செவ்வாய், 8 ஜூலை, 2025

சிம்லா நாட்கள் - 2

 

சென்ற பதிவில் கால்காவிலிருந்து சிம்லாவிற்கான டாய் ரயில் 7.15 ற்கு என்று தவறாக வந்துவிட்டது. 7 மணிக்குக் கால்காவிலிருந்து (ஹிந்தியில் कालका வாம். எனவே கால்கா) சிம்லாவுக்குச் செல்லும் ஹிமாலயன் தர்ஷன் எனும்  டாய் ரயிலில் முன்பதிவு செய்திருந்த பயணம். 1 1/2 மணி நேரம்தான் இருந்தது. டாய் ரயிலில் எங்களால் பயணிக்க முடிந்ததா? என்று சென்ற பதிவின் கடைசி வரி. 

கால்கா சிம்லா ரயில் பாதை பற்றிய தகவல் இப்படத்தில் உள்ளது. கால்கா-சிம்லா குறுகிய ரயில் பாதைக்கான திட்டம் நவம்பர் 1847ல் போடப்பட்டாலும் தில்லியிலிருந்து கால்கா வரையான அகலப்பாதை 1891ல் ஜனவரி 3 ஆம் தேதி திறக்கப்பட்டதன் பிறகுதான், கால்கா சிம்லாவுக்கான 95.57 கிமீ பாதை, உத்தேசமாக 19 ஆம் நூற்றாண்டு இறுதியில் போடத் தொடங்கப்பட்டு, லார்ட் கர்சன் வைஸ்ராயாக இருந்த போது 1903, நவம்பர் 9 ஆம் தேதி போக்குவரத்து ஆரம்பித்தது என்ற தகவல். இப்பாதையில் இருக்கும் 102 சுரங்கப்பாதைகளும் 1900-1903 ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டவை. இதைப் பற்றிய மீதி சுவாரசியமான தகவல் படத்தில். 

இந்த லைனில் செல்லும் எல்லா ரயில்களுமே டாய் ரயில்கள் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு பெயர்களில். கால்கா சிம்லா எக்ஸ்பிரஸ், ஹிமாலயன் க்வீன், ஹிம் தர்ஷன் எக்ஸ்பிரஸ், ஷிவாலிக் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் என்று. 

25-04-2024 - புதன் - 5.30 மணி வரை சண்டிகார் நிலையத்தில் ரயில் வரவில்லை என்பதால் உடனே, எங்கள் பெட்டிகளுடன் ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வந்து 2 ஆட்டோக்களில் ஒவ்வொரு ஆட்டோவிலும் மூன்று பேர் வீதமாகக் கால்கா ரயில் நிலையம் நோக்கிப் போனோம். 6.45 ற்குக் கால்கா ரயில் நிலையத்தை அடைந்து 7 மணிக்குக் கிளம்பும் ரயிலில் ஏறும் வரை பதைபதைத்துப் போனோம். 

ஹிம் தர்ஷன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள்
ஆனால் அந்த டாய் ரயில் பயணம் முந்தைய நாளின் இரவின் எல்லா வேதனைகளையும் மாற்றிய ஒரு சஞ்சீவி என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு அருமையான பயணம். காண்பதற்கரிய காட்சிகள். 100க்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகள். மலைச் சரிவுகளில் சிறிய கிராமங்கள், பட்டினங்கள். கூடவே சில இடங்களில் பயணிக்கும் சாலைகளும் வாகனங்களும்.

12.45 ற்கு சிம்லா ரயில் நிலையம் அடைந்தோம். எங்களை அழைத்துச் செல்ல இரு கார்கள்.

சிம்லா ரயில் நிலையம்
2076 மீ உயரத்தில் சிம்லா ரயில் நிலையம் (6811 அடி) 1903 ஆம் வருடம், கட்டப்பட்டது. மீதி தகவல்கள் படத்தில்

சிம்லா ரயில் நிலையம் பாரம்பரியமான நிலையம் என்று யுனெஸ்கோ சான்றிதழ் 2008ல் வழங்கப்பட்டுள்ளது. 

முந்தைய இரவு தூங்காததால் ஹோட்டலை அடைந்து எங்களுக்கான மூன்று அறைகளில் தூங்கினோம். 3 பகல்கள், இரண்டு இரவுகள் - 3 பகல்களில் இறங்கிய அன்று 12 மணிக்குச் செக் இன். இரண்டாவது நாள் முழுவதும். 3 வது நாள் 12 மணிக்குச் செக் அவுட் -  உள்ளிட்ட மூன்று நாட்களுக்கு ரூ 21,600 ஆனது. 

3.30 க்கு மேல் கிளம்பி அருகே இருந்த, வயதான சுஷர்மா ஷர்மா என்பவரின் போஜன சாலாவில் உருளைக் கிழங்கை உள்வாங்கிய ஆலு பராட்டா, சாப்பாத்தி சாப்பிட்டோம்.  

சிம்லா நகரத்தைப் பற்றிய தகவல்

1815-16 ல் "கோர்க்கா (கூர்க்கா) போர்" முடிவுக்கு வந்த போதுதான் சிம்லா நகரம் உருவானது என்றும் பிரிட்டிஷ் சில ராணுவப் பகுதிகளைத் தங்கள் கீழ் வைத்துக் கொண்டு, "Sanitaria" பகுதியை பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்கள் குடும்பத்துக்கான விடுமுறைக்கான இல்லங்களாக்கிக் கொண்டார்கள் என்று தகவல். அதாவது உடலநலம் சரியில்லை என்றால் இங்கு அந்து தங்கி ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளும் இடமாக. "Sanitaria" - சானிட்டேரியா பகுதி  பிரிட்டிஷ் காலத்து கட்டிடக் கலையில் பெரும்பாலும் பெரியதாகவும் விசாலமாகவும் இருக்கும், இந்த சானிடேரியாக்கள் பெரும்பாலும் பிரமாண்டமான கட்டிடக்கலையில் வடிவமைக்கப்பட்டதோடு அழகிய இயற்கைக் காட்சிகள் இருக்கும் இடங்களில் அமைக்கப்பட்டனவாம். இன்று, பல சானிடேரியாக்கள் ஹோட்டல்கள், விருந்தினர் மாளிகைகள் அல்லது பாரம்பரிய தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளனவாம். சுற்றுலாப்பயணிகளுக்கு பிரிட்டிஷ் காலத்து சிம்லாவைப் பார்த்தது போலவும் இருக்கும்.

சிம்லாவில் முதன் முதலில் கட்டப்பட்ட வீடு 'கென்னடி வீடு" என்று சொல்லப்படும் வீடு. அடிப்படை வசதிகளுடன் நீண்ட காலம் அங்கேயே தங்க வேண்டியிருந்ததால் லெப்டினன்ட் சார்லஸ் பாட் கென்னடி 1822  ஆம் ஆண்டு கட்டிய வீடு 'கென்னடி ஹவுஸ்' சிம்லாவின் முதல் நிரந்தர வீடாம்.

******

சாப்பிட்ட பிறகு நாங்கள் இருந்த இடத்திலிருந்து 1 கிமீ தூரம் உள்ள மால்ரோட்டிற்கு, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் முன்பில் உள்ள சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வந்த ஹிமாச்சல பிரதேச அரசுப் பேருந்தில் ஏறி - பயணக் கட்டணம் ரூ 10 ஒருவருக்கு - பேருந்து நிலையம் சென்றடைவதற்குச் சற்று முன்பான மால் ரோட் லிஃப்ட் எனும் நிறுத்தத்தில் இறங்கினோம். அங்கிருக்கும் லிஃப்டில் ஏறி மால்ரோடை அடையலாம். லிஃப்டில் செல்ல சீட்டு வாங்க வேண்டும். ஒரு நபருக்கு ரூ 10. வாங்கிக் கொண்டு ஏறி மால் ரோடை அடைந்தோம். இந்த லிஃப்ட் வசதி சமீபத்தில் வந்த ஒன்றாம். முன்பெல்லாம் கிடையாதாம். மால் ரோடில் வித்தியாசமான காட்சிகளைக் கண்டு கொண்டே நடந்து தங்கியிருந்த ஹோட்டலை அடைந்தோம்.

மால்ரோடில்

மால் ரோடு பற்றிய தகவல். பதிவு பெரிதாகிறது என்பதால் இதைத் தமிழில் தரவில்லை. மால் ரோடு மற்றும் அதை ஒட்டிய 'த ரிட்ஜ்' எனப்படும் பகுதிக் காட்சிகள்

மால் ரோடை ஒட்டிய 'த ரிட்ஜ்' பகுதியில்

இங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அனுமன் வலப்பக்கம் ஜாக்கூ மலை மேலே. இங்கு சென்ற தகவல் கீழே

ரிட்ஜ் இங்கே சில சிலைகளைப் பார்க்கலாம். தூரத்தில் இந்திராகாந்தி சிலை.  இங்கு குளிர்காலத்தில் பனி பொழிந்து தேங்கினால் இங்கிலாந்தைப் போன்று  இருக்குமாம்


26-04-2024 - வியாழன் காலை குஃப்ரிக்குப் போக ஒரு Bolero  வண்டியை ஏற்பாடு செய்தோம். முதலில் ஜாக்கூ மலைக் கோவிலுக்குப் போனோம். சிம்லாவில் எங்கிருந்து பார்த்தாலும் தெரிகின்ற அனுமன் சிலை உள்ள இடம். மேலே செல்ல எஸ்கலேட்டர் வசதி உண்டு. 

மேலே செல்ல எஸ்கலேட்டர்

இதில் சுவாரசியமான தகவல். உங்கள் உடல் ஆரோக்கியத்தைச் சோதிக்கவும் என்று ஒவ்வொரு வயதினருக்கும் இக்கோவிலுக்கு நடந்து செல்லும் போது எடுக்கும் நேரத்தைப் பொருத்து ஆரோக்கிய அளவீடு கொடுத்து ஒரு பலகை.

பின் அங்கிருந்து குஃப்ரிக்குச் சென்றோம். 

செல்லும் வழியில்

குஃப்ரியில் பார்க்க வேண்டிய இடத்திற்குக் குறிப்பாக மஹாசூ உச்சிக்குக் குதிரை/கோவேரி கழுதை யில்தான் செல்ல முடியும் என்று சொல்லப்பட்டது. ஆளுக்கு ரூ 1000 சென்று திரும்பி வருவதற்குக் கொடுத்துக் குதிரையில் ஏறினோம். இரு புறமும் கால் வைத்து Balance செய்ய இரும்பு வளையம் உண்டு. ஆனால் பிடிப்பதற்கு நாம் அமர்ந்திருக்கும் இருக்கை மட்டுமே. விழுந்தால் படுத்த படுக்கையாகிவிடத்தான் வாய்ப்பு. சிவநாமத்தைச் சொல்லி 20 நிமிடப் பயணத்தில், இடத்தை அடைந்தோம். 

குதிரையின் மீது
குஃப்ரியில் குதிரையிலிருந்து இறங்கியதும் முன்பில் Yak க்குகள்.

கொஞ்சம் தள்ளி தொலை நோக்கியில் சுற்றியுள்ள பனி படர்ந்த மலைகளையும், சிம்லா ஒப்பந்தம் நடைபெற்ற கட்டிடத்தையும் பார்த்தோம். 

பின்னர் பூத்து நிற்கும் ஆப்பிள் மரங்களைப் பார்த்தோம்.

 

அதன் பின் zipline போன்ற சாகச விளையாட்டுகளில் அருணும் நாங்களும் பங்கெடுத்தோம்.

குஃப்ரியில் அழகான காட்சிகள்

எங்களுடன் வந்தவரில் ஒருவருக்கு உடல்நலமில்லாமல் போனதென்றாலும் பயணத்தைத் தொடர்ந்ததைப் பற்றிச் சொல்லியிருந்தேன். மலைப்பாதையில் Bolero ஓட்டுநர் ஓட்டிய விதம், உடல் நலம் சரியில்லாதவருக்குத் தலைச்சுற்றல், வாந்தியை வரவைத்தது. அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை. மருத்துவனான மகன் அருண் அருகிலிருந்த மருந்துக் கடையில் ORS பாக்கெட்டுகளும் சில மாத்திரைகளும் வாங்கிக் கொடுத்து அன்று இரவைக் கழித்தோம்.

மறு நாள் 27-04-2024 அன்று,சிம்லாவிலிருந்து திரும்ப வேண்டும். அடுத்த பகுதில் தொடர் நிறைவுபெறுகிறது.


-----துளசிதரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக