சமீபத்தில் நண்பர் ஒருவரின் மாமனாருக்குத்
திடீரென நெஞ்சு வலி. உடனே நண்பர் அருகில்
இருக்கும் இருதய நோய்க்கான மருத்துவ மனைக்குச் செல்ல முயற்சிக்க அங்கு மருத்துவர்
இல்லை என்றதும், அடுத்து ஒரு மருத்துவமனைக்குச் செல்ல ஆம்புலென்ஸை வரவழைக்க, அவர்கள்
“ஸார் போன உடனே முதல்ல பணம் கட்ட ரூ 50000
இருக்கா சார்? அப்படினா ஆம்புலன்ஸ்ல
ஏறுங்க....இல்லைனா வேற ஆஸ்பத்திரி பாருங்க”
நண்பர் ஸ்தம்பித்துவிட்டார். என்றாலும் வேறு
வழியின்றி பணம் எடுத்துக் கொண்டு அந்த ஆம்புலன்ஸில் செல்ல வேண்டியதாகியது.
இதோ அடுத்து......
“வாங்க! என்ன உதவி உங்களுக்குத் தேவை?”
“டேய் ஆதித், என்னடா நாம கரெக்டாத்தானே
வந்துருக்கோம்....இல்ல மாறி வந்துட்டோமா”
“ஏம்மா உனக்குச் சந்தேகம்?”
“இல்லடா, என்னவோ துணிக்கடைக்குள்ளயோ, இல்ல பெரிய
ஆஃபிஸ்லயோ நுழைஞ்சா மாதிரி ஒரு ஃபீலிங்க்....அங்கதான் இப்படி ஒரு ஆளு வாசல்ல
நின்னு இப்படிக் கேப்பாங்கடா.....அதான்....”
“ம்மா...ஐயோ..சத்தம் போட்டுப் பேசாதமா... இது
சாதாரண ஹாஸ்பிட்டல் இல்ல...பெரிய்ய்ய்ய ஹாஸ்பிட்டல்...கார்பரேட் ஹாஸ்பிட்டல்..”
“டேய் அதெல்லாம் எனக்குத் தெரியாதா என்ன!? ஓ!
அதுவும் சரிதான் “ஹாஸ்பிட்டல்” ல்லையா அதான் “ஹாஸ்பிட்டாலட்டி” காமிக்கறாங்க
போல....”
“ஹஹஹ ம்மா பரவாயில்லையே உனக்குக் கூட செம
டைமிங்க் ஹூயூமர் சென்ஸ்....”
“ஹேய் என்னா? நாங்களும் சின்ன வயசுலருந்து செம
ஹ்யூமர் சென்ஸ் உள்ளவங்கதான்......எல்லாம் கல்யாணம் கட்டினதுக்கு அப்புறம்தான் மழுங்கிப்
போச்சு....”
“ம்மா ஷ்ஷ்ஷ்...
“மே ஐ ஹெல்ப் யு சார், மேம், ஆர் யு எ ந்யூ
பேஷன்ட்? ன்யூ டு அவர் ஹாஸ்பிட்டல்.....ஹூம் டு யு வான்ட் டு மீட்?”
“தம்பி நாங்க எதுக்கு வந்துருக்கோம்னு இன்னும்
சொல்லலை.....இன்னும் டாக்டரையே பாக்கலை.
அதுக்குள்ள நீங்களே “நாங்க பேஷன்ட்” அப்படினு முடிவு பண்ணிட்டீங்க!!!”
“ஸாரி மேம்....ஐ டோன்ட் கெட் யு”
“ஓ உங்களுக்குத் தமிழ் தெரியாதா?” (ஆங்கிலத்தில்
கேட்டேன்)
“தெர்யும்.....பட் ஐ அம் கம்ஃபர்டபிள் இன்
இங்கிலிஷ். ஹேய் “........” கம் ஹியர்
கைட் தெம் இன் டமில்....மேம்.. இஃப் யு வான்ட் இன் டமில் ஹீ வில் ஹெல்ப் யு”
“ம்மா என்னம்மா நீ.. சும்மா இரு இவங்க கிட்ட என்ன
வம்பு...(மெதுவாக எனக்கு மட்டும் கேட்கும் வகையில் என் மகன்)...
இட்ஸ் ஓகே சார்....நோ ப்ராப்ளம்....வி வுட் லைக்
டு மீட் த ஜெனரல் ஃபிசிசியன் டாக்டர் “.................”
“மேல முதல் ஃப்ளோர் போனீங்கனா அங்க அவங்க கைட்
பண்ணுவாங்க...” தமிழ் பையன் பதில் சொன்னார்.
“அடேங்கப்பா அங்க வேற கைடா....ஏண்டா இது சுத்துலா
இடமா...நாம என்ன இந்த ஆஸ்பத்திரியைச் சுத்திப் பாக்கவா வந்துருக்கோம்...ம்ம் இதத்தான்
இப்ப மெடிக்கல் டூரிசம்னு சொல்றாங்க போல....”
“ஹ்ஹ்ஹ்
ம்மா ...”
“டேய் பர்ஸ்ல பணம் இருக்காடா? செக் பண்ணிக்க பணம்
இருக்கானு...பாத்தா பயமா இருக்குடா.”
சரி மேலே ஏறுவதற்குள் என்னவென்று
சொல்லிவிடுகின்றேன். (நாங்கள் மின் ஏணியோ, மின் தூக்கியோ உபயோகிப்பது இல்லை. படிகள் வழிதான் ஏறுவோம்..)
ஒன்றும் இல்லை...மகனுக்கு ஒரு மாத காலமாக இருமல்,
சளி. நான் எத்தனை முறை பரிந்துரைத்தும், மிதமான சூட்டில் உப்புத் தண்ணீர் விட்டு
தொண்டையைக் கழுவச் சொல்லியும் செய்யவில்லை.
நான் எப்போதும் 6.30 மணிக்கே காலை உணவு, மதிய
உணவு எல்லாம் தயார் செய்து வைத்துவிடுவேன். ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும்
அவனுக்கு எமர்ஜென்சி அழைப்பு வரலாம் என்பதால். அப்படி வந்தால் அதன் பின் நான் கொண்டு கொடுத்துவிடுவது வழக்கம்.
காலை உணவைப் பெரும்பாலும், நேரமில்லை என்று
தவிர்த்துவிடுவான். கொழுப்பு! மதிய உணவும்
பல சமயங்களில் அறுவை சிகிச்சை இருப்பதாலும், நாலுகால் நோயாளிகள் அதிகமாக இருந்தாலும்
உண்ண நேரம் இருக்காது. இரவுதான். அதுவும் அவன் வீட்டிற்கு வரும் சமயம்
தாமதமானாலும், அப்போதுதான் நிதானமாக உணவு உண்பது வழக்கம்.
மருத்துவர்கள் பிறருக்குத்தான் அறிவுரைப்பார்கள். தங்களுக்கு வந்தால் எதையும் பின்பற்ற
மாட்டார்கள் என்று சொல்லுவதுண்டு. என்
மகனும் அதற்கு விதிவிலக்கல்ல.
அவனது வலது காதின் அருகில் லிம்ஃப் நோட் வேறு
பெரிதாகி இருந்ததை அவனும் கவனித்திருந்தான், அவனது பாஸ் மருத்துவரும்
கவனித்திருக்கிறார்.
அவனது பாஸ் மருத்துவர், மிக நல்ல பொதுநல மருத்துவர்
ஒருவரைப் பரிந்துரைத்து அவர் வேலை செய்யும் இந்தப் பெரிய மருத்துவமனைக்குச்
செல்லுமாறு பரிந்துரைத்தார். ஒருவேளை டிபியாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில்.
சரி மேல் தளம் வந்தாயிற்று.
“மே ஐ ஹெல்ப் யு மேம், ஸார்?”
“டாக்டர் “.......” பார்க்க வேண்டும்.”
“யாருக்குங்க”
“எனக்குதான்..” என் மகன்..
“அதுக்கு முன்னாடி அந்தக் கவுண்டர்ல போய்
ரெஜிஸ்டர் பண்ணிடுங்க”
பேர், வயது, முகவரி, ஜாதகம் எல்லாம் கேட்டு ஒரு
பெரிய அட்டையுடன் கூடிய ஒரு ஃபைலைப் போட்டார்கள்.
ஒரு தொகைக்கான ரசீதும் கொடுத்துக் கட்டச் சொன்னார்கள். தொகை கட்டினால்தான் மருத்துவரைப் பார்க்க
முடியும்.
“டேய் ஆதித் உள்ள வந்தா பர்ச கவுண்டர்ல
வைச்சுட்டுத்தான் போகணும் போல....”
“ஹ்ஹ்ஹ் ஆமாமா...பின்ன பெரிய்ய்ய
ஆஸ்பத்திரி...ஃபுல் ஏர்கண்டிஷன்....5 ஸ்டார் மாதிரி...இல்லல்ல 7 ஸ்டார்....அங்க
பாரு..எத்தனை கவுண்டர்.... எத்தனை ஏஜன்ட் போல ஆளுங்க...அப்புறம் பெருக்கித்
துடைச்சுக்கிட்டே இருக்காங்க பாரு அதுக்கெல்லாம் சேத்துதான் இந்தத் தொகை....”
“டேய் இதோட முடியட்டும். உனக்கு ஒண்ணும் இருக்கக்
கூடாதுடா...அப்புறம் நாம நாமம் போட்டுக் கோவிந்தா..கோவிந்தானு உண்டியல் ஏந்த
வேண்டியதுதான்...சே என்னடா உங்க டாக்டர் இப்படி இங்க போகச் சொல்லிருக்காரு. நம்ம டாக்டரையே பார்த்துருக்கலாமே...”
“ஏற்கனவே உண்டியல் ஏந்தற நிலைமைதான்.. தலைக்கு
மேல போயாச்சு...சாண் போனா என்ன. முழம் போனா என்ன....இங்க பாரு வந்தாச்சு....ஆக
வேண்டியதப் பார்ப்போம்...”
பணம் செலுத்தியதும், “..........” இவங்கள
டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போங்க”
“மேம், சார் வாங்க ..” என்று சொல்லி எங்களுடனேயே,
ஏதோ விஐபியை அழைத்துச் செல்லுவது போல ஒருவர் மருத்துவரின் அறை வரை வந்து,
உபசாரம் செய்வது போல் தழைந்து..
“டாக்டர் இஸ் ஃப்ரீ...உள்ள போங்க....” என்று
சொல்லி விடைபெற்றார்.
மருத்துவரிடம் சொல்ல வேண்டியதைச் சொன்னதும்
அவரும் பரிசோதித்துவிட்டு..
“ம்ம்ம் லிம்ஃப் நோட் பெரிசாகித்தான் இருக்கு. ஸோ ஒரு செஸ்ட் எக்ஸ்ரே எடுத்துப்
பாத்துரலாம்....”
அவர் எழுதிக் கொடுத்த சீட்டைப் பெற்றுக் கொண்டு
வெளியில் வரவும், ஒருவர் வந்து அந்தச் சிட்டைப் பார்த்துவிட்டு....
“நேரா போங்க சார்....போய் லெஃப்ட் எடுத்து, கீழ
போனீங்கனா அங்கதான் எக்ஸ்ரே லேப்.”
“அதுக்குத் தனியா பணம் கட்டணுமா?"
“ஆமா சார்...அங்கயே சொல்லுவாங்க கவுண்டர்ல. கட்டிட்டு ரசீதக் கொண்டு போங்க லேபுக்கு. எக்ஸ்ரே எடுப்பாங்க..”
“அடப்பாவிங்களா இதுக்குத் தனியா சார்ஜா...”
“ம்மா மெதுவா....எதுவும் இருக்கக் கூடாதுனு
வேண்டிக்கமா...சொத்தையே எழுதி வைக்கச் சொன்னாலும் சொத்தே இல்லையேம்மா! ..”
"வாசல்ல துண்டை போட்டு உக்காந்தா போச்சு!"
கவுண்டரில் தொகை செலுத்தி....(அதெல்லாம் ரகசியம்...’ஷ்ஷ்ஷ்
சொல்லாதே யாரும் கேட்டால்...!!!) எக்ஸ்ரே எடுத்து அது கையில் அடுத்த 20
நிமிடத்தில் வந்ததும், என் மகன்
“ம்மா நல்ல காலம் க்ளியராதான் இருக்கு. இரு டாக்டர் என்ன சொல்றார்னு பார்ப்போம்..”
டாக்டரும் “க்ளியர்” என்று சொல்லிவிட்டாலும், “ஆனால்
வைரல் இன்ஃபெக்ஷன் ஏதோ இருக்கு. ஸோ நீங்க
இந்த ஆண்டிபயாட்டிக் எடுத்துக்குங்க..”.என்று சொல்லி ஒரு நாலு மாத்திரை வகை
எழுதிக் கொடுத்துவிட்டு.....”எதற்கும் இந்த எக்ஸ்ரேயை ரேடியாலஜிஸ்ட் கிட்ட
கொடுத்து ஒரு ஒப்பினியன் வாங்கிடுங்க...அப்புறம் ஈஎஸ்ஆர் டெஸ்டும் எடுத்துருங்க”
“ஐயோடா....திரும்பவும் பணம் கட்டணுமா.....”
மீண்டும் ஒருவர் வந்து இரத்தம் எடுப்பதற்கு பணம்
கட்ட வேண்டும் என்று சொல்ல, பணம் செலுத்தி, ரசீதைப் பெற்றுக் கொண்டு அங்கு இரத்தம்
கொடுத்துவிட்டு, பின்னர் ரேடியாலஜிஸ்ட்டிடம் எக்ஸ்ரேயைக் கொடுக்கச் சொன்னார்.
“ஐயோ அப்போ ரேடியாலஜிஸ்ட்டுக்கும் பணம்
கொடுக்கணுமாடா”
“ம்மா சத்தியமா கார்பரேட் ஹாஸ்பிட்டல்ஸ் எல்லாமே
செம துட்டு வாங்குறாங்கம்மா..... இஎஸ்ஆருக்கு மட்டும்தான் பணம் கட்டணும்னு
நினைக்கறேன். ரேடியாலஜிஸ்ட் ஒப்பினியன்
தானே...ஸோ பணம் கட்ட வேண்டியிருக்காதுனு நினைக்கிறேன்..பார்ப்போம்..”
இரத்தம் கொடுத்துவிட்டு, ரேடியாலஜிஸ்ட் ஒப்பினியனுக்கு அந்த கவுண்டரில் எக்ஸ்ரேயைக் கொடுத்துவிட்டு, சீட்டைப் பெற்றுக் கொண்டு, இரு முடிவுகளையும் மறுநாள் வந்து பெற்றுக் கொள்ளுமாறு சொல்லவும், நாங்கள்
பெருமூச்சுடன்.. “ஹப்பாடா முடிஞ்சுச்சே...” என்று சொல்லி, மீண்டும் முதல் கவுண்டரில்
சென்று அவர்கள் எல்லாம் பரிசோதித்து...(அதாங்க பணம் எல்லாத்துக்கும்
கட்டியிருக்கோமானு பில் எல்லாம் செக் செய்து ரசீதும் செக் செய்து)
“ஓகே...யு கேன் கோ....தாங்க்ஸ் ஃபார் கம்மிங்க்
டு அவர் ஹாஸ்பிட்டல்”
“அடப் பாவிங்களா.....தாங்ஸ் வேறயா....நல்ல காலம் “நன்றி
மீண்டும் வருக” அப்படினு சொல்லாம விட்டாங்களே”
“ஹ்ஹ்ஹ் ம்மா நீயே சொல்லிக் கொடுத்துருவ
போலருக்கு.....”
“டேய் இதுக்குத்தாண்டா நான் உங்கிட்ட
அடிச்சுக்கிட்டேன். உப்புத் தண்ணி கார்கிள் பண்ணுனு,
நான் மிளகு, துளசிக் கஷாயம் வைச்சுத் தரேன் குடினு..சொன்னா கேட்டாத்தானே....இப்ப
பாரு ஒண்ணுமே இல்லாததுக்கு இவ்வளவு துட்டு....”
நாங்கள் வெளியே வரும் போது ஒரு நிறைமாத
கர்ப்பிணிப் பெண் தன் கணவருடன் உள்ளே வந்து கொண்டிருந்தார். எனக்கு அவரைப் பார்த்ததும் தோன்றியது இதுதான்..
“ஸார்/மேம், நீங்க இங்க தானே ரெகுலரா செக்கப்
வந்துக்கிட்டுருக்கீங்க. இங்கதானே குழந்தை
பெத்துக்கப் போறீங்க......நாங்க ஒரு ஆஃப்ர் வைச்சுருக்கோம். ....என்ன பண்ணுங்க....
குழந்தை பிறந்த உடனே குழந்தை பேர்லயும், உங்க பேர்லயும், ஒரு அமௌன்ட் போட்டு அக்கவுண்ட்
ஓபன் பண்ணிடுங்க. ஏன்னா குழந்தைக்கு
காய்ச்சல், தடுப்பூசி அப்படி இப்படினு வரத்தானே செய்யும்...அதனாலதான்...ஓபன்
பண்ணிட்டீங்கனா.....உங்களுக்கு மாசா மாசம் பணம் கட்ட வேண்டாம். உங்க அக்கவுண்ட்லருந்து கழிச்சிடலாம். அப்பப்ப
அக்கவுண்ட டாப் அப் பண்ணிக்கலாம். அப்புறம் அதுலயும் சில ஆஃப்ர் வரும் சீசன்ல
(நோய் சீசன், பண்டிகைகள் ஆஃபர்..இப்படி) . ஸோ உங்களுக்கு செலவும் கம்மி...ஈசியும்
கூட......உங்க குடும்பத்து பேர்லயும் கூட ஓபன் பண்ணலாம்...யோசியுங்க....” என்று
சொல்ல ஆரம்பித்து விடுவார்களோ?
சென்னையில் நிறைய கார்ப்பரேட் மருத்துவமனைகள்
பெருகி வருகின்றன. போகிற போக்கைப்
பார்த்தால், சென்னை மருத்துவ உலகின், இல்லையில்லை, மன்னிக்கவும், மருத்துவ “வர்த்தக”
உலகின் தலைநகரமாகித்தான் வருகின்றது. மிக மிக வேதனையான ஒரு விஷயம்.
(எந்த மருத்துவரும், தனிஒருவன் படத்தில் சொல்லுவது
போல், மருந்துகளின் ஜெனிரிக் பெயர் எழுதுவதில்லை.
ப்ராண்ட் நேம் தான் எழுதுகின்றார்கள்.
பார்க்கப் போனால் மருத்துவர்கள் ப்ரான்ட் நேம் எழுதக் கூடாது. என் மகன் எழுதுவதாக
இருந்தால் ஜெனிரிக் நேம்தான் எழுதுகின்றான். ஆனால் அதில் சிக்கல்களும் உண்டு....இதைப்
பற்றி பிறிதொரு சமயம்.)
-----கீதா
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
சரி! நண்பர்களே! எல்லாரும் பதிவர் விழாவுக்கு உங்கள் பெயர் கொடுத்து, உங்க விவரம் எல்லாம் கொடுத்துட்டீங்களா? கையேடிற்கு? கையேடுக்கு விவரங்கள் சூடு பிடிக்கவில்லை என்று நம் நண்பர் தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் எழுதியிருந்தார்கள். அதனாலதான் மீண்டும் நினைவு படுத்தல். கையேட்டிற்கு விரைவாக தங்கள் விவரங்களைத் தயவாய் கொடுத்து விடுங்கள். பதிவர் விழாவுக்கான உங்கள் நன் கொடையும் கொடுத்துவிட்டீர்களா? இல்லை என்றால் அதையும் செலுத்திவிடுங்கள் தயவாய்!. எல்லா விவரங்களும் அறிய இந்த சுட்டியைச் சொடுக்குங்கள்....நம் நண்பர்கள், சகோதரிகள் எல்லோரும் விழா பற்றி நினைவு படுத்திப் பதிவுகள் இட்டுக் கொண்டேதான் இருக்கின்றார்கள்...
போட்டியில் பங்கெடுக்கின்றீர்களா அதற்கு இங்கு செல்லுங்கள் விதிமுறைகள் அறிய...
மிக்க நன்றி!