வியாழன், 19 ஜனவரி, 2023

நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள்


சென்ற முதல் பகுதியில், முதலில் நின்று கொண்டு செய்யும் சில பயிற்சிகள், நிறைய இருந்தாலும், எளிதாகச் செய்ய முடிந்த, நான் ஃபிசியோதெரப்பிஸ்டிடம் கற்றுக் கொண்ட சில பயிற்சிகள் பற்றி இணையத்திலிருந்து எடுத்த படங்களுடன் அடுத்த பதிவில் சொல்கிறேன், என்று முடித்திருந்தேன். அதுவும் பாதம் முதல். 

நான் மருத்துவரோ, ஃபிசியோதெராப்பிஸ்டோ இல்லை. இவை  நான் கற்றுக் கொண்டவை, எங்கள் வீட்டுப் பெரியவர் உட்பட செய்யும் பயிற்சிகள் அனுபவம், என் அனுபவம் அவ்வளவே. உங்கள் மருத்துவர்/ஃபிசியோதெராப்பிஸ்டிடம் அறிவுரை பெற்றுக் கொண்டு செய்யலாம்.

முதலில் பயிற்சிகளை கோடுகள் போட்டு படங்களாகப் பகிரலாம் என்று நினைத்தேன். நேரமில்லை. சரி நாம செய்யறப்ப படங்கள் எடுத்துடலாமேன்னு நினைச்சா அதுக்கு ஆள் வேணும். வேலைக்காவாது. 

இருந்தாலும் நான் செய்வதில் என்னால் எடுக்க முடிந்ததை எடுத்து இணைத்திருக்கிறேன். அதற்கு நேரம் நிறைய செலவானது எனவே மற்றவற்றை இணையத்திலிருந்து எடுத்து இணைத்துவிட்டேன்.

எனக்கு நேரடியாகச் சொல்லித் தருவது என்றால் மிக எளிது. எழுதும் போது எவ்வளவு தூரம் சரியாக என்னால் எழுத முடியும் என்று தெரியவில்லை இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.

எந்தப் பயிற்சி செய்யும் முன்னும் வீட்டிற்குள் கொஞ்சம் நடந்து, கை கால்களை அசைத்து வார்ம் அப் செய்துவிட்டுச் செய்வது நல்லது. 

Picture Courtesy - Health sites / Internet/Google
நேராக நிற்கவும். குதிகாலைத் (Heel) தரையில் ஊன்றிக் கொண்டு பாதப் பகுதியை உயர்த்தும் பயிற்சி. இதை நின்று கொண்டும் செய்யலாம், உட்கார்ந்து கொண்டும் செய்யலாம். முதலில் வலது கால் அடுத்து இடது கால் அப்புறம் இரு கால்களிலும் (படத்தில் முதலாவது பயிற்சி. அதன் கீழே நின்று கொண்டு செய்யும் காணொளி).  எண்ணிக்கை அளவு முடிந்த அளவு செய்யலாம். இதே நிலையில் குதிகாலில் சில அடிகள் நடந்தும் பயிற்சி செய்யலாம்.

(படத்தில் இரண்டாவது நிலை.) நேராக நிற்கவும். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மெதுவாகக் குதிகாலை உயர்த்தி (Toe)விரல்கள் பகுதியைத் தரையில் ஊன்றி நிற்கவும்.  குதிகால் மேலெழும்பி இருக்க வேண்டும். முடிந்தால் இப்படிச் சிறிது நேரம்  நிற்கலாம். அப்படி நிற்கும் போது மூச்சை உள்ளிழுத்து வெளியிடவும். அதன் பின் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றும் போது  குதிகாலை தரையில் ஊன்றவும்.  

குதிகாலை உயர்த்தி விரல்கள் பகுதியைத் தரையில் ஊன்றி நின்று மீண்டும் குதிகாலைத் தரையில் ஊன்றி என்று மாறி மாறி முடிந்த எண்ணிக்கை அளவு செய்யலாம் (காணொளி). பிடிமானம் வேண்டும் என்றால் ஜன்னல் கம்பியையோ, நல்ல வலுவான நாற்காலியையோ பிடித்துக் கொண்டும் செய்யலாம். 

Picture Courtesy - Health sites/Internet/Google

மணலில் நடப்பது போன்று. மணலில் நடப்பது நல்ல பயிற்சி

இதே பயிற்சி - (Toe) விரல்கள்  பகுதியை ஊன்றியவாரே சில அடிகள் முன்னில் நடந்து விட்டு மீண்டும் பின்னோக்கி நடக்கும் பயிற்சியையும் செய்யலாம் அல்லது அப்படியே ஒரு சிறிய வட்டமடித்து தொடங்கிய இடத்திற்கு வந்துவிடலாம். (நான் செய்வதை படம் எடுக்க முடியவில்லை)

கட்டை விரலைத் தரையில் ஊன்றிக் கொண்டு மற்ற நான்கு விரல்களையும் உயர்த்துதல்

அடுத்து கட்டை விரலைத் தரையில் ஊன்றிக் கொண்டு மற்ற நான்கு விரல்களையும் உயர்த்துதல். வலது கால், இடது கால் அதன் பின் இரு கால் நான்கு விரல்களும் (கட்டை விரலைத் தவிர்த்து) ஒரே நேரத்தில் உயர்த்தும் பயிற்சி. (காணொளி)

கால் விரல்களை மட்டும் (பாதத்தை அல்ல) உயர்த்துதல்

அடுத்து கால் விரல்களை மட்டும் (பாதத்தை அல்ல) உயர்த்தும் பயிற்சி. வலது, இடது என்று தனியாகவும், இரு கால்களிலும் ஒரே நேரத்திலும் செய்யலாம். நின்று கொண்டும் செய்யலாம். நாற்காலியில் உட்கார்ந்த நிலையிலும் செய்யலாம். இப்படி உயர்த்திச் செய்துவிட்டு அப்படியே விரல்களை உட்பக்கம்மடித்துச் செய்வதையும் சேர்த்துச் செய்யலாம். 

   விரல்களை உட்பக்கம் மடக்கி விரித்தல்      துணியைப் பிடித்து இழுத்தல்   

அடுத்து கால் விரல்களை உட்பக்கமாக மடக்கி விரித்தல் பயிற்சிகள் சில வகைகள் காணொளிகள் கொடுத்துள்ளேன். மேலேயும் கீழேயும். துணியைப் பிடித்து இழுத்தல் போன்று, கோலிக் குண்டுகள் அல்லது ஏதேனும் பொருளைக் கால் விரல்களால் பிடித்து எடுத்தல் போன்றவையும் செய்யலாம். 

அடுத்து, ஏதேனும் பந்து அல்லது உருளை போன்ற பொருளின் மேல் பாதத்தை வைத்து உருட்டுதல். இப்படி இருகால்களையும் தனித்தனியாகவும், அல்லது இரு பாதங்களையும் இரு பந்துகள் அல்லது உருளைகள் மீது வைத்துக் கொண்டு ஒரே நேரத்திலும் செய்யலாம். 

கீழே வரும் நான்கும் செய்வதுண்டு ஆனால் என்னால் எடுக்க முடியவில்லை

Picture Courtesy - Health site/Google/Internet https://www.healthline.com/health/fitness-exercise/foot-exercises

குறிப்பாகப் பாதவலிக்கான உருளைகள், பந்துகள் (Foot Rollers) கிடைக்கின்றன. பாத மருத்துவர்களிடம் (Podiatrist) அல்லது ஃபிசியோதெராப்பிஸ்டிடம் கலந்தாலோசித்து வாங்கிக் கொள்ளலாம். இப்படியான பயிற்சிகளை நின்று கொண்டோ, உட்கார்ந்த நிலையிலோ செய்யலாம். (நான் பயன்படுத்திய உருகளைகள், பந்துகள் போயே போச்!!! அதனால் காணொளிகள் எடுக்க முடியலை). 

பாதம் வலுவாக இருக்க, குதிகால், கணுக்கால் பகுதியும் ஆடுகால் சதையிலிருந்து குதிகாலை இணைக்கும் பகுதி அகில்லெஸ் தசைநார்/குதிநாண் தசைநார் (Achilles  Tendon) எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். ஆடுதசை/கெண்டைக்கால் தசை (Calf Muscle) வலுவாக இருக்க வேண்டும். இவற்றைப் பராமரிக்கும் பயிற்சிகள். இணையத்திலிருந்து மூன்று கீழே. 

Picture Courtesy - Health Site/Internet/Googlehttps://www.healthline.com/health/fitness-exercise/foot-exercises

முதல் படம்: வலது காலின் முட்டி மடங்காமல் நேராக இருக்குமளவான  இடைவெளியில் இடது காலை வைத்து முட்டியை மட்டும் மடக்கி நேராகக் கொண்டு வருதல். இப்படி சில எண்ணிக்கைகள் செய்துவிட்டு அதே போன்று வலது காலை முன்னே வைத்து இடதுகாலை பின்னே வைத்து வலது காலின் முட்டியை மட்டும் மடக்கி பின்னர் நேராகக் கொண்டு வருதல்.

இரண்டாம் படம்: வலது காலை முன்னே வைத்துக் கொண்டு முட்டியை நாற்காலி விளிம்பில் வைத்துக் கொண்டு இடது கால்லின் முட்டியை மடக்கி பின்னர் நேராகக் கொண்டு வருதல் என்று முடிந்த அளவு செய்யலாம்.

Picture Courtesy - Health sites/Internet/Googlehttps://www.healthline.com/health/fitness-exercise/foot-exercises

மூன்றாம் படம்: வலது காலை முன்னே வைத்து இரு கால்களின் முட்டிகளையும் சற்றே வளைத்து நேராகக் கொண்டு வருதல். படத்தில் முட்டி நாற்காலியில் (மெத்துனு ஏதோ போட்டிருக்காங்க??) முட்டுவது போல உள்ளது. நாம் செய்யும் போது அப்படி முட்டிக்காம செய்யலாம்!!!!! 

இப்படி பாதத்திற்கான நிறைய பயிற்சிகள் உள்ளன. நாங்கள் செய்வதை மட்டும் கொடுத்திருக்கிறேன். உட்கார்ந்துகொண்டு செய்வதில் இன்னும் கொஞ்சம் வரும். இப்பயிற்சிகளைச் செய்யும் போது நம் பாதங்கள் நமக்கு நன்றி சொல்லும். பாதங்களின் வலி குறைவதோடு Flexible ஆகும். 

இணையத்திலிருந்து எடுத்த இப்படங்கள் பதிப்புரிமை என்று சொல்கின்றன.  இருந்தாலும் போட்டுவிட்டேன். ஏதேனும் பிரச்சனை வருமா என்று தெரியவில்லை.

நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள் இன்னும் சில அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.

முந்தைய பதிவை வாசித்தவர்கள் கருத்து சொன்னவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.


-----கீதா

33 கருத்துகள்:

  1. உடல் நலத்தை காக்க கால் பயிற்சிகள் பகிர்வு அருமை.
    உங்களின் முயற்சி பலன் அளிக்க வேண்டும்.
    நீங்கள் செய்யும் சில பயிற்சிகளை காணொளி எடுத்து பகிர்ந்து இருப்பதற்கு நன்றி.

    //இணையத்திலிருந்து எடுத்த இப்படங்கள் பதிப்புரிமை என்று சொல்கின்றன. இருந்தாலும் போட்டுவிட்டேன். ஏதேனும் பிரச்சனை வருமா என்று தெரியவில்லை.//

    சுட்டி கொடுத்து அவர்களுக்கு நன்றி போட்டு விட்டீர்கள் என்றால் ஒன்று சொல்லமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா....இப்போதைக்கு சர்க்கரை தவிர வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. செர்வைக்கல் ரிப் எனக்குப் பிறவியிலேயே இருந்ததினால் வந்த ஸ்பாண்டிலைட்டிஸ், தோள் வலி, கை வலிகள் எல்லாம் நமக்கும் மேலே இருக்கே அந்த மாபெரும் சக்தி, ஃபிசியோ தெரப்பி பயிற்சிகளினால் இப்ப இல்லை.

      ஆமாம் அக்கா அதான் ஆங்கிலத்தில் கொடுத்துவிட்டேன். அவர்கள் சுட்டியும் கொடுத்திருக்கிறேன் ஆனால் முதலில் ப்ளாகர் சேர்க்கப் படுத்தியது இணையம் மெதுவாக இருந்ததாலோ என்னவோ....அப்புறம் சேர்ந்துவிட்டது...இப்போது இருக்கும் அதில்...

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  2. மிக உபயோகமானது. ஒரு வருடத்துக்கு முன்பு யோகா செய்தபோது செய்துகொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை நல்லாருக்கு செய்யும் போது. நீங்களும் மீண்டும் தொடருங்கள் ....ஆமாம் யோகாவில் முதலில் இதை எல்லாம் செய்யச் சொல்லிவிட்டுத்தான் ஆசனத்திற்கே போவாங்க. அப்படியும் கற்றுக் கொண்டவைதான் இவை எல்லாமே...

      கீதா

      நீக்கு
    2. மிக்க நன்றி நெல்லை...

      கீதா

      நீக்கு
  3. ஏன் உடற்பயிற்சி, யோகாவுக்கு பெண்கள் மாத்திரமே போஸ் கொடுக்கறாங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா நெல்லை நெட்டுல நான் செய்யும் பயிற்சிகளை ஒத்த படங்களைப் போடத் தேடினப்ப பெண்கள் செய்வதுதான் முதல்ல வந்து நிக்குது!!!!!!

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  4. பதில்கள்
    1. செய்யுங்க நெல்லை, சந்தோஷமா இருக்கு...

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  5. அஹோபிலம் மலை ஏறணுமே... முடியுமான்னு யோசிக்கறேன். நாளை செல்கிறேன். மூன்று நாட்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா அஹோபிலம் போறீங்களா....ஏன் முடியாது? அப்படிச் சொல்லாதீங்க நெல்லை. உங்களால முடியும். என் மாமனார் 80 ஆனப்ப இங்குதான் அழைத்துச் சென்றோம்....அவர் குழந்தைகள் எங்களோடு (பேரன் பேத்திகள் அத்தனை பேரும்) உக்ரஸ்தம்பம் வரை ஏறினார்னா பார்த்துக்கோங்க!!! அந்தப் பாதை சரியான பாதை கிடையாது....பாறைகள் சரிவு மலைப்பகுதின்னுதான் ஏறணும்....தடுமாறாம ஏறினார்..

      அப்படி இருக்க உங்களால ஏன் முடியாது கண்டிப்பாக முடியும் நெல்லை....ஏறும் போது நல்லா மூச்சு இழுத்து விட்டு ஏறுங்க...கண்டிப்பா உக்ர ஸ்தம்பம் போய் வாருங்க....கடைசில கொஞ்சம் படிகள் இருக்குன்னு நினைக்கிறேன். பலரும் இப்பகுதியை விட்டுடறாங்க. ஏறிட்டு அந்தப் பாதம் இருக்கும் க்ளிஃப்!!! வாவ்! அழகான காட்சி. கீழ உத்துப் பார்த்தா அதலபாதாளம்....சுற்றிலும் மலைகள்...செமையா இருக்கும் அதுவும் இப்ப நல்ல பச்சையா இருக்கும்.

      இறங்கும் போது கவனமா இறங்குக...மலை மணல் உதிரி மணல் என்பதால்....ஆனால் மரங்களின் வேர்கள் சின்ன பாறைகள் இடையில் இருந்தன....இப்ப எப்படி இருக்கோ தெரியலை ஒரு வேளை பாதை அமைச்சிருக்காங்களா தெரியலை....இருந்தாலும் Don't miss this part! அது போல பிரகலாதன் படியும் ஏறிடுங்க. இதையும் பலர் விட்டுவிடுகிறார்கள்.

      வாழ்த்துகள் நெல்லை. நல்லபடியா போய் வாங்க உங்களாள் கண்டிப்பாக ஏற முடியும்...

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. அஹோபிலம் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துகள்.

      நீக்கு
  6. பலருக்கும் பயன்படும் பதிவு.
    காணொளிகளோடு சொன்னது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  7. பலருக்கும் பயன்படும்.. சிறப்பான பதிவு.
    காணொளிகளுடன் சொல்லி இருப்பது சிறப்பு..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  8. எளிதாக இருந்தாலும் தொடர்ந்து செய்ய வேண்டும்... விளக்கங்கள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி உங்க இனிப்புக்குச் சுகம் தருபவை. எளிதுதான்...ஆமாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  9. நெல்லை போல என்னால் இவற்றைத் தவறாது செய்வேன் என்று சொல்ல முடியவில்லை.  பேசிக்கல்லி நான் ஒரு...!   ஹிஹிஹி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஸ்ரீராம் அந்த ஹிஹிஹிஹி யின் அர்த்தம் தெரியுமாக்கும்!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  10. படங்களும், காணொளியும் அட்டகாசமாக இனஉய்த்துள்ளீர்கள்.  நீங்கள் தினசரி இதைச் செய்கிறீர்களா?  சுற்றிப்போடுங்கள்!

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் முதலில் சொல்லி இருக்கும் இரண்டையும் எங்கள் மருத்துவ நண்பர் கூட சொல்லி இருக்கிறார் என்னுடன். நானா? அதே பயிற்சியையே ஒரு காலை தூக்கி அந்தரத்தில் வைத்தபடியும் செய்யச் சொன்னார் என்றும் நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே பயிற்சியையே ஒரு காலை தூக்கி அந்தரத்தில் வைத்தபடியும் செய்யச் சொன்னார்//

      முதல் ரெண்டையும் அந்தரத்திலா?!!

      அடுத்தாப்ல வரது எல்லாம் அந்தரத்திலும் செய்யலாம்தான். அது அடுத்த பகுதியில் சொல்ல இருக்கிறேன்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு

  12. //பயிற்சி செய்யும் முன்னும் வீட்டிற்குள் கொஞ்சம் நடந்து, கை கால்களை அசைத்து வார்ம் அப் செய்துவிட்டுச் செய்வது நல்லது. //

    இந்தப் பயிற்சி மட்டும் தன தற்போதைக்கு,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியும் அண்ணா இதுவுமே நல்லதுதான். உங்கள் உடல் நலம் நல்லா ஆகட்டும் ஜெ கே அண்ணா..

      மிக்க நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
  13. கீதா! ரொம்பவும் விளக்கமாகவும் அருமையாகவும் எழுதியிருக்கிறீர்கள்! நான் எப்போதும் செய்வது தான்! கடுமையான தொடர் ஜலதோஷத்தினால் பல மாதங்கள் இந்தப்பயிற்சிகளை விட்டு விட்டேன். இனி மறுபடியும் தொடரணும்!
    இந்தப்பயிற்சிகள் பொதுவாய் வெரிகோஸ் பிரச்சினைகளுக்கு மிக அருமையான தீர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ அக்கா, நான் விளக்கமாக எழுதியிருக்கிறேனா?!!! அப்ப ஷொட்டுப் போட்டுக்கணும்தான்..ஹாஹஹாஹா

      நீங்கள் செய்வது மிக்க மகிழ்ச்சி அக்கா. நல்ல பயிற்சிகள். இவற்றில் சில டிவி பார்த்த்துக் கொண்டேயோ அடுக்களையில் நின்று வேலை செய்யு,ம் போதோ செய்யலாம். நான் சிலவற்றை அப்படித்தான் செய்கிறேன்.

      //கடுமையான தொடர் ஜலதோஷத்தினால் பல மாதங்கள் இந்தப்பயிற்சிகளை விட்டு விட்டேன். இனி மறுபடியும் தொடரணும்!//

      ஓ! அக்கா இப்ப நலமா? தொடர்ந்து செய்ங்க அக்கா

      ஆமாம் வெரிகோஸ் பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு. கால்ஃப் மசில் நல்லா ஸ்ட்ரெச் ஆகும்

      மிக்க நன்றி மனோ அக்கா.

      கீதா

      நீக்கு
  14. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. உடற்பயிற்சிக்கு முன். கால் பயிற்சி எவ்வளவு முக்கியமானது உணர்த்தி விட்டீர்கள். தங்களது பயிற்சியின் காணொளிகள், மற்றும் பிறவற்றையும் கவனமாக பார்த்து தெரிந்து கொண்டேன். நானும் முன்பு, "வாழ்க வளமுடன்" வேதாந்த மகரிஷி அவர்கள் ஆசிரமம் மூலமாக ஆழியார் சென்று பயிற்சி பெற்று வந்த எங்கள் அண்ணா, மன்னியிடமிருந்து பாதங்களுக்கான பயிற்சி செய்து பழக்கப்படுத்திக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் எனக்கு எல்லாம் சௌகரியமாக இருந்தது. இப்போது நான்கைந்து ஆண்டுகளாகத்தான் வந்த சுகரை கவனிக்காமல் பாதங்கள் மதமதப்புடன் விரல்களை மடக்கி நிமிர்ந்த முடியாதபடிக்கு கஸ்டப்படுகிறேன். அதனால் எங்கு சென்றாலும் (கால்களின் பலம் இல்லாததால என்னவோ) அடிக்கடி கீழே விழுந்து அதனாலும் கஸ்டப்படுகிறேன்.

    நேற்று கூட குழந்தையை (பேத்தியை) பள்ளிக்கு விட்டு விட்டு வரும் போது எப்போதும் நடைப்பயிற்சிக்காக நானும், மகளும் நடந்து வருவோம். நேற்றும் எதிர்பாராமல் கீழே விழுந்து பின்பக்க தொடை பகுதியில் நல்லஅடி. கருரத்தம் கட்டிக் கொண்டு வலி, அயோடக்ஸ் வெந்நீர் ஒத்தடம் என இன்றுடன் நாள் ஓடுகிறது. அத்தோடு எல்லா வேலைகளும் விடாப்பிடியாக செய்தே வருகிறேன். நடைப்பயிற்சி இப்படியாக என் நடைப்பயிற்சி காலை அடிக்கடி வாரி விடடுகிறது. அதனால்தான் தங்கள் பதிவுக்கு நேற்று வர இயலவில்லை. உங்களிடம் சொன்னால் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்குமென கூறி தங்களை வேதனைப்படுத்தி விட்டேன். மன்னிக்கவும். கொஞ்சம் குணமானவுடன் தங்களின் பயிற்சிகளை செய்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா உங்கள் கஷ்டம் தெரிகிறது. சுகர் வந்தால் முதலில் நாம் கவனிக்க வேண்டியவை கால்கள். பாதத்திலிருந்து. இடுப்பும் முக்கியம். கூடவே சர்க்கரை நல்ல கன்ட்ரோலில் இருக்க வேண்டும். சாப்பாடு, அதன் அளவு, அதைவிட பயிற்சி கலோரி குறையும் அளவு....உங்கள் கால்கள் பிரச்சனை புரிகிறது.

      ஒரு முறை ஃபிசியோதெரப்பி சென்று பாருங்க அவர்கள் சில உபகரணங்களால் கால்களைச் சரிப்படுத்துவாங்க அப்புறம் நீங்க வீட்டிலேயே தொடர்ந்து செய்யலாம்.

      அக்கா ஆ ஆ பின் பக்கத் தொடைப்பகுதி இப்போது எப்படி இருக்க்கு? அக்கா எனக்கு எந்த வேதனையும் இல்லை. தாரளமாகச் சொல்லுங்க...

      அக்கா கால்களுக்கு இன்னொன்று சொல்றேன். தினமும் இரவு படுக்கும் முன் பக்கெட்டில் முட்டி வரை தண்ணீர் வெந்நீர் இதமான சூட்டில் வைத்துக் கொண்டு கால்களை அதில் ஆடுதசை மூழ்கும் அளவு தண்ணீர் வைத்துக் கொண்டு இரு கால்களையும் அதில் வைத்துக் கொள்ளுங்கள். சுகமான தூக்கமும் வரும். கால்களும் சந்தோஷப்படும்.

      ரத்தம் கட்டியதற்கு சூடு ஒத்தடம் அடுத்து ஐஸ் ஒத்தடம் ரெண்டும் மாத்தி மாத்தி கொடுத்துப் பாருங்க அக்கா. எல்லாம் விரைவில் சரியாகிவிடும் கமலாக்கா...

      பதிவுக்கு வரலைனா என்ன உங்க உடம்பை பார்த்துக்கோங்க கமலாக்கா.

      அக்கா நீங்க மெயில் பார்ப்பீங்கதானே....

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      ஒரு உடன் பிறந்த சகோதரி போல் தாங்கள் தந்த ஆறுதலான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சகோதரி. இன்று வீக்கம் சற்று குறைந்துள்ளது. வலியும் கொஞ்சம் பரவாயில்லை. தங்கள் சொல்படி கால்களுக்கு பயிற்சி தருகிறேன். மெயில் பார்ப்பேன் சகோதரி. எ. பிக்கு சமையல் குறிப்புக்கள் அனுப்ப ம் போது உடனுக்குடன் பார்ப்பேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. கமலாக்கா வீக்கம் குறைந்து வலியும் குறைந்தது பார்த்து மிக்க மகிழ்ச்சி. கால்களுக்குப் பயிற்சி தருவதும் நல்ல விஷயம் கமலாக்கா.

      மெயிலில் தொடர்பு கொள்கிறேன் கமலாக்கா

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு