திங்கள், 21 செப்டம்பர், 2015

சென்னை - இந்தியாவின் மருத்துவ உலகின் தலைநகரமா?!! மற்றும் வலைப்பதிவர்களுக்கு......


சமீபத்தில் நண்பர் ஒருவரின் மாமனாருக்குத் திடீரென நெஞ்சு வலி.  உடனே நண்பர் அருகில் இருக்கும் இருதய நோய்க்கான மருத்துவ மனைக்குச் செல்ல முயற்சிக்க அங்கு மருத்துவர் இல்லை என்றதும், அடுத்து ஒரு மருத்துவமனைக்குச் செல்ல ஆம்புலென்ஸை வரவழைக்க, அவர்கள்

“ஸார் போன உடனே முதல்ல பணம் கட்ட ரூ 50000 இருக்கா சார்?  அப்படினா ஆம்புலன்ஸ்ல ஏறுங்க....இல்லைனா வேற ஆஸ்பத்திரி பாருங்க”

நண்பர் ஸ்தம்பித்துவிட்டார். என்றாலும் வேறு வழியின்றி பணம் எடுத்துக் கொண்டு அந்த ஆம்புலன்ஸில் செல்ல வேண்டியதாகியது. 

இதோ அடுத்து......

“வாங்க! என்ன உதவி உங்களுக்குத் தேவை?”

டேய் ஆதித், என்னடா நாம கரெக்டாத்தானே வந்துருக்கோம்....இல்ல மாறி வந்துட்டோமா”

“ஏம்மா உனக்குச் சந்தேகம்?”

“இல்லடா, என்னவோ துணிக்கடைக்குள்ளயோ, இல்ல பெரிய ஆஃபிஸ்லயோ நுழைஞ்சா மாதிரி ஒரு ஃபீலிங்க்....அங்கதான் இப்படி ஒரு ஆளு வாசல்ல நின்னு இப்படிக் கேப்பாங்கடா.....அதான்....”

“ம்மா...ஐயோ..சத்தம் போட்டுப் பேசாதமா... இது சாதாரண ஹாஸ்பிட்டல் இல்ல...பெரிய்ய்ய்ய ஹாஸ்பிட்டல்...கார்பரேட் ஹாஸ்பிட்டல்..”

“டேய் அதெல்லாம் எனக்குத் தெரியாதா என்ன!? ஓ! அதுவும் சரிதான் “ஹாஸ்பிட்டல்” ல்லையா அதான் “ஹாஸ்பிட்டாலட்டி” காமிக்கறாங்க போல....”

“ஹஹஹ ம்மா பரவாயில்லையே உனக்குக் கூட செம டைமிங்க் ஹூயூமர் சென்ஸ்....”

“ஹேய் என்னா? நாங்களும் சின்ன வயசுலருந்து செம ஹ்யூமர் சென்ஸ் உள்ளவங்கதான்......எல்லாம் கல்யாணம் கட்டினதுக்கு அப்புறம்தான் மழுங்கிப் போச்சு....”

“ம்மா ஷ்ஷ்ஷ்...

“மே ஐ ஹெல்ப் யு சார், மேம், ஆர் யு எ ந்யூ பேஷன்ட்? ன்யூ டு அவர் ஹாஸ்பிட்டல்.....ஹூம் டு யு வான்ட் டு மீட்?”

“தம்பி நாங்க எதுக்கு வந்துருக்கோம்னு இன்னும் சொல்லலை.....இன்னும் டாக்டரையே பாக்கலை.  அதுக்குள்ள நீங்களே “நாங்க பேஷன்ட்” அப்படினு முடிவு பண்ணிட்டீங்க!!!”

“ஸாரி மேம்....ஐ டோன்ட் கெட் யு”

“ஓ உங்களுக்குத் தமிழ் தெரியாதா?” (ஆங்கிலத்தில் கேட்டேன்)

“தெர்யும்.....பட் ஐ அம் கம்ஃபர்டபிள் இன் இங்கிலிஷ்.  ஹேய் “........” கம் ஹியர் கைட் தெம் இன் டமில்....மேம்.. இஃப் யு வான்ட் இன் டமில் ஹீ வில் ஹெல்ப் யு”

“ம்மா என்னம்மா நீ.. சும்மா இரு இவங்க கிட்ட என்ன வம்பு...(மெதுவாக எனக்கு மட்டும் கேட்கும் வகையில் என் மகன்)...

இட்ஸ் ஓகே சார்....நோ ப்ராப்ளம்....வி வுட் லைக் டு மீட் த ஜெனரல் ஃபிசிசியன் டாக்டர் “.................”

“மேல முதல் ஃப்ளோர் போனீங்கனா அங்க அவங்க கைட் பண்ணுவாங்க...” தமிழ் பையன் பதில் சொன்னார்.

“அடேங்கப்பா அங்க வேற கைடா....ஏண்டா இது சுத்துலா இடமா...நாம என்ன இந்த ஆஸ்பத்திரியைச் சுத்திப் பாக்கவா வந்துருக்கோம்...ம்ம் இதத்தான் இப்ப மெடிக்கல் டூரிசம்னு சொல்றாங்க போல....”

 “ஹ்ஹ்ஹ் ம்மா ...”

“டேய் பர்ஸ்ல பணம் இருக்காடா? செக் பண்ணிக்க பணம் இருக்கானு...பாத்தா பயமா இருக்குடா.”

சரி மேலே ஏறுவதற்குள் என்னவென்று சொல்லிவிடுகின்றேன். (நாங்கள் மின் ஏணியோ, மின் தூக்கியோ உபயோகிப்பது இல்லை.  படிகள் வழிதான் ஏறுவோம்..)  

ஒன்றும் இல்லை...மகனுக்கு ஒரு மாத காலமாக இருமல், சளி. நான் எத்தனை முறை பரிந்துரைத்தும், மிதமான சூட்டில் உப்புத் தண்ணீர் விட்டு தொண்டையைக் கழுவச் சொல்லியும் செய்யவில்லை.

நான் எப்போதும் 6.30 மணிக்கே காலை உணவு, மதிய உணவு எல்லாம் தயார் செய்து வைத்துவிடுவேன். ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் அவனுக்கு எமர்ஜென்சி அழைப்பு வரலாம் என்பதால். அப்படி வந்தால் அதன் பின் நான் கொண்டு கொடுத்துவிடுவது வழக்கம்.

காலை உணவைப் பெரும்பாலும், நேரமில்லை என்று தவிர்த்துவிடுவான். கொழுப்பு!  மதிய உணவும் பல சமயங்களில் அறுவை சிகிச்சை இருப்பதாலும், நாலுகால் நோயாளிகள் அதிகமாக இருந்தாலும் உண்ண நேரம் இருக்காது. இரவுதான். அதுவும் அவன் வீட்டிற்கு வரும் சமயம் தாமதமானாலும், அப்போதுதான் நிதானமாக உணவு உண்பது வழக்கம்.

மருத்துவர்கள் பிறருக்குத்தான் அறிவுரைப்பார்கள்.  தங்களுக்கு வந்தால் எதையும் பின்பற்ற மாட்டார்கள் என்று சொல்லுவதுண்டு.  என் மகனும் அதற்கு விதிவிலக்கல்ல.

அவனது வலது காதின் அருகில் லிம்ஃப் நோட் வேறு பெரிதாகி இருந்ததை அவனும் கவனித்திருந்தான், அவனது பாஸ் மருத்துவரும் கவனித்திருக்கிறார்.

அவனது பாஸ் மருத்துவர், மிக நல்ல பொதுநல மருத்துவர் ஒருவரைப் பரிந்துரைத்து அவர் வேலை செய்யும் இந்தப் பெரிய மருத்துவமனைக்குச் செல்லுமாறு பரிந்துரைத்தார். ஒருவேளை டிபியாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில். சரி மேல் தளம் வந்தாயிற்று.

“மே ஐ ஹெல்ப் யு மேம், ஸார்?”

“டாக்டர் “.......” பார்க்க வேண்டும்.”

“யாருக்குங்க”

“எனக்குதான்..” என் மகன்..

“அதுக்கு முன்னாடி அந்தக் கவுண்டர்ல போய் ரெஜிஸ்டர் பண்ணிடுங்க”

பேர், வயது, முகவரி, ஜாதகம் எல்லாம் கேட்டு ஒரு பெரிய அட்டையுடன் கூடிய ஒரு ஃபைலைப் போட்டார்கள்.  ஒரு தொகைக்கான ரசீதும் கொடுத்துக் கட்டச் சொன்னார்கள்.  தொகை கட்டினால்தான் மருத்துவரைப் பார்க்க முடியும்.

“டேய் ஆதித் உள்ள வந்தா பர்ச கவுண்டர்ல வைச்சுட்டுத்தான் போகணும் போல....”

“ஹ்ஹ்ஹ் ஆமாமா...பின்ன பெரிய்ய்ய ஆஸ்பத்திரி...ஃபுல் ஏர்கண்டிஷன்....5 ஸ்டார் மாதிரி...இல்லல்ல 7 ஸ்டார்....அங்க பாரு..எத்தனை கவுண்டர்.... எத்தனை ஏஜன்ட் போல ஆளுங்க...அப்புறம் பெருக்கித் துடைச்சுக்கிட்டே இருக்காங்க பாரு அதுக்கெல்லாம் சேத்துதான் இந்தத் தொகை....”

“டேய் இதோட முடியட்டும். உனக்கு ஒண்ணும் இருக்கக் கூடாதுடா...அப்புறம் நாம நாமம் போட்டுக் கோவிந்தா..கோவிந்தானு உண்டியல் ஏந்த வேண்டியதுதான்...சே என்னடா உங்க டாக்டர் இப்படி இங்க போகச் சொல்லிருக்காரு.  நம்ம டாக்டரையே பார்த்துருக்கலாமே...”

“ஏற்கனவே உண்டியல் ஏந்தற நிலைமைதான்.. தலைக்கு மேல போயாச்சு...சாண் போனா என்ன. முழம் போனா என்ன....இங்க பாரு வந்தாச்சு....ஆக வேண்டியதப் பார்ப்போம்...”

பணம் செலுத்தியதும், “..........” இவங்கள டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போங்க”

“மேம், சார் வாங்க ..” என்று சொல்லி எங்களுடனேயே, ஏதோ விஐபியை அழைத்துச் செல்லுவது போல ஒருவர் மருத்துவரின் அறை வரை வந்து, உபசாரம் செய்வது போல் தழைந்து..

“டாக்டர் இஸ் ஃப்ரீ...உள்ள போங்க....” என்று சொல்லி விடைபெற்றார்.

மருத்துவரிடம் சொல்ல வேண்டியதைச் சொன்னதும் அவரும் பரிசோதித்துவிட்டு..

“ம்ம்ம் லிம்ஃப் நோட் பெரிசாகித்தான் இருக்கு.  ஸோ ஒரு செஸ்ட் எக்ஸ்ரே எடுத்துப் பாத்துரலாம்....”

அவர் எழுதிக் கொடுத்த சீட்டைப் பெற்றுக் கொண்டு வெளியில் வரவும், ஒருவர் வந்து அந்தச் சிட்டைப் பார்த்துவிட்டு....

“நேரா போங்க சார்....போய் லெஃப்ட் எடுத்து, கீழ போனீங்கனா அங்கதான் எக்ஸ்ரே லேப்.”

“அதுக்குத் தனியா பணம் கட்டணுமா?"

“ஆமா சார்...அங்கயே சொல்லுவாங்க கவுண்டர்ல.  கட்டிட்டு ரசீதக் கொண்டு போங்க லேபுக்கு.  எக்ஸ்ரே எடுப்பாங்க..”

“அடப்பாவிங்களா இதுக்குத் தனியா சார்ஜா...”

“ம்மா மெதுவா....எதுவும் இருக்கக் கூடாதுனு வேண்டிக்கமா...சொத்தையே எழுதி வைக்கச் சொன்னாலும் சொத்தே இல்லையேம்மா! ..”

"வாசல்ல துண்டை போட்டு உக்காந்தா போச்சு!"

கவுண்டரில் தொகை செலுத்தி....(அதெல்லாம் ரகசியம்...’ஷ்ஷ்ஷ் சொல்லாதே யாரும் கேட்டால்...!!!) எக்ஸ்ரே எடுத்து அது கையில் அடுத்த 20 நிமிடத்தில் வந்ததும், என் மகன்

“ம்மா நல்ல காலம் க்ளியராதான் இருக்கு.  இரு டாக்டர் என்ன சொல்றார்னு பார்ப்போம்..”

டாக்டரும் “க்ளியர்” என்று சொல்லிவிட்டாலும், “ஆனால் வைரல் இன்ஃபெக்ஷன் ஏதோ இருக்கு.  ஸோ நீங்க இந்த ஆண்டிபயாட்டிக் எடுத்துக்குங்க..”.என்று சொல்லி ஒரு நாலு மாத்திரை வகை எழுதிக் கொடுத்துவிட்டு.....”எதற்கும் இந்த எக்ஸ்ரேயை ரேடியாலஜிஸ்ட் கிட்ட கொடுத்து ஒரு ஒப்பினியன் வாங்கிடுங்க...அப்புறம் ஈஎஸ்ஆர் டெஸ்டும் எடுத்துருங்க”

“ஐயோடா....திரும்பவும் பணம் கட்டணுமா.....”

மீண்டும் ஒருவர் வந்து இரத்தம் எடுப்பதற்கு பணம் கட்ட வேண்டும் என்று சொல்ல, பணம் செலுத்தி, ரசீதைப் பெற்றுக் கொண்டு அங்கு இரத்தம் கொடுத்துவிட்டு, பின்னர் ரேடியாலஜிஸ்ட்டிடம் எக்ஸ்ரேயைக் கொடுக்கச் சொன்னார்.

“ஐயோ அப்போ ரேடியாலஜிஸ்ட்டுக்கும் பணம் கொடுக்கணுமாடா”

“ம்மா சத்தியமா கார்பரேட் ஹாஸ்பிட்டல்ஸ் எல்லாமே செம துட்டு வாங்குறாங்கம்மா..... இஎஸ்ஆருக்கு மட்டும்தான் பணம் கட்டணும்னு நினைக்கறேன்.  ரேடியாலஜிஸ்ட் ஒப்பினியன் தானே...ஸோ பணம் கட்ட வேண்டியிருக்காதுனு நினைக்கிறேன்..பார்ப்போம்..”

இரத்தம் கொடுத்துவிட்டு, ரேடியாலஜிஸ்ட் ஒப்பினியனுக்கு அந்த கவுண்டரில் எக்ஸ்ரேயைக் கொடுத்துவிட்டு, சீட்டைப் பெற்றுக் கொண்டு, இரு முடிவுகளையும் மறுநாள் வந்து பெற்றுக் கொள்ளுமாறு சொல்லவும், நாங்கள் பெருமூச்சுடன்.. “ஹப்பாடா முடிஞ்சுச்சே...” என்று சொல்லி, மீண்டும் முதல் கவுண்டரில் சென்று அவர்கள் எல்லாம் பரிசோதித்து...(அதாங்க பணம் எல்லாத்துக்கும் கட்டியிருக்கோமானு பில் எல்லாம் செக் செய்து ரசீதும் செக் செய்து)

“ஓகே...யு கேன் கோ....தாங்க்ஸ் ஃபார் கம்மிங்க் டு அவர் ஹாஸ்பிட்டல்”

“அடப் பாவிங்களா.....தாங்ஸ் வேறயா....நல்ல காலம் “நன்றி மீண்டும் வருக” அப்படினு சொல்லாம விட்டாங்களே”

“ஹ்ஹ்ஹ் ம்மா நீயே சொல்லிக் கொடுத்துருவ போலருக்கு.....”

“டேய் இதுக்குத்தாண்டா நான் உங்கிட்ட அடிச்சுக்கிட்டேன். உப்புத் தண்ணி கார்கிள் பண்ணுனு, நான் மிளகு, துளசிக் கஷாயம் வைச்சுத் தரேன் குடினு..சொன்னா கேட்டாத்தானே....இப்ப பாரு ஒண்ணுமே இல்லாததுக்கு இவ்வளவு துட்டு....”

நாங்கள் வெளியே வரும் போது ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் தன் கணவருடன் உள்ளே வந்து கொண்டிருந்தார்.  எனக்கு அவரைப் பார்த்ததும் தோன்றியது இதுதான்..

“ஸார்/மேம், நீங்க இங்க தானே ரெகுலரா செக்கப் வந்துக்கிட்டுருக்கீங்க.  இங்கதானே குழந்தை பெத்துக்கப் போறீங்க......நாங்க ஒரு ஆஃப்ர் வைச்சுருக்கோம். ....என்ன பண்ணுங்க.... குழந்தை பிறந்த உடனே குழந்தை பேர்லயும், உங்க பேர்லயும், ஒரு அமௌன்ட் போட்டு அக்கவுண்ட் ஓபன் பண்ணிடுங்க.  ஏன்னா குழந்தைக்கு காய்ச்சல், தடுப்பூசி அப்படி இப்படினு வரத்தானே செய்யும்...அதனாலதான்...ஓபன் பண்ணிட்டீங்கனா.....உங்களுக்கு மாசா மாசம் பணம் கட்ட வேண்டாம்.  உங்க அக்கவுண்ட்லருந்து கழிச்சிடலாம். அப்பப்ப அக்கவுண்ட டாப் அப் பண்ணிக்கலாம். அப்புறம் அதுலயும் சில ஆஃப்ர் வரும் சீசன்ல (நோய் சீசன், பண்டிகைகள் ஆஃபர்..இப்படி) . ஸோ உங்களுக்கு செலவும் கம்மி...ஈசியும் கூட......உங்க குடும்பத்து பேர்லயும் கூட ஓபன் பண்ணலாம்...யோசியுங்க....” என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்களோ?

சென்னையில் நிறைய கார்ப்பரேட் மருத்துவமனைகள் பெருகி வருகின்றன.  போகிற போக்கைப் பார்த்தால், சென்னை மருத்துவ உலகின், இல்லையில்லை, மன்னிக்கவும், மருத்துவ “வர்த்தக” உலகின் தலைநகரமாகித்தான் வருகின்றது. மிக மிக வேதனையான ஒரு விஷயம்.

(எந்த மருத்துவரும், தனிஒருவன் படத்தில் சொல்லுவது போல், மருந்துகளின் ஜெனிரிக் பெயர் எழுதுவதில்லை.  ப்ராண்ட் நேம் தான் எழுதுகின்றார்கள்.  பார்க்கப் போனால் மருத்துவர்கள் ப்ரான்ட் நேம் எழுதக் கூடாது. என் மகன் எழுதுவதாக இருந்தால் ஜெனிரிக் நேம்தான் எழுதுகின்றான். ஆனால் அதில் சிக்கல்களும் உண்டு....இதைப் பற்றி பிறிதொரு சமயம்.)

-----கீதா

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
சரி!  நண்பர்களே! எல்லாரும் பதிவர் விழாவுக்கு உங்கள் பெயர் கொடுத்து, உங்க விவரம் எல்லாம் கொடுத்துட்டீங்களா? கையேடிற்கு? கையேடுக்கு விவரங்கள் சூடு பிடிக்கவில்லை என்று நம் நண்பர் தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் எழுதியிருந்தார்கள்.  அதனாலதான் மீண்டும் நினைவு படுத்தல். கையேட்டிற்கு விரைவாக தங்கள் விவரங்களைத் தயவாய் கொடுத்து விடுங்கள். பதிவர் விழாவுக்கான உங்கள் நன் கொடையும் கொடுத்துவிட்டீர்களா?  இல்லை என்றால் அதையும் செலுத்திவிடுங்கள் தயவாய்!.  எல்லா விவரங்களும் அறிய இந்த சுட்டியைச் சொடுக்குங்கள்....நம் நண்பர்கள், சகோதரிகள் எல்லோரும் விழா பற்றி நினைவு படுத்திப் பதிவுகள் இட்டுக் கொண்டேதான் இருக்கின்றார்கள்...

போட்டியில் பங்கெடுக்கின்றீர்களா அதற்கு இங்கு செல்லுங்கள் விதிமுறைகள் அறிய...


பதிவர்விழா வலைத்தளத்தைத் தொடர்ந்து பாருங்கள் தகவல்களுக்கு..

மிக்க நன்றி!

51 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் நாகேந்திர பாரதி தங்கள் கருத்திற்கு...

      நீக்கு
    2. மிக்க நன்றி நண்பர் நாகேந்திர பாரதி தங்கள் கருத்திற்கு...

      நீக்கு
  2. ஆத்தாடி மருத்துவமனைய நினச்சா கலக்கமா இருக்கே...ஆமா அன்னாடங்காச்சிக்கு எல்லாம்..மருந்தும் மருத்துவரும் நர்ஸும் இல்லாத அரசு ஆஸ்பத்திரி தான் வழி போல...நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்னு சும்மாவா சொன்னாக.....நன்றிமா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோதரி! உண்மை அதுதான்...மிக்க நன்றி சகோதரி...தங்களின் கருத்திற்கு..

      நீக்கு
  3. நகைச்சுவையாக எழுதி இருந்தாலும் முக்காலும் உண்மை - கடைசியில் சொல்லியிருக்கும் AMC offer உட்பட. இந்த பந்தாவுக்காகவே நிறைய பேர் நான் அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லக்கூடும். மேலும் மெடிகல் இன்ஷியூரன்ஸ் போன்ற சமாச்சாரங்கள் எடுத்திருந்தால் இன்ஹ்ச் செலவுகள் அதில் சரி செய்யக் கூடும். அவர்கள் பணம் கட்டுமுன் இதில் நிறைய அனாவசியன்களைக் கட் செய்து விடுவார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஸ்ரீராம். கொஞ்சம் கற்பனை கலந்ததுதான்....ஆமாம் இப்ப மருத்துவமும் ஸ்டேட்டஸ் சிம்பலாகி வருகின்றது....வேதனையான விஷயம்...இன்சுரன்ஸ்...அது ஒரு பக்கம்....மருந்துகள் ப்ரான்ட் நேம் வைத்து விளையாடுவது மறுபக்கம்....மகனும், என் கசின் மெடிக்கல் ரெப், இப்போ மேலாளர் நிறைய சொல்லி நிறைய தகவல்கள் இருக்கின்றன. தனிஒருவன் கதை போல.....உங்களுக்கும் தெரிந்திருக்கும்....

      மிக்க நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
  4. மருத்துவத் துறை வணிகமயமாகி நீண்ட காலம் ஆகி விட்டது சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ந்னண்பரே! இதற்கெல்லாம் எப்போது ஒரு தீர்வு வரும் என்று தெரியவில்லை. மக்கள் ஒத்துழைத்தால் தரண்டெழுந்தால் நிச்சயமாகத் தீர்வு வரும்...

      மிக்க நன்றி நண்பர் கரந்தையாரே...

      நீக்கு
  5. தஞ்சாவூரும் கிட்டத்தட்ட அவ்வாறுதான் வந்துகொண்டிருக்கிறது. வேதனைப்படவேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம் வேதனையான விசயம். சிறிய ஊர்களும் அப்படி வந்து கொண்டிருப்பது...மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா...தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  6. மிக மிக நல்ல பதிவு மேடம்!
    கார்ப்புரேட் ஹாஸ்பிடல்ஸ் எல்லாம் எவ்வல்வு மோசம் என்பதை அழகாக எழுதிட்டீங்க. பலருக்கும் இது போன்ற அனுபவம் இருக்கலாம் ஆனால் யாரும் யோசிப்பது கிடையாது.

    உங்க மகன் வெட் மருத்துவர் ஆனாலும், மருத்துவர்கள் செய்யும் பல மோசம் உங்களுக்கு தெரிகிறது.
    உங்கள் நிலைமை யோசித்தால்...
    ஐய்யோ!

    எதையும் கேட்க முடியாம்அலும், தெரிந்தும் தெரியாமல் இருப்பது போன்று இருக்க வேண்டிய நிலமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மகேஷ் தங்களின் விரிவான கருத்திற்கு. நிறைய சொல்லலாம்தான்...முடிந்தால் தொடர் எழுதுவேன்.

      நீக்கு
  7. பகுதி நேர வேலைக்காக மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மிக குறைவான ஊதியத்தில் வந்து வேலையும் செய்யத் தொடங்கி விட்டார்கள். மனிதர்களின் உடம்பு என்பது தற்போது மைக் டெஸ்டிங் ஒன் டூ த்ரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜோதிஜி சகோ! ஆமாம் நீங்கள் சொல்லுவதும் நடக்கத்தான் செய்கின்றது...மனிதர்களின் உடம்பு கினி பிக் என்றும் கூட சொல்லலாமோ....

      நீக்கு
  8. வேண்டும்.. வேண்டும்.. நோய் நொடி இல்லாத வாழ்வு வேண்டும்..
    மருத்துவமனையின் படிக்கட்டுகளை மிதிக்காத வரம் வேண்டும்!..

    அந்த வரம் ஒன்றே அனைவருக்கும் வேண்டும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! நோய் நொடி இல்லாத வாழ்வு வரம் வேண்டும். நோய் இல்லாமல் இருந்தாலே பணக்காரர் தாம் நாம்....ஹெல்த் இஸ் வெல்த் என்பது போல்....மிக்க நன்றி ஐயா அருமையான கருத்திற்கு

      நீக்கு
  9. வணக்கம் சகோ
    சேவை இப்போது தேவைக்காக செய்யும் பணம் காய்க்கும் மரமாகிவிட்டது ..
    தம+
    விழா ஆதரவுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ....மிக்க நன்றி கஸ்தூரி சகோ! தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  10. நல்ல கட்டுரை. தில்லியில் இருக்கும் சில மருத்துவமனைகளுக்கு அங்கே சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நண்பர்களை பார்க்கும் நிமித்தம் செல்வதுண்டு. ஏதோ ஒரு ஐந்து நட்சத்திர விடுதிக்குள் நுழைவது போன்ற உணர்வு தான். வாகனம் நிறுத்த வசூலிக்கும் தொகையைக் கேட்கும்போதே நமக்கு மயக்கம் வந்து விடும். ஒரு மணி நேரத்திற்கு - நான்கு சக்கர வாகனத்திற்கு 100 ரூபாய்! இரண்டு சக்கரம் எனில் 75 ரூபாய்..... இதைக் கேட்டு மயக்கம் வந்து அங்கே நீங்கள் அனுமதிக்கப்பட்டால் ஆகும் செலவுகள் தனி......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி! யம்மாடியோவ் பார்க்கிங்க் சார்ஜ் கண்ணைக் கட்டுதே......ஐயையோ அதுக்கும் அப்புறம் செலவாகிடும்....நடராஜா வண்டியே போதும்...

      நீக்கு
  11. ரெகுலர் செக்கப் பண்ண அக்கவுண்ட் என்று சொன்ன விஷயங்கள் உட்பட எல்லாமே இன்றைய யதார்த்த நிலைகள் தான். இதைப்படித்ததும் சினிமாப்படம் ஒன்று நினைவுக்கு வந்தது. "ரமணவா? அதுதான் என்று நினைக்கிறேன். இறந்தவர் உடலை வைத்து பணம் வாங்கிய நிகழ்வு'" என்ன தான் சினிமா நாடகம் செய்திகள் என்று விழிப்புணர்வைக்கொண்டு வந்தாலும் அந்த நேரத்தில் மக்கள் இப்படித்தான் போய் எங்காவது சிக்க வேண்டியுள்ளது என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அப்படி ஆகிப் போச்சு...சகோதரி சசி! ரமணா படம்தான்...அது உண்மையாகவே நடக்கின்றதுதான். விழிப்புணர்வு மக்களிடையே வர வேண்டும் சகோதரி....மிக்க நன்றி...

      நீக்கு
  12. மருத்துவப் படிப்பே வியாபாரம் ஆகி விட்ட நிலையில் மருத்துவ மனைகளும் அப்படித்தானே போகும் ?

    பதிலளிநீக்கு
  13. நகைச்சுவை எனும் தேன் கலந்து ஒரு கசப்பான விஷயத்தை அருமையாச் சொல்லிட்டீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சென்னைப்பித்தன் ஐயா தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  14. கார்பரேட் மருத்துவ மனைகளை நன்றாக சாடியுள்ளீர்கள்! அரசு மருத்துவ மனைகளிலும் நவீன வசதிகள் வந்துவிட்டது. என்ன நமக்கு கொஞ்சம் பொருமை வேண்டும். பதிவர் விழாவுக்கு வர முடியாது போல தோன்றுகிறது. இந்தவாரத்தில் நன்கொடை அனுப்பி விடுகின்றேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சுரேஷ். அறிந்தோம். ஆமாம் பொறுமை நிறையவே வேண்டும். நேரமும் ..ஏனென்றால் கூட்டம் அதிகம் இருப்பதால்...

      ஓ தாங்கள் வரமுயற்சிப்பதாகச் சொல்லி இருந்தீர்கள் இல்லையா சுரேஷ். நன்றி !

      நீக்கு
  15. பழைய பொது மருத்துவமனை, புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவ மனை, அம்மா மருத்துவ மனைகள் இவைகளிலெல்லாம் புருட்சித் தலைவியின் ஆணைநின் பேரில் உலகத்தரத்தில் இயங்கும்போது ஏன் இப்படி கார்ப்போரேட் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சென்று அவதிப்பட வேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லுவது நாங்களும் இப்போது கேள்விப்பட்டோம். இது மகனின் மருத்துவர் பரிந்துரைத்ததன் பேரில் சென்றதால்..தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பர் கவிப்ரியன்

      நீக்கு
  16. அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை பணத்தை கட்டி படிக்க வேண்டியது இருக்கிறது குறுகிய வழியில் சீக்கிரம் எடுப்பதற்க்குத்தான் இந்த வகையான பந்தாக்கல் மற்றபடி பொது சேவை செய்ய அல்லவே...
    தமிழ்மணம் 10
    வெற்றிலை - பாக்கு கூரியர்ல வரலையா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ அதுவும் சரிதான் கில்லர்ஜி சகோ.....கருத்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  17. கடந்த இரண்டரை ஆண்டுகளாக எனக்கு நாக்கில் ஒரு பிரச்சினை உள்ளது .எல்லா பெரிய டாக்டர்களிடமும் காண்பித்து விட்டோம்.(நாக்கு தொண்டை வாய் பல் )
    எல்லா ரிப்போர்ட்டும் நார்மல் ஆனாலும் அசௌகரியம் தொடர்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபாய அருணா சகோ தாங்கள் தங்கள் நாக்கில் என்ன பிரச்சனை என்று சொல்லி மெயில் அனுப்ப முடியுமா? முடிந்தால், விருப்பமிருந்தால்...

      மகனிடம் காட்டிக் கேட்கலாம். அவன் கால்நடை மருத்துவர் என்றாலும் கிட்டத்தட்ட எல்லாம் நான்கு கால்களுக்கும் 2 கால்களுக்கும் ஒரே போல்தான் உள்ளது. மருந்துகள் உட்பட. மகன் சற்று நன்றாக அனலைஸ் செய்வான் அதனால்தான் அவன் மருத்துவர் பரிந்துரைக்கும் வாய்ப்பு உள்ளது அதனால்தான் ..

      நீக்கு
  18. பெரியாஸ்பத்திரிக்கும், பெரிய்ய்ய ஆஸ்பத்திரிக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் ஆமாம் மலர். இப்பல்லாம் பெரியாஸ்பத்திரிகளும் நன்றாக இருக்கின்றன அப்படினு சொல்றாங்க...போய் பார்க்க வேண்டும்....அதுவும் குறிப்பாக தலமைசெயலகத்தில் (முன்பு) செயல்படும் பெரிய ஆஸ்பத்திரி..

      நீக்கு
  19. வணக்கம்
    அண்ணா.

    வியாபாரமாகியுள்ளது.. ஒரு வருத்தம் என்றால் 3 வருத்தம் என்பார்கள்... எல்லாம்வியாபாரமாகிவிட்டது.. அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம +1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  20. மருத்துவம் வணிகமாயிற்று
    ஆனால்,
    நோயாளிகள் திண்டாட்டம் தொடருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! மிக்க நன்றி கருத்திற்கு ஜீவலிங்கம் யாழ்பாவாணன் அவர்களே.

      நீக்கு
  21. மருத்துவப்படிப்புக்கு முதலில் 20 லட்சம் கட்டிச் சேர்ந்தால் பின்னர் வருஷத்துக்குக் குறைந்தது ஐந்திலிருந்து பத்து லட்சம் வரை செலவாகிறது என்கிறார்கள். அதை எல்லாம் திரும்ப எடுக்க வேண்டாமா? :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மருத்துவப் படிப்புக்கு முதலில் 20 லட்சம் கட்டிச் சேர்ந்தால்//

      கீதா மேடம்! நீங்க பத்து வருஷங்களுக்கு முன்னால் உள்ள விலையைச் சொல்றீங்க.... அப்டேட் பண்ணிக்குங்க!

      நீக்கு
    2. நான் சொல்ல நினைத்ததை ஸ்ரீராம் நீங்க சொல்லிட்டீங்க.

      கீதா சகோ...இது ரொம்ப ரொம்ப பழைய தொகை....இப்ப விலை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே அதிகம். விலைப்பட்டியல் நான் எளிதாக தரமுடியும். ஆனால் இங்கு தரவில்லை...உலகமே அறியும் என்பதால்...

      நீக்கு
    3. ம்ம்ம்ம்ம்?? அப்படியா? இந்த வருஷம் இங்கே ஒருத்தர் 20 லட்சம் கொடுத்துப் பெண்ணைச் சேர்த்திருக்கிறதாச் சொன்னாங்க. மேற்கொண்டு செலவுக்காக வீட்டை 75 லட்சத்துக்கு விற்கவும் முயற்சி பண்ணிட்டு இருக்காங்க! :(

      நீக்கு
  22. ஆனால் இது சென்னையில் மட்டுமில்லை, இந்தியா முழுவதும் இப்படித் தான்! சில ஊர்களைத் தவிர! இங்கே ஶ்ரீரங்கத்திலும் ஒரு மருத்துவரைப் பார்க்கச் சென்ற போது எட்டு வயசுக் குழந்தை ஸ்போர்ட்ஸில் ஓடுகையில் கீழே விழுந்து கால்க் கணுவில் அடிபட்டு வீக்கத்துடன் வந்திருந்தது. அதற்கு அந்த மருத்துவர் ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கான் , , போன்றதெல்லாம் எழுதிக் கொடுக்கவும் குழந்தையின் உறவினர்கள்
    பயந்துவிட்டனர். எங்களுக்கும் இப்படித் தான் சாதாரணமாகச் செய்யும் நீரிழிவுப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று போனால் ரத்தப் பரிசோதனை,தைராய்ட் டெஸ்ட்,
    ஈசிஜி,என நீளமாக ஒரு பெரிய லிஸ்டே எழுதிக் கொடுத்தார். அப்புறமா அந்தத் திசையிலேயே தலை வைத்துக் கூடப்படுக்காமல் லாபரடரியிலிருந்து டெக்னிஷியனை வீட்டிற்கு வரவழைத்து ரத்தம் கொடுத்து சோதித்துக் கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இது சென்னையில் மட்டுமல்லதான்...ஆனால் சமீபத்தில் சென்னை மருத்துவ உலகின் தலைநகரமாக உருவாகி வருகின்றது என்ற செய்தியைப் படித்ததும், அனுபவமும் அதற்கு ஏற்றாற் போல் சேர இந்தப் பதிவு....மருத்துவ உலகு என்று சொல்லுவது தவறு ...ஹஹ் மருத்துவ வர்த்தக உலகம் எனலாம். இந்த ப்ரான்ட் மருந்துகள் ரொம்பவே படுத்துகின்றன. அதைப் பற்றித் தனியாக ஒரு பதிவே இல்லைய்ல்லை தொடரே எழுதலாம் அந்த அளவிற்கு தகவல் என்னிடம் இருக்கின்றது. எனது கசின் மருத்துவ விற்பனைப் ப்ரதிநிதி மேலாளராக இருப்பதால்...மகன் இந்தத் துறையில் இருப்பதால், இன்னும் சில நண்பர்கள், உறவினர்கள் இருப்பதால்.

      நீக்கு
    2. நீங்கள் எழுதியிருக்கும் அனுபவம் ம்ம்ம்ம் ஆர்த்தோ ஸ்பெஷலைஸ் செய்ய ஒரு புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் ஒன்றான (தமிழ்நாட்டில்) அதில் 2 கோடிக்கும் மேல். தொகை மட்டும். இதர செலவுகள் தனி....அப்போ வாங்காமல் என்ன செய்வார்கள்...

      நீக்கு
  23. நேற்று பதிவைப் படிக்கத் தொடங்கியதும் , அண்மையில் இறந்துபோன
    எனது அம்மாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது முதல் நடந்த நினைவுகள் கூடவே வந்ததால் தொடர்ந்து படிக்க இயலவில்லை. இன்றுதான் படித்து முடித்தேன்.

    சென்னை மட்டுமல்ல திருச்சி போன்ற நகரங்களும் இவ்வாறு மாறிக் கொண்டு வருகின்றன. மடி நிறைய பணத்தை கட்டிக் கொண்டுதான் இது மாதிரி மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். அண்மையில் கண் மருத்துவ மனை ஒன்றிற்காக ஏஜெண்டுகள் வீடுவீடாக வர ஆரம்பித்து விட்டனர். காலம் மாறிப்போச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் நெகிழ்ந்து விட்டது ஐயா! ஆம் உண்மையே ஐயா. பொது மருத்துவமனைகள் சமீபகாலமாக நன்றாக செயல்படுவதாக சொல்லப்படுகின்றது. அதாவது சென்னையில் தலைமையகத்தில் செயல்படும் மருத்துவமனை. ஆனால் இத்தனை ஆண்டுகள் பொது மருத்துவமனைகள், அவற்றின் சேவை குறித்து நல்ல எண்ணங்கள் இல்லாததால் மக்களின் மனதில் இடம் பிடிக்காத காரணத்தால் இப்போதும் மனதில் இடம்பிடிக்க மறுக்கின்றன.

      நண்பர் கவிப்ரியன் கூட பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறார்தான்....

      நீக்கு
  24. கொள்ளைக்கார ஆஸ்பத்திரியைத்தான்..கார்பரேட் ஆஸ்பத்திரின்னு பெயர் மாத்தி வச்சட்டானுங்க....

    பதிலளிநீக்கு