வெள்ளி, 1 ஏப்ரல், 2016

முட்டாள் தினமும் ஏமாந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்களும்

 Image result for april fools and politicians
courtesy - google

இன்று ஏப்ரல் 1.  முட்டாள்கள் தினம் என்று அழைப்படும் நாள். இந்தத் தினம் எப்படி ஆரம்பித்தது, போன்ற தகவல்கள் விக்கியில் இருக்கின்றது. ஆங்கில இலக்கியத்தில் சாசரின் கான்டெர்பரி டேல்ஸ்(Geoffrey Chaucer's The Canterbury Tales) – கதைகளில் ஒன்றிற்கும் இந்த ஏப்ரல் ஒன்றிற்கும் தொடர்பு இருப்பதாகவும் சொல்லுவதுண்டு. என் நோக்கம் அதுவல்ல.

இந்த நாள் பொதுவாக ஒரு நகைச்சுவையாகவும், விளையாட்டாகவும் தான் பார்க்கப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு வருடமும் இந்த நாள் வரும் போது, நான் நினைத்துக் கொள்வது, ஹும் இந்த ஒரு தினம்தான் முட்டாள் தினமா? உண்மையாகவே, நாம் தினமும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் நம் ஆட்சியாளர்களால், பல வியாபாரிகளால். தினமுமே முட்டாள்கள்தான்.

அதுவும் கடந்த 10 நாட்களில், வேலைப்பளு, பல அனுபவங்கள். அதில் ஒன்று, எனது அரைப்பானைச் சரி செய்ய எடுத்துக் கொண்டு போன போது உறவினர் ஒருவரைச் சந்திக்கவும், “உன்னுடையது சரியாகும் வரை எனக்குக் கிடைத்த அம்மா அரைப்பானை உபயோகிக்கின்றாயா என்று கேட்டார். இது போன்ற இலவசங்களை உபயோகிப்பது இல்லை என்று சொல்லி நான் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல்,  அவர் வீடு அடுத்து இருந்ததால் எடுத்துக் கொண்டு வந்தார்.

கடைக்காரர் சிரித்தார். “இருங்க முதல்ல அது வேலை செய்யுதானு பார்ப்போம்” என்று சொல்லி மின் இணைப்பில் இணைத்தார். அம்மா தீப்பொறியாய் பறந்தார்! “டொப்” என்ற சத்தத்துடன் உண்மையைப் பறை சாற்றியது அரைப்பான். அந்த அரைப்பான் மிகவும் லேசாக எடையே இல்லாமல் இருந்தது. மிக மிக மட்டமான தயாரிப்பு. என் உறவினர் அடுத்து அம்மா மாவு அரைப்பானையும் எடுத்துக் கொண்டு வந்தார். அம்மா சுற்றவே இல்லை. தீப்பொறி. இவை சமீபத்தில் வெள்ளம் வந்த போது கொடுக்கப்பட்டவை. அதற்கு முன் கொடுக்கப்பட்டவையும் மூலையில்தான்.

கடைக்காரர் ஒரு மூலையைக் காட்டினார். பல கடைகளிலும் இப்படித்தானாம். பல கோடிகள் அம்மாவின் படம் தாங்கி மூலையில் கிடக்கின்றன. எத்தனைக் கோடிகள்! நாம் இலவசம் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம்! இந்த ஆட்சி என்றில்லை எல்லா ஆட்சியிலும்தான்.

இலவசங்கள் மட்டுமல்ல வாக்குறுதிகளும்தானே. எத்தனை விதங்களில் நாம் ஏமாற்றப்பட்டு வருகின்றோம். பலவருடங்களாக, தினமுமே நாம் முட்டாள்கள் என்பதைத்தானே இது சொல்லுகின்றது!

இதோ அடுத்த முட்டாள் தினம் மே 16 நெருங்கி வருகின்றது. இப்படிச் சொல்லுவதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். ஒவ்வொரு தேர்தலும் ஆட்சியும் நம்மை முட்டாள்களாக்குவதால்தான். நமக்கான நல்லதொரு தலைவரைக் கூடக் தேர்ந்தெடுக்காமல் இருக்கின்றோமே என்ற ஆதங்கம்தான்.

இலவசங்களுக்குப் பறக்கும் நாம் என்றேனும், “அரசியல்வாதிகளே உங்கள் இலவசங்கள் தேவையில்லை. வியாபாரக் கூடங்களாக மாறிய கல்விகூடங்கள் தேவையில்லை. எங்களுக்குத் தேவை, எல்லோரும் கற்கும் நிலையிலான நல்ல தரமான கல்வி, அன்றாடத் தேவைகளான நியாயவிலைக்கடைகள், நியாயமான விலையில் தரமான பொருட்கள், தரமான வாழ்க்கைத்தரம், நேர்மையுடன் எங்கள் மீது அக்கறையுள்ள ஒரு நல்ல தலைவர், ஊழலற்ற சட்டதிட்டங்கள் உள்ள ஆட்சி, வாழ்வு” என்று நம் உரிமைகளுக்காக என்றேனும் போராடியிருக்கின்றோமா? நல்ல ஆட்சி தேவை என்று புரட்சி செய்திருக்கின்றோமா?

அட அரசியல்வாதிகளே ஒரு நாடு நல்ல முன்னேற்றம் காண வேண்டும் என்றால் அடிப்படைக் கல்வியிலிருந்து, ஆராய்ச்சிக் கல்வி வரை நல்ல தரமான கல்வி, மக்களுக்குத் தரமான வாழ்க்கைத்தரம் தேவை என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், பாமரர்கள் இல்லாவிட்டால் உங்களால் பிழைக்க முடியாதே. ஏமாறும் முட்டாள்கள் இருக்கும் வரை நீங்கள் ஏமாற்றிக் கொண்டுதானே இருப்பீர்கள்.

ஏமாறும் முட்டாள்களாய் நாம் வாழ்வதில் அர்த்தமில்லை மக்களே. மதத்தையும், சாதியையும், சினிமாவையும், அரசியலிலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டும். இலவசங்களைப் பெறாமல், நம் அடிப்படை உரிமைகளை அறிந்து கொண்டு அதை நிலைநாட்டுவதில் முனைப்புடன் இருக்க வேண்டும் அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி.

இப்போதேனும் மக்கள் விழிப்படைந்து இனியும் முட்டாள்களாக இல்லாமல், நல்ல ஆட்சி ஒன்றை அமைக்க வழி செய்ய வேண்டும். ஏப்ரல் 1 மட்டும் நகைச்சுவையான முட்டாள் தினமாக இருக்கட்டும். எல்லா தினங்களும் உண்மையான முட்டாள் தினங்களாக வேண்டாமே!

---கீதா


29 கருத்துகள்:

 1. மக்கள் விழிப்படைய வேண்டுமா? மக்கள் இருப்பது கோமா ஸ்டேஜில் அவர்கள் விழிப்படைய வாய்ப்புக்கள் அதிகம் இல்லை

  பதிலளிநீக்கு
 2. வாங்க தமிழா! ஆமாம் கோமா ஸ்டேஜ் என்பது தெரியும்தான். அந்தப் புலம்பல்தான்..வேறு என்ன கோமா ஸ்டேஜ்லருந்து எப்படியாவது விழிப்புக்குக் கொண்டு வர முடியுமானு....ஆனால் விழிப்படைய வாய்ப்புகள் இல்லவே இல்லை தமிழா....அதான் புலம்பல்..ம்ம் என்னத்த சொல்ல

  பதிலளிநீக்கு
 3. நல்லதொரு விழிப்புணர்வு கருத்துரைக்கு எமது சல்யூட் மக்கள் இந்த தேர்தலிலாவது கொஞ்சம் மாற்று சிந்தனைக்கு வருவார்கள் என்று நம்புகின்றேன் காரணம் நோட்டோவுக்கு அதிகாரப் பூர்வமாக சின்னம் கொடுத்து இருக்கின்றது இது மாற்றத்தை தரும் என்று நம்புகின்றேன்.
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி எனக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. நோட்டா அதுதான். ஆனால், இப்போது அந்த நம்பிக்கை தொலைந்து வருகின்றது. ஏனென்றால் மக்கள் நலக் கூட்டணி பயமுறுத்துகிறது. அதில் ஏனோ தலைவரே இல்லாதது போல் ஆஅபொக நடத்துபவர்தான் தலைவர் போல் இருப்பதால் ரொம்பவே பயமாக இருக்கிறது. மக்கள் விழிப்பார்களா தெரியவில்லை அந்த ஆதங்கம்தான்..

   நீக்கு
  2. எச்சரிக்கை!! ஒன்றுக்கு நான்கு புதிய தேர்வுகள் இந்தத் தேர்தலில் இருந்தும் ஒன்றுக்கும் பயனில்லாத 49ஓ-வுக்கு வாக்களித்தால் வருங்காலத்தில் மூன்றாவது அணி என்பதைப் பற்றிக் கனவில் கூட நம் அரசியலாளர்கள் சிந்திக்க முன்வர மாட்டார்கள்!

   நீக்கு
 4. நல்ல விழிப்புணர்வுதான். புரிய வேண்டிய மக்களுக்கு புரிந்தால் சரி!
  த ம 2

  பதிலளிநீக்கு
 5. சரியான நேரத்தில், தேவையான பதிவு! ஆனால், இலவசங்கள் பற்றி எல்லாரையும் போல் நீங்களும் நினைப்பது - அதுவும் இவ்வளவு கீழ்த்தரமாக நினைப்பது - எனக்கு மிக்க வேதனையைத் தருகிறது. இலவசங்களை மட்டுமே அள்ளிக் கொடுத்து மக்களை ஏமாற்றுவதும், இலவசங்களை மட்டுமே கருத்தில் கொண்டு வாக்களிப்பதும் தவறுதான். ஆனால், இலவசங்களே தவறு எனச் சொல்ல முடியாது. பெயர் வேண்டுமானால் இலவசங்கள் என இருக்கலாமே தவிர, உண்மையில், நீங்களே கூறுவது போல அவை இலவசங்களே அல்ல. மக்கள் பணத்திலிருந்து மக்களுக்கே எடுத்துத் தரப்படுபவைதாம். மக்கள் நலத் திட்டங்களை வெறும் செயல்பாடுகளாகவும் நடவடிக்கைகளாகவும் மட்டுமே இல்லாமல் பொருட்களாகவும் வழங்குகிறார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. இலவசங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் பலர் அதே வாயால் கல்வியையும் மருத்துவத்தையும் மட்டும் இலவசமாகத் தர வேண்டும் எனவும் கேட்பதைப் பார்க்கிறோம். எனில், அவற்றை மட்டும் இலவசமாகப் பெறலாமா?

  ஒருமுறை விசய் தொலைக்காட்சியின் 'நீயா நானா'வில் இது பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எல்லாரும் இலவசங்களுக்கு எதிராகக் காரசாரமான கருத்துக்களை முன்வைத்து ஓய்ந்த பிறகு பேசிய சிறப்பு விருந்தினர், அதுவரை இதில் சிந்தித்துப் பார்க்காத ஒரு கோணத்தைச் சொன்னார். அதாவது,

  "அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அரசுகள் புதுப் புது முறையிலான வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றன. முதலில் வருமான வரி என்று ஒன்றைக் கொண்டு வந்தார்கள். இது பணம் நிறைய இருப்பவரிடமிருந்து கணிசமான பகுதியை வாங்கி ஏழை எளியவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பதாக அமைந்தது. ஆனால், இது ஓரளவுக்கு மேல் பலன் தரவில்லை. பின்னர், அரசே எல்லாவற்றையும் சலுகை விலையில் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தைத் தொடங்கினோம். அரசுக் கல்வி, உணவுப் பங்கீட்டுக் கடை (ration) ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ்த் தொடங்கப்பட்டன. ஆனால், இவையும் எதிர்பார்த்த அளவுக்குப் பலன் தரவில்லை என்பதால்தான் இப்பொழுது வாழ்க்கைக்குத் தேவையான சில பொருட்களை அரசே மக்களுக்கு நேரடியாகத் தந்து அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இந்த இலவசப் பொருட்கள் வழங்கும் திட்டம்" என்று அவர் கூறினார். அதுவரை இலவசங்களை இழிவாக நினைத்த நானும் இதைக் கேட்ட பிறகுதான் திகைத்து மனம் மாறினேன்.

  சுருங்கச் சொன்னால், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க எத்தனையோ திட்டங்களை அமல்படுத்திய அரசுகள் அப்படியும் சில பல பொருட்கள் பெரும்பான்மை மக்களுக்குக் கிடைக்காமையால் நேரடியாகவே அவற்றை வழங்குகிறார்கள். இவ்வளவுதான் விதயம். மற்ற அரசுத் திட்டங்களில் ஊழல் நடப்பது போல் இதிலும் நடப்பதுதான் பதிவில் இந்தப் பொருட்களின் நிலைமை பற்றித் தாங்கள் கூறியிருந்த அந்தத் தன்மைக்குக் காரணம். மற்ற திட்டங்களையெல்லாம் அரசுகள் எப்படித் தாங்களே ஏதோ தங்கள் சொந்தப் பணத்தில் கொடுப்பது போல் பீற்றிக் கொண்டு அதன் அடிப்படையில் வாக்குகளைத் திரட்டுகின்றனவோ அதே போலத்தான் இலவசங்களைக் காட்டி வாக்குக் கேட்பதும். இதில் தவறாக நினைக்க ஏதும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான் சகோ இபுஞா...நீங்கள் சொல்லுவதைத்தான் இதே கருத்தைத்தான் துளசியும் என்னிடம் சொல்லுவார். விசய் தொலைக்காட்சியில் சொல்லப்பட்டக் கருத்தைத்தான் சொல்லுவார். நானும் இலவசங்களுக்கு எதிரி அல்ல. உங்கள் கருத்தை ஏற்கின்றேன். ஆனால், மற்றொரு கருத்தைப் பதிவில் சொல்லாமல் விட்டுவிட்டேன். அதாவது அரசுதான் இலவசங்களை வழங்குகிறது சரி...அரசு என்பது என்ன? அதற்கும் ஆட்சியாளர்க்கும் என்ன தொடர்பு? அரசு என்பது பொதுவானது. எல்லோருக்கும் எல்லா தரப்பு மக்களுக்கும் எந்த பாரபட்சமும் இல்லாதது. மாறாதது. ஆட்சியாளர் மாறுவார்.

   வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமயத்தில் அரசு வழங்கியது மிக மிக அவசியமானது. அதே போன்று எந்த ஒரு பேரிடர் சமயத்தில் இலவசங்கள் வழங்குவதும் தவறில்லை. இப்போது கூட பணம் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கில்தான் செலுத்தப்பட்டது. சரிதான். அதை வழங்கியவர்கள் அரசு அதிகாரிகள்தான். ஆனால் எங்கள் பகுதியில் வெள்ளமே வரவில்லை. ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தேங்கவில்லை. ஆனால் அடுத்த பகுதியில் வெள்ளம் தேங்கியது அவர்களுக்கு பணமே இன்னும் வழங்கப்படவில்லை. அத்தனை பேரும் ஏழை எளியவர்கள். ஆனால், மேட்டுக் குடி மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
   அடுத்து.... பொருட்கள்....அரசு இலவசம் வழங்கினால் அதைக் கட்சியாளர்கள் வழங்கலாமா? அதில் ஆட்சியாளரின் படம் போடலாமா? ஆட்சியாளரின் பெயரோ, அழைக்கப்படும் பெயரோ போடலாமா? தவறல்லவா?

   அரசுச் சின்னம்தான் பதியப்பட வேண்டும். அதை அதற்குத் தொடர்பான துறை அதிகார்கள்/அரசு அதிகாரிகள்தானே வழங்க வேண்டும்? இதைப் பற்றி அப்போதே ஊடகங்கள் சாடின என்பதால் தற்போது மாநகராட்சி அலுவலகத்தில் கொடுக்கின்றார்கள். ஆனால் ஆட்சியாளரின் படத்துடன். அது சரியா? அப்படி என்றால் கட்சி வழங்குவது போல அல்லவா? அரசு மக்கள் பணத்தில் இருந்து எளியவர்களுக்கு இலவசங்கள் வழங்கினால் சரிதானே அதற்குத்தான் வரிபணம் மக்களிடம் இருந்து வாங்கப்படுகின்றது. அதே போன்றுதான் அரசின் திட்டங்கள். ஆனால் அதில் எல்லாம் ஆட்சியாளரின் படம் எப்படி வரலாம். அப்படி என்றால் ஆட்சியாளர் அவரதுக் கட்சிப் பணத்திலிருந்து அல்லவா செய்ய வேண்டும்?

   எங்கு ஆட்சியாளரின் பதாகைகள் வைக்கப்பட்டாலும் எல்லாமே அவரது பெயரில்தான்...அரசே ஏழை மாணவிகளுக்கு பணம் வழங்கினாலும் அதையும் ஆட்சியாளரின் பெயர் போட்டு விளம்பரப்படுத்துதல் எனும் போது மக்களுக்கு அதுவும் பாமர மக்களுக்கு எப்படிப் புரியும் அது அரசு வழங்குவது என்று? அவர்கள் எல்லாரும் ஏதோ ஆட்சியாளர்தான் தன் சொந்தப் பணத்தில் இருந்துக் கொடுப்பதாக அல்லவா நினைத்துப் பெருமை பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த அர்த்தத்தில்தான் நான் இங்கு இலவசங்களைச் சொன்னது அல்லாமல் அதைக் கேவலப்படுத்தும் முறையில் அல்ல சகோ. எனது பதிவின் நோக்கம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் முட்டாள்களாக்கப்படுகிறார்கள் என்பதைத்தான் இன்றைய தினத்தை (நகைச்சுவைக்கான தினம் என்றாலும்) ஒட்டி எழுதினேன்.

   தங்கள் விரிவான கருத்திற்கு மிக்க நன்றி சகோ இபுஞா. நிறைய தெரிந்தும் கொண்டேன். மிக்க நன்றி

   நீக்கு
  2. தங்களுடைய விரிவான பதிலுக்கு நன்றி சகோ! ஆனால், இதற்கும் சேர்த்து நான் முந்தைய கருத்திலேயே பதிலளித்து விட்டேனே? பார்க்கவில்லையா?...

   "மற்ற அரசுத் திட்டங்களில் ஊழல் நடப்பது போல் இதிலும் நடப்பதுதான் பதிவில் இந்தப் பொருட்களின் நிலைமை பற்றித் தாங்கள் கூறியிருந்த அந்தத் தன்மைக்குக் காரணம். மற்ற திட்டங்களையெல்லாம் அரசுகள் எப்படித் தாங்களே ஏதோ தங்கள் சொந்தப் பணத்தில் கொடுப்பது போல் பீற்றிக் கொண்டு அதன் அடிப்படையில் வாக்குகளைத் திரட்டுகின்றனவோ அதே போலத்தான் இலவசங்களைக் காட்டி வாக்குக் கேட்பதும்" என்று கூறியிருந்தேனே! அதையேதான் உங்களுடைய இந்தப் பதில் கருத்தில் நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் குறைகளுக்கும் பதிலாக முன்வைக்க விரும்புகிறேன்.

   நீக்கு
  3. ஆமாம் சகோ. ஒரு வேகத்தில் அடிக்கும் போதே தோன்றியது...அடித்தும் முடித்து வெளியிட்டபின் மீண்டும் வாசிக்கும் போது தெரிந்துவிட்டது...எனக்குத் தோன்றியது சரிதான் என்று அதாவது நீங்களும் குறிப்பிட்டிருப்பது...அப்புறம் திருத்த நினைத்து முயற்சி செய்து முடியவில்லை அப்புறம் அப்படியே விட்டு நீங்கள் அதைச் சொல்லுவீர்கள் என்று நினைத்திருக்க அப்படியே உங்கள் கருத்தும்...மிக்க நன்றி சகோ..சரியே!!!

   நீக்கு
 6. முரடனாக இருப்பதற்கு முட்டாளாக இருப்பது மேல். அப்போ மற்றவர்களெல்லாம் ஃபீமேலா என்று கேட்கக் கூடாது! முட்டாள்கள் தினம் ஜாலியாகவே இருந்து விட்டுப் போகட்டும். அரசியல்வியாதிகள் கையில் ஏமாறுவது தவிர்க்க முடியாதது. யார் கெட்டவர் என்று சுட்ட முடியும் நம்மால் யார் நல்லவர் என்று சுட்டிக் காட்ட முடிவதில்லை. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி கதைதான். பை த பை எங்கள் வீட்டு அம்மா மிக்சி, கிரைண்டர் எல்லாம் நன்றாகவே ஓடுகின்றன!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மற்றவர்களெல்லாம் ஃபீமேலா என்று கேட்கக் கூடாது!// ஹஹஹஹ்

   //யார் கெட்டவர் என்று சுட்ட முடியும் நம்மால் யார் நல்லவர் என்று சுட்டிக் காட்ட முடிவதில்லை.// சரியாகச் சொன்னீர்கள். அதுதானே இப்போது பிரச்சனையாக இருக்கிறது.

   அட ஸ்ரீராம் நீங்க ரொம்பவே அதிர்ஷ்டமானவர்தான் அம்மா நன்றாக வேலை செய்வதற்கு...

   மிக்க நன்றி ஸ்ரீராம்...கருத்திற்கு

   நீக்கு
 7. நல்லதோர் விழிப்புணர்வு கட்டுரை. ஏமாறும் வரை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார் என்று நாம் அனைவருமே நகர்ந்து கொண்டிருக்கிறோம்.....

  இலவசங்கள் என்ற பெயரில் மக்கள் அனைவரையும் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட்ஜி ! வருகைக்கும் கருத்திற்கும். ஆம்! பூனைக்கு மணி கட்டுவது யார் என்று நாம் அனைவருமே நகர்ந்து கொண்டிருக்கின்றோம்தான்..உங்கள் பதிவுகளுக்கு இனிதான் வர வேண்டும்...நேற்றிலிருந்துதான் வருகை நாங்கள் தளத்திற்கு...

   நீக்கு
 8. விழிப்புணர்வுப் பதிவு சகோ.நிறைய சிந்திக்க வேண்டும் இது பற்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தோழி தேனு தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...

   நீக்கு
 9. முட்டாள்கள் முட்டாள்கள்தான் ஒரு நாள் மட்டும் அல்ல என்றும் தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார் கருத்திற்கும் வருகைக்கும் உண்மைதான் சார் அது....

   நீக்கு
 10. முட்டாள்கள் ,தங்களை ஆளவும் முட்டாள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்?

  பதிலளிநீக்கு
 11. வசதி உள்ளோர் வீட்டிலாவது மின் இணைப்புகள் earthed ஆக இருக்கும் ..இலவசங்கள் இப்படி தீயா ! பறந்து வேலை செஞ்சி திறமையை ஏழைகள் வீட்டில் காட்டினா :( எவ்ளோ ஆபத்து ..
  என்னை பொறுத்தவரை இந்த இலவசங்கள் இல்லாத நாட்களில் 90 க்கு முன் அனைவரும் உழைத்து சேமித்த பணத்தில் பொருட்களை வாங்கினாங்க ஆனா இப்போ ..என்னதான் மக்கள் வரிப்பணம் என்றாலும் மனது ஏற்க மறுக்கிறது ..சிலர் வீட்டில் இரண்டு மூன்று இலவசபோருட்கள் கூட இருக்காம்
  ..ஸ்கூல் பிள்ளைங்களுக்கு கொடுத்த லாப்டாப் நிலை என்னவோ ?

  மக்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா ..ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறி மாறி வருது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலவசங்கள் பேரிடர் காலத்தில் வழங்கலாம் ஏஞ்சலின் உதவுவதற்கு. ஆனால் இப்படி கட்சிகள் பெயர் தாங்கி தேர்தல் சமயத்தில் என்று வருவதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து சரியே..இரண்டு மூன்று கூட இருக்கிறது. லாப்டாப் நல்லா வேலை செய்யுதாம் நான் கேட்ட பெரும்பாலான பசங்க சொன்னது.

   மக்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா மாறி வருவது உண்மையே. எப்போ இதுலருந்து விடுபடுவாங்களோ...
   மிக்க நன்றி ஏஞ்சலின்

   நீக்கு
 12. www.youtube.com/watch?v=ej-3DVyqwu0

  முட்டாள் என்று முதன் முதலில் உணர்ந்த ஒருவர் பாடும் கண்ணதாசன் பாடல் இது.

  அது சரி.

  யார் முட்டாள் இல்லை?

  எது முட்டாள் தனம்?

  மனித இனம் இன்று ஜாதி, மதம், மொழி , உணவு, உடை, என்றும் பல பல எல்லைக்கோட்டுக்குள்ளே கட்டுப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஜாதிகளுக்குளே பல பிரிவுகளும் பல மதங்களுக்குள்ளே பல பிரிவுகளும் பல மொழிகளுக்குள்ளே பல பிரிவுகளும் இருப்பது வெள்ளிடை மலை. நமது நாட்டில் மட்டும் இல்லை, உலகம் முழுவதும் இதே நிலை.

  பிரிவுக்குள்ளே பிரிவு. அதற்குள்ளே இன்னொரு பிரிவு.

  இவர்கள் எல்லோருமே தத்தம் பலவிதமான காரணங்களையும் தாம் சரி என நினைக்கும் ஒன்றை மற்றவர்கள் ஒத்துக்கொள்ளாத போது, அடுத்தவர்களை முட்டாள் கள் என்று சொல்லுவது மட்டுமன்றி அவர்களை ஏளனப்படுத்துவதும்,
  அவர்களை தம்மிடமிருந்து விலக்கி வைப்பதும் அவர்களை அழிக்கவும் துணிகின்ற சமூகத்திலே இருக்கிறோம்.
  இந்த நிலை ஒன்றே நாம் எல்லோருமே எப்படி இருக்கிறோம் என்று உணர்த்துகிறது இல்லையா ?

  இதுவும் இருக்கட்டும்.
  முட்டாள் என்று ஒருவரை குறிப்பிட்டு சொல்வது அன்பார்லிமேன்டறி.
  முட்டாள்தனம் என்று சொல்வது அந்த அளவுக்கு இல்லை.

  நாம் உலகை முட்டும்போது உலகின், உலகக்த்தாரின் முட்டாள்தனம் தெரிகிறது.
  உலகம் நம்மை முட்டும்போது நமது முட்டாள்தனம் நமக்குப் புரியவேண்டும்.

  அதனால் தானோ என்னவோ வள்ளுவன் சொன்னார்:  இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
  கெடுப்பார் இலானும் கெடும் 448

  நம்மை ஒருவன் (நண்பனோ, எதிரியோ ) இடிக்கும்போதாவது நமது முட்டாள்தனம் நமக்குப் புரியவேண்டும்.
  புரிவதில்லையே.
  நாம் சண்டைக்குப்போய், விதண்டாவாதம் அல்லவா பண்ணுகின்றோம் !!

  இன்னொரு கோணத்தில் பார்த்தால்,
  முட்டாள்தனம் இறைவன் தந்த வரம்.

  அதை ரசிப்போம்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சுப்புத்தாத்தா தங்களின் விரிவான அருமையான கருத்திற்கு. சில விஷயங்களில் நேரத்தில் முட்டாளாக இருப்பது நல்லதுதான் தாத்தா. பல பிரச்சனைகள் மிகைப்படுத்தப்படாமல் போய்விடும். ஆனால் இந்த விஷயத்தில் அப்படி எடுத்துக் கொள்ள முடியாதே அதனால்தான்...

   நீக்கு
 13. இலவசங்கள் தந்து முட்டாள்களாய்
  நம்மை மாற்றி விட்டார்கள்.....
  முட்டாளாய் மாறாதவர்களையும்
  முட்டாளாய் மாற்றி விடுவார்கள்...
  இன்னும் விழித்துப் கொள்ளா விடில்...

  பதிலளிநீக்கு
 14. நல்ல பகிர்வு,, முட்டாள் பிரச்சனையே இல்லை,, ஆனால் காரியக் கார முட்டாள்கள்,,,
  நன்றி...

  பதிலளிநீக்கு
 15. இந்த சிஸ்டத்துக்குள் முட்டாள்கள் திருந்துவதற்கு வாய்பில்லை என்றே தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
 16. முட்டாள் என்றே தெரியாமல் முட்டாளாய்...முடங்கியவர்கள் என்று முழிப்பார்கள்...

  பதிலளிநீக்கு