ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - படுத்துக் கொண்டு செய்யும் சில எளிய பயிற்சிகள்

எல்லா நாட்களையும் நாம் சில சிறிய எளிய பயிற்சிகளுடன் தொடங்குவது நல்லது. இப்பயிற்சிகளைச் செய்யும் போதே நம் உடல் சரியாக இருக்கிறதா என்றும் தெரிந்துவிடும். அப்படி ஏதேனும் சிறிய பிரச்சனை தெரிந்தால், அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்காமல் உடனே மருத்துவரைச் சென்று பார்த்துவிடலாம்.

 

நின்று கொண்டு, உட்கார்ந்து கொண்டு செய்யும் பயிற்சிகள் என்று சொல்லி வந்தேன். இப்போது படுத்துக் கொண்டு செய்யும் சில எளிய பயிற்சிகள்.

இதோ கீழே உள்ள படத்தில் உள்ளது போல நேராகப் படுத்துக்கோங்க. ஒரு வேளை உங்களுக்கு Inner ear fluid problem, கழுத்துவலி பிரச்சனை இருந்தால்  கழுத்திற்கும் பின்னந்தலைக்கும் இதமான மெல்லிய மிருதுவான சமதளமாக இருக்கும் தலையணை அல்லது துணியை மடித்து வைத்துக் கொள்ளலாம். (அதிக உயரம் வேண்டாம்)

காலில் பாத அணிகள் எதுவும் தேவையில்லை. முதலில் முதல் இரு படங்களில் உள்ளது போல பாதங்களை உட்பக்கம் மடித்து வெளிப்பக்கம் விரித்தல். அப்படி ஒவ்வொரு பாதமும் உங்களுக்கு எத்தனை எண்ணிக்கைகள் செய்ய முடியுமோ அப்படிச் செய்துவிட்டு இரு பாதங்களையும் சேர்த்துச் செய்தல்.

முதல் இரண்டு படங்களில் இரண்டாவது படத்தில் முட்டியின் கீழ் அல்லது பாதத்தின்(ங்களின்) அடியில் ஒரு சின்ன தலையணை அல்லது துணியை மடித்து வைத்துக் கொண்டு செய்யலாம்.

மூன்றாவது படத்தில் பாத விரல்களை மடித்து விரித்தல். இதுவும் நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள் உட்கார்ந்து செய்யும் பயிற்சிகளில் கொடுத்திருந்தேன். இப்படி படுத்துக் கொண்டும் செய்யலாம்.

 

அடுத்ததாக, இதோ இந்தக் காணொளிகளில் காட்டியிருப்பது போல் செய்தல். இப்பயிற்சியை சும்மா எழுத்தில் சொல்ல முடியாது. இணையத்திலும் அசையும் படங்கள் கிடைக்கவில்லை. எனவே நம் வீட்டில் செய்வதை எடுத்து இங்கு பகிர்ந்திருக்கிறேன்.  

முட்டியைச் சுருக்கி விரித்தல் அல்லது அழுத்தம் கொடுத்து விடுவித்தல். இப்பயிற்சி மிக நல்ல பயிற்சி. இதை நாம் நின்று கொண்டிருக்கும் போதும் கூடச் செய்யலாம். முதல் காணொளியில் சுருக்கி விரித்தல் எண்ணிக்கையுடன். இரண்டாவது காணொளியில் பிரஸ் செய்துவிட்டு சில எண்ணிக்கைகள் வரை அப்படியே வைத்துக் கொண்டு அப்புறம் சாதாரண நிலைக்குக் கொண்டுவருதல். 

இத்தொகுப்பில் முதல் படம் ஒரு பரிசோதனை. நம் கால்/களை எந்தெந்த கோணங்களில் உயர்த்த முடிகிறது என்பதற்கானது. அப்படிப் பரிசோதித்து பார்த்துக் கொள்ளலாம். 
முதலில் ஒரு காலை 30/40 டிகிரி கோணத்தில்  உயர்த்தி சில நொடிகள் அப்படியே வைத்துக் கொண்டிருந்துவிட்டு மெதுவாகக் கீழே கொண்டு வருதல். இப்படி மறு காலிலும் செய்ய வேண்டும்.

ஒரு காலை உயர்த்தி உடனே கீழே கொண்டு வருதல் (இத்தொகுப்பில் கீழே உள்ள முதல் படம்). அப்படி இரு காலையும் மாற்றி மாற்றி செய்தல். அடுத்து ஐந்தாவது படத்தில் உள்ளது போல் இரு கால்களையும் 30/40 டிகிரி கோணத்தில் உயர்த்திக் கொண்டு சில நொடிகள் அப்படியே வைத்திருத்தல். 

அதன் பின் இரு கால்களையும் உயர்த்தி உடனே கீழே கொண்டு வருதல். (படம் இல்லை)

இந்த 7 படங்களின் தொகுப்பில், முதலில் ஒரு காலை 90 டிகிரி கோணத்தில் அதாவது நேராக உயர்த்தும் பயிற்சி. அப்படி உயர்த்தி சில நொடிகள் வைத்திருந்துவிட்டு மெதுவாகக் கீழே கொண்டு வருதல். அப்படி இரு கால்களையும் தனித்தனியாகச் செய்தல். அப்படி எத்தனை எண்ணிக்கைகள் நம்மால் முடியுமோ அவ்வளவு செய்யலாம். சப்போர்ட் வேண்டும் என்றால் ஒரு சுவர் ஓரத்தில் (தொகுப்பில் இரண்டாவது படத்தில் உள்ளது போல்) செய்யலாம்.  

அப்படி ஒரு காலை 90 டிகிரி உயர்த்தி உடனே கீழே கொண்டுவருதல் அப்படி இரு கால்களையும் மாற்றி மாற்றி உயர்த்தி கீழே கொண்டு வருதல். (முதல் மூன்று படங்கள்) 

அடுத்திருக்கும் மூன்று படங்களில் முதல் படம் - இரு கால்களையும் நேராக (90 டிகிரி) உயர்த்தி சில நொடிகள் வைத்திருந்துவிட்டு மெதுவாகக் கீழே கொண்டு வருதல்.  அடுத்த இரண்டாவது படம் - இரு கால்களையும் நேராகக் கொண்டு சென்றுவிட்டு மெதுவாகக் கீழே கொண்டு வருதல். மூன்றாவது படத்தில் கால்களின் முட்டியை சற்று மடக்கிக் கொண்டு உயர்த்தி உடனே கீழே கொண்டு வந்து தரையைத் தொடாமல் மீண்டும் மடக்கியபடியே உயர்த்துதல்

இத்தொகுப்பில் ஏழாவது படம் - ஒவ்வொரு காலாக உயர்த்திச் சுழற்றும் பயிற்சி. இது செய்ய முடிந்தால் செய்யலாம்.

இத்தொகுப்பில் இருக்கும் 6 படங்களையும் பார்த்தாலே எளிதாகப் புரிந்துவிடும்.  முதல் படத்தில் ஒரு காலை முட்டி மடக்கி உயர்த்தி வைத்திருக்கும் போது மற்ற காலை நீட்டி கீழெ கொண்டு வருதல். இப்படி மாற்றி மாற்றிச் செய்தல். இதையே இரு கால்களையும் சைக்கிள் மிதிப்பது போல் மாற்றி மாற்றி கொஞ்சம் வேகமாகவும் செய்யலாம். (படுத்தவாறே காற்றில் சைக்கிள் ஓட்டுதல்)

இரண்டாவது மூன்றாவது படங்கள் ஒவ்வொரு காலையும் இப்படி மடக்கி மார்பு வரை கொண்டு சென்று கையால் வளைத்து அழுத்தி விட்டு மீண்டும் கீழே கொண்டு வருதல். இப்படி இரு கால்களையும் செய்தல். 

அடுத்து நான்காவது படத்தில் இரு கால்களையும் சேர்த்து முட்டி மடக்கி மார்பு வரை கொண்டு சென்று இரு கைகளாலும் இரு முட்டிகளையும் அணைத்து மெதுவாக அழுத்திவிட்டு கால்களை மீண்டும் கீழே கொண்டு வருதல்.

இத்தொகுப்பில் 4 வது படமும், 5 வது 6 வது எல்லாம் ஒன்று போல உள்ளதே என்று தோன்றுகிறதா? கொஞ்சம் கவனித்தால் தெரியும் வித்தியாசம்.  4 - இரு கால்களையும் மடக்கி விட்டு கீழே கொண்டு வந்து நேராக நீட்டுதல். 5 - இரு கால்களையும் மார்புவரை மடக்கிக் கொண்டு வந்து விட்டு கால்களைக் கீழே கொண்டு சென்று முட்டி மடக்கியபடியே ஊன்றுதல். 6 - கால்களை மடக்கி இரு முட்டிகளையும் கைகளால் அணைத்துக் கொண்டு மார்பு வரை கொண்டு சென்று கீழே கொண்டு செல்லாமல் மீண்டும் முட்டி மடக்கிய நிலையில் நேராகக் கொண்டுவருதல்.

கால்களை உயர்த்தி மடக்கி செய்யும் இந்த அனைத்துப் பயிற்சிகளும் இடுப்பு, முதுகு, கால்கள், முட்டிகளுக்கு நல்ல பயிற்சியோடு கூடவே தொப்பை குறைய உதவும் பயிற்சிகள். 


இத்தொகுப்பில் இல்லாத ஒரு பயிற்சி. இரு கால்களையும் (முதல் படத்தில் உள்ளது போல்) முட்டி மடக்கி தரையில் ஊன்றியபடியே அடி வரை கொண்டு வருதல் மீண்டும் கால்களை நேராக நீட்டுதல். 

இதை அடுத்து அப்படி மடக்கிக் கொண்டு வந்து அடிப்பகுதியில் வைத்துக் கொண்டு (முதல் இரு படங்கள்) கைகளை பக்கவாட்டில் நேராக வைத்துக் கொண்டு பின் பக்கத்தை உயர்த்துதல். 

கீழே உள்ள மூன்று படங்களில் முதல் படம் - இரு கால்களையும் மடக்கி வைத்துக் கொண்டு இடையில் ஒரு மெலிய நுரைத்தலையணை போன்ற ஒன்றை மடக்கி வைத்துக் கொண்டு முட்டியை உட்புறம் கொண்டு சென்று வெளிப்புறம் கொண்டு வருதல். தலையணை இல்லாமலும் செய்யலாம்.

கீழே உள்ள மூன்று படங்களில் இரண்டாவது படம் - நேராகப் படுத்துக் கொண்டு இரு கைகளையும் பக்கவாட்டில் நேராக நீட்டிக் வைத்துக் கொண்டு, இரு கால்களையும் மடக்கிக் கொண்டு வலப்பக்கம் சரிக்கும் போது நம் தலை/கழுத்தை இடப்பக்கம் திருப்ப வேண்டும். மீண்டும் மடக்கிய கால்களை நேராகக் கொண்டு வருதல். அதே போன்று மடக்கிய இரு கால்களையும் இடப்பக்கம் சரித்துத் தரையைத் தொடும் போது தலை/கழுத்தை வலப்பக்கம் திருப்புதல். கிட்டத்தட்ட உடம்பை முறுக்குதல் எனலாம்.

கீழே உள்ளவற்றில் மூன்றாவது படம் - இடப்பக்கம் பக்கவாட்டில் படுத்துக் கொண்டு வலது காலை பக்கவாட்டில் உயர்த்துதல். அதே போன்று மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டு இடது காலை உயர்த்துதல். 

இப்படி பயிற்சிகள் பல உள்ளன.  இங்கு நான் (P)ப்ளாங்க் - Planks - பயிற்சி பற்றிச் சொல்லவில்லை. சூரிய நமஸ்காரத்தில் வது நிலை செய்வது போல் ஆனால் முழங்கைகளைத் தரையில் ஊன்றிச் செய்வது. முறையான பயிற்சியாளரிடம் கற்றுக் கொண்டு செய்தல் நலம் என்பதால் நான் இங்கு தரவில்லை.

ஹப்பா ஒரு வழியா முடித்துவிட்டேன். இப்பதிவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இத்துடன் உடல் நலப் பயிற்சிகள் பற்றிய பதிவு முடிஞ்சு போச்! எல்லோரும் நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்திட இறைவனைப் பிரார்த்திப்போம். 

இப்பதிவோடு சில குறிப்புகள் தருவதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் பதிவு பெரிதாகிவிட்டதால் அதை வேறொரு பதிவாகத் தருகிறேன்.

முந்தைய பதிவை வாசித்த, வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. 

Except the two videos - All other Pictures - courtesy - Healthline site, Health sites, Google sites, Physio exercises sites, Veritas health, emedi health.


------கீதா


33 கருத்துகள்:

 1. எனது கால்கள் 90 டிகிரி உயராது!  நாற்பது உயரலாம்.  ஆனால் இந்த பயிற்சிகளை சில வருடங்களுக்கு முன்னரே நிறுத்தி விட்டேன்!  நீங்கள் சொல்லி இருக்கும் அப்பயிற்சிகளில் சிலவற்றை செய்ததே இல்லை.

  தினசரி சோம்பல் இல்லாமல் இப்படி செய்யும் உங்களுக்கு பெரிய பாராட்டுகள்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா ரங்கன் ரொம்ப டிசிப்ளின் உள்ளவங்க. ரொம்ப திறமைசாலி. இனி வரும் காலங்களில் இன்னும் நல்லா சந்தோஷமா இருக்கட்டும். வாழ்த்துகள்

   நீக்கு
  2. ஸ்ரீராம் சோம்பல் இல்லை என்று எல்லாம் சொல்ல மாட்டேன். அது அவ்வப்போது தலை நீட்டும். ஆனால் என்னை நானே உத்வேகப்படுத்திக் கொண்டு...நம்மை ஒழுங்கா வைச்சிருந்தாதானே நாலு இடம் சுத்த வாய்ப்பு கிடைக்கும் போது சுத்த முடியும் பயணம் செய்வதைச் சொல்றேன். ட்ரெக்கிங்க் எல்லாம் போகும் ஆசை நிறைய உண்டு!!!!! அப்படி என்னை உத்வேகப்படுத்திக் கொண்டு செய்வதுதான்...

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
  3. நெல்லை, உங்க கருத்து பாத்து சிரிச்சிட்டேன். டிசிப்ளின்!!! ஹாஹா அதெல்லாம் இல்லை...உணவு, பயிற்சிகள் இதுல வேணா கொஞ்சம் உண்டு மத்தபடி நம்ம வீட்டுல கொஞ்சம் சொல்லிப் பாருங்க.....உடனே குற்றப்பத்திரிகை வந்துடும். என் வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்!!! ஹையோ இப்ப ஒரு பொறுப்பு கூடிப் போச்சே...வண்டவாளம் தண்டவாளம் ஏறும் முன்ன சரி பண்ணிக்கத்தான்!! இதுவும் ஒரு நல்ல உத்வேகம் தரும் ஒரு வரி...ஸ்ரீராம் வரியும் உங்கள் வரியும்....இனியாச்சும் நாம ஒழுங்கா இருக்கணும்னு நினைக்க வைக்கிறது!!!

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
  4. எனது கால்கள் 90 டிகிரி உயராது!//

   ஸ்ரீராம் அதுக்குக் காரணம் பல வருஷங்களா உங்கள் வேலை அப்படியான வேலை.

   // ஆனால் இந்த பயிற்சிகளை சில வருடங்களுக்கு முன்னரே நிறுத்தி விட்டேன்! //

   ஏன் ஸ்ரீராம்......நீங்க நிறுத்தாம இருந்திருந்தா கொஞ்சம் முட்டிய பாதுகாப்பா வைச்சிருக்கலாமோ.....சரி அது ஓகே இனியாச்சும் பாத்துக்கோங்க ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 2. ஆனால் எல்லா பயிற்சிகளும் எளிய பயிற்சிகளே..  எங்கும் வெளியில் செல்ல வேண்டாம்.  வீட்டுக்குள்ளேயே படுக்கையிலேயே ஹாலிலேயே செய்யக்கூடிய பயிற்சிகள்.  கருவிகளும் எதுவும் வேண்டாம்.  எனினும் மனதில் சுறுசுறுப்பு மட்டும் வேண்டும்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம் செலவு இல்லாதவைதான் ஆனால் நீங்க சொல்லிருக்கீங்களே கடைசியா யெஸ் அது கண்டிப்பா வேண்டும் மனம் ஒத்துழைக்க வேண்டும்....நானும் என்னை உத்வேகப்படுத்திட்டுதான் செய்யறேன் ஸ்ரீராம். அதுவும் சின்ன வயசுலருந்தே அதென்னவோ ஃபிட்னெஸ் ஆர்வம் உண்டு. அதனால் இருக்கலாம்...

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 3. இன்றைய உடற்பயிற்சிகள் அனைத்தும் பயனுள்ளது.
  நேரத்தை ஒதுக்கி செய்தால் நல்லது. இடுப்பு வலிக்கு , கால் முட்டிவலியை போக்கும் இந்த பயிற்சிகள். முட்டி இறுக்குதல், தளர்த்துதல் காணொளி நன்றாக இருக்கிறது.
  முடிந்தவரை பயிற்சிகளை செய்து உடல் நலத்தோடு இருக்க நானும் உங்களுடன் சேர்ந்து பிரார்த்திக்கிறேன்.

  காலை 4.30க்கு எழுந்து கொண்டு காலை கடன்களை முடித்து விட்டு உடற்பயிற்சி, அடுத்து தியானம் . என் நித்திய கடன். அதில் ஒருவருடம் மனவிரக்தியில் தொடரவில்லை. இப்போது மீண்டும் செய்து வருகிறேன் கீதா. இடுப்புவலி, கால்வலி, முட்டிவலி இவை குறைந்து வருகிறது. மாயவரத்தில் மனவளகலை யோகா பயின்று உடற்பயிற்சி , தியானத்தை 15 வருடம் ஆசிரியராக இருந்து கற்றுகொடுத்த காலங்களை நினைத்து கொள்கிறேன்.
  உங்களுக்கு நன்றி. அலுப்பும், சலிப்பும் வந்தாலும் மனதை ஒருநிலை படுத்தி செய்து வருகிறேன்.
  மீண்டும் பேசுவோம்.
  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் கீதா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய உடற்பயிற்சிகள் அனைத்தும் பயனுள்ளது.
   நேரத்தை ஒதுக்கி செய்தால் நல்லது. இடுப்பு வலிக்கு , கால் முட்டிவலியை போக்கும் இந்த பயிற்சிகள். முட்டி இறுக்குதல், தளர்த்துதல் காணொளி நன்றாக இருக்கிறது.//

   ஆமாம் கோமதிக்கா....இப்பயிற்சிகளை நான் படுக்கையிலிருந்து எழும் போதே செய்துவிடுவதை வழக்கமா வைச்சிருக்கேன். முட்டி இறுக்குதல் தளர்த்துதல்// ஆஹா சரியான சொற்கள். இதுதான் எனக்குச் சரியாகத் தமிழில் சொல்லத் தெரியவில்லை....அழுத்தம் சுருக்குதல்னு ஏதேதோ சொல்லிருக்கேன் பாருங்க...மிக்க நன்றி கோமதிக்கா இதை உங்களிடம் கற்றுக் கொண்டேன்.

   ஆமாம் அக்கா நாம எல்லாருக்காகவும் பிரார்த்திப்போம்,.

   //காலை 4.30க்கு எழுந்து கொண்டு காலை கடன்களை முடித்து விட்டு உடற்பயிற்சி, அடுத்து தியானம் . என் நித்திய கடன். அதில் ஒருவருடம் மனவிரக்தியில் தொடரவில்லை. இப்போது மீண்டும் செய்து வருகிறேன் கீதா. இடுப்புவலி, கால்வலி, முட்டிவலி இவை குறைந்து வருகிறது. //

   மிக்க மகிழ்வான விஷயம் கோமதிக்கா..மகிழ்ச்சி. இப்ப வலி குறைந்து வருகிறது...பாருங்க.

   //மாயவரத்தில் மனவளகலை யோகா பயின்று உடற்பயிற்சி , தியானத்தை 15 வருடம் ஆசிரியராக இருந்து கற்றுகொடுத்த காலங்களை நினைத்து கொள்கிறேன்.//

   ஆஹா கோமதிக்கா 15 வருட அனுபவம்!! நல்ல அனுபவம் இல்லையா அக்கா..சூப்பர்...அருமையான விஷயம் கற்றுக் கொடுத்தல். நானும் யோகா வகுப்பில் கற்றுக் கொடுத்த அனுபவம் எனக்கும் நினைவுகள் வருகின்றன...கோமதிக்கா..

   //அலுப்பும், சலிப்பும் வந்தாலும் மனதை ஒருநிலை படுத்தி செய்து வருகிறேன்.//

   ஆமாம் கோமதிக்கா எனக்கும் இதெல்லாம் வரும். என்றாலும் என்னை நானே உத்வேகப்படுத்திக் கொண்டு செய்து வருகிறேன். நீங்களும் செய்து வருவது எனக்கு இன்னும் உற்சாகம் தருகிறது நானும் கோமதிக்கா மாதிரி செய்ய வேண்டும் என்று. மிக்க நன்றி கோமதிக்கா

   //மீண்டும் பேசுவோம்.//

   அழகான வார்ர்த்தைகள் ரசித்தேன், அக்கா

   பாராட்டுகளுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கோமதிக்கா

   கீதா

   நீக்கு
 4. சற்று கஷ்டமான பயிற்சிதான் பயனுள்ள தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர்ஜி கஷ்டம் இல்லை ஜி...ஆம் பயனுள்ளவைதான்.

   மிக்க நன்றி கில்லர்ஜி

   கீதா

   நீக்கு
 5. பயிற்சிக் குறிப்புகள் சூப்பர். பாராட்டுகள், மத்தவங்களுக்காகப் பகிர்ந்தமைக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டிற்கும் கருத்திற்கும் நன்றி நெல்லை.

   யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!! நீங்க தொடங்கின உத்வேகம்தான் நெல்லை. நீங்க கேட்டீங்க...இப்ப போட்டதுக்குப் பிறகு எனக்கு இன்னும் நான் பயிற்சிகள் செய்யணும்னு ஒரு உத்வேகம் வருது. கோமதிக்கா போட்ட கருத்தும் அப்படி...இப்படி நாம் ஒருவருக்கொருவர் ஊக்கம் உத்வேகம் கொடுத்துக் கொண்டு செய்யும் வாய்ப்பு..

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
 6. படுத்துக்கிட்டு 90 டிகிரி காலைத் தூக்கணுமா? என்ன கொடுமை சரவணன்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹாஹா...ஹலோ யோகால ஆசனம் தொடங்கும் முன் இதெல்லாம் செய்யணுமே....சில ஆசனங்களில் உண்டே. சும்மா இது...நீங்களும் செஞ்சுருப்பீங்க எல்லாம்...

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
 7. யோகாக்கு போஸ் கொடுக்கும் பெண்கள் வாழ்க்கைல யோகா பண்ணவேண்டிய தேவையில்லை என்ற அளவிற்கு ஸ்லிம் பியூட்டியாக இருப்பதன் மர்மம் என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹாஹாஹாஹா ஹையோ சிரித்துவிட்டேன் நெல்லை...

   நெல்லை உடம்பு இளைக்கமட்டுமா யோகா? முட்டி கை கால் எல்லாம் நல்லாருக்கவும் தேவையாச்சே...இதயம் மூச்சு எல்லாமே...இதுதான் காரணம் அவங்க எல்லாம் ஸ்லிம்ப்யூட்டியா இருக்கறதுக்கு. கூடவே உணவு ஒழுங்குமுறையும்.....எனக்குமே அவங்களைப் போல ஆகணும்னு அதுவும் ஃபிட்டா இருக்கணும்னு ரொம்ப ஆர்வம் உண்டு...

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
 8. பயிற்சிலாம் செய்துடலாம். பிறகு நேரமிருந்தால் சமையல் செய்தால் போதும். இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹா அதானே!!!! ஆமாம் பின்ன!!!!

   மிக்க நன்றி நெல்லை....நான் சிரித்து முடியலை

   கீதா

   நீக்கு
 9. பதிவை படிக்கும் போதே உடற்பயிற்சி செய்தது போல தோன்றுகிறது.. தினமும் ஒரு முறை உங்கள் பதிவை படித்தாலே போதும் போல இருக்கே கீதா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா .....ஆனா பயிற்சிகள் பற்றிய பதிவு முடிஞ்சு போச்சு மதுரை.

   மிக்க நன்றி மதுரை

   கீதா

   நீக்கு
 10. ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வதன் நன்மை என்னவென்றால், இறக்கும் போது ஆரோக்கியமாக இறக்கலாம் ஹீஹிஹீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதானே மதுரை.! மருத்துவமனை செல்லாமல் போவது என்பது எவ்வளவு நல்ல விஷயம்!

   மிக்க நன்றி மதுரை

   கீதா

   நீக்கு
 11. மூட்டு வலி பிரச்னைக்கு டாக்டர் சொல்லிக் கொடுத்தது 45 டிகிரி காலை உயர்த்தி இறக்குவது.. ஆனால் எல்லா நாளும் செய்வதற்கு முடிவதில்லை..

  வெகு சிறப்பாக எல்லா பதிவுகளையும் கொடுத்து இருக்கின்றீர்கள்..

  நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..

  மகிழ்ச்சி..
  நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் துரை அண்ணா மூட்டு வலிக்கு அப்பயிற்சி சொல்லப்படுவதுண்டு. செய்ய முடிந்த அன்று செய்யுங்க துரை அண்ணா.

   //வெகு சிறப்பாக எல்லா பதிவுகளையும் கொடுத்து இருக்கின்றீர்கள்..

   நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..//

   மிக்க நன்றி துரை அண்ணா

   கீதா

   நீக்கு
 12. சிறப்பும் சிரிப்புமான கருத்துகள் - இன்று!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா ஆமா அண்ணா இப்படி இருந்தா ஜாலிதான் இல்லையா...சின்ன நகைச்சுவை அல்லது கலாய்ப்புக்குமே நான் ரொம்ப சிரித்துவிடுவேன். மிகவும் பிடித்தது நகைச்சுவை

   மிக்க நன்றி துரை அண்ணா.

   கீதா

   நீக்கு
 13. மிக அருமையான பயிற்சிகள்... யோகா பயிற்சியின் போது இதில் சிலவற்றை நான் செய்வதுண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் செய்து வருவது மிக்க மகிழ்ச்சி நாஞ்சில் சிவா.

   மிக்க நன்றி

   கீதா

   நீக்கு
 14. வணக்கம்,

  பயனுள்ள பயிற்சி முறைகளை எளிய முறையில் செய்முறைவிளக்கம் கொடுத்தமை பாராட்டுக்குரியது.

  ஒரு நாளைக்கு சுமார் 4000 முதல் 8000 அடிகள் (STEPS) நடப்பதுவும் ஒரு சிறப்பான உடற் பயிற்சியே.

  சீதோஷண நிலை, வெளியில் நடைப்பயிற்சிக்கு உகந்ததாக இல்லை என்றால், வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக நடக்கலாம். ஒரே இடத்தில் நின்றுகொண்டு கைகளை வீசி ஒரு 20-30 நிமிடம் நடப்பதும் நல்ல பலனை தரும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

  அலுவலகத்திலோ வீட்டிலோ தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்கள் , தங்கள் பாதங்களை , சாதாரண தையல் எந்திரத்தின் மிதியை (பெடல்) முன்னும் பின்னும் அழுத்துவதுபோல் செய்துவருவது முழங்கால்களுக்கு மட்டுமின்றி இதயத்தின் சீரான இயக்கத்திற்கும் பெரிதும் உதவுவதாகவும் சொல்கிறார்கள். இந்த பயிற்சியை அனிச்சை செயலாகவே செய்யலாம் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்கள்.

  அருமையான பதிவிற்கு மீண்டும் பாராட்டுக்கள்.

  கோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோ! ரொம்ப நாளாச்சு உங்களை இங்கு கண்டு. நலமா...

   ஆமாம் ந்டைப்பயிற்சியும் சிறந்த பயிற்சி. முதல் பகுதிகளில் சொல்லியிருக்கிறேன்.

   சீதோஷண நிலை, வெளியில் நடைப்பயிற்சிக்கு உகந்ததாக இல்லை என்றால், வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக நடக்கலாம். ஒரே இடத்தில் நின்றுகொண்டு கைகளை வீசி ஒரு 20-30 நிமிடம் நடப்பதும் நல்ல பலனை தரும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.//

   ஆமாம். கோ. அதுவும் எட்டு வரைந்து வைத்து அந்த வடிவில் நடப்பதும் பரிந்துரைக்கப்படுகிறது.

   //அலுவலகத்திலோ வீட்டிலோ தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்கள் , தங்கள் பாதங்களை , சாதாரண தையல் எந்திரத்தின் மிதியை (பெடல்) முன்னும் பின்னும் அழுத்துவதுபோல் செய்துவருவது முழங்கால்களுக்கு மட்டுமின்றி இதயத்தின் சீரான இயக்கத்திற்கும் பெரிதும் உதவுவதாகவும் சொல்கிறார்கள். இந்த பயிற்சியை அனிச்சை செயலாகவே செய்யலாம் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்கள்.//

   ஆமாம் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடந்து கை கால்களை அசைத்தல் நலம்.

   மிக்க நன்றி கோ பாராட்டிற்கும் கருத்திற்கும்

   கீதா

   நீக்கு