கதைகளைப் பற்றி முதல் பகுதி 1/7
கதைகளைப் பற்றி இரண்டாம் பகுதி 2/7
சென்ற வருடம் பரிசு பெற்றக் கதைகளைப் பற்றி என் பார்வையில் சொல்லியிருந்தேன். இந்த வருடம் போட்டியில் நானும் கலந்து கொண்டு பரிசு பெற்றதால் சற்று கவனத்தோடுதான் கதைத்துக் கொண்டுவருகிறேன். நான் பெரிய எழுத்தாளர் அல்ல. ஏதேனும் குறை இருந்தால், ஆசிரியர்கள் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன். நட்புகளும் சுட்டிக் காட்டலாம். என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்ற முன்னுரையுடன் அடுத்த பகுதி 3/7
கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், எனக்கு யாரென்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
நதி மூலம்
அனந்த் ரவி
ஆசிரியர் - வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின் முழு நேர எழுத்தாளரானவர். பிரபல பத்திரிகளில் எழுதுகிறார். பரிசுகள் நிறைய வென்றிருக்கிறார். நாவல் போட்டிகளிலும் வென்றிருக்கிறார். ஆசிரியர் குறிப்பு பிரமிக்க வைக்கிறது.
கதை
- நர்மதா, யமுனா. அக்கா தங்கை. யமுனாவைப் பெண்பார்க்க ஒரு குடும்பம் வரவிருக்கும் தினத்தில், அம்மா, நர்மதாவை வீட்டில் இருக்க வேண்டாம் என்று சொல்கிறார். ஏனென்றால்
இரு முறை நர்மதா வீட்டிலிருந்ததால் யமுனாவுக்கு அமையவில்லை.
பெண் பார்க்க வரும் பையன் முரளியோடு யமுனா தனியாகப் பேச
விரும்புகிறாள். கோவிலுக்குப் போகலாம் என்கிறாள். அருகில் இருக்கும் கோவிலுக்குச்
செல்கிறார்கள்.
"எல்லாரும்
காஃபிஷாப், ஹோட்டல், மால்ல மீட் பண்ணுவாங்க நீ என்னை கோவிலுக்கு வரச் சொல்லறே?"
காபி
ஷாப்பில் கையை மட்டுமாவது தொட்டுவிடலாம். கோவிலில்? முரளியைப் பற்றிய வரி. அந்த வயதிற்கே உரிய உணர்ச்சியை
ஆசிரியர் கோடிட்டுச் சொல்லியிருப்பது புன்சிரிப்பை வரவழைத்தது.
யமுனாவுக்கு அக்கோவில் முக்கியமானது. அம்பாளிடம் கேட்காமல் முக்கியமான சமாச்சாரங்களில் ஈடுபடமாட்டாள். உள்ளே சென்று பிரார்த்திக்கிறாள். இந்த இடத்தில் ஆசிரியர் எழுதிய விதத்தை ரசித்தேன், "முரளி அருகிலேயே நிற்பதை அவள் கவனிக்கவில்லை அல்லது பொருட்படுத்தவில்லை"
அவள் முரளியிடம் கேட்கும் கேள்வியும் என்னைக் கவர்ந்தது.
"என்னை எனக்காகவே பிடிச்சிருக்கா முரளி?
அல்லது அம்மா அப்பா சொல்றதுனால சரிங்கறயா?"
நியாயமான கேள்வி. இப்போதைய பெண்கள் கேட்பதற்கான சுதந்திரமும்
இருக்கிறது! ஆனால் அவள் ஏன் இக்கேள்வியைக் கேட்கிறாள் என்பதற்கான அர்த்தம் பின்னர் புரியும். அது சஸ்பென்ஸ்.
அதன்பின் அவள் கேட்கும் கேள்வியும் "என் படிப்பு உத்தியோகம் சம்பளம் எல்லாம்
தெரிஞ்சுகிட்டு முடிவு பண்ணினியா?"
இப்படி ஒவ்வொரு கேள்வியாக வக்கீல் போலக் கேட்கிறாளே
என்று அவன் பொறுமை இழக்கிறான். "என்னைக் காரணம் சொல்லி இந்த சம்பந்தத்தை
நிறுத்தலாம்னு யோசிக்கறயோ?"
அதன் பின் தன்னைப் பற்றிச் சொல்லி ஒரு கேள்வி கேட்டு,
"உன் முடிவு மாறிவிடுமா" என்று
கேட்கிறாள்.
அந்த சங்கடமான கேள்விக்கு அவன் நேர்மையான பதிலைச்
சொல்வது யமுனாவுக்குப் பிடிக்கிறது.
முரளி மட்டும் ஓகே சொன்னால் போதாதே அவன் அம்மாவும்
சரி என்று சொல்லணுமே. எந்த அம்மாவும் யோசிக்கும்
விஷயம்தான். தன்னைப் பொருத்தவரை முடிவில் மாற்றமில்லை. ஆனால், அம்மாவைக் கன்வின்ஸ்
பண்ணினால்தான் மாப்பிள்ளையாக முடியும் என்று சொல்லி கொஞ்சம் டயம் கேட்கிறான்.
வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். அதன் பின் அவள் அக்கா
நர்மதா வீட்டிற்கு வரும் முன் யமுனாவை கோவிலுக்கு அழைக்கிறாள். முரளி பற்றி கேட்கிறாள்.
யமுனா சொல்கிறாள்.
யமுனா சொல்லும் விஷயம் என்ன? அது ஏன் முரளியை
யோசிக்க வைக்கிறது என்பது கதையில்.
கோவிலில் ஏலம் விடப்படும் அம்மனின் புடவையைக் கதைக்குப்
பொருத்தமாகக் கையாண்டிருக்கும் விதமும் சொல்லும் இடமும் அட்டகாசம். அதை ரசித்து மீண்டும்
வாசித்தேன். அம்மன் புடவைகள் ஏலம் விடப்படும் விஷயத்திலிருந்து பிறந்த கதைக்கருவோ இல்லை கதைக்கருவுக்கு அதை அழகாகப் பொருத்தினாரா ஆசிரியர் என்று பாராட்டாமல் இருக்க
முடியவில்லை. இதுதான் கதையின் வெயிட்டேஜ்!
பலவற்றிற்கும் நதிமூலம் ரிஷிமூலம் ஆராயக் கூடாது
என்று நாம் சொல்வதுண்டு இல்லையா அப்படியான ஒரு சிறந்த கதைக்கரு. கையாண்டவிதமும் எழுதிய
விதமும் அருமை.
கதையில் பல வரிகளை வாசிக்கும் போதுதான் அது சொல்லப்படும் இடத்தோடு சேர்த்து ரசிக்க முடியும்.
ஆசிரியருக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்!
அனுராதா ஜெய்சங்கர்
ஆசிரியர்
- எழுத்தூடகங்கள் வழி ஆசிரியரின் எழுத்து அறிமுகம்
உண்டு. இப்போட்டிக் கதைக்கு முன் நான் வாசித்த கதை, கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில்
பரிசு பெற்ற அருமையான கதை.
ஆசிரியரைப் பற்றியும், அவரது பரிசுகள் பற்றியும்
சொல்ல நிறைய உண்டு. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மிகவும் உன்னதமான பணியைச் செய்துவருகிறார்
ஆசிரியர். 'டிஸ்லெக்சியா' எனப்படும் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியராகச்
சென்னையில் பணிபுரிந்து வரும் பொறியியல் பட்டதாரி. எனக்குப் பரிச்சயமான விஷயம் என்பதால்
ஒர் ஈர்ப்பு!
கதை - பொதுவாகப் பள்ளிப் பருவத்திலிருந்து கல்லூரிப் பருவத்திற்குச்
செல்லும் குழந்தைகளின் ஒரு ட்ரான்ஸிஷன் பீரியட். மனம் பற்றிய கதை. ஒரு சில குழந்தைகள் அதை எளிதாகக் கடந்துவிடுவார்கள்.
ஒரு சிலருக்குச் சில அவஸ்தைகள் ஏற்படுவதுண்டு. அப்படியான மனக்குழப்பத்தில் இருக்கும்
20 வயதில் இருக்கும் குழந்தையின் கதை.
நல்ல
குழந்தை. பள்ளியில் இருந்தவரை தன்னிடம் எல்லாம் பகிர்ந்து கொள்ளும் மகள் இப்போது எதுவும்
பகிர்ந்து கொள்ளாமல், ஏன் கோபப்படுகிறாள்? "எனக்கு உன்னையும் அப்பாவையும் பிடிக்கவில்லை"
என்று வெடிக்கும் வார்த்தைகள் அதனால் கவலைப்பட்டு தாங்கள் நல்ல பெற்றோராகத்தானே ஃப்ரீடம்
கொடுத்து வளர்த்திருக்கிறோம் என்ன தவறு செய்தோம் என்று யோசித்து மிகவும் கவலைப்படுகிறாள்,
அம்மா கமலா.
கணவர்,
தன் நண்பரின் மனைவி குடும்ப நல ஆலோசகர் என்பதால் பார்க்கலாம் என்கிறார். ஆலோசகர், இப்பருவ
குழந்தைகளுக்கான பிரச்சனைகள் என்னவென்று விளக்குகிறார். அவளது பிரச்சனை பெரிதில்லை
என்று சொல்லி ஆசுவாசப்படுத்துகிறார்.
அவர்
சொல்லும் முக்கியமான ஒரு கருத்து எல்லாப் பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
"என் பொண்ணு இப்படி இருக்கறதுக்கு நான் காரணம் இல்லைன்ற எண்ணமே உங்களுக்கு நிம்மதியைக்
கொடுக்கும். அப்பதான் அவளோட இடத்திலிருந்து பார்க்க முயற்சி செய்ய முடியும்.."
"அப்ப
நான் தான் பொறுத்துப் போகணும்னு சொல்றீங்க...ஏற்கனவே பொறுத்துப் போயிட்டுதானே இருக்கேன்"
என்று அம்மா சொல்லும் போது
ஆலோசகர்
சொல்லுவதையும் எல்லாப் பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டும். சமூக ஊடகங்கள் மூலம் தங்களையும்
அறியாமல் போட்டிகளில் ஒப்பீடுகளில் சிக்கிக் கொள்கிறார்கள்....போன்ற யதார்த்தங்களை
ஆலோசகர் சொல்வதாக, ஆசிரியர் சொல்லியிருக்கும் உளவியல் விஷயங்கள் மிக அருமை.
அம்மாவிடம்
சொன்னவை பொதுவான விஷயங்கள். எனவே பெண் காவ்யாவிடமும் பேச வேண்டும் என்று ஆலோசகர் சொல்கிறார்.
கதையின்
முக்கிய அம்சம், பெற்றோர், தங்கள் பருவ வயதுக் குழந்தைகளின் கோணத்திலிருந்தும் யோசித்துக் கையாள வேண்டும்
என்பது..
இன்றைய
தலைமுறைகளில் இந்த வயதில் இருக்கும் இளைஞர்கள் ஒரு சிலர் தன்னை யார் தன் திறமை என்ன
என்பதை அறிவதில் நட்புகளினால் உருவாகும் அழுத்தத்தினால் ஏற்படும் குழப்பம் இவற்றால் பெற்றோர்களிடம் இருந்து விலகுதல் அல்லது கோபம் எரிச்சல்படுதல் மற்றும் பெற்றோர்
எதிர்கொள்ளும் பிரச்சனை, ஆலோசனை என்று மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.
ஆசிரியருக்கு
வாழ்த்துகள், பாராட்டுகள்!
நதியின்
ஓட்டம்
பாலசாண்டில்யன்
ஆசிரியர் - முனவர்.
எழுத்தாளர், கவிஞர், நூல் ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், இசைப்பிரியர், முறைப்படி
சங்கீதம் பயின்றவர், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர், கல்வி மற்றும் மனநல ஆலோசகர். இன்னும் எந்தத் துறை பாக்கி இருக்கிறது என்று யோசிக்க வைக்கிறார்!
என்னவென்று
சொல்ல? ஆசிரியரைப் பற்றி வாசித்த போது அசந்துவிட்டேன். ஒரு மனிதருக்குள் இத்தனை திறமைகளா என்று!
கதை - நட்புகளுக்காக
இக்கதையை கதைச் சுருக்கமாகக் கொடுத்தால் கதையின் அழகியலைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி
விடுவேனோ என்று தோன்றியது. ஆனால் கதைச் சுருக்கத்தைச் சொல்லாமல் விமர்சனம் என்று எழுதினால் நட்புகள் உங்களுக்கு
நான் என்ன சொல்கிறேன் என்பதே புரியாதே என்பதால் எப்படிக் கொடுக்கலாம் என்று யோசித்தேன்.
உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் இக்கதையை வாசித்து அனுபவிக்கவேண்டும்.
சுசீலாவும்,
நரசிம்மனும் ஒருவருக்கொருவர் மிகவும் ஆழமாக, உயிருக்குயிராகக் காதலிக்கும் கணவன் மனைவி.
நான் இப்படிச் சொல்லி கதையின் அழகைக் கோரமாக்குவதை விட அவர் வரிகளிலேயே தந்துவிடுகிறேன்.
உங்களுக்கும் கதை ஓரளவு புரிந்துவிடும். நானும் விமர்சனம் எழுதிவிட்டேன் என்று சொல்லிக்
கொண்டுவிடலாம்!!!!!
"ஆழமான பெண் நீ. உன் போன்றவர்களை
எளிதில் கையாள முடியாது. மிருகத்தனமான நேர்மை உனக்கு இருக்கிறது. உண்மையை மறைக்காமல்
அப்படியே சொல்கிறாய். என்னிடம் இருந்தும் அதையே எதிர்பார்க்கிறாய். அது தானே இங்கு
பிரச்சினை?" - நரசிம்மனின் உரையாடல். இந்த வரிகளில் சுசீலா கதாபாத்திரம் பற்றித் தெரிகிறது. நரசிம்மன் மென்மையான கதாபாத்திரம்!
ஏன்
பிரிகிறார்கள்? யாருக்கும் அமையாத அன்பான கணவன்,
நம்பகத்தன்மை, ஆழமான இணைப்பு, மதிக்கும் பண்பு ஆனால் அவன் சொன்ன பொய்களை சுசீலாவால்
மன்னிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் சொல்லிவிடுகிறாள். "இதோ பார் நரசிம்மா,
இந்த சுசீலா நீ வெளியில் அசைவம் சாப்பிட்டால் கவலைப்படமாட்டாள். நீ அளவோடு குடித்துவிட்டு
அமைதியாக வீடு வந்து படுத்தாலும் இந்த சுசீலா சண்டை போட மாட்டாள். ஆனால் எனக்குக் கொஞ்சமும்
பிடிக்காத அந்தக் கிளி-புறா வளர்ப்பை மட்டும் இவள் சகித்துக் கொள்ள மாட்டாள். புரிந்ததா?"
விரிசல்
பிளவாகிறது. அவளுக்கு எது பிடிக்கவில்லை என்று பிரிகிறாளோ அதேதான் பின்னர் சேர்வதற்கும்
வழிவகுக்கிறது. புறாவிடு தூது!? அதுவும் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது!
சேர்கிறார்களா? சேரப்போகிறார்களா? கனவா? நிஜமா? எப்படி என்பதை எல்லாம் சொல்ல வேண்டும் என்றால் என் வரிகளால் கதைக்கு அநியாயம் செய்வதில் விருப்பமில்லை.
கட்டுண்டு
வாசிக்க வைத்த எழுத்து நடை. கடல் அலைகள் மெதுவாக வந்து காலைத் தழுவிவிட்டுச் செல்வது
போன்ற ஓர் உணர்வு. லால்குடியின் தில்லானாவைக் கேட்பது போன்றதோர் சுகம்.
ரசித்த
வரி
"காகிதத்தைக்
கரைத்துவிட்டால், மனதில் ஒட்டிக்கொண்டு இருக்கும் பந்தம் போய்விடுமா? மனதின் கேள்விக்கு
பதில் சொல்லத் தெரியாமல் மூளை திணறியது"
ரிதத்துடன் நதியின்
ஓட்டம்!
ஆசிரியருக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!
பானுமதி
கண்ணன்
ஆசிரியர் - ஐஓபி
யிலிருந்து ஓய்வு பெற்றவர். படைப்புகள் பிரமிப்பைத் தருகின்றன. கிட்டத்தட்ட 100 சிறுகதைகள்
எழுதியிருக்கிறார்! வாவ்! ஒரு நாவல், 5 குறுநாவல்கள்!
பானுமதி கண்ணன் அவர்களின் எழுத்து
எனக்கு ஏற்கனவே பரிச்சயம். சஹானா இணைய இதழில் அம்மாவும் அபியும் என்ற இவரது அருமையான
சிறுகதை ஒன்றை வாசித்திருக்கிறேன்.
அதோடு, நம் பானுக்காவிற்கும் பானுமதி கண்ணன்
அவர்கள் பரிச்சயம் என்பதால் பானுமதி கண்ணன் எழுதி வெளியிட்ட விண்ணோடும் முகிலோடும்
எனும் நாவல் அவர் கையெழுத்திட்ட பிரதி பானுக்காவிடம் இருந்திட, பானுக்கா, என்னிடம்,
கதை ரொம்ப நன்றாக எழுதியிருக்கிறார் என்று வாசிக்கக் கொடுத்தார். வித்தியாசமான கதைக்களம்.
அவர் தேர்ந்தெடுத்திருந்த கதைக்களத்தைப் பற்றிய தகவல்களுடன் மிக நன்றாக எழுதியிருக்கிறார்.
கதை - கதை, சினிமாத்துறையின் அப்பட்டமான நிதர்சனத்தைச் சொல்கிறது.
சினிமா நம் வாழ்க்கையோடு நம்மை அறியாமலேயே பிணைந்திருப்பதாலோ என்னவோ, கதை
மனதிற்கு நெருக்கமாகி விடுகிறது. தெரிந்த விஷயம்தாம் ஆனால் அதை எழுதிய விதம் அருமை.
அம்மா தன் பெண்ணை சினிமாவில் கதாநாயகி
ஆக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறாள். ஆனால் ஒரு டயலாக் சீன் கூட
கிடைத்தபாடில்லை. இத்தனைக்கும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருபது வயதைத்
தொட்டுவிட்டாலும் கும்பலோடு கும்பலாக வரும் சீன்கள் மட்டுமே.
மகளுக்கு ஒரு டயலாக் சீனாவது சான்ஸ் கிடைக்க
வேண்டும் என்று, அம்மா ஏஜண்டுக்குத் துட்டு கொடுத்தும், 'தியாகமும்' செய்கிறாள். சினிமா துறையில் நடப்பதை கண் முன்னே கொண்டு வருகிறார்.
அம்மாவும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக
இருந்தவள்தான். அவளுக்குச் சான்ஸ் கிடைக்க உதவுபவனோடு வாழ்ந்த போது மகள்
பிறக்கிறாள். அவன் இப்போது உயிரோடு இல்லை.
"அவர் உயிரோடு இருந்தா, அப்பான்னு சொல்லிக்க ஒரு ஆளாவது
கிடைச்சிருக்கும் எனக்கு!"
"கெட்டுது! அவன் ஆள்தான் அழகனே தவிர உடம்பு சொத்தை! முப்பது வயசுலேயே
காசம் வந்து செத்துப் போனான் இருந்திருந்தா இப்ப அவனுக்கும் சேர்த்து நான்
உழைச்சுக் கொட்டணும்"
புன்சிரிக்க வைத்த உரையாடல். அந்த அம்மாவின் கேரக்டரிலேயே தெரிந்துவிடுகிறது! படத்தில்
டயலாக் டெலிவரி என்று ஒன்று உண்டில்லையா அது போன்று ஒவ்வொரு உரையாடலும் நம் மனதில்
சினிமா காட்சி போன்று ஓடுகிறது.
மகளுக்குப் படிக்க வேண்டும்,
வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை. அம்மாவுக்கோ மகளைக் கதாநாயகி ஆக்கிப் பார்க்க
வேண்டும் என்ற ஆசை.
சகநடிகை தோழி கிரிஜா, தான் எப்படி
முன்னுக்கு வந்தேன் என்பதைச் சொல்லி, "உனக்கு
அட்ஜஸ்ட் பண்ண பிடிக்கலை, உங்கம்மாவுக்கு உன்னை வேலைக்கு அனுப்பப் பிடிக்கலை"
அதனால பசை உள்ள நடிகரோ, டைரக்டரோ, தயாரிப்பாளரையோ பிடித்துக் கொள்ளச் சொல்கிறாள்.
ஏற்கனவே அவருக்கு மனைவி இருந்தாலும். அவளே ஒரு வளர்ந்து வரும் டைரக்டரையும் அனுப்புகிறாள்.
அவன் எந்த நோக்கத்தோடு வருகிறான்
என்பது தெரிந்ததும் இவள், தான் அப்படியானவள்
இல்லை என்று சொல்லி டைரக்டரை திருப்பி அனுப்பிவிடுகிறாள். அவள் மனம் பொங்குகிறது.
முடிவு அருமை. குறிப்பாக அந்தக் கடைசி
வரி!
கிட்டத்தட்ட ஒரு சினிமாவையும் சினிமா உலகையும் பார்த்தது போன்ற ஒரு ஃபீல்! சரளமான எழுத்து. டக் டக்கென்று சீன் மாறுவது போன்ற உரையாடல்கள்! கதை வரிகள்!
ஆசிரியருக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!
கேப்டன் குக்
துரை தனபாலன்
ஆசிரியர் - கதை, கவிதை, கட்டுரை, சொற்பொழிவு நான்கிலும்
தமிழுக்குத் தொண்டாற்றிவருகிறார். இவரைப் பற்றி முக்கியமான குறிப்பு, 'தமிழ் ழகரப்
பணி மன்றம்' எனும் அமைப்பின் மூலம் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் உச்சரிப்புப்
பயிற்சி அளிக்கிறார். மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கவென்றே 'மணிக்குறட்பாக்கள்'
என்ற நூலும் இவரது குறிப்பிடத்தக்க படைப்பு. இன்னும் பல சிறப்புகளுக்குரியவர்!
கதை - இங்கிலாந்தின் கடற்படைத்
தளபதியான 'கேப்டன் குக்' என்பவர்தான் கதை சொல்லி. அவர் விவரிக்கும் கடற் பயணம். மூன்றாவது கடற்பயணத்தை
மேற்கொள்கிறார். இங்கிலாந்தில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலையும், பசிஃபிக்
பெருங்கடலையும் வடமேற்கில் இணைக்கக்கூடிய கடற்பாதை ஒன்று இருப்பதாக ஐரோப்பாவில்
நிலவி வரும் நம்பிக்கையைக் கண்டுபிடிப்பதற்காக இரண்டு கப்பல்களில் புறப்படுகிறார்கள்.
கதையின் மூலம் பல தகவல்கள்
கிடைப்பதோடு நாமும் கடற்பயணம் செய்வது போன்ற அனுபவத்தைத் தருகிறது.
பயணம் செய்து கொண்டிருக்கும் போது கேப்டன்
குக் குழுவினரின் சமையலுக்குத் தேவையான விறகுகள் குறைகின்றன எங்கேனும் தீவுகள்
தென்பட்டால் இறங்கி சேகரித்துக் கொள்ளலாம் என்று பார்த்துக் கொண்டே வரும் போது,
ஒரு தீவைப் பார்த்திட அங்கு கப்பலை நிறுத்துகிறார்கள்.
அந்தத் தீவில் அவர்களுக்குக் கிடைக்கும்
அனுபவங்கள் என்ன? முடிவு என்னாகிறது என்பதுதான் கதை.
சுவாரசியமான வரலாற்றுக் கதை, ஆங்கில இலக்கியத்தைத் தமிழில் படிப்பது போன்று இருக்கிறது. கதையைச் சொல்வதை விட வாசித்தால்தான் அந்த அனுபவத்தை உணரமுடியும். மிக அழகாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்
பாராட்டுகள்!
நட்புகள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
-----கீதா
எல்லா கதைகளையும் மிகவும் ரசித்து படிதிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. நல்ல அறிமுகம்.
பதிலளிநீக்குநன்றி பானுக்கா
நீக்குகீதா
இன்றைய கதைகள் விவரம் படித்ததும் உடனே படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வருகிறது. பெரிய ஜாம்பவான்கள் அனாயாசமாக கதைகள் எழுதுகிறார்கள். அவர்கள் துறை சார்ந்து கதை எழுதும்போது இன்னும் கூட சிறப்பாகி விடுகிறது.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம். ஜாம்பவான்கள்தான். உங்கள் வரிகளை அப்படியே டிட்டோ செய்கிறேன்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்தான் நிறைய கதைகள் எழுதுகிறார்கள் போல! தினசரி பொதுமக்களை பார்த்துப் பார்த்து நிறைய கதைக் கருக்கள் டெபாசிட்டில் வைத்திருப்பார்களோ...
பதிலளிநீக்குஹாஹாஹா....நீங்க சொல்லிருப்பது போல் நிறைய கதைக்கருக்கள் டெபாசிட்டில் இருக்கும் போலும். ஆனால் இந்தக் கதை வங்கிக்குத் தொடர்பில்லாத சமூகக் கதை.
நீக்குகீதா
திரைத்துறையில் அட்ஜஸ்ட்மெண்ட்ஸ் இருக்கிறதுதான் என்றாலும் அவற்றிலிருந்து தப்பித் பிழைத்தவர்கள் கதையும் இருக்கிறது. ஆனாலும் அவர்களுக்கு கிடைக்கும் பெயர் கெட்ட பெயர்தான், இல்லையா? நான் மிகவும் மதித்த இயக்குனர் பற்றி கூட அப்படி கேள்விப்பட்டபோது உண்மையா என்று தெரிந்து கொள்ள முடியாமல் நொந்து போயிருக்கிறேன்.
பதிலளிநீக்குஇதை நான் பல முறை யோசித்திருக்கிறேன். தப்பியவர்களைப் பற்றி. அப்படித் தப்பிப்பவர்களைக் கூட, திரைத் துறை என்றாலே "அவ அப்படித்தான்" அப்படின்னு போகிற போக்கில் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டுப் போய்விடுவதும் நடக்கிறதே.
நீக்குபொதுவெளிக்கு வந்துவிட்டால் எல்லா விமர்சனங்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று சொல்லப்பட்டாலும், இப்படியான அவதூறு விமர்சனங்களை எப்படி ஏத்துக்க முடியும்? மனம் எவ்வளவு வேதனைப்படும் இல்லையா?
நன்றி ஸ்ரீராம்
கீதா
கேப்டன் குக் பற்றி பாடத்தில் படித்திருக்கிறோமோ.... ஆங்கில துணைப்பாடம்!
பதிலளிநீக்குஆமாம், எனக்கும் படித்த நினைவு இருக்கு.
நீக்குகீதா
நல்ல விமர்சனம். புத்தகம் வாங்கியதற்கு ஜஸ்டிஃபை பண்ணிட்டீங்க.
பதிலளிநீக்குஆனாலும் உங்களுக்குப் பொறுமை மிக அதிகம்.
ஹாஹாஹா நன்றி நெல்லை.
நீக்குமீண்டும் சொல்லுகிறேன், நான் புத்தகம் வாங்கவில்லை. பரிசுடன் கிடைக்கப்பெற்றேன்.
நன்றி நெல்லை
கீதா
மிகவும் அழகாக ஆழமாக அற்புதமாக கவனமாக விமர்சனம் செய்து எழுதி விட்டீர்கள். உங்கள் பார்வையின் விசாலம்... சார்பற்ற தன்மை நிச்சயமாக போற்றுதலுக்குரியது.
பதிலளிநீக்குதாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பாராட்டுகள். நன்றி.
- பாலசாண்டில்யன்
மிக்க நன்றி சார் தங்களின் ஊக்கமளிக்கும் கருத்திற்கு
நீக்குகீதா