வியாழன், 26 ஜனவரி, 2023

ரப்பர் வேளாண்மை - பகுதி 1

 

இயற்கையோடு இணைந்து வேளாண்மை செய்து வாழ்பவர்கள்தான் நம் நாட்டில் பெரும்பாலும்அதனால்தான்உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்மற்றவர்கள் எல்லாம் அவர்களைத்தொழுதுண்டு வாழ்பவர்கள்என்று சொல்லப்படுகிறதுவேளாண்மையில் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றுடன் காப்பி, தேயிலை, ஏலம், ரப்பர் போன்றவைகளும் அவரவர்களுக்கான சூழல்களில் பயிரிடப்பட்டு பராமறிக்கப்படுகிறதுதான்இவற்றில் ரப்பர் பராமரிப்பும், பயனெடுப்பும் பற்றித்தான் இங்கு நான் உங்களுடன் நான் கண்டறிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.


                                                         ரப்பர் கொட்டை
படங்கள் இணையத்தில் இருந்து 

ரப்பர் கன்றுகள் ஒட்டுமுறை மற்றும் குருத்து/அரும்புதல் (Budding) முறையில் நர்சரிகளில் உருவாக்கப்படுகின்றன. சில ரப்பர் விவசாயிகள் அவரவர்கள் வீட்டிலேயே உருவாக்குவதும் உண்டு.  ரப்பர் மரத்திலிருந்து சேகரிக்கும் கொட்டைகளைப் பயிரிட்டு அதன் வேரோடு கூடிய பகுதியில் நல்ல இனத்தைச் சேர்ந்த ரப்பர் கம்பின் பகுதியைச் சீவி எடுத்து இவை இரண்டையும் கம்பு வைத்து, இரு இன ரப்பர் கன்றை ஓரினமாக்குவார்கள். பெம்பாலும் P B-105 (PRIM Bazar-105) என்று சொல்லக் கூடிய ரப்பர் இனம், கேரளாவில் கூடுதலாகப் பயிரிடப்படுகிறது.

அப்படி வளரும் ரப்பர் கன்றுகள் (ரப்பர் தைகள்) ஓராண்டுக்குப் பின், நட வேண்டிய இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.  ரப்பர் மரங்கள் வளரும் இடங்கள் - ரப்பர் தோட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.  ரப்பர் தைகள் என்று அழைக்கப்படும் கன்றுகள் இரண்டு அடி நீள, அகல, ஆழக் குழிகளில் நடப்படுகின்றன. ஒவ்வொரு கன்றிற்குமிடையில் உள்ள இடைவெளி 10 அடி.  வரிசையாக நடப்படுவதால், வரிசைகளுக்கு இடையேயும் 10 அடி இடைவெளி தேவை.

அப்படி ஒவ்வொரு கன்றும் மரமாகும் போது மற்ற மரத்திலிருந்து 10 அடி தூரத்தில் இருக்க வேண்டும். அப்படி ஒரு ஏக்கர் நிலத்தில் ஏறத்தாழ 200 ரப்பர் தைகளை நடலாம்.  இப்படி நடப்படும் கன்றுகள் வளர்ந்து பலன் தர ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஆகும். அவற்றுக்கு வளமிட்டு பாதுகாக்க வேண்டும். மழையை மட்டும் நம்பி செய்யப்படும் வேளாண்மை இது. அதனால்தான், நான்கு முதல் ஆறு மாதம் மழை பெய்யும் கேரளத்தில் எல்லா இடங்களிலும் இது பயிரிடப்படுகிறது.

இரண்டாம் வருடம் ரப்பர் கன்று ஒடியாமல் இருக்க கம்புகளை நாட்டி அவற்றுடன் கன்றை சேர்த்துக் கட்டியும், கீழே வளரும் கிளைகளை வெட்டி மரம் ஒரு எட்டடியேனும் கிளைகளின்றி நேராக வளரவும் தேவையானவற்ரைச் செய்ய வேண்டும். ரப்பர் போர்டின் (ரப்பர் வேளாண்மை மேம்பாட்டுத் துறை) ஆலோசனைக்கும், அறிவுரைக்கும் ஏற்ப உரமிட வேண்டும்.

குரல் இல்லாமல் காணொளி-Tapping Knife 

ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் ரப்பர் மரம், 52 இஞ்ச் உயரத்தில் 20 இஞ்ச் சுற்றளவு ஆகும் தருணத்தில், மரத்தின் ஒரு பாதிப் பகுதியில் 45 டிகிரி கோணத்தில் ரப்பர் பால் ஒழுகி வர ஒரு சால் கீற வேண்டும். இதற்கான ரப்பர் Tapping Knife (கத்தி) உண்டு. 1 ¼ இஞ்ச் அகலமுள்ள இதன் முனை இரு பக்கங்களிலும் வளைந்த கூர்மையான பாகங்களைக் கொண்டதாகவும், அதன் நடுப்பகுதி முக்கோண வடிவில் பிளவு உடையதாகவும் இருக்கும்.  அதனால் கத்தியை மேலிருந்து கீழ் நோக்கியும், கீழிருந்து மேல் நோக்கியும் வெட்டலாம்.

கத்தியில் இரு புறமும்  ‘L’ வடிவில் இருப்பதால் மரத்தின் பட்டையை மட்டும் சீவவும், மரத்தின் உள் பாகத்திற்குக் காயமேற்படாமலும் இருக்கும். சரிவாகச் சீவப்படும் பட்டையிலிருந்து ரப்பர் பால் க்சிந்து கீழ் நோக்கி வடியும். கீழ் பாகத்தில் ஒரு தகரச் சில்லை (பாத்தி) மரத்தில் பொருத்த வேண்டும். அதன் கீழே மரத்தைச் சுற்றி இறுக்கமாகப் பிடித்திருக்கும் ஒரு கம்பி பொருத்தப்படும்.  அக்கம்பியில் ரப்பர் பால் சேகரிக்கும் ஒரு கிண்ணமும் பொருத்தப்படும்.

சொட்டுச் சொட்டாய் வடியும் ரப்பர் பால் ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்குள் நின்று விடும். அதன் பின் ஒவ்வொரு கிண்ணத்திலிருந்தும் பாலைச் சேகரிக்கலாம்.

குரல் இல்லாமல் சிறிய காணொளி - பால் வடிய சீவும் பகுதி - சிரட்டைக் கிண்ணம் பொருத்தப்பட்டு பால் வடிவது 

இப்படி முதன் முறையாகத் தெளிக்கப்படும் ரப்பர் மரத்தை, இரண்டு, மூன்றாம் நாள் கொஞ்சம் ஆழமாகச் சீவ வேண்டும். அப்படி மூன்றாம் நாள் நன்றாகப் பால் வடியத் தொடங்கும். ரப்பர் பட்டைகளில் மூன்றுக்கும் மேற்பட்ட அடுக்குகள் உண்டு. பட்டையை ஒரு நாள் இடைவெளி விட்டு வெட்ட வேண்டும்.

ஒரு நாள் முன்பு வெட்டிய வெட்டுப் பட்டையில் ஒட்டியிருக்கும் ஒட்டுப் பாலை முதலில் பட்டையிலிருந்து பிரித்து எடுக்க வேண்டும். எடுக்கும் போதே சில நேரங்களில் ரப்பர் பால் சிறிதாகக் கசிய ஆரம்பிக்கும். பின் கிண்ணத்தில் ஒட்டியிருக்கும் ரப்பரையும் பிரித்து எடுக்க வேண்டும்.

ரப்பர் தோட்டத்தில் Tapping செய்தும் ஒட்டுப்பாலும் எடுக்கிறார் திருரதீஷ். 

இப்போது நாம் ஒரு ரப்பர் தோட்டத்தில் இருக்கிறோம். இங்கு Tapping நடத்தும் திரு. ரதீஷ்.  ரதீஷ் இப்படி எடுக்கும் ஒட்டுப் பாலை அவர் இடுப்பில் கட்டி வைத்திருக்கும் ஒரு பிளாஸ்டிக் கூடையில் போட்ட பின் முதலில் கீழிருந்து மேலாகவும், அதன் பின் மேலிருந்து கீழாகவும் வெட்டுகிறார்.

இப்படி வெட்டியதும் பால் சரிவில் ஒழுகி கிண்ணத்தில் விழுவதைப் பார்க்கலாம்.  இப்படி வரி வரியாய் எல்லா மரங்களையும் வெட்டியபின், ஓரிரு மணி நேரம் பால் விழக் காத்திருக்க வேண்டும்.  அதன் பின் ஒரு சிறிய வாளியுடன் ஒவ்வொரு மரத்திலும் கம்பியில் ரப்பர்  பாலைச் சுமந்து நிற்கும் கிண்ணத்திலிருந்து சேகரிக்க வேண்டும். கிண்ணத்திலுள்ள ரப்பர் பாலை விரல்களால் வடித்து முழுவதுமாகச் சேகரிக்க வேண்டும்.

சேகரிக்கப்பட்ட பாலை உறைய வைக்க வேண்டும். பாலைத் தயிராக்க உறைய வைப்பது போல்தான் ரப்பர் பாலையும் உறைய வைக்க வேண்டும். அப்படி உறைய வைக்கப் பயன்படும் பொருள்தான் ஃபார்மிக் ஆசிட்.  இப்படி சேகரிக்கப்பட்ட பால் எப்படி உறைய வைக்கப்படுகிறது, அதன் பின் இப்படி உறைய வைக்கப்பட்டது ரப்பர் ஷீட்டாக எப்படி உருமாற்றம் அடைகிறது என்பதை எல்லாம் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

பதிவில் அதிகம் காணொளிகள் கொடுக்க முடியவில்லை என்பதால் எல்லாஅவற்றையும் சேர்த்து ஒரே காணொளியாக ரப்பர் வளர்ப்பு முறையை - முதல் பகுதி - படங்கள் காணொ(ளி)லிகள் (என் குரலில் சொல்லியும்) மூலம் யுட்யூபில் கொடுத்திருக்கிறேன்.  சுட்டி இதோ. நேரம், விருப்பம் இருந்தால் பாருங்கள். 


இரண்டாவது பகுதி தொடரும்.....

பின் குறிப்பு: வலைப் பூ தொடங்கியதிலிருந்தே ரப்பர் வளர்ப்பு பற்றி எழுதச் சொல்லி கீதா என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தார்.  அதன் பின் நெல்லைத் தமிழன் அவர்கள் கேட்டு பல மாதங்களாகிவிட்டன. அவர் கேட்ட சமயம் ரப்பர் நடுவது எல்லாம் கடந்து மரங்கள் வளர்ந்துவிட்டன ஆனால் ரப்பர் பால் எடுக்கும் பருவம் வந்திருக்கவில்லை.  என்றாலும் அதைக் காணொளிகள் எடுத்து வைத்துக் கொண்டேன். 

அதன் பின்  பால் வடியும் பருவம் வந்ததும் ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டாலும் மழையும் வந்துவிட்டதால் எடுப்பதில் தடசம். மழை நின்றதும் Tapping, பால் வடிவது, சேகரிப்பது, ரப்பர் ஷீட் அடிப்பது என்று காணொளிகள் எடுத்து வைத்துக் கொண்டாலும்ரப்பர் பணிகள் தினமும் உண்டு என்பதோடு கூடவே வீடு மேம்படுத்தல் பணிகள் நடப்பதால் பிற பதிவுகளுக்கு என்னால் வர இயலவில்லை எனும் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் வரை வீட்டுப் பணிகள் இருக்கும். 

இப்பதிவே கூட எழுதி ஒரு மாதத்திற்கும் மேலாகியும், தட்டச்சு செய்யவும், காணொளிகளை அனுப்பவும் இயலாமல் (கீதாவுக்கு) இப்போதுதான் அதுவும் ஒரு வாரம் முன் அனுப்பியும் காணொளிகளை இணைப்பது அதற்கான குரல் பதிவுகளை அனுப்புவது  அவரது சந்தேகங்களை நிவர்த்தி செய்வது என்பது என்னால் இயலாமல் மிகவும் தாமதமாகிவிட்டது. இப்போது நெல்லைத் தமிழன் அவர்கள் கேட்டுக் கொண்டபடி முடிந்தவரை எல்லாம் உட்படுத்தி எழுதியிருக்கிறேன். நன்றி நெல்லைத் தமிழன்.

 

----துளசிதரன்

 


28 கருத்துகள்:

  1. சுவாரஸ்யம்.  நிறைய உள் விவரங்களோடு சொல்லி இருக்கிறீர்கள்.  சிறு காணொளிகள் கண்டேன்.  பெரிய காணொளி இங்கு ஓடாது.  யு டியூப் சென்று பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கிடைக்கும் போது முடிந்தால் பெரிய காணொளியையும் காணுங்கள். அடுத்த பதிவிலும் இன்னும் விவரங்கள் வரும்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  2. ஆஹா... கேரளப் பகுதிகளில் (குறிப்பாக நாகர்கோவில் திருவட்டாறு தொட்டிப்பாலம்) ரப்பர் மரங்களையும், பால் சேகரிக்கும் வித்த்தையும் வாளியில் சேகரிப்பதையும் பார்த்திருக்கிறேன். ரப்பர் ஷீட்களை (பழுப்பு மஞ்சள் நிறம்) அடுக்கி சைக்கிள் கேரியரில்்கொண்டு செல்வதையும் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை திற்பரப்பு போகும் வழில எல்லாம், அப்புறம், மார்த்தாண்டம், குழித்துறை, இந்தப்பக்கம் கீரிப்பாறை, காளிகேசம் பகுதிகள் எல்லாம் எல்லாமே இத்தோட்டம்தானே. அதுவும் திருவட்டார், மாத்தூர் தொட்டிப்பாலம் சுத்தி இவைதானே...நானும் என் மகனும் (எங்க ரெண்டுபேருக்கும் ரொம்பப் பிடிக்கும்.) அடிக்கடி போன இடங்கள். என் நண்பர்கள் மூலம் தோட்டத்துல சென்று பால் சேகரிச்சிருக்கேன். சில வேலைகள் எல்லாம் பார்த்திருக்கேன். ரொம்ப வருஷம் முன்ன.

      கீதா

      நீக்கு
    2. நாகர்கோவில் பகுதியில் மேற்கு மலைத்தொடர்ச்சி மலைகள் இருக்கும் பகுதிகளில் குறிப்பாகக் கேரள வாசனை உள்ள பகுதிகளில் நிறைய இருக்கின்றன. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பகுதிகள் அதை ஒட்டி திருவனந்தபுரம் மலைப்பகுதி வரை.

      அதனால்தான் அப்பகுதிகளுக்குச் செல்லும் போது நீங்கள் கண்டிப்பருக்கிறீர்கள். ரப்பர் ஷீட்டுகள் குறித்து அவை எப்படி அடிக்கப்படுகின்றன என்பது அடுத்த பகுதியில் வரும்

      உங்கள் கருத்திற்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
    3. ஆமாம், கோல்டன் நிற ரப்பர் ஷீட் சைக்கிள் பின்னால் வைத்து போவது, வெள்ளை ரப்பர் பால் கோல்டன் மற்றும் ப்ரௌன் ஆவது எப்படி என்பது விரிவாக அடுத்த பகுதியில் பார்க்க இருக்கிறீர்கள் நெல்லைத்தமிழன்.

      உங்கள் கருத்திற்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  3. சேகரிப்பவர் சரிந்த பகுதியில் சட் சட் என சுறுசுறுப்பாகப் பணிபுரிவதையும் நல்ல ஆரோக்கியமாக இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நீங்கள் சொல்வது போல், Tapping செய்பவர், சேகரிப்பவர்கள் எல்லாம் மலைச் சரிவுகளில் செய்து நல்ல அனுபவம் பெற்றிருப்பவர்களாக இருப்பார்கள் அப்பகுதிகளில்.

      கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  4. நானும் காணொளி படங்கள் எடுத்துவைத்திருக்கிறேன். மிகுந்த வருவாய் கிடைக்குமாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் காணொளி படங்கள் எடுத்து வைத்திருப்பது மகிழ்ச்சி.

      ஒரு ரப்பர் மரத்தில் Tapping செய்து (வெட்டுதல்) பால் எடுத்து உறை ஊற்றி, ரப்பர் ஷீட் அடிக்க அதைச் செய்பவருக்கு ஒரு மரத்திற்கு ரூ 2.25 பைசா கூலி. மரம் வெட்டுவது - Tapping மட்டும் என்றால் 1.50 கொடுக்க வேண்டும். அப்படி ஒவ்வொரு மரத்திகும் கூலி உண்டு.
      ஒரு கிலோ ரப்பர் விலை இப்போது குறைந்திருக்கிறது 138. ரூ 200 எல்லாம் அப்படிக் கிடைத்தால் இன்னும் நல்லதுதான்.

      கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  5. சிறப்பான பதிவு..

    எங்களது
    பள்ளியில் கூட இந்த அளவுக்குப் பயிற்றுவிக்கப்படவில்லை..

    புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜு சார், உங்கள் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.

      துளசிதரன்

      நீக்கு
  6. கொடைக்கானல் மலையில் பார்த்துள்ளேன்... இங்கு விளக்கங்களும் காணொளிகளும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கும் ஒரு சில பகுதிகளில் உண்டு.

      டிடி உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

      துளசிதரன்

      நீக்கு
  7. கொடைக்கானல் மலையில் பார்த்துள்ளேன்... இங்கு விளக்கங்களும் காணொளிகளும் அருமை...

    பதிலளிநீக்கு
  8. எளிய பாடம். சில சொற்கள் மலையாளம் தமிழ் என்று இரு மொழிகளிலும் கூறப்பட்டிருக்கின்றன. உதாரணம் தை-கன்று போன்ற்வை. இது சில மலையாள சொற்களையும் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது சில மலையாள சொற்களையும் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துகின்றது.//

      இடையிடையே மலையாளச் சொற்கள் வந்துவிடுகின்றனதான். ஆம் தமிழும் சொல்லியிருக்கிறேன்.

      உங்கள் ஊக்கமிகு கருத்திற்கு நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்.

      துளசிதரன்

      நீக்கு
  9. விரிவான விளக்கம் நன்று.
    ரப்பர் பால் எடுக்கும் விபரங்கள் இதுவரை அறிந்ததில்லை நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பகுதியிலும் வரும் கில்லர்ஜி.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  10. அருமையான தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு. பள்ளிகூடத்தில் ரப்பர் தோட்டம் உள்ள இடங்களை படித்து இருக்கிறோம். உங்கள் பதிவு மூலம் நேரில் பார்த்த உணர்வு கிடைத்தது.

    காணொளிகளையும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளிகூடத்தில் ரப்பர் தோட்டம் உள்ள இடங்களை படித்து இருக்கிறோம். உங்கள் பதிவு மூலம் நேரில் பார்த்த உணர்வு கிடைத்தது.//

      மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு

      துளசிதரன்

      நீக்கு
  11. ரப்பர் பற்றி விரிவாக முதல் முதலாகப் படித்துத் தெரிந்து கொண்டேன். மிக அருமையான விளக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம்

      துளசிதரன்

      நீக்கு
  12. ரப்பர் மரங்களை நிறைய பார்த்திருக்கிறேன் என்றாலும் ரப்பர் கொட்டையை தங்கள் பதிவின்மூலம் இன்றுதான் பார்க்கிறேன். இது பார்ப்பதற்கு அச்சுஅசலாக ஆமணக்கு கொட்டையைப்போலவே உள்ளது!!... பதிவுக்கு நன்றி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஆமணக்குக் கொட்டை போல்தான் இருக்கும். கருத்திற்கு மிக்க நன்றி நாஞ்சில் சிவா.

      துளசிதரன்

      நீக்கு
  13. ரப்பர் பாலிலிருந்து தயாரிக்கப்படும் ரப்பர் ஷீட்டுகள் பிரவுன், அடர் பிரவுன் மற்றும் கோல்டன் என பல வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன. அவைகளின் விபரம் மற்றும் தன்மைகளைப் பற்றியும் விரிவாக எழுதவும்.

    ஒரு ப்ராஜெக்ட் வொர்க்கிற்காக எர்னாகுளத்திலுள்ள "அங்கமாலி" என்னும் இடத்திலுள்ள ஒரு "Tyre rebutton company" ல் 15 நாட்கள் பணி செய்த அனுபவம் உண்டு. அப்போது மேற்குறிப்பிட்டுள்ள ரப்பர் சீட்டுகளை நிறையவே கையாண்டுள்ளேன்.... ஆனால் அது ஏன் வெவ்வேறு நிறங்களில் இருகின்றன என்பது பற்றியோ அதன் தன்மைகள் பற்றியோ எதுவும் தெரியாது.... தங்கள்மூலம் தெரிந்துகொள்ள ஆவல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ப்ராஜெக்ட் வொர்க்கிற்காக எர்னாகுளத்திலுள்ள "அங்கமாலி" என்னும் இடத்திலுள்ள ஒரு "Tyre rebutton company" ல் 15 நாட்கள் பணி செய்த அனுபவம் உண்டு./

      மிகவும் மகிழ்வான விஷயம் உங்களுக்கும் ரப்பர் பற்றி சில பரிச்சயங்கள் உண்டு என்பதை அறிவதில்.
      ப்ரௌன், அட்டர் ப்ரௌங்க், மஞ்சள் இதெல்லாம் அதன் நிறங்களை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்துவது.

      ப்ரௌன் அட்டர் ப்ரௌன் நிற வகைகள் என்பவை, நல்லபடியாக அதிகம் வெயிலில் காயாமலேயே அதாவது இரண்டாவது நாளே அதிகம் புகையிட்டு (இது மூன்றாவது பகுதியில் வர இருக்கிறது) நன்றாக அந்தப் புகை பிடிக்கும் போது நல்ல ப்ரௌன் கறுப்பு கலந்த அட்டர் ப்ரௌன் நிறத்திற்கு வந்துவிடும். அதுதான் அது

      கோல்டன் என்பது அது கொஞ்சம் மெல்லிய, கனம் குறைவாக, 600-650 கிராம் வருகின்ற அளவில் ஷீட் அடித்து அதை நல்லபடியாக வெயிலில் உலர்த்தி சிறிதளவில் புகை கொடுத்தால் அது நல்ல கோல்டன் நிறத்தில் இருக்கும். இந்த கோல்டன் நிறத்தில் உள்ளவை விலை கூடுதல் என்றும் சொல்வதுண்டு, ஆனால் கூடுதல் என்பது இந்த ப்ரௌன் அட்டர் ப்ரௌன் வகைகளில்தான். காரணம் அதிகம் வெயிலில் போட்டு காய வைத்து என்று எல்லோராலும் செய்ய இயலாது. ஒரு நாள் காய வைத்துவிட்டு அடுத்து உடனே புகை அறையில் - Smoke house ல் போட்டு புகயிட்டு கறுப்பு நிறத்திற்குக் கொண்டு வந்துவிடுவார்கள். அதாவது ப்ரௌன் அட்டர் ப்ரௌன்.....இவை பற்றி மூன்றாவது பகுதியில் வரும்

      நீங்கள் இரண்டாவது பகுதி வாசித்தீர்கள் என்றால் ரப்பர் பால் உறைய வைப்பது, ரப்ப்ர் ஷீட் அடிப்பது காய வைப்பது எல்லாம் அறிந்து கொள்ளலாம்.

      உங்களின் ஆர்வத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பர் நாஞ்சில் சிவா.

      துளசிதரன்

      நீக்கு
    2. என் நெடுநாளைய சந்தேகத்தை தெளியவைத்த தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி ஐயா....

      நீக்கு