திங்கள், 2 மார்ச், 2026

சில்லு சில்லாய் - 24 - ஊ உ உ - பூண்டு பிரெட் - உரு மாறினாலும் பயன் - மடிவாலா/BTM ஏரி

 சில்லு - 1 ஊ உ உ - கொஞ்சம் தத்துவம்

என் தங்கைகளில் கச்சேரி செய்யும் அளவு சங்கீதப் புலமை உடைய தங்கையுடன் சமீபத்தில் பேசிக் கொண்டிருந்ததில் ஒரு பகுதி. இந்தத் தங்கை, என் அறிவிற்கு அப்பாற்பட்ட வைணவப் பாசுரங்கள், தேசிகர் ஸ்லோகங்கள் என்று நிறையவே பேசுவாள். 

அத்தகைய திறமைசாலியின் வாழ்க்கை திசைமாறிவிட்டது என்பது வேறு கதை. தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள  தன் காலனியில் உள்ள குழந்தைகளுக்குப் பாட்டும், கீதையும் கற்றுக் கொடுக்கிறாள். இதைப் பற்றியும் என்னிடம் பேசுவாள்.

அப்படி, கடந்த மார்கழியில் நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது திருப்பாவையில் இப்போதைய தலைமுறைக்குச் சொல்லும் வகையில் விஷயங்கள் மறைமுகமாக எவ்வளவு இருக்கின்றன என்று நாங்கள் பேசிய அனைத்தையும் அவள் தொகுத்து, கண்ணதாசன் பாடல்களில் இருந்தும் சில கருத்துகளைக் கோர்த்து எழுதியிருக்கிறாள். குழந்தைகளுக்குப் பாசுரங்களை மெட்டுடன் பாட்டாகச் சொல்லித் தருகிறாள். (நானும் அவள் அம்மாவிடம் இருந்து அதாவது என் மாமியிடம் இருந்து சில பாசுரங்களை மெட்டுடன் பாட்டாகக் கற்றுக் கொண்டதுண்டு.)

அவளுடைய உடல்நலனும், மனமும் கொஞ்சம் தளர்ந்திருந்திருந்தது தெரிந்தது. உடல் நலன் மற்றும் மனநலன் எவ்வளவு முக்கியம் என்று அடிக்கடி சொல்லும்  நான், அது பற்றியும் அவளிடம் பேசினேன். ஊ உ உ என்றேன்.

"புரியலை" என்றாள்.

"ஊண் உடல் உளம் - உனக்கு உன் வாழ்க்கையை எதிர்கொள்ள நிறைய எனர்ஜி தேவை. நல்ல ஊண், உன் உடல் நலம், மன நலம் ரொம்ப முக்கியம். உனக்கும் தெரிந்ததுதான். மனவளக் கலை. Inner self healing and Self Growth - Art of Mindfulness நம் உள் மனதை நன்றாகப் போஷாக்குடன் வலுவாகப் பக்குவமாக வைத்துக் கொண்டால் உலகம் எப்படி இருந்தாலும் அது நம்மை பாதிக்காமல் அதற்கு ஏற்ப நம்மால் எதிர்கொள்ள முடியும். உளவியலும் ஆன்மீகத் தத்துவமும் இணையும் புள்ளி. கடஉள் என்பதுதானே அது!"

ஏற்கனவே உடல், உள நலன் ஏன் நாம் பாதுகாக்க வேண்டும் என்று இப்பதிவிற்காக எடுத்து வைத்திருந்ததை எடுத்துவிட்டேன் அவளிடம் பெரிய வித்தகி போல!!!! 

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'

---- திருமூலர்

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்

உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று

உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"

----திருமூலர்

உள்ளம் கருவறை. உடல் ஆலயம். உயிரே லிங்கம் / பிரபஞ்ச சக்தி. 

இந்த உடல் அழியக் கூடியது அசுத்தமானது என்று அதைப் பராமரிக்காமல் இருந்தேன். உடல் அசுத்தமானதல்ல அதில் அந்த மாபெரும் சக்தி குடி கொண்டுள்ளதால், உடல் இறைவனின் கோயில் என்ற உண்மையை அறிந்த பிறகு உடலை ஒரு கோயில் போலப் போற்றிப் பாதுகாக்கிறேன், யோகப் பயிற்சியாலும் மனப்பயிற்சியாலும் என்பது திருமூலர் மந்திரத்தின் பொருள்.

எப்படிச் சொல்லியிருக்கிறார் பாருங்க! இதை அவளிடம் சொல்லி, எனவே உடலுக்கும் மனதிற்குமான நல்ல உணவு, உடல் நலன், மன நலன் முக்கியம். நாம் உயிர் வாழ நமக்கு அளிக்கப்பட்ட இந்த உடலை மதித்து அதைப் பாதுகாக்க வேண்டுமில்லையா? அப்பதானே அந்த இயற்கை அளித்திருப்பதை மதிக்கிறோம் என்றாகும். 

உடம்பு நன்றாக இருந்தால்தான் உளம் நன்றாக இருக்கும். உளம் நன்றாக இருந்தால்தான் உடல் நன்றாக இருக்கும். இந்த இரண்டும் நன்றாக இருந்தால்தானே நம்மால் நாம் நினைப்பதைச் செய்ய முடியும் இல்லையா? உளவியல் பற்றிப் பேசினால் பெரும்பான்மையோருக்குப் பிடிப்பதில்லை அல்லது ஏற்க முடியவில்லை.  இப்படி ஆன்மீகமாக - அப்படினாலே தன்னை அறிதல் பிரபஞ்ச விதிகளோடு இணைதல்தான் - சொல்லியிருப்பதைச் சொன்னால் ஏற்பார்கள் என்பதால்.

நீ சொன்ன ஊ(ண்) உ(டல்) உ(ளம்) க்கு நான் ஒரு ஊ உ உ சொல்றேன் கேளு. ஆனா ஊன் உணர்வு உயிர்." என்று நம்மாழ்வார் திருவாய்மொழியில் இரண்டைச் சொன்னாள்.

உணர்வில் உம்பர் ஒருவனை

அவனதருளாள் உறற்பொருட்டு

என் உணர்வின் உள்ளே இருத்தினேன்,

அதுவும் அவனதின் அருளே,

உணர்வும் உயிரும் உடம்பும்

மற்ற உலப்பிலனவும் பழுதேயாம்,

உணர்வைப் பெற ஊர்ந்திற ஏறி

யானும் தானாய் ஒழிந்தானே.

----நம்மாழ்வார் திருவாய்மொழி

புலன்களுக்கும் மனதிற்கும் எட்டாத மேம்பட்ட பரம்பொருள் அவனை பெறவேண்டும் என்று விரும்பினேன், அதற்காக அவனை என் மனதிலே இருத்தினேன் ஆனால் அந்த முயற்சி கூட என்னுடையதில்லை அவனுடைய இனிய அருள்தான். அவனை அடையாத ஞானம், உயிர், உடலும்  இன்ன பிறவும் வேஸ்ட் என்ற உணர்வையும் பெறச் செய்த அந்த பரம்பொருள் நானும் அவனின் ஒரு பகுதியே என்றுணர்த்தி என்னையும் தன்னுடன் ஆக்கிக் கொண்டான்.

உடனே நான் தன்னிச்சையாக, "தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே" என்று பாடிட.....

"இது எதுல?"

"ஸ்கந்த குரு கவசம்"

"ஹேய் என்னடி நாம......ஓ ஸாரி........உனக்கு அப்படிச் சொன்னா பிடிக்காது......ஓகே.... அடுத்தது முன்னதுல முடிச்ச வரிலதான் தொடங்கும்..."

யானும் தானாய் ஒழிந்தானை

யாதும் யவர்க்கும் முன்னோனை

தானும் சிவனும் பிரமனும் ஆகிப்

பணைத்த தனி முதலைத்

தேனும் பாலும் கன்னலும்

அமுதும் ஆகித் தித்தித்து

என் ஊனில் உயிரில் உணர்வினில்

நின்ற ஒன்றை உணர்ந்தேனே.

----நம்மாழ்வார் திருவாய்மொழி

நானும் தானாகும்படி செய்தவனை - நான் அவனோடு ஒன்றிட, எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் முற்பட்டவனாகத் திகழ்பவனை, தானாகவும் சிவனாகவும் பிரமனாகவும் ஆகித் திகழ்ந்த தனி முதல்வனை, தேனாக, பாலாக, கரும்பாக, அமுதாகத் தித்தித்து என்னுடைய உடலில், உயிரில், உணர்வில் கலந்து பரந்து நிற்கும் எம்பெருமானை உணர்ந்தேன்.

என்று சொல்லி முடித்தாள். நான் இதை ஸ்ரீநிவாஸசேஷன் மாமாகிட்ட கற்றிருக்கிறேன் என்றேன்.

உடனே எனக்கு நான் எடுத்து வைத்திருந்த கம்பராமாயணப் பாடல் நினைவுக்கு வந்தது.

வான் நின்று இழிந்து வரம்பு இகந்த

   மாபூதத்தின் வைப்பு எங்கும்,

ஊனும் உயிரும் உணர்வும் போல்

    உள்ளும் புறனும் உளன் என்ப;

கூனும் சிறிய கோத் தாயும்

    கொடுமை இழைப்பக் கோல் துறந்து,

கானும் கடலும் கடந்து, இமையோர்

    இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை.

---கம்பராமாயணம்

அரசாட்சியைக் கைவிட்டு, காட்டையும், கடலையும் கடந்து இலங்கைக்குச் சென்று இராவணன் முதலிய அரக்கர்களைக் கொன்று தேவர்களின் துன்பங்களை தீர்த்தவன் வீரக்கழல் அணிந்த வேந்தன் இராமன், மூலப்பரம்பொருளில் இருந்து தோன்றி ஐம்பூதங்களால் ஆகிய உலகம் முழுவதிலும்,  உடம்பும், உயிரும், உணர்வும் போல நம் உள்ளேயும், வெளியேயும் வீற்றிருக்கின்றான்!

இப்படியாக எங்கள் உரையாடல் சென்றது அன்று. அவளுக்கும் ஒரு outlet இப்படி என்னோடு பேசுவதில். 

"நீ சொல்ற ஊண் பத்தி தேசிகர் "ஆஹார நியமம்"னு சொல்லியிருக்கார் தெரியும்லியா?"

"தெரியுமே! ஆனா என்னால வெங்காயம் பூண்டு இவற்றைத் தவிர்க்க முடியலையே! அதனால அதைச் சொல்லிப் பிரஸ்தாபிக்கும் தகுதி எனக்கு இல்லை." Hypocrite ஆகிவிடுவேன்! 

ஏதோ நான் சிறிதளவேனும் பின்பற்றுவதை, பின்பற்ற முயல்வதைப் (மனநலன் உடல்நலன்) பற்றித்தானே சொல்ல முடியும் இல்லையா!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சில்லு - 2 - சமீபத்தில் செய்த Garlic Bread

முரண் - என்னடா இது மேலே இம்புட்டு தத்துவம் பேசிவிட்டு இப்ப இதைக் காட்டுகிறாளே என்று தோன்றுகிறதா!!!! உள்ளே இருப்பவை வெண்ணையில் வதக்கிய, கொஞ்சம் உப்பு கலந்த பூண்டு, வெந்தயக் கீரை, மக்காச்சோளம், கொத்தமல்லி, கொஞ்சம் Cheese, Red Chilli Flakes. மென்மையாகச் சுவையாக வந்திருந்தது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சில்லு - 3 

உரு மாறினாலும் பயனளிக்கும் கறிவேப்பிலையாகிய நான்

நான் பெரும்பாலும் குளிர்சாதனப் பெட்டியில் காய்கள், பழங்கள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி எதையும் வைப்பதில்லை. இங்கு குளிர் காலத்தில் பெரும்பாலும் அவசியம் இருப்பதில்லை. வெயில் காலத்தில் அளவாக இரு நாட்களுக்கு ஒரு முறை என்று வாங்கி வருவது வழக்கம். 

இந்த ஊரில் கொஞ்சம் Dry காலநிலை என்பதாலோ என்னவோ கருகப்பிலை பெரும்பாலும் உலர்ந்து போகுமே அல்லாமல் வெம்பி வெதும்பிப் போவதில்லை. எனவே வாங்கி வந்ததும் உப்பு நீரில் கழுவி (முதல் படம்) துணியில் உலர்த்தி (இரண்டாவது படம்) வைத்தால் உடன் பயன்பாட்டிற்கும், பின்னர் இரண்டு மூன்று நாட்கள் ஆனதும் கொஞ்சம் கொஞ்சமாக உலர்ந்துவிடும். அப்போது இப்படி உருவி (மூன்றாவது படம்) வைத்துக் கொண்டு...

கையால் நொறுக்கினாலும் நொறுங்கும்...இல்லை என்றால் ஒரு மிக்ஸியில்  போட்டு ஒரு சுற்று சுற்றி பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால் ஒரு வேளை கறிவேப்பிலை இல்லை என்றாலும் டக்கென்று உபயோகப்படுகிறது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சில்லு - 4 - மடிவாலா/BTM ஏரி  

சில காட்சிகள்.

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்

கன இருள் அகன்றது காலைஅம் பொழுதாய்

மதுவிருந்தொழுகின மாமலர் எல்லாம்...

(தொண்டரடிப்பொடியாழ்வார்)

****************************

மாலைப் பொழுதினிலே ஒரு நாள்

மலர்ப் பொழிலினிலே!

கோலக் கிளிகளுடன் குயில்கள்

கொஞ்சிடும் வேளையிலே...

(கல்கி கிருஷ்ணமூர்த்தி)

ஏரிக்காட்சிகள் படங்கள் இது ஒரு முன்னோட்டம். இந்த ஏரி பற்றி மேலும் சில படங்களுடன் பதிவொன்று பின்னர் வரும். வரலாம்...பார்ப்போம். 


-----கீதா 

13 கருத்துகள்:

  1. உங்கள் தங்கையைப் பற்றி நிறைய நினைக்க வைத்துவிட்டீர்கள். இறைவன் ஏன் இப்படி ஒருவருக்கு வாழ்க்கையைத் திசைமாற்றிவிடுகிறான் என்பது புரியவில்லை.

    சட் என்று சலங்கையொலி திரைப்படம் நினைவுக்கு வந்தது. திறமைசாலி, ஆனால் வாழ்க்கை கதாநாயகனுக்கு வெற்றியைக் காட்டவுல்லை.

    மனதைப் பாதித்த பகுதி முதல் சில்லு. ஏன் என்று சொல்லத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் முழுவதும் சொல்லவில்லை, நெல்லை. அது இன்னும்வருத்தம் அளிக்கும் என்பதால்.

      இப்ப அவள் கோதா ஸ்துதி மெட்டமைத்துப் பாடுகிறாள்.

      கீதா

      நீக்கு
    2. அவள் சொன்னது இரண்டு நம்மாழ்வார் பாசுரங்கள். மற்றவை - திருமூலர், கம்பர் - நான் பதிவுக்காக எடுத்து வைத்தவை, நெல்லை.

      கீதா

      நீக்கு
  2. முதல் பாசுரம் படிக்கும்போதே இரண்டாவது பாசுரம் நினைவுக்கு வந்தது. அவருக்கு (நம்மாழ்வாருக்கல்ல, உங்க தங்கைக்கு) என் மனப்பூர்வமான பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    நீங்கள் கூடச் சேர்த்திருந்தவைகளும் மனதைக் கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.

      அந்தப் பாசுரங்களை நான் சேஷன் மாமாவிடம் கற்றுக் கொண்டவைதான்.

      //நீங்கள் கூடச் சேர்த்திருந்தவைகளும் மனதைக் கவர்ந்தன.//

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  3. பசங்களுக்கு கார்லிக் பிரட் பிடிக்கும். மனைவிக்கு கார்லிக் சீஸ்.

    இதில் பூண்டு விழுதா இல்லை கட் பண்ணினதா? அடுத்தமுறை மனைவிக்கு இது பண்ணிடுங்க, பூண்டு பொடி ஓகே, முழு பூண்டு அவளுக்குப் பிடிக்குமா தெரியலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் பூண்டு கட் செய்து வெண்ணையில் வதக்கி... ஆனால் அது பேக் செய்த பிறகு உள்ளே தெரியவில்லை நெல்லை.

      ஓகே டன். விழுதாக வதக்கிப் போட்டா போச்சு! கார்லிக் ப்ரெட்னுதான் ஆனா உள்ளே வெந்தயக்கீரை, கொத்தமல்லி, சோளம் என்று வைத்ததால் ரொம்பத் தெரியலை. கார்லிக் சீஸ் வைச்சா போச்சு!!

      கீதா

      நீக்கு
  4. கருவேப்பிலை தெக்னிக்கு, பையனுக்கு அனுப்பும்போது செய்மோம்.

    சமயத்தில் பத்து ரூபாய்க்கு ஏகப்பட்ட கருவேப்பிலை கொடுத்துடுவாங்க. அடுத்தமுறை வீட்டுக்கும் இதைச் செய்யணும். வாசனை இருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நிறையவே கிடைக்க்ம் சிலப்போ அப்படிச் சேர்த்து வைத்தவைதான். மகனுக்கும் இப்படிப் பொடித்து அனுப்பவும் சேகரிப்பதுண்டு.

      வாசனை இருக்கும் நெல்லை கொஞ்சம் கூடுதல் போட்டுக்க வேண்டியதுதான். ஆனால் வாசனை இருக்கும்

      கீதா

      நீக்கு
  5. மடிவாலா ஏரிப் படங்கள் சூப்பர். குணதிசைச் சிகரத்தில் கதிரவன் இருக்கிறானா எனப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா....குணதிசையில்தானே எழுந்து வருகிறான் படத்தில் தெரியலையா? நெல்லை?

      கீதா

      நீக்கு
  6. முதல் முறையா கதம்பம் முயற்சித்திருக்கீங்க. நல்லா இருக்கு.

    முதல் பகுதி மிகவும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் முறையா கதம்பம் முயற்சித்திருக்கீங்க. நல்லா இருக்கு.//

      அடக் கடவுளே! எல்லாரும் இங்க வாங்கப்பா இதுக்கு ஒரு பஞ்சாயத்து கூட்டணும்....

      சில்லு சில்லாய் நு எத்தனாவது பகுதின்னு பாருங்க நெல்லை. இதுக்கு முன்னாடியுமே எழுதியிருக்கிறேனே. வெவ்வேறு பெயர்களில்...இப்ப சில்லு சொல்லாய்னு தொடராக....

      நீங்க ப்ளாக் ஒழுங்கா பார்க்கறதில்லை....ஹிஹிஹி

      எனிவே நன்றி நெல்லை....

      கீதா

      நீக்கு