ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

ரப்பர் வேளாண்மை – பகுதி - 2

 

ரப்பர் வேளாண்மை - பகுதி - 1

முதல் பகுதியை வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. அதில் ரப்பர் பால் சேகரிப்பது வரை சொல்லியிருந்தேன். இனி அதை அடுத்து என்ன செய்யப்படுகிறது என்பது இப்பகுதியில்.

ரப்பர் பால் சொட்டுவது, மரத்தை சீவி ஓரிரு மணி நேரத்தில் நின்று விடுவதால், அதன் பின் பால் சேகரிக்கப்படுகிறது. அப்படி சேகரிக்கும் போது கப்பிலிருந்து நன்றாகப் பால் வழித்து எடுக்கப்பட வேண்டும்.

இப்படி எல்லா மரத்திலிருந்தும் சேகரிக்கப்பட்ட ரப்பர் பால் ஒரு பெரிய வாளியில் ஊற்றப்படுகிறது. கிண்ணத்திலிருந்து/சிரட்டையிலிருந்து சேகரிக்கவும் எடுத்துச் செல்லவும் சிறிய வாளிதான் ஏற்றது.

பால் சேகரித்தல் முடிந்ததும் சேகரித்த பாலை, அடுத்ததாக உறையூற்றும் வேலை. ஒரு லிட்டர் கொள்ளளவு உள்ள கோப்பையை உபயோகித்து ஒவ்வொரு செவ்வக வடிவுள்ள டிஷ்ஷிலும் 2 கோப்பை ரப்பர் பால் ஊற்றப்படுகிறது. 500 கி பாரமுள்ள அலுமினியத்தால் ஆன டிஷ் தான் இதற்கு ஏற்றது.

ஒரு லிட்டர் கொள்ளளவுள்ள கோப்பை -  500 கி பாரமுள்ள அலுமினிய டிஷ் (அதனுள் வடிகட்டி இருக்கிறது)

ரப்பர் பாலை வடிகட்டும் வடிகட்டி
                                                                             

2 லிட்டர் ரப்பர் பாலுடன் 1 ½ கோப்பை நீரும் சேர்க்கப்பட்டு நீர்க்கப்பட வேண்டும். அப்படிச் சேர்க்கப்படும் அந்நீரில் நீர்க்கப்பட்ட ஃபார்மிக் அமிலமும் சேர்க்கப்பட வேண்டும். எஞ்சியுள்ள ரப்பர் பாலுள்ள வாளியைக் கழுவி எடுக்கும் நீரை இதற்காகப் பயன்படுத்தலாம்.

ஃபார்மிக் அமிலத்தை நீர்க்கச் செய்ய கடையிலிருந்து வாங்கும் ஃபார்மிக் அமிலத்தில் 25 மில்லி அமிலத்துடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும். இப்படி நீர்க்கப்பட்ட 25 மில்லி அமிலத்தை 2 லிட்டர் ரப்பர் பாலுடனும் 1 ½ லிட்டர் தண்ணீருடனும் சேர்க்க வேண்டும். அப்போதுதான் 2 லிட்டர் ரப்பர் பால் உறையும். இது கூடவோ குறையவோ கூடாது. அது ரப்பரின் தரத்தில் மாற்றம் ஏற்படுத்திவிடும்.

அமிலத்தை அளக்கும் அவுன்ஸ் க்ளாஸ்

அது போலவே அமிலம் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். சரிவர கலக்கவில்லை என்றாலும் உறைதலில் பிரச்சனை ஏற்பட்டு தரம் மோசமாகலாம்.

அமிலம், நீர், ரப்பர் பாலைக் கலக்க அலுமினியத்தால் ஆன கலக்கும் கருவி உபயோகப்படுத்தப்படுகிறது. அலுமினியக் கலக்கியை ரப்பர் பாலுள்ள டிஷ்ஷில் முன்னும் பின்னும் நகர்த்தும் போது கலக்கியிலுள்ள ஓட்டைகள் பால், நீர், அமிலம் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விட உதவியாக இருக்கும்.

அமிலம்நீர்ரப்பர் பாலைக் கலக்க அலுமினியத்தால் ஆன துளை உள்ள உபகரணம்

டிஷ்ஷில் உள்ள பால், அமிலம் கலந்த நீரை நன்றாகக் கலக்கிய பின் அப்படியே 2 மணி நேரம் டிஷ்ஷை அசைக்காமல் உறைய வைக்க வேண்டும். ஒரு 10 நிமிடத்தில் உறையத் தொடங்கும். நன்றாக உறைந்த பின் ரப்பர் ஷீட்டிலுள்ள நீரை வெளியேற்றி உறைந்த ரப்பர் ஷீட்டுகளை மட்டும் எடுக்க வேண்டும்.

அதனிடையில் சில குறிப்புகள் 

அமிலத்தை நீர்க்கச் செய்யும் போதும், நீர்த்த அமிலத்தை ரப்பர் பாலுடன் சேர்க்கும் போதும்  கைகளில் உறையிட்டுத்தான் அமிலத்தை அளந்து ஊற்ற வேண்டும். இல்லையேல் அது தோல் சம்பந்தமான நோய்கள் வரக் காரணமாகும்.

நீர்க்கப்பட்ட அமிலத்தை 25 மில்லி அளந்து ஊற்ற உபயோகிக்க ஒரு அவுன்ஸ் க்ளாசும் தேவை. நீர்த்த அமிலத்தை சேகரித்து வைக்க குப்பிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

பால் எடுக்க, ஊற்றி வைக்க உபயோகித்த பக்கெட்டுகளை நன்றாகக் கழுவி அந்த நீரை எடுப்பதன் மூலம் அதில் இருக்கும் ரப்பர் ஒன்றாகி உறைந்துவிடும். திரட்டி எடுக்கப்படும் கட்டியான ரப்பர், சல்லடையில் அரிக்கும் போது அதில் தேங்கிவிடும் என்பதால் கழுவும் போது அதை எளிதாக மாற்றி விடவும் முடியும். இப்படி வாளிகளில் ஒட்டியிருக்கும் ரப்பரைத் திரட்டி எடுத்து ஒட்டுப்பாலுடன் சேர்த்து உலர்த்திப் பின் விற்கலாம். இதற்கும் 75% விலை கிடைக்கும். ஓரிரு நாட்கள் வெயிலில் காய்ந்த ஒட்டுப்பால், அதிலுள்ள நீரின் அளவு குறைந்து தனி ரப்பர் ஆகிவிடும். இப்படி இதில் ஒன்றும் வீணாவதே இல்லை.

பால் வடிகட்டும் சல்லடையை தினமும் சுத்தம் செய்து வைக்க வேண்டும். இல்லையேல் அதன் ஓட்டைகள் அடைந்து பொகும். பால் அளக்கும் கோப்பையும் 1 லிட்டர் கொள்ளளவு உள்ளதாக இருக்க வேண்டும். இவற்றை உடனேயே சுத்தம் செய்வதுதான் எளிது.

இப்போது மீண்டும் ரப்பர் ஷீட்டுக்கு வருவோம்.....

மேலே சொன்னபடி இரண்டு மணி நேரத்தில் பால் நன்றாக உறைந்துவிடும். இனி இதிலுள்ள நீரை வெளியேற்றுவது எளிது. ரப்பர் ஷீட்டை டிஷ்களிலிருந்து எடுக்கும் போதே நீர் கசியத் தொடங்கும். எடுக்கும் போது கவனமாக உறைந்த ரப்பர் ஷீட்டுகளின் வடிவத்திற்குச் சேதம் ஏற்படாமல் ஓரங்கள் சிதையாமல் கவனமாக அழுத்தி மெதுவாக டிஷ்ஷிலிருந்து எடுத்து மாற்றி வைக்க வேண்டும். ரப்பர் ஷீட்டை ரப்பர் ரோலர் மெஷினில் அடிப்பதற்குச் சுமந்து செல்ல வசதியாக ஒரு டிஷ்ஷில் மூன்றோ நான்கோ நீர் நிறைந்த ஷீட்களை அடுக்கி வைக்கலாம்.

ஒன்றின் மீது ஒன்றாக வைக்கையில் அந்த அழுத்தத்திலேயே நீர் கசிந்து வழியும். அதிக நேரம் வைத்தால் ஒன்றோடொன்று ஒட்டிப் போக வாய்ப்புண்டு.

ரப்பர் ஷீட்டுகளை வடிவமாக்கி எடுக்க இரு விதமான ரப்பர் ஷீட் 
வடிவமைப்பு இயந்திரங்கள்

95% நீரையும் வெளியேற்றி ரப்பர் ஷீட்டுகளை வடிவமாக்கி எடுக்க இரு விதமான ரப்பர் ஷீட் வடிவமைப்பு இயந்திரங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது இரண்டு வழுவழுப்பான இரும்பு உருளைகள் இருக்கும் இயந்திரம். இரண்டு உருளைகளுக்கிடையில் இடைவெளியைக் குறைத்திட, கூட்டிட மேலே ஒரு சக்கரம் உள்ள இயந்திரம். அதை முன்னும் பின்னும் அசைத்து இடைவெளியைக் கூட்டலாம் குறைக்கலாம்.
முதலாவதாக இரண்டு வழுவழுப்பான இரும்பு உருளைகள் இருக்கும்
இயந்திரம்

இதனிடையே வைக்கும் ரப்பர் ஷீட் உருளைகளுக்கு இடையே கடந்து செல்ல, உருளைகளைச் சுற்றச் செய்யும் ஒரு சக்கரமும் உண்டு. அதைக் கையால் சுற்றி ரப்பர் ஷீட் அடிக்கலாம்.
இரண்டாவது இயந்திரம் கோடுகள் உள்ள ஒரு இயந்திரம்

இரண்டாவது இயந்திரம் கோடுகள் உள்ள ஒரு இயந்திரம். இதில் இறுதியாக அடிக்கலாம். நன்றாக அழுத்தப்படும் இந்த நீர் நிறைந்த ரப்பர் ஷீட்டிலிருந்து இந்த இயந்திரங்களின் உதவியால் எளிதாக நீரை வெளியேற்றலாம்.

இரு முறை முதல் இயந்திரத்திலும் ஒரு முறை இரண்டாம் இயந்திரத்திலும் அழுத்தும் போது 95% நீரும் வெளியேறி ஒரு டிசைன் உள்ள ரப்பர் ஷீட் கிடைக்கும்.

ஒவ்வொரு முறையும் இடைவெளியைக் குறைக்க சக்கரங்களைச் சுற்றி நீரை படிப்படியாக வெளியேற்ற வேண்டும்.

நீர் வடியும் ஷீட்டை இனி நீர் முழுமையாக வடியவும் காயவும் வைக்க துணிகளை உலர்த்துவது போல் ஒரு கம்பியில் தொங்க விட வேண்டும்

இரண்டாம் நாள் வெயிலில் காய்ந்து நிறம் மாறிய ரப்பர் ஷீட் கிடைக்கும்.

மூன்றாம் நாள் மீண்டும் நிறம் மாறி கூடியவரை உலர்ந்த ஷீட் கிடைக்கும்.

இனி எஞ்சியிருக்கும் நீரையும் முழுதாக இல்லாமல் செய்ய இந்த உலர்ந்த ரப்பர் ஷீட்டை புகையிட்டு மீண்டும் உலர்த்த வேண்டும். அதனால் நல்ல நிறமும் கிடைக்கும். அதை இனி அடுத்த பகுதியில் காண்போம்.

 நேரமிருந்தால் காணொளியைப் பாருங்கள். 12 நிமிடம் 45 நொடிகள் உள்ள காணொளி. ரப்பர் பால் உறைய வைத்து ஷீட் எடுத்தல், அதை ரப்பர் அடிக்கும் மெஷினில் அழுத்தி தண்ணீரை வடிய வைத்து உலர்த்துதல் வரையான பகுதி. ரப்பர் வேளாண்மையின் பின்னில் இருக்கும் உழைப்பை அறியலாம். 

மூன்றாவது பகுதி தொடரும்....


----துளசிதரன்

 


18 கருத்துகள்:

  1. நிறைய வேலை இருக்கிறது போலிருக்கிறது.

    சரிவான பகுதியில் ஏறி ஒவ்வொரு மரத்திலிருந்தும் பால் சேகரிப்பதுதான் கடினமான வேலை என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

    வர்கலா பகுதியில் சைக்கிள் கேரியரில் ரப்பர் ஷீட்டுகளை (மஞ்சள் நிறம்) அடுக்கி எடுத்துப்போவதைப் பார்த்தேன். பாலிலிருந்து எப்படி ஷீட் வருதுன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். நல்லா சொல்லியிருக்கீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேளாண்மை என்றாலே உழைப்பு முக்கியம்தானே. இதிலும் நிறைய வேலைகள் உண்டு. ரப்பர் ஷீட் தயாரிப்பதில் கவனம் தேவை இல்லை என்றால் தரம் போய்விடும். விலையும் கிடைக்காது.

      பால் சேகரிப்பும் அதன் பின்னான வேலைகளும் கூடுதல்தான். உழைப்பில்லாமல் எதுவும் பெற முடியாதுதானே.

      //பாலிலிருந்து எப்படி ஷீட் வருதுன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். நல்லா சொல்லியிருக்கீங்க//

      மிக்க நன்றி நெல்லைத் தமிழன். நீங்கள் கேட்டதை ஓரளவு பகிர்ந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து அதைச் சொல்கிறது.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  2. சுவாரஸ்யமாக, புரியும்படி சொல்லி இருக்கிறீர்கள்.  ஆரம்ப காணொளிகள் சட்சட்டென முடிந்து விட்டதே என்று பார்த்தேன்.  கடைசி காணொளி, உங்கள் விவரங்களை படித்து விட்டதால் புரியின்படி எளிதாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்பக் காணொளிகள் - அது வீடியோவில் இருந்து படங்களை எடுத்ததில் படங்கள் ஜெபிஜி ஆக மாற்றாமல் ட்ரிம் செய்த வீடியோக்களாக வந்துவிட்டன.
      பின்னர் படங்களாக மாற்றப்பட்டுவிட்டது.

      //கடைசி காணொளி, உங்கள் விவரங்களை படித்து விட்டதால் புரியின்படி எளிதாக இருந்தது.//

      புரிந்து கொள்ள எளிதாக இருந்தது என்பது மிகுந்த சந்தோஷம்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
  3. விளக்கம் அருமை பயனுள்ள தகவல்கள்.

    காணொளிகள் சிறிய அளவில் இருக்கிறது அதாவது நொடிப்பொழுதில் முடிந்து விடுகிறது.

    கடைசி காணொளியும் இப்படித்தான்.

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவை காணொளிகள் அல்ல. பொருட்களின் படங்களை மட்டும் ட்ரிம் செய்து எடுத்து படங்களாக மாற்றும் முன் ட்ரிம் செய்த காணொளிகள் வந்துவிட்டன. பின்னர் படங்கள் மாற்றப்பட்டு விட்டன. இப்போது சரியாக இருக்கிறது

      கடைசி காணொளி ய்ட்யூபில் இருப்பது 12.45 நொடிகள் இருக்கிறதே.

      கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  4. விரிவான ரப்பர் வேளாண்மை பற்றி அழகாய் சொல்லி விட்டீர்கள்.
    படங்களும், காணொளிகளும் அருமை.
    எல்லா வேலைகளும் கடினம் தான். நீங்கள் ரப்பர் தோட்டம் வைத்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பகிர்வுக்கு நன்றி. நேரில் ரப்பர் தோட்டத்தை பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான ரப்பர் வேளாண்மை பற்றி அழகாய் சொல்லி விட்டீர்கள்.
      படங்களும், காணொளிகளும் அருமை.//

      நன்றி சகோதரி கோமதி அரசு.

      //எல்லா வேலைகளும் கடினம் தான். நீங்கள் ரப்பர் தோட்டம் வைத்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். //

      ஆமாம் கடினம் தான்.

      நேரில் ரப்பர் தோட்டத்தை பார்த்த உணர்வு ஏற்படுகிறது//

      கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.

      துளசிதரன்

      நீக்கு
  5. வாங்க துளசி சார் சிறுவயதில் பார்த்த படித்த தகவல்களை மீண்டும் ஞாபகபடுத்தி அருமையாக விளக்கி பகிர்ந்து இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சிறுவயதில் கண்டிருக்கிறீர்களா. ரப்பர் தோட்டம் இருந்ததா? அல்லது அருகில் இருந்தீர்களோ?

      உங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  6. ரப்பர் வேளாண்மை பற்றி அழகாய் சொல்லுகின்ற பதிவு..

    பள்ளிகளில் கூட இவ்வளவு அறிந்ததில்லை..

    படங்களும் காணொளிகளும் அருமை...

    சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரப்பர் வேளாண்மை பற்றி அழகாய் சொல்லுகின்ற பதிவு..

      பள்ளிகளில் கூட இவ்வளவு அறிந்ததில்லை..

      படங்களும் காணொளிகளும் அருமை...//

      உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      துளசிதரன்

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு நன்றாக உள்ளது. ரப்பர் வேளாண்மை பற்றிய விபரங்கள். அனைத்தையும் விபரமாக தெரிந்து கொண்டேன். ரப்பர் மரங்களிலிருந்து பால் சேகரிப்பது முதல், அதை உறையூற்றி, ரப்பர் ஷீட்களாக தயாரிப்பது வரை மிகவும், அழகாக பொறுமையாக விளக்கத்துடன் கூறியுள்ளீர்கள். காணொளியையும் முழுமையாக பார்த்து எல்லா விபரங்களையும் தெரிந்து கொண்டேன்.

    என்னதான் மெஷின்களின் உபகாரத்துடன் இவைகளை செய்தாலும், அவைகளை பராமரிப்பது முதல், அதற்கு முன் நம் உழைப்பால் முறையாக செய்யும் வேலைகளையும் கவனத்துடன் செய்து ஒரு தொழிலை எப்படி திறமுடன் செய்வது எவ்வளவு கடினமான செயல் என்பதை தங்கள் பதிவு விளக்கியது. தங்களது இந்தப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே. இதன் மூன்றாவது பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    என்னால் இரு தினங்களாக வலைப்பக்கம் வர முடியாத சூழலில் இந்தப்பதிவுக்கு தாமதமாகி விட்டது. வருந்துகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு நன்றாக உள்ளது. ரப்பர் வேளாண்மை பற்றிய விபரங்கள். அனைத்தையும் விபரமாக தெரிந்து கொண்டேன். //

      மிக்க நன்றி சகோதரி.

      என்னதான் மெஷின்களின் உபகாரத்துடன் இவைகளை செய்தாலும், அவைகளை பராமரிப்பது முதல், அதற்கு முன் நம் உழைப்பால் முறையாக செய்யும் வேலைகளையும் கவனத்துடன் செய்து ஒரு தொழிலை எப்படி திறமுடன் செய்வது எவ்வளவு கடினமான செயல் என்பதை தங்கள் பதிவு விளக்கியது./

      ஆம்! ஒவ்வொரு தொழிலின் பின்னிலும் இருக்கும் உழைப்பு.

      மூன்றாவது பதிவு தயாராகிறது.

      தங்களுக்கு எப்போது வர இயலுகின்றதோ அப்போது வந்து வாசிக்கலாம். பதிவுகள் இங்குதானே இருக்கும்.

      விரிவான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கமலாஹரிஹரன்.

      துளசிதரன்

      நீக்கு
  8. காணொளியில் பொறுமையாகவும் மிகத்தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள் நன்றி!. இந்த பதிவு அனைவருக்கும் பயன்படும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதிவு... மூன்றாவது பகுதியை மிக விரைவில் எதிர்பார்க்கின்றேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியில் பொறுமையாகவும் மிகத்தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள் நன்றி!. இந்த பதிவு அனைவருக்கும் பயன்படும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதிவு.//

      பயனுள்ளதாக இருந்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன். மிக்க நன்றி.

      மூன்றாவது பதிவு தயாராகிறது.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நாஞ்சில் சிவா.

      துளசிதரன்

      நீக்கு