திங்கள், 23 ஜனவரி, 2023

நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள்-தொடர்ச்சி

 

சென்ற பகுதியில், நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள் இன்னும் சில பற்றி அடுத்த பகுதியில் தொடர்கிறேன், என்று சொல்லியிருந்தேன். இதோ இங்கே. இவை எல்லாமும் நான் செய்வதுதான் ஆனால் நான் செய்யும் படங்கள், காணொளிகள் எடுக்க முடியாததால் இங்குப் பகிர முடியலை.  ஒவ்வொன்றையும், லெஃப்ட் ரைட் தவிர நான் 30 எண்ணிக்கை செய்வதுண்டு. லெஃப்ட் ரைட் மட்டும் 100 எண்ணிக்கை செய்வதுண்டு.  

நாம் நிற்கும் போது இப்படி நேராக நிற்க வேண்டும். ஏன் என்பதற்கு முதல் படத்தின் பக்கத்தில் நம்ம முதுகெலும்பு படம் இருக்கு பாருங்க, அதைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தா தெரியும் நம்ம முதுகெலும்போட பகுதிகள். அதெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நேராக நிற்க வேண்டும்.  ஏதேனும் ஒரு காலில் அழுத்தம் கொடுத்து நின்னா கால் வலி, மூட்டு வலி இடுப்பு வலி எல்லாம் வரும்.

இப்படி நேராக நின்று மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளியிட்டு, (மூச்சை உள்ளே இழுக்கும் போது மேல் வயிறு விரிய வேண்டும். வெளியிடும் போது வயிறு நன்றாக உள்ளே சென்று காற்றிழந்த பலூன் போல ஒட்டி இருக்கணும்) நன்றாக ஆசுவாசப்படுத்திக் கொண்டு செய்யத் தொடங்கலாம்.  

முதல் படத்தில் இருப்பது போல் கைகளை மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டே இடுப்பில் வைத்துக் கொண்டோ அல்லது இரண்டாவது படத்தில் வலப்புறம் கீழே உள்ளது போல் கைகளைத் தலைக்கு மேல் நேராகத் தூக்கிக் கொண்டோ முடிந்த அளவு பின்னால் வளைதல். பின்னர் நேராக வரும் போது மூச்சை வெளியிட வேண்டும்.

அடுத்ததாக நின்ற நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொண்டுவிட்டு கைகளை மேலே உயர்த்திக் கொண்டு மெதுவாக மூச்சை வெளியிட்டுக் கொண்டே முன் பக்கம் குனிந்து பாதங்களை அல்லது தரையைத் தொடுதல். - கால்கள் மடங்காமல் நேராக இருக்க வேண்டும். (இரண்டாவது படத்தில் வலப்புறம் மேலே உள்ளது போல்)  மீண்டும் மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டே கைகளை மேலே கொண்டு சென்று நேராக நிமிர்ந்ததும் மூச்சை வெளியிட்டுக் கொண்டே கைகளைக் கீழே கொண்டு வந்துவிடலாம். 

பின்னால் வளைந்தால் முன்னால் குனிந்து செய்யும் பயிற்சி செய்ய வேண்டும் - இரண்டும் சேர்ந்தார் போல் - என்று என் யோகா ஆசிரியர் சொல்வதுண்டு.  இந்த இரண்டையும் நான் இங்குத் தனியாகச் செய்வது போல் சொல்லியிருக்கிறேன். ஆனால், சேர்த்து செய்வது (நல்லது)  செய்யும் போது நேராக நின்று கொண்டு மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டே கைகளை மேலே உயர்த்தி பின்னால் முடிந்த அளவு வளைந்துவிட்டு அப்படியே மூச்சை வெளியேற்றிக் கொண்டே முன்னால் வளைந்து பாதங்களை அல்லது தரையைத் தொடுதல். மீண்டும் மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டே நேராக கைகளைத் தூக்கிக் கொண்டு நிமிர்ந்து மூச்சை வெளியிட்டுக் கொண்டே கைகளைக் கீழே இயல்பாகக் கீழே கொண்டு வந்து நிற்பது. இதைச் செய்யும் எண்ணிக்கை நம்மால் செய்ய முடிந்த அளவு.

(யோகாவில் செய்யப்படும் சூரியனை வணங்கும் பயிற்சியில் தொடங்கும் முதல் நிலை இதுதான். இங்கு உடற்பயிற்சி மட்டுமே சொல்கிறேன் யோக ஆசனப் பயிற்சிக்குள் செல்லவில்லை. காரணம் அப்பயிற்சிகளை நாம் முறையான ஆசிரியரிடம் கற்பதுதான் முறை)

இரண்டாம் படத்தில் இடப்புறம் மேலே உள்ளது போல் தா தை தக்கத்தை என்பது போல் ஆடுவோம். இது மிக நல்ல பயிற்சி. பாருங்க பாதங்கள், தொடைகள், இடுப்பு, முட்டி எல்லாத்துக்கும் நல்லது (பரதநாட்டியம், மற்ற வகை நடனங்கள் எவ்வளவு நல்ல பயிற்சி! )


மேலே சொன்ன பயிற்சியைச் செய்து ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் அடுத்தாற் போல் (இதோ இருக்கும் படங்களில் முதல் படம்) நேராக நின்று கொண்டு கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு வலது காலை முட்டியை மடக்கிக் கொண்டு தொடை நேராக, பாதமும் நேராக இருப்பது போல் தூக்கிச் சில நொடிகள் நிற்பது. அதன் பின் அதே போன்று இடது காலையும் தூக்கி நிற்பது. எண்ணிக்கை நம்மால் முடிந்த அளவு. 

அப்படிச் செய்து விட்டு அடுத்து, இப்பகுதியில் இரண்டாம் படத்தில் உள்ளது போல் (A) வலதுகாலை உயர்த்தி முட்டியை மடக்கிக் கொண்டுவலது கையால் முட்டியை வளைத்துப் பிடித்துக் கொண்டு இடது கையால் முட்டிக்கும் பாதத்திற்கும் நடுவில் வைத்து அழுத்தி தொடையை வயிற்றோடு சேர்த்து அழுத்திப் பிடித்தல். சில நொடிகள் அப்படி நிற்கலாம். அதே போன்று (B) இடது காலை அப்படி மடக்கிக் கொண்டு இடது கையால் முட்டியைப் பிடித்துக் கொண்டு வலது கையை நடுவில் வைத்து தொடையை வயிற்றோடு சேர்த்து அழுத்திக் கொண்டு சில நொடிகள் நிற்கலாம். எண்ணிக்கை எல்லாம் நம்மால் முடிந்த அளவு.

அடுத்தாற் போல் காலைத் தூக்கி நின்று ஆடுகின்ற.....ஆடுவோம் வாங்க.  இல்லை ஏதானும் ஆண்கள் நம்மிடம் வம்பு பண்ணினா காலைத் தூக்கி உதை விட்டுருவோம்லன்னு... நேராக நின்று கொண்டு முதல் படத்தில் உள்ளது போல் இடது காலைத் தூக்கி நேராக நீட்டுதல் - ஆண்கள் படத்தில் உள்ளது போல் எந்தக் காலைத் தூக்குகிறோமோ அந்தக் கையை நீட்டி அதைத் தொடும் உயரம் - அதைக் கீழெ கொண்டு வந்து அடுத்து வலது காலைத் தூக்கி நேராக நீட்டுதல் என்று மாற்றி மாற்றி நம்மால் முடிந்த எண்ணிக்கை அளவு செய்தல். அல்லது ஒரு காலை நீட்டி 10 எண்ணிக்கை செய்து விட்டு மறு காலை நீட்டி 10 எண்ணிக்கை செய்யலாம். 

அடுத்தாப்ல, சின்ன வயசுல கழுதை கழுதைன்னு வார்த்தைகள் எல்லாம் சகஜமா கேட்டிருப்போம். ஆமா, கழுதைதான். எங்கிட்ட மோதாதேன்னு....மோதிப் பார்த்தா இப்படித்தான்னு....முதல் படத்தில் இரண்டாவது படத்தில் உள்ளது போல் காலை பின் பக்கம் நீட்டும் பயிற்சி.  முதலில் ஒரு காலைப் பின் பக்கம் நீட்டி, முடிந்த எண்ணிக்கை அளவு செய்துவிட்டு அடுத்த காலைப் பின் பக்கம் நீட்டிச் செய்யலாம். அல்லது ஒரு காலை நீட்டிச் செய்துவிட்டு அடுத்த காலைப் பின்பக்கம் நீட்டிச் செய்தல் என்று மாற்றி மாற்றிச் செய்யலாம். 

மேலே உள்ள மூன்றாவது படத்தில் உள்ளது போல காலின் முட்டியை மட்டும் பின்பக்கம் மடக்கிச் செய்தல். மேலே முதல் படத்திற்குச் சென்னது போல மாற்றி மாற்றிச் செய்யலாம் அல்லது ஒரு காலை மடக்கிச் செய்துவிட்டு அடுத்த காலை மடக்கிச் செய்யலாம்.

 

ஹாலோ நாங்க முன் பக்கமும் பின் பக்கமும் மட்டும்தான் உதைப்போமா என்ன? சைட்லயும் உதைப்போமாக்கும்!  முதல் படத்தில் இருப்பது போல் காலை பக்கவாட்டில் கொஞ்சம் விரித்துத் தூக்குதல், என்றும் அடுத்த படத்தில் இருப்பது போல் காலை பக்கவாட்டில் நேராகத் தூக்குதல் என்று இரு பயிற்சிகளிலும் ஒவ்வொரு காலுக்கும் தனித்தனியாகச் சில எண்ணிக்கைகள் செய்தல் அல்லது இரு கால்களையும் மாற்றி மாற்றிச் செய்தல். 

இரண்டாவது படத்தில் உள்ள பயிற்சியை மேலே சொன்னது போல் அப்படியே  பக்கவாட்டில் தூக்கலாம் அல்லது படத்தில் உள்ளது போல் (முதலில்) வலது காலை இடது காலின் பக்கம் குறுக்கே கொண்டு வந்து விட்டு அப்படியே வலப்பக்கம் பக்கவாட்டில் நேராகத் தூக்குதல். அதே போன்று இடது காலை வலப்பக்கம் குறுக்கே கொண்டு வந்து அப்படியே  இடப்பக்கம் பக்கவாட்டில் நேராகத் தூக்கிச் செய்தல்.

நாம எல்லாரும் இன்னும் சின்னப் பிள்ளைங்கதானே, வாங்க ஸ்கூல் போவோம் டிரில் வகுப்பு கமான், லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட். முதல் படத்துல இருக்காப்ல காலை மாத்தி மாத்தி செய்தல். அடுத்த படத்தில் இருக்காப்ல முட்டியை மடக்கிக் காலை கொஞ்சம் உயரமாகத் தூக்கி வயிற்றுப் பாகம் அமுங்குறாப்ல இரண்டு காலையும் மாத்தி மாத்தி...இப்படிச் செய்தல். (எண்ணிக்கை எல்லாம் நம்ம கணக்குதான்)  

அடுத்தாப்ல, நேராக நின்று கொண்டு (கால்களைச் சேர்த்து நிற்காமல்) கைகளை முன்பக்கம் நீட்டிக் கொண்டு/கைகள் விரல்களை மடக்கிக் குவித்துக் கொண்டு/கைகளைக் கூப்புவது போல் வைத்துக் கொண்டு, நாற்காலியில் அமர்வது போல் உட்கார்ந்து எழுந்திருக்கும் பயிற்சி. 

இப்பயிற்சியை நான் கற்ற யோகா வகுப்பில் மூன்று நிலைகளில் செய்ய வைப்பார்கள். முதலில் நேராக நின்று கொண்டு கைகளை முன்பக்கம் நீட்டிக் கொண்டு சற்றே முட்டியை மடக்கி உட்காரும் முன் உள்ள நிலையில் செய்தல், இரண்டாவதாக இடப்பக்கம் இங்கு படத்தில் கொடுத்தது போல், மூன்றாவதாக வலப்புறம் உள்ள படத்தில் உள்ளது போல் குந்துதல். 

ஸ்பா.... நிறைய செஞ்சுட்டோமோ...சரி இப்ப இது போதும். கொஞ்சம் ஓய்வு எடுத்துப்போமா! Relax பண்ணிக்கோங்க. அடுத்தாப்ல, நின்று கொண்டு இடுப்புக்கு மேலே செய்யும் மிக எளிதான சில பயிற்சிகள் செய்வோம்…ஓகேயா…

Picture Courtesy - Health sites/Google/Internet 

முதல் பகுதி, இரண்டாம் பகுதி


------கீதா

24 கருத்துகள்:


 1. நல்லதொரு பதிவு நல்லதொரு தொடக்கம்... வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் கீதா

  பதிலளிநீக்கு
 2. நான் தனியாக உடற்பயிற்சிகள் செய்வதில்லை எனது வேலையே உடற்பயிற்சி மாதிரிதான். கொஞ்சம் வருமானம் குறைந்தாலும் இந்த வேலையை நானே விரும்பி செய்கின்றேன்... அதிக வருமானம் உள்ள வேலை வாய்ப்பு என் மனைவி வேலை செய்யும் நிறுவனத்தில் எனக்கு கிடைக்க வாய்ப்புக்கள் இருந்தும் அதை தவிர்க்கின்றேன் காரணம் அந்த வேலையில் நாள் முழுவது உட்கார்ட்ந்தே இருக்கனும். இப்போது நான் பார்க்கும் வேலை உட்கார வாய்ப்பு இருந்தும் நாள் முழுவது நிற்பதும் நடப்பதுமாக இருக்கின்றேன் ஒரு நாளைக்கு குறைந்தது 15000 த்தில் இருந்து 24000 ஸ்டெப்ஸ் வரை நடக்கின்றேன்...


  15 ஆண்டுகளாக எனக்கு ஷுகர் இருக்கிறது. முன்பு எல்லாம் A! 7.2 ஆக இருந்து வந்ததது ஆனால் இப்போது 6.2 ஆக இருக்கிறது அதாவது இப்போது ப்ரீ டையபடிக் நிலைக்கு வந்து இருக்கிறது

  அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டுவேலை பார்த்தால் உடல் நிலை மோசமாகும் ஆனால் இப்போது பார்க்கும் வேலையால் உடல் நலமாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரை, நீங்கள் செய்வது நல்ல விஷயம். பொதுவாகவே ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருக்கக் கூடாதுதான். அப்படி உட்கார்ந்து இருக்க வே ண்டிய சூழல் என்றால் ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் எழுந்து கொஞ்சம் நடந்து கை கால் அசைப்பது நல்லது.

   சர்க்கரையில் உங்களை விட சீனியர் நான்!!!! இப்போது எனக்கும் உங்களின் நிலைதான். உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி ப்ளஸ் வீட்டு வேலைகள், உடற்பயிற்சி.

   இந்த உடற்பயிற்சிகள் சர்க்கரைக்காக மட்டுமில்லை மத்த பாகங்கள் மிக முக்கியமாச்சே நடக்கறதுக்கு கால்கள் வேண்டுமே. நாம் நேராக நிற்கலாம், நடக்கலாம் ஆனா முட்டி மடக்கும் போது வலி வரும் வாய்ப்பும் உண்டே. தசைநார் நல்லாருக்கணுமே, மூட்டுகள் எல்லாம் நல்லா இருக்கணுமே அதுக்குத்தான். கீழே உட்கார்வதே இப்போது கடினமாகி வரும் நிலை பலருக்கும் வருகிறதே.

   //அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டுவேலை பார்த்தால் உடல் நிலை மோசமாகும் ஆனால் இப்போது பார்க்கும் வேலையால் உடல் நலமாக இருக்கிறது//

   நல்ல சந்தோஷமான விஷயம் மதுரை. பாராட்டுகள்! வாழ்த்துகள்! உங்கள் உடல் நலம் எப்போதும் நல்லா இருக்கணும் நீங்களும் மகிழ்ச்சியா இருக்கணும்

   மிக்க நன்றி மதுரை

   கீதா

   நீக்கு
 3. விரிவான விளக்கம் சொன்ன விதம் அருமையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 4. அருமையான விளக்கங்களும்
  செய்முறைப் படங்களும்..

  பதிவு அருமையாக உள்ளது..

  பதிலளிநீக்கு
 5. முழங்காலில் வலி வந்த பிறகு இது மாதிரியான பயிற்சிகளைக் குறைத்துக் கொண்டிருக்கின்றேன்..

  சிலந்திப் பூச்சி கடித்த விஷத்தினால் கால் வீக்கம் இன்னும் குறைய வில்லை..

  இதெல்லாம் தற்போது சிரமம் தான்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை அண்ணா உங்கள் முழங்கால் வலிக்கு நல்ல பயிற்சிகள் இருக்கின்றன. என் உறவினர் வயதானவர் சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தும் பல பயிற்சிகள் செய்கிறார். நன்றாகிவிட்டது.

   ரொம்ப நாளாகிவிட்டது இல்லையா இன்னும் கால் வீக்கம் குறையாமல் போனதுக்குக் காரணம் என்ன, அண்ணா? அதற்கும் வேறு ஏதேனும் வழிகள் இருக்கான்னு கேட்டுப் பாருங்க துரை அண்ணா

   விரைவில் நலமாகிடும்

   மிக்க நன்றி துரை அண்ணா

   கீதா

   நீக்கு
 6. விரிவான விளக்கமான பதிவு அருமை கீதா.
  படங்களுடன் சொன்ன விதம் அருமை.
  பயனுள்ளது.

  //நேராக நிற்க வேண்டும். ஏதேனும் ஒரு காலில் அழுத்தம் கொடுத்து நின்னா கால் வலி, மூட்டு வலி இடுப்பு வலி எல்லாம் வரும்.//

  நாங்கள் உடற்பயிற்சிகள் சொல்லி தரும் போது முதலில் நேராக நிற்பதற்கு சொல்லி தருவோம்.


  //இப்படி நேராக நின்று மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளியிட்டு, (மூச்சை உள்ளே இழுக்கும் போது மேல் வயிறு விரிய வேண்டும். வெளியிடும் போது வயிறு நன்றாக உள்ளே சென்று காற்றிழந்த பலூன் போல ஒட்டி இருக்கணும்) நன்றாக ஆசுவாசப்படுத்திக் கொண்டு செய்யத் தொடங்கலாம். //

  மூச்சை கவனிக்க சொல்வோம். இது மிகவும் அவசியமான பயிற்சி. மூச்சை உள்ளே இழுக்கும் போது வயிறை உள்ளே இழுப்பார்கள் மூச்சை விடும் போது வயிறை விடுவார்கள். முதலில் அதை சரி செய்ய வேண்டும்.

  மாடி ஏறி இறங்குவது தொடைகளுக்கு , கால்களுக்கு , இடுப்புக்கு நலல பயிற்சி. கூடுமானவரை லிப்ட் உபயோக படுத்தாமல் இருக்கலாம்.

  அனைத்து பயிற்சிகளும் ஒன்றன் பின் ஒன்றாக சரியாக கொடுத்து இருக்கிறீர்கள்.நேரம் ஒதுக்கி செய்தால் நல்லது.
  தொடர்கிறேன் கீதா.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்கள் உடற்பயிற்சிகள் சொல்லி தரும் போது முதலில் நேராக நிற்பதற்கு சொல்லி தருவோம்.//

   ஆமாம் கோமதிக்கா அதேதான். எங்கள் யோகா வகுப்பிலும் நான் கற்பித்த போது அப்படித்தான்.

   //மூச்சை கவனிக்க சொல்வோம். இது மிகவும் அவசியமான பயிற்சி. மூச்சை உள்ளே இழுக்கும் போது வயிறை உள்ளே இழுப்பார்கள் மூச்சை விடும் போது வயிறை விடுவார்கள். முதலில் அதை சரி செய்ய வேண்டும்.//

   ஆமாம் கோமதிக்கா.....Conscious breathing , Diaphragmatic breathing முக்கிய்ம். நடைப்பயிற்சியின் போதும் கூட....இதையும் நடைப்பயிற்சி பற்றிச் சொல்லும் போது சொல்ல எழுதி வைத்திருக்கிறேன்.

   //மாடி ஏறி இறங்குவது தொடைகளுக்கு , கால்களுக்கு , இடுப்புக்கு நலல பயிற்சி. கூடுமானவரை லிப்ட் உபயோக படுத்தாமல் இருக்கலாம்.//

   ஆமா..அக்கா...இதையும் அடுத்த பகுதிகளுக்கு எழுதி வைத்திருக்கிறேன்.

   அனைத்து பயிற்சிகளும் ஒன்றன் பின் ஒன்றாக சரியாக கொடுத்து இருக்கிறீர்கள்.நேரம் ஒதுக்கி செய்தால் நல்லது.
   தொடர்கிறேன் கீதா.//

   //விரிவான விளக்கமான பதிவு அருமை கீதா.
   படங்களுடன் சொன்ன விதம் அருமை.
   பயனுள்ளது.//

   மிக்க நன்றி கோமதிக்கா

   கீதா   நீக்கு
 7. வணக்கம் சகோதரி

  உடற்பயிற்சி பதிவு அருமையாக உள்ளது. நல்ல விபரமாக எல்லோரும் சுலபமாக புரிந்து கொள்ளுமளவுக்கு சொல்லியிருக்கிறீர்கள். கண்டிப்பாக இந்த பயிற்சியை பார்த்து செய்கிறேன். முன்பு இது போல் செய்து கொண்டிருந்தேன். நடுவில் தான் உடல்/ மன அசௌகரியங்களில் எல்லா வற்றையும் விட்டாச்சு. ஆனால் வீட்டிலேயே நான் எப்போதும் நடந்து கொண்டேதான் இருப்பேன். இப்படி அதிக நேரங்கள், நடந்தும், நின்றுந்தான் என் வேலைகள் தொடரும். இந்த வயதிலும் மதியம் கொஞ்சம் கூட இடுப்பை சாய்த்து படுப்பதேயில்லையென எங்கள் குழந்தைகள் சமயங்களில் குறை சொல்லுவார்கள். ஆனால் நான் என்றுமே மதியம் படுத்து உறங்கினதில்லை. என்றாவது உடல் தன் அசதியை உணரும் போது அதிசயமாக அது நடக்கும். அப்படியும் இந்த சுகர் பி. பி என எப்படியோ வந்து தொந்தரவு செய்கிறது.

  நீங்கள் மிக அக்கறை கொண்டு பயிற்சி விபரங்களை நன்றாகவும், தெளிவாகவும் சொல்லியிருக்கிறீர்கள் பின்பற்றுகிறேன் . பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடற்பயிற்சி பதிவு அருமையாக உள்ளது. நல்ல விபரமாக எல்லோரும் சுலபமாக புரிந்து கொள்ளுமளவுக்கு சொல்லியிருக்கிறீர்கள். கண்டிப்பாக இந்த பயிற்சியை பார்த்து செய்கிறேன். //

   மிக்க நன்றி கமலாக்கா. செய்து பாருங்க.

   ஆமாம் நீங்க சொல்லிருக்கீங்க முன்பு செய்து கொண்டிருந்தீங்கன்னு. மீண்டும் தொடருங்க கமலாக்கா.

   //ஆனால் வீட்டிலேயே நான் எப்போதும் நடந்து கொண்டேதான் இருப்பேன். இப்படி அதிக நேரங்கள், நடந்தும், நின்றுந்தான் என் வேலைகள் தொடரும். இந்த வயதிலும் மதியம் கொஞ்சம் கூட இடுப்பை சாய்த்து படுப்பதேயில்லையென எங்கள் குழந்தைகள் சமயங்களில் குறை சொல்லுவார்கள். ஆனால் நான் என்றுமே மதியம் படுத்து உறங்கினதில்லை.//

   சூப்பர் கமலாக்கா. நானும் மதியம் உறங்குவதில்லை. ஏதாவது செய்து கொண்டிருப்பது வழக்கம் வேலைகளும் சரியா இருக்கு.

   // என்றாவது உடல் தன் அசதியை உணரும் போது அதிசயமாக அது நடக்கும். //

   ஆமாம் அதேதான் இங்கும்.

   //அப்படியும் இந்த சுகர் பி. பி என எப்படியோ வந்து தொந்தரவு செய்கிறது.//

   அக்கா இதுக்கு சில வழிகள் இருக்கு கமலாக்கா. அவற்றையும் கொஞ்சம் கவனிச்சுட்டோம்னா அடங்கிப் போய்டுவாங்க ரெண்டு பேரும்!!!! ஹாஹாஹாஹா

   மிக்க நன்றி கமலாக்கா

   கீதா

   நீக்கு
 8. ஒரு முழங்காலில் வலி என்பதை அதிகம் கண்டு கொள்ளாமல் இருந்தால் நம்மை அறியாமல் நாம் ஒரு காலில் அதிக அழுத்தம் தந்து பழகுவோம் என்று எங்கள் பிசியோதெரபிஸ்ட் சொன்னார்தான்.  அதற்குதான் கணுக்காலில் ஒரு கிலோ வெயிட் கட்டி காலை உயர்த்த சொன்னார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு முழங்காலில் வலி என்பதை அதிகம் கண்டு கொள்ளாமல் இருந்தால் நம்மை அறியாமல் நாம் ஒரு காலில் அதிக அழுத்தம் தந்து பழகுவோம் என்று எங்கள் பிசியோதெரபிஸ்ட் சொன்னார்தான். //

   அதே அதே....ஸ்ரீராம். ஆதான் வெயிட் கட்டி தூக்க சொல்வது. இங்க அப்பாக்கும் செஞ்சாங்க. இந்த ட்ராக்ஷன்.

   உங்களுக்கு முன்ன நின்று கொண்டே செய்யும் வேலையாச்சே....

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 9. அப்படி பின்னால் வளைந்தால் எனக்கு முதுகு பிடித்துக்கொண்டு விடுகிறது!!  ரொம்ப பின்னால் வளையாமல் இந்தப் பயிற்சியை தினம் செய்கிறேன்.  தினசரி முப்பது மட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதுகு பிடிக்காம இருக்க ஏதாச்சும் வழி இருக்கான்னு ஃபிசியோதெராப்பிஸ்ட் கிட்ட கேளுங்க ஸ்ரீராம்.

   //ரொம்ப பின்னால் வளையாமல் இந்தப் பயிற்சியை தினம் செய்கிறேன். தினசரி முப்பது மட்டும்!/

   இது போதுமே ஸ்ரீராம்....முப்பது!! சூப்பர்....சந்தோஷமா இருக்கு ஸ்ரீராம்...

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 10. இரண்டு கைகளையும் கீழே இறக்காமல் நீட்டி இரண்டு கால்களையும் முன்னே உயரத்தூக்கி கைகளில் தொடைகள் படுமாறு செய்கிறேன்.  காலால் உள்ளங்கையைத்தொட்டு நிற்பது இல்லை.  உயர்த்தி கைகளில் கால் பாதம் படுமாறு தொட்ட உடனேயே இறக்கி என்று இரண்டு பாதங்களும் தலா 15 செய்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் சூப்பர்...அப்படிப் போடுங்க!!....நல்லாதானே செய்யறீங்க. அப்புறம் எதுக்கு சோம்பல் அப்படி இப்படினு போன பதிவுக்குக் கருத்து.... அதுவும் பாதம் தொட்டு உடனே இறக்கத்தானே வேண்டும்.....நல்ல பயிற்சி செய்யறீங்க ஸ்ரீராம். ஹையோ...சூப்பர்! தொடர்ந்து செய்யுங்க!!

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 11. ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அருமையான தொடர்.... வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 12. இவற்றைப் படிச்சுட்டேன். யோகாசனம் புத்தகம் கூட வெளியிட்டிருக்கேன். இப்போது ஐந்து வருடங்களுக்கும் மேலாக இவற்றில் எதையும் என்னால் செய்ய முடியறதில்லை. உடலும் ரொம்பவே விறைப்பாக ஆகிவிட்டது. :(

  பதிலளிநீக்கு