என் துக்கம் தீர அழுதுவிட்டு வருகின்றேன் என்றேன் இல்லையா. எத்தனை அழுதாலும் தீரப்போவதில்லை. சரி என் கதைக்கு வருகின்றேன். உங்களை நான் போரடிக்கின்றேனோ? இன்றோடு முடித்துக் கொண்டுவிடுகின்றேன். எனவே கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள்.
முடங்கிக் கிடந்த என்னை உயிர்ப்பிக்கின்றேன் என்று சொல்லி 2001 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஏதேனும் சொல்லுவார்கள். அறிக்கை விடுவார்கள். ஆனால், இது வரை முன்னேற்றம் எதுவும் இல்லை என்பதே உண்மை. கோடிக்கணக்கில் பணம் கொட்டினார்கள்.
2004 ஆம் ஆண்டு எனது (இயற்கை) அன்னை தனது சுனாமி எனும் அவதாரத்தால் வெகுண்டு எழுந்தாள் இல்லையா? அப்போது கூட, என்னை ஒதுக்கி, யாரும் கொண்டாடவில்லை என்றாலும் கூட, நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், நான் ஆந்திராவில் 310 கிமீ தூரத்திற்கு பெட்டா கஞ்சம்(Pedda Ganjam) எனும் பகுதியிலிருந்து சென்னை வரை, என் அன்னையைக் கூட எதிர்த்துப் பல மீனவர்களையும், குறிப்பாக வடக்கு மண்டலில் உள்ள கிராமங்களையும், காப்பாற்றிய வீராங்கனை, ஹீரோயின் நான் தெரியுமா?
ஆனால், சென்னையில் என்னால் அப்படிச் செய்ய முடியவில்லையே என் உடல் பாகத்தை நீங்கள்தான் நசுக்கி விட்டீர்களே. என் பெருமை அறிந்த டாக்டர் திரு இராமலிங்கேஸ்வர ராவ் அவர்கள், கிழக்குக் கடற்கரைப் பகுதியை ஆய்ந்து, சுனாமியில் நான் செய்த வீர சாகசத்தைப் பெருமைப்படுத்தி, எனது முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, என்னை வேதாரண்யம் வரை வளர்த்தால், நான் ஒரு பஃபர் சோன் (Buffer zone) ஆக்ச் செயல்பட்டு, எதிர்காலத்தில் தமிழ்நாடு பலவித இயற்கை ஆபத்திலிருந்து காக்கப்படும் என்று சொல்லிப் பெருமையைச் சொன்னார்.
நான் முன்பே சொன்னேன் இல்லையா தென்சென்னையில் நான் நல்ல வடிநீர்க்கால்வாய் என்று, தென்சென்னைப் புறநகர் பகுதியில் ஜி எஸ் டி சாலையின் கிழக்குப் பகுதியில் எனது பெரிய சகோதரிகளாகிய ஏரிகள் உள்ளன. மழைக்காலத்தில் இதில் வரும் அதிக அளவு நீர், எனது சிறு சகோதரிகள் கால்வாய்கள் மூலம் பள்ளிக்கரணை கைவேலியை வந்து சேரும்.
ராஜிவ் காந்தி சாலை அருகே/பழைய மகாபலிபுரம் சாலை, ஒக்கியம் மடு பகுதியின் தென்புறத்தில் தனியார் சிலர், 40 அடி அகலத்துக்கு சிமென்ட் சாலைகள் போட்டு, நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வடிகாலான ஒக்கியம் மடு பகுதியை, வன துறையிடம் ஒப்படைப்பதற்கு, பொதுப்பணி துறை தயங்கி வருகிறது. ஒக்கியம் மடுவை ஆக்கிரமித்துள்ள சாலையில், தனியார் கல்லூரி வாகனங்கள் நிற்கையில், அங்கு ஆக்கிரமிப்புக் கூடாது என்ற அறிவுப்பு வேறு வைத்துள்ளார்கள்.
கைவேலியிலிருந்து என்னை வந்தடையும் நீர் என்னிலிருந்து சிறிது அடையாறுக்கும், மற்றொரு பகுதி முட்டுக்காடு வழியாகச் சென்று கடலில் சங்கமிக்கும். எவ்வளவு கன அடி தெரியுமா? வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி. ஆனால், இப்போது தென்சென்னைப் புறநகர் பகுதியை எனதன்னை பதம் பார்த்தாளே, எதனால்? அந்தப் பகுதியில் நீங்கள் எல்லோரும் எங்கள் மேல் ஆக்ரமித்து உங்கள் சுயநலத் தேவையைப் பூர்த்தி செய்ததனால். நானும் பேணப்படவில்லை. வெள்ள நீர் கடலில் கலப்பது பாதிக்கப்பட்டது. பல அடைப்புகளினால், தடுப்புகளினால். உங்கள் வீடுகளில் நுழைந்தாள்.
இதைத் தடுக்கவும், நான் உடனடியாக நீரை வெளியேற்றி உங்களுக்கு உதவவும், ஒக்கியம் மடுவில் கிழக்குக் கடற்கரைச் சாலைவழியாக கடலில் சென்றடைய குறுக்குவெட்டுக் கால்வாய் அமைத்து 4,500 கன அடி நீர் வெளியேறும் வகையில் 2008 ல் திட்டமிடப்பட்டது நான் முன்னரே சொன்னேன் அல்லவா, ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் என்று அதன் கீழ், உங்கள் மத்திய அரசு 54 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால், அந்த வழியில் சில தனியார்கள், தீம்பார்க்கின் ஒரு பகுதி இருப்பதால், இந்தத் தனியார்களின் சுயநலத்தால், நிலம் ஆர்ஜிதம் செய்வதில் தடை ஏற்பட்டுக் கிடப்பில் போடப்பட்டது இந்தச் சிறப்பானத் திட்டம். இதற்கு உங்கள் அதிகாரிகள் பலர் உடந்தைகள். இதைப் பற்றி விவரித்தால் நான் கொந்தளித்துவிடுவேன் என்பதால் விவரிக்கவில்லை.
இதன் விரிவுதான் முன்னரே சொன்ன 100 கோடி 2014 ஆம் ஆண்டில். அதுவும் கைவிடப்பட்டது. நன்றாகக் கவனமாகக் கேளுங்கள் மக்களே. 2008, 2014 களில் கோடிகள். இதற்கிடையில் 2010ல் நடந்ததைக் கேளுங்கள். ஒருவேளை, நான் பொய் சொல்லுகின்றேனோ என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது பாருங்கள், அதற்காக உங்கள் அதிகாரிகள் விட்ட அறிக்கையை இதோ அப்படியே சுருக்கமாகச் சொல்லுகின்றேன். குறித்துக் கொள்ளுங்கள்.
“பொதுப் பணித்துறை சார்பில், மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளச் சேதங்களைத் தடுக்கும் வகையில் சென்னை நகரில் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பெரிய வடிகால்களை, சென்னை முழுவதும் உள்ள 12 வடி நிலங்களை வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய 4 பகுதிகளாகப் பிரித்து மழை நீர் வடிகால் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, ரூ.633 கோடியில் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தும் பணிகள், 2013-ம் ஆண்டில் நிறைவு பெறும். நிறைவு பெறும்போது, பெரும் மழைக் காலங்களில், சென்னை நகரில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை தவிர்க்கப்படும்.” என்று என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இதனடிப்படையில் இந்த 4 திட்டங்களுக்கும் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மூலம் மத்திய ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்ட ஆணையத்திடம் இருந்து ரூ.1447 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டது. பொதுப் பணித்துறையின் சார்பில் ரூ.633 கோடியும், சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.814 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” இதில் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு என்பதை நான் உங்களிடம் சொல்லவில்லை. சொல்லிப் பயனில்லை என்பதால்.
2013-ம் ஆண்டில் இப்பணிகள் முடிக்கப்பட்டு விடும். அதன் பின்னர் சென்னையில் மக்கள் சந்திக்கும் மழை நீர் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும்.” இதைக் கேட்டுச் சிரிக்கின்றீர்களா? அழுகின்றீர்களா? எனக்கு அழுகைதான் வருகின்றது.
![]() |
| தோல்வியாதி பரப்புபவளாகவும், சல்ஃபர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற மிக மோசமான வாயுக்களைக் கொண்டவளாகவும் உங்களால்தான் ஆக்கப்பட்டேன். |
உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் பள்ளிக்கரணையில் எனது மிகப் பெரிய இயற்கைச் சகோதரி சதுப்புநிலம் இருக்கின்றாள் என்று. மற்றும் மற்றொரு சகோதரி கொடுங்கையூர் ஏரி. இவர்களது நிலை என்ன தெரியுமா? உங்கள் நகர் குப்பைகள் எல்லாம் இவர்களை நிறைத்து அவர்களது அழகையும், பயனையும் இழந்து நிற்கதியாய் நிற்கின்றார்கள். மட்டுமல்ல இவர்கள் பக்கம் வருகின்ற நீங்கள் எல்லாம் மூக்கைப் பொத்திக் கொண்டு செல்கின்றீர்கள். ஹும் அவர்களது தவறா? அவர்களது அழகைக் கெடுத்து நாறச் செய்திருக்கின்றோமே என்ற குற்ற உணர்வு கூட இல்லையா உங்களுக்கு? உங்களுக்கு வெட்கமாக இல்லை உங்கள் மூக்கைப் பொத்திக் கொள்ள?
நான் ஓடும் பாதையில், வெட்டுவாண்கேணி மகாத்மா காந்திநகர் பகுதியில் என்னை கழிவுப்பகுதியாகவே ஆக்கிவிட்டார்கள் செப்டிக் லாரிக்காரர்கள். தெரியுமா? என்ன ஒரு கேவலமான செயல் நீங்கள் மனிதர்கள் செய்வது. உங்கள் கழிவுகளை உங்கள் மேல் பூசிக்கொள்ளுவீர்களா. என்னை எந்த அளவிற்குக் கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவிற்குக் கேவலப்படுத்தியுள்ளீர்கள். இன்னும் சொல்லுவதற்கு நிறையவே உள்ளது. இதற்கு முடிவில்லை. தொடர்கதைதான். சுருக்கமாகச் சொன்னால் என்னை அந்த அளவிற்குப் பாழாக்கியுள்ளீர்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் கலெக்டர் கஜலட்சுமி
இன்று காலை என் தோழி கீதா சொன்னாள், “பக்கிங்ஹேம் உனக்கும் விடிவு காலம் வரலாம்” என்று. காஞ்சிபுர மாவட்ட ஆட்சியாளர் கஜலட்சுமி அவர் பகுதியில் இருக்கும் எனது சகோதரி அடையாறின் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக இடித்துத் தள்ள ஆணை பிறப்பித்து இடித்தாராம். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இங்கு சென்னைக்கு வருவாரா அவர்? ஆனால், இங்கு சென்னையில், அரசாங்கமே என்னை ஆக்ரமித்துள்ளதே எம் ஆர் டி/பறக்கும் ரயில் என்று என்னைக் குறுக்கிச் சாக்கடையாக்கிவிட்டார்களே. அதை யாரால் என்ன செய்ய முடியும்? எப்படிப் படகு விடுவார்கள்? கஜலட்சுமி கொஞ்சம் என்னையும் வந்து சீர் செய்யுங்களேன்!
இந்த லட்சணத்தில் ஆந்திராவையும், தமிழகத்தையும் இணைக்கும் வகையில் காக்கிநாடாவில் இருந்து பாண்டிச்சேரி வரை என்மீது பெரிய படகுகள் வியாபாரத்திற்காகவும், உல்லாசத்திற்கும் செல்லுமாம். அதற்கான பணிகள் இந்த வருடம் சில மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு சோழிங்க நல்லூர் பகுதியில் என் மீது என் அழுக்கை அகற்றும் படலம் ஆரம்பித்து அதற்கும் கோடிகள் இறக்கியிருக்கின்றார்களாம். அதற்குள் என் அன்னைதான் ஒரு ஆட்டம் போட்டுவிட்டாளே! உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் உங்களில் நல்ல உள்ளங்கள் பலர் உதவியதை நினைத்து மகிழ்கின்றேன்.
மக்களே! ஒன்று மட்டும் குறித்துக் கொள்ளுங்கள். பேரிடர் பேரிடர் என்று உங்களுக்கு ஏற்பட்டதைச் சொல்லுகின்றீர்களே. என்னையும், எங்கள் குடும்பத்தையும் இத்தனை வருடங்களாக குப்பை, கழிவுநீர் கிடங்குகளாக்கி வைத்திருப்பதைப் பேரிடர் என்று ஏன் நான் சொல்லக் கூடாது? யோசியுங்கள். திருந்துங்கள். விழித்தெழுங்கள். “இத்தனைக் கோடிகள் எங்கு சென்றன? சரியானத் திட்டம் இல்லாததால் எங்கள் உயிர்கள் பல இறந்தனவே. பலர் நிர்கதியாகியுள்ளனரே. உங்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தலாமா” என்று கேளுங்கள்.
எங்களை நீங்கள் காப்பாற்றவில்லை என்றால், எங்கள் அன்னை அகோரத் தாண்டவம் ஆடும் சமயம் நாங்களும் அவளுடன் சேர்ந்து கோரத்தாண்டவம் ஆட வேண்டி வரும். எங்களைத் தடுக்க முடியாது உங்களால். உங்களைக் காப்பாற்ற இயலாது. எங்களால் உங்களுக்கு அழிவு நிச்சயம். இது எச்சரிக்கை!
பின்குறிப்பு: உபரித்தகவல் RecallPingale: Why a Chennai IAS officer’s story is going viral
இவர் டாக்டர் விஜய் பிங்களே. சென்னைக் கார்ப்பரேஷன் இணைகமிஷனர். நேர்மையான அதிகாரி, சென்னை சாலைகள், பாலங்கள் முறைகேடாக கப்பட்டுள்ளன, மழைநீர் வடியும் நிலையில் இல்லை என்பதை சொல்லி அதைக் கட்டிய கான்ட்ராக்டர்களின் பெயரை அறிவித்து, அவர்களைச் சரிசெய்யச் சொல்லி, இல்லை என்றால் ரூ 2 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று சொல்லி, மேலிடத்திற்கு ஒத்துழைக்காமல் இருந்ததால் , 3 நாட்களில் மாற்றப்பட்டார். - நன்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
படங்கள்” இணையம்
---கீதா



