சனி, 18 பிப்ரவரி, 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 18 - வீட்டுத் தோட்டத்தில் கூ...குக்கூ


சென்ற பதிவை வாசித்த கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. ஒரு சிலருக்குப் பயிற்சிகள் பயன்பட்டன என்பதும் மகிழ்ச்சி.

நாங்க ஜிப்சி கூட்டம். ஊர் ஊரா மாறுவோம் இல்லைனா வீடு மாறுவோம். வீடு  கூட மாறலைனா எப்படி? இருப்புக் கொள்ளாது. ஏதானும் ஒரு காரணம் கிடைத்துவிடும்! அப்படி ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன்! கிடைத்துக்கொண்டே இருக்கும் அனுபவங்கள்.

அதனால் இப்ப இருக்கற வீடு, முன்ன இருந்த வீடு இப்படித்தான் சொல்வது.  

இவ்வளவுதான் இடமே. மண் தடுப்புக் கல் ஒரு பக்கம் தெரியும். முன்பக்கம் தெரியாமல் நான் வைத்த ஓமவல்லி படர்ந்திருக்கிறது . நான் நட்ட சுண்டைக்காய்ச் செடி மரமாகிப் படர்ந்து....

அப்படி இருந்த ஒரு வீட்டில் தோட்டம். தோட்டம்னதும் பெரிய ஏக்கரா அளவுன்னு நினைத்துவிடக் கூடாது. குளியலறை அளவே உள்ள நிலம். நமக்கு நிலத்தைக் கண்டுவிட்டால் போதும். ஏதோ பெரிசா விவசாயம் பண்ணும் எண்ணம் வந்துவிடும்!

அந்த வீட்டிற்குக் குடியேறிய போது மண் இருக்கும் அந்தக் குட்டியூண்டு இடத்தில் இரு கறிவேப்பிலை மரங்கள், இரு மல்லிப்பூ செடிகள், சிறிய இன்சுலின் செடிகள் மட்டுமே இருந்தன. மல்லிச் செடி இரு பக்கமும் படர்ந்து இருந்தது. நடுவிலும் சுற்றிலும் வெயில் நன்றாகப் படும் வெறும் இடம். இடம் வெறுமனே இருக்கலாமா? கீதாவின் கை துறு துறு என்றது.

இன்சுலின் செடி - பூ

படர்ந்திருந்த மல்லிச் செடியையும், இன்சுலின் செடியையும் ஒழுங்கு செய்து வெற்றாக இருந்த இடத்தில் நான் நட்டு, விதைத்து விளைந்த பாலக் கீரை, தக்காளி, கத்தரிக்காய், காரட், பாகற்காய், பப்பாளி, பீன்ஸ், வெற்றிலை, பிரண்டை (இரு வகை வைத்தேன். எலிக்கு ரொம்பப் பிடிக்குமாம் அதைத் தூக்கிக் கொண்டு போய்விட்டது. துவையல் செய்யுமோ?!!!), மிளகாய், புதினா, உருளைக் கிழங்கு, வெங்காயம், கொத்தமல்லி விளைச்சல் படங்கள் எல்லாம் பழைய ஹார்ட் டிஸ்கில் மாட்டிக் கொண்டுவிட்டன. இப்ப இருக்கற டிஸ்கில் சிக்கியவற்றை இங்கே பகிர்கிறேன்.

காய்களுக்கான விதைகள் எதுவும் கடையில் வாங்கியவை அல்ல. எல்லாம் வாங்கிய காய்களில் கிடைத்தவை.

மல்லிப் பூ


வீட்டுக் காய்கறிக் கழிவுகள், தேங்காய் நார், வீட்டு வாசலில் மாடு போட்டுச் செல்லும் சாணம் (தண்ணி வைப்போமே அதை சர்ரென்று ஒரே உறிஞ்சலில் பக்கெட் காலியாகிவிடும்) வீட்டில் விழும் இலைகள், காற்று அள்ளிப் போடும் தெரு மரங்களின் இலைகள் என்று கலந்து கட்டி மண்ணுல போட்டேன். 

 பீன்ஸ் பூ பக்கத்தில் தடியாக இருப்பது பப்பாளி மரத்தின் அடிப்பாகம்

இப்படத்தில் வலப்புறம் இளம் மாமரம் ஒன்று தெரிகிறதா? மற்றொன்று அதன் பின் புறம். இதில் வேறொன்று தெரியும். ஒருவர் கண்டு பிடிப்பது உறுதி.

சும்மா ஆர்வத்தில் ரெண்டு சுண்டைக்காய் செடிகள் நட்டேன், வேறு வேறு மாங்காய் வகைச் செடிகள் இரண்டு நட்டேன். சுண்டைக்காய்ச் செடி மரமாக வளர்ந்து முழு இடத்தையும் முள்ளுடனான சோலையாக்கியது!! குடியேறிய போது காய்ந்து கிடந்த கறிவேப்பிலை  பச்சைப் பசேல் என்று இரண்டும் செழித்து வளர்ந்தன. 

தெருவில் போவோரும் வருவோரும், கறிவேப்பிலையை ரூபாய்க்குப் பறிக்கக் கேட்டாங்க. பக்கத்தில் இருந்த உணவகம் வந்து குத்தகைக்குக் கேட்டாங்க. இல்லைனா முழுசும் பறிச்சுக்கறோம் ரூபாய் தரோம்னும் ஆனால் நாங்க சும்மா பறிச்சுக்கோங்கன்னு சொல்லி எல்லாரும் பறித்துக்கொண்டார்கள். நம்ம வீட்டுலதான் ஏணி இருக்கிறதே.

ஆனால் ஹோட்டல் காரர்கள் பறிக்கும் போது நாங்கள் கவனமாக இருந்து மொட்டையடித்துவிடாமல் பார்த்துக் கொண்டோம். மற்றவர்கள் பறிக்கும் போதும், கன்னா பின்னான்னு பறிச்சு கிளையை உடைத்தால் என் மனம் படபடக்கும் ஆ! மரத்தைப் பாழாக்குகிறார்களே, அதற்கு வலிக்குமே என்று. அப்படிப் பறிக்கும் போதும் கவனமா இருந்தேன்.  

நட்ட இரு மாமரக் கன்றுகளும் என்னைப் போல இளம் வயதாகி ஆனால் என்னை விட உயரமாகின.  நட்ட ஓமவல்லி கூடையாக கூடையாக வளர்ந்தது.

ஒரு சொலவடை இருக்கே அற்பனுக்கு பவுஷு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான்னு அது போல இத்துனூண்டு மண்ணைப் பார்த்த ஆர்வக் கோளாறில் சின்ன இடத்தில் இத்தனைச் செடிகள் நட்டா?!!!!!!!!!!!!!!!!!!!!! 

கறிவேப்பிலை மரத்தில் எவ்வளவு காய்கள் பழங்கள்! நாட்டுக் கறிவேப்பிலை. இவை விழுந்து நிறைய சின்ன சின்ன கறிவேப்பிலைச் செடிகள் வளர்ந்திருந்தன.

பாகற்காய் தெரிகிறதா? சுண்டைக்காய் மரத்தில் பற்றிக் கொண்டு...

சுண்டைக்காய்ச் செடி மரமான பிறகு வேறு எந்தக் காய்கறிச் செடிகளும் போட முடியவில்லை. அது சோலையாகியதால் நிழல். பாகற்காய் தவிர. பாகற்காய்க்கு பந்தல் எதுவும் போடலை. அது ஜாலியா நான் தனியா வளர்ந்துக்குவேன்னு சுண்டைக்காய், கறிவேப்பிலை மரத்தைப் பிடித்துக் கொண்டு மளமளவென ஏறியது!!! நிறைய காய்த்தன.

சுண்டைக்காய் மரமோ ஒரே வருடத்தில் அசாத்திய விளைச்சல். மகிழ்ச்சியில் உறவுகள் எல்லார்க்கிட்டயும் சொல்ல டிமான்ட்தான். நாங்களும் ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்து பறித்து மோரில் போட்டுக் காய வைக்க, நாட்டின் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்குன்னும், கடல் கடந்து அமெரிக்கான்னும் பறந்தது. நம்மால இத்தனை பயனான்னு சுண்டைக்காய் மரம் இன்னும் காய்த்துத் தள்ளியது!! பக்கத்து வீடு, தெரிஞ்சவங்கன்னு எல்லாரும் கேட்க கொடுத்தாச்சு. 

சுண்டைக்காய்
காம்பு எடுக்கப்பட்ட சுண்டைக்காய்கள்
நடுவில் கீறி ....அப்புறம் மோரில் போட்டு
வெயிலில் காய்ந்த சுண்டைக்காய்கள்

ஸ்ரீராம் அவர் கருத்திலோ, பதிவிலோ மதுரை சுண்டை பற்றிச் சொல்ல, நானும் இந்தச் சுண்டையை தரேன் தரேன்னு சொல்லி சென்னைக்கு வீட்டு விசேஷமாகச் சென்ற போது எடுத்துச் சென்றவை எல்லாம் மத்தவங்க கண்ணுல பட, கொடுக்காம இருக்க முடியுமா...பகிரப்பட்டுவிட கடைசில அவர் டர்ன் வரப்ப ஹிஹிஹிஹி. கொஞ்சமே கொஞ்சம்தான் கொடுக்க இருந்தது!!! எனக்கும் அம்புட்டுத்தான்.

அப்படியான அந்தச் சிறிய சோலையில் வண்ணத்துப் பூச்சிகள். விதம் விதமான பூச்சிகள் வந்தன. இவற்றின் படங்கள் அப்பால வரும்.

குயில் தேன்சிட்டு, புல் புல்-கொண்டைக் குருவி, கருங்குருவி, தவிட்டுக் குருவி என்று விசிட். கலகல என்று இருக்கும். மத்த பறவைகளும் அப்பப்ப வந்து வந்து போகும்.

அதுவும் ஏப்ரல் மாதத்திலிருந்து மே மாத முழுவதும் தினமும் காலை 5.30 லிருந்து 6 மணிக்குள் குயில் முதல் விசிட். அடுத்து அவ்வப்போது வரும். பெரும்பாலும் மதியம் 2, 3 மணிக்குள் கடைசி வரவாக இருக்கும்.

வரும் போதே குரல் கொடுத்துக் கொண்டு வரும். ஆனால் பல நேரங்களில் மரத்தில் அடர்ந்த இலைகளுக்கு நடுவில் எங்கு இருக்கிறது என்று காண்பதே கடினம்.

கிட்டே சென்றால் பறந்துவிடுமே என்று கொஞ்சம் ஆங்கிள் பார்த்து அது தெரியும் வகையில் எட்ட நின்று மூன்றாவது விழியின் பார்வையை கிட்டப்பார்வையாக்கி எடுத்த காணொளிகள் கீழே. அவற்றின் இனிய குக்கூ பாடலும், கறிவேப்பிலை பழங்களைச் சாப்பிடும் அழகும்! சாப்பிடும் போதே குக்கூ என்று அழைப்பு விடுப்பது கண் கொள்ளாக் காட்சி. 

கறிவேப்பிலை மரத்தில் குயில். கறிவேப்பிலை பழங்களுக்காக, தன்  ஜோடிக்காகக் காத்திருக்கிறது கூவிக் கொண்டு...
முடிந்தால், நேரமிருந்தால் இரு காணொளிகளையும் பாருங்கள். சிறியவைதான்

கன்னிக் குயிலொன்று காவிடத்தே பாடியதோர்

இன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய்....

குக்குக்கூ என்று குயில் பாடும் பாட்டினிலே

தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே (பாரதியார்)

இதா இங்க பழமிருக்கு, நல்ல காத்து, நிழலு குக்கூன்னு கூவுகேன், ஆளைக் காணல, நான் மட்டும் திங்கேன்...

அங்கிருந்து மாறிய போது மனம் ரொம்ப சங்கடப்பட்டது. அருகில் இரு ஏரிகள், வித விதமான பறவைகளின் கூட்டம், ஏரியைச் சுற்றி பசுமையான பாதை. வீட்டுத் தோட்டத்தையும் தொட்டு தொட்டுப் பார்த்துவிட்டு வந்தேன். இப்போது செடிகள் எல்லாம் காய்ந்து போய்விட்டனவாம். நட்ட மாமரம் உட்பட!  I miss everything.

ஓமவல்லி இலைகளைப் பறித்து காய வைத்து பொடி பண்ணி கொண்டு வந்தேன். 

இப்ப இருக்கும் வீடு தனி வீடென்றாலும் மொட்டை மாடி மூன்றாவது தளம். வத்தல் வடாம் போட்டாலும் சென்று சென்று பார்ப்பது கடினம். நாம தரைத்தளம். பூந்தொட்டிகள் நிறைய இருக்கின்றன ஆனால் மண்ணை எல்லாம் மாற்ற வேண்டும். உழைப்பும், நேரமும் தேவை. யோசனையாக இருக்கிறது. இரண்டாவது, நான் பழைய வீட்டிலிருந்து கொண்டு வந்து இங்கு வைத்த வெற்றிலைக் கொடி இருந்த தொட்டிய யாரோ ஆட்டைய போட்டுட்டாங்க. அதனாலும் யோசனையாக இருக்கு.

தெருவில் மரங்கள் நிறைய இருக்கின்றன. பறவைகள் கண்ணில் படவில்லை. புறாக்கள் மட்டுமே. காகம் அரிது. ஏரிகள் நடக்கும் தூரத்தில் இருக்கின்றன. ஆனால் அதில் பறவைகள் இல்லை. நோ சுண்டைக்காய், நோ கறிவேப்பிலை. நோ ஓமவல்லி. நோ காய்கள். நோ வத்தல், வடாம், மரச்சீனி அப்பளம்! 

(பழைய வீட்டுத் தோட்டப் படங்கள், ஏரிகள், பறவைகள் படங்கள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றும் வரும்! மெதுவாஆஆஆஆ)


----கீதா




50 கருத்துகள்:

  1. படங்கள் எல்லாம் மிக அருமை. நானும் இருக்கும் இடத்தில் செடிகள் வைத்து விடுவேன். நல்ல பயனுள்ள செடிகள் வைத்து இருக்கிறீர்கள்.
    பச்சை சுண்டைக்காய் சாம்பார், துவையல் எல்லாம் நன்றாக இருக்கும், மாமியார் கூட்டு செய்வார்கள். எப்போதும் வீட்டில் சுண்டைக்காய் வற்றல் இருக்கும். உடம்புக்கு நல்லது. வற்றல் படங்களை பார்க்கும் போது மாயவரம் நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சுண்டைக்காய் வந்துவிடும். அப்புறம் ஒரு வயதான அம்மா, கொண்டு வந்து கொடுத்து காசி வாங்கி போவார்.
    கறிவேப்பிலை மரத்தில் குயில்கள் பாடுவதும், கரிவேப்பிலை பழத்தை வாயில் வைத்து கொண்டு தன் இணைக்கு காத்து இருப்பதும் பார்க்க அருமையான காணொளி.
    மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் எல்லாம் மிக அருமை. நானும் இருக்கும் இடத்தில் செடிகள் வைத்து விடுவேன். நல்ல பயனுள்ள செடிகள் வைத்து இருக்கிறீர்கள்.//

      நன்றி கோமதிக்கா....நானும் இங்கு இருக்கும் தொட்டிகளில் வைக்க நினைத்தேன். நிறைய விதைகள் நான் சேகரித்தவை இருக்கு. பழைய வீட்டிலிருந்து நான் நட்டு வைத்திருந்த வெற்றிலையைக் கொண்டு வந்து இங்க தொட்டில வைச்சா தொட்டியை யாரோ ஆட்டையைப் போட்டுட்டாங்க....பதிவுல இது எழுத விட்டுப் போச்சு இப்ப இதைப் பதிவில் கடைசில சேர்த்திருக்கேன்... அதனாலும் யோசனையா இருக்க்..

      ஆமாம் நானும் சுண்டைக்காயை இப்படி எல்லாம் செய்வதுண்டு. பச்சைச் சுண்டைக்காயை நிறைய செய்தேன். வட இந்திய கிரேவியும்...

      கறிவேப்பிலை மரத்தில் குயில்கள் பாடுவதும், கரிவேப்பிலை பழத்தை வாயில் வைத்து கொண்டு தன் இணைக்கு காத்து இருப்பதும் பார்க்க அருமையான காணொளி.//

      மிக்க நன்றிகோமதிக்கா...நான் ரொம்ப ரசித்தவை அங்கு...அப்புறம் வந்து மற்றவற்றிற்குப் பதில் தருகிறேன்...நடைப்பயிற்சி போகணும்...

      நன்றி கோமதிக்கா..

      கீதா

      நீக்கு
  2. //இப்படத்தில் வலப்புறம் இளம் மாமரம் ஒன்று தெரிகிறதா? மற்றொன்று அதன் பின் புறம். இதில் வேறொன்று தெரியும். ஒருவர் கண்டு பிடிப்பது உறுதி.//

    இளம் மாந்தளிர் தெரிகிறது. வேறொன்றும் தெரிகிறது, அது சின்னக்குருவி தலையை திருப்பி கொண்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவ கண்டுபிடிப்பது உறுதி - அந்த ஒருவர் நீங்க தான் கோமதிக்கா...நீங்க கண்டுபிடிப்பீங்கன்னு தெரியும். அந்தக் குருவி தலையை உயர்த்திடுச்சு நான் எடுக்கும் போது....வலக்கண் மட்டும் தெரியும் படத்தில்

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  3. பாகற்காய் தெரிகிறதா? சுண்டைக்காய் மரத்தில் பற்றிக் கொண்டு...//
    இரண்டு பாகற்காய் குட்டியாக தெரிகிறது.
    செடிகளின் பசுமை கண்களுக்கு குளுமை.
    சுண்டைவற்றல் மோரில் ஊறுவது காய்ந்த வற்றல் லேசாக கீறி காட்டும் படம் எல்லாம் நன்றாக இருக்கிறது. எங்கள் அப்பாவுக்கு இப்படி ஊர் ஊராக மாற்றல் ஆகும் அப்போது என் ஆச்சி "என்ன உத்தியோகமோ ! இப்படி நாடோடிகனக்க அலையவேண்டி இருக்கு" என்பார்கள்.

    (பழைய வீட்டுத் தோட்டப் படங்கள், ஏரிகள், பறவைகள் படங்கள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றும் வரும்! மெதுவாஆஆஆஆ)

    ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போது பகிருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பாகற்காய் குட்டியாக தெரிகிறது.
      செடிகளின் பசுமை கண்களுக்கு குளுமை.//

      நன்றி. ஆமாம் அக்கா பச்சைப் பசேல்னு தினமும் தண்ணீர் ஊற்றி, இயற்கை வளம் எல்லாம் போட்டு, நல்ல வளமும் ஆக்கினேன் மண்ணை....

      //சுண்டைவற்றல் மோரில் ஊறுவது காய்ந்த வற்றல் லேசாக கீறி காட்டும் படம் எல்லாம் நன்றாக இருக்கிறது. //

      நன்றி கோமதிக்கா

      //அப்பாவுக்கு இப்படி ஊர் ஊராக மாற்றல் ஆகும் அப்போது என் ஆச்சி "என்ன உத்தியோகமோ ! இப்படி நாடோடிகனக்க அலையவேண்டி இருக்கு" என்பார்கள் //

      ஹாஹாஹாஹா...

      //ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போது பகிருங்கள்.//

      பகிர்கிறேன் கோமதிக்கா

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  4. இன்சுலின் செடி - பூ வைத்து இருந்தேன், அதை போனமுறை இங்கு வரும் போது தம்பி வீட்டில் கொடுத்து வந்தேன், அவன் வீட்டில் பூ பூத்த படம் அனுப்பினான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ தம்பி வீட்டிலும் வளர்ந்தது குறித்து மகிழ்ச்சி கோமதிக்கா. இந்தச் செடி டக்கென்று பிடித்துக் கொண்டு வளர்ந்துவிடுகிறது.

      நான் தினமும் அந்த இலையின் நுனியைக் கிள்ளிச் சாப்பிட்டு வந்தேன் அங்கிருந்த வரை. இன்சுலின் செடி பொடி இப்போது காப்ஸ்யூலாகக் கிடைக்கிறதாம் மகன் சொன்னான்.

      இன்சுலின் செடி இலைகளையும் பறித்து காய வைத்து பொடி பண்ணிருக்கலாமோ.. என்று...இ

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  5. //ஓமவல்லி இலைகளைப் பறித்து காய வைத்து பொடி பண்ணி கொண்டு வந்தேன்.//
    நல்ல வேலை செய்தீர்கள். என் தங்கையும் இப்படி பொடி செய்து வைத்து இருக்கிறாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விஷயம் உங்கள் தங்கையும் செய்து வைத்திருப்பது.

      பல சமயங்களின் கை கொடுக்கிறது.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  6. எனக்கும் தோட்டம் வைக்க ஆசைதான்.  தொடர்ந்து பராமரிக்கும் பொறுமை கிடையாது.  எனக்கு என் பாஸ் தேவலாம்.  என்னைவிட கொஞ்சம் பொறுமை மிக்கவர்.  இப்போ கூட ஏட்டின் ஓபன் டெரஸில் வைத்திருந்த செடிகளை மொட்டை மாடிக்கு மாற்றி, தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் பொறுமை நேரம் எல்லாம் வேண்டுமே....பாஸ் சமத்து!! பாருங்க சூப்பரா செய்யறாங்க நல்ல விஷயம்....

      மற்றொன்று நாம ஊருக்குப் போனா தண்ணீர் விட யாரேனும் வேண்டும். இதெல்லாம் தான் பிரச்சனைகள்...இப்போது ரொம்ப யோசனையாக இருக்கு எனக்கு இங்கு வைக்க...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. இன்சுலின் செடி கேஜி மாமா வீட்டில் இருந்தது. இன்னமும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! கேஜி மாமா வீட்டில் பயன்படுத்துகிறார்களா?

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. இத்தனூண்டு இடத்தில் இத்தனை வகை செடிகளா>  அம்மாடி..  எ எங்கள் வீட்டிலும் பிரண்டை செடி இருக்கிறது!ஒரு கணு வைத்தால் போதும்.  பல்கிப் பெருகி விடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஆமாம் ...ஓவர்தான் ஸ்ரீராம்...அதனால் மண்ணின் வளம் எல்லாத்துக்கும் கிடைக்காதுதான். எல்லாத்துக்கும் வளர இடம் வேண்டுமே....அதான் சொல்லிருக்கேன் ஆர்வக் கோளாறு....

      ஆமாம் பிரண்டை ஒரு கணு வைச்சா பொதும் பெருகும் இல்லையா? ஐங்க கொண்டு வந்து தொட்டியில் வைத்தேன் மூன்று மாசம் ஆகியும் அப்படியே இருக்கிறது...மண் நல்லால்ல எல்லாத் தொட்டிகளிலும் மாற்ற வேண்டும்...அதான் யோசனை...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  9. இத்தனூண்டு இடத்தில் வெங்காயம் போடுவதால் என்ன பயன்?  எவ்வளவு கிடைத்து விடும்.  கால் கிலோ கூட தேறாதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்யன் இல்லைதான்..சும்மா டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன் ஸ்ரீராம். நல்லா வந்துச்சு வெங்காயத் தாள் நிறைய கிடைத்தது. வெங்காயம் கால் கிலோக்குக் கூடக் கிடைத்தது. ஆனா மாறப் போகிறோம் என்றதும் அடுத்து போட வில்லை...உருளையும் கால் கிலோ கிடைத்தது...ரொம்ப ஆசை காய்த் தோட்டம் போடுவதில் ஆனால் யதார்த்தப் பிரச்சனைகள்

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  10. ஆ..  உங்கள் லிஸ்ட்டில் பச்சை மிளகாய் இல்லை!    இளம் மாமரம் படத்தில் கோமதி அக்காவுக்கு பிடித்த பறவை இருக்கிறதோ என்று பார்த்தால்...  ஆ..  அது பாம்பா?

    பதிலளிநீக்கு
  11. ஆனால் இது மதுரைச் சுண்டைக்காய் இல்லை.  அது வேறு மாதிரி இருக்கும்.  உப்பில் ஊறவைத்து ஊறுகாய், வத்தல்  தவிர அதை வேறு வகையில் சமைக்க முடியாது.  ஓமவல்லி இலைகளை காயவைத்து பொடி பண்ணிக்கொள்ளலாமா?  தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்தது ஸ்ரீராம்....உங்களிடம் கேட்டதில். மலைச்சுண்டைக்காய் அது. நம் வீட்டில் நாட்டுச் சுண்டைக்காய்.

      ஆமாம் ஸ்ரீராம் ஓமவல்லி இலைகளைக் காய வைத்து பொடி செய்துகொள்ளலாம். சென்னை வெயிலுக்கு எளிதாகக் காய்ந்துவிடும் என்று நினைக்கிறேன். இங்கு ரொம்ப நாளாச்சு...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  12. ஒவ்வொன்றும் வளர்ந்து பயன் தரும் போது, நம்க்கு வரும் பெருமிதமே தனி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் டிடி அந்தப் பெருமிதத்தைச் சொல்லி முடியாது.

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  13. அசத்தி விட்டீர்கள் கீதா! தோட்டக்கலையில் இத்தனை ஆர்வமா! பசுமையான செடிகளும் கொடிகளும் பழங்களும் அத்தனை அழகு! அதற்குப்பொருத்தமான பாரதியின் கவிதை! மறுபடியும் அசத்தி விட்டீர்கள் என்று சொல்லி பாராட்டத் தோன்றுகிறது!
    எனக்கு தோட்டக்கலையில் மிகுந்த ஆர்வம்! ஆனால் வாழ்நாள் முழுவதும் வெளிநாட்டில் என்பதால் அந்த ஆர்வமும் தாகமும் தணிக்கப்படவேயில்லை!
    எங்கள் உணவகத்தின் வெளியே குட்டி குட்டி தொட்டிகளில் செண்டு ஜவ்வந்தி, கரும்பு, கற்றாழை என்று எங்கள் ஆட்கள் வைத்திருக்கிறார்கள்! ' ஊருக்குப்போகும்போது விதைகளும் செடிகளும் கொண்டு வாருங்கள் மேடம்' என்று கேட்டுக்கொண்டார்கள். கொண்டு வருவதாக உறுதியளித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசத்தி விட்டீர்கள் கீதா! //

      மிக்க நன்றி மனோ அக்கா.

      //தோட்டக்கலையில் இத்தனை ஆர்வமா! //

      ஆர்வம் உண்டுதான்...ஆனால் நேரமும் உழைப்பும் மிக அவசியமாயிற்றே. பல நிறைய விஷயங்களில் ஆர்வம் உண்டு. ஆனால் எல்லாமே நுனிப்புல் மேய்வது போலத்தான்.

      // பசுமையான செடிகளும் கொடிகளும் பழங்களும் அத்தனை அழகு! அதற்குப்பொருத்தமான பாரதியின் கவிதை! மறுபடியும் அசத்தி விட்டீர்கள் என்று சொல்லி பாராட்டத் தோன்றுகிறது!//

      மிக்க மிக்க நன்றி மனோ அக்கா.

      //எனக்கு தோட்டக்கலையில் மிகுந்த ஆர்வம்! ஆனால் வாழ்நாள் முழுவதும் வெளிநாட்டில் என்பதால் அந்த ஆர்வமும் தாகமும் தணிக்கப்படவேயில்லை!//

      உங்களுக்கும் ஆர்வம் இருப்பது பார்த்து மகிழ்ச்சி மனோ அக்கா. எனக்கும் அந்த ஆர்வம் நிறைவேறவில்லை எனலாம் இந்து இந்த வீட்டில் மற்றும் சென்னையில் இருந்த போது பால்கனியில் போட்டதோடு சரி அதன் பின் இல்லை. இங்கு இப்போது தொடர யோசனையாக இருக்கிறது..

      //எங்கள் உணவகத்தின் வெளியே குட்டி குட்டி தொட்டிகளில் செண்டு ஜவ்வந்தி, கரும்பு, கற்றாழை என்று எங்கள் ஆட்கள் வைத்திருக்கிறார்கள்! ' ஊருக்குப்போகும்போது விதைகளும் செடிகளும் கொண்டு வாருங்கள் மேடம்' என்று கேட்டுக்கொண்டார்கள். கொண்டு வருவதாக உறுதியளித்திருக்கிறேன்.//

      ஆஹா! நல்ல விஷயம் மனோ அக்கா. தொட்டிகளில் கரும்பும் வைத்திருக்கிறார்களா அட! ஆச்சரியம்....

      உங்கள் ஊருக்கு விதைகள் செடிகள் கொண்டு செல்லலாம் இல்லையா? கஸ்டம்ஸ் செக்கிங்க் இருக்காதென்று நினைக்கிறேன். அமெரிக்காவிற்குக் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

      கொண்டு செல்லலாம் என்றால் கொண்டு செல்லுங்கள் மனோ அக்கா.

      மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
  14. படங்களை மிகவும் ரசித்தேன்.

    கருவேப்பிலை செடியை எல்லோராலும் வளர்க்க முடியாது. அதில் பழம் வரும் அளவிற்கு நன்கு வளர்த்திருப்பது பாராட்டுக்குரியது. நல்ல கைராசி உங்களுக்கு.

    சுண்டைக்காய் மரம்? மிக அழகு. சுண்டை வத்தல் போட்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்தமைக்கு நன்றி நெல்லை.

      //கருவேப்பிலை செடியை எல்லோராலும் வளர்க்க முடியாது. அதில் பழம் வரும் அளவிற்கு நன்கு வளர்த்திருப்பது பாராட்டுக்குரியது. நல்ல கைராசி உங்களுக்கு.//

      கைராசியா!!!! ஹாஹாஹஹா.....ஹலோ கொஞ்சம் பதிவைப்பாருங்க வாசிக்கலை போல....என்ன சொல்லியிருக்கிறேன்னு....பாருங்க!!!!!!!!!!!!!! படத்தை மட்டும் பார்த்துட்டு .....சொல்லபிடாது. நாங்க அந்த வீட்டுல இருந்ததே 2 வருஷம் தான் அதுக்குள்ள எப்படிக் கறிவேப்பிலை இம்புட்டு வளரும்!!!!! நான் நட்டவை அல்ல...

      நாங்க அந்த வீட்டுக்குக் குடியேறிய போது ஏற்கனவே ரெண்டு மரங்கள் (அதைப் பார்த்துதானே அந்த வீட்டையே ஃபிக்ஸ் செய்தோம் கொஞ்சமாவது மண் இருக்கே என்று) அந்தப் படங்கள் எங்க இருக்குன்னு பார்க்கணும். இருந்தன நல்ல வயதான மரங்கள். ஆனால் காய்ந்து வறண்டு இருந்தன. பல மாசங்களாக யாரும் குடிவராமல் மூடியிருந்த வீடு. அதைத்தான் தண்ணீர் மோர் எல்லாம் ஊற்றி தழைக்க வைத்து குலுங்கியது.

      ஆனா கறிவேப்பிலை டக்கென்று வளராதுதான். ஆனால் விதைகள் போட்டால் வந்துவிடும்.

      //சுண்டைக்காய் மரம்? மிக அழகு. சுண்டை வத்தல் போட்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது.//

      ஆமா மரமே தான். நான் ரெண்டு செடிகள் வைத்தேன்....நானும் செடிகள்னுதான் நினைச்சேன். நான் எடுத்த இடத்தில் உயரமான செடிகளாக நிறைய காய்த்துக் குலுங்கியது. ஆனால் அது மாற்றான் தோட்டம் என்பதால் பறிக்கவில்லை. வேலி அருகில் இருந்த சின்ன செடிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து நட்டேன். நான் ரொம்ப ஊட்டச் சத்து கொடுத்துவிட்டேன் போல....மரமா பெரிய கிளைகள் அதுவே நம்ம கைதடிமனை விடக் குண்டாக வளர்ந்திருந்தன. அப்படித்தான் வளர்ந்திருந்தன..ரெண்டும். சுண்டைக்காய்க்கு ஒரு ஈ வரும் பாருங்க....பூவிற்கு வண்டுகள் வரும். அதையும் காணொளி எடுத்திருக்கிறேன். சுண்டைக்காய் மரத்தில் காய்த்தவற்றையும் பூவையும் எடுத்த படங்கள் எல்லாம் வேறொரு ஹார்ட் டிஸ்கில் மாட்டிக்கொண்டுஇருக்கு.

      படத்தில் காட்டியிருக்கும் வற்றல் கொஞ்சம்தான். விதைத்து ஒரு வருடத்தில் காய்க்கத் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருஷம் பறித்துக் கொண்டே இருந்தோம்....அப்புறம் இங்க வந்தாச்சே!!! அங்க மரத்தை வெட்டிட்டாங்களாம். ஓனர். ஆனா எல்லாரும் விரும்ப மாட்டாங்க நெல்லை. முள்ளு நிறைய இருக்கும்...கவனமா இருக்கணும்.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  15. வீட்டுத் தோட்டம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. நான் வந்து பார்க்கவில்லையே என்று நினைத்துக்கொண்டேன்.

    எங்க பால்கனில நிறையத் தொட்டிகளில் கற்பூரவல்லி, பிரண்டை, கற்றாழை போன்றவை இருக்கின்றன. பேசாமல் எல்லாவற்றையும் கடாசிவிட்டு பால்கனியை அமர்ந்து ரசிக்கும் இடமாக மாற்ற ஐடியா இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டுத் தோட்டம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. நான் வந்து பார்க்கவில்லையே என்று நினைத்துக்கொண்டேன்.//

      ரசித்தமைக்கு நன்றி நெல்லை. அடுத்த வரிக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....டூ லேட்!!!! எவ்வளவு தடவை சொல்லிருப்பேன்....வித்யாரண்யபுரா வரைக்கும் வந்தீங்களே....அப்பக் கூட சொன்னேனே கிட்டதான்னு...ஆனா எங்க வீட்டுக்கு வரணும்னா முன்னமே சொல்லணுமாக்கும் நான் ஏதாச்சும் செஞ்சு வைக்கணும்ல!!!

      //எங்க பால்கனில நிறையத் தொட்டிகளில் கற்பூரவல்லி, பிரண்டை, கற்றாழை போன்றவை இருக்கின்றன. //

      ஆஹா நல்ல மருத்துவ குணங்கள் உள்ள செடிகளாச்சே...எதுக்குக் கடாசணும். பிரண்டை வாவ்!!! நான் நட்ட பிரண்டைய எலி கொண்டு போய்டிச்சு பழைய வீட்டுல...அதுக்கு ரொம்பப் பிடிக்கும் போல...

      இங்க ஒரு வீட்டிலிருந்து வாங்கி வந்து நட்டேன் ஹூம் அப்படியே இருக்கிறது...

      //பால்கனியை அமர்ந்து ரசிக்கும் இடமாக மாற்ற ஐடியா இருக்கிறது.//

      ஓ!

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  16. பெருங்களத்தூரில் என் அப்பா இருந்த வீட்டில், நிறைய மாமரங்கள், சாத்துக்குடி, கருவேப்பிலை மரங்கள், மருதாணி, பலாமரம், எலுமிச்சை என ஏகப்பட்டவைகள் இருந்தன (பச்சை கனகாம்பரச் செடிகள் ஏகப்பட்டவை இருந்தன).... எல்லாம் வெட்டி, ஒரு வீட்டைக் கட்டிவிட்டான் என் தம்பி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா!! உங்க அப்பா இருந்த வீட்டில் என்ன அருமையான தோட்டமாக இருந்திருக்கு!! சோலையா இருந்திருக்கும். என் மாமியார் வீட்டிலும் உண்டு. முன்னும் பின்னும் அழகான இடம்.

      பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, அதற்கு அப்புறமான இடங்கள் எல்லாமே செமையா வளரும் இப்ப மாறியிருக்கும் என்று நினைக்கிறேன்.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  17. பசுமையான காட்சிகள் அருமை.

    விவரங்கள் சூப்பர்

    எனக்கும் வாழ்வில் ஓர் மரத்தை வளர்த்து விட்டு செல்ல ஆசை.

    பார்க்கலாம் சூழல் அமையவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி சும்மா நட்டு வைங்க ஜி...கண்டிப்பாக நல்ல சூழல் அமையும்

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  18. பாகற்காய் நிறைய காய்த்ததாக கூறியுள்ளீர்கள்... ஆனால் நாங்கள் எங்கள் தோட்டத்தில் பாகல் செடி நட்டுவைத்தால் அது காய்ப்பதற்கு முன்னதாகவே ஒருவித மஞ்சள் நிற பூச்சிகள் அதன் இலைகளை தின்று செடிகளை பட்டுப்போக செய்கின்றன. ஒரு தடவை இரு தடவை அல்ல... எல்லா நேரங்களிலும் இதுதான் நடக்கிறது.... நீங்கள் பூச்சிகளிடமிருந்து பாகல் செடிகளை காப்பாற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகிறீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை சிவா சகோ எந்தப் பூச்சி கொல்லி மருந்த்தும் பயன்படுத்துவது இல்லை. நீங்கள் சொல்லும் பூச்சி வந்து பாகற்காயும் கூட வராமல் இருந்தது. நான் செய்வது இதுதான் பூண்டை அரைத்துச் சாரெடுத்து கொஞ்சம் தண்ணீர் கலந்து தெளிப்பான் குப்பியில் ஊற்றி தெளிப்பதுண்டு. வேப்ப இலை கிடைத்த போது (இங்க வேப்பமரம் கொஞ்சம் அரிது) அதையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீர் பூண்டுத் தண்ணீர் வேப்ப எண்ணை மூன்றையும் கலந்து வைத்தேன். ஒருவர் அதில் கொஞ்சம் சலவை சோப்பு பௌடர் அலல்து லிவிட் கொஞ்சம் கலக்கச் சொன்னார்....ஆனால் நான் அதைக் கலக்கவில்லை. கலக்காமல் தெளித்தேன் அவ்வளவுதான்...எனக்கு இரு முறை சமையலுக்குக் கிடைத்தன கிட்டத்தட்ட 20 பாகற்காய்கள். அதன் பின் வீடு மாறும் சமயத்தில் இருந்த ஐந்தையும் பெரிதாகவிலைனாலும் பரவாயில்லைன்னு பறித்துவிட்டேன். கொடி துவண்டு சரிந்து விட்டது. நான் அதைக் கவனிக்கவில்லையே கடைசி ஒரு வாரம்....

      மிக்க நன்றி சிவா

      கீதா

      நீக்கு
  19. மிக அழகான தோட்டம்...

    கவலைகள் பறந்தோடச் சிறந்த இடம்..

    நல்ல விவரங்கள்..

    இனிய பதிவு..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை அண்ணா கவலைகள் பறந்து விடும் நிஜமாகவே...ஆனால் இப்போது இல்லை. மீண்டும் தொட்டிகளில் இங்கு இந்த வீட்டில் தொடங்கலாமா என்ற யோசனை....கூடவே யாராச்சும் ஆட்டைய போட்டுடாம இருக்கணும் என்ற பயம்...இல்லை மூட்டை தூக்க வேண்டியிருந்தாலோன்னு...பார்ப்போம்

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  20. //ஆனால் நாங்க சும்மா பறிச்சுக்கோங்கன்னு சொல்லி எல்லாரும் பறித்துக்கொண்டார்கள்..//

    இப்படியெல்லாம் விடக்கூடாது..

    இயற்கை நம் வீட்டில் தருபவை நமக்கானவை..

    அவற்றை நாம் தான் நம் கையால் பறித்துத் தர் வேண்டுமே தவிர

    அசோக வனம் மாதிரி ஆக்கி விடக்கூடாது..

    அவர்களும் அடித்த வரைக்கும் ஆதாயம் என்று அபேஸ் பண்ணி விட்டார்கள்..

    இதுவே பாவம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா ஆமாம்...நாங்களும் பறித்துக் கொடுத்தோம் ஆனால் மரம் உயரமாக இருந்தது. ஏணி வைத்துத்தான் எடுக்க வேண்டும்....எனக்கு முடிந்த அளவு ஏணி வைத்து பறித்துக் கொடுத்தேன். குடைக்கம்பு போட்டு தழைத்து என்று ஆனால் நான் குள்ளமாச்சே....கணவரும் கூடப் பறிக்க முடியாத அளவு உயரம். எனவே அப்படி....அதன் பின் அடுத்த வீட்டு நண்பர் வந்து பறித்துக் கொடுக்க எல்லாருக்கும் விநியோகம்...சிலர் தெருவில் எட்டியதைப் பறித்துக் கொண்டாலும் நான் மரத்தைப் பாழாக்காமல் பார்த்துக் கொண்டேன்...

      மிக்க நன்றி துரை அண்ணா உங்கள் கருத்து நல்ல கருத்து

      கீதா

      நீக்கு
  21. வணக்கம்,

    ஒரு சிறிய மண் பரப்பில் அத்தனை செடி கொடிகளை பயிரிட்டு பலன் பெற்று அந்த பலன்களை மற்றவர்களோடு பகிர்ந்து மகிழ்ந்த உங்களோடு நானும் மகிழ்கின்றேன்.

    எனக்கும் தோட்டம் என்றால் பிடிக்கும்.இங்கும் வருடா வருடம் தக்காளி, பீன்ஸ், உருளை புதினா போன்றவற்றை பயிரிடுவது வழக்கம். (ஏப்ரல் - செப்டெம்பர் மட்டுமே)

    ஏற்கனவே நட்டு வளர்ந்துவரும் ஆப்பிள், செரி மரங்களையும் பராமரிப்பது, கூஸ் பெர்ரி என சொல்லப்படும் ஒருவகை நெல்லிக்காய் புதரையும் அதன் கனிகளையும் பலன்களையும் பார்க்கும்போது உள்ளத்தில் தோன்றும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வார்த்து கொடுப்பது கூடாதகாரியம்.

    கடந்த வருட சாகுபடியில் தயாரித்த நெல்லிக்காய் ஊறுகாய் இன்னமும் இருக்கின்றது.

    வீடுகளை மாற்றும் போது அங்கேயே விட்டுவந்த சிலவற்றில் மனதிற்கு நெருக்கமாகிவிட்ட மரங்களை மறப்பது முடியாத ஒன்று.

    இன்சுலின் செடி என்பதை இன்றுவரை நான் கேள்வி பட்டதில்லை, முதன் முதலாக அறிந்துகொண்டேன்.

    குயிலின் பாடலும் அதனடியில் பாரதியின் பாடலும் சிறப்பு.

    மரங்களில் இருந்து இலைகள் எனும் பழைய (வீட்டு) நினைவுகள் உதிர்ந்து போனாலும் மீண்டும் மீண்டும் துளிர்த்து நம் மனதை ஆட்க்கொள்ளும் இந்த இயற்கையின் விந்தையை - விலங்குகள் பறவைகள், மலர்களை மறக்க மனம் கூடுதில்லையே.

    "வெற்றிலை" கொடிக்கு "சுண்ணாம்பு" தடவிய அந்த பாதகர்களை "பா(ர்)க்கு"ம் போது "நாக்கு சிவக்கும்" அளவிற்கு நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்கனும் போல தோன்றுகின்றது.

    சிறப்பு பதிவு பாராட்டுக்கள்.

    கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோ! விரிவான மகிழ்வான கருத்திற்கு மிக்க நன்றி.

      ஒரு சிறிய மண் பரப்பில் அத்தனை செடி கொடிகளை பயிரிட்டு பலன் பெற்று அந்த பலன்களை மற்றவர்களோடு பகிர்ந்து மகிழ்ந்த உங்களோடு நானும் மகிழ்கின்றேன்.//

      மிக்க நன்றி கோ.

      உங்களுக்கும் தோட்டம் பிடிக்கும் என்பதும். உங்கள் தோட்டத்து மரங்கள் கனிகள் நெல்லிக்காய் ஊறுகாய் இன்னும் இருப்பது (அதனால்தானே ஊறுகாய்!!!) மகிழ்ச்சி. ஆமாம் அதன் பலன்களைப் பார்க்கும் போது அந்த மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லைதான்...

      //இன்சுலின் செடி என்பதை இன்றுவரை நான் கேள்வி பட்டதில்லை, முதன் முதலாக அறிந்துகொண்டேன்.//

      ஓ அப்படியா ஆச்சரியம். இதன் பொடி கூட தற்போது விற்கப்படுகிறது. சர்க்கரை வியாதிக்கு என்று.

      //மரங்களில் இருந்து இலைகள் எனும் பழைய (வீட்டு) நினைவுகள் உதிர்ந்து போனாலும் மீண்டும் மீண்டும் துளிர்த்து நம் மனதை ஆட்க்கொள்ளும் இந்த இயற்கையின் விந்தையை - விலங்குகள் பறவைகள், மலர்களை மறக்க மனம் கூடுதில்லையே.//

      ஆமா. கமல் பாட்டில் முடிச்சிட்டீங்க!!!

      //"வெற்றிலை" கொடிக்கு "சுண்ணாம்பு" தடவிய அந்த பாதகர்களை "பா(ர்)க்கு"ம் போது "நாக்கு சிவக்கும்" அளவிற்கு நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்கனும் போல தோன்றுகின்றது.//

      ஹாஹாஹாஹா கோ உங்க சொல்லாடலே தனிதான்...ரொம்ப ரசித்தேன்.

      மிக்க நன்றி கோ, பாராட்டியதற்கு

      கீதா

      நீக்கு
  22. சமீபத்தில் சர்க்கரை குறைபாடு கண்டுபிடிக்கப்பட்ட 50 வயது பெண்மணி நான். என் டயட் எப்படி இருக்க வேண்டுமென்று டிப்ஸ் தருகிறீர்களா? நீங்கள் கடைப்பிடிப்பதை சொன்னால் போதும். ரெகுலராக உடற்பயிற்சி செய்வேன். வெளிச்சாப்பாடு அறவே கிடையாது. சைவம். எண்ணை பதார்த்தம் கவருவதில்லை. மிதமான அளவு சாப்பாடு தான். எப்படி சர்க்கரை வந்தது என்று ஆச்சர்யம். குடும்பத்திலும் யாருக்குமில்லை.

    சுதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுதா அவர்களுக்கு, பெயரில்லா என்று வந்திருப்பதால் உங்கள் விவரங்கள் அறியமுடியவில்லை.

      உங்கள் உடலில் சர்க்கரை குறைபாடு எதனால் என்பதும் மருத்துவர்கள்தான் சொல்ல முடியும். நான் மருத்துவர் அல்ல.

      குடும்பத்தில் என்றால் முதல் கட்ட உறவு இரண்டாம் கட்ட உறவு என்றில்லை அதற்கு முன்பு இருந்திருந்தாலும் வரலாம். அல்லது நம் உடலில் இன்சுலின் அளவு பொருத்தும் வரலாம். நாம் கொஞ்சமே - இந்தக் கொஞ்சம் என்பதும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் அளவீடு, தெளிவில்லாத அளவீடு - என்று சாப்பிடுவதின் சக்தியை எரிக்கும் திறன் மாறுபடலாம்...நம் உடலில் வேறு ஏதேனும் இருக்கலாம். சர்க்கரை வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எதனால் என்பதைக் கண்டறிந்தால் மூலக்காரணம் தெரிந்துவிட்டால் தீர்வு கிடைத்துவிடும் இல்லையா?

      நான் பின்பற்றுவது எனக்கு வேலை செய்வது போல் மற்றவர்களுக்கும் அது தீர்வு கொடுக்கும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் உடல் மெட்டபாலிஸமும் வேறு வேறு இல்லையா? நானுமே ட்ரையல் அண்ட் எரர் முயற்சியில் அதாவது என்ன, எந்த அளவு சாப்பிட்டால், வாக்கிங்க்/உடற்பயிற்சி எவ்வளவு வொர்க்கவுட் என்பதெல்லாம் கணக்கில் கொண்டு கூடுகிறது குறைகிறது என்பதை கொஞ்சம் என்னை நானே பரிசோதனை எலியாக்கிக் கொண்டு கண்டதை பின்பற்றுகிறேன். வீட்டில் இருக்கும் வரை இது ஓகே...ஆனால் வெளியில் பிராயணம் செய்யும் போது நாம் பின்பற்றும் நம் தினப்படி விஷயங்கள் பாதிக்கப்படும் என்பதால் அதற்கு ஏற்றபடி இருக்க வேண்டும் எனப்தால் நான் மருந்தும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

      இரண்டு இட்லி சாப்பிட்டாலே சர்க்கரை கூடலாம். பச்சை அரிசி (அதிலுள்ள ஸ்டார்ச்) சர்க்கரையைக் கூட்டும் நாம் சாப்பிடும் அளவும் முக்கியம்... ஆனால் அதற்கு ஏற்ப வொர்கவுட் செய்தால் கட்டுப்பாட்டில் இருக்கும். இப்படி நாம் சாப்பிடும் அளவுக்கு ஏற்ப நம் உடற்பயிற்சி இருந்தால் கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம், அதைவிட முக்கியம் நம் மனம்!!!

      எனவே பொதுவெளியில் நான் பொதுவாகத்தான் சொல்ல இயலுமே அல்லாமல் இப்படித்தான் என்று பரிந்துரைகள். அதுவும் மருத்துவர் அல்லாத நான் சொல்ல இயலாது.

      ஒரு நல்ல டயட்டீஷியன், சர்க்கரை மருத்துவரின் எந்தவகை மருத்துவம் என்றாலும், அவர்களின் அறிவுரையைப் பெறுவது நல்லது.

      தவறாக நினைக்காதீர்கள் நான் சொல்லுவது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி சுதா.

      கீதா

      நீக்கு
    2. விரிவாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி கீதாம்மா! எனக்குப் புரிகிறது… என்னிடம் யாராவது கேட்டாலும் இப்படித்தான் நானும் சொல்லியிருப்பேன்.

      நானும் ட்ரையல் அண்ட் எரர் தான் செய்து பார்க்கிறேன். கூடவே யோகமுத்ரா, உடற்பயிற்சி, குறிப்பாக ( வஜ்ராசனத்தில் அமர்ந்து குனிந்து தலையால் தரையை தொடுவது) செய்கிறேன்… வழக்கமான உணவு கட்டுப்பாடு… இன்ன பிற…

      இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய சதவிகிதம் இருப்பதாக படிக்கிறேன். சிறு குழந்தைகளுக்கும் இருக்கிறதாம்! பாவம் :(

      மிக்க நன்றி கீதா!

      சுதா

      நீக்கு
    3. சுதா மிக்க நன்றி. கீதாம்மா என்று வேண்டாமே. உங்கள் வயதின் அருகில்தான் கொஞ்சமே பெரியவள் அவ்வளவே. நானும் யோகா செய்கிறேன். ஆம் வஜ்ராசனம்...நல்ல பயிற்சி. அர்த மத்ஸ்யேந்த்ராசனம், ஜானு சிரசாசனா, பவனமுக்தாசனம், இவை எல்லாம் சர்க்கரை குறைபாட்டிற்கு என்று எங்கள் யோகா ஆசிரியர் சொல்லியதுண்டு. சூரியநமஸ்காரம் - இது நல்ல வொர்க்கவுட்டும் கூட...

      இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய சதவிகிதம் இருப்பதாக படிக்கிறேன். சிறு குழந்தைகளுக்கும் இருக்கிறதாம்! பாவம் :(//

      ஆமாம். முடிந்தால் விருப்பமிருந்தால் மெயிலில் தொடர்பு கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் என்றால் உங்கள் சர்க்கரை அளவும் தெரிந்துகொண்டு சில சொல்லலாம்.

      மிக்க நன்றி சுதா.

      கீதா

      நீக்கு
  23. சமீபத்தில் சர்க்கரை குறைபாடு கண்டுபிடிக்கப்பட்ட 50 வயது பெண்மணி நான். என் டயட் எப்படி இருக்க வேண்டுமென்று டிப்ஸ் தருகிறீர்களா? நீங்கள் கடைப்பிடிப்பதை சொன்னால் போதும். ரெகுலராக உடற்பயிற்சி செய்வேன். வெளிச்சாப்பாடு அறவே கிடையாது. சைவம். எண்ணை பதார்த்தம் கவருவதில்லை. மிதமான அளவு சாப்பாடு தான். எப்படி சர்க்கரை வந்தது என்று ஆச்சர்யம். குடும்பத்திலும் யாருக்குமில்லை.

    சுதா

    பதிலளிநீக்கு
  24. ரொம்ப லேட்.இப்போ தான் பார்த்தேன்.  கட்டுரை ஓகே. ஒரு ஒழுங்கு இருக்கிறது. படங்களும் பரவாயில்லை. கடைசியில் 'இப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன்' ஆகிவிட்டது. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப லேட்.இப்போ தான் பார்த்தேன். //

      பரவாயில்லை அண்ணா....

      //கட்டுரை ஓகே. ஒரு ஒழுங்கு இருக்கிறது.//

      நன்றி ஜெகே அண்ணா.

      படங்களும் பரவாயில்லை.//

      ஆ!! அவ்வளவுதான் இருக்கோ?!!

      // கடைசியில் 'இப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன்' ஆகிவிட்டது. //

      ஹாஹாஹாஹாஹா....ஆமாம் ஜெகே அண்ணா

      மிக்க நன்றி ஜெ கெ அண்ணா

      கீதா

      நீக்கு
  25. நன்றி சகோ. பொதுவாக இன்னென்ன உணவு வகைகள் இனிப்புக்காரர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று ஒரு பதிவு போடுங்களேன் (தேகப்பயிற்சி போட்டது போல).
    எப்படி, ஒரு பதிவை தேத்தி கொடுத்து விட்டேன்… ஹி ஹி ஹி…

    உங்க வலைத்தளத்தில் மெயில் ஐடி ஏதுமில்லை. என்னுடையதை இங்கு பகிர தயக்கமாக இருக்கு. பரவாயில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.

    நன்றி கீதா,
    சுதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க வலைத்தளத்தில் மெயில் ஐடி ஏதுமில்லை. //

      இருக்கிறதே சுதா, தளத்தின் மேலே வலப்புறம்.

      கீதா

      நீக்கு