வெள்ளி, 3 ஜூன், 2016

நாங்களும் சந்திப்போம்!!! சந்திப்பு - 3 - மௌனமும், ஸன்னியின் பிறந்த நாள் கொண்டாட்டமும்

வீட்டிற்குள் நுழைந்ததும் அந்தச் சமயம் பார்த்து வென்ற கட்சியும், எதிர்க்கட்சியும் சரவெடிகள் வெடிக்க அவ்வளவுதான் எல்லோரும் பயந்து, உடம்பு நடுங்க ஓடி ஒளிந்து கொண்டார்கள். முந்தைய பதிவில் முடித்திருந்தேன்

சத்தம் எல்லாம் அடங்கி எல்லோரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டதும் கண்ணழகி கட்டிலின் அடியிலிருந்து வெளியில் வரவும் அங்கு அவள் அம்மா கீதா இவர்களுக்காகச் செய்த கேக் எல்லாம் வைத்திருக்க, உடனே கண்ணழகி எல்லோரையும் அழைக்க...

கண்ணழகி : நண்பர்களே! நம் அருமைக் குட்டிச் செல்லம் ஸன்னிக்கு இந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி 3 வயது நிறைகின்றது. அதற்குள் அவன் ஊருக்குப் போய்விடுவான் என்பதால் நாம் எல்லோரும் இன்று அவனது பிறந்த நாளைக் கொண்டாடுவோம். சரியா.

டைகர் : அதற்கு முன் எல்லோரும் நமது மற்ற அப்பா, அம்மாக்களின் செல்லங்கள், நம் நண்பர்களின் பிரிவிற்கு ஒரு சிறிய மௌன அஞ்சலி செய்துவிட்டுப் பிறந்த நாள் கொண்டாடுவோம் சரியா.


எல்லோரையும் கீதா அடக்கி மௌனமாக இருந்துவிட்டு பின்னர் ஸன்னிக்கு ஹாப்பி பர்த்டே டு யு ஸன்னி என்று சேர்ந்து பாடி வாழ்த்தினார்கள்.

எல்லோரையும் மகிழ்வித்து நீடுழி வாழ,  ஜூன் 13, 2016 அன்று 3 வயது நிறைவடையும் ஸன்னிச் செல்லத்திற்கு எங்கள் எல்லோரது பிறந்த நாள் வாழ்த்துகளும்







கண்ணழகி : நண்பர்களே ஸன்னி மல்டிகான் (Maltichon) எனும் வகையைச் சேர்ந்தவன். மல்டீஸ் (Maltese) என்ற இனமும், பைக்கான் ஃப்ரைஸ் (Bichon Frise) என்ற இனமும் கலந்து உருவான தனி வகை இனம். தோற்றத்தில் சிறியவனாகப் பொம்மை போன்று இருந்தாலும், மிகவும் அன்பானவன், எச்சரிக்கை உணர்வுடன் இருப்பவன், பொறுப்பானவன், நன்றாகத் தோழமையாகப் பழகுபவன், மகிச்சியானவன் பிறரையும் மகிழ்விப்பவன், நன்றாக விளையாடுபவன்..இதோ பாருங்கள் அவன் விளையாட்டை, சுறு சுறுப்பை....

மதுரைத் தமிழனின் செல்ல மகன் ஸன்னியின் விளையாட்டை இங்கு கண்டு மகிழுங்கள். நன்றி மதுரைத் தமிழன் சகோ

ஜெஸ்ஸி : அட சூப்பரா விளையாடறானே...

சரி நாங்கள் கிளம்புகின்றோம் என்று கருவாண்டியைக் கூப்பிட அவன் ஜெஸ்ஸியுடன் தான் இருப்பேன் என்று சொல்லிவிட......ஜெஸ்ஸி, கருவாண்டி நீங்கள் முடித்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்து சேருங்கள்.  அங்கு சந்திப்போம் என்று ஜெஸ்ஸியின் நண்பர்கள் ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட இவர்களின் உரையாடல்கள் தொடர்கின்றது.

ஸன்னி : ரொம்ப நன்றி உங்கள் எல்லோருக்கும். உங்கள் அன்பு மகிழ்வாக இருக்கிறது. நான் நெகிழ்ந்து விட்டேன். ஆனால், உங்கள் ஊரில் என்ன இப்படி எல்லாம் வெடிக்கின்றார்கள்? அங்கெல்லாம் இப்படிச் சத்தமே இருக்காது தெரியுமா. இதைப் பற்றிச் சொல்லவே இல்லை நீ.  எனக்குப் பயமாக இருக்கிறது.

ஜெஸ்ஸி, ரஜ்ஜு : ஆமா எங்க ஊர்லயும் கேட்கவே கேட்காது. ஹப்பா பயந்தே போய்விட்டோம்.

கண்ணழகி : சொன்னா நீங்கல்லாம் வந்துருக்கவே மாட்டீங்களே...அதை ஏன் கேட்கிறீர்கள்! இங்க அவ்வப்போது வெடித்துக் கொண்டே இருப்பார்கள். சாவுச்சங்கு ஊதினாலோ, கோயிலில் பாட்டுகள் ஒலி பரப்பினாலோ எனக்குத் தெரிந்துவிடும் அன்று வெடிச் சத்தம் இரும் என்று. என் உடம்பு நடுங்க ஆரம்பித்துவிடும்.

ஜூலி : எங்கள் ஊரிலும் வெடி எல்லாம் உண்டு. இந்த மனுஷங்க ரொம்ப மோசம் நம்மை எல்லாம் ரொம்பப் பயப்பட வைக்கின்றார்கள். கண்ணழகி! உங்கள் வீட்டில் பட்டாசு எல்லாம் வெடிப்பார்களா?

டைகர்: எங்க ஊர்ல பட்டாசு சத்தம் எல்லாம் நாங்கள் இருக்கும் இடத்தில் கேட்காது. ஒரே ரப்பர் தோட்டம்தான். வீடும் அங்கங்குதான் இருக்கும். அழகான ஊர். எங்கள் வீட்டில் பின் புறம் பெரிய ரப்பர் தோட்டம், முன் புறம் பெரிய தோட்டம் எல்லாம் உண்டு. அடுத்த தடவை நீங்கள் எல்லோரும் அங்கு வாருங்கள். ஜாலியா சத்தம் இல்லாமல் தோட்டத்திலேயே சுத்தலாம்.

ரஜ்ஜு : அட! இந்தத் தடவையே அங்கு போயிருக்கலாம். எங்கள் ஊரிலும் இந்த மாதிரி சத்தம் எல்லாம் கிடையாது.

கண்ணழகி : எங்கள் வீட்டில் பட்டாசு எல்லாம் வெடிக்கவே மாட்டர்கள். அண்ணன் 2 ங்க்ளாஸ் படிக்கும் போதே நம்மை மாதிரி 4 காலுக்கு எல்லாம் இது ஆகாது என்று வெடிக்கறதே இல்லை என்று அண்ணன் சொல்லுவார்.

ஜூலி : ஆனால் ஊர் முழுக்க வெடிப்பார்களே

கண்ணழகி : ஆமாம் அப்பல்லாம் நான் சாப்பிடவே மாட்டேன்.  தீபாவளினாலே பிடிக்காது. ஆனா ப்ரௌனி பயந்தாலும் சாப்பாடு மட்டும் விட மாட்டா...

ஸன்னி : பாத்தியா ப்ரௌனியை மறந்தே போய்விட்டோம். ப்ரௌனி எங்கே? அந்த அறையிலா? கதவு மூடியே இருக்கிறது?

கண்ணழகி : ஹும். பட்டாசு சத்தம் கேட்டு அவள் அந்த அறையில் கட்டிலுக்கடியில் மூலையில் ஒதுங்கியிருப்பாள். நான் சங்கிலி இல்லாமல் இருப்பதால் அந்தக் கதவு மூடியிருக்கும்.

ஜெஸ்ஸி, ரஜ்ஜு : நீ இங்கே இரு. நாங்கள் அவளைப் பார்த்துட்டு வருகிறோம். நீ இங்கே சும்மா குரைத்துக் குரைத்து எங்களைத் தொந்தரவு பண்ணக் கூடாது.
எனது மற்றொரு மகள் ப்ரௌனி

ப்ரௌனியின் ரூமிற்குச் சென்றார்கள். ஹை ப்ரௌனி...எங்கருக்க? என்று கோரஸாகக் கேட்க ப்ரௌனி தன் குண்டு உடம்பை தூக்கிக் கொண்டு மெதுவாக வெளியில் வந்தாள். பூனையார்களைப் பார்த்ததும் முதலில் கொஞ்சம் உறுமினாள். அப்புறம் கீதா அவளிடம் ஃப்ரென்ட்ஸ் என்று சொல்ல அடங்கிவிட்டாள்.

டைகர் : உனக்கு உடம்பு நடுங்கவே இல்லையா....வெடிச் சத்தம் பயம் இல்லையா?

ப்ரௌனி : ம்ம் நடுங்காது ஆனால் பயம் உண்டு கட்டிலுக்கடியில் போய் படுத்து விடுவேன். கண்ணழகி தொடை நடுங்கி நடுங்கியிருப்பாளே.

ஸன்னி : இதப் பார்ரா அவள் இவளைச் சொல்லுகிறாள். இவள் அவளைச் சொல்லுகிறாள்....அது சரி ஏன் உங்க ரெண்டு பேருக்கும் பங்கிச் சண்டை

ஜூலி : ஸன்னி! அது பங்கிச் சண்டை இல்லை பங்காளிச் சண்டை...

ஸன்னி : என்னவோ ஒண்ணு....

ப்ரௌனி : அது உனக்கும், டைகருக்கும் தெரிந்துருக்குமே. நம்மவர்களில் வயதிற்கு வரும் முன்னரேயே/வரும் சமயம் ஒரு Pack ற்கு யார் தலைமை என்று முடிவு செய்வது உண்டு இல்லையா? நாங்கள் இருவருமே ஒரே வீட்டில் தானே இருக்கிறோம். எங்கள் பேக் அம்மா, அண்ணா என்று இருந்தாலும் எங்கள் இருவருக்குள் யார் தலைவி என்ற பிரச்சனை வந்தது. கண்ணழகி ஆல்ஃபா. நான் அடங்கித்தான் போய்க் கொண்டிருந்தேன். ஆனால், ஒரு முறை எங்களுக்குள் தீவிரமாகச் சண்டை வந்த போது, அண்ணாவிற்கு, அப்போது நம் உளவியல் தெரியாததால் கண்ணழகியை அடக்கி, எனக்கு ஆதரவாகப் பேசி என்னை அவள் கடியிலிருந்துப் பிரிக்க, எனக்குத் தைரியம் வந்து விட்டது. நானும் கண்ணழகியை எதிர்க்கத் தொடங்கி விட்டேன். அதன் பிறகு நாங்கள் இருவரும் எதிரும் புதிரும்தான்.

ஜெஸ்ஸி : சே நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்திருந்தால் இப்போது எங்களுக்கும் நன்றாக இருந்திருக்கும், அம்மா, அண்ணாவிற்கும் நன்றாக இருந்திருக்கும்.

ஜெஸ்ஸி, கருவாண்டி : சரி நாம் கொஞ்ச நேரம் வெளியில் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோமா?

டைகர் : அதானே பார்த்தேன்.  இவர் இரண்டு பேரும் ஊர் சுற்றாமல் இங்கே இப்படி அமைதியாக இருக்கிறார்களே என்று. ஆரம்பித்துவிட்டார்கள்.
ப்ரௌனி : நான் வர மாட்டேன் வெளியே. 1, 2 போவதற்கு மட்டும் தான் வெளியே வருவேன்.

ஸன்னி : ஓ! அதான் உன்னை அம்மாவும், அண்ணாவும் “படிதாண்டா பத்தினி” என்று அழைக்கின்றார்களா.

ப்ரௌனி : கண்ணழகி ‘’”ஓடு காலி”

ஜூலி : ஹ்ஹ்ஹ்ஹ் ஏன் அவள் வீட்டை விட்டு ஓடி விடுவாளா?

டைகர் : அதை ஏன் கேட்கிறாய். அவள் 3 முறை வெளியில் ஓடிவிட அண்ணனும், அம்மாவும் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வந்தார்கள்.

ப்ரௌனி : டைகர் உன் கதை மட்டும் என்னவாம்?  சீசன் சமயத்தில் நீ அலைந்தாயே! சங்கிலியை அறுத்து கொண்டு வெளியில் ஓடி விட்டு வீட்டிற்கு வர பயந்து ரப்பர் தோட்டத்து மரத்தடியில் செடிகளுக்கிடையில் முனகிக் கொண்டு இருந்ததை, இருட்டில் தேடிக் கண்டு பிடித்து அழைத்து வந்தார் துளசி அப்பா.

ஸன்னி : அப்போ நீங்கள் எல்லோருமே ஓடுகாலிகளா! ஹ்ஹ்ஹ

ப்ரௌனி : நான் வெளியே போக மாட்டேன். ஒரு சின்ன லாரி என் காலைப் பதம் பார்த்துவிட்டுச் சென்றுவிட இப்போதும் கால் நொண்டிக் கொண்டுதான் நான் நடப்பேன். எனக்கு சாலையில் போக்கு வரத்தைக் கண்டாலே பயம்.

ஸன்னி : ஏன் டாக்டர் அண்ணா சரி பண்ணவில்லையா?

ப்ரௌனி : அது நடந்தது நான் 3 மாதக் குழந்தையாக இருக்கும் போது. அண்ணா படித்து முடிக்கும் முன். இப்போது அண்ணா என்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டார்.

ஜெஸ்ஸி : சரி நாம் எல்லோரும் சிறிது வெளியில் சென்றுவிட்டு வருவோம்.

அவர்கள் எங்கள் பேட்டையில் உலா செல்ல நினைத்த போது என்ன நடந்தது என்பதோடு முடிகின்றது தொடர்....நீங்களும் அவர்களுடன் உலா வாருங்கள்.

படங்களுக்கு நன்றி ஏஞ்சலின், துளசி கோபால் அக்கா, கீதா சாம்பசிவம் அக்கா, மதுரைத் தமிழன் சகோ, சகோ கரந்தையார், இளங்கோ ஐயா, ஸ்ரீராம், ஜிஎம்பி சார், டி என் முரளிதரன் சகோ

-----கீதா

http://engalblog.blogspot.com/2011/02/1.html எங்கள் ப்ளாக் ஸ்ரீராமின் செல்லம் பற்றிய பதிவுகள்

http://sivamgss.blogspot.in/2014/02/blog-post_6626.html கீதா சாம்பசிவம் அக்காவின் செல்லம் மோத்தியைப் பற்றிய பதிவு

https://tthamizhelango.blogspot.com/2015/07/blog-post_15.html தமிழ் இளங்கோ ஐயா -இறந்து போன எங்கள் ஜாக்கியின் நினைவாக, இந்த நாய்களுக்கு சாதம், பிஸ்கெட், ரொட்டி கொடுப்பதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி. இங்கு சென்றால் ஜாக்கியைப் பற்றிய பதிவும் கிடைக்கும்

http://www.tnmurali.com/2014/06/a-poem-dedicated-to-juno.html முரளிதரன் சகோவின் செல்லம் ஜுனோவைப் பற்றிய பதிவு

http://avargal-unmaigal.blogspot.com/2013/09/blog-post_22.html மதுரைத் தமிழனின் செல்ல மகன் ஸன்னியைப் பற்றிய பதிவு. இதில் எனக்கும் என் மகனிற்கும் மிகவும் பிடித்த நாங்கள் ரசித்தது தமிழனின் பின்னூட்டக் கருத்து. எங்கள் கருத்தும் அதே என்பதால்.

http://gmbat1649.blogspot.in/2011/06/blog-post_15.html   ஜி எம் பி சாரின் செல்லம் செல்லி பற்றிய பதிவு


வியாழன், 2 ஜூன், 2016

நாங்களும் சந்திப்போம்!!! சந்திப்பு - 2

இது அவர்களது ஐடென்டிட்டி ஸ்கானிங்க் சம்பிரதாய பரிசோதனைகள். அது முடிந்ததும்... அடுத்தது என்ன என்று முந்தைய பதிவில் முடித்திருந்தேன். இதோ தொடர்கின்றது...

ஜூலி எங்கே? என்று ஸன்னி வினவ

இதப் பார்டா வந்தவுடனே ஆர்வத்தோடு ஜூலி எங்கே என்று கேட்பதை...-

ஹேய் சும்மாதான் கேட்டேன்...உடனே கதை கட்டிவிடாதே....சரி ஜெஸ்ஸிடைகர், ரஜ்ஜு எங்கே? 

இதோ நீ கேட்ட ஜூலி.
                                                                   கரந்தை சகோவின் செல்லம் ஜீலி

இவன் தான் டைகர். 
   எங்கள்/துளசியின் செல்லம் டைகர்
கண்ணழகி : ஜெஸ்ஸி ஒரு பட்டாளத்தையே அழைத்து வந்திருக்கிறாள், அவர்கள் ஊர்  சுற்றிப் பார்க்கவாம். இங்குதான் இருக்கிறாங்க்.....அடடா இந்த ஜெஸ்ஸியை காணவில்லையே..  இந்த ஜெஸ்ஸி, கருவாண்டியுடன் போயிருப்பாள். ஐயையோ! ரஜ்ஜுவையும் காணவில்லை அவனும் அவர்களுடன் போய்விட்டானோ. பூனையர்களாச்சே. ஒரு வேளை ரஜ்ஜுவின் அம்மா துளசி ஆண்டி இங்கு ஊர் சுற்றிக் கொண்டிருக்காங்களோ!! வாங்க,  தேடிக் கொண்டே நடப்போம்..

ஸன்னி கருவாண்டியா? அவன் யார்ஜெசியின் ஆண் தோழனா

கண்ணழகிஅது தெரியாது. வீட்டைவிட்டு ஒரு முறை அவளை ஏமாற்றிக் கூட்டிக் கொண்டுப் போய்விட்டான். இந்த ஜெஸ்சியும் வீட்டுக்கு எப்படி வருவது என்று தெரியாமல் கருவாண்டியைத் திட்டிக் கொண்டே வந்து கதவைத் தட்டவும்... ஜெசியோட அம்மா ஏஞ்சலின் பாவம் பயந்து போய் திருடன் என்று நினைக்க...

டைகர் : ஹ்ஹாஹ்ஹ....அப்ப ஜெஸ்ஸி செம ஆட்டம் போடுவாள் போல. சுவாரஸ்யமாக இருக்கிறதே!

கண்ணழகி : டைகர்! வாய் விடாதே....உன் ஆட்டத்தை அப்புறம் சொல்கிறேன். இப்பவும் எங்கேயாவது போயிருப்பார்கள்..
ஸன்னி : ஓ! அப்போ ஜோடியா...அதான் இருவரும் பிரியாமல் சேர்ந்து வந்திருக்கிறார்கள் போல...--

ரஜ்ஜு - நியூசிலாந்து துளசி அக்காவின் செல்லப் பிள்ளை 

கண்ணழகி : ஏஞ்சல் அம்மாவைக் கேட்டால்தான் தெரியும்.....ஹேய் அங்கே பார் ஓரு பெரிய பொம்மை மேல் ரஜ்ஜு ஏறி உக்காந்திருப்பதை....டேய் ரஜ்ஜு வாடா...

Jessie :)
ரஜ்ஜு : ஜெஸ்ஸிய தேடுகின்றீர்களா? ஏஞ்சலின் அம்மா அவங்க தளத்துல... "வான்டட்" அப்படினு ஜெஸ்ஸியோட ஃபோட்டோ போட்டுருக்காங்களா.....நானும் தேடிக் கொண்டே வந்தேன்.

டைகர், ஜூலி : இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? ரஜ்ஜு?

ரஜ்ஜு ப்ளாக் எல்லாம் வாசிக்கின்றான்

ரஜ்ஜு : நான் எங்க துளசி அம்மா ப்ளாக் எழுதும் போது நானும் கம்ப்யூட்டரில் ஏறி உட்கார்ந்து வாசிப்பேன் தெரியுமா? ஹிஹிஹி

கருவாண்டியும், தோழி ஏஞ்சலினின் செல்லம் ஜெஸ்ஸியும்
ரஜ்ஜுவுடன் பேசிக் கொண்டே போக, அங்கு ஒரு கடையில் சுண்டெலி பொம்மை தொங்கிக் கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெஸ்ஸியையும், கருவாண்டியையும், அவர்களது தோழர்களான பிரபு, சிம்பு, அசா (அரவிந்த்சாமி) எல்லோரையும் பார்த்து, ஸன்னி, ஜூலி, டைகர் சிரிக்க....,

ஜெஸ்ஸியின் தோழர்கள்
சிம்பு
chimpu :)
அசா-அரவிந்த் சாமி                                                                                           பிரபு









ஜூலி : அது உண்மையான எலினு நினைச்சு டாம் அண்ட் ஜெர்ரி விளையாடலாமானு வேடிக்கை பாக்கறீங்களா..ஹ்ஹ்ஹ் அது பொம்மை

ரஜ்ஜு : எனக்கு அது முன்னாடியே தெரியுமே அதான் நான் அந்த யானை பொம்மை மேல் உட்கார்ந்துவிட்டேன் 

ஜெஸ்ஸி :  என்ன நக்கலாஎங்களுக்கும் தெரியும்.  எப்படி இப்படி உண்மை எலி போல இந்த மனிதர்கள் செய்திருக்கிறார்கள் என்றுதான் வேடிக்கை பார்த்தோம்.  

டைகர் : பாரு! மீசையில் மண் ஒட்டாது !!

எல்லோரையும் இழுத்து வண்டியில் ஏற்றிக் கொள்வது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஜெஸ்ஸியின் தோழர்கள்  ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய போது...கண்ணழகி ஸன்னியை அறிமுகப்படுத்துகிறாள்

கண்ணழகி : சிம்பு, பிரபு, அசா!! இவன் தான் ஸன்னி. நியூஜெர்சியிலிருந்து வந்திருக்கிறான். நீங்களும் எங்களுடன் எங்கள் அகத்திற்கு வந்துவிட்டு அப்புறம் ஊர் சுற்றிப் பார்க்கச் செல்லுங்கள். ஒரு முக்கியமான நிகழ்வு இருக்கிறது. 
எனவும் அவர்களும் வந்தார்கள்.

ஸன்னி :  கண்ணழகி! உன் சகோதரி ப்ரௌனி இப்போது எங்கிருக்கிறாள்? அவளும் வருவாள்தானே? 

கண்ணழகி : ஸன்னி அவளைப் பற்றிப் பேசாதே. எனக்கும் அவளுக்கும் ஆகாது. பங்காளிச் சண்டை. 

ஸன்னி : பங்காளிச் சண்டையா அப்படின்னா

ஜூலி : ஓ! நீ குட்டிக் குழந்தை அதுவும் அமெரிக்கா இல்லையா! உனக்கு இதெல்லாம் தெரியாது 

ஸன்னி : பரவாயில்லை நான் அவளையும் பார்க்க வேண்டும்...

கண்ணழகி : (மைன்ட் வாய்ஸ்: ம்ம்ம் இந்த ஸன்னிக் குட்டி ரொம்ப நல்லவனா, சமத்துப் பையானா இருக்கானே!) நீ சொல்லுவதால் சரி. ஆனால் அவள் நாம் பேசும் இடத்திற்கு வரக் கூடாது.   அறையில்தான் இருக்க வேண்டும்.

ஜெஸ்ஸி : ஓ! அந்த அளவிற்குப் பகையா? உன்னுடன் கூடப் பிறந்தவள் அல்லவா?  

கண்ணழகி : அந்தக் கதையை அவளிடமே கேட்டுக் கொள்ளுங்கள்......அகம் வந்துவிட்டது.... 
வீட்டிற்குள் நுழைந்ததும் அந்தச் சமயம் பார்த்து, வென்ற கட்சியும், எதிர்க்கட்சியும் சரவெடிகள் வெடிக்க அவ்வளவுதான்  எல்லோரும் பயந்து, உடம்பு நடுங்க ஓடி ஒளிந்து கொண்டார்கள்

சரி அவர்கள் எல்லோரும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வரட்டும். அதுவரை நீங்களும் காத்திருங்கள். அடுத்து ஒரு விழா. மறக்காமல் வந்துவிடுங்கள்!

தொடரும் விழாவில் சந்திப்போம்....

நிழற் படங்களுக்கு நன்றி : ஏஞ்சலின், துளசி டீச்சர்/அக்கா, சகோ கரந்தையார், சகோ மதுரைத் தமிழன் 

-----கீதா


(பெரும்பாலும் இரவிலும் பகலிலும் கூட வோல்டேஜ் பிரச்சனையால் நெட் போய்விடுவதால் நெட் வரும் போது பதிவிட வேண்டிய நிலைமை. உடன் உடன் பதிவிடுவதற்குப் பொறுத்துக் கொள்ளவும்.)

நாங்களும் சந்திப்போம்!!! சந்திப்பு - 1

பதிவர்கள் நீங்கள் மட்டும்தான் சந்திப்பீர்களா? நாங்களும் சந்திப்போம் என்று கிளம்பிவிட்டார்கள் பதிவர்கள் சிலரின் செல்லங்கள்.

எங்கள் வீட்டில் எங்கள் செல்லம் கண்ணழகிக்குத் தொலைபேசி அழைப்பு.

ஹலோ...

சகோ மதுரைத் தமிழனின் செல்லப்பிள்ளை ஸன்னி

ஹலோ இஸ் இட் கேன்னி (Kanny)? ஐ ஆம் ஸன்னி ஃப்ரம் நியூஜெர்சி

எங்கள் செல்லம் கண்ணழகி

ஹை! ஸன்னி!!!.....எப்படி இருக்கிறாய்? (மைன்ட் வாய்ஸ்...இதப்பார்டா அமெரிக்காலருந்து பேசறானாம் பீட்டர் விடரான் பாரு!) நான் கண்ணழகி. கேன்னி இல்லை. அமெரிக்கா என்றால் பீட்டர் விடணுமா? உங்க அப்பா தமிழில்தானே பேசுகிறார்.  எழுதுகிறார். அப்புறம் என்ன? நீயும் தமிழில் பேசு. 

(அடேங்கப்பா நாடகத் தமிழாக இருக்குதே. ம்ம்ம் சமாளிப்போம்) ஓ! மன்னித்துவிடு கண்ணழகி. இங்கு எல்லாம் பத்மநாபனை Paddy  ஏன்றும், மாதவனை மேடி என்றும் தான் கூப்பிடுவார்களா, அதான். சரி... நம் அம்மா, அப்பா எல்லோரும் ப்ளாகர் சந்திப்பு, புத்தக வெளியீடு என்று இடையிடையே  சந்திக்கின்றார்கள்  இல்லையா.!? நாமும் ப்ளாகர் செல்லங்கள் சந்திப்பு என்று சந்தித்தால் என்ன?

சந்திக்கலாம்தான். நீ, ஜெஸ்ஸி, ரஜ்ஜு, எல்லாரும் எங்கள் ஊருக்கெல்லாம் வருவீர்களா உங்கள் ஊரில் பொதுச் சுகாதாரம் மிகவும் நன்றாக இருக்கும் என்று அங்கிருக்கும் இந்திய மக்கள் எல்லாம் பெருமை பேசுவார்கள். அவர்கள் இங்கு வந்தால் பிஸ்லேரி தண்ணியையே காய்ச்சித்தான் குடிப்பார்கள். இங்கு வந்தால் உங்களுக்கு இங்குள்ள வியாதி ஏதேனும் தொத்திக் கொள்ளும் பயம் இருக்குமே....

உங்கள் ஊரில் ஒரே குப்பையாக இருக்குமாமே.... பார்வோ, டிஸ்டெம்பர் எல்லாம் எளிதாகத் தொத்திக்குமாமே....அப்புறம் உங்கள் ஊரில் நம்மவர்கள் என்னைப் பார்த்தால் கடித்துவிடுவார்களா? ரேபிஸ் வந்துவிட்டால்? என் அம்மா, அப்பா, அக்கா எல்லாரும் பாவம். ஆனால், எனக்குத் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள்தான். இருந்தாலும் கொஞ்சம் பயம்தான்.  உனக்கும் தடுப்பூசி போட்டிருக்குத்தானே?

ஹலோ என்ன ரொம்ப அலட்டுகிறாய்! அமெரிக்காவில் மட்டும்தான் ஊசி போடுவார்களா? இங்கும் எங்களுக்குப் போடுவார்கள்.  நீ எங்கள் வீட்டிற்குத்தானே வருவாய். எங்கள் டாக்டர் அண்ணன் பார்த்துக் கொள்வார். உன்னைப் பத்திரமாகத் திரும்ப அனுப்பி வைப்பார்.

என்னது உங்கள் அண்ணன் டாக்டரா! அப்போ நான் உங்கள் வீட்டிற்கு வர மாட்டேன். பிடித்து வைத்து ஊசி போட்டுவிடுவார்...

ஹேய் எங்கள் வீடு உனக்கு ரொம்ப பாதுகாப்பு. அண்ணன், அம்மா மிகவும் கொஞ்சுவார்கள்.  அண்ணன் ஊசி போட்டாலும் ஸ்பெஷல் சாப்பாடு எல்லாம் கிடைக்கும்.  ஆனால் டயட் தான். பிஸ்கட் கவர் பிரிக்கும் சத்தம் கேட்டு, தருவார்களா என்று சும்மா நீ வாலாட்டி ஜொள்ளுவிட்டு அலைந்தாலும் கிடைக்காது. தர மாட்டார்கள்.

எலும்புத் துண்டு கிடைக்குமா. உங்கள் வீட்டுல சைவம் இல்லையா?

ஓ! கிடைக்குமே! சைவம்னா அவர்கள் மட்டும்தான். எனக்கு எல்லாம் பெடிக்ரீ நான் வெஜ் தான் தருவார்கள். அப்பப்போ போன் (bone) கிடைக்கும், சிக்கன் பௌச் கிடைக்கும். நீ வா உனக்கும் அண்ணன் தருவார்.

ஹை! அப்ப நான் உங்கள் வீட்டுக்குத்தான் வருவேன்....

யுகேயிலிருந்து ஜெசி பூனையரசி, நியூஸ்லான்ட்லருந்து ரஜ்ஜு பூனை அரசன், கரந்தையிலிருந்து ஜூலிக் குட்டி, அப்புறம் துளசி அங்கிளின் டைகர், எல்லாரும் வருகின்றார்கள். நமக்குப் பூனையார்கள் கொஞ்சம் அலர்ஜிதான். பரவாயில்லை சமாளித்துக் கொள்வோம்..

அதெல்லாம் சமாளித்து விடலாம். வெல்.! கண்ணழகி, நான் நாளைக்குப் புறப்படுகின்றேன்.

சரி நீ எப்படி வருவாய்? உன் அப்பா மாதிரி டூப்பில் வருவாயா? இல்லை ஒரிஜனலாக வருவாயா. எதற்கு கேட்கிறேன் என்றால் நான் உன்னை விமான நிலையத்தில் கண்டு பிடிக்க வேண்டுமே அதான்....

ஹஹஹ நான் என் அப்பா போல் இல்லை. ஒரிஜனலாகத்தான் வருவேன்....ஆனால் டூப்பென்று சொல்லுவேன். அது சரி நீ தான் என்னைப் பார்த்ததே இல்லையே அப்புறம் எப்படி நான் தான் ஸன்னி என்று சொல்லுவாய்?

(மைண்ட் வாய்ஸ்)
அப்பா....2 கால்... 8 அடி பாய்ந்தார்னா... செல்லப்பிள்ளை 4 கால் 32 அடி பாய்ந்துவிடுவான் போல. கணக்கு ஓகேயா?! மேற்குல இருக்கற அம்மாவின் ஃப்ரென்ட் கணக்குப் பிள்ளைதான் சொல்ல வேண்டும்.

ஹலோ! நாங்கள் பொய் சொல்ல மாட்டோம்.....எங்கள் குடும்பம்  அவர்கள் உண்மைகள்”. அதிருக்கட்டும், உனக்கு இங்கிருந்து என்ன வேண்டும். 

(யப்பா மைன்ட் வாய்ஸ் கூட இவனுக்குக் கேட்டு விடுகிறது.  மதுரைத் தமிழன் அங்கிள்கிட்ட வளர்ந்தால் இப்படித்தான் போல.....நாம் வாய் கொடுக்காமல் ஜாக்கிரதையாதான் இருக்கணும்...ம்ம்ம்)

நீ பெட்டி எல்லாம் கொண்டு வரலாமா? என்றால் உங்கள் ஊரில் நாம் சாப்பிடும் சாக்கலேட் கிடைக்குமாமே அதை வாங்கிக் கொண்டு வா. இங்கு நம்மவர்களுக்குக் கொடுக்கலாம்.

ஓகே! டன்! விமான நிலையத்திற்கு வந்துவிடு. என்னைப் பார்க்கும் ஆர்வத்தில் ரன்வேயில் வந்துவிடாதே. உங்கள் ஊரில் நிறைய நம்மவர்கள் ரன்வேயில் ஓடி வந்துவிட ஃப்ளைட் எல்லாம் தாமதமாகிறதாம். அப்புறம் நான் வரும் விமானம் இறங்க முடியாமல் சுத்திக் கொண்டே இருக்கும். ஒழுங்காக வெளியில் காத்திரு.

ஹேய்! எனக்கும் தெரியும்.....நீ தம்மாத்துண்டு ஜுனியர். 7 1/2 வயதாகிய என்னைக் கலாய்க்கிறாய் நேரில் வா பார்த்துக் கொள்கின்றேன்.

ஸன்னி செம ஸ்டைலாக வந்து இறங்குகிறார். கண்ணில் கூலிங்க்ளாஸ், கழுத்தில் டை, காலில் ஸாக்ஸ் என்று....

கண்ணழகிக்கு அதைப் பார்த்து ஒரே ஆச்சர்யம்.....ம்ம் இதற்கொன்றும் குறைவில்லை. கையில் பை, கழுத்தில் ட்டை, வாயில் பொ.......இல்லை இல்லை அவர்கள் உண்மைகள். இவனிடம் மாட்டிக்கிட்டு அப்புறம் நம் பாடு திண்டாட்டம்...அடங்கு அடங்கு.) அதே சமயம் குழந்தை போல் இருக்கும் அவனது அழகைக் கண்டுச் சொக்கி நின்றாள்!

இருவரும் மூக்கால் உரசிக் கொண்டு ஒருவருக்கொருவர் முகர்ந்து பார்த்துக் கொள்கின்றார்கள். இது அவர்களது ஐடென்டிட்டி ஸ்கானிங்க் சம்பிரதாய பரிசோதனைகள். அது முடிந்ததும்...

முடிந்ததும் என்னாயிற்று? அவர்களின் அலப்பறைகள் நீண்டதால் அடுத்து வருகின்றது....

----கீதா

படங்களுக்கு மிக்க நன்றி : ஏஞ்சலின், சகோ கரந்தையார், சகோ மதுரைத் தமிழன்.