சனி, 11 ஜனவரி, 2014

அமெரிக்கக் கல்வி முறையும், இந்தியக் கல்வி முறையும், கற்றல் குறைபாடு இருந்த குழந்தையும் LD - 3


அமெரிக்கப் பயணம், அமெரிக்க கல்வி முறை என் மகனின் வாழ்வில ஒரு பெரிய திருப்பு முனை. கண்டிப்பாக அந்தக் கல்வி மகனை எப்படி மாற்றியது என்பதை இங்கு சொல்லியே ஆக வேண்டும். ஆம், 7 ஆம் வகுப்பில் சேர, அங்கு அவனுக்கு ஒரு சிறிய தேர்வு வைத்தார்கள். குறிப்பாக ஆங்கில அறிவும், கணக்கும் அவனது வயதுக்கு ஏற்றார் போல் உள்ளதா என்று அறிய. இங்கு அவர்களது முறையை விளக்க ஆரம்பித்தால் மிகப் பெரிதாகி விடும் அதனால் இந்தத் தலைப்பிற்கு வேண்டியது மட்டும் இங்கு பகிர்கின்றேன். நாங்கள் இங்கிருந்து செல்லும் முன்னரே நான் நெட்டில் எல்லாம் ஆராய்ந்து எந்த ஸ்கூல் அதைச் சுற்றி எந்த அபார்ட்மென்ட், இவனது கராத்தே ஸ்டைல் அங்கு எங்கு உள்ளது என்பது முதற் கொண்டு, முடிவு செய்து சென்றேன். மகனை பப்ளிக் ஸ்கூலில் சேர்த்ததால் இவனது டெஸ்ட் School Districtல் நடந்தது.  பள்ளியில் அல்ல. (அமெரிக்காவில், கலிஃபோர்னியாவில் Cupertino School District ல் உள்ள பள்ளிகள், பப்ளிக் பள்ளிகளுமே நல்ல தரம் வாய்ந்தவை.  இங்குள்ள அரசுப் பள்ளிகள் போல் அல்ல)


இவனை டெஸ்ட் செய்த ஆசிரியை நம் வட இந்தியாவைச் சேர்ந்தவர். அவர் டெஸ்ட் செய்துவிட்டு இவனை Borderline Child”  என்று சொல்லி எங்களிடம் “நீங்கள் உங்கள் குழந்தைக்கு வேண்டிய நல்ல சப்போர்ட் கொடுப்பதாக இருந்தால் அவனை “Main Stream” ல் சேர்த்து விடலாம். இல்லை என்றால் அவனுக்கான பள்ளியில் சேர்த்துவிடலாம் என்று எங்களிடமே முடிவெடுக்கக் கூறினார். 

நாங்கள் முதலாவதைத் தேர்ந்தெடுத்தோம்.  “MainStream”.   அவரும் இவனை அசெஸ் பண்ணிய விவரங்களை எழுதி பள்ளிக்கு அனுப்பிவிட்டார். நானும் இவனது குறைபாடு பற்றி படித்து என் அறிவையும், கையாளும் முறையையும் வளர்த்துக் கொண்டேன். தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இந்த லிங்கிற்கு சென்று வாசிக்கலாம்.



இவனைப் பள்ளியில் நடத்திய விதம் சொன்னால் நம்ப மாட்டீர்கள் அத்தனை மரியாதை, மதிப்பு!  இவன் எது நன்றாகச் செய்தாலும் உடன் எங்களுக்கு மெயில் வரும், கூப்பிட்டுப் பாராட்டுவார்கள் அவனையும், எங்களையும்! அவனது கணக்கு ஆசிரியைக்கும், சோசியல் நடத்திய ஆசிரியைக்கும், அறிவியல் நடத்திய ஆசிரியைக்கும் நெருக்கமானவன் ஆனான்.  இவனுடைய பொது அறிவு அந்த ஆசிரியையை மிகவும் கவர்ந்துவிட்டது. கணித ஆசிரியை அவனுக்கு Word Problem  தான், எழுத பிரச்சினை என்று அறிந்து அவனுக்கு அதில் பயிற்சி அளித்தார். ஆங்கில ஆசிரியைகள் இருவர் இருந்தனர். ஒருவர் நம் வட இந்தியாவைச் சேர்ந்தவர்.  மற்றொருவர் அமெரிக்கர். இவனது ஆங்கில அறிவு B grade வாங்கும் அளவு முன்னேறியது! எங்கள் அனுமானத்திற்கு எதிராக, அமெரிக்க ஆசிரியை இவனது முன்னேற்றத்தை உச்சி முகர்ந்து பாராட்டினார். ஆனால், நம் இந்திய ஆசிரியை கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல அவனைப் பற்றி குறைதான் கூறினார்கள். ஏன் என்பது இன்னமும் எனக்குப் புரியாத புதிர்! வகுப்பில் சில பாடங்களை மாணவர்களிடமே அசைன்மென்டாகக் கொடுத்து, அதை வகுப்பில் இவர்கள் நடத்த வேண்டும்.  நாங்கள் எதிர்பார்த்ததை விட இவன் மிக நன்றாக நடத்தியிருந்திருக்கிறான். அறிவியலிலும் அதுவும் பயாலஜியில் நல்ல அறிவு. அந்த ஒரு ஆசிரியை தவிர மற்ற ஆசிரியைகள் எல்லாரும் இவனது சிறிய குறைக்கு நடுவிலும், அறிவையும், திறமையையும், presentation skill ஐயும் பாராட்டிக் கொண்டாடினார்கள்.மகனின் கால்நடைமருத்துவ ஆசையையும் ஊக்கப்படுத்தினர். இவனது செயலில், படிப்பில் எல்லாமுமே நல்ல முன்னேற்றம். தன்னம்பிக்கை உயர்ந்தது.

இங்கு ஒன்று சொல்லியே ஆக வேண்டும்.  அங்கு வகுப்பில் மாணவர்கள் சந்தேகம் கேட்டால், ஆசிரியை தனக்குத் தெரிந்தால் உடனே அதை விளக்கித் தீர்த்து வைப்பார்.  தனக்குத் தெரியவில்லை என்றால், உடன் கம்ப்யூட்டரில் நெட்டைத்தட்டி கண்டுபிடித்து விளக்கிவிடுவார்.  இல்லை என்றால் மறுநாள் விளக்குவதாகக் கூறி, மறு நாள் வகுப்பில் முதல் வேலையாக முதல் நாள் கேட்கப்பட்ட சந்தேகங்களைத் தீர்த்துவிட்டு, கேள்வி கேட்ட மாணவர்களைப் பாராட்டி விட்டுத்தான் வகுப்பை ஆரம்பிப்பார்கள். இது எனது மகனின் அனுபவம். இது நம் இந்தியாவில் அப்படியே தலைகீழான அனுபவம் மகனுக்கு.  இந்தியா திரும்பும் சமயம் அவனது ஆசிரியைகள் எல்லாரும் இவனைப் பாராட்டி, வாழ்த்தி, Miss You” என்று அட்டைகள் வழங்கிக் கொண்டாடினார்கள். எங்கள் மகனையும் மதித்து நடத்தி, அவன் முன்னேற்றத்திற்கும், தன்னம்பிக்கை உயரவும் உதவிய அந்த ஆசிரியைகள் அனைவருக்கும் எங்கள் நன்றி என்றுமே உண்டு! Hats off to all those Teachers!!

அங்கும் ஒக்கினாவா கொஜுரியு கராத்தேயில் உலகின் மிகச் சிறந்த கிரான்ட் மாஸ்டராக விளங்கிய யமாகுச்சியின் நேரடி மாணவரான கார்னல் வாட்ஸ்ன் என்பவரிடம் இவனைச் சேர்த்தோம்.  அங்கும் மிக நல்ல பெயர்.  இவனது திறமையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்.  அங்கு வந்த எல்லா மாணவர்களுக்கும் இவனை மிகவும் பிடித்துப் போக அவர்களுடன் நன்றாகப் பழக ஆரம்பித்தான். பெரியவர்களுடனும். அங்கு அவர்களுடன் சேர்ந்து தங்கியும், அவர்களுடன் பீச்சில் சென்று விளையாடி, கராத்தே செய்து, இப்படி பல விஷயங்கள் அவனது தன்னம்பிக்கையை வளர்த்தது. நாங்கள் இந்தியா திரும்பும் சமயம் மாஸ்டர், “ஒரு ஆசிரியருக்கு நல்ல மாணவன் கிடைப்பது அரிது.  கிடைத்தாலும் ஒன்று அல்லது இரண்டுதான்.  உங்கள் மகன் எனக்குக் கிடைத்த அரிதான ஒரு மாணவன்.   I miss him! If you come back to this place please give him to me”

முதலில் அங்கேயும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தவன், அபார்ட்மென்ட் குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்தான். பேசிப் பழகாதவன் பேசிப் பழக ஆரம்பித்தான்!  பள்ளியிலும் நண்பர்கள் சேர்ந்தனர். அரைப் பக்கமாவது எழுத ஆரம்பித்தான். நல்ல முன்னேற்றம். இந்த முன்னேற்றம் அவனை மட்டுமல்ல, எங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது! ஒரு நல்ல பாஸிட்டிவ் சூழ்நிலை ஒரு குறைபாடு உள்ளக் குழந்தையைக் கூட எப்படி மாற்றுகின்றது! நானும் அவனுக்கு சிறு வயது முதல் தன் வேலையைத் தானே செய்யக் கற்றுக் கொடுத்து, எனக்கும் வீட்டில் உதவி செய்யக் கற்றுக் கொடுத்தேன். மகனுக்கு நல்ல முன்னேற்றம் தொடங்கிய சமயம், அடுத்த 3 மாதங்களில் இந்தியாவிற்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை வந்துவிட நாங்கள் Back to India.

இங்கு 8 ஆம் வகுப்பு சேர முதலில் பள்ளி அமெரிக்க கல்வியை ஒத்துக் கொள்ளாவிட்டாலும் பின்னர் சேர்த்துக் கொண்டுவிட்டனர். இங்கு வந்ததும் திரும்பவும் பழையபடி ஆமை ஓட்டிற்குள் புகுந்து கொள்வது போல ஆனது. வீணை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டான்,  சேர்த்தோம். அது அவன் “mind body coordination” க்கு உதவியது. சைக்கிள் கற்றுக் கொடுத்து சைக்கிளில் பள்ளிக்குப் போக வைத்தோம். எனது strategies ம் பழையபடி அவன் படுத்தால் நானும் படுத்து, அவன் பின்னாலேயே போய்க் கொண்டே வாசித்துக் கொண்டே அவன் காதில் விழுந்தால் போதும் என்று.....திரும்பவும் இந்தி படிக்க வைத்து...இப்படி 10 ஆம் வகுப்பு வந்து, அதில் அரையாண்டு பரீட்சையில் மகன் 60% தான் வாங்கியதால் (அப்போதெல்லாம் அரையாண்ட்டுத் தேர்வு அடிப்படையில்தான் 11 ஆம் வகுப்பு அட்மிஷன்) 11 ஆம் வகுப்பிற்கு பயாலஜி பாடப் பிரிவு தர மாட்டோம், CBSE பொதுத்தேர்வில் இவன் 90 க்கு மேல் எடுத்தால்தான் பயாலஜி என்று கூறிவிட நாங்கள் அவனை கால்நடை மருத்துவம் பற்றி நினைவு படுத்தி அவனை சந்தோஷப் படுத்தி, 10ஆம் வகுப்பில் அறிவியலும், கணக்கும் சேர்த்து 92% வாங்கி விட்டான்.  ஆனால், பள்ளியில் பயாலஜி கொடுக்க மறுத்தனர். 

“அவனால் 11, 12 ஆம் வகுப்பு படிக்க முடியாது. அவன் மிகவும் கஷ்டப்படுவான்.  அவனுக்கு அவ்வளவு திறமை இல்லை என்றனர்.

நாங்கள் விவாதம் செய்தோம்.  “அவனது திறமையை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். ஒரு மாணவனின் எதிர்காலத்தை 10ஆம் வகுப்பிலேயே முடக்கக் கூடாது. உங்களுக்கு அந்த உரிமை கிடையாது. எல்லாருக்கும் அவரவர் விரும்பும் கல்வித் துறையை படிக்கும் உரிமை உண்டு.   மகன் 2 ஆம் வகுப்பிலிருந்து கால்நடை மருத்துவம் படிக்க வேண்டும் எனறு ஆசைப்பட அதை நாங்கள் ஊக்கப்படுத்திக் கொண்டுவந்துள்ளோம். இப்போது பயாலஜி அவன் படிக்கவில்லை என்றால் அவன் கால்நடை மருத்துவம் அப்ளை கூட செய்ய முடியாது. 12 ஆம் வகுப்பிற்கு பிறகு அவன் விரும்புவது கிடைக்கிறதோ, கிடைக்காமல் போகிறதோ. அது அப்போது. அதை ஏன் இப்போதே தடுக்க வேண்டும்?.

கோர்டிற்கு போவோம் என்றும் சொன்னோம். நாங்கள் இந்த இடத்தில் அமெரிக்கக் கல்வி முறையை, தனிமனிதனின் கல்வி விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் உரிமையையும், கல்வித் துறையில் உள்ள flexibility யையும் ரொம்பவே நினைத்துக் கொண்டோம்.

கோர்ட் என்றவுடன், 10 நாட்கள் கழித்து பயாலஜி கொடுத்தார்கள்!. பரவாயில்லை.  அவன் வகுப்பில் Back Bench  தான். ஸ்பெஷல் வகுப்புகள், ட்யூஷன் எதிலும் எங்களுக்கு ஆர்வமில்லை ஏன் என்றால் இந்தக் குறைபாட்டைக் கையாளும் அளவிற்கு வகுப்புகள் இங்கு இல்லை. ஆதலால், நாங்கள் அவனுக்கு வீட்டிலேயே பயிற்சி கொடுத்து, பெரிய விடைகளை எல்லாம் சிறிது சிறிதாகப் பிரித்து தேவையான பாயின்ட்ஸ் படிக்க வைத்து,  எழுதவைத்து பயிற்சி கொடுத்தோம். எழுதுதல் கஷ்டப்பட்டாலும் முன்னேற்றம் நன்றாகவே இருந்தது. அவனுடைய வித்தியாசமான எண்ணங்களும், நமது கல்வி முறையும் முரண்பட்டதால் வந்த கஷ்டமே.  அவனது முறை கொஞ்சம் ஸ்லோ. படிப்படியாகத்தான் ஏறும். எங்களுக்குத் தெரியும் அவன் இறுதிப் பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெற்று விடுவான் என்று. எனவே, ஆசிரியர்கள் சொன்ன கமென்ட்ஸிற்கு நாங்கள் காது கொடுக்கவில்லை. 12 ஆம் வகுப்பில் 87% எடுத்துவிட்டான்.  ஆனால், கால்நடை மருத்துவ சேர்க்கை, தமிழ்நாட்டில் wait list 1 ல், வந்தது என்றாலும் யுனிவர்சிட்டியில் கேட்டதற்கு இறுதிவரை அவனுக்குக் கிடைக்கும் என்ற உத்தரவாதம் தரவில்லை. எனவே, பாண்டிச்சேரியிலும் அப்ளை செய்து, கிடைக்கப் பெற்று, 7.3 OGPA  எடுத்து, இப்போது, இங்கு படித்து ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவரின் கீழ் பயிற்சி மருத்துவராக 1 ½ வருடமாக வேலை செய்து வருகிறான். 

இப்போதும் எழுதுதல் கொஞ்சம் பிரச்சினைதான். ஸ்லோ தான். பேசிப் பழகுதல், Socialization  வாசித்தல், ஆங்கில அறிவு, ஆங்கிலம், தமிழ் சினிமாக்கள் பார்த்து அலசுதல், இப்படி, முன்பு செய்ய முடியாத, கொஞ்சம் கஷ்டப்பட்ட பல விஷயங்களில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட்டான். முந்தைய இடுகையில் கூறியது போல கானடாவில் க்ளினிக்கல் பயிற்சி பெற அப்ளை செய்துள்ளான்.  GRE எழுத வேண்டாம். TOEFL மாத்திரமே. அதில் 99 வாங்கியது பொதுவாகக் குறைவு என்றாலும், எங்களைப் பொருத்த வரை அவனுக்கு இது நல்ல ஸ்கோர்தான்.

மகனுக்கு காலேஜில் அவனைப் புரிந்து கொண்டு கிடைத்த நண்பர்கள் அதிகம். சொல்லப் போனால் வகுப்பு முழுவதுமே அவனது அறிவைக் கண்டு, புரிந்து கொண்டவர்கள். அதனால் அவனில் நிறைய முன்னேற்றம்.  நல்ல பழகல், விளையாட்டுப் பயிற்சி, காலேஜ் கல்சுரல்ஸ் என்று பல மாற்றங்கள். அவனது OGPA அவனது ப்ரொஃபசர்களுக்கு மிக ஆச்சரியம்!  அதாவது அவர்கள் இவன் தான் முதல் மாணவனாக வருவான் என்று நினைத்திருந்தனராம்!!! “காமன் சென்ஸ், ப்ராக்டிகல் அப்ரோச், நல்ல சப்ஜெக்ட் அறிவு எல்லாம் பொருந்திய அவனுக்கு எப்படிக் கிடைக்காமல் போனது என்று கேட்டதற்கு, மகனின் நண்பர்கள் “அவன் எழுதவே மாட்டான்  ஒரு கோடு போடவே ரொம்பவே நேரம் எடுத்துக்குவான். கேள்வித்தாள் கொடுத்ததும் உடன் எழுத மாட்டான். ½ மணி நேரம் எடுத்துக் கொள்வான்.  பெரிய விடைகள் எல்லாம் பாயின்ட்ஸ் மட்டும்தான் மிஞ்சி மிஞ்சி போனால் ¾ பக்கம். (அதுவே பெரிய விஷயம்). எக்ஸ்ட்ரா ஷீட்ஸ் வாங்கியதாகச் சரித்திரம் கிடையாதாம்.  இத்தனைக்கும் நடுவில் அவனது மார்க் எங்களைப் பொருத்தவரை பெரிய விஷயம்தான்.!

இங்கு நான் நமது Professional  கல்வியின் தரத்தைச் சொல்ல வேண்டும். மகன் பயிற்சி மருத்துவராக இருந்த சமயம், கிராமங்களுக்கு சென்று மருத்துவம் பார்க்கும் பயிற்சியில், பரீட்சை சமயம் இவனுக்கு வந்த கேஸ் மாடு.  இவன் மாட்டைச் சோதித்து டயக்னாசிஸ் செய்துவிட்டு கேஸ் ஹிஸ்டரி க்ரிஸ்பாக ½ பக்கத்திற்கு எழுதியிருக்கிறான்.  அதைத் திருத்திய ஆசிரியர், இவனிடம் “2 பக்கம் எழுதணும், நீ என்ன படிச்சிருக்க புக் படிக்கலையா”. 

இவன், “எப்படி சார், எனக்கு வந்த மாட்டுக்கு என்ன பிரச்சினையோ அதைத்தானே எழுத முடியும். இது தியரி இல்லியே! அதுமட்டும்ல புக்குல நான் படிச்சது அமெரிக்க மாடு பத்தி.  எனக்கு வந்த மாடு, நம்ம கிராமத்து மாடு 

“என்ன எதிர்த்து பேசற. உன்ன வைவாவுல கவனிச்சுக்கறேன். உனக்கு இதுல மார்க் கம்மிதான்  என்று சொல்லி அந்த பரீட்சையில் மார்க் குறைவாகக் கொடுத்தார். அதே பிரிவில் உள்ள கைனக்காலஜி ஆசிரியர் இவன் எழுதிய கேஸ் ஷீட்டை மாணவர்களிடம் காட்டி “ஒரு டாக்டரின் ஷீட் இப்படித்தான் க்ரிஸ்பாக இருக்க வேண்டும்.  சம்பந்தம் இல்லாத கதை கூடாது என்று சொல்லியிருக்கிறார்.  முரண்பாடு!


குறை உள்ள குழந்தைகளோ, இல்லாத குழந்தைகளோ, பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளின் ஈடுபாடு, ஆர்வம், திறன், இவற்றை அறிந்து, அதற்கேற்றார் போல் அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். நம்முடைய எதிர்பார்ப்புகளை, நம்மால் முடியாமல் போன காரியங்களை அவர்கள் செய்ய வேண்டும் என்ற பிடிவாதம், பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையில் பிரச்சினைகளைத்தான் உருவாக்கும். எனவே குழந்தைகளையும் மதித்து, கையாளும் விதத்தில் கையாள வேண்டும்.

பி.கு: இந்த இடுகையை வாசிப்பவர்களுக்கு இது போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு எப்படிப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பது குறித்து ஏதாவது உதவி வேண்டும் என்றால், என்னைத் தொடர்பு கொள்ளலாம். அது போன்று கால்நடை மருத்துவ மேற்படிப்பு அயல்நாட்டில் படிக்க விரும்புபவர்கள், இல்லை Clinical Training  பயிற்சி பெற விரும்புபவர்களுக்கு, அது பற்றிய முழு தகவல்களும் கொடுத்து உதவமுடியும். 

36 கருத்துகள்:

  1. பயனுள்ள பதிவு தொடருங்கள். இதற்கு முந்தைய பதிவு எனது ரீடரீலல் அப்டேட் ஆகவில்லை அதை இப்போதுதான் பார்த்தேன் & படித்தேன்.. பாராட்டுக்கள் அமெரிக்க கல்வி மூறை இங்கு டீச்சர்கள் பாராட்டி உற்சாக மூட்டி படிக்க செய்வதை இந்திய டீச்சர்களும் அறிந்து செயல்படுத்த வேண்டும் இதை படிக்கும் டீச்சர்கள் இதை செய்வார்களா?


    அமெரிக்க டீச்சர்கள் படிக்க கஷ்டப்படும் குழந்தைகளை எந்த நேரத்திலும் மட்டம் தட்ட மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! மதுரைத் தமிழன் அவர்களுக்கு! இந்திய ஆசிரியர்களும் இதைப் படித்தால் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில்தான் கொடுத்துள்ளேன். சற்று முன் எனது தோழி ஒருத்தர் அவரது மகன் எல்.கே.ஜி. படிக்கும் மகன் பள்ளியில் என்ன சொல்லித் தருகிறார்கள் என்பதைச் சொல்ல மாட்டேன் என்கிறான் என்றும், வகுப்பில் ஆசிரியை அவன் பதில் சொல்லாததால் அடித்ததாகவும், அவனுக்கு ஏதாவது பிரச்சினை இருக்குமா என்றும் கேட்டார். நமது ஆசிரியர்களின் தகுதி இவ்வளவுதான். இது போன்ற பிரச்சினைகளைக் கையாளுவதற்கு அவர்கள் பயிற்சி அளிக்கப்படவில்லை என்றாலும், At least பெற்றோருக்கு குழந்தைகளை நல்ல Educational Psychologist டம் காட்டவாவது சொல்லலாம்! என்ன செய்ய நம் பள்ளிகள் அப்படித்தான் உள்ளது.! இத்தனைக்கும் பேரெடுத்த பள்ளி வேறு!!

      நீக்கு
    2. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! அமெரிக்க கல்வி முறையே வேறு! தாங்கள் சொல்லுவது போல.! ஊக்கத்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  2. எளிதாக மூன்று பதிவில் எழுதி விட்டாலும், இதன் பின்னே பெற்றோரின் அசுர உழைப்பு மலைக்க வைக்கிறது. உங்கள் மகன் மிகவும் கொடுத்து வைத்தவர்!

    உங்களுக்கு ஒரு சல்யூட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி!! தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும்! இதைப் பாராட்டிற்காக எழுதவில்லை! குறைபாடு உள்ள குழந்தைகளை ஒதுக்காமால், அவர்களையும் நாம் கூர்ந்து கவனித்து அவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதில் support கொடுத்தால் அவர்களாலும் தன்னம்பிக்கையுடன் தங்கள் காலில் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்க் முடியும்! என்பதைச் சொல்லத்தான்! . நிறைய விஞ்ஞானிகள் இந்து போன்ற குறைப்பாடுகள் உள்ளவர்கள் தான். ஆனால் அவர்கள் உலகம் போற்றுபவர்களாகவில்லையா?! புகழ் அடையாவிட்டாலும், நார்மல் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுத்தலே போதும்! நம் குழந்தைக்கு நாம் செய்வதில் பெருமை எதுவும் இல்லை!

      நீக்கு
  3. தங்களின் மூன்று இடுகைகளையும் படித்தேன்.. பெற்றோர் எவ்வாறு குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியுள்ளீர்கள்.. நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.. வாழ்த்துகள் தங்களுக்கும் தங்கள் மகனுக்கும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்திற்கும்! 3 இடுகைகளையும் வாசித்ததற்கும்!! மிக்க நன்றி!!

      நீக்கு
  4. உங்கள் பையனின் வாழ்க்கை வரலாற்றையே சொல்லி விட்டீர்கள், உங்களின் பரந்த மனப்பான்மையை பாராட்டுகின்றேன் !
    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பகவான் ஜி! இந்த மாதிரி குழந்தைகளையும் வாழ்க்கையில் நிலை நிறுத்த முடியும் என்பதையும், பெற்றோர்கள் குழந்தைகளை support செய்து வளர்த்தால் போதும் என்பதைச் சொல்லவும்தான் இந்த இடுகை ஜி! மிக்க நன்றி!!தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும்,ஊக்கத்திற்கும்!

      நீக்கு
  5. வணக்கம்
    நண்பரே.

    ((குறை உள்ள குழந்தைகளோ, இல்லாத குழந்தைகளோ, பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளின் ஈடுபாடு, ஆர்வம், திறன், இவற்றை அறிந்து, அதற்கேற்றார் போல் அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும்))) ஒவ்வொரு பெற்றோர்களும் உணர்ந்தால் பிள்ளைகளின் எதீர்காலம் சிறப்பாக அமையும் என்பது...உறுதி சரியாக சொல்லியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    குறிப்பு- வலைத்தள உறவுகள் கேட்டதற்கு அமைவாக
    தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள் (காலம் நீடிக்கப்பட்டுள்ளது.) மேலும் விபரங்களுக்கு..இங்கே-https://2008rupan.wordpress.com
    http://tamilkkavitaikalcom.blogspot.com/
    இந்த இரண்டு வலைப்பூக்களில் விபரம் உள்ளது.
    பதக்கங்கள்+சான்றிதழ் அள்ளிச்செல்லுங்கள்.......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி!நன்பரே! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், ஊக்கத்திற்கும்!!

      தங்கள் வலைப்பூ விவரம் கண்டிப்பாகப் பார்க்கிறோம்!! பகிர்வுக்கு நன்றி!!

      நீக்கு
  6. உங்களின் உழைப்பிற்கும், தங்களின் மகனின் ஆர்வத்திற்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பி.கு: சிறப்பு... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்கமிக்க நன்றி நண்பரே! தாங்கள் தரும் ஊக்கம் மகிழ்சி அளிக்கின்றது! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  7. உங்கள் பதிவை படித்த பின் கீழ் உள்ள முந்தைய பகிர்வு தான் ஞாபகம் வந்தது... நேரம் கிடைப்பின் வாசிக்கவும்... நன்றி...

    http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_08.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக வாசிக்கின்றோம்! பகிர்வுக்கு நன்றி!!

      நீக்கு
  8. கேட்கவே இனிமையான செய்தி. இது போன்று கல்வி ஊக்குவிக்கும்படி இருப்பின் பெரும்பான்மையானவர்கள் தேறி விடுவர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  9. இதை தயவு செய்து எல்லோரும் படிக்கவேண்டும்; ஆதலால், துளசி மற்றும் கீதா..இதை முழுவதும் வெளியிடுங்கள்.

    இங்கு மேலை நாடுகளில், எல்லா வித மனித குறைபாடுகளுக்கும், இன்று நல்லது நடக்குது என்றால், அதற்கு காரணம் அவர்கள் அந்த குறைபடுகளுக்கு-advocate ஆக மாறுவது தான். தங்கள் குறைபாடுகளை மறைப்பது இல்லை---நானும் அப்படியே! என் பின்னூட்டம் அதை ஒட்டியே!

    Because, I, myself, a known “Dyslexic and ADHD.” முதலில்..என் Dyslexic பற்றி...

    என் குறைபாடுகளை சொல்வதில் எனக்கு வெட்கமில்லையா என்று கேட்பவர்களுக்கு, இந்த குறைபாடுகளை வைத்து நான் ஜெயித்தேன் என்ற பேர் எனக்கு? உங்களுக்கு?

    பள்ளியில் எங்கள் நான் தான் கணக்கில், விஞ்ஞானத்தில்,ஆங்கிலத்தில் முதல் மாணவன்; அதே சமயம் social studies-ல் நான் சுமார்; காரணம்? ஹி! ஹி! தமிழில்?? அதுவும் தமிழுக்கு 200 மார்க்! ஹி! ஹி!

    பரிட்சையில் ஒரு கேள்வி கேட்ட்ரார்கள்; இந்தியாவிற்கு என்று சுதந்திரம் கிடைத்தது என்று. ஆகஸ்ட் 15, 1947 –என்ற இந்த பதில் எல்லா களிமன் மண்டையன்களுக்கும,தெரியும; நானும் ஒரு களிமண் மண்டையன் என்பதால் எனக்கும சரியான பதில் தெரியும்!

    நான் எழுதின பதில்.. ஆகஸ்ட் 15, 1497. எனக்கு எங்க வாத்தி மார்க் கொடுக்காதது பெரிய விஷயம் அல்ல! மேலும் ஐந்து மார்க் கழித்தார். இந்த சிரிய விஷயம் கூட உனக்கு தெரியவில்லையே என்று!

    1497.-ல் தப்பு என்றார்; நான் எடுத்து சொன்னேன்; நான் ஏன் 1947-என்று தான் எழுதினேன் சார்; அது எப்படி 1497.என்று மாறியது என்று எனக்கு தெரியவில்லை என்றேன். என்னை பொய்யன் என்றார். எவனும் என்னைப் புரிந்துகொள்ளவில்லை.. Because, I am dyslexic! என் குறைபாடை புரிந்து கொள்ளாமல் இருந்தது தவறு இல்லை; நான் படிக்கும் போது ஒரு ஆசிரியர்,

    You are NOT listening to me. What is the problem with you என்றார். தில்லா, I said, I don’t understand because you are boring என்றேன்.

    எனக்கு துன்பம் வரும் போது எல்லாம் என்னை கரை சேர்த்தவர்கள் எல்லாமே பெண்கள்;நண்பிகள் ஆசிரியைகள் தான். அதை நான் எழுதினால் சிலர் நம்புவதில்லை; அதனால் நான் அதை (எனக்கு உதவி செய்த பெண்கள் பற்றி) மறைத்து எழுதுகிறேன்!

    பெண்கள் நாட்டின் கண்கள்!
    பெண்மை இன்று இன்பம் ஏதாடா? இது நான் சொன்னால் ஆபாசம்!
    அதையே பெரிய தலை S.P. பால சுப்ரமணியம் சொன்னால் தெய்வீகம்!

    இதாண்டா உலகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நம்பள்கி! Hats Off to You!...! தங்கள் குறைபாட்டுடன் வெற்றி பெற்றதற்கு எங்கள் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! நீங்களே ஒருநல்ல உதாரணம்தான் நம்பள்கி!!

      நன்றி நம்பள்கி பகிர்ந்ததற்கு!!

      நீக்கு
  10. //முதல் நாள் கேட்ட சந்தேகங்களைத் தீர்த்துவிட்டு, கேள்வி கேட்ட மாணவரைப் பாராட்டிவிட்டுத்தான் வகுப்பைத் தொடங்குவார்கள்//

    இவர்களைப் பார்த்து நம்மூர் ஆசிரியர்கள் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும்.

    நல்ல அனுபவப் பதிவு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இவர்களைப் பார்த்து நம்மூர் ஆசிரியர்கள் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும்.//ஆம்! தங்கள் கருத்திற்கும், வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  11. அவர்கள் உண்மைகள் உங்கள் பதிவை அறிமுகம் செய்து வைத்தார். இனிய பாராட்டுரைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! தங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும்! தொடர்கிறோம் தங்கள் வலைப்பூவை!

      இந்தத் தில்லைஅகத்தில் நாங்கள் இருவர் இணைந்து எழுதுகின்றோம்! துளசிதரன், கீதா. நாங்கள் இருவரும் கலந்து,பேசி, எடிட் செய்து எழுதுகின்றோம்! எங்கள் அன்பும், நட்பும் அதற்கு துணை புரிகின்றது!

      எங்கள் வலைப்பூவை அறிமுகம் செய்த அவர்கள் உண்மைகள்-மதுரைத் தமிழன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!! அவரது நகைச்சுவை தனிச் சுவை!

      நன்றி தங்கள் வருகைக்கு!

      நீக்கு
  12. துளசிதரன் மற்றும் கீதா அவர்களுக்கு..
    உங்கள் எழுத்துக்கள் அபாராம்! மிக நன்றாக எழுதுகிறீர்கள்.
    எழுதுவதில் இரண்டு வகை உண்டு; ஒன்று உங்கள் மாதிரி அறிவுபூர்வமா எழுதுவது ஒரு வகை; மற்றொரு வகை என்னை மாதிரி ஜல்லி அடிப்பது. என் மாதிரி எழுத்துக்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்--பல்லவன் பஸ் மாதிரி-oppoiste lane-ல் கூட போகலாம்.

    உங்கள் எழுத்துக்கள் எழுதுவதை மக்கள் படிக்கவேண்டும். பத்திகள் பிரித்து எழுதுங்கள். இன்றைய ஆரய்ச்சி பிராகாரம், அதிக பட்சம் ஒருவர் ப்ளாக் இடுகையை படிக்க எடுக்கும் நேரம் மூன்றே மூன்று நிமிடம் தான். அதற்குள் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்லியாகனும்!

    பெரிய font-ல் எழுதுங்கள். மேலும் துளசிக்கு தெரியும்; அல்லது தெரிந்து இருக்கும். இங்கு அமெரிக்காவிற்கு எந்த கொம்பன் வந்தாலும், இங்கிலாந்தில் இருந்து வந்தாலும் முதலில் Advanced Composition எடுக்கணும்--எந்த ஆராய்ச்சி கட்டுரை எழுதுமுன் இது அவசியம்.

    இங்கு கட்டுரை ஆரம்பிக்கும் போதே..active voice-ல் தான்.ஆர்மபிக்கணும்; இங்கிலாந்தில் passive voice. உதரணமா, இங்கு I want to...இங்கிலாந்தில்...May I...

    நம் மாணவர்கள் எல்லோரும், இங்கு ஆசிரியர்கள் சொன்னால் கேட்ப்பது இல்லை. நான் TOEFEL-ல் இவ்வளவோ மார்க் எடுத்தேன் என்பார்கள்; அவர்கள் கட்டுரையைப் படித்தால் மண்டை காயும். TOEFEL-ல் என்பது ஆங்கிலம் {எனக்கும்] படிக்கத் தெரியும் என்று சொல்லும் ஒரு பரீட்சை; அவ்வளவுதான். அதை இங்கே எவனும் மதிப்பதில்லை!

    எந்த விவாதம் எடுத்தாலும் இரு பக்கம் பேசணும்! "காதலித்து கல்யாணம் செய்யலாமா" என்று விவாதம் செய்தால்,அதானால் நல்லது என்ன என்ன, கெடுதல்கள் என்ன என்ன என்று விலாவரியாக சொல்லி...பிறகு உங்கள் முடிவை சொல்ல்ல்னும்---அது தவறாக இருந்தாலும் உங்கள் கட்டுரை வரவேற்கப்படும்.

    இந்தியாவில் எல்லாமே ஒரு பக்கம் தான்--உதாரணாம காதலித்து திருமணம் செய்பவர்கள் பொறுக்கிகள் என்று தான் எழுதுவார்கள். இரு பக்க நியாங்களை எழுது....பிறகு காதலித்து திருமணம் செய்பவர்கள் ஏன் பொறுக்கிகள் என்று கட்டுரையை முடி. அது தான் சரி.

    உங்கள் கட்டுரை பெரியது எனபதை விட அதை படித்தது புரிந்து கொள்ள ஆகும் நேரம் அதிகம். சிறு சிறு பகுதிகளாக எழுதுங்கள்.

    வாழுத்துக்கள்...உங்கள் முயற்சி ஒரு தாயரின் வெற்றி; இங்கு இப்படி ஆரம்பித்த எல்லா சமூக நலத் திட்டங்களும், பாதிக்கப்பட்டவர்களின் முயற்சி! முக்கியமாக தாயர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சகோதரரைப் போன்று, தோழமையுடன், எங்கள் மீது அக்கறை கொண்டு, எங்களுக்கு ஆக்க பூர்வமான கருத்துக்களைத் தெரிவித்து எங்கள் எழுத்துக்கள் மிளிர ஊக்கம் அஅளிக்கும் உங்களுக்கு எவ்வளவு நன்றி உரைத்தாலும் தீராது நம்பள்கி!!! கண்டிப்பாக தங்களது வழிமுறைகளைக் கடைபிடிக்க முயற்சி செய்கிறோம். இன்றைய இடுகையிலேயே அதை முயற்சி செய்யலாம் என்றிருக்கின்றோம்!.

      மிக மிக நன்றி! நம்பள்கி!!!

      துளசிதரன், கீதா

      நீக்கு
  13. எங்கெல்லாம் பாராட்டுக்கள் அதிகமாய் இருக்கிறதோ அங்கெல்லாம் வளர்ச்சியும் அதிகமாய் இருக்கும் அதுதான் உங்கள் மகன் விஷயத்திலும் நடந்திருப்பது உண்மை, தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கவியாழி!! தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்!! வாழ்த்திற்கும்!!!!!

      நீக்கு
  14. பதில்கள்
    1. மிக்க நன்றி! உங்கள் வருகைக்கும் . கருத்திற்கும் !

      நீக்கு
  15. தொன்மையான கலாச்சாரம் எங்களுடையது என்று பேசிக்கொண்டு, அதன் கொடுமையை உணராத நம் மக்கள் பலர், அமெரிக்கா போன்ற நடை முறையில் உயிர்களிடத்தில் சமத்துவமான அன்பு காட்டி நாகரீகமடைந்த நாடுகளுக்கு போனாலும், அங்கேயும் பல வகைகளில் வேற்றுமை பாராட்டுவதைக் காணலாம். அதைத்தான் நீங்களும் அனுபவித்து இருக்கிறீர்கள்.

    உங்கள் மகனின் முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தருகிறது. விரிவான இடுகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. தொன்மையான கலாச்சாரம் எங்களுடையது என்று பேசிக்கொண்டு, அதன் கொடுமையை உணராத நம் மக்கள் பலர், அமெரிக்கா போன்ற நடை முறையில் உயிர்களிடத்தில் சமத்துவமான அன்பு காட்டி நாகரீகமடைந்த நாடுகளுக்கு போனாலும், அங்கேயும் பல வகைகளில் வேற்றுமை பாராட்டுவதைக் காணலாம். அதைத்தான் நீங்களும் அனுபவித்து இருக்கிறீர்கள்.

    உங்கள் மகனின் முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தருகிறது. விரிவான இடுகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. மிக்க நன்றி! தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும்! தொடர்கிறோம்!

    பதிலளிநீக்கு
  18. மிகத் தாமதமாகப் படிக்கிறேன் இந்தப் பதிவை. ஆனாலும் எக்காலத்துக்கும் பொருத்தமான கருத்து என்பதால் இன்றும் பயனுள்ளதே. இக்கட்டுரையை நண்பர்கள் பலருக்கும் அனுப்பி வைத்திருக்கிறேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  19. என்னுடைய ஈமெயில் contactorchard@gmail.com என் மகனுக்கு எழுதுவதில் குறைபாடு உள்ளது .நான் கோவையில் வசிக்கிறேன் .இது குறித்து தங்களிடம் பேச விரும்புகிறேன் .என் செல் எண் 9865999681.மிக்க நன்றி

    பதிலளிநீக்கு