(சிம்லா நாட்கள் - 3 விரைவில் வரும். முடிவுத் தொடர். துளசிக்குச் சற்று உடல் நலம் சரியில்லாததால் காணொளிக்கான குரல் அவரால் கொடுக்க முடியவில்லை. இந்த வாரம் அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார். பார்ப்போம்.)
பரிந்தோம்பிக் காக்க வேண்டிய ஒழுக்கம்
சுஜாதா அவர்கள் எழுதிய கதையான ஓலைப்பட்டாசு கதையில் சுஜாதா சொல்லியிருந்த ஒரு சம்பவம் குறித்து எங்கள் ப்ளாகில் நம்ம ஜெ.கே. அண்ணா, தான் வேலை பார்த்த இடத்தில் தனக்கும் கிட்டத்தட்ட அதே போல ஒரு சம்பவம் நடந்ததாகச் சொல்லி எபியில் சென்ற சனிக்கிழமை எழுதியிருந்தார்.
எனது நெருங்கிய உறவுக்காரர் ஒருவருக்கும்
அதை ஒத்த ஒரு சம்பவம் கசமுசா புத்தகம் அல்ல ஆனால் கசமுசா சம்பவமே நடந்தது. இங்கல்ல
வெளிநாட்டில். பெயர்கள் எதுவும் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாகச் சம்பவத்தைச் சொல்கிறேன்.
நம்ம கதாபாத்திரம் ஆப்பிரிக்க
நாடுகளில் மக்கள் தொகை கொஞ்சம் அதிகம் இருக்கும் நாட்டில் மிகவும் பழமைவாய்ந்த தேசிய
பல்கலைக்கழத்தில் கல்லூரி பேராசிரியர் பணிக்குச் சென்றார். தலைநகரிலேயே இருந்தது அப்பல்கலைக்கழகக்
கல்லூரி. நம்ம அண்ணா யுனிவெர்சிட்டி போல என்றும் சொல்லலாம். அந்த நாட்டின் கல்வி அமைச்சகத்தின்
கீழ் என்பதால் மாணவர்களின் சேர்க்கையும் அதன் பொறுப்பில். அதன் தலைமை நம்ம நாட்டில்
தேசிய அளவில் மிகவும் புகழ்வாய்ந்த கல்வி நிறுவனத்தில் பேராசியராக இருந்த ஒருவர்.
அமைச்சகத்தின் கீழ் நேரடியாக என்பதால்
நம் நபரும் ஆர்வத்துடன் சென்றார். இருப்பிடமும் தலைநகரிலேயே. இன்னொரு தமிழர், பெங்களூரைச்
சேர்ந்த இருவர், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர், ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் - அப்படியாக
6 பேர் ஒரே சமயத்தில் சேர்ந்தனர். இந்த ஆறு பேரும் தங்குவதற்கு ஒரு வீடு பார்த்தார்கள்.
அந்த வீட்டு உரிமையாளர் பெண்மணி அந்நாட்டவர் என்றாலும் அமெரிக்காவில் வாசம்.
அந்த வீட்டின் அமைப்பு கீழ் தளம்
மற்றும் இரண்டு மேல் தளங்களை உடையது. கீழ் தளத்தில் எல்லாருக்கும் பொதுவான அடுக்களை,
வரவேற்பு அறை, இரண்டு அறைகள். முதல் தளத்தில் இரண்டு சிறிய அறைகள் கதவில்லாமல். அதற்கும்
மேலே இரண்டாவது தளத்தில் இரு அறைகள்.
இந்த வீட்டில் ஏற்கனவே ஆந்திரா/தெலுங்கானாவைச்
சேர்ந்த இருவர் இரண்டாவது தளத்தில் இருந்தனர். எனவே இந்த 6 பேரில் தமிழர்கள் இருவரும்
முதல் தளத்திலும், மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த இருவரும் வீட்டின் கீழ் தளத்திலும் தங்கிட,
பெங்களூரைச் சேர்ந்த இருவரும் அடுத்த குடியிருப்பில் தங்குவதற்கு இடம் பார்த்துக் கொண்டனர்.
எல்லோருமே திருமணமானவர்கள். குடும்பம் உள்ளவர்கள். இருவருக்கு சமீபத்தில் திருமணம்
ஆகியிருந்தது. எல்லோரது குடும்பங்களும் இந்தியாவில்.
நான் சொல்லும் நபரின் துறையில்
பல பிரச்சனைகள் இருந்தன. அதை வேறொரு சமயத்தில், பதிவைப் பற்றிய நினைவிருந்தால் சொல்கிறேன்.
இங்கு சொல்லப் போவது கசமுசா சம்பவத்தால் வந்த பிரச்சனை மட்டுமே.
நம்ம நபர் அவருடன் இருந்த மற்றொரு
தமிழ் நபரையும் தவிர மற்றவர்கள் எல்லோரும் தண்ணியும் அடிப்பார்கள் என்பது தெரிந்திருந்தாலும்,
இந்தச் சம்பவம் வீட்டிலேயே அம்பலம் ஆவது வரை
அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை அவர்கள் இரவில் விலைமாதுகளின் வீட்டிற்குச் செல்வது
அல்லது அப்பெண்கள் வீட்டிற்கு வருவது என்பது.
அப்படி ஒரு நாள் அவ்வப்போதான வழக்கம்
போல வீட்டிற்கு வந்திருக்கிறாள் அந்த விலைமாது. இரண்டாவது தளத்திலிருப்பவர்கள் கீழே
வந்துவிடுவதுண்டாம். எல்லோரும் சேர்ந்து தண்ணி அடித்துவிட்டு சாப்பிட்டு அதகளம் செய்வார்கள்
என்பதால் முதல் தளத்தில் இருந்த நம் நபர்கள் தங்கள் அறைக்குச் சென்று விட்டால் பின்னர்
வெளியில் வரமாட்டார்கள் என்பதால் இருவருக்கும் கீழே நடப்பது தெரிந்திருக்கவில்லை. நல்ல
உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்.
அன்றும், இரண்டாவது தளத்தில் இருந்த
இருவரும் வழக்கம் போல கீழே வந்து காரியம் முடிந்ததும் மேலே சென்றுவிட, கீழ்தளத்துக்
காரர்களும் வேலையை முடித்ததும்தான் பிரச்சனை தொடங்கியிருக்கிறது. பேசிய ரேட்டை அவர்கள்
கொடுக்கவில்லையாம். ஏற்கனவே பாக்கி இருந்திருக்கிறது. அன்று தருகிறோம் என்று சொல்லி
வீட்டிற்கு வரச் சொல்லியிருந்திருக்கிறார்கள். ஆனால், காரியத்தை முடித்துவிட்டு ரேட் கூடுதல் என்று வாதிட்டிருக்கிறார்கள்
கீழுள்ளவர்கள்.
தனக்கு வர வேண்டிய பாக்கியும்,
அன்றைய ரேட்டும் சேர்த்து தர வேண்டும் என்றிட கீழிருந்த இருவரும் மேலே உள்ளவர்களிடம்
கேள் என்று சொல்லிட அவளுக்கு மேலே நம்ம நபர்களும் இருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாதே.
இவர்கள் இருவரும் நல்ல உறக்கம்.
திடீரென்று அறைக்குள் அப்பெண் வந்து இருட்டில் நம்ம நபரைப் பிடித்துக் கொண்டு காச்
முச்சென்று ஹை டெசிபலில் அவர்கள் மொழியில் கன்னாபின்னாவென்று கத்தியிருக்கிறாள். நபர்
வெலவெலத்துப் போய்விட்டார். கூட இருந்த மற்றவர் அவளைப் பிடித்து தள்ளி இந்த நபரைக்
காப்பாற்றி லைட்டை ஆன் செய்யப் போனால் கரன்ட் இல்லை என்பது தெரிந்திருக்கிறது. அங்கு
இரவு நல்ல குளிர் என்பதால் ஃபேன் போட்டுக் கொள்ளத் தேவையிருக்கவில்லை. அதனால் மின்சாரம்
இல்லை என்பதும் தெரியவில்லை.
கீழே இருந்தவர்களும் மேலே தள்ளாடிக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவளைப் பிடித்து இழுத்திட, அவளுக்குத் தெரிந்துவிட்டது தான் தவறான
அறைக்கு வந்திருக்கிறோம் என்று உடனே மற்ற இருவர் எங்கே என்று கேட்டிட, நம்ம நபர்களில் இளைஞர் மேலே சென்று அவர்களையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். இரண்டாவது தளத்தில்
இருந்த இருவரையும் அவள் இழுத்துக் கொண்டு வந்திருக்கிறாள் கீழே, பஞ்சாயத்திற்கு.
மற்ற நால்வரும், இரவில் விலைமாதுகளின்
வீட்டிற்கோ, அவர்களின் கூடும் இடத்திலோ அல்லது அவர்களை வீட்டிற்கோ வரவழைப்பது வழக்கம்
என்றும் இப்பெண்ணும் அவர்களில் ஒருவர். அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்பவள் என்றும்
அப்போதுதான் தெரிந்திருக்கிறது.
ஆறு பேரும் கீழே ஹாலில். மின்சாரம்
இல்லை. எனவே யாரும் ஓடிடக் கூடாது என்று வாசல் கதவை தாழ் போட்டுக் கொண்டு அப்பெண் கதவருகில்
நின்று கொண்டு, நம்ம நபர்கள் இருவரிடமும் மற்ற
நால்வரும் எவ்வளவு தர வேண்டும் என்றும் தன்னை ஏமாற்றுவது பற்றியும் சொல்லி நியாயம்
கேட்டிருக்கிறாள். இவர்கள் தங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிட
அவளோ, "என் ஆட்கள் அத்தனை பேரையும் கூப்பிடுவேன், போலீஸையும் கூப்பிடுவேன். நீங்க
எல்லாரும் வேறு நாட்டவர்தானே" என்று மிரட்டியிருக்கிறாள். அந்நாட்டில் விபச்சாரம்
என்பது சட்டத்திற்குப் புறம்பானதல்ல.
பதற்றமான நிலை.
எந்த இடத்திலும் பரிந்தோம்பிக்
காக்க வேண்டிய ஒழுக்கத்தை ஒரு வெளிநாட்டில் போய் இப்படி ஒரு மோசமான மனநிலையில் நம்மமக்கள்.
இருக்கும் இடம், தாங்கள் செய்யும் உன்னதமான தொழில், தங்கள் குடும்ப ஸ்டேட்டஸ் எல்லாம்
புறம் தள்ளி, குடும்பத்திற்கும் துரோகம் இழைத்து, என்ன ஒரு கீழ்த்தரமான வாழ்க்கை. ஒழுக்கம்
கெடுதல் இழிந்த பிறப்பின் தன்மையாகி விடாதா?
ரொம்பவே Authentic நபரான நம் நபர்
மற்ற நால்வரையும் நன்றாகத் திட்டியிருக்கிறார். தாங்கள் சிக்குவது மட்டுமில்லாமல் தங்களோடு
தங்குகிறவர்களையும் பிரச்சனையில் மாட்டிவிடுவதற்காகவும், மனைவி குழந்தைகள் இருக்க இப்படி
வெளிநாட்டில் ஆசிரியர் வேலைக்கு வந்து அசிங்கமாக நடந்து கொண்டதற்கும், நம்ம நாட்டைப்
பற்றிக் கேவலமாக நினைக்க வைக்கிறார்களே என்றும்.
அந்த நால்வரிடமும் அவள் கேட்கும்
பணத்தைக் கொடுக்கச் சொன்னால் அந்த நால்வரும் சேர்ந்து இவர்களுடனும் சண்டைக்கு வர குடி
வாடையும், வாந்தியும் என்று சூழலே மோசமாகிட,
நம்ம நபர்கள் இருவரும் அவளைக் கெஞ்சி மறுநாள் காலையில் வந்து அவர்கள் தெளிந்ததும்,
பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி சமாதானப்படுத்தி அனுப்பிய பிறகும் அன்றைய இரவு உறக்கம்
போய் எப்படா விடியும் என்று உறங்காமல் விழித்திருந்திருக்கிறார் நம்ம நபர். கூட இருந்த
இளைஞர் அவர் சம்பவத்தைச் சட்டென்று கடந்துவிட்டார். இந்த நபரால் அது முடியவில்லை.
விடிந்ததும் இந்த இருவரும் செய்த
முதல் வேலை தங்குவதற்கு வேறொரு இடம் பார்த்து இவர்கள் இருவரும் மட்டுமே தங்கும்படியான
இடத்திற்கு உடனே மாறிவிட்டார்கள்.
அந்த நால்வரும் இந்த நபருக்கு
எதிர்வினைகள் ஆற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஒரு நாட்டில், வெளிநாட்டவர்கள்,
இப்படி ஏதேனும் வம்பில் சிக்கிக் கொண்டால் அந்த நாட்டின் சட்டம் அவர்களின் வாழ்க்கையையே
தடம் புரட்டிப் போட்டுவிடுமே! அதுவும் குற்றமே செய்யாமல் வாழ்க்கை பறி போனால்?
நல்ல தட்பவெப்ப நிலையும், வளம் மிகுந்த பூமியும், சல்லிசான விலையில் தரமான பொருட்களும் நிறைந்த இடமாக இருந்தது என்றாலும் நம்ம நபருக்கு அந்தச் சம்பவம் மிகவும் பாதித்ததோடு இவர் வேலை பார்த்த துறையில் ஊழல்களும் இருந்ததாலும், கல்வித் துறை அமைச்சகத்தின் தலைமை 'ரிசைன் பண்ணாதீர்கள்' என்று கேட்டுக் கொண்டாலும் கூட, தன்னால் இப்படியான சூழலில் வேலை செய்வது கடினம் என்று நேரடியாகவே எழுதிக் கொடுத்துவிட்டு, வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டார். மிஞ்சிப் போனால் 8 மாதங்கள் இருந்ததாகச் சொன்ன நினைவு. ஆனால் அந்த விலைமாது சம்பவத்தின் தாக்கம் மட்டும் அவர் மனதை விட்டு அகல பல வருடங்கள் ஆயிற்று.
-----கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குநல்ல சிறப்பான கட்டுரை. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
என்றபடி ஒழுக்கத்தை ஒருவர் தம் உயிருக்கும் மேலாதான நினைத்து அதன்படி நடந்து கொண்டால் சிறப்பைத் தருகிறது என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.
நீங்கள் குறிப்பிட்ட நபர் உடனே வேறு வீடு மாற்றியதுமில்லாமல், அந்த வேலையையே வேண்டாமென கூறி விட்டு வந்தது அவர் எவ்வளவு தூரம் ஒழுக்கத்தை கடைப்பிடித்துள்ளார் என்பதை பறை சாற்றுகிறது. அந்த இரவில் அவர் எந்தளவு மனப்பதற்றம் அடைந்திருப்பார் என ஊகிக்க முடிகிறது. வாழ்க அவரின் நல்ல எண்ணங்கள்.
நல்ல எழுத்துக்களில் இக்கதையை கட்டுரையாக வடித்துத் தந்தமைக்கு உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலாக்கா. குறிப்பிட்ட நபர், வேலையை உதறிவிட்டு வந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்றாலும், வேறு பல பிரச்சனைகள் அவர் துறையில் இருந்திருக்கிர்றது. இருந்தாலும் வேலையை விட்டு வந்தது என்பது அச்சமயத்தில் கடினமாகத்தான் இருந்திருக்கு அவர் குடும்பத்திற்கு.
நீக்குரொம்ப நல்லவராக இருந்தாலும் கஷ்டம் தான் அக்கா.
நன்றி கமலாக்கா
கீதா
மோசமான சம்பவம். கஷ்டமான நிலை. வெளிநாட்டில் செய்ததால் இன்னும் அவஸ்தை. கெட்டபேர் வந்தால் போக வெகு நாட்களாகும். நல்லபெயர் ஒரு நொடியில் காணாமல் போய்விடும்.
பதிலளிநீக்குஆமாம், ஸ்ரீராம். அப்பெண்மணி தங்கள் கூட்டோடு சேர்ந்து போலீஸில் புகார் கொடுப்பதாகவும் இருந்திருக்கிறாள். அதில் இவர்களையும் அந்த நால்வரும் சேர்த்துவிட எதிர்வினை புரிந்திருக்காங்க.
நீக்குபெயர் போச்சுனா அம்புட்டுத்தான் ஸ்ரீராம். அதுவும் அவங்க ஊர் சட்டம் எப்படியோ?
நன்றி ஸ்ரீராம்
கீதா
அதுசரி, இது மாதிரி சம்பவம் நம்ம ஊரிலேயே சென்னையில் நடந்திருக்கிறதே...
பதிலளிநீக்குஎது?
காரியம் முடிந்ததும் காசு கொடுக்காமல் கம்பி நீட்டப் பார்த்தது...
அப்படிச் செய்தவர்கள் நம்ம நாட்டில் பெரிய தலைவர்கள் ஆகி விடுகிறார்கள்.
சென்னையிலேயேவா!
நீக்குஅப்படிச் செய்தவர்கள் நம்ம நாட்டில் பெரிய தலைவர்கள் ஆகி விடுகிறார்கள்.//
ஹாஹாஹா அதென்னவோ சரிதான். ஆனா அதுக்குப் பிறகு சொத்துகள் வாங்கிக் கொடுப்பாங்களோ?!
கீதா
எச்சில் கையால் ஈ ஓட்டாதவனைப் பற்றி ஸ்ரீராம் எழுதியிருக்கிறார். அவன் குடும்பமே ஆசியாவில் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள்.
நீக்குஎன்னதான் சொல்லுங்க.. இதற்காக நல்ல வேலையை உதறிவிட்டு வந்து விடுவது நியாயமான செயலாகப் படவில்லை. நம்ம நிலையையும், பொண்டாட்டி பிள்ளையையும் நினைத்துப் பார்க்கணுமே...
பதிலளிநீக்குஉண்மைதான் நீங்க சொல்றது. ஆனால் வேறு பல பிரச்சனைகள் இதோடு கூடவே வந்திருக்கிறது ....நபர் வேறு விஷயங்களில் தைரியமாக இருந்தாலும் இப்படியான விஷயங்களில் கொஞ்சம் டென்ஷனாகும் நபர் ஊழலைத் தாக்குப் பிடிக்கமுடியவில்லை என்றும் தெரிந்தது. பழி எல்லாம் இவர் மீதே வந்திருக்கிறது அதனால் முடியாமல்...என்றாலும் எனக்கும் நீங்கள் சொல்லியது தோன்றியது, ஸ்ரீராம்
நீக்குகீதா
உன் நண்பன் யாரென்ஞ்ச் சொல். உன்னை யாரென்று சொல்கிறேன் என்பார்கள். கேடானவர்களுடன் கூட இருந்தது துன்பமாயிற்று,
பதிலளிநீக்குஆமாம் ஆனால் அவங்க கேடானவங்கன்னு முதல்ல தெரியாதே. வெளியூருக்குப் போகும் போது வாடகையைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பது கொஞ்சம் சௌகரியமாச்சே அதனால் முன்னபின்ன தெரியாதவர்களுடன் தங்கும்படி நேரும். என்ன செய்ய? ஒரு சிலரைக் கஷ்டங்கள் துரத்திக் கொண்டே இருக்கும் போலும்.
நீக்குகீதா
இந்த மாதிரி செயல்கள் பலரிடம் சகஜம். என் அனுமானப்படி, குடிப்பதுதான் இத்தகைய செயல்களுக்கு நம்மை இட்டுச்செல்லும் முதல் படி.
பதிலளிநீக்குநானும் இந்த மாதிரி விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஒருவரை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
நானும் இந்த மாதிரி விஷயங்களில் டென்ஷனாகிவிடுவேன். சிறிய தவறும் நம்முடைய பல்லாண்டு நற்பெயரைக் கெடுத்துவிடும். இது பற்றி ஒரு நாள் எழுதுகிறேன் (வேற எங்க? எங்கள் பிளாக்கில்தான் ஹாஹா)
நிச்சயமாகக் குடிதான் புத்தியை மழுங்கடித்து இப்படியான செயல்களுக்கு இட்டுச் செல்கிறது.
நீக்குஅது இல்லாமலும் இப்படி ஈடுபடுகிறவர்கள் இருக்காங்க நெல்லை. அதுல ஒரு ஆளின் மனைவி சொல்லிக்குவாங்க, அவருக்கு எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாது இதைத் தவிரன்னு!!!!!!!
சிறிய தவறும் நம்முடைய பல்லாண்டு நற்பெயரைக் கெடுத்துவிடும். இது பற்றி ஒரு நாள் எழுதுகிறேன் (வேற எங்க? எங்கள் பிளாக்கில்தான் ஹாஹா)//
நிச்சயமாக டென்ஷன் வந்துவிடும் நெல்லை. பெயர் போனா போனதுதானே...
எழுதுங்க எழுதுங்க....
நன்றி நெல்லை
கீதா
உங்க பதிவில் இரண்டு விஷயங்களைச் சொல்லியிருக்கீங்க.
பதிலளிநீக்கு1. இந்த மாதிரி பெண் விஷயங்கள்.
2. அலுவலக ஒழுக்கம் (அதாவது நேர்மை).
இரண்டும் வெவ்வேறு. அதனால் ஒரே பதிவில் கலந்திருக்கவேண்டாம்.
நான் அலுவலக ஒழுக்கத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுப்பேன். அதுவும் தவிர என் இமேஜை எப்போதும் நன்றாகக் காத்துக்கொள்வேன். ஒரு தடவை தவறிவிட்டால் பிறகு என்ன செய்தாலும் நம் இமேஜ் போனது போனதுதான். குடிகாரனையும், ஏதோ ஒரு நாள் குடித்தவனையும் ஒரே தட்டில் வைப்பது போல.
நெல்லை அலுவலக ஒழுக்கம் பத்தி ஜஸ்ட் ஒரு லைன் சொல்லிட்டு பின்னாடி பதிவு எழுத தோன்றினால் நினைவிருந்தால் சொல்லுகிறேன்னு தான் போட்டிருக்கேன். விவரிக்கவில்லை விவரித்தால் நிறைய போகும்.
நீக்குஅந்த ஒரு லைன் தானே நெல்லை.
//நான் அலுவலக ஒழுக்கத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுப்பேன். அதுவும் தவிர என் இமேஜை எப்போதும் நன்றாகக் காத்துக்கொள்வேன். //
சூப்பர். நேர்மையாகவும் இருந்து இமேஜையும் காத்துக் கொள்வது என்பது தனிக் கலை. அது எல்லாருக்கும் வசியமாவதில்லை என்றே எனக்குத் தோன்றும், நெல்லை.
அப்படிக் கறாராக இருப்பதுமே கெட்டதாகப் பார்க்கப்பட்டு இது சரிப்பட்டுவராது என்று சொல்லப்பட்டால்?!
//குடிகாரனையும், ஏதோ ஒரு நாள் குடித்தவனையும் ஒரே தட்டில் வைப்பது போல.//
நன்றி நெல்லை
கீதா