புதன், 1 ஜூன், 2022

நாராயணவரம் ராமகிரி வாலீஸ்வரர் கோயில் – நாகலாபுரம் வேதநாராயணப் பெருமாள்/மத்ஸ்ய நாராயணப் பெருமாள் கோயில் – சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் - பகுதி 2

 

பகுதி 1

என்னோடு எல்லோரும் ஏறிவிட்டீர்கள்தானே! சென்ற பதிவை வாசித்துக் காத்திருந்தமைக்கு மிக்க நன்றி. இப்போது இத்தலத்தைப் பற்றி....

பிரதோஷ வழிபாட்டிற்குப் பெயர் பெற்ற சுருட்டப்பள்ளிஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் 

தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில எல்லையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஊத்துக்கோட்டையிலிருந்து 2 கிமீட்டர் தூரத்தில் ஆந்திர எல்லை தொடங்கும் சுருட்டப்பள்ளி எனும் சிறிய ஊரில்தான், ஆரணி ஆற்றின் கரையில் பள்ளி கொண்டிருக்கிறார் பரமேஸ்வரன்!

நான் சென்ற போதெல்லாம் ஒரே ஒரு தடவையைத் தவிர்த்து, இந்த ஆரணி ஆற்றில் நீரைக் காண முடியவில்லை. அதுவும் கொஞ்சமே கொஞ்சம். ஆறு என்பதற்கானத் தடம் இருந்தாலும் ஆறா? எங்கே? என்ற கேள்வி எழுந்ததைத் தவிர்க்க இயலவில்லை. ஆற்றின் குறுக்கே அப்போது. சாலையே பாலமாக தரைப்பாலமாக இருந்தது. இடையில் வந்த வெள்ளத்தினால் சாலை அடித்துச் செல்லப்பட ஊர் மக்கள் மனு கொடுக்க, பாலம் கொஞ்சம் உயரமாகக் கட்டப்பட்டிருக்கிறது

பள்ளி  கொண்டு காட்சி தருபவர் என்றாலே திருமால்தான் நினைவுக்கு வருவார் என்றால் பரமேஸ்வரன் பள்ளி கொண்டிருக்கும் ஒரே திருத்தலம் சுருட்டப்பள்ளி என்று சொல்லப்படுகிறது.  இதன் தல வரலாற்றிற்கு முன் ஆரணி ஆற்றின் வரலாறு இதோ

வரலாறு இருவிதமாகச் சொல்லப்படுகிறது. வேறு விதங்களும் இருக்கிறதா என்று தெரியவில்லை. எல்லாமே செவிவழி வருவதால் பல இடைச்செருகல்கள் இருக்கலாம்தான். இந்த வரலாறுகளை சுருட்டப்பள்ளி அர்ச்சகர்கள் மற்றும் வேறொரு நபர் சொல்ல குறிப்பெடுத்துக் கொண்டேன். இல்லை என்றால் நான் மறந்து விடும் அபாயம் உண்டு! தலவரலாறு புத்தகத்திலிருந்தும் அறிந்து கொண்டதையும் கலந்து எழுதியிருக்கிறேன்(இதுவரை மட்டுமே என் வரிகள்.)

1.       பிரம்மதேவன், தான் செய்யும் தவறுகளுக்குப் பரிகாரம் செய்ய வேண்டி பூமியில் யாகம் செய்து, தான் வேண்டுவதை நிறைவேறப் பெறுவது பற்றிப் பல கதைகள் நாம் கேட்டிருப்போம். அப்படி, ஒரு முறை அவர் காடுகளாக இருந்த இப்பகுதியில் யாகம் செய்ய வேண்டி நெருப்பை உண்டாக்க அரணிக் கட்டையைக் கடைந்தாராம். நெருப்பிற்குப் பதிலாக நீர் ஊற்றெடுத்து ஓடிட அதுவே ஆறாக மாறி பசுமையை நிறைத்ததாம். அதனால் அப்படி உருவான இந்த ஆற்றினைஅரணிஆறு என்றிட அது நாளடைவில் மருவிஆரணி ஆறுஎன்று இப்போது பெயர் பெற்றுள்ளது. 

2.     மற்றொரு வரலாறு என்ன சொல்லுகிறது என்றால், பிரம்மன், சிவனின் அருள் பெற வேண்டி, கலைமகளுடன் இப்போதைய சுருட்டப்பள்ளிக்கு அருகே இருக்கும் மலைக்கு வந்தார். கலைமகள் மலையின் இயற்கையில் மயங்கி வெகுதூரம் சென்றிட, பிரம்மதேவன் நல்ல நேரத்தைத் தவற விடக் கூடாது என்று கலைமகளைக் கூவி அழைத்தும் வராததால் தேவியையே தர்ப்பையில் ஆவாஹனம் செய்து அக்னியை மூட்டத் தயாரானார். கலைமகளுக்குத் திடீரென யாகத்தின் நினைவு வந்ததும் அரணிக் கட்டையில் மாயமாகப் புகுந்து வேள்வியில் இருந்து நீராகப் பாய்ந்தாள். தேவர்களும், முனிவர்களும் வியந்திட, கலைமகள் நான்முகன் காலில் விழுந்து அவரது சினத்தைத் தணிக்கவே இப்படித் தண்ணீராக உருவெடுத்ததாகக் கூறியதாகச் செல்கிறது இக்கதை.

இப்படி உருவான ஆரணி ஆற்றின் கரையில், பிரம்மனின் யாகத்தைப் பாராட்டிய சிவனிடம், பிரம்மனும், கலைவாணியும் சிவனின் பஞ்சஷேத்திரங்களை அமைத்து அருள் பாலிக்க வேண்டியதாக ஒரு கதையும், முனிவர்கள் பலரும் சிவனைப் பிரதிஷ்டை செய்து வழிப்பட்டதாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது.

அவ்வாறாக ஈஸ்வரன் இந்நதிக்கரையில் ஐந்து இடங்களில் எழுந்தருளியதாகவும் அவை பஞ்ச சிவ ஷேத்திரங்கள் அல்லது பஞ்ச பிரம்மத் தலங்கள் என்று வழங்கப்படுவதாகப் புராணக் கதைகள் சொல்கின்றன.

மேற்கில் சத கூடாத்திரி எனும் ராமகிரியில் ஈசான மூர்த்தியாக-வாலீஸ்வரர், (இந்த ராமகிரி பற்றியும் கட்டுரை வருகிறது படங்களுடன்) கிழக்கில் விசங்கடம் என்னும் வடதில்லையில்பெரியபாளையத்தில் அகோரமூர்த்தியாக ஸ்ரீ பாபஹரேஸரர்/ஸ்ரீஐமுக்தீஸ்வரர், அரிய துரையில் வாமதேவ மூர்த்தியாக ஸ்ரீ வரமுக்தீஸ்வரர், ஆரணியில் சம்பங்கி பிச்சாண்டேஸ்வ்ரர் (ஆரணி அல்ல. பழவேற்காட்டிலிருந்து 9 கிமீ தூரத்தில் உள்ள கருங்காளி கிராமத்தில் அமைந்த சிந்தாமணீஸ்வரர்தான்  என்று சிலர் சொன்னாலும் இந்த ஊர் ஆரணி ஆற்றின் கரையில் இல்லை.) என்று திருநாமங்கள் பெற்று அருள்பாலிக்கிறார் என்பது புராண வரலாறு.



இவற்றுள் மூல ஷேத்திரமாக விளங்குவது பிரம்மன் வழிபட்ட இடமான பிரம்மகிரி எனப்படும் மலைப்பகுதியின் அருகிலிருக்கும் சுருட்டப்பள்ளியாகும். இது ரகசிய ஷேத்திரம் என்றும், காலகூட ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு சிவன் வால்மீகீஸ்வரராகக் காட்சி அளிக்கிறார். சயனக் கோலத்திலும் இருப்பதால் சிவசயனஷேத்திரம். தத்புருஷ மூர்த்தியாக விளங்குகிறார். பிரதோஷ வழிபாட்டிற்குப் புகழ்பெற்ற தலம். இங்கு பிரதோஷ வழிபாடு வெகுகாலமாக நடந்து வருவதாகவும், பிறகுதான் பிற சிவாலயங்களில் நடக்கத் தொடங்கியது என்றும் சொல்லப்படுகிறது.

வால்மீகேஸ்வரரின் நேரெதிரே கோயிலின் முன்பு வீற்றிருக்கும் பெரிய நந்தி

இங்கு பிரதோஷ தினத்தன்று வால்மீகேஸ்வரரின் நேரெதிரே கோயிலின் முன்பு வீற்றிருக்கும் பெரிய நந்திக்கும் பூசை செய்யப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.

சுருட்டப்பள்ளி தலத்தின் வரலாற்றையும் கோயிலைப் பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம். 

பின் குறிப்பு :  கீதாக்கா, துரை அண்ணா, கோமதிக்கா எல்லாரும் எழுதுவது போல கோயில்கள் பற்றி ஈசான மூர்த்தி, அகோரமூர்த்தி அருள்பாலிக்கிறார் என்றெல்லாம் ஆன்மீகமாகச் சொல்லி எழுதியிருக்கிறாளே இந்த கீதா என்று பெரிதாக நினைத்துப் பாராட்டி விடாதீர்கள். சத்தியமாக எனக்குக் கோயில்கள் பற்றி இப்படி எல்லாம் எழுதத் தெரியாது என்பதை வெளிப்படையாகவே சொல்லிக் கொள்கிறேன். எல்லாமே 100ரூ க்குக் கிடைத்த சமாச்சாரம்!!!! குரலை மொபைலில் என் தங்கை பதிவு செய்து கொண்டாள். அதைக் கேட்டும், அப்புறம் கோயிலில் கிடைத்த தலவரலாறு புத்தகத்திலிருந்தும்.  அவ்வளவுதான். சொன்னவரும் வரலாறு புத்தகத்தை மனப்பாடம் செய்திருப்பது தெரிந்தது!!!!!!!!

கோயிலினுள் கொடிமரம் தாண்டிச் சென்றால் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. அப்படிச் செல்லும் முன் எடுத்த புகைப்படங்கள் மட்டுமே. அடுத்த பதிவிலும் கொடிமரம் பக்கத்திலிருந்து எடுத்த சில படங்கள் இடம் பெறும்.


-----கீதா


21 கருத்துகள்:

  1. இந்தச் சுருட்டப்பள்ளி திருமாலைப் பற்றி கல்கியில் முக்கூர் .. என்ற பக்திமான் எழுதியது நினைவுக்கு வருகிறது. 'பள்ளிகொண்டா' என்ற ஊர் தான் சுருட்டப் பள்ளியோ என்று பலநாள் நினைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளிகொண்டா ஊர் உங்கள் ஊர் பக்கத்தில் இருக்கிறதே சார். அந்த ஊருக்கும் நான் சென்றதுண்டு.

      சுருட்டப்பள்ளி திருமால்??

      மிக்க நன்றி செல்லப்பா சார்.

      கீதா

      நீக்கு
  2. பள்ளிகொண்ட பரமேஸ்வரன் வீற்றிருக்கும் ஒரே தலம் சுருட்டப்பள்ளி என்னும் தகவலை தந்ததற்கு முதலில் நன்றி... அந்த நந்தீஸ்வரரின் பிரமாண்டம் கொஞ்சம் மிரட்சி தருவதாகவே உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அறிந்துகொண்ட தகவலைத்தான் இங்கு பகிர்ந்திருக்கிறேன் நாஞ்சில் சிவா

      ஹாஹாஹா ஆமாம் நந்தீஸ்வரரை வடிவமைத்தவர் அப்படி வடிவமைத்துவிட்டார்!!!

      மிக்க நன்றி சிவா

      கீதா

      நீக்கு
  3. சென்றமுறை சென்றுவந்தபோது சுருட்டப்பள்ளி ஜஸ்ட் மிஸ்ட் என்று நினைவு.  ஒருமுறை செல்லவேண்டும்.  தலபுராணம் இரண்டுமே சுவாரஸ்யம்தான்.  

    படங்களும் விவரங்களும் எடுத்துக் போட்டிருந்தாலும் சுவாரஸ்யம்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! மிஸ் பண்ணினா என்ன அடுத்த முறை திருவள்ளூர் வரை போனீங்கனா அங்கும் எட்டிப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். கீதா ஏதோ ஆரணி ஆறு என்றெல்லாம் சொன்னாளே எங்கே அது என்று தேடினீர்கள் என்றால் நான் பொறுப்பல்ல சொல்லிவிட்டேன். ஒரு வேளை நீங்க போறப்ப தண்ணி இருந்தா நான் தப்பித்தேன்!

      //படங்களும் விவரங்களும் எடுத்துக் போட்டிருந்தாலும் சுவாரஸ்யம். //

      ஸ்ரீராம் படங்கள் நான் எடுத்தவைதான்.

      விவரங்கள்தான் காதுவழி கிடைத்ததும், மண்டபத்துல வாங்கினதும்!!!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. // சத்தியமாக எனக்குக் கோயில்கள் பற்றி இப்படி எல்லாம் எழுதத் தெரியாது என்பதை வெளிப்படையாகவே சொல்லிக் கொள்கிறேன். //

    ஹிஹிஹி... எனக்கும்! நானும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் உண்மையாவே அதை தட்டச்சும் போது உங்களை நினைத்துக் கொண்டேனாக்கும்!!! இப்படி பதில் வரும் என்று!!! ஹைஃபைவ்!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. கட்டுரையை விட ஊசிக் குறிப்பு டாப்.

    கட்டுரையை ஆரம்பித்து உங்கள் பாணியில் கொஞ்சம் துள்ளி, பின்னர் கொஞ்சம் "செய்திகள் வாசிப்பது கீதா " என்ற முறையில் மற்ற தல புராணங்களை சுட்டி எழுதி கடைசியில் இவ்வளவும் "கோயில்கள் பற்றி ஈசான மூர்த்தி, அகோரமூர்த்தி அருள்பாலிக்கிறார் என்றெல்லாம் ஆன்மீகமாகச் சொல்லி எழுதியிருக்கிறாளே இந்த கீதா என்று பெரிதாக நினைத்துப் பாராட்டி விடாதீர்கள். " என்று என்று ஒப்புக்கொண்டு முடித்து தொடருக்கு ஒரு கலக்கல் துவக்கம் செய்திருப்பது அபாரம். கிரேட்.

    படங்களும் அழகாக இருக்கின்றன.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹஹா...

      உங்கள் கருத்து பார்த்து சிரித்துவிட்டேன் ஜெ கே அண்ணா.

      //என்று ஒப்புக்கொண்டு முடித்து தொடருக்கு ஒரு கலக்கல் துவக்கம் செய்திருப்பது அபாரம். கிரேட்.//

      உண்மையைச் சொல்ல வேண்டும்தானே!!!!! ஹாஹாஹா

      //படங்களும் அழகாக இருக்கின்றன.//

      மிக்க நன்றி அண்ணா.

      கீதா

      நீக்கு
  6. படங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
    புராணவரலாறு ,தலவரலாறு அருமை.
    நாங்களும் எத்த ஊர் சென்றாலும் அந்த ஊர் தலவரலாறு புத்தகம் வாங்கி கொள்வோம். அதில் படித்தது, செவி வழியாக கேள்வி பட்டதை வைத்தும் பதிவுகள், மற்றும் நாம் சென்று வந்த அனுபவம் வைத்துதான் பதிவுகள் எழுதுகிறோம்.

    நீங்கள் நன்றாக சொல்கிறீகள்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
      புராணவரலாறு ,தலவரலாறு அருமை.//

      மிக்க நன்றி கோமதிக்கா

      //நாங்களும் எத்த ஊர் சென்றாலும் அந்த ஊர் தலவரலாறு புத்தகம் வாங்கி கொள்வோம். அதில் படித்தது, செவி வழியாக கேள்வி பட்டதை வைத்தும் பதிவுகள், மற்றும் நாம் சென்று வந்த அனுபவம் வைத்துதான் பதிவுகள் எழுதுகிறோம்.//

      அது சரிதான் கோமதிக்கா...இருந்தாலும் சில வார்த்தைகள் எல்லாம் நீங்கள் எல்லாம் அழகாக எழுதுவீர்கள், அது போல பாடல்கள் எல்லாம் தெரிந்திருக்கு என்பதைப் பதிவுகளில் தெரிந்துகொள்கிறேனே அக்கா...

      நான் பொதுவாகக் கோயில் பதிவுகள் எழுதுவது இல்லை ஏதேனும் ஓரிரண்டு எழுதியிருந்தாலும் இப்படியானச் சொற்கள் வராது அக்கா.

      ஆனால் அக்கா இன்றைய உங்களது பதிவில் ஒரு வரியை ரொம்பவே ரசித்தேன்!!! அட நம்ம கோமதிக்காவும் நம்மகட்சி என்று. அங்கும் சொல்லியிருந்தேன்.

      மிக்க நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
  7. ...

    படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    தலபுராணம் சொல்லிச் சென்ற விதம் ரசிக்க வைத்தது
    தொடர்ந்து வருகிறேன்

    ஆரணி என்றதும் சகோ ராஜி நினைவுக்கு வந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

      தலபுராணம் சொல்லிச் சென்ற விதம் ரசிக்க வைத்தது
      தொடர்ந்து வருகிறேன்//

      மிக்க நன்றி கில்லர்ஜி!

      ஆமாம் ராஜியின் ஊர் ஆரணி. ஆனால் இதில் சொல்லப்படுவது அவர்களின் ஊரல்ல.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை.. சுருட்டப்பள்ளி கோவிலைப்பற்றிய புராணம், தலபுராணம் எல்லாம் அழகாக சொல்லியுள்ளீர்கள். படங்கள் அருமை. இக்கோவிலின் சுவாமி பள்ளிகொண்டீஸ்வரர் பற்றி ஜோதி டி வியில் பல மாதங்களுக்கு முன்பு பார்த்தது உங்கள் பதிவை படித்ததும் நினைவுக்கு வந்தது. (நீங்கள் கிளம்பியதும் உடன் உங்களுடன் புறப்பட்டு விட்டேன். ஆனாலும் நான் உங்களுடன் வண்டி ஏறிய அறுவருக்குப் பின்தான் இணைந்து உங்களுடன் கொள்கிறேன்.) இன்று வலையுலக பிரவேசமே தாமதமாக இப்போதுதான் வந்து கொண்டேயிருக்கிறேன்.

    கோவிலில் பிரதிஷ்டை செய்திருக்கும் ஸ்வாமிகளின் இருப்பிடத் தகவல்களையும், சுவாரஸ்யமான தல புராண கதைகளையும் அழகாக மனதில் பதியும் வண்ணம் சொல்லியிருக்கிறீர்கள். இந்த விவரணை கூட எனக்குச் சொல்ல வராது. இவ்வளவு நன்றாக சொல்லி விட்டு தன்னடக்கத்துடன் உங்களைப்பற்றி பின்குறிப்பு வேறு தந்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் பாணியில் சொன்ன செய்திகளை ரொம்பவே ரசித்துப் படித்தேன். தொடர்ந்து தங்களது கோவில் உலாக்களின் கலந்து கொள்ள ஆர்வமாகவும் உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைந்து கொள்கிறேன் என வந்திருக்க வேண்டும். தட்டச்சு பிழை ஏற்பட்டு விட்டது.

      நீக்கு
    2. ஜோதி டிவி என்று ஒரு சானல் இருப்பதும் தெரிகிறது.

      //நீங்கள் கிளம்பியதும் உடன் உங்களுடன் புறப்பட்டு விட்டேன். ஆனாலும் நான் உங்களுடன் வண்டி ஏறிய அறுவருக்குப் பின்தான் இணைந்து உங்களுடன் கொள்கிறேன்.) இன்று வலையுலக பிரவேசமே தாமதமாக இப்போதுதான் வந்து கொண்டேயிருக்கிறேன்.//

      அதனாலென்ன கமலாக்கா. நின்று நிதானமாகப் போகலாம்.

      //கோவிலில் பிரதிஷ்டை செய்திருக்கும் ஸ்வாமிகளின் இருப்பிடத் தகவல்களையும், சுவாரஸ்யமான தல புராண கதைகளையும் அழகாக மனதில் பதியும் வண்ணம் சொல்லியிருக்கிறீர்கள். //

      கமலாக்கா ஆ!! அவை எல்லாம் நான் எழுதியது அல்ல. பிட் அடித்தது. நானாக எழுதியிருந்தால் சும்மா கோயில் அது எப்படி இருந்தது சுத்தமா இல்லையா, அங்கு பூசை செய்வோர் பணம் வாங்கினார்களா இல்லையா இதை எல்லாம் தான் எழுதியிருப்பேன்.
      எனக்குக் கோயில்களில் சன்னதிகள் குறித்த கவனிப்பு அவ்வளவு கிடையாது கமலாக்கா. நினைவும் இருக்காது. மூலவர் எப்படி இருப்பார் உற்சவர் எப்படி இருப்பார் எனப்து எதுவும் என் மண்டையில் ஏறாது. பிரார்த்தனை மட்டுமே.

      சிற்பங்கள் கண்ணில் படும் அழகு கோபுரங்கள் இவைதான் அலல்து வித்தியாசமாக ஏதேனும் இருந்தால். மற்றபடியான கவனிப்பு என்பது சுத்தமாகக் கிடையாது. நான் சொல்லியிருப்பது சும்மா தன்னடக்கத்திற்கு என்று எதுவும் இல்லை. சத்தியமான உண்மையான வரிகள் அவை.
      கோயிலைப் பற்றிய வரிகளில் என் பாணி என்பது இல்லை கமலாக்கா. நீங்கள் என் மீது வைத்திருக்கும் மதிப்பையும் நம்பிக்கையையும் ரொம்பவும் மதிக்கிறேன். மகிழ்ச்சியும் கூட. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் இல்லையா!! ஹாஹாஹாஹ்...அது முழுவதும் பிட் தான்.

      மிக்க நன்றி கமலாக்கா ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
  9. படங்கள் அனைத்தும் அருமை... (மேலும் கிடைத்ததா...?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி.

      (மேலும் கிடைத்ததா...?)//

      புரியவில்லையே டிடி. படங்களா?

      கீதா

      நீக்கு
  10. படங்கள் மற்றும் தலபுராணம் நன்று. கோவில் குறித்த தகவல்கள் தலபுராணத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது என்றாலும் இங்கே சேர்த்தது தேவையானதும் கூட. தொடர்ந்து பதிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் குறித்த தகவல்கள் தலபுராணத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது என்றாலும் இங்கே சேர்த்தது தேவையானதும் கூட.//

      ஆமாம் ஜி. மிக்க நன்றி வெங்கட்ஜி.

      தொடர்ந்து பதிவிடுங்கள்.//

      பெரும்பாலும் சுருட்டப்பள்ளியின் நிறைவுப் பகுதி நாளை போடுவேன். மற்ற கோயில்கள் அதன் பின் கொஞ்சம் தாமதமாகும்.

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு