வியாழன், 30 ஜனவரி, 2014

சைவம் பாதி வைணவம் பாதி கலந்து செய்த கலவையாம் 'இந்து'மதத்தை சகிக்க முடியாமல் தான் கடவுள் கல்லானாரா - கடவுள் ஏன் கல்லானார் - 3





12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த (1162 D) மத்துவாச்சாரியார்தான் பூணூல் இட்டு விஷ்ணுவின் சந்ததியினரை உருவாக்கி வைணவ மதத்தை உருவாக்கினார் என்று சொல்லப்படுகின்றது.

முதல் தீர்த்தங்கரான  ரிஷபநாதன்

அதே சமயம் சமணம் மதத்தின் முதல் தீர்த்தங்கரரான  ரிஷபநாதனை, சிவபகவானாக்கி  ஏசுநாதரின் பிறப்பிற்கு முன் சைவ மதம் உருப்பெற்றது என்றும் சொல்லப்படுகிறது.  6 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவில் ஆண்ட மன்னர்களைப் பற்றி வரலாற்றில்  அதிகம் சொல்லப்படவில்லை. ஆனால, தென்னாட்டில் சேர, சோழ பாண்டியர்கள் ஆண்ட பொற்காலம் சைவ மதம் கடல் கடந்து, கடாரம் (இப்போதைய கம்போடியா) வரை பரப்பப்பட்ட காலம். 12, 13 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவை பாரசீயத்திலிருந்து வந்த சுல்தான்கள் ஆண்டனர்.


நாளந்தா

தட்ச சீலா


அக்காலத்தில்,  நாளந்தா, மற்றும் தட்ச சீலா உள்ளிட்ட  பல அறிவுக் கூடங்கள் ஆக்ரமிக்கப்பட்டு நம் நாட்டின் விலை மதிக்க முடியாத ஓலைகள், புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

அம்பேத்கார் - 1938 மனுஸ்ம்ருதி கொளுத்தினார்

14 ஆம் நூற்றாண்டின் வாய் மொழியாக பிரச்சாரத்தில் இருந்தவையும், ஓலைகளிலும், புத்தகங்களிலும் எழுதிப் பாதுகாக்கப்பட்ட வேதங்களும், புராணங்களும், மருத்துவக் குறிப்புகளும், கலை மற்றும் அறிவியல் குறிப்புகளும் சம்ஸ்க்ருதத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.   அப்படி  14ஆம் நூற்றாண்டின் இறுதியில் "மனுஸ்ம்ருதி" போன்றவைகள் நம் முன்னோர்கள் பின்பற்றியவைகள் என்ற மட்டில் இந்து மதத்தின் பாகமாக்கப்பட்டதாம். அதனால்தான், இந்தியப் பீனல்கோட் எழுதிய டாக்டர் அம்பேத்கார் - 1938 ல் , இந்து மதத்திற்கும், இந்தியாவிற்கும் தீண்டாமையின் பெயரில் இழிவு ஏற்படுத்தும்  "மனுஸ்ம்ருதி"  யைப் பொது இடத்தில் கொளுத்தினார்.


இபாதத் கானா

இதன் பின், 16 ஆம் நூற்றாண்டில், முகலாய மன்னரான அக்பர் (1556-1605), எல்லா மதங்களும் - சமணமும், புத்தமும், சைவமும், இஸ்லாமும், கிறித்தவமும் எல்லாம் வல்ல இறைவனின் புகழ் பாடி, இறையருள் பெறத்தான் முயல்கின்றன என்ற உண்மையைப் புரிந்து கொண்டு, எல்லா மதங்களையும் உட்படுத்தி, எல்லாருக்கும் உகந்த "தீன்-இலாஹி" என்னும் புதிய மதத்தை நிறுவினார்.  அவருடைய "இபாதத் கானா" வில் வைஷ்ணவ மதத்தவர்கள், மனுஸ்ம்ருதியை, சைவ, வைஷ்ணவ மதத்தவரின் (இந்து) குரான் என்று சாதித்தே விட்டார்கள்.

அக்பர் அரசரே ஒழிய தெய்வபுத்திரனோ, தேவ தூதரோ அல்ல என்பதனாலோ என்னவோ, அம்மதம் எவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  ஆனால், ஆங்கிலேயர்கள் வந்த போது, இங்குள்ள இஸ்லாமியர், சமணர், புத்த மதத்தினர் ஒழிய மற்றவர்களை, முன்பு பாரசீகர்கள் அழத்தது போல் "இண்டஸ்வேலி" காரர்கள்(Indus Valley) என அழைத்தும், எழுதியும், அப்பெயர், சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் பொதுவான பெயராக மாறிவிட்டது.  கிறித்தவத்தைப் பற்றிப் பேசத் தகுதி உடையவர்களைப் பாதிரியார்கள் என்பது போல் (Theology படித்ததால்)  இந்து மதத்தைப் பற்றிப் பேச , விவாதிக்க, பிராமணர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். (மனுஸ்ம்ருதி இந்து மதத்தின் பைபிளாகக் கருதப்பட்டதால்).

சைவ மதத்திலுள்ள உயர்வு தாழ்வின்மைக்குப் (தத்துவமசி, அஹம் ப்ரம்மாத்மி etc....- "அது" நீயாகிறாய், உன்னுள் நானாகிய இறைவன் இருக்கிறேன் etc.) பதிலாக, மனுஸ்ம்ருதி  இந்து மதத்தின் "என்சைளோபீடியா"  ஆனது. (இறைவனின் நெற்றியிலிருந்து பிராமணர்கள், தோளிலிருந்து ஷத்திரியர்கள், வயிற்றிலிருந்து வைசியர்கள்,காலிலிருந்து சூத்திரர்கள்) கிறித்தவர்களின், பிதா, புத்ர, பரிசுத்த ஆத்மா எனும் ட்ரினிட்டி இந்து மதத்திலும் உள்ளது என்று சொல்லி, படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் என்று சாதித்தே விட்டர்கள்.  பண்டைய கிரேக்க நாட்டில் மனிதர்களை 4 பிரிவுகளாக்கி, அவர்களது திறமைக்கு இணங்க பணிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அது போல நம் சித்தர்களும், மனிதர்களின் நோய்களைக் கண்டறிய கப, பித்த, வாத, ரத்த ஆதிக்க உடல்களாகப் பிரித்து, அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.  ஆனால், அந்த அறிவுகள் தவறாகப் பயன்படுத்தப்ட்டு விவித சாதிகளாக்கப்பட்டன.  ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்பது புரிகிறது.  யாருக்கு இதனால் நன்மை உண்டோ அவர்கள்தான் இத்தகைய கொடுமைகளைச் செய்திருக்க வேண்டும்.(பாவம் தொலைய, மோக்ஷம் கிடைக்க  பிராமணர்களுக்கு, பசு, மண், பொன் தானம் செய்வது உத்தமம்)

இப்படி நம் முன்னோர்களும், சித்தர்களும், யோகிகளும் கண்டறிந்த ப்ரபஞ்ச சத்தியங்களும், ஆன்மீக ஞானமும் அன்றைய நாட்களில் வாழ்ந்த சுயநலவாதிகளின் இத்தகைய செயல்களால் நமக்கு நஷ்டமாகியது.  15 ஆம் நூற்றாண்டு முதல், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட்வர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள், இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மதம் மாறினார்கள்.  20 ஆம் நூற்றாண்டில், டாக்டர் அம்பேத்காரும், ஏக தேசம் ஒரு லட்சம் பேருடன் புத்த மதத்தைத் தழுவினார்கள். இஸ்லாம் மதமும், அன்பும், கருணையும் ஆதரவும் உணவும் கொடுத்துத் தங்கள் மதத்திற்கு ஆட்களை வரவேற்கத் தொடங்கிய காலத்தில் இந்து மதம் (?) சாதி பேசி பிற்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று பெரும்பான்மையோரை முத்திரை குத்திக் கோயில்களிலிருந்தும், இறைவனிடமிருந்தும் விரட்டியது.


மார்த்தாண்ட வர்மா

மானிடர் எல்லாம் ஒன்றாகச் சாதியின்றி, குளித்து தேவாரம் பாடி வாழ்ந்த மலைநாட்டு மக்களை ஆண்ட சேர மன்னனைச் சதியால் வீழ்த்தி, முக்தி பெற இமயம் சென்ற ஆதிசங்கரரைப் போல், கைலாயம் சென்ற அவரை-அதாவது சேர மன்னனை- மெக்கா சென்றதாய் கூறி அவருடைய மக்களையும் இஸ்லாம் மதம் தழுவவும் வைத்தார்கள்.  நாஞ்சில் நாட்டை ஆண்ட மார்த்தாண்ட வர்மா தீவிர வைணவ மதம் பூண்டு, தன் தலை நகரை, இப்போதைய திருஅனந்தபுரத்திற்கு மாற்றி படையோட்டம் (போர் புரிந்து) நடத்தி, சிற்றரசர்களின் அரண்மனைகளிலும், கோயில்களிலும் இருந்த நகைகள், ரத்தினங்களுடன், நம் முன்னோர்கள் பாதுகாத்த ஓலைகளையும் கொண்டு வந்து பத்மநாப சுவாமிக்குச் சமர்பித்தார்.  சேகரிக்கப்பட்ட ஓலைகள் அனைத்தையும் தீக்கிரையாக்கியபின் 18 ஆம் நூற்றாஅண்டின் பிற் பகுதியில் புதிய கேரள வரலாற்றை எழுதினார். அப்படி மலை நாட்டின் வரலாற்று உண்மைகள் எல்லாம், தீக்கிரையாக்கப்பட்டு மார்த்தாண்டனின் மனுஸ்ம்ருதி சார்ந்த வைணவக் கொள்கைகள் மட்டும் பின்பற்றபடும் ஒரு புதிய விதி  250 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய கேரளத்தில் நிறுவப்பட்டது. இதை எதிர்த்தவர்கள் எல்லாம்,  இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்தை மேற் கொண்டனர்.  வடக்கே நாகர்களை எல்லாம் கிறித்தவர்கள் ஆக்கியது போல, தென்னகத்தில், முக்கியமாக கேரளத்தில் 40% மேலான மக்கள், முஸ்லிம் மற்றும் கிறித்தவர்கள் இப்படித்தான் ஆனார்கள்.  வைணவ மதம் மாறிய மன்னர்களும், மத பண்டிதர்களும் சைவத்தையும், வைணவத்தையும் ஒன்றுபடுத்த  "ஓம் ஸ்ரீ கணபதயே நம" என்பதற்கு பதில் "ஹரிஸ்ரீகணபதயே நம" என்றும், சிவ பார்வதி ஒன்றாகி அர்த்த நாரீஸ்வரர் ஆனது போல சிவனையும், விஷ்ணுவையும் ஒன்றாக்கி "சங்கர நாராயணன்" என்ற தெய்வத்தையும் உருவாக்கி கேரளத்தில் புரட்சியே செய்து விட்டார்கள்.

இந்தியாவில் மற்றெங்கும் இல்லாத அளவுக்கு மனுஸ்ம்ருதியை கேரளத்தில் பின்பற்றவும் தொடங்கினார்கள்.  பிராமணர்களைக் கண்டால், சூத்திரர்களான பிற்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், முறையே 16 அடியும், 32 அடியும் தள்ளி நிற்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்து, தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட பெண்களின் மார்பகளுக்குக்குக் கூட "முலைக்கரம்" என்ற பெயரில் வரி வசூலித்து, மார்பகங்களைக் கூட  மறைக்கவிடாமல், கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு அவர்களை விரட்டியே விட்டார்கள்.  இதில் வருத்தபட ஒன்றுமில்லை.  நம் முன்னோர்கள் சொன்னது போல, இவ்வுலகிலுள்ள எல்லோருக்கும் பொதுவானவர்தான் இறைவன்.  எம்மதமும் எல்லோருக்கும் சம்மதமாகத்தானே வேண்டும்.

எகிப்து மற்றும் கிரேக்க தெய்வங்களைப்போல், அருங்காட்சியகத்தில் இனி பாதுகாக்கப்பட வேண்டியது ஒரு வேளை நம் தெய்வங்களாகத்தான் இருக்கும்.  எந்த ஒரு மதமும் 5000 ஆண்டுகளுக்கு மேல் வாழாதாம்.  அப்படி நம்முடைய மதம் பெயரை மாற்றினாலும் (இந்து மதம்) சாவை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு மதம் தான்.  அதனால்தான்,  இந்து மதம் எனும் பனங்காய், ராமன், கிருஷ்ணன் எனும் நம் பண்டைய அரசர்கள் தலையில் வைக்கப்பட்டிருக்கிறது.  அப்படித்தான், இலங்கைப் போருக்கு முன் ராமன் வழிபட்ட ராமேஸ்வரர், ராம மந்திரத்தை எப்போதும் த்யானத்திலிருந்து உருவிடுவதாகச் சொல்லியும், எழுதியும் உறுதிப்படுத்த முயலும் கதை உருவானது.


அதே போல் சிவ பகவான் தன்னைத் தாக்க வரும் பாண்டவர்களிடமிருந்து தப்பி, கேதார்நாத்தில், பாதாளத்தில், உயிருக்குப் பயந்து உயிர் வாழ்வதாகச் சோடிக்கப்பட்ட கதை.  இப்படி, ராம பக்தர்களும், க்ருஷ்ணப்பக்தர்களும், அத்வைத சித்தாந்தத்திலிருந்து உயிர் பெற்று எழுந்த சைவ மதத்தைப் புதைத்து அதன் மேல் த்வைதம் என்று சொன்னாலும், உண்மையில் மனுஸ்ம்ருதியிலிருந்து உயிர் பெற்ற வைணவ மதத்தை வளர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.


(இப்போதும் இது போன்ற வைணவ மயமாக்குதல் நடக்கத்தான் செய்கிறது.  கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து கமல் "தசாவதாரம்" என்ற படம் பிடித்தார். சுனாமி, ஜார்ஜ் புஷ், சோடியம் க்ளோரைடு என்று பல விஷயங்கள் படத்தில் வந்தாலும், குலோத்துங்கச் சோழனை ஒரு மத வெறியனாகச், சிவ பக்தர்களைக் காட்டுமிராண்டிகளாக வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் காண்பித்துப் படம் பார்த்த லட்சக்கணக்கான ஆட்களின் மனதைக் குழப்பி, வைணவக் கோயில்கள் தமிழகத்தில் அதிகம் இல்லாததன் காரணம் சிவ மத வெறியர்களான சோழர்களே என்று நிரூபித்து, கோடிகள் லாபம் உண்டாக்கி அடுத்த படம் பிடிக்க போய்விட்டாரே.  இனி அடுத்த படத்தில் கரிகாலனின் கால் கரிய காரணம் அவர் ஒரு க்ருஷ்ண விக்கிரகத்தை எட்டி உதைத்ததால்தான் என்று படம் பிடிக்கத்தான் போகிறார் பாருங்களேன்) இதற்குச் சமமான தவறுகள்தான் முன்பு, காலம் சென்ற எல்லா மதங்களிலும் இறுதிக் காலங்களில் செய்யப்பட்டவையும்.

Ulysses

Achilles



பிதியா
priestess at the Temple of Apollo at Delphi

கிரேக்கர்கள்,  Ulysses, Achilles (இதைத் தமிழ்படுத்தத் தெரிய வில்லை) போன்ற மனித தெய்வங்களையும், இறைவனிடம் பேசும் திறனுடைய பிதியாக்களையும் நம்பத் தொடங்கினார்கள்.  இப்போது, கிரேக்கர்களின், எகிப்தியர்களின், மாயன்மார்களின் (தென் அமெரிக்காவில் வாழ்ந்தவர்கள்) தெய்வங்கள் எல்லாம் அருங்காட்சியகத்தில்.  வருந்திப் பயனில்லை. (பழையன தொலைதலும், புதியன புகுதலும் என்றும் அழியாத உண்மைதானே).  அடுத்த வாய்ப்பு நம் மதத்திற்குத்தான் (உடன் இல்லை இனி ஒரு 500 வருடங்கள் தாக்குப் பிடிக்கும்), சீனியாரிட்டி லிஸ்டில் என்ற அடிப்படையில்.  என்றாலும், இறை உணர்வு என்பது சுவாசக் காற்று போல என்றும் இப்புவியில் நிலை நிற்கத்தான் செய்யும்.  இறையுணர்வு உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும், இறையருள் உண்டு எப்போதும்.  இந்த பிரபஞ்ச சத்தியத்தை உணர்ந்த நம் வள்ளுவனும், சித்தர் பெருமக்களும், அதனால்தான், இறைவனை "இறை" என்றார்கள். நம் முன்னோர்களும் "தென் நாடுடைய சிவனே போற்றி, எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்றார்கள்.

இறைவனின் பெயராலும், மதத்தின் பெயராலும், கல்லாய் மாறிய இறைவனைக் காக்க எனும் பெயரில் தங்கள் விருப்பு, வெறுப்புகளையும், தன் சுக சௌகர்யங்களையும் காக்க, மனிதர்களைக் கொன்று குவித்துப் போர் புரியும் இவ்வேளையில் தென்னகத்தினர், முக்கியமாகத் திராவிடப் பண்பாட்டைச் சிக்கெனப் பிடித்து வாழும் தமிழ் இதயங்கள் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதைச் சொல்லில் மட்டும் காட்டாமல், செயலிலும் காட்டி, எம்மதமும் சம்மதம் என்று மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்ட வேண்டும்.

நாட்டைக் காக்கப் புறப்படும் முன், தன் வீட்டைக் காப்பது  மிக மிக அவசியம்.  நாட்டிலுள்ள மதத் தீமைகளைக் களையப் போகும் முன், நம் வீட்டிலுள்ள சாதித் தீமைகளைக் களைய வேண்டும்.   சாதி இரண்டொழிய வேறில்லை எனச் சாற்றிய நம் தமிழகத்தில், இத்தனைச் சாதிகளும், சாதிக் கட்சிகளும் உண்டாகக் காரணமான சாதி, மத பிரிவினைகளைப் பிடுங்கி எறிந்து, தமிழனுக்குச் சாதி, மதம், இனம்  இல்லை என்ற உண்மையை உணர்த்தி "கல்தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றி வளர்ந்த மூத்தக் குடித் தமிழனின் வழி வந்தோர் நாம்" என்று இவ்வுலகிற்கு நாம் உணர்த்த வேண்டும்.  எனவே, சைவம் பாதி, வைணவம் பாதி கலந்து செய்த கலவையாம் இந்து மதம் என்ற இந்த மதத்தைச் சகிக்காமல் கல்லாகிப் போன இறைவனை எல்லாம் வல்ல இறைவனாகக் காண ஒரே வழி, சாதி, மத, இன நிறக் கண்ணாடிகளைக் களைந்து, எல்லா உயிரினங்களிடமும், அன்பும், கருணையும் காட்டி நல்வினை செய்து இறைவனை வணங்குதல்தான்.




செவ்வாய், 28 ஜனவரி, 2014

அருணாச்சலம் முதியோர் விடுதி


கண்களில் நிறைந்த கண்ணீர் சற்றுக் கூடியதால் காரோட்ட முடியாமல் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினேன். என் அருகே, முன் பக்க இருக்கையில், அம்மாவின் கைப்பை, துணிகள் அடங்கிய ஒரு சிறிய பெட்டி, பேனா, மூக்குக் கண்ணாடி, புத்தகங்கள், மடிக்கணினி அதில் அம்மா இறுதி வரை தமிழில் எழுதிக் கொண்டிருந்தார் என்பதற்கான அடையாளங்கள், எழுதுவதற்கான குறிப்பேடும் அதில் அம்மாவின் எழுத்துப் படைப்புகளும், டையரி, அம்மா வழக்கமாக எடுத்துக் கொள்ளும் சர்க்கரை வியாதிக்கான (அது மட்டும்தான் வேறு எந்த உடல் நலக் குறைவும் இல்லை) மீந்து போன மாத்திரைகள் இவ்வளவும் இருந்ததாலோ என்னவோ, அம்மா அருகில் இருப்பதுபோல அம்மாவின் வாசனை. நரைத்த பாப் தலைமுடியுடன், பேன்ட்/சல்வார்/லெக்கிங்க்ஸ், டாப்புடன் இருப்பது போன்ற ஒரு உணர்வு. எனக்கு சிறு வயது முதலே அம்மா சாரி கட்டினால் பிடிக்காது என்பதால் தன் உடை அணியும் முறையையே மாற்றிக் கொண்டவர். எனக்காகவே வாழ்ந்தவர்!


நான் காரோட்டினால் அம்மா முன் இருக்கையில்தான் அமர்வார். பின் இருக்கை பிடிக்காது! அம்மா காரோட்டினால், நான்தான் முன் இருக்கையில் அமர்வேன், அம்மாவும் அதைத்தான் விரும்புவார். இது கார் வாங்கியதிலிருந்து பல வருடப் பழக்கம்.  இதுதான் முதல் தடவை இந்தியாவில் அம்மா என் அருகில் இல்லாமல் நான் காரோட்டுவது.  அவர் இறந்து 3 நாட்களே ஆகின்றது.  வயது 85. என் வயது 60. இதோ, விடுதியிலிருந்து அவரது உடைமைகளை எடுத்து வருகின்றேன். நான் உலகறியும் மருத்துவராக இன்று அமெரிக்காவில் இருக்கிறேன் என்றால் அதற்கு என் அம்மாதான் முழு முதற் காரணம். இருந்தாலும், அம்மா என்னுடன் இருக்க மறுத்து இந்தியாவில் வசிப்பதில் பிடிவாதமாக இருந்தார்.  இந்தியாவில் எங்கள் வீடு, தோட்டம் என்று இருந்தும், தனிமையில் இருக்க விரும்பாமல் முதியோர் விடுதியில், அதுவும், அருணாச்சலம் முதியோர் விடுதியில் தான் இருப்பேன் என்ற பிடிவாதம்.  என்னுடன் இருக்க வந்தாலும் மிஞ்சி மிஞ்சிப் போனால் 2 மாதம்தான்.  அதற்கு மேல் அவருக்கு அங்கு இருக்க முடியாமல் தவித்து விடுவார். இத்தனைக்கும் அவர் என்னை விட்டு ஒரு நொடி கூடப் பிரிய மனமில்லாதவர், அப்பா இருந்த போது, நாங்கள் அமெரிக்காவில் சில காலம் இருக்க நேர்ந்த போது, அமெரிக்க வாழ்க்கையை மிகவும் ரசித்தவர். திருமணத்திற்கு முன்னும் சரி, பின்னும் சரி, அப்பா அடிப்படையில் நல்லவர்தான் என்றாலும், அம்மா பல மன வேதனைகளுக்கு உள்ளானார்.  அப்பாவின் மரணத்திற்குப் பிறகு, எனக்கு அம்மாவின் இந்த முடிவு, இந்தியாவில் இருந்தது மிகவும் வருத்தம். மட்டுமல்ல முதியோர் விடுதியில், அதுவும் மேற்சொன்ன விடுதியில்.  அப்படி என்ன பிடிவாதம் என்று தெரியவில்லை!  புரியாத புதிர்!


 எனக்கு அம்மாவின் இந்த முடிவில் மிகவும் வேதனையும் வருத்தமும் இருந்தாலும், அம்மாவின் விருப்பதிற்கு நான் தடை சொல்லவில்லை.  காரணம், அம்மா காரணம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டார்.  நான் அடிக்கடி இந்தியா வந்து அவருடன் 10 நாட்களாவது தங்கிவிட்டுச் செல்லுவது வழக்கம். அப்போது அம்மாவின் உற்ற நண்பர் சிவானந்தம் அங்கிள் வீட்டில் குறைந்தது 5 நாட்களாவது அம்மாவும் நானும் தங்குவது வழக்கம். அம்மாவிற்கும், அங்கிளுக்கும் அத்தனை ஒரு ஆழமான, உண்மையான அன்பும், நட்பும்.  எனக்குப் பல சமயங்களில் இதைக் கண்டு ஆச்சரியம் ஏற்பட்டதுண்டு! அம்மாவிற்கும், சிவானந்தம் அங்கிளுக்கும் மிகுந்த ஒத்த சிந்தனைகள், ஆர்வங்கள், எண்ணங்கள், கனவுகள், வாழ்க்கைக் குறிக்கோள்கள். அவரும், அம்மாவும் சேர்ந்து எழுதி தமிழில் பல படைப்புகள் படைத்து வந்தார்கள். அவர்தான், இந்தியாவில் அம்மாவைக் கவனித்துக் கொண்டவர். என்னுடன் தினமும் தொடர்பில் இருப்பவர்.  நான் அம்மாவுடன் தினமும் குறைந்தது 5, 6 தடவை காமரா உதவியுடன் அம்மாவைப் பார்த்துக் கொண்டே பேசி விடுவேன் என்றாலும், அம்மாவைப் பற்றிய தகவல் எல்லாம் என்னுடன் தவறாது பகிர்ந்து கொண்டவர் அங்கிள்தான். இத்தனைக்கும் அங்கிளுக்கு ஒன்றும் சிறிய வயது கிடையாது. அவருக்கும் 88 வயதாகிறது. அம்மாவின் உடல் நிலை சற்றுச் சரியில்லை என்று சிவானந்தம் அங்கிள் ஃபோன் செய்த உடன் நான் வந்து அம்மாவை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டேன். சரியாக 2 வாரம் நானும், அம்மாவும் சந்தோஷமாகச் சேர்ந்து இருந்து இறுதியில் என் மடியில் உயிர் நீத்தார்.  அங்கிளும் அன்று உடன் இருந்தார்.  இந்த வயதிலும், சிறு குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுதவரைத் தேற்றுவது எனக்கு மிகவும் கடினமாகி விட்டது. அவர் தான் எனக்கு முன் நின்று அம்மாவின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற உதவினார்.  அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உண்மையான பாசத்துடனும், நேசத்துடனும் வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து மிகவும் மலைத்து விட்டேன்! 


 மாலை நேரம் ஆகியதால், நான் நின்ற ரோட்டோரத்தில், அருகில் இருந்த மரத்தில் இருந்த பறவைகளின் கீச் கீச் சத்தம் என் நினைவுகளைக் கலைத்தது.  கூடு திரும்பிய பறவைகள், தங்கள் அன்றைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றன போலும்?! இது போல் தான், நான் வீடு திரும்பியவுடன், அம்மாவுடன் அன்றைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட இன்பமானத் தருணங்கள் என் நினைவுக்கு வந்தன. அம்மாவுக்கு இயற்கை, விலங்குகள், கலைகள், எழுதுதல், வாசித்தல் எல்லாவற்றிலும் ஆர்வம், ரசிக்கும் தன்மை இருந்தது மட்டுமல்ல அவை எல்லாமே எனக்கும் அப்படியே வந்து விட்டது. நானும் அம்மாவும் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களே இல்லை எனலாம். சிறு வயது முதலே எனக்கு மிக நெருங்கிய தோழி. அம்மாவிற்குச் சடங்குகள், சம்பிரதாயங்கள், சாதி, மூட நம்பிக்கைகள் இவற்றில் நம்பிக்கை இருக்கவில்லை. அதுவே எனக்கும். ஆனால், இருவருமே மிகுந்த இறை நம்பிக்கை உடையவர்கள். அம்மாவின் விருப்பம் போல் அவரது அஸ்தியை எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு எல்லாம் தூவியதாலோ என்னவோ, எங்கள் வீட்டில் ஒவ்வொரு மரத்திலும் அம்மா இருப்பது போன்ற ஒரு உணர்வு. இப்போது இந்தப் பறவைகளின் சத்தத்திலும் அம்மாவின் குரல் கேட்பது போன்ற ஒரு உணர்வு. 

மாலை மங்கியதால், வீடு திரும்பினேன். வீடு திரும்பியதும் அம்மாவின் உடைமைகளை எடுத்து வைக்கும் போது அவரின் டையரி!  எனக்கு ஆச்சரியம்! ஓ! அம்மாவுக்கு டையரி எழுதும் பழக்கம் இருந்ததா?! எனக்குத் தெரிந்து அந்தப் பழக்கம் கிடையாது. இங்கு தங்கிய பிறகுதான் எழுதியிருக்க வேண்டும்! வாசிக்கலாமா கூடாதா என்ற என் மனப் பட்டி மன்றத்தின் முடிவில், அம்மா ஏதாவது என்னோடு பேசியிருக்கலாம் என்ற எண்ணத்தில் வாசிக்கலாம் என்று திறந்தேன். அப்படியே உட்கார்ந்து விட்டேன்.  ஆச்சரியத்தில்! ஆம், அம்மாவும், அங்கிளும் சேர்ந்து எழுத்துப் படைப்புகள் மட்டுமின்றி பல நல்ல சமூக சேவைகளும், விஷயங்களும் செய்திருந்திருக்கின்றார்கள். பல நல்ல படங்களைப் பற்றியும், புத்தகங்களைப் பற்றியும் எழுதி வைத்திருந்தார்.  சிலவற்றைப் பற்றி என்னிடம் பேசும் போது சொல்லியிருக்கிறார். டையரியில் அம்மா எனக்கும் செய்தி சொல்லியிருந்தார். எப்படி இது என்னிடம் பேசும் போது விட்டுப் போனது என்று தெரியவில்லை.

சிறிய வயதிலிருந்தே அம்மா எனக்கு நிறைய நல்ல தமிழ், ஆங்கிலப் படங்களையும், புத்தகங்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இருவரும் சேர்ந்து பல படங்கள் பார்த்திருக்கிறோம். விமர்சிப்போம்! அவருக்கு ஏனோ காதல் படங்கள் பிடிக்காது! ஏதாவது காரணம் இருந்திருக்கும். ஆனால், ஏனோ தெரியவில்லை அவரும் சொன்னதில்லை, நானும் அதைப் பற்றிக் கேட்டதில்லை!

“குட்டிப்பூ (குட்டிமா, குட்டிப்பூ, செல்லமே, குட்டிச்செல்லம், செல்லக்குட்டி என்று என்னுடைய இந்த 60 வது வயதிலும் அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்) மனம் சிதறாமல் உன் படிப்பில் கவனத்துடன் இருக்க வேண்டும்! உன்னைக் காதலிக்கக் கூடாது என்று சொல்ல மாட்டேன்.  ஒருவேளை நீ காதல் வயப்பட்டால், நீ காதலிக்கும் பெண்ணைக் கைப்பிடிக்க முடிந்தால் மட்டுமே காதலிக்க வேண்டும்! இல்லையென்றால் காதலிக்காதே! அம்மாவின் இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது!  எதற்காக இதை என்னிடம் சொன்னார் என்று தெரியவில்லை! ஆனால், நான் எந்த பந்தத்திலும் இல்லை.

டையரியைப் படித்தேன்! அங்கிளும் அம்மாவும் சேர்ந்து, பல முதியோர்களுக்கு மருத்துவ முகாம்கள், ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவி, மூளை வளர்ச்சிக் குறைந்த, குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு உதவி, உழவர்களுக்கு இயற்கை உர விவசாயம் பற்றிய விழிப்புணர்வு, அவர்களுக்கு உதவுதல், பெண்களுக்கு சுய தொழில் தொடங்க உதவுதல், ஏழைக் குழந்தைகளுக்குத் தமிழில் பல நல்ல பாடல்கள் கற்றுக் கொடுத்தல், ஆங்கிலத்தில் உரையாடல் பயிற்சி அளித்தல், என்று இன்னும் பல விஷயங்களைச் செய்திருக்கின்றார்கள். டையரியில் எனக்கு அம்மா சொல்லியிருந்த செய்தியைப் பற்றி என்னிடம் பேசவேண்டும் என்று நினைத்திருந்திருக்கின்றார் ஆனால் பேசாமலேயே போய்விட்டார். அங்கிளிடம் கேட்டால் அவர் கண்டிப்பாகச் சொல்லுவார்.  அவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை!


அம்மா இறந்த பிறகு, அங்கிள் மிகவும் சோர்ந்து, தளர்ந்து போய்விட்டார்! அவரை அவரது ஃபோனில் அழைத்தேன்.  இரு முறை அழைத்தும் பதில் இல்லை! நேரே சென்று பார்க்கலாம் என்று, அவரைப் பார்க்கக் கிளம்பினேன்! ¾ மணி நேரப் பயணம்தான். அவரது வீட்டை அடைந்தால் கதவு திறந்தே இருந்தது! அவரது குடும்பத்தாரும், வேலைக்காரர்களும் பற பறத்துக் கொண்டிருந்தார்கள்! எனக்கு ஒன்றுமே புரியவில்லை!  யாரோ ஒருவர் அவர் மகனிடம் பேச முயற்சித்துக் கொண்டிருந்தார்! அவர் மகனும் என்னுடன் அமெரிக்காவில், புகழ் பெற்ற மருத்துவராக இருக்கிறான்.  நான் மெதுவாக அங்கிளின் அறைக்குச் சென்றேன்! எனக்கு அதிர்ச்சி! அங்கிள் சலனமற்றுப் படுத்திருந்தார்! மருத்துவன் என்பதால் அருகில் சென்று சோதித்தேன்! கையைப் பிடித்தேன்! எல்லாமும் முடிந்திருந்தது!


அங்கு கூடியிருந்தவர்களில் இரண்டுபேர் பேசுவது காதில் விழுந்தது. “ஐயாவுக்கு உடம்புல எத்தனையோ நோய்கள்! ஏராளமான நோய்கள் இருந்தும் எப்படி இத்தனை நாள் உயிர் வாழ்ந்தார்னே தெரிலனு டாக்டர்கள் சொல்லி அதிசயப்பட்டாங்க!  அதுவும் அந்த அம்மாவோடு சேர்ந்து இந்த வயசுலயும், உடம்புல பிரச்சினைகளோட எவ்வளவு எழுதிருக்காரு....மக்களுக்கு நல்ல விஷயம் நிறைய செஞ்சுருக்காரு!  டாக்டருங்க கூட, “அவரு மனசுல ஏதோ ஒரு லட்சியம், வேகம், ஏதோ ஒரு சக்தி இருக்கு! அந்த மனசு, அதுதான் அவரை இப்படி வழி நடத்துது! அப்படினு ஆச்சரியப்பட்டாங்க! இப்ப கூட பாருங்க அந்த அம்மா 3 நாள் முன்னாடிதான் இறந்தாங்க! அதுக்கு அப்புறம் மனுஷன் ஆடிப் போயிட்டாரு! தளர்ந்து, சோர்ந்தே போயிட்டாரு. ஒரு வேளை இன்னும் என்னென்ன செய்ய நினைச்சாங்களோ அதெல்லாம் அவங்க இல்லாம எப்படி செய்யறதுனு மலைச்சுப் போயிருப்பாரோ என்னமோ!? அந்த அம்மா இல்லாம இவரு எதுவுமே செய்ய மாட்டாரே!  இந்த வயசுலயும் அப்படி ஒரு நல்ல தோழமை உறவோடு இல்ல இருந்தாங்க ரெண்டு பேரும்! மனசுக்குள்ள ஒரு டென்ஷனும், ஏக்கமும் இருந்துருக்கும் போல, அதான் இப்ப மூச்சே நின்னு போச்சு!  இனி, இவங்க ரெண்டு பேரும் நமக்கெல்லாம் செஞ்சத யாரு தொடர்ந்து செய்யப் போறாங்களோ?! ஒருவேளை நமக்குக் கொடுத்து வைச்சது அவ்வளவு தான் போல!


அவர்களது பேச்சு எனக்கு எத்தனையோ விஷயங்களைப் புரிய வைத்தது!  ஒருவேளை, அம்மாவும், அங்கிளும் சிறு வயது நண்பர்கள் ஆனதால், இந்த ஆழமான நட்பிற்கும், அன்பிற்கும் மேலாக, ஏதோ ஒன்று இருந்திருக்குமோ?!!! அந்த சக்திதான் அவர்களை சேர்ந்து எழுதவும், இத்தனை நல்ல விஷயங்களையும் செய்ய வைத்ததோ?!! இருக்கலாம்!  ஆனால், அந்த இரு நல்ல உள்ளங்களும் இப்போது மறைந்து விட்டன! என்னால் என் அழுகையை அடக்க முடியவில்லை!

என் கை பேசி அழைத்தது! என் உதவியாளர்தான். “சார், உங்கள் ஆய்வுக் கட்டுரைப் பேப்பருக்கு அவார்டும், உங்களுக்குச் சிறந்த டாக்டர் விருதும் கிடைத்துள்ளது.  அதற்கான விழா அடுத்த வாரம்! உங்கள் வருகையைத் தெரிவித்தீர்கள் என்றால், அவர்களுடன் பேச உதவியாக இருக்கும்!

“எனது பயணம் இப்போது இல்லை! சில முடிவுகள் எடுக்க உள்ளேன்!. அதைப் பற்றி பின்பு பேசுகின்றேன்! என் வாழ்வு இனி இந்தியாவில்தான்!

நான் அருணாச்சலம் முதியோர் விடுதியைத் தொடர்பு கொள்ள ஃபோன் பட்டனை அழுத்தினேன்! அங்கிளும், அம்மாவும் செய்த நல்ல விஷயங்களைத் தொடர நினைத்து, அம்மா இருந்த அதே அறை வேண்டும் என்று கேட்க!



வெள்ளி, 24 ஜனவரி, 2014

இருந்தமிழே உன்னால் இருந்தேன் ..............விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்


"தமிழின் வளம் தமிழர் நலம் " என்ற நோக்குடன் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட கோவை தமிழ் பண்பாட்டு மையம் வழங்கிய "தாயகம் கடந்த தமிழ் " உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கில் பார்வையாளராகக் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. கோவையில், டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்திலும், கோவை மெடிக்கல் சென்டரிலும், ஜனவரி 20, 21, 22 ஆகிய தேதிகளில் இந்தக் கருத்தரங்கு நடை பெற்றது.

"யாழ் நகரில் என் பையன்
 கொழும்பில் என் பெண்டாட்டி 
வன்னியில் என் தந்தை 
தள்ளாத வயதினிலே 
தமிழ் நாட்டில் என் அம்மா 
சுற்றம் பிரான்போட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ்  நாட்டில் 
நானோ 
வழிதவறி அலாஸ்கா
வந்துவிட்ட ஒட்டகம் போல் 
ஒஸ்லோவில் "

ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் இதயத்தைத் துளைக்கும் இந்த வரிகளை வாசிக்கும் போது புலம் பெயர்ந்த தமிழர்களின் வலிகளை ஒவ்வொரு தமிழ் இதயமும் உணராமல் இருக்க முடியாது.

அரசியல் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் சிதறி, தாயகத்தைப் பிரிந்து, அதே சமயம் தங்கள் மண்ணின் வாசனையையும், நினைவுகளையும், பாரம்பரியத்தையும் சுமந்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்ட தமிழ் இதயங்களின்   ஒன்று கூடிய கருத்தரங்கு அது.  "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணேன்" என்பதை  அறிந்த நமக்கு, கடல் கடந்தும், தலைமுறைகள் பல கடந்தும், இன்றும் தன் ஆளுமை சக்தியைப் பிரதிபலிக்கும் நம் தமிழைப் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே காணும் போது மிக ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும் இருக்கின்றது.

முதல் நாளான 20.01.2014 அன்று மாலை, 5 மணியளவில் டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் துவங்கிய நிகழ்ச்சியில் "தாயகம் கடந்த தமிழ்" கட்டுரை நூலை, முனைவர் ம.திருமலை, துணைவேந்தர், தமிழ் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர், அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார். இரண்டாம் நாளும், மூன்றாம் நாளும் நடந்த கருத்தரங்கில், இலங்கை, கானடா, அமேரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சீனா,மலேஷியா, சிங்கப்பூர் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் நம் தமிழகத்திலிருந்தும் வந்திருந்த கட்டுரையாளர்கள் மிகச் சிறப்பாக அரிய பல கருத்துக்களை அள்ளி வழங்கியதிலிருந்து சிலவற்றைத் தொகுத்து உங்களுடன் இந்த இடுகையில் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற  மகிழ்ச்சி கொள்கிறோம்.

புலம் பெயர்தல் அல்லது தாயகம் கடந்து செல்லுதல் என்பது பண்டைய காலத்திலிருந்தே, அதாவது 2000 ம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பதற்கு இணங்கவும், அரசியல்  காரணங்களுக்காகவும் நிகழ்ந்து வரும் ஒன்றுதான். தமிழகத்திலிருந்து, பினாங்கு கரும்புத் தோட்டங்களிலும், மலேஷியா ரப்பர் தோட்டங்களிலும், இலங்கைத் தேயிலைத் தோட்டங்களிலும் வேலை செய்ய தமிழர்களை,  பிரிட்டிஷர், சொந்த நிலம், ஆடு, மாடு, கோழி, எல்லாம் சொந்தமாக வைத்துக் கொள்ள வசதி   மருத்துவ வசதி எல்லாம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறிப் புலம் பெயர்த்தனர். சீனக் கூலிகளுக்குப் பதிலாகத் தமிழர்களைக் கூலிகளாகத் தேர்ந்தெடுக்கக் காரணம்? தமிழர்கள் அமைதியானவர்கள்; அடக்கமானவர்கள்; எதிர்த்துப் பேசாதவர்கள், அடங்கி ஒடுங்கிப் போகக் கூடியவர்கல்; நிர்வகிப்பது மிக எளிது என்பதுதான்.

18, 19 ஆம் நூற்றாண்டில் தமிழரிடையே நிலவிய சாதி, இனப் பிரச்சினைகளைத் தங்களுக்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்ட பிரிட்டிஷார் தமிழரை கூலிக்குத் தேர்ந்தெடுக்கவும் ஆதாயமாக இருந்தது. இதையே வேறொரு பிரிட்டிஷ் நிர்வாகி ஒப்புதல் வாக்கு மூலமாகக்  கொடுத்துள்ளதையும் பாருங்கள். "தமிழர்கள் உடலாலும், உள்ளத்தாலும், அவர்களது நாட்டிலேயே ஒடுக்கப்பட்ட ஜீவன்கள். பார்க்கவே பரிதாபமாக இருக்கும் இவர்கள் அரைவயிறு உணவோடு ஏழைகளாகவும், கோழைகளாகவும் வாழ்க்கையின் மீது எந்த நம்பிக்கை அற்றவர்களாகவும் இருக்கின்றார்கள்" என்று. நலிந்தோரை வீழ்த்துவதுதானே மனிதனின் குரூர மனம்? இப்படி, ஏமாற்றப்பட்டு தோட்டங்களுக்குக் கூலித் தொழிலாளிகளாக தமிழர்கள் புலம் பெயரப்பட்டனர். இதை வாசிக்கும் போது உங்களுக்குத் தோன்றலாம்.  இன்றும் இப்படித்தானே இருக்கிறது என்று.  சாதியால் ஒடுக்கப்படுதல், திறமைக்கு அங்கீகாரம் இல்லாமல் இருத்தல், அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்றால் சில புரட்டுகள் செய்தல், பாலியல் சார்ந்த ஒடுக்குதல் அதாவது பெண் என்றால் ஒடுக்கப்படுதல், பொருளாதார அடிப்படையில் நசுக்கப்படுதல் என்று நம் தமிழ் நாட்டில் நிகழத்தானே செய்கின்றது?!

இப்படிப்பட்ட ஒரு சூழலில், எங்கு அங்கீகாரம் போராட்டம் இல்லாமல் கிடைக்கிறதோ, சாதி சார்ந்த வாழ்வு இல்லையோ, பாலியல் சார்ந்த வாழ்வு  இல்லையோ, தங்கள் எழுத்துக்களை சுதந்திரமாக எழுத  முடியுமோ, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியுமோ, அங்கு, அந்த தேசத்திற்கு நமது முந்தைய தலைமுறையினரிலிருந்து இதோ இன்றைய தலைமுறை வரை புலம்பெயரத்தானே செய்வார்கள்?! செய்கின்றார்கள்!

அன்று பிரிட்டிஷாரால் புலம் பெயரப்பட்டு, அடிமைகளாக வாழ்ந்த தமிழ் மக்களின் இன்றைய தலைமுறையினர் பல தேசங்களிலும் பரவி, வாழ்க்கை வளம் பெற்று தங்கள் மூதாதையரின் வலிகளை மனதில் சுமந்தாலும் அவர்களது அடுத்த தலைமுறையினர்க்கும் தமிழ் மரபை போதித்து, தமிழ் மொழியை அழியவிடாது வளர்க்க படைப்புகளையும் உருவாக்கிக் கொண்டு இருப்பதைப் காணும் போது நமக்கு உண்டாகும் மகிழ்ச்சி எல்லையற்றது.  அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது.

அயல்நாட்டில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் குழந்தைகளைத் தமிழ் கற்க வேண்டும் என்று பல மைல்  தூரம் சென்று கற்க வைக்கின்றனர். அக்குழந்தைகள் தொழில் மொழி, கல்வி மொழி ஆங்கிலமாக இருந்தாலும், நண்பர்களுடன் ஆங்கிலம் பேசினாலும் அடிப்படை வசதிகள் கிடைத்தவுடன் தங்கள் தாய் மொழியான தமிழில்தான் அவர்களின் உரையாடலும், வாழ்வியலும் நடைமுறையில் உள்ளது.  தங்கள் பெற்றோருடனும் தமிழில்தான் உரையாடல். புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் இனம், மொழி, நாடு எல்லாம் இழந்த, புலம் பெயரும் இடங்களில் அவமானங்களைச் சுமந்து வலிகளோடு வாழும் இவர்கள், தங்கள் வலிகளையும், வேதனைகளையும், மறக்கவும், புறக்கணிக்கவும், இலக்கியங்களைப் படைத்து தமிழையும் நேசித்து வளர்த்து வருகின்றனர். இங்கிருந்து சென்ற ஒரு எழுத்தாளர், அங்கிருந்த தமிழ் குடும்பங்களின் வீட்டில் இருந்த அரிய தமிழ் புத்தகங்களின் சேர்க்கையைப் பார்த்து வியந்தாராம்!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்ற பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் புலம்பெயர்ந்த/தாயகம் கடந்த தமிழர்களின் முயற்சியால் பல நாடுகளிலும் இன்று தமிழ் கல்விப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு கற்பிக்கப்பட்டு வருகின்றது.  ரஷ்யா, போலந்து, செக் ரிபப்ளிக் , பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, மலேஷியா, சிங்கப்பூர், அமேரிக்கா, போன்ற பல நாடுகளில் தமிழ் பள்ளிகள் மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் அளவு வளர்ந்துள்ளது என்பது பெருமையான விஷயம். 




அயல் நாட்டவரும் தமிழ் மொழியைக் கற்று ஆராய்ச்சி செய்யும் அளவு தமிழின் பெருமை பரவியுள்ளது. சீனாவைச் சேர்ந்தவர் செல்வி சாவோ ஜியாங்.  இவர் தமிழ் மொழியின் மேல் உள்ளக் காதலால் தனது  பெயரை "கலைமகள்" என்று மாற்றிக் கொண்டவர். சீனத் தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்றுள்ள செல்வி கலைமகள் சர்வதேச வானொலியின் தமிழ்  பிரிவின் தலைவர்.  இவர் எழுதயுள்ள "சீனாவில் இன்ப உலா" என்னும் புத்தகம், ஒரு சீனர் எழுதி இந்தியாவில் வெளியிடப்பட்ட முதலாவது தமிழ் மொழி புத்தகம்.  சென்ற ஆண்டு சீனாவின் புகழ் பெற்ற சி.பி. பதிப்பகத்திற்காக "சீனம் தமிழ் கலைச்சொல்" அகராதியைத் தொகுத்து வெளியிட்டார். சீன வானொலிப் பிரிவில், தமிழ் இணையதளம், கைபேசி இணையம் , தமிழொலி என்னும் இதழ் ஆகியவை வருவதற்கு இவர் பங்கு அளப்பரியது.


ஐரோப்பாவில், இந்திய மொழிகளில் தமிழ் மொழிதான் முதலில் சென்றடைந்துள்ளது என்பது பெருமைக்குரியது. ஜெர்மனியைச் சேர்ந்த பெண் உலரிகே நிகோலஸ், கொலோன் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய, தென்கிழக்காசிய ஆய்வுத் துறையின் தலைவரும், இந்தியலியல் துறைப் . பேராசிரியருமாவார். முத்தொள்ளாயிரத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.  தொல்காப்பியத்தின் செய்யுளியல், அணி இலக்கணம், யாபெருங்கலக்காரிகை, வீரசோழியம், தண்டியலங்காரம் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆய்ந்தவர்.  அதே போல் தொல்காப்பியத்தின் உவமையியலை, வடமொழி நூலான தண்டியின் அலங்கார சாஸ்திரத்துடன் ஒப்பாய்வு செய்தவர்.  தமிழில் நன்றாகப் பேசவும் செய்கிறார்.

 தாயகம் கடந்த தமிழர்களின் முயற்சியால் தொழில் நுட்பத்திலும் தமிழின் வளர்ச்சி அபாரமாக இருக்கிறது எனலாம்.  தமிழ் மின் புத்தகங்களுக்கானச்  சந்தைக்கு சர்வ தேசப் புத்தகச் சந்தை எதுவுமே உகந்ததாக  இல்லை. தமிழுக்கென்றே தனியாகச் சில சந்தைகள் ஏற்படுத்த வேண்டும் என்றும், தமிழகம், இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளுக்கான, அவரவர்களின் புத்தகங்கள் அதிகம் கிடைக்கும் வண்ணம் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்நோக்கும் சவால் தமிழ் புத்தகங்கள் அவர்களுக்குக் கிடைக்காததுதான். தமிழ் நாட்டிலிருந்து அவற்றை வாங்கிச் செல்லுவது என்பது கடினமாக இருப்பதாலும், செலவு கூடுதலாக இருப்பதாலும், தமிழில் மின் நூல்களை வெளியிடுவதில் முன்னோடியாக இருக்கும் திரு.திருமூர்த்தி ரங்கநாதன் அவர்கள் www.digitalmaxim.com  என்ற நிறுவனத்தை நிறுவி தமிழ் புத்தகங்களை வாசிக்கவும் தமிழை வளர்க்கவும் ஆவன செய்து வருகிறார். படைப்பாளிகள் தங்கள் தமிழ் புத்தகங்களை, படைப்புகளை மின் நூலாக மாற்றி உலகில் உள்ள தமிழர் எல்லோரும் வாசிக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்கள், அவரது மின் அஞ்சல் முகவரியான  thiru@digitalmaxim.com  ஐத் தொடர்பு கொண்டு சந்தைப்படுத்த முயற்சிக்கலாம். இவர் தமிழகத்தில் உள்ள பதிப்பகங்களையும் தொடர்பு கொண்டு புத்தகங்களைச் சந்தைப்படுத்த ஆவன செய்து வருகின்றார். இது பதிப்பகங்களுக்கும், படைப்பாளிகளுக்கும் வருவாயை உண்டாக்கும் ஒரு நல்ல முயற்சி எனலாம். இந்த வருடத்தில் இவை இணையதள புத்தகக் கடைகள் மூலம் சந்தைப்படுத்தப்படும் என்றும் தெரிய வருகின்றது.  இன்னும் பல தொழில் நுட்ப முயற்சிகளை தாயகம் கடந்த தமிழர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.  அதை இந்த இடுகையில் பேசினால் பெரிதாகி விடும் என்பதால் இதோடு நிறுத்திக் கொண்டுள்ளோம்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் வலிகளைப் புரிந்து கொண்டு அவர்களைப் பற்றி நம் தமிதமிழகத்துப் படைப்பாளர்கள் எதுவும் செய்தார்களா என்ற ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. எங்கள் பதில் இதுதான். தமிழகத்து தமிழர்களாகிய நாங்கள் எங்கள் வலைப்பூக்களில் பல புலம் பெயர்ந்த தமிழர்களுடன் உரையாடி, கருத்துக்கள் பல பகிர்ந்து கொண்டு, உறவாடி வருகின்றோம்.  உங்களது வலிகளைப் புரிந்து கொண்டுள்ளோம்.  உங்கள் எழுத்துக்களையும், படைப்புக்களையும் பாராட்டி வருகின்றோம். புலம்பெயர்ந்த தமிழர்களின் வலிகளை கவிதைகளாகவும், எழுத்துக்களாகவும் எழுதி வருகின்றோம். எங்கள் வலப்பூக்களவர்கள் பெரிய பெரிய இலக்கியங்கள் படைக்கவில்லை என்றாலும், ஏதோ எங்களுக்குத் தெரிந்த வகையில் தமிழை நேசித்து அலங்கரித்து அழகு பார்க்கின்றோம். இதோ, எங்கள் வலைப்பூக்களில் உள்ள அன்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்கள்   "ஈழம்; வந்தார்கள் வென்றார்கள்" என்ற ஒரு அழகான, ஈழத்துத் தமிழர்கள் பற்றிய படைப்பை மின் நூலாக வெளியிட்டுள்ளார். http://freetamilebooks.com

புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழை வளர்த்து, தங்கள் அடுத்த தலைமுறையினரும் தமிழ் கற்க வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சிகளில் இருக்கும்போது, தமிழகத்தில் தற்போது வளர்ந்து வரும் தலைமுறையினர் தமிழைக் கற்பது என்பது அரிதாகி வருகின்றது. அடுத்த தலைமுறைக்குத்  தமிழை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், தமிழில் பேசினால், எழுதினால், தமிழைக் கற்றால் இழிவு என்ற எண்ணம் மாற வேண்டும். மறைய வேண்டும். ஆங்கிலவழிக் கல்வியில் கற்றலைக் குறை கூறவில்லை. அதுவும் நடைமுறைக்கு மிக அவசியமான ஒன்றுதான். அதே சமயம் தமிழையும் கற்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் நூல்களையும் வாசிக்கும் பழக்கத்தையும் சிறு வயது முதலே பழக்க வேண்டும். இது போன்ற கருத்தரங்குகள் அவ்வப்பொழுது நடைபெறவேண்டும் என்பதும் எங்கள் கருத்து. 

 தமிழகத்தில் தமிழ் தமிழ் என்று கூவுபவர்கள்  தமிழைச் செம்மொழி என்று பறை சாற்றினால் மட்டும் போதாது.  அவர்கள் அதை அடுத்த தலைமுறையினர்க்கும் எடுத்துச்  செல்ல ஆவன செய்ய வேண்டும்.   

தாயகம் கடந்த தமிழர்களானாலும், அரசியல் காரணம் இல்லாமல் சுய விருப்பத்தோடு தங்கள் திறமைகளுக்கு சாதி, பாலியல் பாராமால், போராட்டம் இல்லாமல் எங்கு அங்கீகாரம் கிடைக்கின்றதோ அங்கு குடியேறிய தமிழர்கள் ஆனாலும், தமிழர்களே உங்கள் அடுத்த தலைமுறையினருக்கு அவர்களது தொழில் மொழி, கல்வி மொழி அந் நாட்டின் மொழியாக இருந்தாலும், தயவு செய்து தமிழை கற்றுக் கொடுங்கள்! இதுதான் எங்கள் கருத்து!
  
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்த/இருக்கும் பெரும்  தமிழணங்கே!





 



புதன், 15 ஜனவரி, 2014

தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போக வைக்கும் மூலிகை மருத்துவம்



தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல் காது போக வேண்டியது காதில் முளைத்திருந்த மரக்காளான் போன்ற பரு போனது எனக்கு மிகுந்த அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் தந்தது.  என் நண்பன், பிஜுவின் மாமனார் வேலாயுதன் 5 மாதங்களுக்கு முன் தனது வலது காதில், துவாரத்திலிருந்து வெளியே, மரத்தில் பற்றிக் கொண்டு முளைக்கும் காளான் போல், வளர்கின்ற ஒரு பருவால் (wart) துன்புற்றிருந்தார். வலியில்லை என்றாலும் அவர் காது கேட்காத நிலையை அடைந்திருந்ததோடு,  பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் வகையில் அது பெரிதாகவும், அருவருப்பாகவும் இருந்தது.  



பல டாக்டர்கள் கொடுத்த பல மருந்துகள், பலனளிக்காமல் போனதால் கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் சென்று, E.N.T டாக்டர் மற்றும் சர்ஜனைக் காண, அதை பயாப்சிக்கு உட்படுத்தி, உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும் என்றும், பெரும்பாலும் பருவை நீக்கும் போது, அது காதோடு பற்றிப் பிடித்திருப்பதால், காதில் ஓட்டை விழ வாய்ப்புண்டு. எனவே, காதையும் ரிமூவ் பண்ண வேண்டியிருக்கும் என்றும் உறுதியாகச் சொல்லிவிட்டார். 



காதைக் காப்பாற்றவும் வேண்டும், வளரும் பருவை அகற்றவும் வேண்டும். செய்வதல்லாது திகைத்தார் வேலாயுதம். ஒற்றை மூலி வைத்தியம், பச்சிலை வைத்தியம், மூலிகை மருத்துவம் என அறுவைச் சிகிச்சைக்குப் போகும் முன், ஓரிரு முயற்சிகளைச் செய்ய முடிவு செய்தார். எங்கு சென்றாலும் எல்லோரது கண்களிலும்படும் இந்தப் பருவுக்கு மருந்து சொன்னவர்கள் ஏராளம். அதில் ஏதோ ஒருவர் சொன்னதை, வேலாயுதனால் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட முடியவில்லை.

ஏதோ ஒரு தையல் காரர்.  அவரை நம் நண்பர் சென்றுக் கண்டார். தையல் காரரும், வைத்தியரும் ஆன அவருக்கு பண ஆசையெல்லாம் கிடையாது.  ஆனால், அவர் ஒரு கண்டிஷன் போட்டார்.  “இந்த மருந்தை உங்களைப் போல் அவசியமுள்ள ஒருவருக்கு அல்லாது (எப்போதாவது உங்கள் வாழ்வில் நீங்கள் என் முன் வந்தது போல், உங்கள் முன்னும் ஒருவர் வந்து நிற்கும் போது) வேறு யாருக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்தால், மருந்தால் அவருக்கும் உங்களுக்கும் பலன் கிடைக்காது. உங்களுக்கு மீண்டும், போன பரு வரவும் செய்யும். (இப்பத்தான் புரியுது, நம் சித்தர்கள் செடிகளுடன் பேசி, அவைகளின் குணம் அறிந்து, மக்களுக்கு பகிர்ந்து நல்கிய பச்சிலை மூலிகை மருத்துவமெப்படி நம் நாட்டிலிருந்து காணாமல் போயிருக்கிறது என்று......கொடுமை!...வேறென சொல்ல!....)

எப்படியோ நம் நண்பர் கடந்த ஓரிரு மாதங்கள் மூன்று மூலிகைகளின் கூட்டான அந்த மருந்தைக் காதில் பூசி, இரு முறை அந்தப் பரு வீங்கி உடைந்து, உதிர்ந்து, மீண்டும் வீங்கிய போதும், வருவது வரட்டும் என்று பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தார். அதிசயம்.! மூன்றாம் முறை வீங்கி உடைந்த அந்தப் பரு காய்ந்து உதிர்ந்தே போனதாம். அதிசயம் ஆனால் உண்மை! (நம்பள்கிதான் இதன் பின் ஏதேனும் உண்மை இருக்க வாய்பு உண்டா என்று சொல்ல வேண்டும். இல்லை குருவி உட்கார பனங்காய் விழுந்த கதையா?! என்று)


இந்தவகைப்பாம்புகள் ஆப்பிரிக்காவில் அதிகம்



வருடங்களுக்கு முன்பு, ஜிம்பாப்வேயில் (ஆப்பிரிக்கா) நடந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு சம்பவம் என் நினைவுக்கு வந்தது. சில வருடங்களுக்கு முன், +2 ஆங்கில பாடப்புத்தகத்தில் நான் அதைக் கற்பித்து இருக்கிறேன். வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில், விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் கண்களில் ஏதோ ஒரு விஷப் பாம்பு விஷத்தைச் சீற்ற, அலறி தரையில் விழுந்து உருளும் தன் குழந்தையை எடுத்த அந்த இங்கிலாந்தைச் சேர்ந்த தாய் தன் குழந்தையின் கண்கள் இரண்டும் ஒரு சில வினாடிகளில் சிவந்து வீங்கவும் செய்ததைக் கண்டு அதிர்ந்தார். அந்த வீட்டின் சமையல் காரரான ஆப்பிரிக்கர் அதைப் பார்த்து அலறிக் கொண்டு பைத்தியம் பிடித்தவரைப் போல் ஓடிக் கண்களில் கண்ட இலைகளையெல்லாம் பறித்து, ஓடி வந்து அவற்றின் சாரைப் பிழிந்து குழந்தையின் கண்களில் ஊற்றினார். குழந்தை அழுகையை நிறுத்தி மயங்கி விட்டான்.

அடுத்த ஒரு ம்ணி நேரத்துக்குள் பையனின் அப்பா டாக்டருடன் அங்கு வந்து சேர்ந்தார். பையனின் கண்களைப் பரிசோதித்த டாக்டர் பயப்பட ஒன்றுமில்லை என்றார். பையனின் அம்மா, சமையக்காரரின் பச்சிலை வைத்தியத்தைப் பற்றிக் கூறியதும் மூவரும் அடிசயத்துடன் சமையற்காரரைப் பார்த்ததோடு மட்டுமல்ல, அவரிடம் எந்த இலையை உபயோகித்து, குழந்தையின் பார்வையை எப்படி அவர் திரும்பப் பெற உதவினார் என்று கேட்க, பாவம் அவர் ஓடி ஏதேதோ இலைகளைப் பறித்துக் கொண்டுவந்து அவர்களிடம் கொடுத்து அவர்களையும் குழப்பி, “எனக்கு ஒன்றும் ஞாபகம் இல்லை என்று சொல்லி அழுது, இடையில் மயங்கி விழுந்து.....இப்படிப் பலதும் செய்ய, அது கண்ட டாக்டர் பெற்றோரிடம்,

“பிரயோஜனமில்லை, ஆப்பிரிக்க மக்களுக்கு இது போல பல அரிய மருத்துவ அறிவும் உண்டு.  ஆனால், அவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லித் தரமாட்டார்கள். ஆனால். அவசியம் வரும் போது, அதை உபயோகிக்கத் தயங்கவும் மாட்டார்கள். என்றார்.

என்ன செய்ய.  எல்லாம் பொது உடமை ஆக்கும் மேலை நாட்டவரின் மருத்துவம்தான் (அலோபதி) நமக்கு விதித்தது. சாப்பிடும் மருந்தே புதுவித நோய் உண்டாக்கும் ஆங்கில மருத்துவம்தான் நம் கை எட்டும் தூரத்தில் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு எதினோபயாலஜியில் நடத்தப்பட்ட ரிசர்ச்சில், இந்தியாவில் பல பாகங்களில் உள்ள, பழங்குடி மக்கள் மற்றும் கிராமத்தினர், ஏறத்தாழ 7500 மூலிகைச் செடிகளை பலதரப்பட்ட நோய்களுக்கு மருந்தாக உபயோகித்து பயன் பெறுவதாகத் தெரிய வந்தது.  அவற்றைப் பற்றி அறிந்து, அவற்றை உபயோகித்து பயன்பெற அரசும், மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ வல்லுனர்களும் ஆவன் செய்ய வேண்டும்.

மாலிக்குலர் பயாலஜி மற்றும் பயோ கெமிஸ்ட்ரியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு நோயைக் குணப்படுத்தக் கூடியத் தன்மை இருந்தாலும் அதிலுள்ள சில ரசாயனப் பொருட்கள் கிட்னி, லிவர் போன்ற உடல் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி உடலுக்கு வேறு விதமான பல நோய்களையும் தர வாய்ப்புண்டு. அதே சமயம், நம் மூலிகைகள் எந்த வித பாதிப்பும் உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் ஏற்படுத்தாமல் நோயை குணப்படுத்தி உடலுக்கு பூரண ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தர வல்லது. எனவே அதை நம்பி, நாம் உபயோகிக்கலாம். இவற்றில் பலதும் மெடிக்கல் Pharmacopoeia வில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, வரும் தலைமுறை இவற்றின் சிறப்பை உணரும்படியாக அவற்றை நாம் அவர்களுக்கு சொல்லிலும், செயலிலும் விளக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஆனால், நம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் இம் மூலிகைகளை, மருந்தாகும் செடிகளை யார்தான் நமக்கு அடையாளம் காட்டுவார்கள்? அதற்கு இங்கிலாந்திலிருந்தோ அமெரிக்கவிலிருந்தோ, நம் பச்சிலை மூலிகைகளைப் பற்றி புகழ்ந்து பேசவோ, எழுதவோ செய்தால்தான் உண்டு. அப்படிச் செய்யும் போது அவர்கள் சும்மா போகமாட்டார்கள் காப்புரிமை எடுத்துக் கொண்டுதான் போவார்கள். காப்புரிமையும் நம்மால் கொடுக்க முடியாது. (வேப்பிலையும்....மஞ்சளும் நம் கைவிட்டுப் போக இருந்தது நமது விழுப்புணர்வுதான் அவை நம் கைவிட்டுப் போகாது காத்தது. எல்லோருக்கும் நினைவிருக்குமே). எனவே, நம் மூலிகைகளை உபயோகித்து நம்மவர்கள் நோயற்ற வாழ்வு வாழ உதவும் வகையில் இனியொரு விதி செய்து அதை எந்த நாளும் காப்போம்!!

இந்த இடுகைக்கு வந்த, இதனை ஆமோதிக்கும் வண்ணமும், மூலிகை மருந்தினால் குணமானது என்று அனுபவத்தால் வந்த சில பின்னூட்டங்கள்! விவாதமும் எழுப்பும் நல்ல பின்னூட்டங்கள்!
இந்தப் பின்னூட்டங்களுக்குப் பிறகு, இறுதியில் பொதுவாக, எங்களது கருத்தையும் சொல்லியிருக்கிறோம்!


[[ஆனால், அவர் ஒரு கண்டிஷன் போட்டார். “இந்த மருந்தை உங்களைப் போல் அவசியமுள்ள ஒருவருக்கு அல்லாது (எப்போதாவது உங்கள் வாழ்வில் நீங்கள் என் முன் வந்தது போல், உங்கள் முன்னும் ஒருவர் வந்து நிற்கும் போது) வேறு யாருக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்தால், மருந்தால் அவருக்கும் உங்களுக்கும் பலன் கிடைக்காது. உங்களுக்கு மீண்டும், போன பரு வரவும் செய்யும்.]]

குணம் ஆகியிருக்குமா இல்லையா என்பது இங்கு கேள்வி அல்ல! சொல்லிகொடுத்தால் பலன் கிடைக்காது என்று சொல்லும்போதே நம்பகத் தன்மை முழுவதும் அடிபட்டு போகிறது! அவன் பார்த்தான் இவனுக்கு இப்படி ஆச்சு என்று சொல்வது வழக்கமா கேள்விப்படுகிறது தான். நான் எப்பவும் கேப்பது, "நீ அதை பாத்தியா?" என்பது தான். நூற்றுக்கு நூறு வரும் பதில் நான் பார்க்க வில்லை என் உயிர் நண்பன் சொன்னான்; அவனைக் கேட்டல் அவன் சொன்னான் இவன் சொன்னான் அப்படி இப்படிஎன்று தான் பதில் தான் வரும்.

உங்கள் நண்பர் என்பதால். அந்த டாக்டர் கொடுத்த சீட்டுடன், அதே ENT டாக்டரிடம் காட்டுங்கள்; அவர் என்ன சொல்கிறார் என்றும் பார்ப்போம்.

மேலும், 70 விழுக்காடு மருந்துகள் இயற்கையில் இருந்து தான் கிடைகிறது. சுடுகாட்டில் வளரும் நித்யகல்யாணியில் இருந்து கேன்சருக்கு மருந்து தயாரிக்கிரார்கள்; பெனிசிலின் கண்டு படித்ததே தற்செயலாகத்தான். எங்கோ படித்தது. ஒரு புண்ணின் மீது, ரொட்டி துண்டுடன் சில mold or fungus வைத்து கட்டியபோது புண் ஆறியது என்று.

அல்லோபதி மருத்துவர்கள் தாங்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு தவறு என்று தெரிந்தால் தங்களை .மாற்றிக்கொள்வார்கள்.

மஞ்சள் வேம்பு கரும்பு, அரிசி இவைகள் எல்லாம் எல்லா --tropical countries-ல் கிடைக்கிறது. புளி , முருங்கைக்காய், வெண்டை, கல்யாண பூசணி, மஞ்சள் பூசினி இவை எல்லாம் எங்களுக்கு இந்தியாவில் இருந்து வருவதில்லை. மாயன் civilization-தொன்மையானது. இந்தியர்கள் எதோ மஞ்சள் இந்தியாவில் மட்டும் தான் விளைகிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிர்ர்றாக்கள். இங்குள்ள சில மிளகாய்கள் ஒன்று நம்மூர் பச்சை மிளாகாய் இருபதுக்கு சமம். இங்கு இதை கையால் கூட தொடமாட்ட்ர்கள்.

நிறைய இயற்கை மூலிகைகள் --சந்தேகம் இல்லாமல் health supplements தான். ஏன் நானே கூட எடுத்துக் கொள்கிறேன். அப்படி ஒன்றை சாப்பிட்டு காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதையா நான் சிகரெட்டை நிருத்தினேன். அதன் மூலம் மட்டும் தான் நிறுத்த மு.டிந்தது என்று என்ன்னால் உறுதியாக கூற முடியாது அதை ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்படாததால் யாருக்கும் சொல்வது கிடையாது---அப்படி சொல்வது தவறு.

வெறும் தண்ணி மட்டும் கொடுத்து நான் 100 பாம்புக்கடி கடித்தவ்ர்களில் 96 பேரைக் காப்பாற்றுவேன். எப்படி? மொத்தம் இந்தியாவில் இருக்கும் பாம்புகளில் நான்கு வைகை பாம்புகள் மட்டுமே விஷம் மீதி எல்லாம் ஒன்றும் செய்யாது.

ஒரு வெறி நாய் கடிக்கவைத்து, நாகப் பாம்பு கடிக்கவைத்து ஒரு மனிதனை ஆங்கில மருந்து கொடுத்து காப்பாற்ற முடியும்;அதே சமயம் இயற்கை வைத்தியம், மூலிகையினால் காப்பாற்ற சொல்லுங்கள்---அவருக்கு நோபெல் பரிசு நிச்சயம்!


மூலிகை பற்றிய விழிப்புணர்வைத் தூண்டும் பதிவு.

என் மைத்துனருக்குத் தலை முழுக்கப் ‘புழுவெட்டு’ [வட்ட வட்டமான வழுக்கை] பரவியது. ஆங்கில மருத்துவத்தால் பலன் கிடைக்காத நிலையில், ‘ஆடு தீண்டாப் பாலை’என்னும் மூலிகையை ஒருவர் பரிந்துரைத்தார். ஆறு மாதங்களுக்கு மேலாகத் தேய்த்து வந்தததில் மீண்டும் முடி முளைத்துவிட்டது.

மலைப் பகுதிகளில் அரசாங்கமே மூலிகைப் பண்ணைகள் உருவாக்கலாம். தனியாரையும் மானியங்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

வணக்கம்
நண்பரே..

நல்ல கருத்தை சொல்லியுள்ளிர்கள் பதிவில்... ஆங்கில மருத்துவத்தை விட மூலிகை மருத்தவம் சிறந்தது... ஏன் என்றால் பக்க விளைவுகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் உதாரணமா. நமது வீடுகளில் கூட பாட்டிவைத்திய முறைதான் செய்கிறார்கள் ...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நம்பள்கி சொல்லுகிறார்---
ஒரு வெறி நாய் கடிக்கவைத்து, நாகப் பாம்பு கடிக்கவைத்து ஒரு மனிதனை ஆங்கில மருந்து கொடுத்து காப்பாற்ற முடியும்;அதே சமயம் இயற்கை வைத்தியம், மூலிகையினால் காப்பாற்ற சொல்லுங்கள்---அவருக்கு நோபெல் பரிசு நிச்சயம்!...................

பதில்-
நிச்சயம் காப்பாற்றமுடியும்.. ஏன் என்றால் நான் நேரில் பார்த்தேன் இது உண்மை.. எங்கள் ஊரில் பாம்பு கடித்தால் விசவைத்தியரைத்தாண் நாடுவார்கள். ஒருபெடியனுக்கு..வயது 15 பாடசாலையில் படிக்கும் வயது. அவன் மாலையில் விளையாடும் போது (இரத்த புடையன் பாம்பு கடித்தது அவனது மூக்கு வாய் இவைகளில் இரத்தம் வடிந்தது கண்கள் எல்லாம் சிகப்பாகியது...கண் மூடியது சளி தொண்டையை இறுக்கியது. எல்லோரும் அழுதார்கள்... இறந்து விட்டான் என்று விசவைத்தியர். கண்ணுக்கு (கலிங்கம் என்று சொல்லப்படும் ஒரு மூலிகை சார் விட்டார் பின்பு மூக்கு பகுதிக்கும் மூலிகை சார் விட்டார் தொண்டையை இறுக்கி இருந்த சளி வெளியில் வந்தது கொஞ்சம் கொஞ்சமாக. மெதுவாக கண்ணும் திறந்தான்... செய்யவேண்டிய வைத்தியத்தை செய்தார் விஷவைத்தியர்... பெடியன் உயிர்தப்பினான்.ஆங்கில மருத்துவ முறையை விட மூலிகை மருத்தவம் சிறந்தது...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்படி பாம்பு கடித்த பெடியனை வைத்திய சாலைக்கு சென்றால் கடித்த பாம்பு எங்கே கொண்டுவாருங்கள் என்று உறவினர் இடம் ஆயிரத்தி எட்டு கேள்வி கேட்டு சீரலிப்பார்கள்...ஆங்கில மருத்தவம் மூலம் குணம்மடைந்தாலும் பாம்பின் விசத்தன்மையால் சில காலத்தில் சில நோய்கள் வரும்.. ஆனால் மூலிகை மருந்துவத்தில் அப்படி தன்மை இல்லை வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றது போல.... பவர்புள்
(விஷவைத்திய மறை எனக்கும் தெரியும்.. அது படித்தேன்)விஷத்தை கட்டுப்படுத்தஎன்னும் எவ்வளவு மூலிகை யுள்ளது.
பாம்பு கடித்து விட்டதாக விஷவைத்தியரை அழைக்கச் செல்லும் நபரின் நடத்தை கோலம் அவர் சொல்லும் விதம் வைத்த என்ன பாம்பு கடித்தது. என்றும் பாம்பு கடிவாங்கியவர் உயிர் தப்புவரா அல்லத தப்பமாட்டாரா என்று சொல்லும் பக்குவம் மூலிகைவைத்தியருக்கு உண்டு....(இது தனிச்சிறப்பு என்றுதான் சொல்லவேண்டும்)
நண்பரே எழுதினால் என்னும் விரிவாக எழுதிக்கொண்டு போகலாம்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வணக்கம்
நண்பரே

நான் மூலிகையை சொல்ல விருமப வில்லை அந்த மூலிகையின் வேர் சப்பி சாப்பிட கொடுப்பார்கள் அதன் வேர்
இனித்தால்- ஒருவகை பாம்பு.
கசக்கினால் ஒருவகைப்பாம்பு.
உகைத்தால்-ஒருவகைப்பாம்பு.
புளித்தால்-ஒருவகைப்பாம்பு.
இவைகளில் ஒன்றும் இல்லை என்றால்-வேறுவகையான து.

த.ம9வது வாக்கு
இப்படியாக அந்த தவரத்தின் வேர் சொல்லும்.. என்னபாம்பு கடித்தது என்று...

எப்படித் தவறவிட்டேன் இந்தப் பதிவை- என்று தெரியவில்லை. இன்றுதான் பார்க்கிறேன். மன்னிக்கவும். பயனுள்ள விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பழனியில் இருக்கும் பிரபல சித்த வைத்தியரிடம் மூலிகை மருந்து பெற்று தடவிக் கொண்டதில் தான் எனக்கு ஆள்காட்டி விரலில் இருந்த WARTS எண்ணும் மறு நிரந்தரமாக மறைந்தது. அதற்குமுன், அல்லோபதியில், அந்த மருவை மின்சாரம் கொண்டு கறுக்கி, அதன் மேல் ஒரு களிம்பு தடவச் சொல்வார்கள். ஒரு மாதத்திற்குப் பின் மீண்டும் அதே மறு முளைத்து எழுந்துவிடும். மறுபடியும் மின்சாரம். களிம்பு. மறுபடியும் முளைத்தெழுதல். இப்படியே ஆறு மாதங்கள் அவதிப்பட்ட பின் ஒருநாள் தற்செயலாகக் கோவை சென்றிருந்தபொழுது பழனி ஆனந்தா வைத்தியசாலை டாக்டர் சங்கரநாராயணன் (இப்போது அமரர்) அவர்களை ஒரு ஓட்டல் முகாமில் சந்தித்தேன். நாளே ரூபாய்க்கு ஒரு மூலிகை களிம்பு கொடுத்தார். பத்து நாட்கள் தடவினேன். இப்போது முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அந்தப் பரு திரும்பி வரவில்லை. அந்த வைத்தியசாலை இன்னும் இருக்கிறது.
விசப் பாம்பு கடிபட்டவர்களை, வெறும் மிளகு, வேப்பிலை மற்றும் கார மிளகாய் கொடுத்தே குணப்படுத்துவதை கிராமங்களில் பார்த்திருக்கிறேன்... ஆனால் அந்த வைத்தியம் தலைமுறைகளுக்குக் கடத்தப் படாமலே மறைந்து போவதுதான் சோகம்...
நல்ல பயனுள்ள இடுகை...
//ஒரு வெறி நாய் கடிக்கவைத்து, நாகப் பாம்பு கடிக்கவைத்து ஒரு மனிதனை ஆங்கில மருந்து கொடுத்து காப்பாற்ற முடியும்;அதே சமயம் இயற்கை வைத்தியம், மூலிகையினால் காப்பாற்ற சொல்லுங்கள்---அவருக்கு நோபெல் பரிசு நிச்சயம்!//
மூலிகைகளினால் நிச்சயம் காப்பாற்ற முடியும் நண்பரே. ஆனால் அம் மருந்தைச் சொல்வதற்குத்தான் ஆள் இல்லை இப்போது.
நாம்தான் அனைத்தையும் தொலைத்துவிட்டோமே.

நான் இப்போது கூட சிறு சிறு உடல்
உபத்திரவங்களுக்கு மாத்திரைகளை விட
பாட்டிவைத்திய முறையில்தான் தீர்த்துக் கொள்கிறேன் 

எங்களது கருத்து
ஆம்! மிகச் சரியே!

அலோபதி மருத்துவம் வெளிப்படையாக உள்லது! மற்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் இன்னும் அத்தனை வெளிப்படையாகவோ, டாக்குமென்ட் செய்யப்படவோ இல்லை என்பதுதான். அதற்கான நிரூபணங்கள் நம்பள்கி கேட்பது போல் "அதைப் பாத்தியா" என்பதற்கான பதில் வெளிப்படையாக, ஆதாரங்களுடன் இல்லை. அதை அந்த மருத்துவர்கள், உண்மையான விவரங்களுடன் அதாவது எப்படி அவர்கள் நிவாரணம் அளித்தார்கள் என்பதை, அலொபதி மருத்துவம் விளக்குவது போல....அதாவது அந்த மூலிகை எப்படி உடலில் ரியாக்ட் செய்கிறது, பின்விளைவுகள், நிவாரண விதிமுறைகள், காம்பினேஷன், success stories, failure stories போன்ற புள்ளி விவரக் கணக்குடன், தகவல்களுடன் வெளியிட்டால் ஆராய்சிகளுக்கு மேலும் உதவிகரமாக இருக்கும்.


ஞாயிறு, 12 ஜனவரி, 2014

ஜில்லா - ஜஸ்ட் ஒரு பார்வை


ரௌடி அப்பாவுக்கு சக்தியாய் உடனிருந்து, ரௌடித்தனம் செய்யும் மகன் (வளர்ப்பு மகன்), அப்பாவின் விருப்பத்திற்காக போலீஸில் சேர்ந்து (அஸிஸ்டென்ட் கமிஷனராக!) உண்மையாக போலீஸாய் மாறி அப்பாவை வில்லனிடமிருந்துக் காப்பாற்றி, நல்லவராக்கி, அவரது விருப்பப்படி ஜெயிலுக்கும் அனுப்புவதுதான், டைரக்டர் நேசனின் இந்த “ஜில்லா”. 


அப்பாவும் பிள்ளையுமாக, மோஹன்லாலும், விஜய்யும் மிக அருமையாகத் தங்களுடைய கதாபாத்திரங்களைக் கையாண்டிருப்பது படத்திற்கு மெருகேற்றுகிறது.


இண்டெர்வலுக்கு முன்பு வரை படத்தை இழுத்தாலும், இண்டெர்வலுக்கு ஜஸ்ட் முன் அப்பாவும், மகனும் மோதிக் கொள்ளும் (வார்த்தைகளை வீசி) காட்சியில், விஜய்யும், மோஹன்லாலும் அவரவர்களுக்கே உரித்தான ஸ்டைலில் அசத்துகிறார்கள். இரண்டாம் பகுதி இறுதி வரை, விறு விறுப்பாகப் போனாலும், படம் பார்ப்பவர்கள் எளிதாக அடுத்தடுத்தக் காட்சிகளை ஊகிக்க முடிவது, இதே கதையை நாம் பல படங்களில் சிறிய மாற்றங்களுடன் கண்ட ஒன்றானதால்தான். 


புதுமை என்பது விஜய், லாலேட்டன் காம்பினேஷன்தான். அதுதான் “ஜில்லா. அதுவின்றி வேறொன்றும் “இல்லா” .  பாடல்கள் எல்லாம் கேட்கும்படியாக இருக்கின்றன. (வரிகள் தெளிவாகக் காதில் விழுகின்றது). 


கண்டாங்கி  கண்டாங்கி
விஜய் பாடிய பாடல் நல்லாருக்கு

‘வெரசா போகையிலே, புதுசா போறவளேயும், ‘கண்டாங்கிக் கட்டி வந்த பொண்ணும் மனதில் நிற்கின்றது. விஜய்யின் நண்பனாக வரும் “சூரி யின் நகைச் சுவை பரவாயில்லை. நாயகி காஜல் அகர்வால் காதலியாகவும், காவல் அதிகாரியாகவும் தன் கதாபாத்திரத்தை நன்றாகவேச் செய்திருக்கின்றார்.

காக்கிச் சட்டையை வெறுக்கும் விஜய் லஞ்சம் வாங்கும் பெண் போலீசாரைக் கை நீட்டி அடித்தப் பெண்ணைக் கண்டதும் காதல் கொண்டு பெண் பார்க்கத் தம்பி, தங்கை மற்றும், ரௌடித் தோழர்களுடன் காஜல் அகர்வால் வீடு சென்று காத்திருக்கும் போது, காக்கி யூனிஃபார்மில் வரும் காஜலைக் கண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறும் இடம் அருமை. அதே போல் உண்மையானப் போலீசாக (மனு நீதிச் சோழனாக) மாறி, தன்னிடம் நீதி கேட்க வந்தப் பெண்ணுக்காகக் காக்கி அணிந்து, தன் அப்பாவின் ரௌடிகளையேத் தாக்கும் இடம் அருமை.

வில்லன் சம்பத்ராஜ், வில்லனாவதற்கு முன்பும், வில்லனான பின்பும் தன் கதா பாத்திரத்தை பாராட்டும் படியாகச் செய்து, படத்தில் வில்லன் இல்லாத குறையைத் தீர்க்கிறார். 


பூர்ணிமா ஜெயராம் அம்மாவின் கதாபாத்திரத்தை அழகாகாகச் செய்து போகிறார்.  விஜய், தங்கையின் கல்யாணப் பந்தியில் அழையா விருந்தாளியாய் வருமிடத்திலும், தம்பியை வில்லனிடமிருந்துக் காப்பாற்ற முயலும் இடத்திலும், நல்ல ஒரு அண்ணனையும் உருக்கமாகக் காண்பித்து நெஞ்சை நெகிழச் செய்கிறார். ஜில்லா எதிர்பார்த்த மாதிரி (உங்களை யாரு ரொம்பவெல்லாம் அவசியமில்லாம எதிர்பார்க்கச் சொன்னது?) ரொம்ப ரொம்ப நல்லா இல்லனாலும், பார்க்கிற மாதிரி பரவா ‘இல்லதான். 

பரவா'இல்ல'தான்