வியாழன், 3 ஜூலை, 2025

சிம்லா நாட்கள் - 1

 

பயணங்கள் எப்போதும் மனதுக்கு இன்பமளிப்பவை. அப்படியிருக்க தென் மாநிலத்தவர்களுக்கு வாய்க்கும் வட மாநிலப் பயணங்கள், அதிலும் இமயமலைப் பகுதிகள் என்றால் எப்படிப்பட்ட இனிமை அளிக்கும், யோசித்துக் பாருங்கள்! அப்படி ஒரு இனிய பயணம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் (2024) எனக்குக் கிடைத்தது.

நண்பரின் வீட்டுத் திருமணம் 22.04.24 அன்று தில்லியில் என்று முடிவானதும், திருமணவிழாவில் பங்கெடுத்து, கூடவே சிம்லாவுக்குப் பயணம் செய்ய முடிவு செய்தேன். கீதா தேவையான தகவல்களும், பரிந்துரைகளும் தந்தார். கல்லூரிக்குக் கோடை விடுமுறை என்பதால் அதிகமாக யோசிக்க வேண்டாமே. மனைவியும், மகன் அருணும், நானும் போக முடிவு செய்தோம்.  கூடவே உஷாவின் கல்லூரித் தோழிகள் மூவரும் (எல்லோரும் 60 ஐத் தொடவிருந்தவர்கள்) வர, தயாரானார்கள். முன்பும் துபாய் பயணத்தின் போதும் நாங்களெல்லோரும் ஒன்றாகப் பயணித்திருந்தோம். ரயில் பயணச் சீட்டுகளும், தங்குவதற்கு ரயில் நிலையத்தில் ஓய்வெடுக்கும் அறைகளும், சிம்லாவில் ஹோட்டலும் முன்பதிவு செய்தாகி விட்டது. 19/04/24 மாலை திருச்சூரிலிருந்து வண்டியேறி பயணம் முடிந்து 30/04/2024 அன்று மாலை திருச்சூர் வந்து இறங்குவது என்று முடிவு செய்தோம்.

19-04-2024 வெள்ளிக்கிழமை கேரளா எக்ஸ்ப்ரஸ்ஸில் திருச்சூரிலிருந்து கிளம்பினோம். 48 மணி நேரப் பயணம். இரண்டு இரவுகளும் ஒரு பகலும் பயணம். எனவே பயணத்தில் அதிகமாகக் காட்சிகள் கண்ணில் படவில்லை. 21-04-2024 ஞாயிறு மதியம் 1 மணிக்கு புதுதில்லி ரயில் நிலையத்தை அடைந்தோம். 

ஓய்வெடுக்கும் அறையில் (Retiring room) பொருட்களை வைத்துவிட்டு செங்கோட்டைக்குப் போனோம். அரிய பல காட்சிகளையும் கண்டு உள்ளே உள்ள உணவகத்தில் நொறுக்குத் தீனி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து ஊபர் வண்டி பிடித்து இந்தியா நுழைவு வாயிலை அடைந்தோம். வண்ண விளக்குகளில் நீராடி நிற்கும் இந்தியா நுழைவு வாயில் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்கும். மக்கள் வெள்ளம். பிறகு ஓய்வெடுக்கும் அறையை அடைந்து தூங்கினோம்.

செங்கோட்டை - RED FORT - படங்கள் கீழே




இந்தியா கேட் - படங்கள் கீழே

22-04-24 திங்கள் காலை கேரளா ஹவுஸ் உணவகத்தில் காலை உணவு உண்டோம். நானும் மனைவியும், அருணும் மெட்ரோ ரயிலில் குருகிராமத்திற்குப் பயணமானோம். மற்ற மூவரும் அன்று தில்லியில் சில இடங்களுக்குச் சென்று, இரவு ஓய்வெடுக்கும் அறைக்குச் செல்ல முடிவானது.


குருகிராமத்தில் கோவா country க்ளப், அங்குதான் திருமணவிழா. மெட்ரோ நிலையத்தில் இறங்கி ஆட்டோவில் அங்கு சென்றோம். அங்கு நட்பின் உறவுகள், மணமகன் எல்லோரையும் கண்டோம். மாலை மணப்பெண் மற்றும் எல்லோரும் வந்ததும் மணவிழா சடங்குகள் தொடங்கின. எல்லோரது வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் சூழ சடங்குகள் முடிந்தன. நாங்கள் மூவரும் எங்களுக்கான அறையில் தங்கி மறுநாள் காலை 7 மணிக்கு எல்லோரிடமும் விடைபெற்று மெட்ரோவில் ரயில் நிலையத்தை அடைந்தோம். எங்களுடன் வந்திருந்த நட்புகள் மூவரில் ஒருவருக்குக் காய்ச்சல். அவரால் சிம்லா வர முடியுமா? என்ற கேள்வி எல்லோருக்கும். அவரோ அதைப் பொருட்படுத்தாமல் உடன் வரத் தயாரானார்.

23-04-2024 - காலை 11.05 மணிக்குக் கிளம்பும் ரயிலில் ஏறி, 3.30 மணி அளவில் சண்டிகாரை அடைந்தோம். 

சண்டிகர் ரயில் நிலைய முகப்பு 

பொருட்களை clock room இல் வைத்துவிட்டு ஊபரில் ராக் கார்டனுக்குச் சென்றோம். அருமையான காட்சிகள். நெக்சந்த் சைனி என்பவரால் 40 ஏக்கரில் உருவாக்கப்பட்டக் கல் தோட்டம். பாலக்காடு மலம்புழாவிலும் இது போன்ற ஒரு ராக் கார்டன் உண்டு. ஆனால் சண்டிகர் பூங்கா மிகவும் பெரியது. 

ராக் கார்டன் பார்த்த பின் ரயில் நிலையத்தை அடைந்தோம். அங்குள்ள ஒரு உணவகத்தில் இட்லி, சாதம், சப்பாத்தி கிடைத்தது. சாப்பிட்டுவிட்டு முன்பதிவு செய்திருந்த ரிட்டையரிங் ரூமில் தூங்கினோம்.

25 ஆம் தேதி அன்று காலை 7.15ற்குக் கல்காவிலிருந்து சிம்லாவிற்கு டாய் ரயிலில் பதிவு செய்திருந்தேன். இந்த ஏற்பாடுகள் செய்த போது சண்டிகாரில் இடங்கள் பார்த்துவிட்டு அங்கிருந்து 3/4 - 1 மணி நேரப் பயணத்தில் இருக்கும் கல்காவில் இருந்துதான் சிம்லாவுக்கு ரயில் என்பதால் அங்கு அறை முன்பதிவு செய்து அங்கு தங்கி இடங்களைப் பார்க்கலாம் அல்லது இடங்களைப் பார்த்துவிட்டு அங்கு தங்கிக் கொள்ளலாம் என்ற திட்டம். ஆனால் கல்காவில் அறை முன்பதிவு செய்யவில்லை.

காரணம், 23 ஆம் தேதி இரவு தங்குவதற்கு சண்டிகர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்திருந்த ஓய்வெடுக்கும் அறை 24 ஆம் தேதி இரவு 8 மணி வரைக்கும் என்பதால் சண்டிகரிலேயே தங்கி 24 ஆம் தேதி காலையில் இடங்களைப் பார்த்துவிட்டு அங்கிருந்து இரவு ரயிலைப் பிடித்து கல்கா ரயில்நிலையம் சென்றுவிட்டால் அங்கு காத்திருக்கும் அறையில் சில மணி நேரங்களைக் கடத்தி மறுநாள் காலை 7.15க்கு சிம்லா செல்லும் டாய் ரயிலில் சிம்லா சென்றிடலாம் என்று நினைத்ததால். ஆனால் இப்படியான திடீர் மாற்றங்கள் நல்லதல்ல என்பது அப்போது தெரியவில்லை. எனவே...

24-04-2024 புதன் காலை ஊபர் டாக்ஸியை ஏற்பாடு செய்து கொண்டு இந்தியன் காஃபி ஹவுஸில் உணவு சாப்பிட்டுவிட்டு டாய் ஹவுஸ், எலந்தே மால், ஜப்பனீஸ் பூங்கா, சுக்னா லேக் போன்றவற்றைக் கண்டோம்.

இந்தியன் காஃபி ஹவுஸில் உணவு
இந்தியன் காஃபி ஹவுஸ் - உள்ளே

டாய் ஹவுஸ் - பொம்மைகள் அகம். இங்கு ஒவ்வொரு நாட்டின் உடை, கலாச்சாரத்தைப் பொம்மைகள் வடிவில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்

எலந்தே மால் 
மாலில் ஒரு உணவகத்தில்

ஜப்பனீஸ் பூங்கா

சுக்னா லேக்

அப்படி, 24 ஆம் தேதி மேற் சொன்ன இடங்களைப் பார்த்துவிட்டு இரவு 8 மணிக்கு அறையைக் காலி செய்துவிட்டு, கல்கா செல்ல 9 மணி ரயிலுக்குக் காத்திருந்தால், 9 மணிக்கு ரயில் வரவில்லை. விசாரித்தோம். இதோ வரும், வந்துவிடும் வந்துவிடும் என்று சொல்லப்பட்ட ரயில், ஏதோ தீவிர வாதச் செயலால் மறுநாள் - 25-04-2024 காலை 5.30 ஆகியும் வரவில்லை. இப்படி நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லாததால் மிகவும் சிரமமாகிவிட்டது. 7.15 ற்குக் கல்காவிலிருந்து சிம்லாவுக்கு டாய் ரயிலில் முன்பதிவு செய்திருந்த பயணம். 1 3/4 மணி நேரம்தான் இருந்தது. டாய் ரயிலில் எங்களால் பயணிக்க முடிந்ததா?

அடுத்த பதிவில்...

(இத்தொடர் முடிந்ததும், இந்த வருடம் இதே ஹிமாச்சலில் வேறு இடங்கள் சென்று வந்த பதிவுகள் வரும்.)


-----துளசிதரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக