வெள்ளி, 18 அக்டோபர், 2013

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்.....

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்.....

     
மனைவி இறந்து இரண்டு வாரம் ஓடிவிட்டது.  அவளுடன் கழிந்த நல்ல நாட்களை மனதில் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.
தாயில்லாக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன.  8 மாதப் பெண் குழந்தை வேலைக்காரி சுந்தரியின் மடியில் உறங்குகிறது.  குழந்தைகளைக் கவனிக்க சுந்தரி இருப்பதை நினைத்து ஒரு நிம்மதி.  இனி எப்படி வாழ்க்கை போகப் போகிறதோ, அதுவும் கவிதா இல்லாத வாழிக்கை, நினைக்கவே நெஞ்சில் முள்ளாய்த் தைக்கிறது. அதோ எல்.ஐ.சி. ஏஜண்ட் வருவது தெரிகிறது. அவரிடம் பாலிசியைக் கொடுத்து “அவளே போன பிறகு பணம் எதற்கு” என்கிறேன். நாளை முதல் ஆபீஸ் வழக்கம் போல் ஆனால் கவிதாவின் முத்தம் இல்லாமல்.  வலிக்கிறது.  மூத்தவன் அம்மா எங்கே என்று அழுகிறான்.  பாட்டியும் (கவிதாவின் அம்மா) அழுகிறாள். நல்ல வேளை சுந்தரி மூத்தவனைச் சமாதானப் படுத்தி உறங்க வைக்கிறாள். 
அவளுக்கும் உறக்கம் வரவில்லை போலும். கண் போனதும் கண் அருமை தெரிந்தவள் போல் வ்ந்தாள்.  மெதுவாக என் அறைக் கதவு திறக்கும் சப்தம். சுந்தரி!. “எல்லாரும் தூங்கியாச்சு! அம்மாவும் தூங்கிட்டாங்க. ஏன் வருத்தப்படறீங்க? அதான் நான் இருக்கேனே” என்கிறாள். நெஞ்சில் தலை வைத்து அருகே சப்தமின்றிப் படுக்கிறாள்.  கைகள் எங்கெல்லாமோ பரவ என் இரத்தம் சூடேருகிறது. பலமுறை இந்த சுந்தரியை என் பக்கம் ஈர்க்க என்னென்னவோ பொய்கள்...’கவிதா மோசம்.  நீதான் எனக்கு வேண்டும்.  நீ எப்போதும் இந்த வீட்டிலேயேத் தங்கலாம்’ இப்படி...மனைவி இறந்த இரண்டு வாரங்களில் வேலைக்காரி சுந்தரி என் அருகில். கொஞ்சல். மனது ஒரு புறம் வலித்தாலும்......அவளை என்னோடு சேர்த்து அணைக்காமல் இருக்க முடியவில்லை.......
திடீரென தொட்டிலில் இருந்தக் குழந்தை அழ.....’சீ’ என்று கோபத்துடன் எழுந்து போகும் சுந்தரியின் வார்த்தைகள் “அம்மாவோட இதையும் சேர்த்து எரிச்சுருக்கணும்..சனியன்”....
எனக்கு மூச்சுத் திணருகிறது.  கண் இறுகுகிறது. நாக்கு உள்ளே இறங்குவது போல்.....கனவு போல்...
அன்று நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. கவிதா சுந்தரியிடமிருந்து குழந்தையை வாங்கிச் செல்ல.. திரும்பவும் சுந்தரியின் குரல் “வாடிக் கண்ணு  உன்னய பாட்டிக்கிட்ட விடறேன். அக்கா, அடுப்புல பால் காய்ச்சுங்க. மழை தூறுது போல இருக்குது. துணி எடுக்கணும்”  என்று சொல்ல...கவிதா அடுப்பின் அருகே சென்று தீப்பெட்டியை உரச.....
காஸ் சிலிண்டர் வெடிக்கும் சத்தம் இடி இடித்தது போல்....சமையலறை முழுவதும் தீ.... புகை.....கதறும் சத்தம்.....திடீரென புகையின் நடுவே கதறி இறந்த கவிதா.......தெளிந்த முகத்துடன் என் முன்னால் சிரித்தபடி...”என்ன இப்பதான் நடந்தது என்னனு புரியுதா.” என்கிறாள்.   ‘ஐயோ கவிதா என்னைய மன்னிச்சிரு.  கவிதா மன்னிச்சிரு.  நான் எவ்வளவு பெரிய பாவி.  தேவதையப் போல இருந்த உன்னயத் தவர விட்டு தவிக்கிறேனே. இறைவா நடந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவா மாத்தி எனக்கு என் கவிதாவைத் திரும்பத் தா.  இனி ஒரு போதும் நான் கவிதாவை ஏமாத்த மாட்டேன். எனக்கு என் கவிதா வேணும்.  ஐயோ! கவிதா! கவிதா! கவிதா!

     “என்னங்க.....என்னங்க.....என்னாச்சுங்க உங்களுக்கு.? எதுக்கு என்னையப் போட்டு இப்படி உலுக்கிறீங்க?”
     ஹா! இது என்ன?  கவிதாவின் குரல் போல இருக்கு.! திடீரென கண் விழித்த எனக்கு ஒன்றும் புரியவில்லை.  அதிசயம்.  கண்டதெல்லாம்  கனவுதான்.  ஓ! இறைவா நன்றி! நன்றி!
     “ஒண்ணும் இல்ல....ஏதோ ஒரு பயங்கர கனவு”
 நான் கனவில் கண்டது போல் சுந்தரியுடன் தகாத உறவொன்றும் இதுவரை இல்லை.  ஆனாலும், என் மனம் இடையில் அந்த 16 வயது சுந்தரியைக் காணும் போது தடுமாறி இருக்கிறது. சில தடுமாற்றங்களை நாம் தவிர்க்காவிட்டால் நம் வாழ்வே தடம் புரண்டு விடும்.  அதைத்தான் இந்தக் கனவு எனக்கு நினைவுபடுத்துகிறது.
  மறு நாள் சுந்தரிக்குப் பதிலாக வீட்டில் அவளது தாய் கந்தம்மா.  யாரோ கேட்டதற்கு, கவிதாவின் பதில் “என்ன செய்ய.  அவருக்கு, சுந்தரியின் வேலை அவ்வளவாப் பிடிக்கலையாம்.  சுத்தம் போதாதாம்.  அதான் பழையபடி கந்தம்மாவையே வரச் சொல்லிட்டேன்”


ஞாயிறு, 13 அக்டோபர், 2013

குறிக்காரி

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. அந்தக் கிழமைக்கே உரிய ஓய்வு எடுக்கும் மன நிலையில் நான் T.V. பார்த்துக் கொண்டிருந்தேன். கேட் திறக்கும் சத்தம். ‘குறி பார்க்கலையோ குறி’ என்றக் குரல் கேட்டு வாணி கதவைத் திறந்து வெளியே சென்றாள். குறி என்ற அந்த வார்த்தையைக் கேட்டதும் உடனே எனக்கு நம் தமிழ் குறிஞ்சிப் பாடல்களிலும், குறிஞ்சித் திணையிலும் சொல்லப்பட்ட குறி சொல்பவர்களைப் பற்றிய பாடல்கள் நினைவுக்கு வந்தது. ‘சிவப்புப் புடவை, கைகளில் பச்சை குத்திய அடையாளம், கண்களில் மை, நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு, இடுப்பில் ஒரு கூடை, கையில் மந்திரக் கோல்’ இப்படி ஒரு பிம்பம், படித்ததிலிருந்து மனதில் பதிந்திருந்ததால் இந்தக் குறிக்காரியும் அப்படித்தான் இருப்பாளோ என்று அறிய நானும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். தோளில் ஒரு போர்வையை பத்தாக மடக்கி இட்டு, கையில் ஒரு அரை அடி நீளக் கம்பு,  இடுப்பில் ஒரு கூடை, நெற்றியில் பெரிய வட்டக் குங்குமப் பொட்டு என்று கிட்டத்தட்ட என் மனதில் பதிந்திருந்த அடையாளங்கள் இருந்தாலும் அவள் கையில் இருந்த கோல் மந்திரக் கோலாக இருக்க வாய்ப்புண்டா என்றுத் தெரியவில்லை.
      “மலையாள பகவதி என் மனசில இருந்து சொல்றதைச் சொல்றேன் தாயி உன் கவலையெல்லாம் கேளு” என்றுத் தொடங்கினாள். என் மனதில் இலக்கியப் பாடல்களில் படித்தது நினைவுக்கு வந்தது. 




சிலப்பதிகாரத்தில் கூட சாலினி என்னும் குறிக்காரி தெய்வம் ஏறிக் குறி சொல்லுவதாக வருகிறது.
வெறிபாடியகாமக்கண்ணியார்  என்பவர் பாடியனவாகச் சங்கநூல்களில் (புறநானூறு, அகநானூறு, நற்றிணை) இருக்கும் இரண்டு/மூன்று பாடல்களும்,  குறிஞ்சித் திணை பற்றிப் பாடிய அகப்பொருள் பாடல்கள். தலைவி மெலிவுக்குக் காரணம் என்னவென்று அவளது தாய் குறிசொல்லும் முதுவாய்ப் பெண்ணைக் கேட்கிறாள். அவள் பிரம்பைத் தலைவியின் கையில் வைத்துப் பார்த்துக் குறி சொல்கிறாள். குறிக்காரி நெடுவேளாகிய முருகனைப் பேணி விழாக் கொண்டாடினால் இவள் ஏக்கம் தணியும் என்கிறாள். 

ஒளவையார் பாடிய பாடலில் கூட குறிக்காரியைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்.....
 (அகவல் மகள் என்பவள் குறி சொல்லும் பெண். அகவல் மகள் குறி சொல்லத் தொடங்கும்போது முதலில் முருகனையும், அவன் குடிகொண்டுள்ள மலையையும் வாழ்த்திப் பாடிவிட்டுதான் குறி சொல்லத் தொடங்குவாள்.)



ஒருவேளை இந்தக் குறிக்காரியும் வாணியின் தலையில் பிரம்பை வைத்துக் குறி சொல்லுவாளோ என்று நினைத்தேன். எனக்குத் தெரிந்தவரை குறி சொல்பவள், மேலே சொன்னபடி, தமிழ் கடவுள் முருகன் வழி வரும் குறத்தி இனத்தைச் சேர்ந்தவள் மட்டுமல்ல, அவள் முருகனை வேண்டிவிட்டுதான் குறி சொல்வாள் என்றுதான் இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.  ஆனால் இவளோ மலையாள பகவதி என்று சொல்கிறாளே? ஒருவேளை இவள், இப்போதெல்லாம் குறி சொல்லும் வேடத்தில் வந்து பெண்களையும், வீட்டையும் ஏமாற்றும் கூட்டம் இருப்பதாகச் சொல்கிறார்களே, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவளோ என்று கூட சந்தேகம் நிழலாடியது. இவள் வேஷம் அதே போல இருந்தாலும், கண்டிப்பாக பண்டையக் காலத்துக் குறிக்காரி அல்ல. இன்றையக் காலக் கட்டத்துக்கு உட்பட்டவளே. இன்றைக்கும், விஞ்ஞானம் வெகுவாக வளர்ந்து வரும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூட, குறி சொல்வது, குறி கேட்பது போன்றவை நமது சமூகத்தில் பரவலாக உள்ளது என்பது சற்று வியப்பாகத்தான் இருந்தது.






வாணி வேண்டாம் என்று சொன்னாலும், அவள் விடவில்லை. இரண்டே நிமிடத்தில் வாணி, அவள் வார்த்தைகளில் மயங்கிவிட்டாள். அவள் வாணியிடம், 'வீட்டு முகப்புத் திண்ணையில் உட்காரு தாயி’ என்றாள். வாணி அனுசரணையுடன் அமர்ந்தாள்.  எனக்குக் கோபம் வந்து எழுந்தேன்.  திடீரென மனதில் ஒரு மின்னல். இவள் என்னதான் சொல்கிறாள் என்று கேட்கலாமே என்ற எண்ணம் வந்தது.  டி.வி. சப்தத்தைக் குறைத்து காதைக் கூர்மையாக்கிக் கேட்டேன். அவள் சொன்னதில் 60% எல்லோருக்கும் பொருந்துவது.  20% வீடு சுற்றுப்புறம் பார்த்துச் சொன்னதாக இருந்தது. மீதி 20% சொன்னாளில்லை.  வாணி அவள் சொல்வதைக் கேட்பாள் என்பது உறுதியானதும்      “தாயி இந்தக் கம்பளிக்குள்ள காணிக்கை வை தாயி.  என் மனசு குளிர்ந்தாத்தான் மகமாயி என் மனசில் உட்கார்ந்து சொல்லுவா தாயி என்றாள்” – நான் மெதுவாக எழுந்து சென்றதும் இருவருக்கும் “இவர் ஏன் இப்ப வந்தார்”? என்ற எண்ணம் முகத்தில் பிரதிபலித்தது.
நான், “என்னய கவனிக்காம ரெண்டு பேரும், கேக்கறதக் கேட்டு சொல்லறத சொல்லிக்கங்க” என்றேன். 
 என் வரவை எதிர்பாராததால் அவள் முகம் வாட்டம் அடைந்தது என்றாலும் தைரியமாகப் பேசினாள்.
“சாமி, அப்படி எல்லாம் சொல்லாதீங்க சாமி.  நான் அந்த மலையாள பகவதி சொல்றதத்தானே சாமி சொல்றேனுங்க.  பொய் இல்லைங்க சாமி.  சாமி நீங்க வேணா அந்த மகமாயியையேக் கேளுங்க சாமி”
நான், “மலையாள பகவதிகிட்டக் கேளு.  உனக்கு இங்கருந்து எத்தனை ரூபா கிடைக்கும்னு” என்றேன்.
பலதும் பேசிப் பேசி இறுதியாக “அம்மா சொல்றா கொடுக்கணும்னு.  ஆனா, அம்மாவுக்கும், சாமிக்கும் எங்கயுமே ஜெயிக்கணும்கர மனசு இருக்கிறதால இங்கயும் ஜெயிகணும்ல.  அதனால எனக்கு இங்கருந்து ஒண்ணும் கிடைக்காதுனு மகமாயி சொல்றா சாமி”.   என்றபடி வருத்தத்துடன் எழுந்தாள்.
‘உட்கார்’ என்றேன். 100 ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். சிரித்துக் கொண்டே வாங்கிய அவள் தன் கண்களில் ஒற்றி இடுப்பிலிருந்த சுருக்குப் பையில் வைத்த பின்,
“சாமி, ஆத்தா சொல்லிச்சு, எனக்கு 100 ரூபானுதான். ஆனா எங்கயும் வித்தியாசமா இருக்கணும், எல்லாத்திலயும் ஜெயிக்கணும்னு நெனைக்கற உங்க கிட்ட இப்பிடி சொன்னாத்தான் அந்த 100 ரூபா கெடைக்கும்னும் அந்த மகமாயி சொன்னதாலதான் நான் அப்பிடி ஒண்ணும் கெடைக்காதுன்னேன். உடனே நீங்க என் வாக்க பொய்யாக்க நெனைச்சு 20 ரூபா தர இருந்த நீங்க 100 ரூபாய எடுத்து நீட்டிட்டீங்க இல்லியா சாமி? இந்த கொணத்தால உங்களுக்குச் சின்ன சின்ன நஷ்டங்களு எடையிடையே வந்தாலும், அது ஒங்களுக்கு ரொம்ப நல்லதத்தான் ஒங்க வாழ்க்கைல தந்திருக்கு சாமி.  யார் மனசையும் நோகடிக்காத குணமுள்ளவங்க நீங்க ரெண்டுபேரும் எல்லாருக்குமே உங்களால முடிஞ்ச ஒதவிய செய்வீங்க சாமி.  அதனால ஒங்கள யாரும் வயிரெறிஞ்சுத் தூத்தாம, எல்லாரும் மனசால வாழ்த்த மட்டும்தான் செஞ்சுருக்காங்க சாமி. அதனாலதான் ஒங்களுக்கு மலபோல வார ப்ரச்செனங்க எல்லாம் பனி போல போயிடுதுங்க சாமி. 
ஆறுபடைஅப்பனும், அவங்க அண்ணனும், அப்பனும், ஆத்தாளும் ஒங்களுக்கு தொணையுண்டு சாமி.  சாமிக்கும், அம்மாவுக்கும் எல்லா நல்லதும் கெடைக்கட்டும்” என்று சொல்லி வாழ்த்தி விட்டுச் சென்றாள்.  வெற்றி யாருக்கு? அவளை அளந்த எனக்கா? என்னை அளந்த அவளுக்கா? உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?

சனி, 5 அக்டோபர், 2013

பயணம்

பயணம்

    
சமீபத்தில் நான் மேற்கொண்ட பயணத்தில் நான் கற்றுக் கொண்ட பாடம் மிக மிக உன்னதமான ஒன்று. நான் சென்ற இடம் நகரத்தின் பூச்சு எதுவும் இல்லாத, அதிலிருந்துத் தப்பிய ஒரு இடம். எனது பயணம் மலைகளின் நடுவில் உள்ள ஒரு  கிராமத்தை நோக்கி.
அப்படி பயணம் செய்யும் போது, பாலக்காட்டிலிருந்துப் பேருந்தில் பயணம். பாலக்காடு, முண்டூரிலிருந்து கல்லடிக்கோடு வரை இரு புறமும் கண்குளிரும் வண்ணம், மனதை மயக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகும், இயற்கைக் காட்சிகளும்,
ஆங்காங்கே வளைந்து, நெளிந்து ஓடும்
நீரோடைகளும், ஆறுகளும் மனதைக் கொள்ளை கொண்டதோடு மட்டுமல்லாமல், அங்கு இந்த இயற்கை சூழலில் வசிக்கும் மக்களைக் கண்டு எனக்குச் சிறிது பொறாமையும் வந்ததை இங்கு சொல்லத்தான் வேண்டும். அதன் பின்னரும் ஒலவக்கோட்டிலுருந்து பெருந்தில்மன்ன, பின்னர் அங்கிருந்து எனது நண்பரின் கிராமம் வரை உள்ள அந்த இயற்கைக் காட்சிகளை வருணிக்க வேண்டும் என்றால் இந்தப் பதிவு பற்றாது.
எனக்கு இயற்கையைப் பூசிக்கும் பூசாரி ஆகிய ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth) நினைவுக்கு வந்த்தார். கவிதை என்பது அவரைப் பொருத்தவரை “The spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion Recollected in Tranquility”. பயணத்தின் போது நாம் காணும் காட்சிகளை, சம்பவங்களை, நிகழ்வுகளை, அனுபவங்களை அமைதியான தருணத்தில் மனம் மீண்டும் மீண்டும் அசை போடும் போது இயற்கையாக, அருவி போன்று கொட்டும்  உள் உணர்வுகளை கவித்துவமாக உணர முடிகிறது.  “Nature teaches everything to us.  Nature watches us everytime”. இயற்கை நமக்கு எல்லாமே கற்றுத் தருகிறது.  இயற்கை நம்மை எப்போதும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.   காலார நடக்கும் வசதி. நடக்கும் போது யார் மீதும் மோதிக் கொள்ளாமல் நடக்கும் ஒரு சுகம். எதிரில் என்ன இருக்கிறது என்று கூடத் தெரியாத அளவு பனி மூட்டம். காலையில் எழும் போதே பறவைகளின் ஒலியும், சில் வண்டுகளின் ரீங்காரமும் செவி வழி மனதில் இறங்கி ஒரு இனிய இசையாகப் பதிந்தது.  பல வண்ணங்களில் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள், அவற்றின் இயற்கையான சூழலில் இருந்ததால் பார்க்க மிக ரம்மியமாக இருந்தது. புகை இல்லாத, பெட்ரோல் நெடி இல்லாத சுகந்தமானக் காற்று.  அலைபேசிகளுக்கு ஓய்வு. எங்கும் அமைதி.  நகர வாழ்வில் கிடைக்காத ஒரு அமைதி. இந்த அமைதி மனதிற்கு வேண்டிய ஒன்றாக இருந்தது.  மனம் அமைதியாக இருக்கும் போதுதான் நாம் பல விஷயங்களைக் கற்கிறோம். இங்குள்ள மனிதர்கள் யாரும் எதைப் பற்றியும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. நடையில் ஒரு வேகமோ, பரபரப்போ இல்லை. யாருக்கும் எந்த ஒரு குறிக்கோளோ, இலக்கோ இல்லாத ஒரு அமைதியான முகம். ஆனால் மிக சந்தோஷமான முகங்களாகத் தெரிந்தது ஒரு வித்தியாசமான காட்சிதான். “இன்னாமே வீட்டுல சொல்லிகினு வந்தியா, கஸ்மாலம், சாவு கிராக்கி, அன்னாண்ட இட்டுகினு போ” இப்படிப்பட்ட தேவ வாக்குகள் எதுவும் இல்லாததால் ஏதோ நான் வேற்று கிரகத்திற்கு வந்து விட்டேனோ என்று கூடத் தோன்றியது.
நண்பரின் வீட்டைச் சுற்றியும் ரப்பர் தோட்டங்கள். பக்கத்துச் சுவர் வழி அடுத்த வீட்டு ரகசியத்தை இலவசமாகக் கேட்க வழியில்லாமல் ஆங்காங்கே வீடுகள். எங்கும் அமைதியாக, சூடான வார்த்தைகள் இல்லாமல், பரபரப்பு இல்லாமல், நெற்றிச் சுருக்கங்கள், கண் சுருக்கங்கள் இல்லாமல், முகத்தில் சந்தோஷமும், அன்பும், நாவில் இனிய சொற்களும், இயற்கையோடு ஒன்றி வாழும் சூழலும் இருந்து விட்டால் அது சொர்கம்தான்.  ஏனென்றால் அது நம் மனதை இலகுவாக்கி, இளமையாக இருக்க உதவுவது மட்டுமல்லாமல் ஆன்மாவை அறிய உதவும் ஓர் இடமாக அமைவதால். அப்படிப்பட்ட இயற்கையின் சூழலை நவீன மயமாக்குதல் மூலம் நாம் சிறிது சிறிதாக இழந்து, இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கையை இழந்து வருகிறோம் என்பதுதான் கசப்பான உண்மை.
பயணம் என்பது எல்லோரது வாழ்விலும் ஏதோ ஒரு சமயத்தில், அடிக்கடியோ அல்லது எப்போதாவதோ நிகழும் ஒன்றுதான். விமானப்பயணம், ரயில் பயணம் பேருந்துப் பயணம், கப்பல் பயணம் என்று பல. சைக்கிளிலும், இரு சக்கர வாகனங்களிலும் கூட பயணம் மேற்கொள்பவர்கள் உண்டு. சிலர்க்கு நிகழாமலேயேக் கூட இருக்கலாம்.  நிகழாமல் இருப்பதற்கு வாய்ப்பு குறைவுதான் என்பது எனது எண்ணம்.  ஏன் என்றால் பயணம் என்பதற்கு வண்டிகள் ஏதும் அவசியம் இல்லை. 
கால் நடையாகவே கூடப் பயணம் மேற்கொள்ளப்படலாம். இவை எல்லாவற்றையும் விட மனம் என்ற குதிரை ஒன்றே போதும் பயணிக்க. பொதுவான திருவிழாக்கள், கோயில் திருவிழாக்கள், திருமணங்கள் இவற்றிற்காக மேற்கொள்ளப்படும் பயணம், சுற்றுலாப்பயணம், நாடுகடந்த பயணம் நம் சொந்த ஊர் பயணம், படிப்பிற்கான பயணம், வேலைக்கான பயணம் இப்படிப் பல பயணங்களை நாம் நமது வாழிவில் மேற்கொள்ளத்தான் செய்கிறோம். பல பண்பாடுகளையும், நாகரிகங்களையும் நாம் கற்றுக் கொள்கிறோம். பயணங்களின் மூலம் பல உண்மைகள் நமக்குப் புலப்படும் வாய்ப்பு உண்டு. பயணங்களால் நமது ஆளுமை விரிவடைகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கையையும், வாழ வேண்டும் என்ற உந்து சக்தியையும் ஊர்ஜிதப்படுத்துகிறது. அதனால் வாழ்க்கையின் மீது ஒரு ஆர்வம் கூட உருவாகுகிறது. வாழ்வை நேசிக்கக் கற்றுக் கொள்வதால் வாழ்க்கையை வேறு ஒரு கோணத்திலும், வித்தியாசமான, பரந்த பார்வையுடனும் பார்க்க ஒரு ஆரம்பமாக அமைகிறது. 
நம் உறவுகளையும், நமது நண்பர்களையும், சுற்றத்தாரையும் நம்மைச் சுற்றி இருக்கும் மக்களையும் புரிந்து கொள்ள மட்டுமல்லாமல் அவர்களை நேசிக்கவும் கற்றுத்தருகிறது.  சில சமயங்களில் பயணம் ஆழமான அன்பையும், நேசத்தையும் கூடப் புரிய வைக்கிறது.  பல புதிய நட்புகளை உருவாக்குகிறது. புதிய மனிதர்களை நேசிக்க வைக்கிறது.  இந்த உலகம் மிகவும் பரந்தது, அதில் எண்ணற்ற ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை உணர வைக்கிறது.  பயத்தை போக்கித் தனியாகப் பயணம் மேற்கொள்ளவும கூட கற்றுத் தருகிறது. பயணம் எதுவாக, எதற்காக, எந்த வகையில் இருந்தாலும், அதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் இன்றியமையாதது. நமக்கு வேண்டப்பட்டவரின் இறந்த செய்தி கேட்டு அதற்காக நாம் பயணம் மேற்கொள்ளும்போது, நம் மனது அவரைப் பற்றியேச் சுற்றி வந்து அவரது அனுபவங்கள், அவருக்கும் நமக்கும் இருந்த உறவு, நமக்கு அவருடன் உண்டான அனுபவங்கள் என்று மனது பல விஷயங்களை அசை போட்டு பல பாடங்களைக் கற்றுக் கொள்ள உதவுகிறது.  இதைத்தான் நான் எனது முந்தைய பதிவுகளாகிய வாழத்தெரியாத ராஜீவ், மாதவன் மாமா இரண்டிலும் பதிவு செய்திருந்தேன். எல்லாப் பயணமும் ஏதோ ஒரு வகையில் நமக்குப் பாடங்கள் கற்பிக்கத்தான் செய்கின்றன. சிறு பயணமாக இருந்தாலும் சரி, நெடும்பயணமாக இருந்தாலும் சரி நாம் பார்க்கும் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறை, சமூகம்,  கட்டிடங்கள், இயற்கைக் காட்சிகள், கிராமங்கள், அங்கு வாழும் மக்கள், ஏன் சிறு புல் கூட, சிறு எறும்பு கூட நமக்குப் பல பாடங்களைக் க்ற்றுத் தரும்.  ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவப் பாடமே. அதைக் கூர்ந்து நோக்கினால் மட்டுமே நாம் கற்பதும், நமக்குப் புரியும். நம்மை நாமே உணரவும் பயணங்கள் உதவுகின்றன. அவற்றை உள்வாங்கி மனதில் பதிப்பதும், பதிக்காததும் அவரவரைப் பொருத்தது.  நமது பார்வையில்தான் உள்ளது எல்லாமே. 
 பயணம் செய்யும் போது நான் கண்ட வாசகம் “Less luggage; More comfort" லெஸ் லக்கேஜ் மோர் கம்ஃபோர்ட்”. 
ஆம் உண்மைதான்.  சுற்றுலாப் பயணம் என்றாலும் சரி,
ஆன்மீகப் பயணம் என்றாலும் சரி, அல்லது எந்த ஒரு பயணமாக இருந்தாலும், நமது தேவைகள் அதிகரித்து அதனால் சுமைகளும் அதிகரித்தால் மனம் அவற்றின் பாதுகாப்பைப் பற்றிச் சிந்திப்பதில் ஆழ்ந்துவிடும்.  நமது தேவைகளுக்கு நாம் அடிமையாகி விட்டாலும் அந்தச் சூழல் உள்ள ஒரு இடத்தைத் தங்குவதற்கு நாம் தேடத் தொடங்குவோம். ஆதலால்  நாம் அனுபவிக்க இருக்கும் மகிழ்வான தருணங்களை நம் மனம் தவறவிடும் வாய்ப்புண்டு.  இறைவனுடன் ஒன்றி வழிபடும் அந்தத் தருணமும் தவறலாம்.  இந்த உலகே ஒரு அழகுதானே!  அதனோடு ஒன்றி அதன் அழகை ரசித்து அனுபவிக்க வேண்டாமா? ஒரு நல்ல யாத்ரீகன் தனது பயணத்தைக் குறித்து பல அனுபவப் பாடங்களையும், தனது பார்வையையும், கருத்துக்களையும் பயணக் கட்டுரைகளாக பதிவு செய்வதில் தவறுவதில்லை.  அப்படிப் பார்க்கும் போது, திரு பரணீதரன், திரு. ப்ரியாகல்யாணராமன் இவர்கள் எழுதிய ஆன்மீக திருத்தலப் பயணத் தொடர்கள் நம்மையும் அந்தப் புனித இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆன்மீக உணர்வைத் தோற்றுவிக்கும் அளவு சக்தி வாய்ந்தவை.
 அதைப் போன்று, திரு. ஞானி, திரு. இராமக்கிருஷ்ணன் இவர்கள் எழுதும் பயணப் பதிவுகள் நம்மையும் அவர்களுடனேயே பயணம் செய்வது போன்றத் தோற்றம் தருவது மட்டுமன்றி, பல நல்லக் கருத்துக்களைக் கொண்டதாகவும், சிந்திக்க வைப்பவையாகவும் இருக்கும்.
    
இலக்கில்லாமலும் பயணம் மேற்கொள்ளப்படலாம். எந்த ஒரு குறிக்கோளும் இல்லாத ஒரு பயணம் மேற்கொண்டால் எப்படி இருக்கும்?  நினைத்துப் பாருங்கள்.  இலக்குகள் இல்லை. மனம் போகும் போக்கில் கால்கள் செல்லும் போது, மனம் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், மனிதர்களையும் ஆராயத் தொடங்கும்.  அப்படி ஆராயும் போது பல நல்ல அனுபவப் பாடங்கள் நமக்குக் கிடைக்கும்.  
     உடலால்தான் பயணம் மேற்கொள்ள வேண்டுமா?  ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டாலே பயணம் மேற்கொள்ள முடியும்.  எப்படி? மனம்தான் குதிரை ஆயிற்றே! தனிமையில் இருக்கும் போது வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் சொன்னது போல் நம் மனதை நாம் பயணம் செய்த இடங்களுக்கு எல்லாம் அனுப்பி எவ்வளவு முறை வேண்டுமென்றாலும் உலா வரச் செய்து இன்புறலாம். அது பறந்து செல்லும் இடங்களை, முன்னர் ஏற்பட்ட அனுபவங்களை நிகழ்வுகளை அசை போட்டு, கூர்ந்து கவனித்து, பல வாழ்வியல் தத்துவங்களைக் கற்றுக் கொள்ளவும் செய்யலாம்.. 
இந்தப் பயணங்கள் எல்லவற்றையும் விட மிக மிக உண்மையான, யாராலும் தவிர்க்க முடியாத, எல்லோரும் பயணிக்கும் ஒரு பயணம் ஒன்று உண்டென்றால்  அதுதான் ஒரு நாள் நாம் இந்த உலகை விட்டே பயணிக்கும் இறப்பு என்றப் பயணம்.
இதைத்தான் எமிலி டிக்கின்சன் (Emily Dickinson) “Because I could not stop for death, HE stopped for me”  எனும் கவிதையில் மரணத்தை நம்மை இவ்வுலக வாழ்க்கையிலிருந்து அழைத்துச் செல்ல வரும் இரதத்தோடு ஒப்பிட்டு இருக்கிறார்.  நம் முன்னோர்களும் மரணம் என்ற இந்தப் பயணத்தைக் கண்டு பயம் கொள்ளாதவர்கள் தானே!. அதனால் தானே அவர்கள் மரணம் என்ற பயணம் மேற்கொண்டவர்களைச் சிவலோக பதவி/வைகுண்ட பதவி அடைந்ததாகக் கருதினார்கள்!.  அந்தப் பயணம் நமக்கு வேண்டுமானால் ஒர் அமைதியானப் பயணமாக இருக்கலாம். ஆனால், நம்மைச் சுற்றி உள்ளவர்க்கு அது ஒரு நல்ல அனுபவப் பாடமாகக் கூட அமையலாம்.

நான் இந்தக் கட்டுரையை எழுதி முடித்து இந்த வலைப் பூவில் பதிவு செய்யலாம் என்று வைத்திருந்த சமயம், எனது மதிப்பிற்கும், மரியதைக்கும் உரிய, நான் மிகவும் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர் திரு. இராமக்கிருஷ்ணன் அவர்கள், தி ஹிண்டு தமிழ் நாளிதழில் (வெள்ளி செப்டெம்பர் 20 2013) “சாலை கற்றுத்தருகிறது”  என்ற தலைப்பில் ஒரு அருமையான கட்டுரையை எழுதியிருந்தார்.  இப்படி ஒரு அருமையான கட்டுரை வந்த பிறகு எனது இந்தப் படைப்பை வலைப்பூவில் பதிய வேண்டுமா என்று சிந்திக்கத் தொடங்கி விட்டேன்.  எனது இந்தப் பதிவு அவரது படைப்பு போன்று சிந்திக்க வைக்கும் அளவற்றக் கருத்துக்களைக் கொண்டதாக இல்லை என்றாலும், ஏதோ என் சிறு மூளையில் தோன்றிய ஒரு சில கருத்துக்களை இதில் பகிர்ந்து பதிவு செய்துள்ளேன். திரு. இராமக்கிருஷ்ணன் அவர்கள் தமது கட்டுரையின் முடிவில்
எமர்சனின் மிக அருமையான மேற்கோள்  ஒன்றைச் சுட்டிக் காட்டியிருந்தார். “பயணத்தில் சிலர் வியப்பூட்டும் இடங்களைப் பார்க்கிறார்கள்.  ஒரு சிலரே அங்குள்ள ஆன்மாவைக் காண்கிறார்கள்.”  அதைப் போலத்தான் நான் எனது எல்லாப் பயணங்களிலும் அந்தந்த இடங்களின் ஆன்மாவை உணரத்தான் முயற்சி செய்வேன். சமீபத்திய பயணத்தில் முதல் பத்தியில் எழுதியுள்ளதைப் போல் அந்த கிராமத்தின் இயற்கையின், இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கையின் ஆன்மாவை உணர முடிந்ததாக உணர்கிறேன்.

சனி, 21 செப்டம்பர், 2013

கவிதைகள்


கீழ் வரும் கவிதைகள் எனது புதிய நண்பர் ப்ரசன்னா வெங்கடேசன் என்னும் 23 வயது இளைஞனின் கவிதைகள்.  இவரைப் பற்றிக் கூறவேண்டும் என்றால், இவர் எனக்கு சமீபத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் கிடைத்த ஒரு துடிப்புள்ள, வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைய நண்பர்.  மிகுந்த இறை உணர்வு உள்ளவர். நல்ல சிந்தனைகளும், குணங்களும், நோக்கங்களும் உள்ள ஒரு இளஞர். Bike Stunt வித்தையில் தேர்ந்தவர்.  அதனால் சில வீரத்தழும்புகளின் முத்திரைகளை அவர் முகத்திலும் கையிலும் காணலாம்.  நடிகர் அஜீத்தின் தீவிர ரசிகர்.  உங்களுக்கே காரணம் புரிந்திருக்கும்...சினாமாவில் stunt செய்து நடிக்க ஆசை உள்ளவர்.  இதைப் படிக்கும் யாராவது அவருக்கு உதவ முடிந்து, ஒரு சந்தர்ப்பம் கொடுக்க முன்வந்தால் அது இவரது வாழ்வில்  ஒரு மைல் கல்லாக அமையலாம்.  காதலித்து தோல்வி கண்டவர்.  ஒரு பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்து, 3 வருடங்கள் பழகிய பின், அப்பெண் வேறு ஒருவரை  மணம் முடித்ததால், காதல் தோல்வி.  அதன் வெளிப்பாடு அவர் கவிதைகளில் வெளிப்படுகிறது.

தாய்
உன் அழுகையைப் பார்த்து
உன் தாய் சிரித்து ரசித்த நாள்
நீ பிறந்த நாள்
உன் அழுகையைப் பார்க்காமல்
அவள் உறங்கிய நாள்
அவள் இறந்த நாள்.
உன் தாய் கண்ணீர் விடுவது யாவும்
உனக்காகத்தான் – மறு ஜென்மத்திலும்
உனக்குப் பிறப்பாள் மகளாக.
------------------------------------------------------------------------------
ஒரு நிமிடம்-ஒரு ஜென்மம்
ஒரு நிமிடம் போதும்
            அதிகம் நேசிப்பதற்கு
ஒரு நிமிடம் போதும்
            சண்டை போட்டு பிரிவதற்கு
ஆனால்
ஒரு ஜென்மம் போதாது
            நேசித்த ஒருவரை மறப்பதற்கு
வாழ்க்கையை மட்டும் நேசி
சண்டையைப் பற்றி யோசிக்காதே.

மனித நேயம்

கரையில்லாத கடலும் இல்லை
காற்றில்லாத மரமும் இல்லை
வாசமில்லாத பூவும் இல்லை
பாசமில்லாத தாயும் இல்லை
அது போல்
அன்புக்கு என்றும் பஞ்சமில்லை
ஆதலால்
அனைவரிடமும் அன்பு காட்டுவதுதான்
உண்மையான மனிதத் தன்மை.


 கேள்வி ஒன்று

என்னால் தான் நீ பிறந்தாய்
என்னுடன் தான் நீ வளர்ந்தாய்
பின் எதற்காக மேலிருந்து
கீழே விழுந்து தற்கொலை?
செடி மலரிடம் கேட்டது.


காதல்
காதல்,
இரு கண்கள் பேசிக் கொள்ளும்
ஒரு மொழி.
இரு எண்ணங்களையும் ஒன்றாக நேசிக்கும்
ஒரு உணர்வு
ஒருவர்க்கொருவர் புரிந்து கொண்டு
வாழ்வது போல்
வாழ்வைத் தொடங்குவார்கள்
வாழ்வு முறியும் போது
வெளிச்சத்திற்கு வருகிறது
வாழ்ந்த காதல் உண்மை அல்ல என்று.
என்னுடைய வாழ்க்கையைப் போல்.
                         -பிரசன்னா.
------------------------------------------------------------------------


ஒரு கிராமத்துப்  பெண்ணின் ஏக்கம் 

கம்பங் காட்டு கொல்லையில
கண்மாயில காத்திருக்கேன்
சமயத்துல வருவியளா
சாதி சனம் வாரதுக்குள்ள

கஞ்சித் தண்ணி வெச்சுத் தாரேன்
கொஞ்சி கொஞ்சி ஊட்டித் தாரேன்
எஞ்சிப் போற கஞ்சித் தண்ணிய
வஞ்சி எனக்கு ஊட்டுவியளா

சோலியெல்லாம் செஞ்சுகிட்டு
சிரிச்சி சிரிச்சி பேசிக்கிடுவோம்
சாதி சனம் பாத்துபுட்டா
பாதியில ஒளிஞ்சிகிடுவோம்

கண்ணு பேசுற சேதியெல்லாம்
ஒண்ணு விடாத சேப்பியளா
கருக்கையில சனம் போன பொறவு 
பொறுமையா காதுல பேசிக்கிடுவோம்

பம்புசெட்டு பக்கத்துல
வம்பாயிட்டு நிக்கிறதுகள
பம்மவைச்சு வெரட்டிடுவோம்
நம்ம கதைய வளத்துக்குவோம்

குளத்தங் கரையில பாத்துக்கிடுவோம்
களனியில திரிஞ்சுகிடுவோம்
ஆத்தோரமா நடந்துகிட்டே கருப்பு
காத்து படாம கட்டிக்கிடுவோம்

சத்தமிலாம ஒட்டிகிட்டு
முத்தமெலாம் கொடுத்துகிட்டு
காவாளிங்க வரதுக்குள்ள
கவனமா பிரிஞ்சுக்கிடுவோம்

காட்டுல நாம சுத்திக் கிடக்கையில
போட்டுக் கொடுத்தாய்ங்க களவாணிங்க
கறுவி கறுவி சனங்க செலது
அறுவாளத் தூக்கிட்டு அலயுதுங்க

மச்சான் நீங்க இருக்கயில
அச்சாரம் போடுதுங்க வீட்டில
கிறங்கி மயங்கி கெடக்குறன் நான்
உறக்கம் இல்லாத விசனத்துல

சேதி சொல்லி அனுப்புறேன்
கெதிகலங்கி போறதுக்குள்ள
காத்துக் கெடக்கேன் ஒங்களுக்கு
பத்திரமா வாரியளா

ஒத்தயடிக் கொல்லையில
செத்த நேரம் பேசிக்கிடுவோம்
பத்தவெச்ச கதைய பத்தி
பதவிசா முடிக்கிற சோலிய பத்தி.

பயப்படாத வீட்டுக்கு வாரிகளா
ஐயப்படாத கண்ணாலம் பேசுரிகளா
ஒங்களோட என்னய கூட்டிட்டுப் போறீகளா
ஒங்களுக்காக பொறந்து காத்துருக்கேன் நான்! 


மின்னல்

வானம்
பூமியின் அழகில் 
மயங்கி எடுக்கும்
ஃபோட்டோ ஃப்ளாஷ்.


ஏழையின் குடை

விண்ணில் மட்டும்தான்
நட்சத்திரங்களா
என் குடையிலும்தான்
நட்சத்திர பங்களா!
உடலை வருத்தலாம் வறுமை
உள்ளத்தையும், ஆன்மாவையும்
வருத்த முடியுமா? வறுமை?
வறுமைக்கு முடிவுண்டு
வறுமையிலும் கற்பனைக்கு
இறுதிவரை முடிவில்லை.
ஏழையின் இந்த கற்பனையை
என்னவென்று சொல்வது?
எண்ணி வியந்திடாமல்
விலகிட இயலவில்லை.
-