வெள்ளி, 10 ஜனவரி, 2014

மண்ணில் விழும் நட்சத்திரக் குழந்தைகள் நல்லவராவதும், வல்லவராவதும் பெற்றோர் வளர்ப்பினிலே - கற்றல் குறைபாடு - Learning Disability - 2



12 ஆம் வகுப்பு வரை Back  பெஞ்சில் இருந்த மகன், கற்றல் குறைபாடு இருந்தவன், இப்போது கால்நடை மருத்துவராகி, கானடா/அமெரிக்கா சென்று Clinical Training எடுத்துக் கொண்டு Veterinary Surgeon ஆகி, Specialization செய்யத் துடிப்பது, இதெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று என்பதும், அதனுடன், கற்றல் குறைபாடு பற்றியும், இந்த இடுகையில். இந்த இடுகைக்கு வேண்டிய முக்கியமான ஒரு விஷயம், சென்ற இடுகையில், பதிவேற்றம் செய்யும் போது ஏற்பட்ட நெட் பிரச்சினையால் மிகத் தாமதமாகி, விட்டுப் போன ஒரு Paragraph. அதை இங்கே கொடுத்துள்ளேன்.

//அவன் வளரும் போது வேறு எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டாலும் எல்லாமே சிறிது மெதுவாகத்தான் செய்வான். படியில் இறங்க வேண்டும் என்றால், உட்கார்ந்து, காலை முதலில் கீழே விட்டு ஆழம் பார்ப்பது போல் பார்த்து பின்னர்தான் இறங்குவான். சேட்டைகள் அதிகம் இல்லை. பேப்பர் கிழிக்க மாட்டான். நான் வரைவதைப் பார்த்து அவனும் பேப்பரில் ப்ரஷ்ஷை வைத்து கலர் அடித்து வரைவான். இவை எல்லாம் 1 ¼ வயதில். அவன் என்னுடன் ஓடி ஆடி விளையாடுவான் ஆனால் வார்த்தைகள் வரவில்லை. நான் அவனுக்குத் தோழி.  மற்ற குழந்தைகள் அவனுக்குச் சரிவரவில்லை. அவர்கள் எல்லோரும் சேட்டை செய்பவர்கள். அதுதானே இயல்பு. திருவனந்தபுரத்தில், நாங்கள் அப்போது குடியிருந்த வீட்டின் மாடியில் இருந்த பையன் திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜில் ஸ்டுடன்ட். ஹவுஸ் சர்ஜன்ஸி பண்ணிக் கொண்டிருந்தார். அச்சமயம் அதுவும் குழந்தைகள் பிரிவில். எனக்கு அவர் குடும்பமே நல்ல நண்பர்கள். என் மகன் அவர்கள் வீட்டில் தான் விளையாடுவான். அவர் என் மகனை தினமும் கொஞ்சி விட்டு அவன் வாயில் கை வைத்து “கடி பாப்பா என்பார்.  பின்னர் பாப்பா பெயர் என்ன? அப்பா பெயர் என்ன, அம்மா பெயர் என்ன? இப்படி கேட்பார். தினமும் வாயில் கை வைத்துக் “கடி பாப்பா என்பார். எனக்குப் புரியவில்லை.  அவர் ஏதோ தனக்காக செய்து பார்க்கிறார் என்று விட்டுவிட்டேன். //

சிறு வயது முதலேயே அவனுக்கு என் கிராமத்துத் தொடர்பு இருந்ததால், விலங்குகளுடன் பழக்கம். எங்கள் வீட்டில் பூனை ஒன்று குட்டிகள் போட அந்தக் குட்டிகளுடன் தினமும் விளயாட்டு. (இப்போது அவன் வேலை செய்யும் க்ளினிக் “Only cat clinic in India” மெயினாக.  நாய்க்கும் வைத்தியம் பார்ப்பார்கள் அது தனி க்ளினிக்கில்).

மகன் 1 ஆம் வகுப்பு வந்த போது வீட்டிற்கு வந்த அதே டாக்டர் பையன் கூறியதுடன் சென்ற இடுகையை முடித்திருந்தேன். அவர், “பிரச்சினைனு இல்ல. ஸ்கூல்ல அவன் டீச்சர்ஸ் சப்போர்ட் கிடைச்சுதுனா, முன் (Front) பெஞ்சில் இருப்பான்.  இல்லை என்றால் பாக்(Back) பெஞ்சில்தான் இருப்பான் என்றார். ஆனால், அவர் வேறு விளக்கம் கொடுக்கவில்லை என்பதால் எனக்கும் அதைப் பற்றி யோசிக்கவோ,கேட்கவோ தெரியவில்லை என்பதைவிட எனக்கு அப்போது அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை எனலாம்.


என் மகனுக்கு மூளையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.  நன்றாக புரிந்து கொள்ளும் சக்தி இருந்தது. ஆனால், மொழிப் பிரச்சினை. எழுதுவது பிரச்சினை. அது தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி எதுவாக இருந்தாலும் அவனுக்குப் பிரச்சினைதான். அதனால், அவனால் தனக்குத் தெரிந்ததை, எழுதுவதும் பிரச்சினையாக இருந்ததால், வெளிப்படுத்த முடியவில்லை. பேப்பரில் வெளிப்படுத்தினால்தானே மதிப்பெண்.  அதன் அடிப்படையில்தானே ஒரு குழந்தை புத்திசாலியா இல்லையா என்று வகைப்படுத்தப்படுகிறது!  அவனால் ஓரிரு வாக்கியங்களுக்கு மேல் எழுத இயலாது.  மிஞ்சி மிஞ்சிப் போனால் 3 வாக்கியங்கள்.  அதுவே அவனைப் பொருத்தவரை Big answer! அதனால், பள்ளியில் மகன் பின்புறம் தள்ளப்பட்டான். நாங்கள் அதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. எங்களுக்கு அப்போது Educational counselor பற்றிய அறிவு இல்லை. அவனது குறைபாடு என்ன என்றுத் தெரியாவிட்டாலும், அவனை நாங்களே கூர்ந்து கவனித்து அதற்கேற்றார் போல் நடவடிக்கைகள் மேற்கொண்டு, மெதுவாகப் படித்தாலும், கண்டிப்பாக அவன் நல்லவனாக, வித்தகனாக வருவான் என்ற வலுவான நம்பிக்கையுடன் கையாண்டு வந்தேன்.

எனது மகனிடமும் எளிதாகக் கையாள முடியாத வகையில், ஒரு சில பிடிவாதங்கள்/முரண்டுகள் இருக்கத்தான் செய்தது. நாங்கள் அவனை அடிக்காமல், அவன் பிடிவாதத்திற்கு ஏற்றக் கதையைத் தேர்ந்தெடுத்து, அந்தக் கதையில் வரும் நல்ல character ல் அவனைப் பொருத்திச் சொல்லுவேன். அவன் பிடிவாதம் குறைந்து நல்ல மூடிற்கு வந்ததும் அவனிடம் தோழமையுடன் பேசுவோம். அவன் தவறை மெதுவாக எடுத்துரைத்து புரிய வைப்போம். இதில் ஒரு நன்மை இருந்தது, அதாவது Blessing in Disguise என்று சொல்லுவார்களே அதைப் போன்று. அவனிடம், நான் என்ன சொன்னலும் அதை வேதவாக்காக எடுத்துக் கொள்ளும் ஒரு பழக்கம். அதை நான் சாதகமாக்கிக் கொண்டேன்.  ஆனால், அதுவும் கத்தி மேல் நடப்பது போலத்தான்.  ஏனென்றால், நானும் மனுஷிதானே! நான் ஏதாவது தவறாகச் சொல்லி அது அவனுடைய மனதில் பதிந்து விட்டால்? அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியாது. அதனாலேயே அவனது சிறிய வயதில் நாங்கள் வீட்டில் T.V. வைத்துக் கொள்ளவில்லை. கேபிள் எல்லாம் அப்போது கிடையாது என்றாலும் அவனுக்கு நல்ல மனமுதிர்ச்சி வந்த பின் வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தோம். இரண்டு பக்கப் பெரியவர்களும் வீட்டிற்கு அடிக்கடி வந்து தங்கிய காரணத்தால் T.V. வந்த போதும், அவன் பார்க்கலாம் என்று வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே பார்க்கப்படும். அதுவும் எங்களுடன்தான். அவனது முரண்டுகள் மாறி, முதலில் அவன் ஒரு நல்ல மனிதனாக உருவாக வேண்டும் என்று நினைத்தோம்.

1 ஆம் வகுப்பில் (ICSE Syllabus) ஆரம்பித்த பிரச்சினை, கோயம்பத்தூருக்கு அவனது தந்தை வேலை நிமித்தம் இடம் பெயர்ந்ததால், 2 ஆம் வகுப்பிலிருந்து, 4 ஆம் வகுப்பு வரை காணாமல் போயிருந்தது. ஏன்?  கோயம்புத்தூரில் அப்போது State Board Syllabus, Matriculation பள்ளிகள்தான். அவன் சேர்க்கப்பட்டிருந்த பள்ளி Matriculation பள்ளி, ஆனால், வித்தியாசமான முறைக் கல்வி, என் மகனுக்கு ஏற்ற பள்ளியாக அதாவது வீட்டுப்பாடம் கிடையாது, எழுத்து வேலை கிடயாது, File System, பள்ளியிலேயே எழுதிவிட வேண்டும் அதுவும் 2 வரிகளுக்குமேல் கிடையாது, ஒரு வார்த்தை, கோடிட்ட இடங்கள் நிரப்புதல், match the following இவைதான். தமிழ் உட்பட.  ஹிந்தி கிடையாது. சக்கைபோடு போட்டான். பள்ளியிலேயே கராத்தே வகுப்பில் சேர்த்தேன். Mind Body Coordination கிடைக்கும் என்பதால். இவன் மிக நன்றாகச் செய்வதாகவும் தனித்தன்மை இருப்பதாகவும் அவனது மாஸ்டர் சொன்னதால், அவரது தனி வகுப்புகளுக்குக் கூட்டிக் கொண்டு சென்றேன்.  மாவட்ட அளவில் பரிசுகளை வென்றான். All rounder என்ற பரிசை அப்போது அமைச்சராக இருந்த ******** வழங்கப் பெற்றான். (இங்கு அவனது பரிசு பற்றித்தான்.  அமைச்சரைப் பற்றி அல்ல).

2 ஆம் வகுப்பில் இருந்த போது, அவனது லீவிற்கு எங்கள் கிராமத்திற்கு இல்லையென்றால் சென்னைக்குப் பயணமாக இருக்கும். கிராமத்தில் அவன் எப்போதும் அங்கு இருக்கும் ஆடு, மாடு, கோழி, வான்கோழி, நாய்களுடன் தான் விளையாட்டு. சாதாரணமாக வீட்டில் அவனைக் குளிக்க வைப்பது மிகவும் கடினம். ஆனால் அவன் என் கிராமத்திற்குச் சென்றால் வீட்டில் குளித்ததாகச் சரித்திரமே இல்லை.  ஆறு, குளம் இல்லை அருவிதான். நான் அதைச் சாதகமாகக் கொண்டு, எனக்கு நீச்சல் தெரியும் என்பதால் நீச்சல் பயிற்சி அளித்தேன். நீச்சலும் அவனுக்கு உதவலாம் என்ற ஒரு எண்ணத்தில். அதனால் அவனுக்கு இயற்கை சம்பந்தமாக நிறையச் சொல்லிக் கொடுத்தேன். பொது இடங்களை மாசுபடுத்தல் கூடாது, நீர் நிலைகளில் சோப், ஷம்ப்பூ உபயோகிக்கக் கூடாது, குப்பை போடக்கூடாது என்று பல Civic Sense ம் படங்கள் உதவியுடனும், practical ஆகவும் சொல்லிக் கொடுத்தேன். அவனுக்கு வெறும் எழுத்துக்கள் உதவாது. படங்கள் தான். அப்படியே சிறிய சிறிய கதைப் புத்தகங்கள், அம்புலிமாமா, அமர்சித்திரக் கதைகள், டிங்கிள் போன்ற புத்தகங்களை வாசிக்க உதவினேன். வாசிக்கும் பழக்கம் வரவேண்டும் என்று. ஆனால், அவனால் என் உதவியுடன் தான் செய்ய முடியும். அவனுக்கு எதில் எல்லாம் ஆர்வத்துடன் இருக்கின்றான் என்பதைக் கண்டறிந்து அதை அவனுக்குக் கற்றுக் கொடுத்தேன்.

இந்த சமயத்தில், சென்னைக்கு வந்த போது, Lotus Learning நிறுவனத்திலிருந்து வீட்டிற்கு அவர்களது புத்தகங்களை விற்பனை செய்யவும், குழந்தைகளிடம் பேச்சும் கொடுத்து அவர்களது ஆர்வங்களை அறிய ஒரு சர்வேயும் நடத்தினார்கள். இவனிடம் பேச்சுக் கொடுத்த போது இவன் முதலில் பதில் எதுவும் சொல்லவில்லை. பின்னர் அவர்கள் “உனக்கு எந்தப் புத்தகங்கள் பிடிக்கும் என்று கேட்டதும் உடனே அவன் அவர்களது Animal Encyclopedia” 25, Vol. மை எடுத்துக் காட்டினான். அவர்கல் உடனே அவனிடம் What do you want to become when you grow up?” (நீ பெரியவனாகும் போது என்னவாக விரும்புகின்றாய்?) என்றதும், Animal Doctor” என்றதும் எங்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவர்கள் “ஏன் என்றதும் “Animals பாவம். பேசாது. தொப்பை வலி சொல்லாது.”  அப்போது. இதைக் கேட்டதும்தான் எனக்குப் புரிந்த்து, எனது கிராமத்தின் ஆடும், மாடும், நாயும், எனது கதைகளும் விளக்கமும் அவனுக்கு எப்படிப் பதிந்துள்ளது என்று. அவன் விரும்பிய அந்த என்சைக்ளோபீடியா வாங்கிக் கொடுத்தோம். நான் அவனிடம், தனியாக இருந்த போது அவன் சொன்ன பதிலை உறுதிப் படுத்திக் கொண்டேன். அதுவே என் தாரக மந்திரமானது அவனைப் படிக்க வைக்க. அப்படி அந்த 2 ஆம் வகுப்பில் தொடங்கிய ஆர்வத்தையும், அர்பணிக்கும் எண்ணத்தையும், அதில் இருந்த ஈடுபாட்டையும் கண்டு அதை வைத்தே அவனை ஊக்குவித்து படிக்கவைத்து விட்டோம்.


ஒரு குழந்தைக்கு கற்றல் குறைபாடு இருந்தால் அக்குழந்தையால் கல்லூரிப் படிப்பு படிக்க முடியாது என்றோ, ஒரு Professional ஆக முடியாது என்றோ கிடையாது. நிறையத் தடங்கல்கள், முட்டுக்கட்டைகளைத் தாண்டி வர நேரிடலாம். முக்கியமான பெரிய விஷயம் பள்ளிப்படிப்பு. இதெல்லாம் அந்தக் குழந்தையின் எதிர்காலத்திற்கோ, அந்தக் குழந்தையின் விருப்பம் நிறைவேறுவதற்கோ, அந்தக் குழந்தை என்னவாக விரும்புகிறதோ அது நிறைவேறவோ தடையாக இருக்கக் கூடாது என்பது மட்டுமல்ல அதை அடைய நாம் உதவவும் வேண்டும். சில உத்திகளைக் கையாண்டால் கண்டிப்பாக முடியும்.

Famous people are not immune to LDs either, and there are quite a few of them that have been very successful even though they were not so in college. One of those is a gentleman by the name of John Horner. His name you may not know, but he is famous in the world of paleontology. He has worked with producer Steven Spielberg on the set of Jurassic Park.    Even though he went to college for six years, he was unable to graduate because of his low GPA. That did not stop him from pursuing his love of dinosaurs. Now he’s a professor and has written nine books, as well as more than 100 scientific papers. This just goes to show you, that your disability should not stand in your way. He stated that “passion and persistence are the keys to success.” (ஜான் ஹார்னர் என்பவரைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் புதைபடிமவியலில் மிகவும் புகழ் பெற்றவர், கற்றல் குறைபாட்டினால் தனது கல்லூரிப்படிப்பை முடிக்கமுடியாமல் போனாலும், தற்போது ப்ரொஃப்சராகவும், 9 புத்தகங்களும், 100 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளும் எழுதியவர், டைனோசரின் மீதுள்ள ஆர்வத்தால்.உலகையே தன் வசப்படுத்திய மாபெரும் ஜுராசிக் பார்க் செட்டில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்குடன் பணியாற்றியவர்.)

நன்றாகப் போய்க் கொண்டிருந்த அவனது கல்வி சென்னைக்கு இடம் பெயர்ந்ததால், திரும்பவும் Back to square one. 5 ஆம் வகுப்பு. CBSE Syllabus பள்ளி. வீட்டுப்பாடம். எழுத்து வேலை நிறைய. சிறிய தேர்வுகளில் பாஸ். பெரிய தேர்வுகளில் ஃபெயில். ஆசிரியர்கள் எங்களைக் கூப்பிடுவார்கள்.  ஆனால், அவர்கள் இவனை மந்தமாக இருக்கிறான் என்பார்களே தவிர எந்த விதத்தில் குறை இருந்தது என்பதை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஹிந்தியும், தமிழும் கற்கவேண்டும். அவன் பள்ளியில் எழுதச் சொல்லும் குறிப்புகளை எழுதி வர மாட்டான். அவனுக்கு நண்பர்கள் கிடையாது. அவனும் பழக மாட்டான், ராங்க் இல்லாததால் குழந்தைகளும் இவனுடன் பழக மாட்டார்கள். நான் ஏதாவது ஒரு பையனின் வீட்டிற்கு ஒவ்வொரு நாளும், சென்று என்ன எழுதிப் போட்டிருக்கின்றார்கள் என்று எழுதி வருவேன்.  அதில் சிறிய பதில்களை மட்டும் அவனைப் படிக்க வைத்து மெதுவாக எழுத வைத்துப் பழக்கி...இப்படியாக வருடக் கடைசிப் பரீட்சையில் just pass செய்ய வைத்து விடுவேன். ஏனென்றால், அவனுக்கு எந்த விதத்திலும் தாழ்வு மனப்பான்மை வந்துவிடக்கூடாது என்று. அவனிடம் நான் படி என்று சொல்லவில்லை. “குட்டிமா, நீ Veterinary Doctor ஆகணும் இல்லியாமா? அப்போ இந்தக் க்ளாஸ் பாஸ் பண்ணினாத்தானே நீ அடுத்த க்ளாஸ் போய் அப்படியே காலேஜ் ஜாய்ன் பண்ண முடியும்? Veterinary doctor ...அத நினைச்சுக்கமா”  அதுதான் என் மந்திரக் கோல்.  அதை வைத்தே அவனைப் பாஸ் பண்ண வைத்து விடுவேன். அவனது கராத்தேயும் தொடர்ந்தது.  கோயம்பத்தூருக்கு லீவில் கூட்டிச் சென்று அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் போது நானும் பார்த்துக் கற்றுக் கொண்டு கற்று சென்னை வந்ததும் அவன் வீட்டில் பயிற்சி செய்ய அவனுக்கு உதவுவேன்.


பள்ளிக்கு அவனைக் கிளப்புவது என்பது தினமும் ஒரு போராட்டம்தான். சென்னையில் நாங்கள் குடியிருந்த வீட்டில் பின் பக்கம் சிறிய தோட்டம் இருந்ததால் தினமும் கட்டெறும்புகளுக்கு சாக்கலேட் போடுகிறேன் என்று போட்டு எறும்புகள் எல்லாம் அவற்றைத் தூக்கிக் கொண்டு அதன் இடத்திற்குச் செல்லும் வரை அதையே பார்த்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் என்னிடம் எது ராணி எறும்பு, எது வொர்கர் எறும்பு, ஆண் எறும்பு என்று காட்டுவான். அதன் காலனி பற்றி எல்லாம் விளக்குவான். ஸ்கூலுக்குக் கிளம்ப மாட்டான்.  குளிக்க மாட்டான்.  அவனை கொஞ்சம் கெஞ்சி, இழுத்து சில சமயம் குளிக்க வைத்து இல்லை துடைத்து விட்டு யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்குக் கொண்டு விட்டு மாலையில் குளிக்க வைத்து விடுவேன். தெருவில் உள்ள நாய்கள் எல்லாம் எங்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும் இவன் வருகைக்காக.  பிஸ்கட்டிற்காக.  அவை போடும் குட்டிகள் எல்லாம் எங்கள் வீட்டில் தான் இருக்கும் தாயுடன்.  பின்னர் 3 மாதம் ஆனதும் அந்தக் குட்டிகளை Blue Cross ல் கொண்டு விடும் பழக்கம். அங்கு சென்று விட்டால் இவன் வீடு திரும்பவே மாட்டான்.  அங்குள்ளவர்களிடம் நான் ஏதாவது குறிப்பாகச் சொல்லி இவனை வெளியில் அனுப்பச் சொல்லிக் கூட்டி வருவேன்.

என் மாமாவின் மனைவி – மாமி, சென்னையில் Special Children  னுக்கான Diploma படிப்பு படித்துவிட்டு அதற்கான பள்ளியில் volunteer ஆக இருந்ததால், அவர்களிடம் இவனைக் காட்டினால் என்ன என்று எனக்குத் தோன்றியது. அவ்ர்களிடம் அழைத்துச் சென்றேன். அவர், பீச்சுக்குச் செல்லலாம், அது அவனை free ஆக, ஒரு சில விஷயங்களை கணிக்க உதவியாக இருக்கும் என்றதால் சென்றோம்.  மகன் பீச்சுக்குச் சென்றதும், ஒரே ஓட்டம்தான் கடல் தண்ணீருக்குள் வெகு தூரம் சென்று விட்டான்.  எங்கள் கண்ணுக்கே தெரியவில்லை. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால் எனக்கென்னவோ அசாத்தியமான நம்பிக்கை. அவனுக்கு நீச்சல் தெரியுமா என்று மாமி கேட்க...தெரியும்...ஆனால் கடல் அலையில் நீச்சல் அடித்துப் பழகவில்லை என்றேன்.  சற்று நேரத்தில் பெரிய அலை ஒன்று வர இவன் அதில் அழகாக மேலே ஏறி இறங்கி அதற்கேற்றார் போல் நீந்தி கரைக்கு வந்தான். அதே போன்று எந்தத் தீம் பார்க் போனாலும் அவனுக்கு பயம் என்பதே இருந்ததில்லை.  பாம்பையும் கூட கூர்ந்து பார்த்துக் கொண்டே கையில் எடுத்துவிடுவான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். (என்ன ராம் படத்தில் வரும் “ஆட்டிஸம் ஜீவா நினைவுக்கு வருகிறாரா?!).  என் மாமிக்குக் கூட முதலில் ஆட்டிஸமாக இருக்குமோ, ADHD (Attention Deficiency Hyper Disorder) ஆக இருக்குமோ என்ற சிறிய சந்தேகம் வந்து விட்டது. ஆனால், அப்புறம் அவனை பல விதங்களில் கூர்ந்து கவனித்து, assess செய்து, “அவனுக்கு வேறு எந்தக் குறையும் இல்லை. Academics தான் பிரச்சினை. கற்றல் குறைபாடுதான். அவனை எதற்கும் வற்புருத்தி, Pressure கொடுக்காமல், அவன் வழியிலேயே போய், Soft handling செய்து, மெதுவாகச் சொல்லி சொல்லி படிக்கவும், எழுதவும் வைத்துவிட்டால் சமாளித்து விடலாம். என்றார்.
க்ளோஸ் அப்சர்வேஷனில் நான் செய்து வருவது apt என்றார்.  தாய்தானே குழந்தையின் முதல் ஆசிரியை! மட்டுமல்ல என் குழந்தையின் குறைகளைப் போக்க நான் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி எப்போதும் சிந்தித்து செயல்பட்டதும்., இறையருளும் எனக்கு உதவி இருக்கலாம். மனம் இருந்தால மார்க்கமுண்டு என்பது போல், பெற்றோர்கள் குழந்தைகளைக் கூர்ந்து கவனித்துச் சிந்தித்து செயல் பட்டால் எந்தப் பிரச்சினைகளுக்கும் (இது போன்ற கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் மட்டுமல்ல மற்ற “ஸ்பெஷல் குழந்தைகளுக்கும் நல்ல முடிவு காணலாம் என்பதை நான் உணர்ந்தேன்.


While there is still no proven cause of learning disabilities (LD), there is knowledge related to what causes LD. Here are three things that could cause LD.

1.     Heredity
Learning disabilities often run in families. Children with LD are likely to have parents or other relatives with similar difficulties. (பாரம்பரியமாக வருவதற்கும் வாய்ப்பு உண்டு எனவும் சொல்லப்படுகிறது)
2.     Problems during pregnancy and birth
An illness or injury during or before birth may cause LD. Drug and alcohol use during pregnancy, low birth weight, lack of oxygen and premature or prolonged labor may also lead to LD.(பிரசவ சமயத்தில் ஏற்படும் பிரச்சினைகளாலும் இக் குறைபாடு வரலாம்)
3.     Incidents after birth
Serious illness, head injuries, poor nutrition and exposure to toxins such as lead can contribute to LD.(தலையில் அடிபடுதல், மிகக் குறைவான சத்து, லெட் போன்ற செடி கொடி விலங்குகளில் நோய் கிருமிகளால் உண்டான நஞ்சு, இவற்றாலும்)
Learning disabilities are not caused by economic disadvantage or cultural differences, nor are they the result of lack of educational opportunity. That said, children who are denied timely and effective instruction during critical times during their development are at high risk for showing signs of LD during the school years and beyond.

எவ்வளவுதான் அவனுக்கு அன்பாகச் சொன்னாலும் யாரிடமும் அதிகம் பேசமாட்டான். விளையாடுவான். சிரிப்பான் ஆனால் உரையாடல் கிடையாது. நான் சொல்லிச் சொல்லி உரையாடவைக்க வேண்டும். தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்த மாட்டான். இப்படியாகச் சென்று கொண்டிருந்த போது இவன் மாநில அளவில் நடந்த கராத்தே டோர்னமென்டிலும், இன்டெர்நாஷனல் அளவில் மலேஷியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்திய டோர்னமேண்டிலும் முதல் பரிசு, தங்கப் பதக்கம் வென்றான். அவனை Kata”  செய்யும் பிரிவில் மட்டும்தான் அனுப்புவோம். சண்டை போடும் பிரிவில் அனுப்ப மாட்டோம்.  அவன், சர்வதேச போட்டி மலேஷியாவில் நடந்தபோது (World Karate championship) அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டான்.  ஆனால், தமிழ் நாட்டு ஸ்போர்ட்ஸ் கவுன்சிலில் கராத்தே சேர்க்கப்படவில்லை என்பதால் இவனுக்கு ஸ்பொன்சார்ஷிப் கிடைக்கவில்லை. நாங்களும் விட்டுவிட்டோம். எப்படியோ அவனை இப்படி ஊக்குவித்து 7 ஆம் வகுப்பு வரை வந்த போது, என் கணவரை அவர் வேலை செய்த கம்பெனி அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள Sunnyvale ல் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு அனுப்பியது. ஆனால், ஒரு வருடத்திலேயே திரும்பும் நிலை.....பின்லாடனின் இரட்டைக் கோபுரத் தகர்ப்பாலும் அதன் பின் விளைவாலும்....கணவர் வேலை செய்த கம்பெனி கவுந்ததாலும்.

ஆனால், இந்த அமெரிக்கப் பயணம் என் மகனுக்கு ஒரு திருப்பு முனை...அதைப் பற்றி அடுத்த இடுகை....3 ல்...
.

(மன்னிக்கவும். மீண்டும் ம்ன்னிக்க வேண்டி உங்கள் பொறுமையைச் சோதிக்க மாட்டேன். அடுத்த இடுகையில் கற்றல் குறைபாடு தொடரைக் கண்டிப்பாக முடித்து விடுவேன்.)

8 கருத்துகள்:

  1. தங்களின் வலுவான நம்பிக்கைக்கு , குழந்தையின் முதல் ஆசிரியையின் புரிதலுக்கு பாராட்டுக்கள்... 5 வயது வரை குழந்தை என்ன பார்க்கிறதோ, கேட்கிறதோ, ருசிக்கிறதோ + படிக்கிறதோ - அது தான் அவர்களின் வாழ்நாள் முழுவதும்... இங்கே அது நீருபணமாகிறது... தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியே! DDஅவர்களே!! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  2. வணக்கம்

    பதிவுக்கு அமைவாக தலைப்பு உள்ளது. பல எடுத்துக்காட்டுக்கள் மூலம் விளக்கியுள்ளிர்கள்.
    இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பது போல சின்ன வயதில் எப்படி இருந்தார்கலோ அதுதான் அவர்களின் வாழ்நாளில்(தனபால்அண்ணா சொன்னமாதிரி)... சிறப்பாக உள்ளது... தொடருங்கள் நண்பரே.
    த.ம3வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! ஆம் தாங்கள் சொல்லியது சரியே! தனகள் வௌர்கைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!!

      நீக்கு
  3. கற்றல் குறைப்பாடு உள்ள குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டுமென்று தங்களின் அனுபவங்களை நீண்ட விளக்கமாய் சொல்லி வருகிறீர்கள் ,பலருக்கும் பயன்படும் பதிவு .தொடர வாழ்த்துக்கள் !
    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான் ஜி! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! நீண்ட விளக்கமாய் ஆகிவிட்டதோ??! அடுத்ததில் கண்டிப்பாக முடித்துவிடுவேன். ஜி!!! எனக்குமே தெரிகிறது. ஆனால், இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள் இங்கு சரியான கவனிப்பு இன்மையால் (ஏன் குறைப்படு இல்லாத குழந்தைகளுக்குமே அதே கதிதான்) இல்லாமல், அவர்களது தனித்தன்மையை பெற்றோர்களால் புரிந்து கொள்ள முடியாமல், ஒரு வித தாழ்வு மனப்பான்மையோடு வளர்கின்றார்கள். நான் special children னோடு பழகி வருவதால் இதநைக் காணும் போது மனம் மிகவும் வருந்தியதால், என் அனுபவத்தைப் பகிர்ந்து அந்தக் குழந்தைகளிடம் குறை இல்லை, பெற்றோர்களாகிய நம்ம்மிடம்தான் என்பதை சொல்லத்தான்! அதனால் தான் ஒவ்வொரு ஸ்டேஜும் சொல்லி வரும்போது பெரிதாகிவிட்டது!

      நன்றி! பகவான் ஜி! தங்கள் வருகைக்கும், ஊக்கத்திற்கும், கருத்திற்கும்!!! மிகுந்த மகிழ்சியக உள்ளது!

      நீக்கு
  4. //தினமும் கட்டெறும்புகளுக்கு சாக்கலேட் போடுகிறேன் என்று போட்டு எறும்புகள் எல்லாம் அவற்றைத் தூக்கிக் கொண்டு அதன் இடத்திற்குச் செல்லும் வரை அதையே பார்த்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் என்னிடம் எது ராணி எறும்பு, எது வொர்கர் எறும்பு, ஆண் எறும்பு என்று காட்டுவான். அதன் காலனி பற்றி எல்லாம் விளக்குவான்.//
    தங்கள் பையனின் திறமையை எண்ணி வியப்பதா... இல்லை தங்களின் தன்னம்பிக்கையை பாராட்டுவதா... மிகவும் அருமையாகத் தொகுத்துள்ளீர்கள்...
    ஒரு வேண்டுகோள்... இம்மாதிரியான நல்ல இடுகைகள் அதிகம் பேரை சென்றடைய வேண்டும்... எனவே வாய்ப்புக் கிடைக்கும் பொழுது தயவுசெய்து மீள் பதிவிடுங்கள்...

    பதிலளிநீக்கு
  5. kadantha oru mani neramaaka nan ungal blog la vasikkaatha pathivukalai vaasithukkondirukkumpothu.
    ungal makan patriya thodar 3 pathivukal vasithu yosithu kondirukkira time maranthu yosithu kondirunthen. thidirena neram paarthal 3.10pm achu.
    sanikizamai aache vijaiy tv la 3 manikku vijay chittiram varula.

    avasarama poy tv pottu paarkka aarampichitten. vilampara idaiveliyil intha comment madam.



    matrathai piraku solkiren.


    last comment mutta nainaa sonnathu pola

    mil pathivu seyvathal silarukkaavathu uthavum ninaikkiren madam.

    பதிலளிநீக்கு