பூமியில் தான் குழப்பங்கள், பிரச்சினைகள் என்றால் அண்ட விண்வெளியில் உள்ள சூரிய குடும்பத்திலும் ஒரு பிரச்சினை என்று தெரிந்த பொழுது வியப்பாக இருந்தது. என்ன பிரச்சினையாக இருக்கும் என்று எட்டிப் பார்த்தபோது, குடும்பத்தின் தலைவனாகிய சூரியனிடம் பூமித்தாய் புலம்புவது கேட்டது.
“தலைவனே! இது என்ன கொடுமை? இந்தக் குடும்பத்தில் இத்தனைக் கோள்கள் இருக்கும் போது நான் மட்டும்தான் இவ்வளவு பாரம் சுமக்க வேண்டுமா? என் குழந்தைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறார்கள். நீங்கள் தான் இதற்கு ஒரு தீர்வு கொண்டுவர முடியும்.”
“உன் வேதனை எனக்குப் புரிகிறது. ஆனால் மற்ற கோள்களில் உனக்கிருப்பது போல் வளமும, செழிப்பும், நீரும், காற்றும், இல்லையே. ஏன், ஒளி கூட உனக்குத்தானே உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு சரியான அளவில் நான் கொடுத்திருக்கிறேன். அப்படி இருக்கும் போது மற்ற கோள்களிடம் எப்படி நான் கேட்க முடியும்?” என்றான் சூரியன்.
. அதற்குள் அங்கு செவ்வாய் கோளின் குரல். “பூமியே! உன் குழந்தைகள் என்று அடிக்கடிக் கூறிக் கொள்வாயே அதே குழந்தைகள் தான், என்னிடம் உன் குழந்தைகளை அனுப்ப முடியுமா என்று என் மீது அடிக்கடி, ராக்கெட் ஏவி என்னை வேவு பார்க்கிறார்கள். என்னிடம் காற்றில்லை, சூரிய ஒளி இல்லை என்பதை நம்பாமல் பொய் சொல்கிறேன் என்று நினைக்கிறார்கள் போலும்.”
புதன் அதற்குள், “உன்னை மட்டுமல்ல என்னையும்தான் வேவு பார்க்கிறார்கள். ஏன் சந்திரன் பூமிக்கு அருகில் இருப்பதால் அங்கு ராக்கெட் அடிக்கடி விட்டுப் பார்ப்பது அவர்களுக்கு வழக்கமாகிவிட்டது. அதிலும் சந்திரனைப் பார்த்து பூமியின் பிள்ளைகள் சிலர் நிலா நிலா என்று கவிதைகள் கூட நிறைய எழுதுகிறார்கள். சந்திரனுக்குப் பூமியில் நல்ல மவுசு” என்றது.
“நீங்கள் எல்லோரும் இப்படி என்னைப் புரிந்து கொள்ளாமல் பேசுகின்றீர்களே. வருத்தமாக இருக்கிறது. என் வருத்தத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல்தான், சூரியன் தலைவனிடம் வந்தேன். நான் என் குழந்தைகள் நன்றாக, செழிப்பாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று, பசுமையையும், நல்லக் காற்றையும், சூரியனிடமிருந்து ஒளியையும், நல்ல மழையையும் கொடுத்து, நதிகள், மரங்கள், கனிமங்கள், மலைகள், ஆறுகள், நிலத்தடித் தண்ணீர், பயிரிடுவதற்கான நல்ல மண் வளம் என்று பல சொத்துக்களை என் பல சந்ததியினர் அனுபவிக்க சேர்த்து வைத்தேன்.
ஆனால், என்ன பயன்? என் குழந்தைகள் எல்லாவற்றையும் உபயோகித்தால் அதைத் திரும்ப சேமிப்பதற்கும், என்னைப் பராமரித்துப் பாதுகாக்கவும், முயற்சி செய்ய வேண்டுமில்லையா? சொத்தைப் பராமரிக்காமல், பாதுகாக்காமல் அழித்து விட்டால் அடுத்து வரும் சந்ததியினர் என்ன செய்வர்? என் குழந்தைகள், வளமாகிய என் சொத்தை எல்லாம் அழித்துத்தான் வருகின்றனர்.
என் மீது எல்லா இடங்களிலும் கழிவையும், குப்பையையும் எறிகின்றனர். துப்புகின்றனர். சிறுநீரும், மலமும் கழித்து என்னைக் கேவலப்படுத்துகின்றனர். என் நீர் நிலைகளாகிய நதி நீரையும், கடல் நீரையும், ஏரிகளையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி, நீர் நிலைகள் குறைந்து நல்ல சுத்தமான தண்ணீர் இல்லாமல் தட்டுப்பாடு வந்து இன்று என் சொத்தாகிய நீரைக் குடைந்தெடுத்து, சுத்தாமாக்கி, புட்டிகளில் அடைத்து விற்கிறார்கள், கொழிக்கிறார்கள்.
நல்ல காற்று கிடைக்க நான் வைத்திருந்த மரங்களை எல்லாம் வெட்டிக், காடுகளும், சோலைகளும் இல்லாமல் செய்து, சுத்தமான காற்று இல்லாமல் செய்து வருகின்றனர். என் குழந்தைகள் பண வெறி பிடித்து நல்ல பயிர் விளையும் நிலங்களை எல்லாம் கட்டிடங்களாக்கி, அடுக்கு மாடி வீடுகளாகவும், பல்பொருள் அங்காடிகளாகவும் மாற்றி வருகின்றனர். விளை நிலங்களே இல்லாமல் போவதால் விளைச்சல் குறந்து உணவுப் பற்றாக் குறையும் ஏற்பட ஆரம்பித்து விட்டது. இன்னும் சொல்லப் போனால் நான்கு சக்கர வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும், ஆலைகளும் பெருகி புகையைப் பெருக்கி, என்னைச் சுற்றிப் புகை மண்டலத்தை எழுப்பி அடைத்து விட்டனர்.
அவர்களுக்குள் எனது சொத்தாகிய நிலத்தையும், நீரையும் பிரிப்பதற்குச் சண்டை. இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இவற்றை அவர்கள் உயிர் உள்ளவரை அனுபவித்து, பராமரித்துக் கட்டிப் பாதுகாக்க மட்டும்தானே அல்லாது சுய நலத்திற்காக உபயோகித்து அழிப்பதற்கல்ல என்பது என் குழந்தைகளுக்குப் புரிய வில்லை.
பேராசையும், கொலைகளும், கொள்ளைகளும், ஊழல்களும் தலை விரித்தாடுகிறது. எனக்கு மனிதர்கள் மட்டும்தான் குழந்தைகளா? ஐந்தறிவுடைய விலங்கினங்களிலிருந்து, ஒர் அறிவு கொண்ட உயிரனங்களூம், நுண்ணுயிரினங்களும், மரம் செடி கொடிகளும் என் குழந்தைகள் தான். எல்லா உயிரினங்களுக்கும் வெளித் தோற்றம், உருவம்தான் வேறு. உள்ளிருக்கும் உயிர் ஒன்றுதானே. ஆறறிவு கொண்ட என் குழந்தைகள் மற்ற என் குழந்தைகளையும் கொன்று அழிப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்க முடிகிறதே தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.


எனக்கு சுவாசிக்க நல்ல காற்று இல்லாமல் மூச்சுத் திணறுகிறது. ஓசோன் படலம் குறைந்து கிரீன் ஹவுஸ் விளைவினால் வெப்பம் கூடி என்னை தகிக்க வைக்கிறது. என்னுடைய நீரே எனக்குக் குடிப்பதற்கு மாசற்று, சுத்தமாகக் கிடைப்பதில்லை. எனக்கு அமைதியாக வாழக் கூட வழி இல்லாமல் போய் விட்டது. எனக்கும் வயதாகி வருகிறது. அன்னை, அன்புடன் கொடுத்த சொத்தை எல்லாம் அனுபவித்து அழிப்பவர்கள் அன்னைக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம் என்று நினைத்துப் பார்க்கிறார்களா? இல்லை. நானும் பொறுமையோடுதான் இருக்கிறேன்” என்று வருந்தினாள்.
ஆம், பூமித்தாய் பொறுமையானவள்தான். மனிதர்களாகிய நாம், நம் பூமித்தாய்க்கு இழைக்கும் கொடுமைகளைக் கண்டு அவளுக்குக் கோபமே வராதோ?
சூரியன், “பூமியே! நீயும் சில சமயம் கோபப்படுகிறாயே! அப்பொழுதும் உன் குழந்தைகள் உணரவில்லையா?” என்றதற்கு
“ஆம் ! நான் சில சமயம் கோபப்படத்தான் செய்கிறேன். என் பொறுமைக்கும் எல்லை உண்டு. இல்லையா? பூகம்பமாக, சுனாமியாக, மழையாக, வெள்ளமாக, கடல் கொந்தளிப்பாக, எரிமலைப் பிழம்பாக, நிலச்சரிவாக, புயலாக, சூறாவளிக் காற்றாக, வறட்சியாக என்று பல வகைகளில் என் சீற்றத்தைச் சிறிதாக வெளிப்படுத்தி என் குழந்தைகளை மிரட்டத்தான் செய்கிறேன்.
இது போன்று நான் மிரட்டும் போது, என்னைப் பராமரிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு சிலர் சிறிது நாட்கள் “பூமித்தாயைப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்.” என்று குரல் கொடுப்பார்கள். ஆனால் அதற்கெல்லாம் என் குழந்தைகள் பயப்படுவதாகவோ, தாங்கள் செய்யும் தவறை உணருவதாகவோ தெரியவில்லை. என் குழந்தைகளில் நல்ல மனதுடனும், அறிவுடனும் இருப்பவர்கள் என்னைப் பாதுகாக்கவேண்டும் என்றும், என் வளங்களை அழித்தால் அவர்களுக்கு அழிவு நிச்சயம் என்றும் அறிவுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது? என் குழந்தைகளை நினைத்து வருந்தத்தான் முடிகிறது.”
மற்ற கோள்கள் எல்லாம், “இப்படிப்பட்டவர்களை நாங்கள் எப்படி வைத்துக் கொள்ள முடியும்? எதற்காக வைத்துக் கொள்ள வேண்டும்? நல்லவேளை எங்களுக்கெல்லாம் உன்னைப் போன்று நல்ல வளங்கள் இல்லாமல் போயிற்று. இல்லையென்றால் நாங்களும் உன்னைப் போல் இப்படிப் புலம்ப வேண்டி வந்திருக்கும்.” என்றன.
“ரொம்ப சொல்லிக் கொள்ளாதீர்கள். சமீபத்தில் என் குழந்தைகள் சிலர், செவ்வாய் கோளிற்குச் சென்று தங்குவதற்கு விருப்பம் உள்ளவர்களை 2022-23 ல் அழைத்துச் செல்வதற்கான வழிகளைப் பார்த்துக் கொண்டு இருப்பதாக அறிகிறேன். அவர்களுக்குப் பயணத்திற்கான பயிற்சி அளிக்கவும் போகிறார்களாம். அதற்கு இப்போதே முன் பதிவு செய்ய வேண்டுமாம். போவதற்கான பயணச் சீட்டு பின்னர் தரப்படுமாம். அதற்கு எவ்வளவோ மில்லியன் டாலராம். ஆனால் போவதற்கான சீட்டு மட்டும்தான். வருவதற்கு அங்கு சென்ற பிறகுதான் திரும்பவும் பதிவு செய்ய வேண்டுமாம். அதற்கு தனி கட்டணம் செலுத்தி பயணச் சீட்டு பெற வேண்டுமாம். அதனால், செவ்வாய் கோளே உன்னிடமும் என் மனிதக் குழந்தைகள் வரப் போகிறார்கள். அதனால் உன் வாயை கொஞ்சம் அடக்கி வைத்துக் கொள்.” என்றாள் பூமித்தாய்.
செவ்வாய், “ஐயோ! இது என்ன கொடுமை? உன் மக்கள் என்னிடமும் வரப் போகிறார்களா? அப்படியென்றால் இன்னும் சில வருடங்களில் நானும் உன்னைப் போல் புலம்பி கண்ணீர் விட வேண்டியதுதான். தலைவா சூரியனே நீங்கள் இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று புலம்ப ஆரம்பித்து விட்டது.
"நானும் இதைக் கேள்விப் பட்டேன். MARS ONE என்று அதற்குப் பெயர். போவதற்கே ஏழு மாதங்கள் ஆகுமாம். அதெல்லாம் சரி, எனக்கு ஒரு சந்தேகம். போனால் முதலில் உயிருடன் போவார்களோ? அப்படியே போனாலும் உயிருடன் திரும்பி வர முடியுமா அவர்களால்? வர உத்தரவாதம் உண்டா?" என்றது வியாழன்.
"அதை ஏன் கேட்கிறீர்கள். இதற்கும் அங்கு கிறுக்குப் பிடித்தவர்கள் இருக்கிறார்கள். நிறைய மக்கள் பதிவு செய்திருக்கிறார்களே! அவர்களை என்னவென்று சொல்வதாம்?" - நெப்டியூன், ப்ளூட்டோ
“சந்திரனில் கூட நிலத்தைக் கூறு போட்டு விற்க உன் குழந்தைகள் முயல்வதாக கேள்விப்பட்டோம்.” என்று எள்ளி நகையாடியது வெள்ளிக் கோள்.
“எனக்கு மூச்சுத் திணறுகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை..” என்றது பூமி.
“எனக்கு மூச்சுத் திணறுகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை..” என்றது பூமி.
“நிச்சயமாக நீ ரொம்பப் பொறுமைசாலிதான் ! நம்மை எல்லாம் படைத்த அந்த அண்டவெளி சக்தியிடம் முறையிட்டுப் பார்” என்றான் தலைவன் சூரியன்.
ஆம் பூமித்தாய் ரொம்பப் பொறுமையானவள்தான்! அவள் ஒரு நல்ல தாய்!. நாம் செய்யும் தவறுகளை எல்லாம் பொறுத்து எந்தக் கைமாறும் எதிர்பார்க்காமல் நமக்குத் தன் வளங்களை எல்லாம் தந்து கொண்டுதான் இருக்கிறாள். நாம்தான் அழிவை நோக்கி நமக்கு நாமே குழி பறித்துக் கொண்டிருக்கிறோம். பூமித்தாய் பொறுமைசாலிதான்.!!! அவள் கண்ணீரும் வற்றி வருகிறது!
---கீதா
படங்கள் : இணையத்திலிருந்து
வலைப்பூ ஆரம்பித்த பொழுது எழுதிய பதிவு. எங்கள் வலைப்பூ அப்போது அறிமுகமாகியிராத காலம் ஆதலால் இப்போது மீள் பதிவு.
---கீதா
படங்கள் : இணையத்திலிருந்து
வலைப்பூ ஆரம்பித்த பொழுது எழுதிய பதிவு. எங்கள் வலைப்பூ அப்போது அறிமுகமாகியிராத காலம் ஆதலால் இப்போது மீள் பதிவு.











