சனி, 22 ஜனவரி, 2022

திருநெல்வேலி - நாகர்கோவில் - (ஆரல்வாய்மொழிப் பகுதி) - 4

பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 9

திருநெல்வேலி - நாகர்கோவில் - 1

திருநெல்வேலி - நாகர்கோவில் - 2

திருநெல்வேலி - நாகர்கோவில் - 3

காவல்கிணறை அடுத்து மிக அருகில் உள்ள முப்பந்தல் எனும் சிறு கிராமத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்ட எல்லை தொடங்குகிறது. இக்கிராமம் ஆரல்வாய்மொழி பகுதியில்தான் இருக்கிறது. 

நன்றி இணையம். இதோ இந்த வரைபடத்தில் மஹேந்திரகிரி மலைப்பகுதி  ஆரால்வாய்மொழி எல்லாம் தெரிந்து கொள்ளலாம்

சேர சோழ பாண்டிய மன்னர்களை அழைத்து ஓளவையார் இங்கு ஒரு திருமணத்தை நடத்தியதாக வரலாறு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்போது மூவேந்தர்களும் பந்தல் அமைத்து தங்கியதால் முப்பந்தல் எனப் பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. (எனது தமிழ் ஆசிரியை சொல்லிக் கொடுத்தது ப்ளஸ் விக்கியிலும் அப்படித்தான் இருக்கிறது)

முப்பந்தல் இசைக்கியம்மன் கோயில் மிகவும் புகழ்பெற்ற கோயில். இக்கோயில் நெடுஞ்சாலையிலேயே உள்ளது. கோயில் அருகிலேயே பேருந்து நிறுத்தம். 

ஔவையாரின் உருவச் சிலைகள் இரண்டு இருக்கிறது என்று தோழி ஒருவர் சொன்னார். எனக்குப் பார்த்ததாக நினைவு இல்லை. இங்குதான் ஔவையார் மரணம் அடைந்ததாகச் சொல்லப்படுவதாகவும் அத்தோழி சொன்னார்.

பேருந்துவழித் தடத்தில் பழைய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்திலேயே உள்ள இந்தக் கோயிலை ரயிலில் சென்ற போது கொஞ்சம் தூரத்தில் தெரியும் என்றாலும் டக்கென்று அடையாளம்  காண முடியவில்லை. மாற்றங்கள் இருந்ததால். அதனால் படம் எடுக்காமல் விட்டுவிட்டேன். 

இங்கு வீசும் காற்றில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகம் நடைபெறுகிறது.

ஆரல்வாய்மொழி பஞ்சாயத்தில் உள்ல முப்பந்தல் இசைக்கியம்மன் கோயிலினால் இப்பகுதி புகழ்பெற்றது என்றால்  இப்போது காற்றாலைப் பண்ணையால் மிகவும் புகழ்பெற்றுள்ளது. ஒரு காலத்தில் ரொம்பவும் பிற்பட்டு இருந்த இக்கிராமம் இப்போது இந்தக் காற்றாலைப் பண்ணையால் மின்சாரம் பெறுகிறது. வேலைவாய்ப்புகளும் பெற்றிருக்கிறதாகத் தெரிகிறது. நல்ல விஷயம்.

இது செயல்பாட்டில் உள்ள காற்றாலைப் பண்ணை. இந்தியாவில் 2வது பெரிய பண்ணை. தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜன்ஸி) உருவாக்கி நிறுவுகிறது. இந்தியாவின் பிற காற்றாலைப் பண்ணைகளின் முன்னோடியாகவும் திகழ்கிறது. உலகில் செயல்பாட்டில் உள்ள காற்றாலைப் பண்ணைகளில் 3 வது இடத்தைப் பெற்றிருக்கிறது. 

காற்றாலைப் பண்ணையைப் பார்க்கலாம். ஒரு சேர எண்ணற்றக் காற்றாலைகளையும் அவை சுற்றுவதையும் பார்க்க மிக அழகாக இருக்கும்.

மேலே உள்ள இரு படமும் ஒரு புறமுள்ள மலைகள். மறுபுறம் உள்ள மலைகள் கீழே. வண்டியின் முன்புறம் அல்லது கடைசியில் பயணம் செய்தால் இரு புறமும் மலைகளும் இடையில் பாதையுமாகப் படம் எடுக்கலாம். அதுக்குத்தான் இதோ கீழே ஆரல்வாய்மொழி கணவாய் வரைபடம் கொடுத்திருக்கிறேன்

வரைபடத்தில் நீலக்கலர் மார்க்கிங்க் இருக்கு இல்லையா, அதுதான் கணவாய். அருகில் இருக்கும் மற்ற மலைகளின் பெயர்களும், ஊர்களின் பெயர்களும் இருக்கின்றன பாருங்கள். நன்றி - திரு ராஜ் பகத் 

முப்பந்தலில் இருந்து அடுத்த 3, 4 நிமிடத்தில் ஆரல்வாய்மொழி ஊர் என்றாலும் அதன் முன்னரேயே ஒரு பக்க ஆரல்வாய்மொழி கணவாய் மலைகள் தொடங்கிவிடும். இது சிறிய கணவாய் தான். (இதை விடக் கொஞ்சம் பெரிய கணவாய் ஆரியங்காவுக் கணவாய் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் செங்கோட்டையிலிருந்து கொல்லம் செல்லும் வழியில் கணவாயைக் கடந்துதான் செல்ல வேண்டும். கண்கொள்ளாக்காட்சி. இந்த வழியாகவும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு.)

ஆங்கிலேயே ஆட்சியில் ஆரம்போலி/ பாஸ் என்று அழைக்கப்பட்ட ஆரல்வாய்மொழி/கணவாய் மிகவும் முக்கியமான பகுதி. பண்டு திருவிதாங்கூரையும் மெட்ராஸ் பிரெசிடென்சியையும் இணைக்கும் பகுதி. சேர ஆட்சியின் மீது நடந்த படையெடுப்புகள் எல்லாம் இக்கணவாய் வழியாகத்தான்.

ஆரல் என்றால் கோட்டை. படையெடுப்புகளைத் தடுக்க வேனாடு(கேரளப்பகுதி) ஆட்சியாளர்களால் கட்டப்பட்டு பின்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தினால் பராமரிக்கப்பட்ட கோட்டை என்பதாலும் காற்று (ஆரல்) அதிகம் (ஆசியாவிலேயே என்றும் சொல்லப்படுகிறது) வீசும் பகுதி அதாவது காற்றின் மொழி!!! என்பதாலும் இப்பெயர் என்று சொல்லப்படும். அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு மிக முக்கியக் கோட்டை. வேறு வரலாறும் உண்டு எப்படி ஆங்கிலேயர் கைப்பற்றினர் என்று.

அக்கோட்டையின் எச்சங்கள் உண்டு. ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் பின்னே. ஆனால் ரயில் நிற்காததால் ஃபோட்டோ எடுக்க முடியவில்லை. ஆனால் பார்த்தால் கோட்டையின் பகுதியா என்று வியக்கும் அளவிற்கு மோசமாக இருக்கும். ரயில்வேயும் அதை கண்டு கொள்ளவில்லை. தொல்லியல் துறையும் கண்டு கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம். கன்னியாகுமரி கண்டு கொள்ளப்படாத மாவட்டம் என்பது பல வகைகளில் புலனாகிறது.

பதிவில் கொடுக்காத, மற்றும் கொடுத்த படங்களின் தொகுப்பு சிறிய காணொளியாக. இங்கு பார்க்க முடியவில்லை என்றால் யுட்யூபிற்குச் சென்றும் பார்க்கலாம் சுட்டி இதோ.

https://youtu.be/PaPWIgud0Oo

கணவாய்/மலைகளுக்கு இடையில் உள்ள பாதையில் குதிரையில் சென்றால் எப்படி இருக்கும் என்று தோன்றியதில் இந்த இசைதான் கொஞ்சம் கிட்டத்தட்ட இருந்ததால் அதை இணைத்துள்ளேன் 

 
ஆரல்வாய்மொழி கணவாய் மலைகளும் (ஒரு பக்கமுள்ள மலைகள்தான்) காற்றாலைப் பண்ணையும்

இப்போது ஆரல்வாய்மொழி மலைகளைப் பார்த்துக் கொண்டிருங்கள். அதற்கு அப்புறம் நாகர்கோவில் ஸ்டேஷன் வரை உள்ள பகுதிகள் அடுத்த பதிவில். 


----கீதா

 

29 கருத்துகள்:

 1. அழகான படங்கள்.. பச்ச பசேல்ன்னு உள்ள இயற்கை படங்களை பார்ப்பதில் மனதிற்கு ஒரு சந்தோஷம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் மதுரை. ரொம்பவே சந்தோஷம் தரும் விஷயங்கள்.

   மிக்க நன்றி மதுரை

   கீதா

   நீக்கு
 2. மிகச் சிறப்பான படங்கள். அதைவிடச் சிறப்பான விவரங்கள்.
  இந்தக் காற்றாலைகளை மதுரையிலிருந்து திரு நெல்வேலி செல்லும் வரைப்
  பார்த்துப் பார்த்து வியந்தோம்.
  அன்பின் கீதாமா, உங்களுக்குள்ளே ஒரு புவி இயல் மற்றும் சரித்திர ஆசிரியர்
  ஒளிந்திருக்கிறார்.
  ஆரல்வாய்க் கணவாய் பற்றிய செய்திகளும்
  யூடியூப் காட்சிகளும் மெய் சிலிர்க்க வைக்கின்றன.
  இந்த இடங்கள் முழுவதும்
  வாயு குமாரன் இடமோ !என்றே தோன்றுகிறது.
  அபூர்வமான பயணச் செய்திகளும்
  வரைபடங்களும்.

  மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன்.
  நன்றி மா. உங்கள் உற்சாகம் மேலும் மேலும்
  வளரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அம்மா காற்றாலைகள் பார்க்க பிரமிப்பாக இருக்கும்.

   //அன்பின் கீதாமா, உங்களுக்குள்ளே ஒரு புவி இயல் மற்றும் சரித்திர ஆசிரியர்
   ஒளிந்திருக்கிறார்.//

   ஹாஹாஹா அம்மா எனக்கு வரலாறை விட புவியியல் பிடித்த விஷயம். ஏனென்றால் இயற்கை சார்ந்த விஷயம்...பிடித்த விஷயங்கள் நிறைய ஆனால் நான் எதிலும் உருப்படி இல்லை. உருப்படியாகச் செய்யும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. அப்படியே ஓடியாகிவிட்டது!!

   ஆரல்வாய் மொழி தகவல்கள் எல்லாமே நான் படித்த காலத்தில் கேட்டதும், நெட்டில் பார்த்ததும் வைத்துதான். அதெல்லாம் சரியா என்பதும் தெரியாது அம்மா

   இந்த இடங்கள் முழுவதும்
   வாயு குமாரன் இடமோ !என்றே தோன்றுகிறது.//

   ஹாஹாஹா ஆமாம் காற்று வீசும் பகுதிதான்.

   உங்கள் உற்சாகம் மேலும் மேலும்
   வளரட்டும்.//

   மிக்க நன்றி அம்மா கருத்திற்கும்

   கீதா

   நீக்கு
 3. விரிவான விளக்கம் காணொளியும், புகைப்பட காணொளியும் அருமை.

  பதிலளிநீக்கு
 4. படங்கள் அழகாக உள்ளன. ஆனாலும் தொகுப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆரல்வாயமொழி மூவேந்தர், திருவிதாங்கூர் என்று பல நாட்டார் கதைகள் உள்ளன. எது உண்மை எது கட்டுக்கதை என்பது யாருக்கும் புரியாது. தமிழ்நாடு உருவாகியபோது கன்னியாகுமரி மாவட்டம் முன்னேறிய மாவட்டம் ஆக இருந்தது. ஆனால் அதற்கு பின் கவனிப்பார் இன்றி நலிந்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனாலும் தொகுப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம்.//

   ஹைஃபைவ்! ஜெ கே அண்ணா. உண்மையாகவே எனக்கு இப்பதிவு மனதில் அத்தனை திருப்தி தரவில்லை. ஏதோ ஒரு குறை இருப்பதாகவே தோன்றிக் கொண்டு இருந்தது. ஆனால் அதைச் சரி செய்ய நினைத்தால் தொடர் அப்படியே நின்றுவிடும் அபாயம்!! ஹாஹாஹா...(அப்படித்தான் பல பதிவுகள் , கதைகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன!!!!)
   சரியா சொல்லிட்டீங்க..

   ஆமாம் வரலாற்றுக் கதைகள் எதுவும் எது சரி, எது கட்டுக்கதை என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியாது. அதனால்தான் நான் படித்த காலத்தில் என் பெரிய மாமா வழி - அவர் ஆசிரியர் - தெரிந்து கொண்டது இன்னும் உண்டு என்றாலும் கூட எழுதவில்லை.

   //தமிழ்நாடு உருவாகியபோது கன்னியாகுமரி மாவட்டம் முன்னேறிய மாவட்டம் ஆக இருந்தது. ஆனால் அதற்கு பின் கவனிப்பார் இன்றி நலிந்து விட்டது.//

   ஆமாம். என் மாமா இதை அடிக்கடி சொல்லுவார்.

   மிக்க நன்றி ஜெகே அண்ணா

   கீதா

   நீக்கு
  2. ஜெகே அண்ணா அது கவனக் குறைவு என்பது இப்போது மீண்டும் வாசித்ததும் தெரிந்தது. ரெப்பட்டிஷன் மற்றும் சில வரிகள் கோர்வையாக இல்லாமல் மாறுபாடு. அது நான் மனதில் எழுத நினைக்கும் பாயின்ட் வந்ததும் இந்தத் தொடர் இருக்கும் வேர்டில் போட்டு வைத்துவிடுவேன். அது பாட்டிற்குத் தூங்கிக் கொண்டு இருக்கும்!!! பின்னர் பதிவு வெளியிட நினைத்து கருத்துகளை காப்பி பேஸ்ட் பண்ணி கோர்வையாகச் செய்யும் போது கவனம் குறைவில் ஆகிவிடுகிறது. இப்போது கொஞ்சம் சரி செய்திருக்கிறேன்.

   மிக்க நன்றி

   கீதா

   நீக்கு
 5. படங்கள் அழகு. பச்சைப்பசேல் என்ற நெல்லைப்பகுதி. காற்றாலைகள்லாம் பார்த்திருக்கிறேன். இதை வைத்து திருட்டும் நடக்கும் (அடாவடியாக திருடர்கள் புகுந்து எதையாவது கழற்றிக்கொண்டு போய் நஷ்டம் ஏற்படுத்துவார்கள் இல்லை ப்ளாக்மெயில் பண்ணுவார்கள் என்று படித்திருக்கிறேன்)

  பேசாம நீங்க நெல்லையிலிருந்து நடந்து அல்லது பாசஞ்சரில் போயிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை வைத்து திருட்டும் நடக்கும் (அடாவடியாக திருடர்கள் புகுந்து எதையாவது கழற்றிக்கொண்டு போய் நஷ்டம் ஏற்படுத்துவார்கள் இல்லை ப்ளாக்மெயில் பண்ணுவார்கள் என்று படித்திருக்கிறேன்)//

   ஓஹோ....புதிய விஷயம் எனக்கு.

   பேசாம நீங்க நெல்லையிலிருந்து நடந்து அல்லது பாசஞ்சரில் போயிருக்கலாம்.//

   ஹாஹாஹாஹாஹா...ஆனால் உண்மை நெல்லை எனக்கு இப்பகுதியில் தங்கி இன்னும் சில இடங்கள் பார்க்கும் ஆசை இருந்தது குறிப்பாகக் கடம்போடுவாழ்வில் 4 நாட்கள் தங்கியிருந்தும் முடியவில்லை.

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
 6. முப்பந்தல் பெயர்க்க காரணம் சுவாரஸ்யம்.  அவ்வையார் நடத்திய திருமணம் பாரி வேந்தன் மகள் திருமணமாயிருக்கக் கூடும்.  அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அந்த அரச நண்பர் மரணம் அடைந்ததும் அவர் மகளை வளர்த்து திருமணம் செய்தாய்ப் படித்த நினைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வையார் நடத்திய திருமணம் பாரி வேந்தன் மகள் திருமணமாயிருக்கக் கூடும். அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அந்த அரச நண்பர் மரணம் அடைந்ததும் அவர் மகளை வளர்த்து திருமணம் செய்தாய்ப் படித்த நினைவு.//

   அட! இந்த வரலாறு தெரியும் தமிழ் வகுப்பில் கற்றது. என்றாலும் அந்தத் திருமணம் தான் இதுவாக இருக்குமோ?!! இது ஸ்ட்ரைக் ஆகவில்லை எழுதும் போது..இப்போது ரொம்பக் கவனம் சிதறுகிறது

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 7. ஆரல்வாயமொழி பெயர் விளக்கம் சுவாரஸ்யம்.  ஆரியங்காவு என்றதும் அய்யப்பன் நினைவுக்கு வருகிறார்.  தொல்லியல் துறை பல விஷயங்களில் மோசமாகத்தான் இயங்குகிறது.  நமது வரலாற்றை நாம் பாதுகாப்பதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஆரியங்காவு என்றால் ஐயப்பன் நினைவுக்கு வருவார். அந்த வரியும் சொல்ல விட்டுப் போச்சு!

   தொல்லியல் துறை பல விஷயங்களில் மோசமாகத்தான் இயங்குகிறது. நமது வரலாற்றை நாம் பாதுகாப்பதில்லை.//

   அதே.

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 8. //கணவாய்/மலைகளுக்கு இடையில் உள்ள பாதையில் குதிரையில் சென்றால் எப்படி இருக்கும்/

  நல்ல கற்பனை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹா ஸ்ரீராம் அந்தக் கற்பனைதானே என் மறதிக்கு அடிப்படைக் காரணமே!!!! அதுவும் கூடவே பழைய படங்கள் நினைவுக்கு வந்தது...கூடவே பாட்ட்டுப் பாடவா பாடம் கேட்கவா பாடலும்!!!

   குதிரையின் குளம்புச் சத்தம் அது அதில்தானே வரும் இல்லையா...

   நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 9. பசுமையைக் காட்டும் படங்கள் அருமை.  காணொளிகளும் இடத்தின் அழகைச் செப்புகின்றன!  தேடிப்பிடித்து தந்திருக்கும் விவரங்களுக்கு ஒரு சபாஷ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஸ்ரீராம்...சில விவரங்கள் பள்ளி கல்லூரி படித்த போது அறிந்தது. அப்புறம் இப்பதான் இணையம் இருக்கிறதே அதனால் தேடிய போது இப்படி அழகான வரைபடங்கள் கிடைத்தது உடனே சேர்த்துக் கொண்டேன்

   கீதா

   நீக்கு
 10. பதில்கள்
  1. ஆமாம் அழகான பிரதேசம் டிடி

   மிக்க நன்றி கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 11. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. இன்றைய பதிவிலும், படங்களும், செய்திகளும் அவ்வளவு தெளிவாகவும், அழகாகவும் தந்திருக்கிறீர்கள். முதலிரண்டு கோபுர மலை படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது. உண்மையிலேயே அந்த இடங்களை விட்டு நகரவே மனம் வராது. முப்பந்தலில் மும்மன்னர்களின் கதையை தெரிந்து கொண்டேன். நம் ஔவை பாட்டியை பற்றிய செய்திகளும் அறிந்து கொண்டேன்.

  ஆரல்வாய்மலையின் அழகுகள், அந்தப்பகுதியில் விபரங்கள் அனைத்துமே எனக்கு புதிது. கற்று கொண்டேன். நல்ல விளக்கமாக கூறியுள்ளீர்கள். நல்ல கதைகளுடன் விவரமான செய்திகளுடன் நீங்கள் ரயிலில் பச்சை பசேல் என்ற இடங்களையும், அழகான மலைகளையும் காண்பித்தவாறு அழைத்துச் செல்லும் போது மனதிற்கு எவ்வளவு இதமாக உள்ளது தெரியுமா? நன்றி சகோதரி.

  காற்றாலை படங்களும், காணொளிகளும் நன்றாக உள்ளது. குதிரையில் ஏறி பயணம் செய்தபடி, இயற்கையையும் கண்குளிர கண்டபடி.. ஆகா..உங்கள் கற்பனை குதிரையின் கைவண்ணத்தில் கலந்த காணொளி பதிவு ஏற்பாடுகளில் மூலமாக ஒரு குதிரையில் சவாரி செய்தபடி கண்ணுக்கினிய பசுமையை காணும் திருப்தி எனக்கும் கிடைத்தது. நானும் இதுவரை குதிரையேற்றம் சென்றதில்லை. இந்த பயணத்தை ரொம்பவே ரசித்து அனுபவித்தேன்.

  இனிமையான இந்தப் பயணத்தோடு தொடர்ந்து வருகிறேன் சகோதரி. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமலாக்கா விவரங்கள் எல்லாம் நான் அந்தப் பகுதியில் இருந்ததால் கொஞ்சம் தெரியும். அங்கிருந்து இடம் பெயர்ந்த பின்னான மீதி இணையத்தில் சில பார்த்துக் கொண்டேன். ஊரிலும் தெரிந்துகொண்டேன். லேட்டஸ்ட் சில இதில் சொல்ல விட்டுப் போனவை அடுத்த பகுதியில் சொல்லவேண்டும் என்று நினைத்துள்ளேன் பார்ப்போம்.

   // ஆகா..உங்கள் கற்பனை குதிரையின் கைவண்ணத்தில் கலந்த காணொளி பதிவு ஏற்பாடுகளில் மூலமாக ஒரு குதிரையில் சவாரி செய்தபடி கண்ணுக்கினிய பசுமையை காணும் திருப்தி எனக்கும் கிடைத்தது.//

   ஹாஹாஹா வாங்க என்னோடு குதிரை சவாரில.

   தொடர்ந்து பயணிப்பதற்கு மிக்க நன்றி கமலாக்கா

   கீதா

   நீக்கு
 12. படங்கள் காணொளிகள் தகவல்கள் என அனைத்துமே சிறப்பு. பார்க்கப் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. ஆரல்வாய்மொழி பகுதியிலிருந்து ஒருவர் எங்கள் அலுவலகத்தில் இருந்தார். ஒன்றிரண்டு வருடங்களில் வேலையை விட்டு சென்று விட்டார். இங்கே இருந்த சமயத்தில் தங்கள் ஊர் குறித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டது இன்னமும் பசுமையாய் நினைவில்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்க்கப் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது.//

   ஆமாம் வெங்கட்ஜி. மனதிற்கு இதமாகவும் இருக்கும். ரொம்பவே ரிலாக்சேஷன். ஊரில் இருந்தவரை எவ்வளவோ தடவை பார்த்திருக்கிறேன் ஆனால் அப்போதெல்லாம் காமேரா இல்லாததால் படம், காணொளி எதுவும் எடுக்க முடியாதே. இப்போது இருக்கும் போது எடுத்து வைத்துக் கொண்டு அப்புறம் இதை எல்லாம் பார்க்கும் போது மனம் ஒரு புத்துணர்ச்சி பெறும் இல்லையா அதான்.

   அட! உங்கள் அலுவகத்தில் இப்பகுதியிலிருந்து ஒருவர் இருந்தாரா!

   மிக்க நன்றி வெங்கட்ஜி, ரசித்தமைக்கு

   கீதா

   நீக்கு
 13. படங்களும், காணொளியும் மிக அருமையாக இருக்கிறது கீதா.
  பசுமை மிக நன்றாக இருக்கிறது.
  ஆரல்வாய்மொழியில் அம்மாவின் உறவினர் இருந்தார்கள்.
  மீண்டும் இந்த இடங்களுக்கு பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

  நானும் காற்றலையை படங்கள் எடுத்து வைத்து இருக்கிறேன்.
  காணொளி குதிரையில் போகும் பின்னனி இசையும் அருமை.
  ரயில் சத்தம் கேட்க்கும் மிக அருமை. ரயிலில் பயணித்துக் கொண்டே பார்ப்பது போலவே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கோமதிக்கா.

   ஆரல்வாய்மொழியில் அம்மாவின் உறவினர் இருந்தார்கள்.//

   அட! நீங்க சொல்லியிருக்கீங்களே உங்கள் அம்மா திருவனந்தப்புரத்தில் இருந்தார்கள் என்று. அப்போ நாகர்கொவில் பகுதிகளில் உறவினர்கள் இருந்திருப்பாங்க இல்லையா...

   நீங்களும் காற்றலையை எடுத்த் படங்களைப் போடுங்கள் அக்கா

   //ரயில் சத்தம் கேட்க்கும் மிக அருமை. ரயிலில் பயணித்துக் கொண்டே பார்ப்பது போலவே இருக்கிறது.//

   மிக்க நன்றி கோமதிக்கா..

   கீதா

   நீக்கு