திங்கள், 21 ஆகஸ்ட், 2023

வட கேரளத்தின் தெய்யம்

 

தெய்யம் எனும் சொல் தெய்வம் எனும் சொல்லில் இருந்து மருவி வந்ததாகச் சொல்லப்படுகிறது. மட்டுமல்ல, மூதாதையர்களை வழிபடும் முறையும் தெய்யத்தில் கடைபிடிக்கப்படுவதால் அதனுடனும் தெய்யத்திற்குத் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.

வட கேரளத்தில் நிலவி வரும் தெய்யம் கட்டி ஆடல், வழிபடும் முறையில் ஏறத்தாழ 400க்கும் மேற்பட்ட தெய்யங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் அதிகமாகக் கட்டி ஆடப்படும் தெய்யங்கள் – வேட்டைக்கொருமகன், மச்சிலோட்டு பகவதி, ஸ்ரீ முத்தப்பன், கதிவனூர் வீரன் போன்றவைதான். 

வேட்டைக்கொரு மகன் - மச்சிலோட்டு பகவதி
ஸ்ரீ முத்தப்பன் - கதிவனூர் வீரன்

வட மலபார் பிரதேசங்களில் உள்ள காசர்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களிலும் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள கோயிலாண்டி மற்றும் வடகரா தாலுகாக்களிலும் அதிகமாகத் தெய்யம் கட்டி ஆடும் முறை வழிபடும் முறை நிலை நிற்கிறது. 

தெய்யம் கட்டி ஆடப்படும் தெய்வங்கள் எல்லோருமே கேரளாவில் பின்பற்றப்பட்ட சாதி சம்பிரதாயத்தில் பிற்பட்ட சாதியினரின் தெய்வங்களோ, அல்லது அநீதி இழைக்கப்பட்டு உயிரிழந்து இறைவனடி சேர்ந்த, அவர்களது நாயக நாயகிகளாகத்தான் இருக்கிறார்கள். அதனால் அந்த தெய்வத்தின் உருவம் கட்டி ஆடுபவர்களும் பிற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள்.

தெய்யம் கட்டி ஆடும் காலம் என்பது ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் 10 ஆம் தேதியிலிருந்து வைகாசி மாதம் வரை நீண்டிருக்கும் 7 மாத காலம். அக்டோபர் முதல் மே மாதம் வரை.


தெய்யம் திரா என்றும்  களியாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் திரா என்று சொல்லப்படுவது ஒரு வேளை இறை என்பதிலிருந்து மருவி வந்த சொல்லாக இருக்கலாம். உண்மையிலேயே தெய்யம், இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் ஒரு முறையாகவே கருதப்படுகிறது. அப்படி எல்லோருக்கும் தெய்யத்தின் வாயிலாக அவர்கள் வழிபடும் தெய்வத்தின் அருளாசி நேரடியாகக் கிடைக்கிறது என்று நம்பப்படுகிறது.

தெய்யம் கட்டி ஆடுதல் பெரும்பாலும் எல்லா கிராமங்களிலும் அங்கு இறைவன் குடியிருக்கும் ‘காவு’ எனும் மரம் சூழ்ந்த பாம்புகளும் பறவைகளும் வாழும் பகுதியில் நடத்தப்படுகிறது. தாண்டவம் மற்றும் லாஸ்ய நடன முறைகள் தெய்யம் கட்டி ஆடும் நடனத்தில் பின்பற்றப்படுகின்றன.

தெய்யத்தில் கிரீடம், மார்புக்கவசம், மற்றும் முடி. முடி என்பது முதுகிலிருந்து தலைக்கு  மேல் நீண்டு நிற்கும் ஒன்று. சில நேரங்களில் முடியின் உயரம் 20 அடி முதல் 30 அடி வரை உயர்ந்து நிற்கும்.

இவைகளில் பலதும் மூங்கில்களில் கீறிய பாகங்கள், கனம் குறைந்த பலகைகள், சிவந்த துணி மற்றும் தென்னங்கீற்றுகளால் உருவாக்கப்படுவதால் அவற்றிற்கு அதிகமான பாரம் இருப்பதில்லை.

தெய்யம் கட்டி ஆடும் நபரின் முகத்திலும் உடலிலும் வண்ணம் தீட்டும் முறை பழங்குடி மக்களின் ஓவியக் கலைத்திறனுக்கு ஒரு நல்ல உதாரணம் என்றுதான் சொல்ல வேண்டும். (காணொளியில்) இயற்கையாகவே கிடைக்கும் சிவப்பு, ஆரஞ்சு நிறம், மஞ்சள், கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.  அவை எல்லாம் சந்தனம், சிவப்பு சந்தனம், மஞ்சள், சுண்ணாம்பு, கரி மற்றும் அரிசி மாவு போன்றவைகளில் இருந்து உருவாக்கப்படுவதால் உடலுக்கும் தோலுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதே இல்லை.

உருவம் மாறி காவுக்கு வரும் தெய்யக் கோலம் பூண்டவர் சிறிது நேரத்திற்குள், தான் மேற்கொண்ட உருவமாகவே, தெய்யமாகவே மாறிவிடுகிறார்.

செண்டை, துடி மற்றும் கொம்பு போன்ற இசைக்கருவிகளில் இருந்து வரும் இசையும், பாடலும், தெய்யத்தின் ஆட்டமும் மாற்றத்தை விரைவுபடுத்துவதுடன் நீண்ட நேரம் அம்மாற்றத்தில் நிலை நிற்கவும் செய்கிறது. தெய்யத்தின் இருகைகளிலும் வாள் மற்றும் கேடயமும் இருக்கும்.

பாரம்பரிய நடனங்கள் என்று அழைக்கப்படும் பரதநாட்டியம், குச்சுப்புடி, மோஹினி ஆட்டம் கேரளாடனம் போன்றவைகளின் ஆதிக்கத்தால் பின் தள்ளப்பட்ட கிராமீய நாட்டியத்தைப் போலவே தெய்யத்திலிருந்து உருவான கதகளி, இப்படியான தெய்யம், முடியாட்டம் போன்றவற்றை புறம் தள்ளி, கேரளத்தின் முக முத்திரையாய் மாறியே விட்டது.

எப்படியோ இப்போதும் வட கேரளத்திலுள்ள சில மாவட்டங்களில் தெய்யம் உயிர்வாழ்வதை நினைக்கையில் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. 

https://youtu.be/f4Y_o7_BSj8


காணொளியில் இருக்கும் படங்களுக்கு இணைய தளங்களுக்கு நன்றி. இதில் பயன்படுத்தியுள்ள தெய்யம் காணொளி க்ளிப்புகளுக்கு நன்றி - ஜிதின் அல்லக்கன்! Jithin Allakkan. 

-------துளசிதரன்

37 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான விவரங்கள், காணொளி.  பாரம்பரியக்கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது நம் கடமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஸ்ரீராம். பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டிலும் இப்போது முன்பு போல் கிராமிய நடனங்கள் இல்லை என்றாலும் சில கோயில் திருவிழாக்களில் காண முடிகிறது.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்

      துளசிதரன்

      நீக்கு
    2. காணொளி கண்டதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்

      துளசிதரன்

      நீக்கு
  2. காணொளி கண்டேன்.  பாரமிருக்காது என்று சொன்னாலும் பேலன்ஸ் செய்வது மிகக் கஷ்டம் இல்லையா?  மூன்று பேர் தூக்கி வந்து அவர் தலையில் பொருத்துகிறார்கள்.  அவர் அதை சாயாமல் வைத்து ஆடுகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரமிருக்காது என்று சொல்வது எனக்கும் ஆச்சரியம்தான். அதோடு 8 மணி நேரம் நிற்பார்கள். நடனம் ஆடுவார்கள். அதுவும் சாப்பிடாமல்தான் எல்லாமே. அலங்காரம் குறிப்பாக முகத்தில் வண்ணம் பூசுவதற்கே நேரம் எடுக்கும். தெய்யம் கட்டி ஆடுபவர்கள் ஒரு கட்டுப்பாடுடன் விரதம் போல் இருந்து ஆடுவார்கள். அப்படி பக்தியோடு என்ன தெய்வ உருவம் எடுக்கிறார்களோ அதில் உருமாறி ஆடுவதால், இறுதியில் மக்கள் அருளாசி வாங்குவார்கள்.

      கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் சாமியாட்டம் போல. ஐயனார் உரு எடுப்பார்களே அது போல.

      ஆமாம் சாயாமல் வைத்து ஆடுவது தமிழ்நாட்டில் கரகம் ஆடுவார்களே இல்லையா? அது போலத்தான்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்

      துளசிதரன்

      நீக்கு
  3. தெய்யம் பற்றிய படக்கட்டுரை நன்று. இங்கு திருவனந்தபுரத்தில் ஓணம் சமயத்தில் ஒரு நாள் ஒரு கார்னிவால் உண்டு. அதில் குளிகன், ரக்த சாமுண்டி போன்ற தெய்யங்களைக் காணலாம்.

    தெய்யம் என்பது தெய்வம் என்பதின் மருஊ என்று நினக்கிறேன். நாட்டாரின் சிறு, குறு, காவல் தெய்வங்களை உருவகப்படுத்தி கட்டப்படும் வேஷங்கள் தாம் தெய்யம் என்று சொல்லலாம். தெய்யம் சாதிப்பாகுபாடால் பிற்படுத்தப்பட்டவர்கள் அவர்களுடைய பாரம்பரிய தெய்வங்களை வழிபடும் ஒரு முக்கிய சடங்கு எனலாம்.

    பதிவு சிறப்பு.,

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு திருவனந்தபுரத்தில் ஓணம் சமயத்தில் ஒரு நாள் ஒரு கார்னிவால் உண்டு. அதில் குளிகன், ரக்த சாமுண்டி போன்ற தெய்யங்களைக் காணலாம்.//

      ஆமாம், ஜெயகுமார் சந்திரசேகரன் சார். நீங்கள் கண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

      நீங்கள் சொன்ன கருத்துதான் பதிவிலும் சொல்லியிருக்கிறேன் சார்.

      உங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஜெயகுமார் சந்தரசேகரன் சார்.

      துளசிதரன்

      நீக்கு
  4. பதில்கள்
    1. காணொளி கண்டதற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி டிடி

      துளசிதரன்

      நீக்கு
  5. துளசியின் அக்காவிற்குக் கண்புரை அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் அக்காவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பதால் பதில்கள் மாலையில் தருவார்.

    கீதா.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவிப்புக்கு நன்றி கீதா ரங்கன்(க்கா)

      நீக்கு
    2. சிரித்துவிட்டேன், நெல்லை

      கீதா

      நீக்கு
    3. நெல்லைத் தமிழன் உங்கள் கீதா அக்காவை நன்றாகக் களியாக்குகிறீர்கள்!
      நான் தான் கொடுக்கச் சொன்னேன் . நேற்று பதில் அனுப்ப இயலவில்லை. இப்போதுதான் அனுப்ப முடிந்தது. இப்போதெல்லாம் வேலைகள் சரியாக இருக்கிறது.

      துளசிதரன்

      நீக்கு
  6. இந்த தெய்யம் நடனம், இறைவனுடன் தொடர்புடைய கலாச்சாரம் கேரள அல்லது கர்நாடக வட பகுதியில் நடைபெறுவதைத்தான் காந்தாரா படத்தில் காட்டினார்கள் என நினைக்கிறேன். படமும் சிறு தெய்வ வழிபாட்டுக் கலாச்சாரத்தைச் சிறப்பான முறையில் சொன்னதால் படமும் பெரு வெற்றி பெற்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கேரளத்தில் வட பகுதி எனும் போது கர்நாடக பார்டரில் அதாவது கர்நாடகத்தின் தென்மேற்குப் பகுதி. கேரளத்தில் காசர்கோடு கர்நாடகாவோடு எல்லைஒட்டித்தானே இருக்கிறது. ஒரு பகுதியில் கன்னடம் துளு பேசும் மக்கள் உண்டு. இந்தத் தெய்யம் மங்களூர் சுற்றுப் பகுதிகளில் ஆடப்படும்.

      காந்தாரா படத்தில் கடைசியில் வரும் நடனம் இப்படியானதுதான் கிராமீயக் கலை மங்களூர் பகுதிகளில் பூதகோலா என்று சொல்கின்றனர்.

      ஆமாம் அந்தப் படம் வெற்றி பெற்ற படம். நன்றாக இருந்தது.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  7. கமலஹாசன், பாலசந்தரை நடிக்க வைத்து உருவாக்கிய கடைசிப் படத்திலும் இந்தக் கலையைத்தான் ஒரு பகுதியாக நுழைத்திருப்மார்.

    அது மக்களுக்கு அன்னியமாகத் தெரிந்ததால் படம் ப்ப்படம் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா இது என்ன படம், நெல்லை? படத்தோட பெயர் என்ன?

      வெளிவந்ததா?

      கீதா

      நீக்கு
    2. "உத்தம வில்லன்".
      நண்பர் நெல்லை தமிழன் குறிப்பிடும் படம் "உத்தம வில்லன்" என நினைக்கிறேன்...

      நீக்கு
    3. ஆமாம் உத்தம வில்லன் படம்தான்.

      நீக்கு
    4. உத்தமவில்லன் படம் நான் பாலக்காட்டில் இருந்த போது வந்தது பார்த்த நினைவு சரியாக நினைவில்லை.

      கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  8. காணொளி கண்டேன்... காணொளியும் அதில் நீங்கள் தந்துள்ள தகவல்களும் சிறப்பாக அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியியக் கண்டதற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நாஞ்சில் சிவா.

      துளசிதரன்

      நீக்கு
  9. தெய்யம் விளக்கம் அருமை.

    காணொலி கேட்டேன் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொலி கண்டதற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  10. வட கேரளத்தின் தெய்யம் அருமை.
    காணொளி அருமை.

    //சில நேரங்களில் முடியின் உயரம் 20 அடி முதல் 30 அடி வரை உயர்ந்து நிற்கும்.//

    அவ்வளவு உயரமான முடியை தூக்கி கொண்டு ஆடுவது கடினம் இல்லாமல் இருக்கலாம். ஆரம்பத்தில் பாலன்ஸ் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி கண்டதற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.

      ஆமாம் அவ்வளவு உயரமான முடியை தூக்கிக் கொண்டு ஆடுவதற்கு நல்ல பாலன்ஸ் வேண்டும். அவர்கள் ஆடுவதைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது உயரமாக இருந்தாலும் ஆடும் போது அதுவளைவதில்லை. சிறுவயதிலேயே சிலர் பயிற்சி எடுக்கிறார்கள்.

      கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு

      துளசிதரன்

      நீக்கு
  11. ஒரு புனித யாத்திரை சென்று வந்ததைப் போலிருந்தது. மிகவும் சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திற்கு மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

      துளசிதரன்

      நீக்கு
  12. தெய்யம் பற்றிய அறிமுகம் அருமை.இன்னும் அது கேரளத்தின் முத்யிரையாக இருப்பதை பாராட்ட வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமரம் உங்களைக் கண்டு பல மாதங்களாயிற்றே. நலமா? நலம் என்று நினைக்கிறோம்.

      கருத்திற்கு மிக்க நன்றி தனிமரம் நேசன்

      துளசிதரன்

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கேரளத்தின் சம்பிரதாயமான தெய்யம் கட்டி வைத்து ஆடுவது பற்றிய விளக்கமான தகவல்கள் அறிந்து கொண்டேன். கட்டுரை விபரங்கள் படிக்க நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் அருமை. காணொளியும் கண்டு மகிழ்ந்தேன். முறைப்படி அவர்கள் முக அலங்காரங்கள் நடப்பதும், அதன்பிறகு கரகம் போல் தலையில் சுமந்தபடி நடனமாடுவதும் அழகாக இருக்கிறது. பாரம்பரியங்களை விடாது செயல்படுத்தும் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். விபரமான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு பற்றிய பாராட்டிற்கும் ரசித்ததற்கும் மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.

      ஆமாம் கிட்டத்தட்ட கரகம் போல்தான். கிராமியக்கலைகள் பலவும் நாட்டார் தெய்வங்களுடன் தொடர்புடையவைதானே.

      உங்களின் விரிவான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.

      துளசிதரன்

      நீக்கு
  14. துளசி அண்ணன், கீதா நலம்தானே...

    தெய்யம்.. பார்த்ததும் நானும் நினைச்சேன் தெய்வம்தான் இப்படிச் சொல்லாக மாறியிருக்கோ என, கேரளா என்றாலே இப்படி மேக்கப்புடன் கூடிய நடனமும் தலையாட்டும் பொம்மையும்தான் நினைவு வரும்... பதிவு இன்றஸ்ரிங்காக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் அதிரடி. அவ்வப்போது காணாமல் போகிறீர்களே! நாங்கள் இருவரும் நலம். நீங்களும் இறை அருளால் நலமுடன் இருப்பீர்கள்.

      நீங்கள் நினைத்ததும் சரியே. தெய்வம் எனும் சொல்லில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். கிராமத்து தெய்வங்களுடன் தொடர்புடையதால். சிரமமான நடனம்தான். விரதம் இருந்து எடுப்பார்கள். பதிவு சுவாரசியமாக இருந்ததற்கு மிக்க நன்றி அதிரா

      கருத்திற்கு மிக்க நன்றி அதிரா.

      துளசிதரன்

      நீக்கு
  15. தெய்யத்தின் மரபு, தொடரும் சமூக, கலாச்சார செயல்பாடுகள் எனத் தெளிவாக விவரிக்கும் கட்டுரை. தெரிந்திராத பல விஷயங்களை எனக்குச் சொல்லிச் சென்றது. நன்றி

    பதிலளிநீக்கு
  16. தெய்யம் கேரள பாரம்பரிய நடனம் அருமை.

    பதிலளிநீக்கு