ஜோதிர் லிங்கமாய் பிர்பஞ்சத்தில் எங்கும் சிவமயமாகவும் சிவசக்தியாகவும் நிற்கும் பரம் பொருளுக்கான ஒரு ராத்திரி. மாதமிருமுறை அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் முன் வந்து போகும் பிரதோஷம் விரதம் ஆகின்ற சிவராத்திரி வருடத்தில் மாசி மாதம் வரும் அமாவாசைக்கு முன் வரும் போது மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.
முனிகளும் யோகிகளும் பிறப்பறுத்து மோட்சம்
பெற அந்நாளை உபயோகிக்கும் போது, சாதாரண மக்கள் வருடத்தில் அந்த ஒரு நாளை அவர்கள் வழிபடும்
இறையின் திருநாமத்தை, நமசிவாய மந்திரத்தை இரவெல்லாம் உச்சரித்து அவர்களுக்குள் உறையும்
ஆத்மலிங்கத்துடனான தொடர்பை திடப்படுத்தும் நாள் என்று சொல்லலாம். எல்லோரையும் அதில்
பக்தியுடன் பங்கெடுக்கச் செய்ய அந்நாள் சிவபெருமான் பார்வதி தேவியை மணந்த தினம் என்றும்
மனித குலத்தைக் காக்க சிவபெருமான் ஆலகால விஷமருந்தி நீலகண்டனாய் மாறிய தினமென்றும்
சொல்லவும் நம்பவும்படுகிறது.
எல்லா மதங்களிலும் இதுபோன்ற பல சம்பவங்களின்
அடிப்படையில்தான் அவரவர்களது பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதுபோல் இந்து மதத்தில்
சைவ நெறியை பின்பற்றுபவர்களின் நம்பிக்கை இது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் கொண்டாடும்
சிவராத்திரி நாட்களில் பல அதிசய சம்பவங்களும் நிகழ்ந்து இருக்கின்றன. அவையெல்லாம் அடுத்த
தலைமுறைக்கு இறை உணர்வை வளர்க்க உதவியும் இருக்கிறன.
ஒரு வேடன் புலியிடமிருந்து தப்ப ஒரு வில்வ
மரமேறி மரத்திலேயே உறங்கி, விழாமல் இருக்க வில்வ இலைகளைப் பறித்து இறைவனின் நாமம் சொல்லி
ஒரு கல்லில் இட அக்கல் சிவலிங்கமாய் மாறி அங்கு இறைவன் தோன்றி அவனுக்கு மோட்சம் அளித்த
கதை.
இது போன்ற சம்பவங்களில் எல்லாம் வாய்மொழியாய்
பல தலைமுறையைக் கடக்கும் போது அவற்றில் ஏற்படும் கோர்த்தல், களைதல் மற்றும் மாற்றங்களைத்
தவிர்க்க முடியாது.
அப்படி கேரளத்தில் 135 ஆண்டுகளுக்கு முன்னும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதைப்பற்றிதான் நான் இங்கு சொல்ல இருக்கிறேன்.
1888 ஆம் ஆண்டு ஒரு சிவராத்திரி நாள். இடம்
நெய்யாற்றின் கரை அருகே உள்ள அருவிப்புரம். அன்றெல்லாம் பிற்பட்ட மற்றும் தாழ்ந்த இனமென்று
முத்திரை குத்தப்பட்டவர்களுக்குக் கோவிலுக்குள் மட்டுமல்ல அதன் அருகே கூடப் போகக்கூடாது
எனும் நிலை. அவர்களுக்கு என ஒரு கோவில் கட்டி வழிபட வசதியும் இல்லை. அனுமதியும் இல்லை.
அன்றைய இஸ்லாம் மற்றும் கிருத்தவர்களின் நம்பிக்கையை
பின்பற்றி பலரும் மதம் மாறி இறையருள் பெற்றிருந்தாலும் பலருக்கும் அப்படிச் செய்யத்
தயக்கம். பயம். வைகுண்ட சுவாமிகள், அய்யாவு சுவாமிகள் போன்றவர்கள் தந்த ஊக்கம், மதம்
மாறாமலேயே மூதாதையர்கள் வழிபட்ட முறையில் நாமும் வழிபடலாம் என்ற சிந்தை வளர உதவியது.
மருத்துவா மலையில் தியானத்திலிருந்து இறையை உணர்ந்த ஸ்ரீ நாராயண குரு எனும் இளம் சன்னியாசியிடம்
முறையிட்டதன் பலனாக அவர் ஆலோசனைப்படி நெய்யாற்றின் கரையில் நமச்சிவாய மந்திரம் சொல்லி
கூடியிருக்கும் மக்கள்.
இரவு 12 மணி அளவில் தன் தியானத்தை முடித்து
ஆசிரமத்திற்கு வெளியே வந்த குரு, ஆற்றின் ஆழமான சங்கரன்குழியில் முங்கி நீண்ட நேரத்திற்குப்
பின் ஒரு கல்லுடன் வருகிறார். தன் மார்போடு பிடித்தபடி நீண்ட மூன்று மணி நேர தியானம்,
நின்றபடி செய்கிறார். கண்களில் இருந்து வழியும் கண்ணீரால் அபிஷேகம் செய்யப்பட்ட கல்,
வேடன் வில்வ இலைகளால் பூஜித்த கல் சிவலிங்கமானது போல், அதுவும் சிவ சைதன்யமுள்ள சிவலிங்கம்
ஆகிறது.
பரம்பொருளான ஜோதிர்லிங்கமும் ஆத்ம லிங்கமும்
உருகி வழிந்த கண்ணீரும் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் சிவ நாமங்களும்
அந்த சிவராத்திரியில் சிவனை சிவசைதன்யத்தை அங்கு
வரவழைத்தது.
அந்த லிங்கம் சிவலிங்கமாக்கப்பட்டு அங்கிருந்த
பாறையில் அஷ்டபந்தமின்றி பிரதிஷ்டை செயப்படுகிறது. அப்படி அன்று வேத விதிப்படி அல்லாமல்
பிராமணர் அல்லாத ஒருவரால் பிரதிஷ்டை நடத்தியதால் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் வரை
ஸ்ரீ நாராயண குரு சென்று வாதாடி இது முற்பட்ட வகுப்பினருக்கான சிவன் அல்ல பிற்பட்ட
வகுப்பினருக்கான சிவன் என்று சொல்லி வெல்லவும் செய்கிறார்.
அப்படி, கோவிலும் இறைவனும் இல்லை என்றிருந்த அன்றைய திருவிதாங்கூர், கொச்சி, மலபார் வாழ் பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மதமாற்றம் செய்யாமலேயே இறைவனும் கோவிலும் கிடைக்கச் செய்ததும் இதுபோன்ற ஒரு சிவராத்திரி நாளில்தான். அது போலவே 1924 ஆம் ஆண்டில், மார்ச் 3, 4 தேதிகளில் ஒரு சிவராத்திரி நாளில்தான் ஸ்ரீ நாராயண குரு ஆலுவாவில் சர்வபத மாநாடு நடத்தி எல்லா மதங்களும் ஒரே ஒரு ரகசியமான பரம்பொருளையே மையமாகக் கொண்டு இயங்குகின்றன. இறை உணர்வு ஆத்ம சுகம் தரும் ஒன்று. அதுவே எல்லா மதங்களும் கூறுவது. எனவே மனித குலத்திற்கு ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம் தான் என்று சொல்லி மத வேற்றுமை பாராத இறை உணர்வின் முக்கியத்துவத்தையும் இந்த சிவராத்திரி நாளில்தான் விளக்கினார்.
எதிர்காலத்தில் இந்நிகழ்வுகளும் சிவராத்திரியின் பெருமை பற்றி பேசும்போது பேசப்படும்
என்பது உறுதி.
தங்கள் வாழ்வையே சிவபாதத்தில் வைத்து சிவபோகத்தில்
திளைத்து சிவலோகம் புகும் சிவனடியார்கள் போல் அல்லாமல் வருடம் ஒரு நாள் மட்டும் இரவு
சிவ தலம்/தலங்கள் சென்று இயன்ற மட்டும் சிவ நாமம் சொல்லி இறைவனை வேண்டும் சாதாரண மனிதர்களுக்கும்
சிவனருள் இறையருள் உண்டு. ஏனென்றால், நம்முள் உறையும் சிவனும் நாமும் ஒன்றே அதை உணரத்தான்
இந்த சிவராத்திரி.
எந்நாட்டவரின் இறையே போற்றி!
தென்னாட்டவரின் சிவனே போற்றி!
-------துளசிதரன்
(இது ஒரு மீள்பதிவுதான். சகோதரி பானுமதிவெங்கடேஸ்வரன், சிவராத்திரி குறித்து குழந்தைகளுக்குச் சொல்வது போல வீடியோ போடுவதாகக் கீதா சொன்னார். நானும் சிவராத்திரி குறித்து எழுத நினைத்து எழுத முடியாமல் போனதும், கீதா சொன்னதும், எனக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. பழைய பதிவையே போட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன்.)








இன்று காலைதான் வேடன் வில்வ இல்லை கதையை பாஸின் சித்துக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். வில்வ இலையை மாலையாகக் கட்டுவதில் பல்வேறு விதிகள் சொல்லிக் கொண்டிருந்தார். நான் வேறொருவரை கேட்டுக் கொள்வேன் என்றார். அப்போது இந்தக் கதையை சொல்லி வில்வ இலையின் மகத்துவகத்தைப் பற்றியும் கலியுகம் பற்றியும் சிறு உரை நிகழ்த்தினேன்!!!!
பதிலளிநீக்குஆமாம் அந்தக் கதை இப்போதும் வியப்பாகத்தான் இருக்கிறது. வில்வ இலைக்கு அவ்வளவு மகத்துவமா அந்த வேடன் தானறியாமல் இட்ட வில்வ இலையால் இறையருள் கிடைத்தது என்பது இறைவன் எளியவர், கள்ளம் கபடமில்லா உள்ளத்துடன் வழங்குபவற்றை ஏற்று அருள்புரிபவர் என்பதும் தெரிகிறது இல்லையா!
நீக்குதுளசிதரன்
மிக்க நன்றி ஸ்ரீராம், உங்கள் கருத்திற்கு.
நீக்குதுளசிதரன்
(நன்றின்னு போடலியாம்!!!!!! துளசி கம்ப்ளெயின்ட்! கீதா)
ஹா.. ஹா.. ஹா...
நீக்கு__/\__
சிவராத்திரிக்கு விழித்திருந்து பழகவில்லை. இதோடு பனி போய்விடும். இனி வெப்பம், வெக்கைதான். அடுத்து மயானக்கொள்ளை நடக்கும்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குவிடியும்வரை எல்லாம் எல்லோரும் விழித்திருப்பதாகத் தோன்றவில்லை. கேரளத்தில் எல்லாம் பெரும்பான்மையான கோயில்களில் இரவு 12, 1 மணி அளவில் நடை அடைத்து பூஜை மற்றும் எல்லா நிகழ்வுகளையும் நிறுத்திவிடுவதுண்டு. ஆனால் ஒரு முறை நான், நம் தமிழ்நாட்டின் நெல்லையப்பர் ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு இடை விட்டு இடைவிட்டு அபிஷேகமும் பூஜையுமாக விடியும் வரை நாலு கால பூஜை தொடர்ந்தது. அது மறக்க முடியாத அனுபவம் எனக்கு.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
ஸாரி ஸ்ரீராம், ரொம்ப நாளாச்சா துளசி வாய்ஸ் கேட்டு பதில் கருத்து கொடுத்து...பழக்க தோஷத்தில் கீதான்னு போட்டுவிட்டேன்.
நீக்குஇங்கு வீட்டின் பின் Bore drilling, முன்னால் மொசைக் டைல்ஸ் அறுக்கும் சத்தங்கள் வரும் முன் வாய்ஸ் கேட்டு போட்டுவிட வேண்டும் என்று அவசரம் அவசரமாகக் கேட்டு போடுகின்றேன்.
கீதா
இங்கும் வெப்பம் தொடங்குகிறது.
நீக்குஅது என்ன மயானக் கொள்ளை என்பது அது புரியவில்லை ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
// ஸாரி ஸ்ரீராம், ரொம்ப நாளாச்சா துளசி வாய்ஸ் கேட்டு பதில் கருத்து கொடுத்து...பழக்க தோஷத்தில் கீதான்னு போட்டுவிட்டேன். //
நீக்குஹா.. ஹா.. ஹா... ஹா.. ஹா.. ஹா...
// அது என்ன மயானக் கொள்ளை என்பது //
நீக்கு"மயானக் கொள்ளை (Mayana Kollai) திருவிழா சிவராத்திரியை அடுத்த மாசி மாத அமாவாசையன்று தமிழகத்திலுள்ள அங்காள பரமேசுவரி ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. இவற்றில் மேல்மலையனூர் கோவிலில் கொண்டாடப்படும் மயானக் கொள்ளை முதன்மையானதாகும். "
https://tinyurl.com/d3rnscrc
மயானக்கொள்ளை என்பது புதியதாக இருந்தது. நீங்கள் கொடுத்த லிங் சென்று வாசித்து தெரிந்து கொண்டேன். பிரம்மனின் தலை கொய்யப்பட்டதும் அது சிவனின் கையில் ஒட்டிக் கொண்டதும் கபாலமானதுஎல்லாம் தெரிந்து கொண்டேன் முற்றிலும் புதிய தகவல் எனக்கு.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
இறைவன் ஒரு சாராருக்குச் சொந்தமானவன் அல்ல.
பதிலளிநீக்குநாராயணகுரு, மாதா அமிர்ந்தானமயி போன்ற பல பெரியவர்கள் இதைத்தான் செயலில் நிகழ்த்திக் காட்டுகிறார்கள்.
சிவன் எங்களுக்குத்தான் சொந்தம் எனச் சொல்லிக்கொண்டிருந்த அறிவிலிகளைப் பார்த்து சிவனே விலகிப்போயிருப்பார்.
அதல்ல கொடுமை. இறைவன் பல பெயர்களைக் கொண்டிருந்தாலும் எல்லாரும் இறைவன் என்று அழைத்தாலே தெய்வம் ஒன்று என்ற நிலை இருக்கும் போது, ஒரு இறைவன் எங்களுக்கு மட்டும் சொந்தம் என்று கேட்கும் போதுவியப்பாகத்தான் இருக்கிறது. அப்படிச் சொல்பவர்கள், நீங்கள் கூறியது போல் அறிவிலிகள்தான்.
நீக்குநன்றி நெல்லைத்தமிழன்.
துளசிதரன்
சிவராத்திரி குறித்த மீள் பதிவு - சிறப்பு. நேற்று மூன்று ஆலயங்களில் தரிசனம் கிடைக்க வாய்த்தது. ஓம் நமச்சிவாய.
பதிலளிநீக்குதொடரட்டும் பதிவுகள்.
நன்றி வெங்கட்ஜி. ஓ! சிவாலய ஓட்டம் என்று சொல்லப்படுவது போல் நீங்கள் மூன்று சிவாலயங்கள் சென்று தரிசித்திருக்கிறீர்கள். நல்ல அனுபவம். சிவனருள் கிடைக்கட்டும்.
நீக்குதுளசிதரன்
நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு பதிவு. மீள் பதிவானாலும் ஒரு புரட்சியை தோற்றுவித்த சம்பவத்தை கூறுகிறது. நன்று, நன்றி.
பதிலளிநீக்குJayakumar
ஆமாம் ஜெயகுமார் சந்திரசேகரன் சார், நீங்கள் சொன்னது போன்று அந்த நாளில் ஒரு புரட்சி செய்த அந்த நிகழ்வு மனதில் எப்போதும் நிலைத்திருக்கிறது. அதனால்தான் அதையும் குறிப்பிட்டிருந்தேன்.
நீக்குமிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்.
துளசிதரன்
அருமையான பதிவு. சிவராத்திரிக்கு சிறப்பு பதிவு.
பதிலளிநீக்குமுதல் படத்தில் ஜோதிர் லிங்கம் தரிசனம் அருமை.
சிவராத்திரி பற்றிய செய்தியும் சுருக்கமாக அருமையாக சொன்னீர்கள்.
நாராயண குரு பற்றி நானும் ஆலபுழா பயணம் போன போது தெரிந்து கொண்டேன் அவரை பற்றி எழுதினேன் . அவர் கோயிலுக்கும் போய் வந்தேன்.
ஸ்ரீ நாராயணகுரு தேவா கோவில் .
ஒரு ஜாதி, ஒரு மதம் மற்றும் அனைத்து மனிதர்களுக்கு ஒரே கடவுள் என்று "தெய்வ சதகம்" என்று கவிதை எழுதியவர்.
படங்கள் எல்லாம் நன்றாக இருந்தது.
//இரவு 12 மணி அளவில் தன் தியானத்தை முடித்து ஆசிரமத்திற்கு வெளியே வந்த குரு, ஆற்றின் ஆழமான சங்கரன்குழியில் முங்கி நீண்ட நேரத்திற்குப் பின் ஒரு கல்லுடன் வருகிறார். தன் மார்போடு பிடித்தபடி நீண்ட மூன்று மணி நேர தியானம், நின்றபடி செய்கிறார். கண்களில் இருந்து வழியும் கண்ணீரால் அபிஷேகம் செய்யப்பட்ட கல், வேடன் வில்வ இலைகளால் பூஜித்த கல் சிவலிங்கமானது போல், அதுவும் சிவ சைதன்யமுள்ள சிவலிங்கம் ஆகிறது.//
நாராயண குரு பற்றி படிக்கும் போது இன்னல் பட்ட மக்களுக்கு அவர் செய்த நல்ல செயல் மெய்சிலிர்க்க வைக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.
/
வைக்கம் போரட்டத்தில் பெரியார், நாராயணகுரு கலந்து கொண்டார்கள்.
உங்களின் அப்பதிவையும் வாசித்த நினைவு இருக்கிறது.
நீக்குஆமாம் வைக்கம் போராட்டத்தில் குரு அவர்கள் கலந்து கொண்டார்கள்,
கருத்திற்கு மிக்க நன்றி.
இந்த சிவராத்திரி பதிவு மீள் பதிவு 2024ல் போட்ட பதிவுதான் அப்போது நீங்கள் கொடுத்த கருத்து இது
//சிவன் ராத்திரிக்கு சிறப்பான பதிவு.
சிவன் ராத்திரி கதையும், நாரயாண குரு அவர்கள் பற்றிய செய்தியும் அருமை.
//சங்கரன்குழியில் முங்கி நீண்ட நேரத்திற்குப் பின் ஒரு கல்லுடன் வருகிறார். தன் மார்போடு பிடித்தபடி நீண்ட மூன்று மணி நேர தியானம், நின்றபடி செய்கிறார். கண்களில் இருந்து வழியும் கண்ணீரால் அபிஷேகம் செய்யப்பட்ட கல், வேடன் வில்வ இலைகளால் பூஜித்த கல் சிவலிங்கமானது போல், அதுவும் சிவ சைதன்யமுள்ள சிவலிங்கம் ஆகிறது.//
கண்களில் இருந்து வழியும் கண்ணீரால் அபிஷேகம் செய்யபட்ட கல் சிவலிங்கம் ஆனது. படிக்கும் போது மனம் நெகிழ்கிறது.
படங்கள் நன்றாக இருக்கிறது.
கன்னியகுமரி மாவட்ட மக்கள் சிவன் ராத்திரிக்கு 110 கிமீ ஓட்டம் செய்து 12 சிவ ஆலயங்களில் சாமி தரிசனம் செய்வார்கள். நேற்று தொலைக்காட்சியில் அதை காட்டினார்கள்.
மன உறுதி , பக்தியை சொல்லும் சிவாலய ஓட்டம் .//
மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு உங்களின் கருத்திற்கு
துளசிதரன்
நாராயணகுரு பற்றி நான் போட்ட பதிவுக்கு நீங்கள் போட்ட பின்னூட்டத்தில்
பதிலளிநீக்குநீங்கள் பகிர்ந்த குருவின் வாசகம் அருமையாக இருந்தது.
//குருவின் மற்றொரு பொன்மொழி "மதம் ஏதாகினும் மனிதன் நல்லவனாய் வாழ்ந்தாலே போதும்" என்பது.//
அது மிகவும் அருமையான பொன்மொழி.
ஆமாம் அப்பதிவை வாசித்துப் பின்னூட்டம் இட்ட நினைவு இருக்கிறது. அதை நீங்கள் இங்கு சொல்லியதற்கு மிக்க நன்றி.
நீக்குஅவருடைய பொன்மொழிகள் நிறைய அதில் இது மிகவும் வித்தியாசமான பொன்மொழி.
மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு
துளசிதரன்
அது போலவே ஒரு ஜாதி ஒரு மதம் இறைவன் ஒருவனே சண்டைகள் கூடாது என்பதெல்லாம் அறிவுரைத்தவர்.
நீக்குதுளசிதரன்