படம் இணையத்திலிருந்து
கேரளாவில் சமீபத்தில் தேர்தல் நடந்த 879
பஞ்சாயத்துகளிலும், 147 ப்ளாக் பஞ்சாயத்துகளிலும், 14 ஜில்லா பஞ்சாயத்துகளிலும் வெற்றி
பெற்றவர்களில் தலைவர்கள், உப தலைவர்கள், நிர்வாக உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். அடுத்த 5
வருடம் அவர்கள் ஆள்வார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அள்ளுவார்கள். இதில் தோல்வியுற்றவர்களின் எண்ணிக்கை வெற்றி பெற்றவர்களின்
எண்ணிக்கையை விட மூன்றோ, நான்கோ மடங்கு அதிகமாகத்தான் இருக்கும். அதில்
எல்லோருக்கும் தோல்வியுற்றதில் வருத்தம் இருக்கத்தான் செய்யும். அதை எல்லாம் காலப்போக்கில் மறந்து, அவர்கள்
எல்லோரும் முன் போல் வாழத் தொடங்கிவிடுவார்கள்.
ஆனால், வயநாடு, மானந்தவாடியைச் சேர்ந்த
பயியம் பள்ளி P.V.
ஜான் (67வயது) தோல்வியில் மனமுடைந்து, கடந்த, நவம்பர் 8 ஆம் தேதி, மானந்தவாடியில்
உள்ள இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் ப்ளாக் கமிட்டி அலுவலகத்தில் தற்கொலை
செய்துகொண்டார். தன் தற்கொலைக்குக் காரணம்
சொல்லி, அருகே, ஒரு கடிதமும் அவர் எழுதி வைத்திருந்தார்.
797 வாக்குகள் இடப்பட்ட மானந்தவாடி நகர்,
34 ஆம் வார்டில், காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஜானுக்குக் கிடைத்ததோ 39 வாக்குகள்
மட்டும். அவரை எதிர்த்து நின்ற சுயேச்சை வேட்பாளரான ஜாய் 346 வாக்குகள் பெற்று
வெற்றி பெற்றதை ஜானால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஜான் தன் தோல்வியையும்
அதற்குக் காரணமானவர்களையும் மட்டும் நினைத்து வேதனைப்பட்டு, ஆத்திரப்பட்டுத்
தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவர் தன்
மனைவி மரியாம்மாவை, மகன் வர்கீசை, மகள்களைப் பற்றி நினைக்கவே இல்லை.
அது போல், கடந்த 5 ஆம் தேதி திருச்சூர்
பாலராமபுரம் ரெயில்வே க்ராசிங்கில் 7 ஆம் வகுப்பில் படிக்கும் 12 வயதான ரமேஷுக்கு
அறிவுரை கூறி முத்தம் கொடுத்து வேகமாக வரும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை
செய்துகொண்டார், புதுக்காட்டில் வாழும் தென்காசியைச் சேர்ந்த கலா (40வயது). தாயைக் காப்பாற்ற நினைத்து, ரமேஷ் தன் தாயைப் பிடித்து
இழுத்த போதும், அவனை உதறித் தள்ளிவிட்டு ரயிலின் முன் குதித்திருக்கிறார் கலா.
ஓய்வு பெற்ற தாசில்தாரான கணவர் அவரைப் பிரிந்து சென்றதால் அவருக்கு ஏற்பட்ட
வருத்தமும் ஆத்திரமும்தான் அவரை அப்படிச் செய்யத் தூண்டி இருக்கின்றது என்று ஒரு
காரணம் சொல்லப்பட்டாலும், 12 வயதான ரமேஷை தன் மரணம் எப்படிப் பாதிக்கும் என்பதைப்
பற்றி எல்லாம் சிந்திக்காமல் தன்னை உதறித் தள்ளிச் சென்றக் கணவனின் மீதுள்ள
ஆத்திரத்தால், தன் மகனை உதறித் தள்ளித் தற்கொலை செய்து கொண்டார்.
இது போலவே கடந்த 1.11.2015, ஞாயிறு அன்று
வேறொரு சம்பவம் நடந்தது. கடந்த 3
வருடங்களாக எங்கள் பள்ளியில் - CFDVHSS, மாத்தூர் – மாணவிகளின் தற்காப்புக்காக கராத்தே
வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்க, ஆலத்தூர்
குருகுலம் பள்ளியில் கடந்த 10 வருடங்களாக கராத்தே ஆசிரியாராகப் பணிபுரியும் சூரஜ் (42
வயது) எல்லா சனிக்கிழமைகளிலும் வருவருதுண்டு.
எல்லா வருடமும் 50 மாணவிகளுக்குப் பயிற்சி
அளிக்க ரூ 25000 செலழித்து, பாலக்காடு ஜில்லா பஞ்சாயத்துதான் இவ்வகுப்புகளை நடத்த
உதவுகிறது. சூரஜ் பாலக்காடு ரைஃபிள் க்ளப்பில் உறுப்பினர் மட்டுமல்ல,
பயிற்சியாளரும் கூட. காவல்துறையினருக்கும்
இடையிடையே கராத்தே வகுப்புகள் எடுப்பவரும் கூட.
அதுமட்டுமன்றி தியான வகுப்புகளும் நடத்தி வருபவர். கடந்த சில மாதங்களாக அவரது மாணவிகளில் சிலர்
அவருக்கு எதிராகக் காவல்துறையில் புகார் கொடுத்ததானால், காவல்துறையினரால் விசாரணை
செய்யப்பட்டு வந்தார்.
தன்னிடம் கராத்தே பயிலும் மாணவ
மாணவிகளிடையே அவர் காண நேர்ந்த சில தவறான செயல்களுக்கு எதிராக அவர் எடுத்த
நடவடிக்கைகள்தான் அவருக்கு எதிராகப் புகார் கொடுக்கக் காரணம் என்றும், அப்படியல்ல
அவர் தனது மாணவிகளில் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் அம்மாணவி
காவல்துறையினரிடம் புகார் கொடுத்ததாகவும் இரு வேறு கருத்துகள் இங்கு இப்பகுதியில்
நிலவுகின்றது. எப்படியோ இடையிடையே நிகழ்ந்த காவல்துறை அதிகாரிகளின் விசாரணை அவரை
வேதனைப்படுத்தியிருக்கலாம். இதனிடையே
அம்மாணவி மகளிர் உரிமை பாதுகாப்புக் கழகத்திலும் புகார் கொடுத்திருக்கிறார். அதனால், குருகுலம் பள்ளி நிர்வாகம் சூரஜை
பள்ளியிலிருந்து வேலை நீக்கம் செய்துவிட்டது.
நவம்பர் 1 ஆம் தேதி கைது செய்யப்படலாம்
என்று யாரோ சொல்லக் கேட்ட அவர் கடந்த 31.10.2015 சனியன்று இரவு ஆலத்தூர் குருகுலம்
பள்ளி சென்று, அங்கு கடந்த 10 வருடங்களாக மாணவ மாணவிகளுக்குக் கராத்தே பயிற்சி
அளித்த மைதானத்தின் அருகே இருந்த ஒரு மரத்தின் கிளையில் தூக்குப் போட்டுக்
கொண்டுத் தற்கொலை செய்து கொண்டார். தன்
மரணத்திற்குக் காரணமான மாணவ மாணவிகளின் பெயரையும், பள்ளி நிர்வாகத்தின் செயலையும்
குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதி தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்தார். தன் மரணத்திற்குக் காரணமாகின்றவர்களைப் பற்றி
மட்டும் எண்ணிய அவர் தனது 35 வயதுள்ள மனைவி ஜிம்ஸியைப் பற்றியோ, 4 வயது மகன்
த்யான்மகேஸ்வர் பற்றியோ, தன் வயதான பெற்றோர்களைப் பற்றியோ, தான் அத்தனைக் காலம்
பெற்ற தன் கராத்தே அறிவு மற்றும் அனுபவங்களைப் பெறக் காத்திருக்கும் மாணவ
மாணவியர்களைப் பற்றியோ சிந்திக்கவே இல்லை.
இப்படி, ஒரு பிரச்சனை ஏற்படும் போது
அப்பிரச்சனையைப் பற்றி மட்டும் எண்ணித் தன் கடமைகளை மறந்து, தன் மரணம் தன்னை
நேசிப்பவர்களுக்கு எற்படுத்தப் போகும் துன்பங்களையும், துயரங்களையும் மறந்து,
தங்கள் மானப்பிரச்சியனையாகக் கருதி, அப்பிரச்சினையிலிருந்துத் தப்ப அல்லது,
அப்பிரச்சினை ஏற்படக் காரணமானவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட ஒரே வழி என்ற அறிவற்ற
எண்ணங்களால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதே வழி என முடிவு செய்து, இது போல் தற்கொலை
செய்துகொள்பவர்களின் மேல் நமக்கு ஏனோ பரிதாபப்படத் தோன்றுவதில்லை. இவர்களும்
சுயநலவாதிகள்தான்.
அதே நேரத்தில் “போனால் போகட்டும் போடா”
என்றும் “உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே”..... என்று தங்களதுப் பிரச்சினைகளை எதிர் கொண்டுப் போராடி வாழ்ந்திருந்தால்
எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நம்மால் எண்ணாமலும் இருக்க முடியவில்லை.
இறந்த குழந்தையின் ஜாதகம் பார்ப்பது போல் இனி அதைப் பற்றிப் பேசிப்
பிரயோசனமில்லைதான்.
படம் இணையத்திலிருந்து
இப்போது தற்கொலைகள் அதிகரித்து
வருவதாகத்தான் புள்ளியியல் விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்தக் கோணத்தில்,
இந்நிகழ்வுகள் நமக்குத் தெரியப்படுத்துவது என்னவென்றால், நம் மக்களுக்கு நல்ல
மனவளப்பயிற்சி மிகவும் அவசியம், அதுவும் சிறிய வயதிலிருந்தே என்று.
ஆனால், என்னதான் மனவளப்பயிற்சி, நல்ல
சூழிநிலை கொடுக்கப்பட்டு வளர்ந்தாலும், அதையும் மீறித் தற்கொலைகள், மனநிலைப்
பிறழ்வுகள் நடக்கவும் வாய்ப்புண்டு. அது நமது மனதின் (மூளைதான்) இரு பகுதிகளுக்கு
இடையே நடக்கும் போராட்டங்களினால், அதாவது, நல்லது சொல்லும் ஹீரோவிற்கும்,
கெட்டதைச் சொல்லும் வில்லனுக்கும் இடையில் நடக்கும், மூளையில் ஏற்படும் வேதியியல் –
ரசாயன நிகழ்வுகளில் வில்லன் வென்றுவிடுவதால் என்று அடிக்கடிச் சொல்லும் கீதாவின்
கருத்தையும் மனதில் கொள்ளத்தான் வேண்டுமோ என்றும் தோன்றுகின்றது.
இங்கு இறந்தவர்களைப் பற்றிப்
பரிதாபப்படுவதைவிட, நம் மனம் எண்ணுவது இருப்பவர்களின் நல்வாழ்விற்காகத்தான்.
எது எப்படியோ, ஜான், கலா மற்றும் சூரஜின்
குடும்பத்தினருக்கு இவர்களது மரணத்தால் நேர்ந்த, நேரவிருக்கும் மன வருத்தத்தையும்,
வாழ்வின் யதார்த்தங்களையும் எதிர்த்துப் போராடி வாழத் தேவையான மன உறுதியையும், மன
வலிமையையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு அருளட்டும்.
பின் குறிப்பு: இணையம் மிகவும் பிரச்சனையாக
இருப்பதால், இன்னும் சில நாட்களுக்கு இணையத் தொடர்பு இல்லாமலும் போகலாம் எங்கள் தளத்தின்
சென்னை தலைமையகத்தில். அதனால் நண்பர்களே தங்கள் தளங்களுக்கு வர இயலவில்லை. அதனால்
மறந்துவிடாதீர்கள் ஓகேயா?! இணையத் தொடர்பு சரியானதும் மீண்டும் சந்திப்போம். இணையத்
தொடர்பு கிடைத்த சமத்தில் பதிவேற்றம் செய்து ஷெட்யூல் செய்து வைத்திருக்கின்றோம். மிக்க
நன்றி.
A must read post ...
பதிலளிநீக்குsetting standards in our circle...
wishes and love ..
vote +
மிக்க மிக்க நன்றி கஸ்தூரி தங்களின் கருத்திற்கு!
நீக்குதற்கொலை என்பது சில நேரங்களில் தொற்று வியாதிபோல பரவுகிறது பிறகு கொஞ்சம் அடங்கி விடுகிறது இது அவ்வப்போது நிகழும் நிகழ்ச்சியாகி விட்டது
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
ஆமாம் மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்....
நீக்குபடிக்கவே வேதனையாக இருக்கிறது. மனம் கனக்கிறது. உங்கள் இணையத் தொடர்பு விரைவில் சரியாகப் பிரார்த்தனைகள்
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதாசாம்பசிவம் சகோ தங்களின் கருத்திற்கும் பிரார்த்தனைகளுக்கும்....இணையம் சரியாகிவிட்டது..
நீக்குசுயநலவாதிகள் என்பது சரி தான்... மிகவும் மோசமான சுயநலவாதிகள்...
பதிலளிநீக்குஇணையத் தொடர்பு விரைவில் சரியாகட்டும்...
ஆமாம் டிடி மிக்க நன்றி டிடி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். இணையம் சரியாகிவிட்டதே....
நீக்குகண நேர மயக்கம். ஸ்ட்ரெஸ். பல விஷயங்களை மறந்து விடுகிறார்கள். இதுவும் ஒரு மன நோய்தானே? அவரைச் சேர்ந்தவர்கள் பாவம்தான். தம +1
பதிலளிநீக்குஉண்மைதான் ஸ்ரீராம். இருந்தாலும் இந்த மூளையின் சதி வேலயைப் புரிந்துகொள்ள முடியவில்லைதான் பல சமயங்களில்...அது விஞ்சிவிடுகின்றது என்பதுதான் உண்மை...
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம் கருத்திற்கு
தவிர்க்கப்பட வேண்டிய தற்கொலைகள்..... ஒவ்வொரு நிகழ்வையும் படிக்கும்போதே மனது பதறுகிறது. சம்பந்தப்பட்ட குடும்பத்தினர்கள் எத்தனை கஷ்டம் அனுபவித்து இருப்பார்கள் என நினைக்கும் போதே மனதில் வலி....
பதிலளிநீக்குஇணையம் விரைவில் சரியாகட்டும்....
மிக்க நன்றி வெங்கட்ஜி ...ஆமாம் ஆனால் பாருங்கள் கூடிக் கொண்டுதான் போகின்றது என்று புள்ளியியல் சொல்லுகின்றது....
நீக்குஇணையம் சரியாகிவிட்டது...ஜி
இவ்வளவு மானரோஷம் பார்க்கிறவர் எப்டி அரசியலுக்கு வந்தாரோ!!!
பதிலளிநீக்குரைட் ஜோக்ஸ் அபார்ட். சூசைட் பண்ணிக்கபோறவங்க ஹின்ட் மாதிரி அதைபத்தி ரொம்ப நெருக்கமானவங்க கிட்ட பேசுவாங்கலாம். அப்போ அவர்கள் மனதைரியம் அளிப்பது போல பேசினால் தற்கொலை எண்ணம் மட்டுப்படுமாம். ஆனாலும் பேசிய நபரை கொஞ்ச நாள் தனிமையில் இருப்பதை தடுக்கவேண்டும் என்கிறார்கள் மனவியலாளர்கள். நமக்கும் கொஞ்சம் விழிப்புணர்வு வேண்டும் தான் சகாஸ்!
ஹஹஹ அதுவும் சரியே அது ஜோக் அல்லவே சகோ!
நீக்கும்ம்ம் கவுன்சலிங்க் எல்லாம் ஓரளவிற்குத்தான் ...இறுதியில் மூளையின் செயல்பாடுகள் விஞ்சிவிடுகின்றது என்பதுதான் உண்மையாகின்றது....இது ஆய்வுக்குரியதுதான்
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குதற்கொலைகள் பற்றி நல்ல தேவையான அலசல். மனிதர்கள் அவசரத்தில் எடுக்கும் முடிவு. வாழும் வரை போராடு... வழியில்லை என்றாலும் வாழ்...! எதற்காகவும் சாவது கோழைத்தனம்.
நம்பிக்கை விதைகளை மனித வாழ்க்கையில் விதைத்திடுவோம்!
தமிழ் மணம் ஆறு மனமே ஆறு.
மிக்க நன்றி மணவையாரே தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்....
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
மனதில் வேதனையான விடயம்... இப்படியான நல்ல மனிதர்களுக்கு சோதனை அதிகம்..இவர் செய்த தவறை யாரும் கண்டதில்லை... சில நேரங்களில் திட்டமிட்ட செயலாக இருக்கலாம்...த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குமுதலில் சொல்லியுள்ள இரண்டு செய்திகள் வருத்தமளிப்பதாகவும், இறுதியில் சொல்லப்பட்டுள்ள சூரஜ் இன் முடிவு.., வருத்ததுடன் கோபமளிப்பதாகவும் உள்ளது.. கராத்தே., தியானம்., போன்ற பயிற்சிகள் மனதை ஒருமுகப்படுத்தும், தன்னம்பிக்கை தரும்.., சூழ்நிலைகளை கையாளக்கூடிய பக்குவம் தரும் எனும் நம்பிக்கையிலும் மண் விழுந்து விட்டதே.. தோல்வி மட்டுமே உலகம் இல்லை. தோல்வியை தாண்டி இன்னொரு உலகம் உள்ளது என்பதை எப்போதுதான் உணரப்போகிறோமோ.
பதிலளிநீக்குமிக்க நன்றி சிவம் தங்களின் விரிவான கருத்திற்கு. உண்மை என்னவென்றால் பல சமயங்களில் மூளையின் ரசாயன செயல்பாடுகள் தான் விஞ்சி நிற்கின்றன...
நீக்குதற்தொலை கோழைத்தனமான செயல் அல்லவா?
பதிலளிநீக்குவாழ்வில் சோதனைகளுக்குப் பயந்து தற்கொல செய்து கொள்வது
மிகவும் வருந்துதற்கு உரியது
மிக்க நன்றி கரந்தையார் நண்பரே தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..
நீக்குதவறான முடிவினை அவசரப்பட்டு எடுப்பதால் வரும் விளைவே இது. இவ்வாறான மன எண்ணம் உள்ளவர்கள், தோன்றுபவர்கள் நெருக்கமான நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அல்லது மனநல மருத்துவரை அணுகலாம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குஇன்றைக்கு மிகத் தேவையான பிரச்சனையைப் பற்றிய ஆழமான அலசல். தற்கொலை என்பது ஒரு நிமிட நேரத்தில் ஏற்படும் மனப் பிறழ்வுதான். அந்த நேரத்தில் அவர்கள் சந்தித்த அவமானம், தோல்வி போன்ற பலவீனங்களே மனதில் தோன்றும். அதுவே விஸ்வரூபம் எடுக்கும். தன்னை மட்டுமே சிந்தித்து, தன்னை சார்ந்தவங்களைப் பற்றி சிந்திக்காமல் விட்டுவிடுகின்றனர். சிந்திக்க வைக்கும் பதிவு.
பதிலளிநீக்குத ம 10
அதேதான் நண்பரே...மூளையின் சிந்திக்கும் திறன் பலவீனமாகும் போது நிகழ்கின்றது...இது பல சமயங்களிலும் மனப்பயிற்சிகளையும் தோற்கடித்துவிடுகின்றது...மிக்க நன்றி நண்பரே!
நீக்குநிஜத்தில் வில்லன்களான ஹீரோக்கள்தான் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி வலிப்போக்கன் தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குதற்கொலை கோழைத்தனமானது! ஒரு சில நொடி உணர்ச்சிப்பூர்வமான சிந்தனை அவர்களை இப்படி ஆளாக்கிவிடுகிறது!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குதற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகள். சிறிதும் சிந்திக்காது க்ஷணநேர முடிவின் விளைவே தற்கொலை. .
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குதோல்விகளுக்காக(தேர்தல்,தேர்வு,காதல்....) உயிரி விடுதல் ஒரு தீர்வாகௌமா என்பதை உணராமல்,சார்ந்திருப்போரைப் பற்றியெல்லாம் எண்ணாம தற்கொலை செய்து கொள்வது மடமை.
பதிலளிநீக்குநல்ல பதிவு
மிக்க நன்றி செபி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்./.
நீக்குமிக அருமையான பகிர்வு!
பதிலளிநீக்குஇங்கே நிறைய பேருக்கு சுயநலமும் தன் வேதனையும் தன் மன உணர்வுகளுமே பெரிதாக இருக்கிறது. தன்னை நேசிப்பவர்கள் சிறிதும் துன்பப்படக்கூடாது என்ற பாச உணர்வு ஆழமாக் இருந்தால் இந்த மாதிரி தற்கொலை நிகழ்வுகள் ஏற்படாது.
நீங்கள் கூறியது போல, பள்ளிகளிலிருந்தே தன்னம்பிக்கையும் தைரியமும் வளர்க்கக்கூடிய பயிற்சிகள் கொடுத்து வர வேண்டும்.
துளசி ஐயா! தற்கொலை கோழைத்தனமானது என்பதில் நானும் உடன்பாடுடையவனே. இதற்கு முன் நீங்கள் தற்கொலை பற்றி எழுதிய பதிவுகளிலும் நான் அதற்கு இசைவான கருத்துக்களையே தெரிவித்து வந்ததையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
பதிலளிநீக்குஆனால், 'உயிரா மானமா' என வரும்பொழுது உயிரைக் கொடுத்தாவது தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்பது நம் மரபுக்கே உரிய வழக்கம்தானே? மேற்கொண்டு வாழ அஞ்சித் தற்கொலை செய்து கொள்ளும் கோழைகளுக்கும், தன் உயிரைக் கொடுத்துத்தான் தன் பெயரை - மானத்தை நிலைநிறுத்த முடியும் என்கிற நிலையில் உள்ள ஒருவர் செய்து கொள்ளும் தற்கொலைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு இல்லையா? இது தவிர, 'வடக்கிருத்தல்' எனும் முறை ஒன்றும் உண்டு. ஆனால், அதற்கும் இதற்கும் துளியும் தொடர்பில்லை என்பதால் அதை இங்கு தவிர்க்கிறேன்.
தேர்தல் தோல்வி காரணமான மனமுடைவால் தற்கொலை புரிந்து கொண்ட ஜான் போன்ற கோழைகளும், பெற்ற மகன் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாது அவன் கண் முன்னாலேயே தொடர்வண்டி முன் பாய்ந்த கலா போன்ற அரக்கிகளும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே! ஆனால், சூரஜின் தற்கொலையை அப்படி என்னால் கருத முடியவில்லை. ஒருவேளை அவர் அப்படி ஒரு குற்றத்தைச் செய்யாதிருந்திருக்கலாம். அல்லது, தான் செய்த இப்படி ஒரு குற்றத்தால் தன் பெண்டு பிள்ளைகளுக்கு சமூகத்தில் ஏற்படும் பழியைத் துடைக்கத் துயிரை விலையாகத் தருவதுதான் ஒரே வழி என அவர் கருதியிருக்கலாம். (பெரும்பாலும், இரண்டாவதுக்குத்தான் கூடுதல் வாய்ப்புண்டு). அதை நாம் தவறு சொல்ல முடியாதில்லையா?