இது சற்று பெரிய
பதிவுதான். பொருத்துக் கொள்ளுங்கள்.
கேடில் விழுச்செல்வம் கல்வி! இது நம் ஐயனின் வாக்கு. அதாவது கல்வியே செல்வம் என்றார். ஆனால், இங்கு செல்வம் இருந்தால்தான் கல்வி
என்றாகியிருக்கிறது.
மனதிற்கு வேதனை அளித்த ஒரு நிகழ்வுதான், மூன்று மருத்துவ மாணவிகளின்
தற்கொலை. இந்தத் தற்கொலையைப் பற்றி நம்
நண்பர் விசு அவர்களும் ஒரு பதிவு எழுதியிருந்தார். http://vishcornelius.blogspot.com/2016/01/blog-post_27.html
இதற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் பட்டியலில் வருபவர்கள் பதில்
சொல்லுவதால் உயிர்கள் மீளப்போவதில்லைதான். ஆனால், அந்தப் பட்டியலில் வருபவர்கள்
அனைவரும் இதற்குப் பொறுப்பானவர்களே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும்
எனது மற்றொரு கருத்தையும், இது போன்ற மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மீதுள்ள
கோபத்தையும், வருத்தத்தையும் முன்வைக்கத்தான் இந்தப் பதிவு. அந்த மற்றொரு
கருத்திற்கு முன்...
பொறியியல், மருத்துவம் (நல்லகாலம் தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவத்
துறையில் தனியார்கள் கல்லூரிகள் இல்லை) ஏன் விவசாயப்படிப்பிற்குக் கூட தனியார்
கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகத்தின் கீழும், அரசின் கீழும் அதாவது அரசு சார்ந்த
பல்கலைக்கழகத்தின் கீழும் காளான்கள் போல் முளைத்திருக்கின்றன.
பொறியியல் கல்லூரி என்றால் ஒவ்வொரு துறைக்கும் AICTE (All India Council of Technical
Education) அக்ரெடிட்டேஷன் பெற
வேண்டும். அப்படிக் கிடைக்க அந்தக் கல்லூரிகள் என்னென்ன தில்லுமுல்லுகள்
செய்கின்றன, எவ்வளவு பெட்டிகள் கைமாறின/மாறுகின்றன இந்தக் கல்லூரிகளை
நடத்துபவர்கள் யார்? இவர்களின் பின்புலம் என்ன, எப்படி இத்தனைக் கல்லூரிகளுக்கும்
அனுமதி வழங்கப்பட்டது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
என்பதன் ரிஷிமூலம், நதி மூலம் ஆராயத் தொடங்கினால் பல அதிர்ச்சியானத் தகவல்கள் கிடைக்கும்.
இதில் எத்தனைக் கல்லூரிகள் அந்தந்தத் துறைக்கு வேண்டிய எல்லா வசதிகள்,
தகுதிவாய்ந்த விரிவுரையாளர்கள், செய்முறைக் கூடங்கள் என்று செயல்படுகின்றன என்பது
மிகப் பெரிய கேள்விக் குறியே.
நமது கல்வித்துறை ஊழல்கள் நிறைந்தத் துறையாகி நிற்பதுக் கண்கூடாகத் தெரிந்தும்
நம்மால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாதது மிக மிக வேதனைக்குரியது. நாம்
அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையே. ஏனென்றால் நம் குழந்தைகளும் இந்தக்
கல்விக்கூடங்களின் மாணவ, மாணவிகளாய் இருக்கும் தலைவிதியை நினைத்து.
பொறியியல் கல்லூரிகளுக்கே இப்படி என்றால், உயிரைப் பாதுகாக்கும்
கல்வியைப் போதிக்கும் மருத்துவக் கல்லூரிகளைச் சற்று எண்ணிப்பாருங்கள். தமிழ்நாடு
எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சில தனியார் மருத்துவக்
கல்லூரிகளும் இதில் அடக்கம். அப்படிப்பட்ட ஒரு தனியார் கல்லூரிதான் சமீபத்தில்
சீல்வைக்கப்பட்ட, விழுப்புர மாவட்ட கள்ளக்குறிச்சி இயற்கை/சித்த மருத்துவக்
கல்லூரியும்.
இந்தக் கல்லூரி ஆரம்பிக்க எப்படி அனுமதி கிடைத்தது? மருத்துவப்
பல்கலைக்கழகம் என்ன செய்து கொண்டிருந்தது?
எல்லா வசதிகளும், செய்முறைக் கூடங்களும், நல்ல விரிவுரையாளர்களும்
இருக்கின்றார்களா என்ற தணிக்கை செய்யப்படவில்லையா? தணிக்கை செய்யப்பட்டுத்தான்
ஆரம்பிக்கப்பட்டது என்றால் எவ்வளவு பணம் கைமாறியது? இந்தக் கல்லூரியை
நடத்துபவர்களின் பின்புலம் என்ன?
மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, நாம் விரும்பும் துறை எந்தக்
கல்லூரியில் கிடைக்கின்றது, அந்தக் கல்லூரி தரம் வாய்ந்தக் கல்லூரியா,
செய்முறைக்கூடங்கள் நன்றாகச் செயல்படுகின்றனவா, கல்வியின் தரம், காம்பஸ்
இன்டெர்வ்யூ உண்டா, அதன் சான்றிதழ் வேலைவாய்ப்புச் சந்தையில் எவ்வளவு
மதிப்புடையது, என்ற பல விவரங்களையும் நாம் தனிப்பட்ட முறையிலும், அதன் முந்தைய
மாணவர்களிடம் கேட்டும், அது தனியாராக இருந்தாலும் சரி, அரசு சார்ந்த
பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் தனியார் கல்லூரியாக இருந்தாலும் சரி, நாம் ஆராய்ந்து
பார்ப்பது நல்லது.
அரசு சார்ந்த பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் தனியார் கல்லூரிகள்
அனைத்தும் தரம் வாய்ந்த கல்லூரிகள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மாணவ மாணவியர், தாங்கள் விரும்பிய துறையில் படிக்க ஆசைப்படுவதோ, பெற்றோர்கள்
படிக்கவைக்க நினைப்பதோ தவறில்லை. ஆனால், நமது கட் ஆஃப் மார்க்கின்
அடிப்படையில் நமக்குக் கிடைக்கும் கல்லூரி தரமற்றதாக இருந்தால் அதில் சேர்ந்து
படிப்பதைவிட வேறு வழிகளை ஆலோசிக்கலாமே.
இந்த விழுப்புர சித்த மருத்துவக் கல்லூரியில் சேரும் முன், பெற்றோரும்,
மாணவ, மாணவிகள், தற்கொலை செய்து கொண்ட அந்த மூன்று மாணவிகள் உட்பட அரசு கவுன்சலிங்கில்
கிடைத்திருந்தாலும், இந்தக் கல்லூரியைக் குறித்துச் சற்று ஆராய்ந்திருக்கலாம். இது
போன்றக் கல்லூரிகளைக் குறித்துச் சாமானியர்கள் நாம் போராட முடியாது. அதற்கான பலம்
நம்மிடம் இல்லாத போது நாம்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், அரசு கவுன்சலிங்கிலேயே
கிடைத்தாலும் கூட என்றுதான் தோன்றுகின்றது.
தற்போதெல்லாம் மாணவர்களின் கட் ஆஃப் ரேங்கிற்கு நல்ல கல்லூரி, அரசுக்
கவுன்சலிங்கில் கிடைக்க வாய்ப்பில்லை என்றறிந்ததும், பிற கல்லூரிகளில் மேனேஜ்மென்ட்
கோட்டாவிலோ, இல்லை தனியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளிலோ, இல்லை தனியார் பல்கலைக்கழகக்
கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டாவிலோ பணம் கொடுத்து உறுதிப் படுத்திக் கொண்டுவிடுகின்றனர்.
சாமானிய மாணவர்களால் இப்படிப் படிக்க இயலுமா? பாவம் அப்படித் தான் விரும்பும்
துறையைப் படிக்க நேரும் போதுதான் மன அழுத்தமும், பிரச்சனைகளும்.
பொறியியலாளராக, மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தரமற்றக்
கல்லூரிகளிலும் கூட சேரத் துடிப்பதால்தான், இன்று காளான்கள் போல பல தனியார்
கல்லூரிகள் முளைத்துக் கல்வியை வியாபரமாக்கியிருக்கின்றன.
அரசும் இதற்கு உடந்தையாக இருப்பதால் கல்வித்துறையே ஊழலாகி உள்ளது. பெற்றோர்கள்
கஷ்டப்பட்டு, உழைத்துக் குருவி சேர்ப்பது போல் சேர்த்தப் பணத்தை இப்படி இழக்க
வேண்டுமா? சற்று யோசியுங்கள் பெற்றோர்களே, மாணவர்களே!
மாணவர்களும், பெற்றோர்களும் நினைத்தால், முனைந்தால் இந்த நிலையை மாற்ற
முடியும். ஏதேனும் என்ஜிஓ (NGO) பொதுநல
வழக்குத் தொடர்ந்தேனும் இந்த நிலையை மாற்றலாம். எனக்கு இந்த மாணவிகளின்
மீது கோபமும், வருத்தமும்தான் வருகின்றது கல்லூரியைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல்
சேர்ந்துவிட்டுத் தொடர்ந்து போராட இயலாமல், தற்கொலைதான் ஒரே தீர்வு என்று
முடிவெடுத்திருக்கின்றார்களே என்று. இப்போது நடக்கும் போராட்டங்கள் எல்லாம் கண்
கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போலவே.
எனவே, பெற்றோர்களும், மாணவர்களும் கல்வியின் தரம் அறிந்து மேற்படிப்பு
பற்றிய முடிவுகள் எடுப்பதில் விழிப்புணர்வுடனும், மத்திய அரசும், மாநில அரசுகளும்
கல்வித்துறையை அரசியலிலிருந்து விலக்கித் தனியாக இயங்க வைத்துச் சட்டத்தைக் கடுமையாக்கிச்
செயல்பட வைத்தால் மட்டுமே கல்வித்துறை உருப்பட்டு சாமானியர்களும் பயன் பெற
முடியும். இல்லையேல் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கும்.
(உலகமே, குறிப்பாக இந்திய மாணவர்கள் உயர்கல்வியின் கனவு தேசமாய்க் கருதும்
அமெரிக்காவிலும், அரசு அனுமதி பெற்றுத் தனியார் கல்லூரிகள்/பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும்,
ஃபெடரல் சட்டத்திற்கு அப்பாற்பட்டு அவர்கள் செயல்படுவது தெரிந்தால், அங்கு சட்டங்கள்
கடுமையாக இருப்பதால், “ப்ளாக் லிஸ்ட்” பட்டியலில் அடக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டு
மூடப்பட்டுவிடுகின்றன.
அந்தப் பட்டியலில், 2011ல் அதிகம் பேசப்பட்டவை ஹெர்குஅன் பல்கலைக்கழகம்(Herguan University) ட்ரை
வாலி (Try Valley) பல்கலைக்கழகம். சமீபத்தில் சிலிக்கன் வாலி பல்கலைக்கழகமும், நார்த்
வெஸ்டர்ன் பாலிடெக்னிக் பல்கலைக்கழகமும் அந்தப் பட்டியலில். நீங்கள்
ஊடகங்களிலிருந்து அறிந்திருப்பீர்கள். இந்தப் பல்கலைக்கழகங்களின் இந்திய
மாணவர்களில் பெரும்பான்மையோர் ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப்
பல்கலைக்கழகங்கள் சிக்கியதன் காரணங்கள் வேறு. மட்டுமல்ல அங்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இங்கு?)
இதோ உங்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சிச் செய்தி. Even medical Seats under “merit
quota” are sold, says report. அதன் முழுத் தகவலையும் வாசிக்க இந்தச் சுட்டி www.timesofindia.com
நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
--கீதா