செவ்வாய், 15 டிசம்பர், 2015

எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய் - 3



என் துக்கம் தீர அழுதுவிட்டு வருகின்றேன் என்றேன் இல்லையா. எத்தனை அழுதாலும் தீரப்போவதில்லை. சரி என் கதைக்கு வருகின்றேன். உங்களை நான் போரடிக்கின்றேனோ? இன்றோடு முடித்துக் கொண்டுவிடுகின்றேன். எனவே கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள்.

முடங்கிக் கிடந்த என்னை உயிர்ப்பிக்கின்றேன் என்று சொல்லி 2001 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஏதேனும் சொல்லுவார்கள்.  அறிக்கை விடுவார்கள். ஆனால், இது வரை முன்னேற்றம் எதுவும் இல்லை என்பதே உண்மை.  கோடிக்கணக்கில் பணம் கொட்டினார்கள்.

2004 ஆம் ஆண்டு எனது (இயற்கை) அன்னை தனது சுனாமி எனும் அவதாரத்தால் வெகுண்டு எழுந்தாள் இல்லையா? அப்போது கூட, என்னை ஒதுக்கி, யாரும் கொண்டாடவில்லை என்றாலும் கூட, நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், நான் ஆந்திராவில் 310 கிமீ தூரத்திற்கு பெட்டா கஞ்சம்(Pedda Ganjam) எனும் பகுதியிலிருந்து சென்னை வரை, என் அன்னையைக் கூட எதிர்த்துப்  பல மீனவர்களையும், குறிப்பாக வடக்கு மண்டலில் உள்ள கிராமங்களையும், காப்பாற்றிய வீராங்கனை, ஹீரோயின் நான் தெரியுமா?

ஆனால், சென்னையில் என்னால் அப்படிச் செய்ய முடியவில்லையே என் உடல் பாகத்தை நீங்கள்தான் நசுக்கி விட்டீர்களே. என் பெருமை அறிந்த டாக்டர் திரு இராமலிங்கேஸ்வர ராவ் அவர்கள், கிழக்குக் கடற்கரைப் பகுதியை ஆய்ந்து, சுனாமியில் நான் செய்த வீர சாகசத்தைப் பெருமைப்படுத்தி, எனது முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, என்னை வேதாரண்யம் வரை வளர்த்தால், நான் ஒரு பஃபர் சோன் (Buffer zone) ஆக்ச் செயல்பட்டு, எதிர்காலத்தில் தமிழ்நாடு பலவித இயற்கை ஆபத்திலிருந்து காக்கப்படும் என்று சொல்லிப் பெருமையைச் சொன்னார்.

நான் முன்பே சொன்னேன் இல்லையா தென்சென்னையில் நான் நல்ல வடிநீர்க்கால்வாய் என்று, தென்சென்னைப் புறநகர் பகுதியில் ஜி எஸ் டி சாலையின் கிழக்குப் பகுதியில் எனது பெரிய சகோதரிகளாகிய ஏரிகள் உள்ளன. மழைக்காலத்தில் இதில் வரும் அதிக அளவு நீர், எனது சிறு சகோதரிகள் கால்வாய்கள் மூலம் பள்ளிக்கரணை கைவேலியை வந்து சேரும்.

ராஜிவ் காந்தி சாலை அருகே/பழைய மகாபலிபுரம் சாலை, ஒக்கியம் மடு பகுதியின் தென்புறத்தில் தனியார் சிலர், 40 அடி அகலத்துக்கு சிமென்ட் சாலைகள் போட்டு, நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வடிகாலான ஒக்கியம் மடு பகுதியை, வன துறையிடம் ஒப்படைப்பதற்கு, பொதுப்பணி துறை தயங்கி வருகிறது. ஒக்கியம் மடுவை ஆக்கிரமித்துள்ள சாலையில், தனியார் கல்லூரி வாகனங்கள் நிற்கையில், அங்கு ஆக்கிரமிப்புக் கூடாது என்ற அறிவுப்பு வேறு வைத்துள்ளார்கள்.

      கைவேலியிலிருந்து என்னை வந்தடையும் நீர் என்னிலிருந்து சிறிது அடையாறுக்கும், மற்றொரு பகுதி முட்டுக்காடு வழியாகச் சென்று கடலில் சங்கமிக்கும்.  எவ்வளவு கன அடி தெரியுமா? வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி. ஆனால், இப்போது தென்சென்னைப் புறநகர் பகுதியை எனதன்னை பதம் பார்த்தாளே, எதனால்? அந்தப் பகுதியில் நீங்கள் எல்லோரும் எங்கள் மேல் ஆக்ரமித்து உங்கள் சுயநலத் தேவையைப் பூர்த்தி செய்ததனால். நானும் பேணப்படவில்லை. வெள்ள நீர் கடலில் கலப்பது பாதிக்கப்பட்டது. பல அடைப்புகளினால், தடுப்புகளினால். உங்கள் வீடுகளில் நுழைந்தாள்.

      இதைத் தடுக்கவும், நான் உடனடியாக நீரை வெளியேற்றி உங்களுக்கு உதவவும், ஒக்கியம் மடுவில் கிழக்குக் கடற்கரைச் சாலைவழியாக கடலில் சென்றடைய குறுக்குவெட்டுக் கால்வாய் அமைத்து 4,500 கன அடி நீர் வெளியேறும் வகையில் 2008 ல் திட்டமிடப்பட்டது நான் முன்னரே சொன்னேன் அல்லவா, ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் என்று அதன் கீழ், உங்கள் மத்திய அரசு 54 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால், அந்த வழியில் சில தனியார்கள், தீம்பார்க்கின் ஒரு பகுதி இருப்பதால், இந்தத் தனியார்களின் சுயநலத்தால், நிலம் ஆர்ஜிதம் செய்வதில் தடை ஏற்பட்டுக் கிடப்பில் போடப்பட்டது இந்தச் சிறப்பானத் திட்டம். இதற்கு உங்கள் அதிகாரிகள் பலர் உடந்தைகள். இதைப் பற்றி விவரித்தால் நான் கொந்தளித்துவிடுவேன் என்பதால் விவரிக்கவில்லை.

      இதன் விரிவுதான் முன்னரே சொன்ன 100 கோடி 2014 ஆம் ஆண்டில்.  அதுவும் கைவிடப்பட்டது.  நன்றாகக் கவனமாகக் கேளுங்கள் மக்களே. 2008, 2014 களில் கோடிகள். இதற்கிடையில் 2010ல் நடந்ததைக் கேளுங்கள். ஒருவேளை, நான் பொய் சொல்லுகின்றேனோ என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது பாருங்கள், அதற்காக உங்கள் அதிகாரிகள் விட்ட அறிக்கையை இதோ அப்படியே சுருக்கமாகச் சொல்லுகின்றேன். குறித்துக் கொள்ளுங்கள்.


“பொதுப் பணித்துறை சார்பில், மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளச் சேதங்களைத் தடுக்கும் வகையில் சென்னை நகரில் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பெரிய வடிகால்களை, சென்னை முழுவதும் உள்ள 12 வடி நிலங்களை வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய 4 பகுதிகளாகப் பிரித்து மழை நீர் வடிகால் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, ரூ.633 கோடியில் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தும் பணிகள், 2013-ம் ஆண்டில் நிறைவு பெறும். நிறைவு பெறும்போது, பெரும் மழைக் காலங்களில், சென்னை நகரில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை தவிர்க்கப்படும்.” என்று என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

“இதனடிப்படையில் இந்த 4 திட்டங்களுக்கும் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மூலம் மத்திய ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்ட ஆணையத்திடம் இருந்து ரூ.1447 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டது. பொதுப் பணித்துறையின் சார்பில் ரூ.633 கோடியும், சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.814 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” இதில் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு என்பதை நான் உங்களிடம் சொல்லவில்லை. சொல்லிப் பயனில்லை என்பதால்.

2013-ம் ஆண்டில் இப்பணிகள் முடிக்கப்பட்டு விடும். அதன் பின்னர் சென்னையில் மக்கள் சந்திக்கும் மழை நீர் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும்.” இதைக் கேட்டுச் சிரிக்கின்றீர்களா? அழுகின்றீர்களா? எனக்கு அழுகைதான் வருகின்றது.

தோல்வியாதி பரப்புபவளாகவும், சல்ஃபர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற மிக மோசமான வாயுக்களைக் கொண்டவளாகவும் உங்களால்தான் ஆக்கப்பட்டேன். 
2010 மத்திய அரசு 123 கோடி ஒதுக்கியுள்ளது, 2014 ல் முடிக்கும்படியாக என்று அதுவும் வெள்ள நீர் வடிவதற்கு. அடுத்து 2011 ல் 111.76  கோடி, 2010 ல் இதற்கான வேலை ஆரம்பிக்கப்பட்டு 2012 செப்டெம்பரில் முடியும் என்று. இவை தவிர எனது வடக்குப் பகுதியான கால்வாய் பகுதியில் 14.49 கோடி ரூபாய் ஒதுக்கி சுத்தம் செய்ய.  ஆனால், நான் தான் ஏற்கனவே பல நோய்கள் பரப்பும் துர்பாக்கியவதியாக்கப்பட்டுள்ளேனே. அதில் இறங்கி சுத்தப்படுத்தவோ, கரை உயர்த்தி எழுப்பவோ முடியவில்லை உங்கள் மக்களினால். ஏனென்றால் நான், தோல்வியாதி பரப்புபவளாகவும், சல்ஃபர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற மிக மோசமான வாயுக்களைக் கொண்டவளாகவும் உங்களால்தான் ஆக்கப்பட்டேன்.  போதுமா? நீங்கள் சுயநல வாதிகள். இன்னும் கேளுங்கள்

உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் பள்ளிக்கரணையில் எனது மிகப் பெரிய இயற்கைச் சகோதரி சதுப்புநிலம் இருக்கின்றாள் என்று. மற்றும் மற்றொரு சகோதரி கொடுங்கையூர் ஏரி. இவர்களது நிலை என்ன தெரியுமா?  உங்கள் நகர் குப்பைகள் எல்லாம் இவர்களை நிறைத்து அவர்களது அழகையும், பயனையும் இழந்து நிற்கதியாய் நிற்கின்றார்கள். மட்டுமல்ல இவர்கள் பக்கம் வருகின்ற நீங்கள் எல்லாம் மூக்கைப் பொத்திக் கொண்டு செல்கின்றீர்கள். ஹும் அவர்களது தவறா? அவர்களது அழகைக் கெடுத்து நாறச் செய்திருக்கின்றோமே என்ற குற்ற உணர்வு கூட இல்லையா உங்களுக்கு? உங்களுக்கு வெட்கமாக இல்லை உங்கள் மூக்கைப் பொத்திக் கொள்ள?

நான் ஓடும் பாதையில், வெட்டுவாண்கேணி மகாத்மா காந்திநகர் பகுதியில் என்னை கழிவுப்பகுதியாகவே ஆக்கிவிட்டார்கள் செப்டிக் லாரிக்காரர்கள். தெரியுமா? என்ன ஒரு கேவலமான செயல் நீங்கள் மனிதர்கள் செய்வது. உங்கள் கழிவுகளை உங்கள் மேல் பூசிக்கொள்ளுவீர்களா. என்னை எந்த அளவிற்குக் கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவிற்குக் கேவலப்படுத்தியுள்ளீர்கள். இன்னும் சொல்லுவதற்கு நிறையவே உள்ளது. இதற்கு முடிவில்லை.  தொடர்கதைதான்.  சுருக்கமாகச் சொன்னால் என்னை அந்த அளவிற்குப் பாழாக்கியுள்ளீர்கள்.

Image result for buckingham canal chennai

Image result for collector gajalakshmi
காஞ்சிபுரம் மாவட்டம் கலெக்டர் கஜலட்சுமி 

இன்று காலை என் தோழி கீதா சொன்னாள், “பக்கிங்ஹேம் உனக்கும் விடிவு காலம் வரலாம்” என்று.  காஞ்சிபுர மாவட்ட ஆட்சியாளர் கஜலட்சுமி அவர் பகுதியில் இருக்கும் எனது சகோதரி அடையாறின் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக இடித்துத் தள்ள ஆணை பிறப்பித்து இடித்தாராம். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இங்கு சென்னைக்கு வருவாரா அவர்? ஆனால், இங்கு சென்னையில், அரசாங்கமே என்னை ஆக்ரமித்துள்ளதே எம் ஆர் டி/பறக்கும் ரயில் என்று என்னைக் குறுக்கிச் சாக்கடையாக்கிவிட்டார்களே. அதை யாரால் என்ன செய்ய முடியும்? எப்படிப் படகு விடுவார்கள்? கஜலட்சுமி கொஞ்சம் என்னையும் வந்து சீர் செய்யுங்களேன்!

இந்த லட்சணத்தில் ஆந்திராவையும், தமிழகத்தையும் இணைக்கும் வகையில் காக்கிநாடாவில் இருந்து பாண்டிச்சேரி வரை என்மீது பெரிய படகுகள் வியாபாரத்திற்காகவும், உல்லாசத்திற்கும் செல்லுமாம்.  அதற்கான பணிகள் இந்த வருடம் சில மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு சோழிங்க நல்லூர் பகுதியில் என் மீது என் அழுக்கை அகற்றும் படலம் ஆரம்பித்து அதற்கும் கோடிகள் இறக்கியிருக்கின்றார்களாம். அதற்குள் என் அன்னைதான் ஒரு ஆட்டம் போட்டுவிட்டாளே! உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் உங்களில் நல்ல உள்ளங்கள் பலர் உதவியதை நினைத்து மகிழ்கின்றேன். 

மக்களே! ஒன்று மட்டும் குறித்துக் கொள்ளுங்கள். பேரிடர் பேரிடர் என்று உங்களுக்கு ஏற்பட்டதைச் சொல்லுகின்றீர்களே. என்னையும், எங்கள் குடும்பத்தையும் இத்தனை வருடங்களாக குப்பை, கழிவுநீர் கிடங்குகளாக்கி வைத்திருப்பதைப் பேரிடர் என்று ஏன் நான் சொல்லக் கூடாது? யோசியுங்கள். திருந்துங்கள்.  விழித்தெழுங்கள். “இத்தனைக் கோடிகள் எங்கு சென்றன? சரியானத் திட்டம் இல்லாததால் எங்கள் உயிர்கள் பல இறந்தனவே. பலர் நிர்கதியாகியுள்ளனரே. உங்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தலாமா” என்று கேளுங்கள்.


எங்களை நீங்கள் காப்பாற்றவில்லை என்றால், எங்கள் அன்னை அகோரத் தாண்டவம் ஆடும் சமயம் நாங்களும் அவளுடன் சேர்ந்து கோரத்தாண்டவம் ஆட வேண்டி வரும். எங்களைத் தடுக்க முடியாது உங்களால். உங்களைக் காப்பாற்ற இயலாது. எங்களால் உங்களுக்கு அழிவு நிச்சயம்.  இது எச்சரிக்கை! 

பின்குறிப்பு: உபரித்தகவல்  RecallPingale: Why a Chennai IAS officer’s story is going viral


  Image result for dr vijay pingale

இவர் டாக்டர் விஜய் பிங்களே. சென்னைக் கார்ப்பரேஷன் இணைகமிஷனர். நேர்மையான அதிகாரி, சென்னை சாலைகள், பாலங்கள் முறைகேடாக கப்பட்டுள்ளன, மழைநீர் வடியும் நிலையில் இல்லை என்பதை சொல்லி அதைக் கட்டிய கான்ட்ராக்டர்களின் பெயரை அறிவித்து, அவர்களைச் சரிசெய்யச் சொல்லி, இல்லை என்றால் ரூ 2 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று சொல்லி, மேலிடத்திற்கு ஒத்துழைக்காமல் இருந்ததால் , 3 நாட்களில் மாற்றப்பட்டார். - நன்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

படங்கள்” இணையம்


---கீதா



சனி, 12 டிசம்பர், 2015

எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய் - 2


ஹாங்க்...ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருகின்றேன் என்று சொன்னேன் அல்லவா?  எங்கு நிறுத்தினேன்? ம்ம்..உங்களுக்கு இப்போது நடந்த கொடுமையை நினைத்து மனது வருந்தினேன். என்னால் உதவ முடியாத அளவிற்கு நீங்கள் என்னை இப்படிக் குப்பைகளின், நோய்களின் இருப்பிடமாக்கி வைத்திருக்கின்றீர்களே என்று. என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய நீங்கள், அரசு எல்லோரும் நன்றாக இருங்கள்!

தொடர்கின்றேன். கேட்டுக் கொள்ளுங்கள். இப்போது என் சோகக் கதையைச் சொல்லிவரும் சமயம் ஒருவேளை நான் பொங்கி எழும் பகுதிகள் வரும் போது கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டலாம். எனக்கு மட்டுமில்லை உங்களுக்குமே கூட கோபம் வரலாம்.  மனம் வருந்த நேரிடலாம்.

நான் ஆரம்பத்தில் சொன்னேன் அல்லவா விஜயவாடாவரை வளர்ந்துள்ளேன் என்று.  அது மட்டுமல்ல நான் காக்கிநாடா அருகில் உள்ள பாண்டிச்சேரியின் யானம் பகுதியில் எனது மிக மூத்த சகோதரியான கோதாவரியுடன் கைகோர்த்து நீட்டி வளர்க்கப்பட்டேன். ஆங்காங்கே. விஜயவாடாவில் மற்றொரு சகோதரியான கிருஷ்ணாவுடனும் ஆங்காங்கே கைகோர்த்துள்ளேன். எனது பாதை காக்கிநாடாவில்/யானம் இப்படி ஆரம்பித்து, விஜயவாடா, தெனாலி, எல்லூர், நெல்லூர், கூடூர், சென்னை நகரம், சோழிங்கநல்லூர், முட்டுக்காடு, மஹாபலிபுரம், கல்பாக்கம், மரக்காணம் வரை வளர்ந்து வங்காளவிரிகுடாவில் இணைகின்றேன். இப்போது நினைத்துப் பாருங்கள் நான் எத்தகைய பெருமை உடையவள் என்று!

ஆங்கிலேயர்கள் இருந்தது வரை அவர்கள் சுயநலத்திற்காக என்று சொன்னாலும் நான் நன்றாகப் பேணப்பட்டேன். அதன் பின்னர் நான் கண்டுகொள்ளப்படவில்லையாதலால், 1965, 66, மற்றும் 76 களில் ஏற்பட்ட புயலில் நான் பாதிக்கப்பட்டேன். நான் தான் சீரழிந்துவிட்டேனே! அதன் பின் நான் ஒடுக்கப்பட்டேன். ஒதுக்கப்பட்டேன். உபயோகப்படுத்தவில்லை.  பேணவும் இல்லை. நீங்கள் எல்லோரும் என் மீது ஈவு இரக்கம் இல்லாமல் எல்லா குப்பைகளையும், தொழிற்சாலைக் கழிவுகளையும் கொட்டிக் குப்பை கொட்டும் கிடங்காக மாற்றினீர்கள். வாழ்க நலம்!

வட சென்னையில் உள்ள தெர்மல் பவர் ஸ்டேஷனிலிருந்து வெப்பமான கழிவு நீர், சாம்பல் உட்படக் கொட்டியதால், வடசென்னையில் என் உடல் மிக மிகக் கறுப்பாக மாறியது.  இப்போது நான் மலேரியா கொசுக்களின் இருப்பிடமாகி அந்த நோயைப் பரப்பும் துர்பாக்கியவதியாகி உள்ளேன். யாரால்? உங்களால்.  வெட்கித் தலைகுனியுங்கள்.

Image result for buckingham canal
The Government has said that it plans to nationalise the Buckingham Canal and make it a navigable waterway once more. This is an excellent idea and is to be welcomed. However, like many government plans, it may prove well nigh impossible to implement, for on the ground the canal has practically ceased to exist, particularly in the stretch through Chennai.This is not a new plan and time and again several such intentions have been aired only to be put back on the shelf. The same plan was announced in 2002 and there was no action after that.

உங்களுக்குத் தெரியுமா, சென்னையில் 12 சிறிய, சிறிய எனக்கு முளைத்தக் கைவிரல்கள்/நீர்ப் பிரி முகடுகள் இருப்பது? முன்பு ஒரு காலத்தில் சென்னை முழுவதுமே நிறைய என் குடும்பத்தார் இருந்தனர். ஆனால், இப்போது..ம்ம் அதைச் சொல்லிப் பயன் இல்லை. இப்போது உள்ளவை பற்றி மட்டும் சொல்லுகின்றேன். நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். 12 நீர்ப்பிரி முகடுகள். இவற்றில் 2,3 ஐத் தவிர மற்ற பெயர்கள் எல்லாம் கேட்டிருப்பீர்களா என்று தெரியவில்லை. ஹும் அவை எல்லாம் நல்ல நிலையில் இருந்திருந்தால் உங்களுக்கும் நினைவு இருக்கும். உங்களைப் பொருத்தவரை நாங்கள் குப்பைக்கிடங்கு. உங்களால் ஆக்ரமிக்கப்பட்டுக் குட்டிச் சுவராகி இருக்கும் போது உங்களுக்கு எப்படித் தெரிந்திருக்கும்.

1.   காப்டன் காட்டன் கால்வாய்
2.   கொளத்தூர் கால்வாய்
3.   விருகம்பாக்கம் கால்வாய்
4.   வேளச்சேரி கால்வாய்
5.   ஒட்டேரி கால்வாய்
6.   வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய்
7.   அடையார்
8.   கூவம்
9.   தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய்
10.  ராயபுரம் கால்வாய்
11.  மத்திய பக்கிங்ஹாம் கால்வாய்
12.  மாம்பலம்/நந்தனம் கால்வாய்

எனது கொள்ளளவு என்ன என்று தெரியுமா? 5,600 கன அடி நொடிக்கு ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது மழைக்காலங்களில் என்னால் 600 கன அடிதான் சுமந்து ஓட முடிகின்றது. பாருங்கள் என் நிலைமையை.  இதற்கு யார் காரணம் என்று இப்போதேனும் யோசியுங்கள். எனது கன அடியை 1000 த்திற்கு உயர்த்த வேண்டும் என்று சொல்லி, நீர்ப்பிரி முகடுகளில் குவிந்து கிடக்கும் சாக்கடைக் கழிவுகளையும் சுத்தப்படுத்தி, இவற்றின் கரைகள், எனது கரைகள் எல்லாவற்றையும் உறுதிப்படுத்தி, எங்களை எல்லாம் ஆழப்படுத்தி மழை நீரைச் சுமக்க உதவச் செய்யப்போவதாக மத்திய அரசு சொல்லத் தொடங்கியது எந்த வருடம் தெரியுமா? ஜனுவரி 1, 2001. ஆனால், என்ன நடந்தது இதுவரை?

இங்கு உங்களுக்கு ஒரு விசயத்தைச் சொல்லுகின்றேன். இது என்னைப் பற்றிய பெருமை என்று நினைக்க வேண்டாம். என்னால் ஏற்படும் நன்மையைப் பற்றி. என் தோழி கீதா, அவளது இளம் நிலை பொருளாதாரப் பட்டப்படிப்பின் போது, சென்னைக்கு ஒரு நுழைவுத் தேர்வு எழுத வர நேர்ந்ததில் என்னைப் பார்த்து விட்டு, என் பெயரைக் கேட்டுத் தான் மனதில் பதித்திருந்தவை எல்லாம்  கானல்நீராகியதை நினைத்து என்னைப் பார்த்து வருந்தி என்னுடன் அன்று தொடங்கிய நட்பு இதோ இன்றும் என் கரையோரம் நடைப்பயிற்சி செல்லும் போது என்னுடன் பேசிக் கொண்டே செல்வது வரை தொடர்ந்துள்ளது.

ஊருக்குச் சென்றவுடன், அவளது விருப்பப் பாடமாகிய விவசாய பொருளாதாரப் பாடத்தில், நீர் மேலாண்மை பற்றி ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதி சமர்ப்பிக்க விழைந்த போது சென்னையில் எனது முக்கியத்துவத்தைப் பற்றியும், நீர் மேலாண்மை பற்றியும் எடுத்துக் கொண்டு எழுதிய போது அவள் குறிப்பிட்ட வரிகள் இன்று மெய்யாகிவிட்டது. “பக்கிங்ஹாம் கால்வாயையும், அதனுடன் சேரும் சிறிய நீர் வடிகால்வாய்களையும்  பராமரித்து, அதை நீரோட்டம் மிக்கதாகச் செய்தால், பருவமழைக்காலத்தில் சென்னை வெள்ளத்திற்கு உட்படாமல், வெள்ள நீர் வடிகால்வாயாக அது உதவுவது மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் சென்னைக்கு அது பலவிதங்களில் உதவக் கூடும்” என்றும் என்னைப் பற்றிய பெருமையை எடுத்துரைத்த அந்தக் கட்டுரையை அவளது தனிப்பட்டக் காரணங்கள் சில பல என்று சமர்ப்பிக்க முடியாமல் போனது என்பது துரதிர்ஷ்டமே. இது நடந்த வருடம் 1982-83.

இதோ 2014 ஆம் வருடத்து அறிக்கையில். தென்சென்னையில் நான் நல்ல வடிநீர் கால்வாய், என்னிடமிருந்து ஒரு குறுக்குக் கால்வாயை, ஒக்கியம் மடு எனும் இடத்திலிருந்து கடலில் கலப்பதற்கு அமைப்பதற்காக ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் (JNNURM) கீழ், 100 கோடி ரூபாய் அளவில் தொடங்கப்பட்டு கைவிடப்பட்டது. பாருங்கள் என் கதையை. அந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால், நொடிக்கு 3,500 கன அடி வெள்ள நீரை, தென்சென்னை மற்றும் சுற்றுப்புறப்பகுதியிலிருந்து நான் வெளியேற்றியிருப்பேன்.

வெள்ள நீர் பதிப்புத் தடுப்புத் திட்டம் தவறாகக் கையாளப்பட்டதாலும், இந்தத் திட்டம் தொடங்குவதற்குக் காலதாமதம் ஆனதாலும் கைவிடப்பட்டது.  காரணம் தனியார்கள் சிலரின் சுயநலத்திற்காகக் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இதற்கு, பொதுப்பணி துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாகச் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டும் எழுந்ததால்.

இப்படிப் பல திட்டங்கள் கோடிகள் விழுங்கி.... இந்தத் திட்டம் மட்டுமல்ல, நான் பள்ளிக்கரணை சதுப்புநிலத்திலும் கூட கைகோர்க்கும் திட்டம் நிறைவேறியிருந்தால், நான் பார்த்து, பிறந்து, வளர்ந்த என் மக்கள், சென்ற வாரம், என்னால் உதவ முடியாத இயலாமையில், என் கண் முன்னே அடித்துச் செல்லப்பட்டதைப் பார்த்த போது என் மனம் நொந்துவிட்டது. இன்னும் தீரவில்லை என் கண்ணீர். ம்ம்ம் என்னால் இப்போதுத் தொடர இயலவில்லை. மனம் நொந்துகிடக்கின்றது. என்னை என் துக்கம் தீர அழ விடுங்கள்....
The CGWB studies have pointed out the contamination of groundwater along the Buckingham Canal and the ‘adverse impact on ground water regime’. Photo: M. Karunakaran
The CGWB studies have pointed out the contamination of groundwater along the Buckingham Canal and the ‘adverse impact on ground water regime’.  நன்றி த ஹிந்து.

உங்களாலும், அரசின் மெத்தனத்தினாலும், சட்டம் அமலாக்கம் கடுமையாக இல்லாததனாலும் நடக்கும் சுற்றுப்புறச்சூழல் கொடுமையும், உயிரழப்புகளையும் பாருங்கள்...இனியாவது திருந்துங்கள்..


தொடர்கின்றேன்..


--கீதா

படங்கள் : இணையத்திலிருந்து

ஆதாரங்கள் : பல வருடங்களாக வெளி வந்த அறிக்கைகள், செய்திகள்

புதன், 9 டிசம்பர், 2015

எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்

எப்படி இருந்த நான்

நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம் என்றவுடன் இங்கிலாந்து  ராணியின் அரண்மனை என்று நினைத்துவிடுவீர்கள்?! இதுதான் மக்களாகிய உங்கள் மனது. என்னை மறந்திருப்பீர்கள்.  மறந்திருப்பீர்கள் என்பதை விட உங்களில் எத்தனைபேர் என்னைப் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. பரவாயில்லை. போகட்டும். இப்போதாவது, நான் முழுவதுமாய் மரணமடைந்து, மறக்கப்பட்டு, உருமாறும்  முன், பதிய விழையும் எனது கதையைப் படித்துவிடுங்கள். உங்களுடன் மனம் விட்டுப் பேசுகின்றேன்.

      ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது, 1806 ல், சென்னையின் எண்ணூரிலிருந்து, வங்காளவிரிகுடா கடலிலிருந்து உப்பு நீர்க்கால்வாயாக, ஆங்கிலேயர்களால், சோதனைக் குழாய் குழந்தை போல நான் பிறந்து, சில தூரம் வளர்க்கப்பட்டேன். அப்போது எனக்கு வேறு பெயர்.  அப்பெயரிலேயே நான் புலிக்காட் ஏரி வரை வளர்ந்தேன். அதன் பின் சென்னை மாகாணத்து அரசின் வளர்ப்பினால் நான் என் மேற்பகுதியில் (வடக்கு) கிருஷ்ணா நதியின் ஓரமாக, ஆந்திராவின் விஜயவாடாவரையும், என் கீழ்ப்பகுதியில் (தெற்கு) மரக்காணம் வரையும், வங்காளவிரிகுடாவுடன் இணைக்கப்பட்டு, நன்றாக நீண்டு 315 கிமீ வளர்ந்தேன்.
 
அடையார் ஆறு - நம்ப முடிகின்றதா? - நன்றி: த ஹிந்து
அடையார் ஆறு - பார்த்து மகிழ்ந்து கொள்ளுங்கள். இதனுடன் ஒரு காலத்தில்   பக்கிங்ஹாம் இணைந்திருந்தது.

1877, 78 களில் மிகப் பெரிய அளவில் தென்னிந்தியா வறட்சியிலும், பஞ்சத்திற்கும் உட்பட்டதைக் கண்டேன். சென்னையில் இருந்த மக்கள் பலரும் மடிந்தனர். அவர்களுக்கு உதவ வேண்டி அப்போது சென்னை மாகாணத்தின் கவர்னரின் (பக்கிங்காம்) ஆணையால் எனக்குக் கைகள் 8 கிமீ தூரம் முளைத்தன. இயற்கையாய் பிறந்த எனது மூதாதைய மூத்த சகோதரிகளாகிய அடையார், கூவத்துடன்  மகிழ்வுடன் கை கோர்த்தேன். அப்படித்தான் 1878ல் பக்கிங்ஹாம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டேன். 8 கிமீ பின்னர் மேலும் பல கிமீட்டராக சென்னைக்குள் மட்டுமே, அடையாருடனும், கூவத்துடனும் கை கோர்த்து நீண்டு வளர்ந்தேன்.

ஒரு வேளை பக்கிங்ஹாம் என்ற ஆங்கிலேயப் பெயருடன் நான் இருப்பதால் ஆங்கிலேயரை விரட்டியதைப் போல் என்னையும் மறந்து விட்டீர்களோ? ஆங்கிலேயப் பெயர்தான் என்றாலும் நானும் உங்களுடன் இந்த மண்ணில் பிறந்தவள்தானே! நான் எவ்வளவு இளமையாகப் புத்துணர்வோடு பிரவாகிக்கித்தேன் என்பதை என் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். செழுமையாக வளர்ந்தேன். பலருக்கும் உதவியாக இருந்தேன்.

நான் அவர்களின் சரக்குகளை ஏற்றி வரும் பெரிய படகுகளின் போக்குவரத்திற்கும், பிற   போக்குவரத்திற்கும் உதவினேன் என்றால் நீங்கள் நம்புவீர்களா?  நம்பித்தான் ஆகவேண்டும். நான் வரலாற்றில் இடம் பெற்ற மிகப் பழமை வாய்ந்தவள் என்பதால் சாட்சிகள் உண்டு. வரலாற்றில் இடம் பெற்றவளாக இருந்தாலும் உங்கள் பலரின் மனதிலிருந்து மறைந்து விட்டதால் உங்களுக்கு நம்பிக்கை வராமல் போகலாம்.

ஏனென்றால், நீங்கள் படிக்கும் காலத்தில் பூகோள வரைபடத்தில் பார்த்த எனது மூதாதையர்கள் பலரின் ஆயுளைக் கொஞ்சம் கொஞ்சமாக முடித்துவிட்டு அவர்களின் மேல்தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். அதுபோன்று, நானும் மடியும் நாள் வெகுதூரத்தில் இல்லையோ என்று தோன்றத் தொடங்கியதால்தான் இந்த வருத்தம். இப்போது ஏற்பட்ட வெள்ளத்தினால் அல்லல்படும் உங்களைக் காணும் போது, என்னைப் பாதுகாத்து, பேணி வளர்த்திருந்தீர்கள் என்றால், நான் உங்களை எல்லாம் காப்பாற்றி இருந்திருக்கலாமே என்று மனம் வருந்தித் துடிக்கின்றேன்.

பக்கிங்கஹாம் - விஜயவாடா. நன்றி: விக்கி
Buckingham Canal, Andhra Pradesh
ஆந்திராவில் உள்ள பகுதி

உங்களிடம் சொன்னால் ஒருவேளை நான் பழைய புத்துணர்வு பெற்று இளமையைப் பெறுவேனோ என்ற ஏக்கத்தில், எனது மேற்பகுதி, சென்னைக்கு வெளியே இருக்கும் பகுதி நன்றாக இருக்கும் போது, இப்படிச் சென்னையிலும், எனது கீழ்ப்பகுதியிலும், நன்மைகள் பல செய்த நான் எப்படி உருக்குலைந்தேன், என் உயிரைக் காப்பாற்றுகின்றேன் என்று சொல்லி என் உயிரை ஊசலாடவிட்டிருப்பதையும் சொல்ல நினைக்கின்றேன். ஆனால் பாருங்கள், இப்போதைய மழையினால் நான் சிறிது உயிர் பெற்றாலும், என்னால் ஓட முடியாத அளவிற்குக் குப்பையினாலும், அழுக்கினாலும், உங்களின் கழிவுநீரினாலும் அடைந்துள்ளதால் மூச்சுத் திணறுகின்றது இப்போது. எனவே, என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருகின்றேன். அதுவரை சற்றுப் பொருத்திருங்கள். என் கதையைக் கேட்கப் பொருத்திருப்பீர்கள்தானே...தொடர்கின்றேன்

இப்படியானேன் ....பக்கிங்ஹாம் கால்வாய்

--கீதா

படங்கள் : இணையத்திலிருந்து

பின் குறிப்பு : நீர்வழிச் சாலை- நீர் மேலாண்மை குறித்துச் சகோதரர் செந்தில் அவர்களது சுட்டி http://senthilmsp.blogspot.com/2015/12/1.html


சனி, 5 டிசம்பர், 2015

லெப்டோஸ்பைரோசிஸ்-ராட் ஃபீவர்/எலிக்காய்ச்சல் - அரசிற்கும், மக்களுக்கும்....


ஒவ்வொரு மழையின் போதும்/பருவமழையின் போதும் பரவும்  லெப்டோஸ்பைரோசிஸ் அதாவது எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படுவதுண்டு. ஆனால், ஏனோ அதிகம் இதுபற்றிப் பேசப்படுவதில்லை.  இப்போது பருவ மழையின் வெள்ளத்தில் சென்னை மிதப்பதால், தண்ணீரில் பலரும் சிக்க நேர்ந்துள்ளதால் இந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. இதற்கான பரிசோதனைகள் ஒரு சில தனியார் பரிசோதனைக் கூடங்களில் மட்டுமே செய்யப்படுகின்றது. சமீபத்தில் டெங்குக் காய்ச்சலைக் கண்டறியும் எலிசா சோதனை கூட சரியாகச் செய்யப்படவில்லை என்றும், செய்வதில்லை என்றும் கூட சொல்லப்பட்டது.

எது எப்படியோ, இப்போது டெங்குவிற்கும் மற்றும் அதிகமாகப் பேசப்படாத எலிக்காய்ச்சலுக்கும் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் தயவாய் தயாராய் இருங்கள். மக்களும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகும்.

லெப்டோஸ்பைரோசிஸ்: இது மனிதர்களையும், விலங்குகளையும் தொற்றும் நோய். Zoonotic infection.  இந்தத் தொற்று, விலங்குகளிடமிருந்து, குறிப்பாக எலிகள், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள், தெரு நாய்கள் இவற்றின் சிறுநீரினாலும், இவற்றின் சிறுநீரும், கழிவுநீரும்/சாக்கடைத் தண்ணீரும் கலந்து வரும் நீரினாலும் மக்களுக்குத் தொற்ற வாய்ப்புள்ளது. 

மனிதர்களுக்கு வெட்டுக்காயங்கள், புண்கள், கண்கள் வழி இந்தத் தொற்று பரவ வாய்ப்புள்ளது. மனிதனிடமிருந்து மனிதனுக்கு இந்தத் தொற்று பரவுவது அரிது என்று சொல்லப்பட்டாலும் தொற்று ஏற்பட்ட மனிதர்களின் சிறுநீரினுடன் தொற்று/தொடர்பு (மிதித்தல் போன்றவை குறிப்பாக கழிவறையில்) ஏற்பட்டால் தொற்று ஏற்பட/பரவ வாய்ப்புண்டு.

அதுவும் இப்போது பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும், கழிவுகள் கலந்த நீர் தேக்கத்தினாலும், சில இடங்களில் முதல் மழையில் பெய்த நீரே முழுவதும்  வடியாத நிலையில், இப்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தின் நீர்த்தேக்கமும் சேர்ந்து வடிவதில் தாமதம் ஏற்படுவதாலும், இந்தத் தொற்று ஏற்பட/பரவ வாய்ப்புள்ளது.

    அறிகுறிகள் : இதன் அறிகுறிகள் பல தொற்றுகளின் அறிகுறிகளை ஒத்து இருக்கும். காய்ச்சல், அதிகமான தலைவலி, சோர்வு, உடல் வலி, குளிர், கேஸ்ட்ரோ இன்டெஸ்டைனல் பாதிப்பு, பசியின்மையுடன் மேலும் சில அறிகுறிகள்..தொடரும் அதிகமான ஜுரம், மூட்டுவலி, வாந்திவருவது போன்ற உணர்வு, தண்ணீர் அதிகமாக குடிப்பது, உடல் இயக்க சோர்வு..

இந்தத் தொற்று இரத்தத்திலும், லிம்ப் நோட்களிலும்/நிணநீர்க்கணு, சிறுநீரகத்திலும், கணையத்திலும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலசமயம் இதற்கான அறிகுறிகள் இருப்பதில்லை அல்லது தாமதமாகத் தோன்றலாம். இது சரிவரக் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்றால் பாதிப்பு ஏற்படலாம்.

 இந்தக் காய்ச்சலைப் பொதுவாக மருத்துவர்கள் கண்டறிவதில்லை என்று சொல்லப்படுகின்றது. ஏனென்றால், இந்தக் காய்ச்சல் டெங்கு, மலேரியா, டைஃபாய்ட், வைரல் ஜுரம் போன்று ஒத்த அறிகுறிகளை உடையதால், மருத்துவர்கள் இவற்றிற்கான சோதனைகளைத்தான் முதலில் மேற்கொள்ள பரிந்துரைக்கின்றார்கள். (1 ½ வருடங்களுக்கு முன் எனது மகனுக்கு மழைக்காலத்தில் நேர்ந்த அனுபவமும் அதே. மகன் கால்நடைமருத்துவனாக இருப்பதால் தனக்கு ஏற்பட்ட அறிகுறிகளையும், சிறுநீர் பரிசோதனையின் முடிவுகளை வைத்தும் அறிந்து கொண்டு லெப்டோஸ்பைரோசிஸ்/எலிக்காய்ச்சலுக்கான சோதனை செய்து கொண்டான். முடிவுகளும் அதை உறுதிப்படுத்தியது. பின்னர் அதற்கான ஆண்டிபயாட்டிக் எடுத்துக் கொண்டாலும் ஒரு மாதமாகியது முழுவதும் குணமாவதற்கு.)

     எனவே, அரசும் மக்களும் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒரு வேளை ஜுரம் குறையவில்லை என்றால், மருத்துவர், மலேரியா, டெங்கு, டைஃபாய்ட் போன்றவற்றிற்கான சோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைத்தால், மேற்சொன்ன சோதனைகளுடன் எலிக்காய்ச்சலுக்கான சோதனையையும் மேற்கொள்வது நல்லது. முதலிலேயே அறிந்து கொகொண்டுவிட்டால், அதற்கான ஆண்டிபயாட்டிக்ஸ் எடுத்துக் கொண்டு எளிதில், விரைவில் குணமடையலாம். இது பயமுறுத்துவதற்கு அல்ல. ஒரு விழிப்புணர்வுடன் இருப்பதற்காக நல்ல நோக்கத்துடன் சொல்லப்படுவதே.

---கீதா---

புதன், 2 டிசம்பர், 2015

வரலாற்றுச் சான்றுகளாக மாறிய பேசும் (புகைப்) படங்கள் - 2

சென்ற இடுகையின் தொடர்ச்சி.....

புகைப்படங்களில் வேதனை தரும் ஒன்றும் கூடவே அவ்வேதனையைச் சிறிதளவு குறைக்கவைக்கும் வேறு ஒன்றும்தான் ஆஃப்கானிஸ்தான் அழகியான பீபி ஆயிஷாவினுடைய புகைப்படங்கள். 

 
ஆயிஷா

தாலிபானை தன் உயிரைப் போல் நேசிக்கும் கணவன் தன் மனைவி பீபி ஆயிஷாவை ஒரு மனித ஜென்மம் என்று கூட நினைக்காமல் தினமும் துன்புறுத்தி இருக்கிறார். அதைத் தாங்க முடியாததால் ஆயிஷா ஒருநாள் வீட்டை விட்டே ஓடிவிட்டார்.  கணவனும் அவர் நண்பர்களும் ஆயிஷாவைத் தேடிக் கண்டுபிடித்து தாலிபான் நீதிமன்றத்தில் நிறுத்த, கணவனுக்கும் அவரதுக் குடும்பத்திற்கும் அவமானம் ஏற்படுத்திய பீபி ஆயிஷாவின் மூக்கு மற்றும் காதுகளை அறுத்தெறிய வேண்டும் என்று தாலிபான் நீதிமன்றம் தீர்ப்பளித்தும்விட்டது. கதறி அழும் ஆயிஷாவை ஓரிரவு அடுத்திருந்த மலைமேல் இழுத்துச் சென்று மூக்கையும், காதுகளையும் அறுத்தெறிந்தே விட்டார்கள் அவரது கணவனும் அவரது நண்பர்களும். [புராணகாலத்தில்(!?) லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கையும் முலைகளையும் அரிந்தது நினைவுக்கு வருகின்றது.  அதற்குப் பழிவாங்கத்தான் இராவணன் சீதையைச் சிறையெடுத்து அதன் தொடர்ச்சியாக ராம ராவண யுத்தமே உண்டானது என்று சொல்லத் தைரியமுள்ள தமிழர்களின் எண்ணிக்கை என்னவோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டேதான் வருகின்றது.  பலருக்கும் பல நீதி நிலவும் நம் நாட்டில் (தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் என்றழைக்கப்படும் ராட்சசர்கள்!-இப்பொய்களை எல்லாம் திராவிடர்களான நாமும் எவ்வளவோ சொல்லியும் பொய்யாக்க முடியவில்லை!-) அசுரப் பெண்ணான சூர்ப்பனையின் மூக்கு அழியப்படவேண்டியதே என்று வாதிட்டு வட இந்திய ராம ஆராதகர்கள் வென்றே விட்டார்கள், அன்றும் இன்றும் மதமும் மத நூல்களும் பெண்களுக்கு எதிரான அநீதியை அனுமதித்தது என்று சொல்வதைவிட ஆண்களின் ஆளுமை மற்றும் சுகத்திற்காக ஆண்கள் அவற்றில் எழுதிச் சேர்த்த மத நிபந்தனைகள்தான் பெண்களுக்கு எதிரான இது போன்ற அநீதிகளையும் அக்ரமங்களையும் செய்யவைக்கின்றது என்பதுதான் உண்மை.] 

“ஆஃப்கானிஸ்தானை விட்டு தப்பிப் போகும் பெண்களுக்கு கிடைக்கும் தண்டனை” என்ற பெயரில் எழுதப்பட்ட செய்தியும், அவரது மூக்கில்லா புகைப்படமும் 2010 ஆம் வருடம் டைம்ஸ் இதழில் வெளிவந்ததைப் பார்க்க நேரிட்ட சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் ஆயிஷாவை அமெரிக்காவிற்குக் கொண்டு சென்று ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து அவர் இழந்த மூக்கையும், காதுகளையும் மீண்டும் பெறச் செய்ய உதவினார்கள்.  பெண்கள் தாலிபானில் படும் துயரைப் படம் பிடித்துக் காட்டிய புகைப்படம் இது.  இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக மலாலாவை தாலிபானின் துப்பாக்கிக்கு அஞ்சாமல், “காலியான வகுப்பறைகளும், பயந்து வாழும் குழந்தைப் பருவமும் இனியேனும் இல்லாதாகி, எல்லோரும் குறிப்பாகப் பெண்கள் கல்வி கற்கும் காலம் இனியேனும் வரட்டும்” என்று பேச வைத்திருக்கலாம்.

பீபி ஆயிஷாவுக்கும், கிங்க் ஃபுக்குக்கும் அவர்களைப் படம் பிடித்தவர்கள் செய்த உதவியாலும் அவர்களைப் பற்றி கேட்க நேர்ந்தவர்களும், கண்டவர்களும் செய்த உதவிகளால் அவர்கள் இருவரும் இப்போது சாதாரணப் பெண்களைப் போல் வாழ்கிறார்கள் என்ற நிம்மதி நமக்கு. 

Image result for kevin carter pictures
கெவின் கார்ட்டர். )இவரைப் பற்றிவலிப்போக்கன் அவர்களும் தன் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்

ஆனால் 1993 மார்ச் 23 ஆம் தேதி எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்திலுள்ள ஒரு பெண்ணுக்கு(?!) என்ன நேர்ந்தது என்று தெரியாமல் போய்விட்டது. கலவரத்தால் நேர்ந்த பட்டினியைப் போக்க தென்ஆப்பிரிக்காவிலிருந்து உணவுப் பொட்டலங்களுடன் சூடான் நாட்டை நோக்கி கிளம்பிய விமானத்தில் கெவின் கார்ட்டர் எனும் புகைப்பட நிபுணரும் உடன் ஏறினார்.  

அப்போது பல வித தொற்று நோய்கள் படர்ந்து கொண்டிருந்த அவ்விடத்தில் 30 நிமிடம் மட்டுமே விமானம் நிறுத்தப்படும் என்பதால் கெவிந் கார்ட்டர் அயோத்  எனும் அவ்விடத்தில் விமானத்திலிருந்து இறங்கி கொஞ்சதூரம் நடந்ததும் அவர் கண்ணில் பட்ட ஒரு காட்சியைக் கண்டு அதிர்ந்து போனார். 


உணவுப் பொட்டலங்களை வாங்க விமனத்தருகே ஓடும் பெண்கள்! ஓட முடியாத, எலும்பும் தோலுமான, நடக்கக் கூட முடியாத ஒரு பெண் (?!) குப்புறப்படுத்து தன் இயலாமையை எண்ணி கதறி அழக்கூடிய சக்தி கூட இல்லாமல் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்க, திடீரென அவளருகே பறந்து வந்து அமர்ந்தது ஒரு கழுகு! அவளைக் கொத்தித் தின்றே தன் பசியாற்றக் காத்திருக்கத் தொடங்கியது.  கெவின் கார்ட்டர் சிறகு விரித்து நிற்கும் அந்தக் கழுகையும் பெண்ணையும் சேர்த்து புகைப்படம் எடுக்க சிறிது நேரம் காத்திருந்தார்.  

20நிமிடங்கள் கடந்தன.  பெண் அசையாததால். கழுகும் அசையவில்லை. அதன் சிறகையும் விரிக்கவில்லை.  விமானம் புறப்படும் நேரம் நெருங்கியதால் கெவின் கார்ட்டர் கழுகையும் பெண்ணையும் சேர்த்துப் புகைப்படம் எடுத்து, அக்கழுகை அங்கிருந்து விரட்டிய பின் விமானம் ஏறி தென்னாப்பிரிக்கா வந்து சேர்ந்துவிட்டார்.  1993 மார்ச் 26 ஆம் தேதி நியூயார்க் டைம்சில் வெளியிட்ட அப்படம் உலகை உலுக்கியது.  1994 ஆம் ஆண்டு அப்புகைப்பட்த்திற்குப் புலிட்சர் பரிசும் கிடைத்த்து.  

பலரும் கார்ட்டரைப் பாராட்டினார்.  ஆனால், சிலர் அப்படத்தில் ஒரு கழுகல்ல, வேறு ஒரு கழுகும் இருக்கிறது அதுதான் கெவின் கார்ட்டர் என்று சொல்ல அதைக் கேட்ட கார்ட்டர் மனம் உடைந்து தன்னால் அப்பெண்ணைக் காப்பாற்றி ஒரு பாதுகாப்பான இட்த்தில் சேர்க்க இயலாமல் போயிற்றே என்று வருந்தி 1994 ஜூலை 27 ஆம் தேதி தன் 34 ஆம் வயதில் விஷப் புகையைச் சுவாசித்து தற்கொலையே செய்து கொண்டார்.  அப்படி இந்தப் புகைப்படம் பசியின்றி வாழ்வோருக்கு பசியின் கொடுமையை விளக்கி அதைப் போக்க எல்லோரும் அவரவரால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் எனும் அவசியத்தை உணர்த்துவதோடு நில்லாமல் உயிரும் உணர்வும் இல்லாத கேமரா கண்களுக்கு அப்பாலிருந்துப் படம் பிடிப்பவர்கள் இவ்விரண்டும் மனிதர்கள் ஆதலால், மனிதாபிமானத்தை மறந்துவிடக் கூடாது எனும் உண்மையையும் உணர்த்துகின்றது.


அது போல் தமிழ் ஈழத்திற்காக வாதிட்டு, போரிட்டு உயிர் நீத்த ஈழத் தமிழர்களின் போராட்டம் இப்படி முடிவுற்றது எனச் சொல்லும் இப்படங்கள் மனதில் முள்ளாய் குத்துகிறது.  நம் கண்களில் கண்ணீரைக் க்சிய வைக்கும் 

இப்படங்கள் எதிரிகளைக் கொல்வதோடு நில்லாமல் அவர்களதுக் குழந்தைகளையும் கொன்று குவிக்கத் தூண்டிய இலங்கை அரசின், மனிதாபிமானம் இல்லாமையை எண்ணி நம்மைக் கொந்தளிக்க வைக்கிறது.  இவ் ஈனச் செயலைக் கண்டித்து எதிர்ப்புகள் தேவையான அளவு எங்கிருந்தும் எழவில்லையே என்ற ஏக்கம் மனதை வாட்டுகிறது.  உலகின் பல பாகங்களுக்குச் சிதறி ஓடிப் பிறந்த மண்ணில் வாழ முடியாத வேதனையுடன் அங்கெல்லாம் அந்நியர்களாய் வாழும் நம் தமிழ் உறவுகள் ஒற்றுமையாய் சாதியின்றி ஓரினமாம் தமிழினமாய் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று தமிழையும் தமிழ்பண்பாட்டையும் வளர்த்து அங்கு வாழ எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்குத் துணையாகட்டும் என்று வேண்டிக் கொள்ளவும் வைக்கிறது. 


இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் முடியும்.

படங்கள் இணையத்திலிருந்து...