செவ்வாய், 5 ஜனவரி, 2016

வட்லமுடி பயணம் 1 - பிரகாசம் பேரஜ்-பவானி தீவு-கனகதுர்கா கோயில்-அமராவதி புத்தர் அருங்காட்சியகம்,ஸ்தூபி-ஊண்டவல்லி குகைகள்

Water stored in a quarrying pit near Vadlamudi village resembles a water tank now frequented by a number of domestic fowls. — PHOTO: T. Vijaya Kumar
இந்தக் குளம் க்வாரியில் நீர்த்தேக்க்கியிருக்கின்றார்கள். பறவைகள் நிறைய வருகின்றன. மொபைலில் எடுக்க முடியவில்லை. நன்றி த ஹிந்து -ஆங்கிலம்

சமீபத்தில், ஆந்திராவில், குண்டூருக்கும், தெனாலிக்கும் இடையிலிருக்கும் ஒரு கிராமமான வட்லமுடிக்குச் சென்ற பயணத்தைப் பற்றிய பதிவுகளின் தொடர். இருந்த 4 நாட்களில் இரு நாட்களில் பார்த்தவைதான் தலைப்பில் இருக்கும் இடங்கள். பயணம் பற்றிய பதிவுகளைப் பிரித்ததில், புத்த அருங்காட்சியகம் மட்டுமே 3 அல்லது 4 பதிவுகளாக வரலாம். எனது புகைப்படக் கருவி பழுதாகிவிட்டதால், அலைபேசியில் (எனது அலைபேசி அல்ல) எடுக்கப்பட்டப் படங்கள் அத்தனைச் சிறப்பாக வராததால் இந்தப் பயணத்தைப் பற்றி எழுதத் தயக்கம் இருந்தாலும் ஓரளவிற்கு வந்த படங்களைக் கொண்டு, தகவல்களேனும் தரலாமே என்ற எண்ணமே.

வட்லமுடிக்குச் செல்லும் முன் அருகில் இருக்கும் இடங்கள் என்னென்ன இருக்கின்றன என்பதைக் குறித்துக் கொண்டுதான் சென்றேன். மகன் இல்லாமல் மேற்கொண்ட முதல் பயணம்! சென்னையிலிருந்து குண்டூருக்கும், தெனாலிக்கும் ரயில்கள் இருக்கின்றன. சென்னையிலிருந்து குண்டூருக்குப் பேருந்துகளும் இருக்கின்றன. இரண்டுமே 6 ½ மணி நேரப் பயணம். தெனாலியில் ரயில் நிலையத்திலிருந்து 1 ½ கிமீ தூரத்தில். குண்டூரில் ரயில் நிலையத்திலிருந்து (நியூ குண்டூர் ரயில் நிலையம்) என் டி ஆர் பேருந்து நிலையம் 1.5 கிமீ தூரம். இங்கு பழைய பேருந்து நிலையம், பல்நாடு பேருந்து நிலையம் என்றும் இருக்கின்றன. எல்லாம் அருகருகில்தான்.   
                                                             
இந்தப் பதிவில் ஒரு சிறு அறிமுகம் வட்லமுடி பற்றியும், அதன் அருகில் இருக்கும் குண்டூர், தெனாலி பற்றியும். வட்லமுடியின் மேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் குண்டூரும், கிழக்கே தெனாலி 13 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. நிறைய பேருந்து வசதிகள் குண்டூருக்கும் தெனாலிக்குமிடையே வட்லமுடி வழியாக இருக்கின்றன. ஒரு இடத்திலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்லும் பேருந்துகளில் வழியில் எங்கும் நிற்காமல் செல்லும் பேருந்துகள், நின்று செல்லும் சாதாரணப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள் என்று வகைகள் இருக்கின்றன.

குண்டூரும், விஜயவாடாவும் பெரிய நகரங்கள், பெரிய பேருந்து நிலையங்கள் ப்ளாட்ஃபார்ம் எண்களுடன், சாதாரணப் பேருந்துகள் வந்து நிற்கும் ப்ளாட்ஃபார்ம், விரைவு வண்டிகள் வரும் ப்ளாட்ஃபார்ம், நான் ஸ்டாப் பேருந்துகள் வரும் ப்ளாட்ஃபார்ம் என்றும் ஒவ்வொரு ப்ளாட்ஃபார்ம் மேற்புறத்திலும், ஊர் பெயருடன், விவரங்களுடன் பெட்டிகள் தொங்குகின்றன. குண்டூரில் மட்டும் இந்த விவரங்கள் ஆங்கிலத்திலும் உள்ளன. தெனாலியிலும் சரி, விஜயவாடாவிலும் சரி தெலுங்கில் மட்டுமே.


இந்த இரு பேருந்து நிலையங்களிலும் பல தகவல் மையங்கள் இருக்கின்றன. விரைவு வண்டிக்கும், நான்ஸ்டாப் வண்டிக்கும் பயணச் சீட்டு வாங்கும் மையங்கள், ஊர்கள் வாரியாக இருக்கின்றன.  அங்கு பயணச் சீட்டு வாங்கிக் கொண்டு, அதில் கொடுக்கப்படும் பேருந்து எண்ணைப் பார்த்து அந்தப் பேருந்தில் ஏற வேண்டும். இந்த வகைப் பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் இல்லை. இந்த மையங்கள் ஒவ்வொரு ஊரிற்கும் என்று தனியாக இருக்கின்றன. பெரிய வரிசை என்றெல்லாம் இல்லை. எளிதாக வாங்க முடிகின்றது. பயணிகள் இருக்கைகள் நிறைய இருக்கின்றன. துப்புரவுப் பணியாளர்கள் துப்புரவு செய்து கொண்டே இருப்பதால் சுத்தமாக இருக்கின்றன. ஆங்காங்கே தகவல்கள் எழுதப்பட்டிருப்பது எளிதாக இருக்கின்றது. குண்டூர் பேருந்து நிலையத்தைச் சுற்றிக் கடைவீதிகள்தான். மிகவும் அதிகமான கூட்டம் சாலையில்.
தெனாலி பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்தால் கடைவீதிகளின் நடுவில் இந்த அசோக ஸ்தூபி. 

கடைவீதி

குண்டூர் பெரிய நகரம் (குண்டூர் மாவட்டத்தின் தலைநகரமும் கூட). தெனாலி சிறிய நகரம். பேருந்து நிலையம் சற்றுச் சிறியது. இங்கும் மேற் சொன்னது போலத்தான். பேருந்து நிலையத்திலிருந்தும் வெளியில் வந்தால் கடைவீதிகள்தான். சென்னை பாரிஸ் கார்னர் பகுதி போல அத்தனைப் பொருட்களும் கிடைக்கின்றன. பலசரக்குக் கடைகள் ஒரு வீதி என்றால், தானியங்கள் ஒரு வீதி. பழங்கள், காய்கறிகள் என்று சந்தையும். சின்னச் சோளம், மஞ்சச் சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற தானிய வகைகள் கிலோ 20-30 ரூபாய் தான்.

ஸ்ரீ விஞ்ஞான் பல்கலைக் கழகம்-படம்-இணையத்திலிருந்து
படம் இணையத்திலிருந்து

குண்டூரிலிருந்து வட்லமுடி வரும் வழி முழுவதும் வயல்களும், காய்கறி, பழங்கள், ஆரஞ்சுப் பழத் தோட்டங்களும் கண் கொள்ளாக் காட்சி. வட்லமுடியில் ஸ்ரீவிஞ்ஞான் பல்கலைக்கழகம் இருக்கின்றது. மிகப் பெரிய வளாகம். சங்கம் பால்பண்ணை வீட்டின் வெகு அருகில்தான் பால், தயிர், பனிக்கூழ், பால்பொடி, பாலில் செய்யப்படும் வித விதமான இனிப்புப் பொருட்கள் எல்லாமே கிடைக்கின்றது. ஆவின், மதர் டயரி போலத்தான். வீட்டின் அருகிலேயே பல கடைகள் இருப்பதால் சாமான்கள் எல்லாம் கிடைக்கின்றன.

வீட்டின் பின்புறம்.  ஒரு சிறிய நீர்த் தேக்கம், ஆனால் செடிகளுடன். மீன்கொத்தி, நாரைகள், சாம்பல் நிற நாரைகள், நிறைய கிளிகள், மைனாக்கள், இன்னும் நிறைய பறவைகள் வந்தன. மொபைலில் படம் எடுக்க முடியவில்லை

வீடு என்றால், இரு அறைகள் மட்டுமே. சமையலறை என்றெல்லாம் இல்லை. ஒரு வீட்டின் அறைகளைப் பிரித்து வாடகைக்கு விட்டிருக்கின்றார்கள். அதன் ஒரு பகுதி மட்டுமே சமையலறையுடன் அதில் ஒரு குடும்பம்.  தண்ணீர் எல்லாம் வெளிப்புறத்திலிருந்துதான். அது போல் குளியலறை, கழிவறை எல்லாம் வெளிப்புறத்தில்தான்.  ஒரு சிறிய மின்சார ரைஸ் குக்கர் மட்டுமே. நாங்கள் இங்கிருந்து சிறிய மின்சார ஸ்டீம் குக்கர் எடுத்துச் சென்றிருந்தோம். இந்த இரண்டில்தான் சமையல்.

இரண்டு கிலோ ஆரஞ்சு பழங்கள் ரூ 40 மட்டுமே. ஒரு வெள்ளரிக்காய், இரு பெரிய குடைமிளகாய்கள், இரு பெரிய நாட்டுத் தக்காளிகள், 200 கி பீன்ஸ், 200 கி காரெட், இரு பெரிய உருளைக் கிழங்குகள்(1/4கி), 4 பெரிய வெங்காயம் –இத்தனையும் எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் ரூ 40. இதற்கு இலவசம் ஒரு பெரிய பிடி கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை. பேருந்துகளை விட ஷேர்ஆட்டோக்கள் நிறைய ஓடுகின்றன, மிகக் குறைவான கட்டணம். ஊருக்குள்ளும் ஓடுகின்றன. வட்லமுடியிலிருந்து தெனாலிக்கும்.13 கிமீக்கு ரூ 10 மட்டுமே! தினசரி வாழ்க்கைச் செலவுகள் மிகவும் குறைவு! என்ன மயக்கம் வந்துவிட்டதா? சரி கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு வாருங்கள். நடக்கவும், சுற்றுவதற்கும் தெம்பு வேண்டுமே. பயணிப்போம்....

----கீதா


36 கருத்துகள்:

  1. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

    - சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சாமானியன் சகோ தங்கள் வாழ்த்திற்கு!

      நீக்கு
  2. பல வருடங்களுக்கு முன் குண்டூரில் பணி புரிந்து வந்தேன். உங்கள் பதிவு பழைய நினைவுகளை கிளறி விட்டது. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி bhandhu தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். ஓ நீங்கள் குண்டூரில் பணி புரிந்து வந்தீர்களா! மகிழ்க்சி! தொடருங்கள்.

      நீக்கு
  3. நம்ம ஊரைத்தவிர மற்ற எல்லா ஊரும் சுத்தமாகவும் 'சீப்'பாகவும்தான் இருக்கோ... பொறாமையாத்தான் இருக்கு.. மக்களும் ஒத்துழைக்கறாங்களே... அதையும் சொல்லணும்! ம்ம்ம்... தொடர்கிறேன்.

    'தம' இன்னும் சப்மிட் செய்யப்படவில்லை போல. வாக்களிக்கப் பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஸ்ரீராம். அங்கும் குப்பைகள் தமிழ்நாட்டைப் போலத்தான். பேருந்து நிலையம், ரயில் நிலையம் சுத்தமாக இருக்கின்றன. அடுத்த பதிவில் வருகின்றன இந்த விவரங்கள். படங்களுடன். காய்கறி பழங்கல் சீப். வெண்டை, கத்தரி, வெங்காயம், தக்காளி எல்லாம் 1/4 கிலோ ஒவ்வொன்றும்...எல்லாம் சேர்ந்து விலை என்ன தெரியுமா ரூ 30. பேசாம அங்க போயிடலாமா!! ஹிஹி

      நீக்கு
  4. பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..

      நீக்கு
  5. இனிமையான பயணத்தில் இணைந்து கொண்டேன்..சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி காயத்ரி எவ்வளவு நாளாயிற்றுப் பார்த்து நலமா? நன்றி கருத்திற்கும் வருகைக்கும்.

      நீக்கு
  6. அருமையான இடம் ...தொடருங்கள் ........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனு தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  7. விலைவாசி நன்றாக இருக்கிறது. சுத்தமாய் இருப்பதை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்!

      நீக்கு
  8. பதில்கள்
    1. மிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...

      நீக்கு
  9. நாங்களும் உங்களுடன் இருந்து, நேரில் கண்ட உணர்வை தரும் நடை. அருமையான பயணக்கட்டுரை.

    தொடருவோம்

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சாம் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  10. நல்லதொரு பயணத்தில் நானும் இணைகிறேன் ஆனால் தொடக்கமே மயக்கத்தை தருகிறதே... விலைவாசியைச் சொன்னேன்.... இங்கு மட்டும் எப்படி ?

    தமிழ் மணம் என்னாயிற்று....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...ஆம் விலை வாசி கம்மிதான்...உங்கள் ஊரிலும் கம்மிதான் இல்லையா..ஆமாம்..இங்கு தான் ஹும்...

      நீக்கு
  11. ஆந்திர மாநில பயணக் கட்டுரை முதல் பகுதியே சிறப்பாக உள்ளது! படங்களும் நன்றாகவே வந்துள்ளது! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ் கருத்திற்கும் வருகைக்கும். படங்கள் அவ்வளவு சரியக வரவில்லை சுரேஷ். முதல் படம் இணையத்திலிருந்து.

      நீக்கு
  12. ஆஹா... ஆந்திர மாநிலத்தில் பயணமா.... இங்கே குறிப்பிட்ட இடங்கள் சிலவற்றில் நானும் பயணித்திருக்கிறேன். விஜயவாடா, பவானிபட்னா, உண்டவல்லி குகைகள், அமராவதி, குண்டூர், தெனாலி..... போன்ற இடங்கள்..... உங்கள் அனுபவங்களைப் படிக்க காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் ஜி அப்போ நீங்களும் எழுதியிருப்பீர்களே! சரி பார்க்கவில்லை...எனது பதிவுகளைப் போட்டுவிட்டுப் பார்க்கின்றேன். நான் எழுதுவதில் ஏதேனும் தவறான தகவல்கள் இருந்தால் தயங்காமல் குறிப்பிடுங்கள் ஜி. கேமரா பழுதாகிவிட்டதால் உங்களை போன்று படங்கள் எடுக்க முடியவில்லை. மிக்க நன்றி வெங்கட்ஜி வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  13. பயணக் கட்டுரைகள்
    எழுதுவது என்பது இலகுவானதல்ல.
    ஆயினும்.
    தங்கள் பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.
    வாசகர் மகிழ்வோடு சுவைக்க
    அருமையாக அமைந்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
  14. அங்கேயே போய்த் தங்கி விடலாம என்று எண்ண வைத்து விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  15. ஆஹா இப்போதான் ஒரு பயணம் முடித்திருப்பீர்கள் போல. ரைட் வாங்க சகாஸ் இன்னொரு round போகலாம் http://makizhnirai.blogspot.com/2016/01/travel-with-my-friends.html

    பதிலளிநீக்கு
  16. புத்த தரிசனத்துக்கு காத்திருக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  17. வட்லமுடி பயணத்தில் நானும் உங்களுடன் கீதாக்கா...
    அருமை... தொடருங்கள் தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
  18. துளசி அண்ணா, கீதா உங்கள் இருவருக்கும் இருவரின் குடும்பங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    கீதா, தெளிவா மேப் போட்டு பயணக் கட்டுரை, நாங்களும் நேரில் பார்த்தது போல் இருக்கிறது. பேருந்து வசதிகள் ஆந்திரா முழுவதிலும் இப்படி நன்றாக இருக்குமா? விலைவாசி...நம்ம இந்தியாவில் தானா!!? மயக்கம் என்ன...சிலையாகிப் போனேன்..அங்க ஒரு வீடு பாத்து சொல்லுங்க, போய்டலாம் :)
    (இதனால தான் ஆந்திரால தங்கம் நிறைய வாங்குறாங்களோ ;-) )
    பகிர்விற்கு நன்றி கீதா..தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. ஹைய்! தாமதமா வந்தாலும் என் வாக்கு முதல் வாக்கு :)

    பதிலளிநீக்கு
  20. முடிந்தவரை எடுத்த படங்களைப் பகிர்ந்ததோடு நல்ல செய்தியையும் இணைத்துத் தந்துள்ள விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  21. வட்லமுடியில் என்ன விசேஷம் 1976-1980 வரை விஜயவாடாவில் பணியில் இருந்தேன் தலைப்பில் இருக்கும் ப்ரகாசம் பராஜ் கனக துர்கா கோவில் மற்றும் சுறு வட்டாரத்தில் இருக்கும்பல இடங்களுக்கும் போய் இருக்கிறோம் அமராவதி அணையும் புத்தர் சம்பந்தப்பட்ட விஷயங்களும் பார்த்திருக்கிறோம் செனையில் இருந்த விஜய வாடா ரயிலில் செல்லும் போது அசிங்கங்களின் அவலத்தை நிறையவே காணலாம் ஹூம் ஆயிற்று 35 வருடங்கள் என்னென்ன மாற்றமோ....?

    பதிலளிநீக்கு
  22. வணக்கம்
    அண்ணா.

    அற்புத விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  23. அருமையான அனுபவம். இங்கே சுவிஸில்விலை வாசிகள் வீட்டு வாடகை அதிகம், ஜேர்மனியில் விலைவாசி,வீட்டு வாடகை குறைவு.அதற்கேற்ப தனி நபர் வருமானமும் இருக்கும். இதனால் போர்டருக்கு அருகில் இருப்போர் சுவிஸில் வேலை செய்து ஜேர்மனியில் வசிப்பார்கள்.அதே போல் இந்த காய்கறிபழங்களை வாங்க மட்டும் அங்கே போய் வாங்கிட்டு வந்து விடலாமா?

    வரவுக்கேற்ப செலவுகள் தானேப்பா எங்கும். இன்னும் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  24. இவ்வளவு மலிவா கம்பு, சோளம், கேழ்வரகு, காய்கறிகள், பழங்கள் கிடைத்தால் அதையே சாப்பிட்டுக்கலாமே. முன்னாலேயே தெரிஞ்சிருந்தா உங்களை வாங்கி மூட்டையைப் பார்சலில் அனுப்பச் சொல்லி இருப்பேன்! :) இந்தியாவிலும் விலைவாசி குறைவாக ஒரு நகரம் இருப்பது சந்தோஷமாகவே இருக்கு! இதே போல் தான் ஒடிஷாவிலும் பார்த்தோம். அங்கிருந்தும் வாங்கி வர முடியவில்லை!

    பதிலளிநீக்கு