13 எனும் எண் அதிர்ஷ்டமில்லாதது என்று எல்லோரும்
சொல்வார்கள். 2013- ம் (2+0+1+3 = 6)
அப்படித்தான். 6 ம், 100 ம் வேண்டாம்
என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால்,
இவ்வருடம் எனக்கும், என் நண்பர் துளசிதரனுக்கும் இன்றியமையாதது, அதிர்ஷ்டமானது.
ஏன்?! எப்படி!!?
28 ஆண்டுகளாக, வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சிச் சூழ்சியால்
காணாமல் போயிருந்த நாங்கள், பிரிந்திருந்த நாங்கள், Net, Youtube போன்ற Communication Technology யின் உதவியால் சந்தித்த வருடம். 28 ஆண்டுகளுக்கு
முன்பு செய்த கலை, மற்றும் எழுத்துப் பயணத்தை மீண்டும் நாங்கள் ஒன்றாகச் செய்யத்
தொடங்கிட (அதே Communication Technology யின் உதவியுடன்) உதவிய வருடம். எங்கள் இரு குடும்பத்தாரின் நல்ல உள்ளங்கள்
ஒருவருக்கொருவர் காணவும், பேசவும், பழகவும் உதவிய வருடம். நாங்கள் இருவரும் இணைந்து ஒரு வலைப்பூவை
ஆரம்பிக்க உதவிய வருடம். தமிழ் மணத்தில்
எங்கள் வலைப்பூவை பதிவு செய்து, நல்ல இதயம் உள்ள, தமிழ் ஆர்வமும், எழுத்தார்வமும்,
எழுத்தாற்றலும் உள்ள திறமை மிக்க நண்பர்கள் கிடைக்கப்பெற்ற வருடம்.
வலைப்பதிவர்கள் எல்லோருக்கும், தில்லைஅகத்திற்கு வருகை தந்து, நாங்கள்
கிறுக்குவதை வாசித்து, எங்களை ஊக்குவிக்கும் எல்லா அன்பர்களுக்கும், பின்னூட்டம்
இடவில்லை என்றாலும், இந்த அகத்திற்கு வருகை தரும், வாசிக்கும், பார்வையிடும்,
உலகம் முழுக்க இருக்கும் எல்லா அன்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்!
இத்தனை இனிமைக்கும் காரணமான ஏப்ரல் மாதம், 2013 ஐ
நினைத்தாலே இனிக்கும் மாதம்!!!. அம்
மாதத்திலிருந்து இன்று வரை நடந்த எங்கள் நிகழ்வுகளுடன், அந்த இனிய ஏப்ரல், மே
மாதங்களுடன் 28 வருடங்களுக்கு முந்னால், இதற்கெல்லாம் முதற் காரணமான இப்போது
நினைத்தாலும் தித்திக்கும் என் கல்லூரி வாழ்க்கை நாட்களையும், அதுவும் என்
நண்பருடன் மகிழ்ச்சியுடன் சென்றதைப் பற்றியும் தவிர்க்கப்பட இயலாததால்,
(புட்டுக்குத் தேங்காய் பூ போல) இடையே இணத்து, உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்தப் புத்தாண்டு நாளான இந்த நாளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
நடுவில் short kurtha போட்டு இருப்பவர்தான் என் நண்பர் துளசிதரன்
ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து எழுத முடியுமா என்று உங்கள்
எல்லோருக்கும் தோன்றியதா என்று தெரியவில்லை ஆனால், நிறைய அன்பர்களுக்குத்
தோன்றியதென்னவோ உண்மை. அதுவும் வேறு வேறு இடத்திலிருந்து கொண்டு! கேட்கவும்
செய்தார்கள்!
எனது கேள்வி ஏன் எழுத முடியாது? அதுவும் ஒத்த, கருத்துக்கள்,
சிந்தனைகள், ஆர்வங்கள், வாழ்க்கை
லட்சியங்கள் என்னும் பல ஒத்து இருக்கும் போது, ஏன் முடியாது?
எங்களுக்குள்ளும்
வாக்குவாதம், தர்கம் வராது என்பதில்லை. வருவதுண்டு. ஆனால், இருவருக்குமே ஈகோ இல்லாததால, ஒருவருடைய
கருத்தை மற்றவர் செவி கொடுத்துக் கேட்டு, தர்கத்திலிருந்து, கருத்து பறிமாற்றத்திற்கு
வருவதால், ஒருவரது கருத்து சரியென்றால் மற்றவர் விட்டுக் கொடுத்துப் போவதால்,
எங்கள் அன்பும், நட்பும் துணை போவதால் எழுத முடிகின்றது. பலருக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது!!
28 வருடங்களுக்கு முன், நான் முதுகலை பொருளாதாரம் சேர்ந்த
போது, அதே கல்லூரியில், எனது நண்பர், எனக்கு ஒரு வருடம் சீனியராக (வயதில் என்னை
விட 3 வயது பெரியவர்) முதுகலை ஆங்கில இலக்கியப் பிரிவில் இருந்தார். சேர்ந்த பொழுதில் பரிச்சயமில்லை. அவர் அச்சமயம்
மதுரை வாசி அதனால் விடுதி மாணவர். நான் தினமும் என் கிராமத்திலிருந்து கல்லூரி
வருபவள். கிராமம் ஆனதால், பஸ் வசதி மிகக் குறைவு. கிராமத்திலிருந்து டவுணுக்கு
வந்து அங்கிருந்து கல்லூரிக்கு பஸ் இருந்தாலும் நான் நடந்துதான் செல்வேன். ஏனென்றால், அதற்கு வீட்டில் காசு
தரமாட்டார்கள்.
அதனால், காலையில் வெகு சீக்கிரமாக கல்லூரிக்கு வந்து விடுவேன்.
வந்து கல்லூரி தொடங்கும் வரை கல்லூரி ஆடிட்டோரியத்தின் அருகே உள்ள ஒரு தாழ்மையான
பகுதியில் மரங்கள் அதிகம் இருக்கும் இடத்தில் உட்கார்ந்து என் பாடங்களைப்
படித்தல், நோட்ஸ் எழுதுதல் போனறவை செய்து கொண்டு இருப்பது வழக்கம். அப்பகுதியில்
யாருமே இருக்கமாட்டார்கள் ஆதலால். மயான அமைதி என்று சொல்வார்களே அப்படி இருக்கும்.
அப்பகுதி வழியாகத்தான் சில விடுதி மாணவர்கள் பக்கத்தில் இருக்கும் வாழைத் தோப்பில்
உள்ள பம்ப்செட்டுக்குச் சென்று குளிப்பார்கள் என்பது எனக்கு அப்போது தெரியாது. ஒரு
நாள் திடீரென என் முன்னே உயரமான ஒருவர் வந்து ஒரு அதட்டும் குரலில் (அதற்கு பெயர்
ராகிங்காம்?!!! அவர் பின்னர் சொன்னது) “இவ்வளவு சீக்கிரம் வந்து, இங்க உக்காந்து
என்ன பண்றீங்க? First Year ஆ? இங்க எல்லாம் இப்படி வந்து உட்காரக் கூடாது”, என்றார்.
நான் எழுந்து நேரே அவர் அருகில் சென்று அவரை
நேருக்கு நேர் பார்த்து, என் பெயரைச் சொல்லி, என் பிரிவு, வருடம் எல்லாம் சொல்லி
படித்துகொண்டிருப்பதாகச் சொல்லி “ஏன் உட்காரக் கூடாது” என்று நான் கேட்டதும், அவர் சிறிது தயங்கிவிட்டார்.
இப்படித் தைரியமாக சீனியரிடம் நேருக்கு நேர்
எந்தப் பெண்ணும் பார்த்து பேசமாட்டார்கள். பயந்து விலகிச் சென்று விடுவார்கள் அதுவும் ஆண் சீனியர் என்றால்.....பின்னர்
நண்பர் சமாளித்து என்னிடம் தன்னைப் பற்றிக் கூறினார். என் தைரியம் அவருக்கு வியப்பாக இருந்ததாகச்
சொன்னார். இப்படியாக எங்கள் நட்பு ஆரம்பித்து, அவர் டிராமா, மோனோ ஆக்டிங்க்,
பேச்சு என்று கல்லூரி விழாவிலும், ஹாஸ்டல் டே விழாவிலும் கலக்கியது பற்றி என்
வகுப்பு விடுதி மாணவர்களிடமிருந்து தெரிய வந்தது. நானும் நாடகம், மோனோ ஆக்டிங்க்,
மாறுவேடப் போட்டி, கட்டுரை, பேச்சுப் போட்டி, பெயின்டிங்க் போட்டி என்று கலந்து பல
பரிசுகள் வென்றதுண்டு.
அப்போதுதான், 1984ல், நாகர்கோவிலில் வானொலி
நிலையம் ஆரம்பித்தது. ஒலிபரப்பு ஆரம்பித்த முதல் நாள், முதல் நிகழ்சியே என்னுடையதுதான்.
பூதப்பாண்டி கோயிலைப் பற்றிய உரைச்சித்திரம். அதைத் தொடர்ந்து நான் பாரதியார் பிறந்தநாள்,
நேரு பிறந்த நாள் என்று நிகழ்சிகள் கொடுத்தேன்.
நண்பரும் "நியாயம் காக்கப் புறப்பட்டவன்" என்ற சிறுகதையும், என்னுடைய சீனியரான
திரு. அண்ணாதுரையின் நாட்டுபுறப்பாடல்களுக்கு விளக்கவுரையும் கொடுத்தார். இப்படி
இந்த நிகழ்சிகள் வாயிலாக எங்கள் நட்பு வலுப்பெற்றது. அச்சமயம், அவரது
டிபார்ட்மெண்டில் பேராசிரியர் திரு நடராஜன் அவர்கள் Doctorate பெற்றதற்கு நடந்த பாராட்டு விழாவில், என் நண்பர் இராமாயணத்தில்
சேதுபாலம் கட்டுவதில் அணிலின் பங்கு போல் தானும் தன் பங்கிற்கு பேராசிரியருக்குப்
பாராட்டுத் தெரிவிக்கிறேன் என்று பேசியது வெகுவாக என்னைக் கவர்ந்தது எனச்
சொல்லலாம். என் நண்பருக்குக் கல்லூரியில்
மிக நல்ல பெயர்.
வலது பக்கத்திலிருந்து இரண்டாவதாக உட்கார்ந்து இருப்பவர் என் நண்பர் துளசிதரன்
இப்படியாக, எங்கள் ஆர்வங்கள் எங்கள் நட்பை
வளர்த்தது. அவர் என்னைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். நான் அவரைப்
பற்றிக்கேட்டுத் தெரிந்து கொண்டேன் நாங்கள் ஒருவருக்கொருவர் பாராட்டிக்
கொள்வதுண்டு. எழுத்துக்கள், வாசித்தல், நிகழ்வுகள் பற்றி எல்லாம் பேசுவதுண்டு. அவரது படிப்பு முடியும் தருவாய் வந்தது. அப்போது அவரது பெற்றோர் கேரளாவில் உள்ள, நிலம்பூருக்குச் சென்றுவிட்டார்கள்.
எனவே, அவர் எனக்கு அவரது கேரளா விலாசத்தைக் கொடுத்து, எனக்கு ஒரு ஆட்டொக்ராஃபும் போட்டுக்
கொடுத்தார். கடிதப் போக்குவரத்து 2, 3 டன் முடிந்தது. அதுவும் என்னால் தான். காரணம்
என் வீட்டுச் சூழ்நிலை. மிக மிக நல்ல
உள்ளம் கொண்ட, என்னையும் மதித்த, சற்றும் ஈகோ இல்லாத, அமைதியான, ஒத்தச் சிந்தனை
உள்ள ஒரு நல்ல நண்பரை இழந்தோமே என்ற வருத்தம் என்னை மிகவும் வருத்தியது.
காலச்சக்கரம் சுழன்று சூழ்ச்சி செய்து அடித்தது. எனக்குத் திருமணம்
ஆனது.. கிடைத்த Central Gvot. வேலையும் சேர முடியவில்லை. என் கல்லூரி தைரியமெல்லாம்
காணாமல் போனது. என் எழுத்துக்களும்,
கற்பனையும் வறண்டு போனது. நண்பரின் விலாசம் பல வீடுகள் மாறியதில் காணாமல் போனது. கணவர்
சென்னைவாசி தான் என்றாலும் திருவனந்தபுரம், கோயம்பத்தூர், சென்னை, அமெரிக்கா,
சென்னை, பங்களூர், என்று சுற்றி இப்போது சென்னைவாசி.
நான் என் நண்பரை 28 வருடங்களாகத் தேடினேன். அப்போது
நெட் வசதி இல்லை. அமெரிக்கா செல்வதற்கு
முன் நெட் வந்தது. வலை வீசித்
தேடினேன். அமெரிக்கா சென்ற போதும்
அங்கிருந்தும் வலை வீசினேன். தொடர்ந்து
வீசிக் கொண்டிருந்தேன். நான் அப்போதும் தேடுவதை
நிறுத்தவில்லை. நான் என் சுய ஆர்வத்தாலும்,
எனது ஒரே மகன் Learing disablility (கற்றல் குறைபாடு) யினால் கஷ்டப்பட்டதாலும், நான் Educational Psychology பற்றி படித்து
தெரிந்து கொண்டேன். (இப்போது அவன் நல்ல கால்நடைமருத்துவராக, மேற்கொண்டு படிக்கவும் முயற்சி செய்கிறான். அவன் எப்படித் தன் தடையைத் தாண்டி வந்தான், இதைப் பற்றி பின்னர் தனி இடுகை)
அதன் காரணமாக நான் சென்னையில் உள்ள ஒரு சில குழந்தைகளுக்கு ஒரு
சிறிய அளவில் நான் அறிந்ததை வைத்து உதவியாக இருந்து வந்தேன். அச்சமயமும் தேடுதலை நிறுத்தாத நான் சென்ற
ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி, கூகுளில் “interactive activities for special children” என்று தேடிய போது மற்றொரு Tab ல் என் நண்பர் பெயரையும் போட்டு, அவர் ஊர்
பெயரும் போட்டு, தேடிக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் நண்பர் கிடைத்தார்.
அவர் இயக்கிய குறும்படங்களின் பெயரும், அவரைப்
பற்றிய குறிப்புகளும் கிடைக்கப் பெற அதில் அவர் ஃபோட்டோ இல்லாததால் அது அவர் தானா
என்பதை ஆழமாகத் தேட அவர் ஃபோட்டோவும் கிடைக்க, திரும்பவும் அவர் ஈமெயில்,ஃபோன் நம்பர்
எதுவும் கிடைக்காமல் 4 நாட்கள் தேடித், தேடி பின்னர், அவர் எழுதிய புத்தகம் Pothi.com ல் கிடைக்கப்பெற அதிலிருந்து அவர் ஈமெயிலும், ஃபோன் நம்பரும் கிடைக்க, உடன் ஏப்ரல் 26அம் தேதி, என்னைப் பற்றி ஒரு suspense வைத்து அவருக்கு ஒரு ஈமெயில் தட்டி விட, அவர்
சற்றுக் குழம்பி, ஆனால் உறுதியாக அடுத்த நாள் அதாவது 27ஆம் தேதி அவரிடமிருந்து எனது
மொபைல் ஃபோனுக்கு மெசேஜ் வந்தது பாருங்கள் “நான் கண்ட (என் கிராமத்தின் பெயர் போட்டு) அந்தப்
பெண் தானே” என்று.
நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
உடன் அவரைக் கூப்பிட்டு பேசி 28 வருடங்கள் கழித்து நண்பரின் குரல் கேட்டு
ஆனந்தம். அவர் அடைந்த மகிழ்ச்சியை இங்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. ஏற்கனவே, 29, 30 எனக்கு
கோயம்புத்தூரில் ஒரு குடும்ப விசேஷத்திற்குப் போக இருந்ததால் நான் சென்று 29ஆம்
தேதி அவரைச் சந்தித்தேன்.
அப்போதுதான்
அவர் தனது 3வது குறும்படமான ‘carpenter the great” , எடுத்து முடித்திருந்த சமயம். அதற்குத் தமிழ் சப்டைட்டில் எழுத என்னிடம்
கொடுத்துவிட்டார். அதன் பிறகு, அதை
மாணவர்களுக்காக Preview show வும், அதன் பின்னர், அந்தக் குறும்படத்தினை அடிப்படையாகக்
கொண்டு மாணவர்களின் interactive session உம் நடத்தப்பட்டு அதுவும் படம் பிடிக்கப்பட்டு
குறும்படத்தின் Pre and Post activities ஆக குறும்படத்தின் பாகமாக்கப்பட்டது -இது, நண்பரின் மனைவி பணிபுரியும் பள்ளி "ஸ்ரீ விவேகானந்தா ஹையர் செகண்டரி ஸ்கூல், பாலேமாடு, மலப்புரத்தில் நடந்தது- இந்த நிகழ்ச்சிக்காகவும், அதற்கான Felicitation ஐ என் பொறுப்பில் அவர் விட்டதாலும், அதற்காக நான் சென்ற
போது அவரது வீட்டில் 2 நாட்கள் தங்கி அவரது குடும்பத்தாருடன் சந்தோஷித்து....அவரது
வீட்டில் அவர் அக்காவிற்கும், குழந்தைகளுக்கும் நான் pet ஆகி அவரது வீட்டில் நானும் ஒரு அங்கத்தினர் தற்பொது.
அதன் பின்னரும் சென்று வந்தாகி விட்டது.
அவரது வீட்டில் எனக்கு பரிபூரண சுதந்திரம். அவர்கள் நான்வெஜ்
சாப்பிட்டாலும், நான், எனக்கு வேண்டிய வெஜ் செய்து சாப்பிடலாம். எனக்கு மட்டுமல்ல
அவர்கள் எல்லோருக்கும் சமைத்தும் கொடுக்கலாம். ஒரு வேளை நான் செல்லும் சமயம் நான்வெஜ் சமைத்திருந்தால் எனக்காக அவர்கள் வெஜ் சமைத்தும் தருவார்கள். எங்கு வேண்டுமானாலும் நான்
உட்கார்வேன், படுப்பேன் கம்ப்யூட்டர் தட்டுவேன், குழந்தைகளோடு
விளையாடுவேன்...எல்லாம் என் இஷ்டம்தான் அங்கு.
அத்தனைக்கு சுதந்திரம்....குடும்ப உறுப்பினர். இதோ இந்தப் புத்தாண்டில் அடுத்த சில நாட்களில்
அவரது வீட்டிற்குப் பயணப் ப்ளான் இருக்கிறது.
அவரைக் கண்டபிறகு, நண்பரும் கூட தான் எழுதியதை அப்படியே
இத்தனை வருடங்களாக வைத்திருந்தததை அறிய, .நானும் அவரும் பேசி திரும்பவும் எழுத
ஆரம்பிக்கலாம் என்று இதோ வலைப்பூ ஆரம்பித்து உங்கள் எல்லோருடனும் வலைப்பூ வழியாகப்
பேசவும் ஆரம்பித்துவிட்டோம். ஏப்ரல் 27 அன்று தொடங்கிய எங்கள் பேச்சு தினமும்
தொடர்கிறது. வலைப்பூ குறித்தும், பிற
விஷயங்கள் குறித்தும், சினிமா மற்றும் பல பல விஷயங்கள் குறித்தும் பேசுவது அரட்டை
அகம் வாயிலாக உங்கள் முன்னும் வருகிறதே!. இதற்கெல்லாம் காரணமான 2013 எங்கள்
இருவருக்கும் ஒரு இனிய பொன்னான வருடம் தானே! அதுமட்டுமா! எங்கோ இருக்கும் நீங்கள் இதை வாசித்து எங்கள்
அனுபவங்களை வாசித்து எங்களுடன் பயணம் செய்கிறீர்களே! இதை விட வேறு என்ன வேண்டும்?!
நீங்களும் எங்களுக்குக் கிடைத்த பொக்கிஷம்தானே!! உங்களுக்கும் உங்கள்
குடும்பத்தாருக்கும் எங்களது உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
நல்ல பதிவு! +1
பதிலளிநீக்குdocumented Learing disablility (கற்றல் குறைபாடு) இருந்தால் பரீட்சைக்கு அதிக நேரம் கொடுப்பார்கள்; சிலருக்கு சத்தம் ஆகாது என்றால் அவர்களுக்கு தனி ரூம். இப்படி பல வசதிகள் உண்டு. எந்த பரிட்சை எழுதினாலும் (GRE, GMAT, இப்படி) இந்த சலுகை உண்டு!
நன்றி நம்பள்கி! தங்கள் கூறும் சலுகைகள் பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் இங்கு செல்லுபடியாகது. ஆகவில்லை. எங்களுக்கு அவனது குறைபாடு முதலில் சற்று குழப்பமாக இருந்தது. அவனுக்கு எழுத்துக்களை மாற்றி எழுதும் பழக்கமும், (B, D, s மாற்றி எழுதுவதும், spelling பிரச்சினையும் (dyslexic child ஆ என்ற குழப்பம்) இருந்தது. அவனுக்கு எழுதுவது என்பது இப்போதும் கொஞ்சம் கஷ்டம்தான். மற்றபடி புத்திசாலி, அதுவும், Rational thinking in profession too, lateral thinking, differential diagnosis எல்லாம். இதைப் பற்றியும், நம் கல்வு முறை பற்றியும் ஒரு இடுகை எழுத நினைத்துள்ளேன். இங்கு நம் கல்வி முறையால் அதுவும் 15 வருடங்களுக்கு முன்னால், மிகவும் கஷ்டப்பட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு நான் அதை விவரித்தால் இந்தப் பதில் பெரிதாகிவிடும் என்பதால் இதை நான் ஒரு இடுகையாக எழுத நினைத்துள்ளேன். ஏன் என்றால் நம் ஊரில் பெற்றோர் மதிபெண் அடிப்படையில் குழந்தைகளை அடித்து, அவர்களைப் புரிந்து கொள்ளாமல், அவர்களது தாழ்வுமனப்பான்மைக்குக் காரணமாகிவிட்டு பின் அவர்ககளை முட்டாள் என்று சொல்லுவது தவறு என்று சொல்லி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே என்ற ஒரு நோக்கத்தில்!
நீக்குமிகவும் நன்றி தங்கள் ஊக்கத்திற்கு!
உங்கள் மகிழ்ச்சி உற்சாகம் இரண்டும் இப்போது
பதிலளிநீக்குஎங்கள் மனங்களில்...வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்திற்கும்!!
நீக்குtha.ma 2
பதிலளிநீக்குமிக்க நன்றி!
நீக்குநல்லதொரு குடும்பப் படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியது தங்கள் கதையும் எழுத்தும்...
பதிலளிநீக்குதங்கள் நட்பு மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
ஆஹா! இப்படி பாராட்டிவிட்டிங்களே! ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது நைனா!!
நீக்குதங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!! அல்லாம் போட்டச்சுக்கும் சேர்த்துத்தான்!!
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே! தங்கள் வாழ்த்திற்கு!! மிக்க நன்றி!!
நீக்குஉங்களின் நட்பு நினைத்தாலே மகிழ்ச்சி... பரவசம்... பாராட்டுக்கள் ஐயா...
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி நன்பரே! தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி!!
நீக்குசுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்...
பதிலளிநீக்குLink : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-1.html
அன்புடன் DD
அருமையான தங்கள் பதிவை வாசித்து பின்னூட்டமும் இட்டாகிவிட்டது ஓட்டுடன்!!
நீக்குபிரிந்தவர் மீண்டும் சேர்ந்து செய்து வரும் பணி பாராட்டுக்குரியது .வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்கு+1
நன்றி! பகவான் ஜி! தங்கள் வருகைக்கும், ஊக்கத்திற்கும், வாழ்த்திற்கும்!!
பதிலளிநீக்கு