ விவேகானந்தா ஹையர் செகண்டரி ஸ்கூல், பாலேமாடு, மலப்புரத்தில் நடந்தது- இந்த நிகழ்ச்சிக்காகவும், அதற்கான Felicitation  ஐ என் பொறுப்பில் அவர் விட்டதாலும், அதற்காக நான் சென்ற போது அவரது வீட்டில் 2 நாட்கள் தங்கி அவரது குடும்பத்தாருடன் சந்தோஷித்து....அவரது வீட்டில் அவர் அக்காவிற்கும், குழந்தைகளுக்கும் நான் pet ஆகி அவரது வீட்டில் நானும் ஒரு அங்கத்தினர் தற்பொது. 

அதன் பின்னரும் சென்று வந்தாகி விட்டது.  அவரது வீட்டில் எனக்கு பரிபூரண சுதந்திரம். அவர்கள் நான்வெஜ் சாப்பிட்டாலும், நான், எனக்கு வேண்டிய வெஜ் செய்து சாப்பிடலாம். எனக்கு மட்டுமல்ல அவர்கள் எல்லோருக்கும் சமைத்தும் கொடுக்கலாம். ஒரு வேளை நான் செல்லும் சமயம் நான்வெஜ் சமைத்திருந்தால் எனக்காக அவர்கள் வெஜ் சமைத்தும் தருவார்கள். எங்கு வேண்டுமானாலும் நான் உட்கார்வேன், படுப்பேன் கம்ப்யூட்டர் தட்டுவேன், குழந்தைகளோடு விளையாடுவேன்...எல்லாம் என் இஷ்டம்தான் அங்கு.   அத்தனைக்கு சுதந்திரம்....குடும்ப உறுப்பினர்.  இதோ இந்தப் புத்தாண்டில் அடுத்த சில நாட்களில் அவரது வீட்டிற்குப் பயணப் ப்ளான் இருக்கிறது. 

அவரைக் கண்டபிறகு, நண்பரும் கூட தான் எழுதியதை அப்படியே இத்தனை வருடங்களாக வைத்திருந்தததை அறிய, .நானும் அவரும் பேசி திரும்பவும் எழுத ஆரம்பிக்கலாம் என்று இதோ வலைப்பூ ஆரம்பித்து உங்கள் எல்லோருடனும் வலைப்பூ வழியாகப் பேசவும் ஆரம்பித்துவிட்டோம். ஏப்ரல் 27 அன்று தொடங்கிய எங்கள் பேச்சு தினமும் தொடர்கிறது.  வலைப்பூ குறித்தும், பிற விஷயங்கள் குறித்தும், சினிமா மற்றும் பல பல விஷயங்கள் குறித்தும் பேசுவது அரட்டை அகம் வாயிலாக உங்கள் முன்னும் வருகிறதே!. இதற்கெல்லாம் காரணமான 2013 எங்கள் இருவருக்கும் ஒரு இனிய பொன்னான வருடம் தானே! அதுமட்டுமா!  எங்கோ இருக்கும் நீங்கள் இதை வாசித்து எங்கள் அனுபவங்களை வாசித்து எங்களுடன் பயணம் செய்கிறீர்களே! இதை விட வேறு என்ன வேண்டும்?! நீங்களும் எங்களுக்குக் கிடைத்த பொக்கிஷம்தானே!! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்களது உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!