வெள்ளி, 24 ஜனவரி, 2014

இருந்தமிழே உன்னால் இருந்தேன் ..............விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்


"தமிழின் வளம் தமிழர் நலம் " என்ற நோக்குடன் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட கோவை தமிழ் பண்பாட்டு மையம் வழங்கிய "தாயகம் கடந்த தமிழ் " உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கில் பார்வையாளராகக் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. கோவையில், டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்திலும், கோவை மெடிக்கல் சென்டரிலும், ஜனவரி 20, 21, 22 ஆகிய தேதிகளில் இந்தக் கருத்தரங்கு நடை பெற்றது.

"யாழ் நகரில் என் பையன்
 கொழும்பில் என் பெண்டாட்டி 
வன்னியில் என் தந்தை 
தள்ளாத வயதினிலே 
தமிழ் நாட்டில் என் அம்மா 
சுற்றம் பிரான்போட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ்  நாட்டில் 
நானோ 
வழிதவறி அலாஸ்கா
வந்துவிட்ட ஒட்டகம் போல் 
ஒஸ்லோவில் "

ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் இதயத்தைத் துளைக்கும் இந்த வரிகளை வாசிக்கும் போது புலம் பெயர்ந்த தமிழர்களின் வலிகளை ஒவ்வொரு தமிழ் இதயமும் உணராமல் இருக்க முடியாது.

அரசியல் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் சிதறி, தாயகத்தைப் பிரிந்து, அதே சமயம் தங்கள் மண்ணின் வாசனையையும், நினைவுகளையும், பாரம்பரியத்தையும் சுமந்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்ட தமிழ் இதயங்களின்   ஒன்று கூடிய கருத்தரங்கு அது.  "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணேன்" என்பதை  அறிந்த நமக்கு, கடல் கடந்தும், தலைமுறைகள் பல கடந்தும், இன்றும் தன் ஆளுமை சக்தியைப் பிரதிபலிக்கும் நம் தமிழைப் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே காணும் போது மிக ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும் இருக்கின்றது.

முதல் நாளான 20.01.2014 அன்று மாலை, 5 மணியளவில் டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் துவங்கிய நிகழ்ச்சியில் "தாயகம் கடந்த தமிழ்" கட்டுரை நூலை, முனைவர் ம.திருமலை, துணைவேந்தர், தமிழ் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர், அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார். இரண்டாம் நாளும், மூன்றாம் நாளும் நடந்த கருத்தரங்கில், இலங்கை, கானடா, அமேரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சீனா,மலேஷியா, சிங்கப்பூர் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் நம் தமிழகத்திலிருந்தும் வந்திருந்த கட்டுரையாளர்கள் மிகச் சிறப்பாக அரிய பல கருத்துக்களை அள்ளி வழங்கியதிலிருந்து சிலவற்றைத் தொகுத்து உங்களுடன் இந்த இடுகையில் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற  மகிழ்ச்சி கொள்கிறோம்.

புலம் பெயர்தல் அல்லது தாயகம் கடந்து செல்லுதல் என்பது பண்டைய காலத்திலிருந்தே, அதாவது 2000 ம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பதற்கு இணங்கவும், அரசியல்  காரணங்களுக்காகவும் நிகழ்ந்து வரும் ஒன்றுதான். தமிழகத்திலிருந்து, பினாங்கு கரும்புத் தோட்டங்களிலும், மலேஷியா ரப்பர் தோட்டங்களிலும், இலங்கைத் தேயிலைத் தோட்டங்களிலும் வேலை செய்ய தமிழர்களை,  பிரிட்டிஷர், சொந்த நிலம், ஆடு, மாடு, கோழி, எல்லாம் சொந்தமாக வைத்துக் கொள்ள வசதி   மருத்துவ வசதி எல்லாம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறிப் புலம் பெயர்த்தனர். சீனக் கூலிகளுக்குப் பதிலாகத் தமிழர்களைக் கூலிகளாகத் தேர்ந்தெடுக்கக் காரணம்? தமிழர்கள் அமைதியானவர்கள்; அடக்கமானவர்கள்; எதிர்த்துப் பேசாதவர்கள், அடங்கி ஒடுங்கிப் போகக் கூடியவர்கல்; நிர்வகிப்பது மிக எளிது என்பதுதான்.

18, 19 ஆம் நூற்றாண்டில் தமிழரிடையே நிலவிய சாதி, இனப் பிரச்சினைகளைத் தங்களுக்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்ட பிரிட்டிஷார் தமிழரை கூலிக்குத் தேர்ந்தெடுக்கவும் ஆதாயமாக இருந்தது. இதையே வேறொரு பிரிட்டிஷ் நிர்வாகி ஒப்புதல் வாக்கு மூலமாகக்  கொடுத்துள்ளதையும் பாருங்கள். "தமிழர்கள் உடலாலும், உள்ளத்தாலும், அவர்களது நாட்டிலேயே ஒடுக்கப்பட்ட ஜீவன்கள். பார்க்கவே பரிதாபமாக இருக்கும் இவர்கள் அரைவயிறு உணவோடு ஏழைகளாகவும், கோழைகளாகவும் வாழ்க்கையின் மீது எந்த நம்பிக்கை அற்றவர்களாகவும் இருக்கின்றார்கள்" என்று. நலிந்தோரை வீழ்த்துவதுதானே மனிதனின் குரூர மனம்? இப்படி, ஏமாற்றப்பட்டு தோட்டங்களுக்குக் கூலித் தொழிலாளிகளாக தமிழர்கள் புலம் பெயரப்பட்டனர். இதை வாசிக்கும் போது உங்களுக்குத் தோன்றலாம்.  இன்றும் இப்படித்தானே இருக்கிறது என்று.  சாதியால் ஒடுக்கப்படுதல், திறமைக்கு அங்கீகாரம் இல்லாமல் இருத்தல், அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்றால் சில புரட்டுகள் செய்தல், பாலியல் சார்ந்த ஒடுக்குதல் அதாவது பெண் என்றால் ஒடுக்கப்படுதல், பொருளாதார அடிப்படையில் நசுக்கப்படுதல் என்று நம் தமிழ் நாட்டில் நிகழத்தானே செய்கின்றது?!

இப்படிப்பட்ட ஒரு சூழலில், எங்கு அங்கீகாரம் போராட்டம் இல்லாமல் கிடைக்கிறதோ, சாதி சார்ந்த வாழ்வு இல்லையோ, பாலியல் சார்ந்த வாழ்வு  இல்லையோ, தங்கள் எழுத்துக்களை சுதந்திரமாக எழுத  முடியுமோ, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியுமோ, அங்கு, அந்த தேசத்திற்கு நமது முந்தைய தலைமுறையினரிலிருந்து இதோ இன்றைய தலைமுறை வரை புலம்பெயரத்தானே செய்வார்கள்?! செய்கின்றார்கள்!

அன்று பிரிட்டிஷாரால் புலம் பெயரப்பட்டு, அடிமைகளாக வாழ்ந்த தமிழ் மக்களின் இன்றைய தலைமுறையினர் பல தேசங்களிலும் பரவி, வாழ்க்கை வளம் பெற்று தங்கள் மூதாதையரின் வலிகளை மனதில் சுமந்தாலும் அவர்களது அடுத்த தலைமுறையினர்க்கும் தமிழ் மரபை போதித்து, தமிழ் மொழியை அழியவிடாது வளர்க்க படைப்புகளையும் உருவாக்கிக் கொண்டு இருப்பதைப் காணும் போது நமக்கு உண்டாகும் மகிழ்ச்சி எல்லையற்றது.  அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது.

அயல்நாட்டில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் குழந்தைகளைத் தமிழ் கற்க வேண்டும் என்று பல மைல்  தூரம் சென்று கற்க வைக்கின்றனர். அக்குழந்தைகள் தொழில் மொழி, கல்வி மொழி ஆங்கிலமாக இருந்தாலும், நண்பர்களுடன் ஆங்கிலம் பேசினாலும் அடிப்படை வசதிகள் கிடைத்தவுடன் தங்கள் தாய் மொழியான தமிழில்தான் அவர்களின் உரையாடலும், வாழ்வியலும் நடைமுறையில் உள்ளது.  தங்கள் பெற்றோருடனும் தமிழில்தான் உரையாடல். புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் இனம், மொழி, நாடு எல்லாம் இழந்த, புலம் பெயரும் இடங்களில் அவமானங்களைச் சுமந்து வலிகளோடு வாழும் இவர்கள், தங்கள் வலிகளையும், வேதனைகளையும், மறக்கவும், புறக்கணிக்கவும், இலக்கியங்களைப் படைத்து தமிழையும் நேசித்து வளர்த்து வருகின்றனர். இங்கிருந்து சென்ற ஒரு எழுத்தாளர், அங்கிருந்த தமிழ் குடும்பங்களின் வீட்டில் இருந்த அரிய தமிழ் புத்தகங்களின் சேர்க்கையைப் பார்த்து வியந்தாராம்!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்ற பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் புலம்பெயர்ந்த/தாயகம் கடந்த தமிழர்களின் முயற்சியால் பல நாடுகளிலும் இன்று தமிழ் கல்விப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு கற்பிக்கப்பட்டு வருகின்றது.  ரஷ்யா, போலந்து, செக் ரிபப்ளிக் , பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, மலேஷியா, சிங்கப்பூர், அமேரிக்கா, போன்ற பல நாடுகளில் தமிழ் பள்ளிகள் மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் அளவு வளர்ந்துள்ளது என்பது பெருமையான விஷயம். 




அயல் நாட்டவரும் தமிழ் மொழியைக் கற்று ஆராய்ச்சி செய்யும் அளவு தமிழின் பெருமை பரவியுள்ளது. சீனாவைச் சேர்ந்தவர் செல்வி சாவோ ஜியாங்.  இவர் தமிழ் மொழியின் மேல் உள்ளக் காதலால் தனது  பெயரை "கலைமகள்" என்று மாற்றிக் கொண்டவர். சீனத் தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்றுள்ள செல்வி கலைமகள் சர்வதேச வானொலியின் தமிழ்  பிரிவின் தலைவர்.  இவர் எழுதயுள்ள "சீனாவில் இன்ப உலா" என்னும் புத்தகம், ஒரு சீனர் எழுதி இந்தியாவில் வெளியிடப்பட்ட முதலாவது தமிழ் மொழி புத்தகம்.  சென்ற ஆண்டு சீனாவின் புகழ் பெற்ற சி.பி. பதிப்பகத்திற்காக "சீனம் தமிழ் கலைச்சொல்" அகராதியைத் தொகுத்து வெளியிட்டார். சீன வானொலிப் பிரிவில், தமிழ் இணையதளம், கைபேசி இணையம் , தமிழொலி என்னும் இதழ் ஆகியவை வருவதற்கு இவர் பங்கு அளப்பரியது.


ஐரோப்பாவில், இந்திய மொழிகளில் தமிழ் மொழிதான் முதலில் சென்றடைந்துள்ளது என்பது பெருமைக்குரியது. ஜெர்மனியைச் சேர்ந்த பெண் உலரிகே நிகோலஸ், கொலோன் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய, தென்கிழக்காசிய ஆய்வுத் துறையின் தலைவரும், இந்தியலியல் துறைப் . பேராசிரியருமாவார். முத்தொள்ளாயிரத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.  தொல்காப்பியத்தின் செய்யுளியல், அணி இலக்கணம், யாபெருங்கலக்காரிகை, வீரசோழியம், தண்டியலங்காரம் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆய்ந்தவர்.  அதே போல் தொல்காப்பியத்தின் உவமையியலை, வடமொழி நூலான தண்டியின் அலங்கார சாஸ்திரத்துடன் ஒப்பாய்வு செய்தவர்.  தமிழில் நன்றாகப் பேசவும் செய்கிறார்.

 தாயகம் கடந்த தமிழர்களின் முயற்சியால் தொழில் நுட்பத்திலும் தமிழின் வளர்ச்சி அபாரமாக இருக்கிறது எனலாம்.  தமிழ் மின் புத்தகங்களுக்கானச்  சந்தைக்கு சர்வ தேசப் புத்தகச் சந்தை எதுவுமே உகந்ததாக  இல்லை. தமிழுக்கென்றே தனியாகச் சில சந்தைகள் ஏற்படுத்த வேண்டும் என்றும், தமிழகம், இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளுக்கான, அவரவர்களின் புத்தகங்கள் அதிகம் கிடைக்கும் வண்ணம் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்நோக்கும் சவால் தமிழ் புத்தகங்கள் அவர்களுக்குக் கிடைக்காததுதான். தமிழ் நாட்டிலிருந்து அவற்றை வாங்கிச் செல்லுவது என்பது கடினமாக இருப்பதாலும், செலவு கூடுதலாக இருப்பதாலும், தமிழில் மின் நூல்களை வெளியிடுவதில் முன்னோடியாக இருக்கும் திரு.திருமூர்த்தி ரங்கநாதன் அவர்கள் www.digitalmaxim.com  என்ற நிறுவனத்தை நிறுவி தமிழ் புத்தகங்களை வாசிக்கவும் தமிழை வளர்க்கவும் ஆவன செய்து வருகிறார். படைப்பாளிகள் தங்கள் தமிழ் புத்தகங்களை, படைப்புகளை மின் நூலாக மாற்றி உலகில் உள்ள தமிழர் எல்லோரும் வாசிக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்கள், அவரது மின் அஞ்சல் முகவரியான  thiru@digitalmaxim.com  ஐத் தொடர்பு கொண்டு சந்தைப்படுத்த முயற்சிக்கலாம். இவர் தமிழகத்தில் உள்ள பதிப்பகங்களையும் தொடர்பு கொண்டு புத்தகங்களைச் சந்தைப்படுத்த ஆவன செய்து வருகின்றார். இது பதிப்பகங்களுக்கும், படைப்பாளிகளுக்கும் வருவாயை உண்டாக்கும் ஒரு நல்ல முயற்சி எனலாம். இந்த வருடத்தில் இவை இணையதள புத்தகக் கடைகள் மூலம் சந்தைப்படுத்தப்படும் என்றும் தெரிய வருகின்றது.  இன்னும் பல தொழில் நுட்ப முயற்சிகளை தாயகம் கடந்த தமிழர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.  அதை இந்த இடுகையில் பேசினால் பெரிதாகி விடும் என்பதால் இதோடு நிறுத்திக் கொண்டுள்ளோம்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் வலிகளைப் புரிந்து கொண்டு அவர்களைப் பற்றி நம் தமிதமிழகத்துப் படைப்பாளர்கள் எதுவும் செய்தார்களா என்ற ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. எங்கள் பதில் இதுதான். தமிழகத்து தமிழர்களாகிய நாங்கள் எங்கள் வலைப்பூக்களில் பல புலம் பெயர்ந்த தமிழர்களுடன் உரையாடி, கருத்துக்கள் பல பகிர்ந்து கொண்டு, உறவாடி வருகின்றோம்.  உங்களது வலிகளைப் புரிந்து கொண்டுள்ளோம்.  உங்கள் எழுத்துக்களையும், படைப்புக்களையும் பாராட்டி வருகின்றோம். புலம்பெயர்ந்த தமிழர்களின் வலிகளை கவிதைகளாகவும், எழுத்துக்களாகவும் எழுதி வருகின்றோம். எங்கள் வலப்பூக்களவர்கள் பெரிய பெரிய இலக்கியங்கள் படைக்கவில்லை என்றாலும், ஏதோ எங்களுக்குத் தெரிந்த வகையில் தமிழை நேசித்து அலங்கரித்து அழகு பார்க்கின்றோம். இதோ, எங்கள் வலைப்பூக்களில் உள்ள அன்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்கள்   "ஈழம்; வந்தார்கள் வென்றார்கள்" என்ற ஒரு அழகான, ஈழத்துத் தமிழர்கள் பற்றிய படைப்பை மின் நூலாக வெளியிட்டுள்ளார். http://freetamilebooks.com

புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழை வளர்த்து, தங்கள் அடுத்த தலைமுறையினரும் தமிழ் கற்க வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சிகளில் இருக்கும்போது, தமிழகத்தில் தற்போது வளர்ந்து வரும் தலைமுறையினர் தமிழைக் கற்பது என்பது அரிதாகி வருகின்றது. அடுத்த தலைமுறைக்குத்  தமிழை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், தமிழில் பேசினால், எழுதினால், தமிழைக் கற்றால் இழிவு என்ற எண்ணம் மாற வேண்டும். மறைய வேண்டும். ஆங்கிலவழிக் கல்வியில் கற்றலைக் குறை கூறவில்லை. அதுவும் நடைமுறைக்கு மிக அவசியமான ஒன்றுதான். அதே சமயம் தமிழையும் கற்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் நூல்களையும் வாசிக்கும் பழக்கத்தையும் சிறு வயது முதலே பழக்க வேண்டும். இது போன்ற கருத்தரங்குகள் அவ்வப்பொழுது நடைபெறவேண்டும் என்பதும் எங்கள் கருத்து. 

 தமிழகத்தில் தமிழ் தமிழ் என்று கூவுபவர்கள்  தமிழைச் செம்மொழி என்று பறை சாற்றினால் மட்டும் போதாது.  அவர்கள் அதை அடுத்த தலைமுறையினர்க்கும் எடுத்துச்  செல்ல ஆவன செய்ய வேண்டும்.   

தாயகம் கடந்த தமிழர்களானாலும், அரசியல் காரணம் இல்லாமல் சுய விருப்பத்தோடு தங்கள் திறமைகளுக்கு சாதி, பாலியல் பாராமால், போராட்டம் இல்லாமல் எங்கு அங்கீகாரம் கிடைக்கின்றதோ அங்கு குடியேறிய தமிழர்கள் ஆனாலும், தமிழர்களே உங்கள் அடுத்த தலைமுறையினருக்கு அவர்களது தொழில் மொழி, கல்வி மொழி அந் நாட்டின் மொழியாக இருந்தாலும், தயவு செய்து தமிழை கற்றுக் கொடுங்கள்! இதுதான் எங்கள் கருத்து!
  
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்த/இருக்கும் பெரும்  தமிழணங்கே!





 



16 கருத்துகள்:

  1. இன்றைக்கு தமிழை உலகளவில் பர்ப்பியதற்க்கு ஈழத் தமிழர்கள் தான் மிக முக்கிய காரணம்; தமிழ் நாடு தமிழர்கள் பங்கு இப்போ கொஞ்ச நாளாத்தான்; அதுவும் இப்போ இங்கு மென் பொருள் வேலைக்கு வருபவர்களால் மட்டுமமே. சிங்கை மலேசியத் தமிழகர்கள் அவர்கள் பகுதிகளில் தமிழைப் பரப்பினார்கள் என்பதை மறக்கக்கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நம்பள்கி! தமிழை உலகளவில் பரப்பியதில் ஈழத் தமிழர்கள் தான் முக்கிய காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

      அவர்களது படைப்புகளும் அப்படியே!! நன்றி நம்பள்கி!

      நீக்கு
  2. வணக்கம்
    நண்பரே..
    தங்களின் பதிவை படித்தேன்.. நாங்கள் சுமந்த வலிகளை எப்படிஎல்லாம் சொல்லியுள்ளார்கள் சிலர் புரியாதவர்கள் இருப்பார்கள் தங்களின் பதிவின் வழி புரிய ஒரு வாய்ப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை... மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் (தமிழ்வாழ்க எம்தமிழ் இனம் வாழ்க) வாழ்த்துக்கள் நண்பரே
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே!! தங்கள் கருத்திற்கு! நாங்கள் அந்தக் கருத்தரங்கில் ஈழத்துக் கவிஞர் அமர், மற்றும் எஸ்பொ ஆகியோரின் ஈழத் தமிழர்களின் வலிகளையும் படைப்புகளைய்ம் வாசித்த போது மிகவும் வேதனையும் அதே சமயம் படைப்புகள் கண்டு மிகவும் மகிழ்வாகவும் இருந்தது! தமிழ் வளர்ப்பது குறித்து ஆச்சரியமாகவும் இருந்தது! நாங்கள் உன்னளைப் பற்றியும் நினைத்துக் கொண்டோம்!

      நீக்கு
  3. திரு.திருமூர்த்தி ரங்கநாதன் அவர்களையும் தொடர்பு கொள்கிறேன்... உங்களின் தளத்தில் அண்ணன் ஜோதிஜி அவர்களின் தகவலுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

    கோவையில் கோலாகலத் தமிழ்த் திருவிழா பற்றிய மற்றொரு பகிர்வையும் கீழே கொடுத்துள்ளேன்...

    http://coralsri.blogspot.in/2014/01/blog-post_24.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி!! DD அவர்களே! தங்கள் வலைப்பூவில் இருந்துதான் அன்பர் ஜோதிஜி அவர்களின் தளத்திற்குச் சென்றோம். அதைப் பற்றிக் குறிப்பிட்டோம்.

      தாங்கள் கொடுத்துள்ள சுட்டியை பார்க்கிறோம்!

      நன்றி!!

      நீக்கு
  4. அடுத்தத் தலைமுறைக்கு தமிழை எடுத்துச் செல்வோம் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!!

      நீக்கு
  5. தனபாலன் மூலம் அறிந்தேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! நல்லவை எங்கிருந்தாலும் அதைச் சுட்டிக் காட்டத்தானே வேண்டும்! அதைத்தான் செய்தோம்!

      நன்றி!!

      நீக்கு
  6. //அடுத்த தலைமுறைக்குத் தமிழை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், தமிழில் பேசினால், எழுதினால், தமிழைக் கற்றால் இழிவு என்ற எண்ணம் மாற வேண்டும்.//
    சுடும் உண்மை...!
    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நைனா! தங்கள் கருத்திற்கு! பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தமிழை 2 வது மொழியாக எடுத்துப் படிக்கச் சொல்லாமல், பிரெஞ்சு, ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்று படிக்க வைப்பது ஒன்று தமிழ் கற்றால் பிரயோஜனமில்லை என்ற கருத்தாலும், மதிபெண்ணிற்காகவும் செய்வது மிகவும் வேதனையாக உள்ளது.! உங்கள் சுடும் உண்மை இதை எழுத வைத்தது!

      நீக்கு
  7. அருமையான பகிர்வு.....

    கவிதை மனதைத் தொட்டது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!

      நீக்கு
  8. அதற்கெனவே கோவை வந்திருந்தும்
    கலந்து கொள்ளமுடியாத சூழல்
    தங்கள் படங்க்களுடன் கூடிய பதிவு
    ஆறுதல் அளிக்கிறது
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  9. ஈழத்து தமிழர்கள் தங்களின் துன்பகரமான சூழ்நிலையிலும் தமிழை வளர்த்து வருகிறார்கள் என்பது உண்மைதான் ...விளக்கமான நீண்ட பதிவு அருமை !
    த ம +1

    பதிலளிநீக்கு