சனி, 7 மே, 2022

மணிச்சித்திரத்தாழே தாழ் திறவாய்

நீங்கள் காலையில் எழுந்து வீட்டு வாசல் கதவைத் திறக்கும் போது கதவு வெளியில் தாழ் போடப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?

யோசியுங்கள். அதற்குள் ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.

வழக்கம் போல 4 மணிக்கு எழுந்து என் பிரார்த்தனை முடித்து, மூன்றாவது காதைப் பொருத்திக் கொண்டு, வாசல் மணிச்சித்திரக் கதவின்! உட்புற தாழ்களை விலக்கியும் கதவு திறக்கவில்லை. இழுத்து இழுத்துப் பார்த்தும் திறக்க முடியவில்லை. அப்புறம்தான் உறைத்தது வெளியில் தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பது! எப்படி? மர்மம். மனசுக்குள் திக். நானும் அப்பாவும் மட்டுமே வீட்டில் இருந்தோம். இருவருக்குமே செவி கேட்காது. ஆனால் எனக்கு மூன்றாவது காது உண்டு! மூன்றாவது காது - கீதாவின் அகராதி. 

20 மாதங்களுக்கு முன் கண்ணழகி இருந்ததால் முந்தைய வீடு போலவே இதுவும் தனி வீடாகப் பார்த்துக் குடி வந்தோம். வீடு மிகவும் சிறியதுதான் ஆனால் முன்பக்கமும், வலதுபுறமும் கொஞ்சம் இடம் உண்டு. எனவே கேட் உண்டு. வீட்டைச் சுற்றி வர முடுக்கு. இடப்புற மனையில் விரைவில் வீடு வரும் அறிகுறிகள். எதிரில் பெரிய மைதானம். வலப்புறமும், பின்புறமும் ஒட்டினாற் போல் வீடுகள். வெளியில் யார் தாழ் போட்டிருப்பார்கள்? மணிச்சித்திரத்தாழ் மர்மம். மனதில் எச்சரிக்கை உணர்வு.

இங்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். வீடுகள் ஒட்டிக் கொண்டு இருப்பதால் எந்த வீட்டில் என்ன சத்தம் கேட்டாலும், தெருவில் செல்வோர் பேசுவது, சத்தங்கள் எல்லாம் நம் வீட்டிற்குள் நடப்பது போலவே இருக்கும். புலி வருது கதை போன்று ஏமாறிய தருணங்கள். நல்ல செவித்திறன் உடைய கணவரும் இதைச் சொல்லும் போது மூன்றாவது காதில் வலம் வரும் எனக்குச் சத்தங்கள் எப்படியான குழப்பத்தைத் தரும் என்பது அதன்  பயன்பாட்டில் அனுபவப்பட்டவர்களுக்கு மட்டுமே புரிந்து கொள்ள முடியும். 3 வது காது இல்லாமல் சமாளிக்கும் தைரியமும் உண்டு. சரி விஷயத்திற்கு வருகிறேன்...

71/2 மணி நேரத்திற்கு முன்பான ரீகேப். வழக்கம் போல இரவு 8.30க்கு மெயின் கேட் பூட்டிவிட்டு, வீட்டின் மணிச்சித்திரத்தாழையும் உட்பக்கமாகப் போட்டுவிட்டு, ஹால் ஜன்னல்களை எல்லாம் மூடிவிட்டுப் படுக்கத் தயாரானாலும், எனக்குக் கொஞ்சம் வேலை இருப்பதைச் சொல்லி அப்பாவைப் படுத்துக்கொள்ளச் சொன்னேன்.

அன்றைய என் வேலை ஆங்கிலத்தில் வரும் ஒரு சாகச தொடரின் மொழிபெயர்ப்பைச் சரிபார்க்கும் வேலை. ஹெட்செட் போட்டுக் கொண்டு முடிக்க வேண்டிய வேலையை முடித்து, அனுப்பி விட்டுக் கணினியை மூடிவிட்டுப் படுக்க 9.30 ஆகியிருந்தது.  ஹெட்செட் போட்டுக் கொண்டால் வேறு சத்தம் (எனக்கு) அவ்வளவாகக் கேட்காது.  

தூங்கும் போது மூன்றாவது காதுடன் தூங்கக் கூடாது என்பதால் வழக்கம் போல அதை எடுத்து பாட்டரியை நீக்கி அதன் பெட்டியில் வைத்துவிட்டு இரவுக் கடனை முடித்துவிட்டு வந்து, பிரார்த்தனை செய்துவிட்டுப் படுத்தேன்.  9.45. மூன்றாவது காது இல்லை என்றாலும், பெரிய சத்தம் கொஞ்சம் கேட்கும். பேச்சுக் குரல்கள் தெளிவாகக் கேட்காது. கவனம் இல்லை என்றால் எதுவும் கேட்காது.

எனவே, 9.30க்குச் சற்று முன்னான நிமிடங்களிலிருந்து (ஹெட்செட் - அதன் பின் மூன்றாவது காது பெட்டிக்குள் – விளக்கு எரிந்து கொண்டிருந்த நிமிடங்கள்) 9.45 வரையான இடைப்பட்ட நேரத்திற்கு மீண்டும் வருவோம் என்பதால் இப்பகுதி நினைவில் இருக்கட்டும்.

நிகழ்காலம் - காலை 4.15 மணி – முந்தைய இரவு எல்லாம் வழக்கம் போலத்தானே! எப்படி வெளியில் கதவு தாழ்போடப்பட்டிருக்கிறது? ஹாலில் உள்ள இரு பக்க ஜன்னல்களையும் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். வாசல் கிரில் கேட்டில் பூட்டு உருக்குலையாமல் தொங்கிக் கொண்டிருந்தது. இந்த மாதிரி நேரங்களில் மனதின் போக்கு விந்தையாக இருக்கும். எதையோ எதனோடோ முடிச்சுப் போடும்.

வீட்டு உரிமையாளர் பெரிய சினிமா புள்ளியா என்ன ‘தல’ வீட்டு மதிலைப் போல 20 அடி உயரம் கட்ட. மொட்டைமாடி செல்லும் படிகள் மதிலோடு இணைந்து இருப்பதால், நாலடியாரான நானே எளிதாக உயரம் தாண்டுதல் பழகலாம் எனும் போது, யார் வேண்டுமானாலும் குதித்து உள்ளே வரலாம். வீட்டைச் சுற்றியிருக்கும் மதிலும் என் உயரம்தான். எந்தப் பக்கம் வேண்டுமானாலும் குதித்துவிடலாம். பின்பக்கம் முடியாது. பின் வீட்டின் பால்கனி கிரில்தான் இந்த வீட்டின் எல்லை.

கேட்டில் பூட்டு போட்டாலும் போடாவிட்டாலும் ஒன்றுதான். அதென்னவோ பூட்டு போடுவது பெரிய பாதுகாப்பு என்ற மனப்பிரமை. வழக்காமாகிவிட்டது. ஆனால் டச் வுட் இது வரை எந்த அசம்பாவிதமும் நடந்ததில்லை. எங்கள் பகுதியிலும்.

வீட்டின் ஹாலில் இருந்து சிறிய வழியைக் கடந்து கழிவறை, குளியல் அறைக்குத் திரும்பும் இடத்தில் வீட்டின் பின் கதவு உண்டு. (இங்குப் பெரும்பான்மையான தனி வீடுகளில் பின் பக்கம் கதவு இருக்கிறது) இதைத் திறந்து கொண்டு வெளியில் சென்று கதவின் தாழ்ப்பாளைத் திறந்துவிடலாம்தான். ஆனால் காரணம் தெரிந்துகொள்ளாமல் வேண்டாம் என்று மனம் எச்சரித்தது.

யார் வந்திருப்பார்கள்? விஷமம் செய்திருப்பார்களா? கணவருக்கோ, மகனுக்கோ சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே அலைபேசியை எடுத்த போது பக்கத்துவீட்டுப் பெண் முந்தைய ராத்திரி 9.40ற்கு அழைத்திருந்திருக்கிறார். அதுவும் இரண்டு முறை. மனம் குழம்பியது.  இதற்காகத்தானோ? என்னவாக இருக்கும்?

இப்போது மனம் மீண்டும் கிளை தாவியது. ஜன்னல் வழியாக மீண்டும் சுற்றுமுற்றும் பார்த்தேன். தாறுமாறான கற்பனைக்கு அளவேயில்லை.

சில நாட்கள் முன்தான் பன்னேர்கட்டா தேசிய விலங்குகள் பூங்காவிலிருந்து ஒரு புலி தப்பி சில குடியிருப்புகளுக்குள் புகுந்த விஷயம் சில சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருப்பதாகவும் இன்னும் பிடிபடவில்லை என்றும் படத்துடன் செய்தி வந்திருந்தது. மனம் குரங்காய்த் தாவியது! ஆனால் குரங்கால் புலியைப் பிடிக்க முடியுமோ!

நான் இருப்பதோ பங்களூரின் வடக்கில். புலியின் இருப்பிடமோ தென்மேற்குப் பகுதியில். அதற்குத் தெரியுமா, காடாக இருந்த பன்னேர்கட்டா பகுதி முழுவதும் இப்போது கட்டிடக்காடாக மாறியிருப்பது? எங்கள் பகுதிக்கு வருவதற்குள், காரில் வந்தாலே 2.1/2 மணி நேர மொக்கைப் படத்தைப் பார்த்துவிடலாம் எனும் அளவிற்குப் போக்குவரத்து நெரிசல். “போதுமடா சாமி இதற்குத்தானா ஆசைப்பட்டாய்” என்று புலி மிரண்டே போய்விடும்.

என் மனம் போகும்  போக்கை நினைத்து எனக்கே சிரிப்பு வந்தது. 

இரவு ஏதேனும் சம்பவித்திருக்குமோ? இருவருக்கும் காது கேட்காது என்பதால் காலையில் நாங்கள் கதவை திறந்துவிடக் கூடாது என்று பக்கத்துவீட்டுப் பெண் வெளியே கதவைத் தாழ்போட்டிருக்கிறாரோ? அப்படி என்றால் அழைத்தவர் குறுஞ்செய்தி கொடுத்திருக்கலாமே! அதுவுமில்லை. அவரை அந்த நேரத்தில் அழைக்க முடியாது.

சரி, தகவல் சொல்லிக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு என் வேலைகளைத் தொடங்கலாம் என்று தொடங்கும் போது அப்பா எழுந்துவிட நான் வாசற்கதவைத் திறக்காமல் வேலை செய்கிறேன் என்று கதவுப்பக்கம் போனார்.

அந்த அதிகாலை வேளையில் அவருக்குச் சத்தமாகச் சொல்ல வேண்டாம் என்று சைகை மொழியில் சொன்னால் அவரோ புரிந்துகொள்ளாமல் கதவு திறக்கவில்லை என்று பதற்றமாகி “ஓ” என்று என்னைப் பார்க்க நான் மெதுவாகச் சொல்ல (ரகசியம் பேசினாலே பக்கத்து வீடுகளுக்குக் கேட்கும் அத்தனை நெருக்கமாக வீடுகள்) அவருக்கு நான் சொல்வது புரியாமல்....எனக்கோ எழுதிக்காட்ட அயற்சி.

அவரிடம் பக்கத்துவீட்டுப் பெண்ணின் அழைப்பையும், நான் கொடுத்த செய்தியையும் காட்டி, "இன்னும் 1 மணி நேரத்தில் விடிந்துவிடும் அமைதியாகப் பல் தேய்த்து விட்டு வாருங்கள் காபி குடிப்போம்" என்று சொன்னால் மனுஷன் கேட்பதாக இல்லை. “அதுக்கும் நாம் கதவு திறக்கறதுக்கும் என்ன சம்பந்தம்? கதவு திறக்காம எவ்வளவு நேரம் இப்படி இருக்க முடியும் இதென்ன கூத்து. பின் பக்கம் வழியா போய் கதவைத் திறக்கலாமே” என்று அவர் பர பரக்க.....நான் அவரை அடக்கி வைக்க மிகவும் சிரமப்பட்டேன்.

மனிதர் தன் காலைக்கடன்களுக்காகக் கூடப் போகாமல் இந்த நிமிஷம் கதவைத் திறந்தால்தான் ஆச்சு என்று அடம் பிடித்து முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு பதற்றத்துடன் உட்கார்ந்திருக்க...

பின் கதவைத் திறந்தால் இரண்டு பாழடைந்த படிகள் இறங்க வேண்டும். அதை ஒட்டி பின் வீட்டு பால்கனி கிரில்... இருட்டு. லைட் கிடையாது.  அப்பாவிற்கோ நடப்பதில் சில சமயம் தடுமாற்றம். அந்த நேரத்தில் அவர் இறங்கி எங்கேனும் அடிபட்டுக்கொண்டாலோ என்று நான் அவரிடம் விளக்கி, “அமைதியா பொறுமையா இருக்கலாம், நீங்க முதல்ல பாத்ரூம் போய், பல் தேய்த்துவிட்டு வாருங்கள்” என்று மீண்டும் சொல்லி அவரை ஒரு வழியாக அனுப்பினேன்.

வந்ததும் வைத்திருந்த காஃபியைக் கூடக் குடிக்காமல், டார்ச்சை எடுத்துக் கொண்டு வந்து பின் பக்கக் கதவைத் திறந்து போகலாம் என்று மீண்டும் பிடிவதாகமாக நின்றார்.

“அப்பா, நம்ம வீட்டுக்கு யாரும் வரப் போறதில்லை. நாமும் வெளியில் போக வேண்டிய அவசியம் இல்லை. அப்புறம் ஏம்பா பதற்றம். 6 மணி வரை பொறுமையா இருங்களேன். நீங்கதான் ஸ்லோகம் சொல்லுவீங்களே சொல்லிக் கொண்டிருங்கள்” என்று சைகையில், உட்கார்த்தி வைத்து காபியைக் குடிக்க வைத்து...ஸ்பாஆஆஅ

6 மணி ஆனது. வாசல் கேட்டில் 'ஆண்டீ' என்று கூப்பிட்டபடி பக்கத்துவீட்டுப் பெண். கையில் ஒரு பார்சல்.  ஆங்கிலத்தில் உரையாடல். “ஆன்டிநான் உங்கள் குறுஞ்செய்தி பார்த்தேன். குழம்பிப் போனேன். ஏன் இன்னும் கேட் திறக்கலை?” என்றதும் நான் ஏகத்துக்கும் குழம்பிப் போனேன்.  

“வாசல் கதவு வெளியில் தாழ் போடப்பட்டுள்ளது. உங்கள் அழைப்பும் இருந்தது அதனால்தான் என்ன விஷயமாக இருக்கும் என்று உங்களுக்கு மெசேஜ் கொடுத்து விட்டுக் காத்திருக்கிறேன்” என்று ஜன்னல் வழி சொல்லியபடியே, நிம்மதியாக பின் பக்கக் கதவைத் திறந்து, வெளியில் சென்று வாசல் கதவைத் திறந்துவிட்டு, கேட்டையும் திறந்தேன்.  அப்பா என்னைப் பார்த்து முறைத்தார்! “இதை அப்பவே செஞ்சிருக்கலாமே! என்னவோ பெரிசா பேசினியே ஆனை பூனைன்னு”

அந்தப் பெண்ணின் கையில் காபி பொடி மணத்தது. நான் எதிர்பார்க்காத விஷயம். என் மர மண்டைக்குள் இளித்த பல்பு! விஷயம் இதுதான்.

வீட்டருகில் ஒரு மெஸ். நடத்தும் கணவன் மனைவி, கன்னடத்தில் மாத்தாடும் சுந்தரத் தெலுங்கினர்.  நல்லவர்கள். மெஸ் தொடங்கும் முன் முந்திரி, பாதாம் உலர்பழங்கள் விற்பனையும், வறுத்த காபி கொட்டையை அரைத்துத் தரும் விற்பனையும் செய்து வந்தவர் அந்தக் கணவர். நான் காபி பொடிக்கு வழக்கமான வாடிக்கையாளர். நட்பானார்.

கொரோனா சமயத்தில் பல இளைஞர்கள் இளைஞிகள் சாப்பாட்டிற்குத் திண்டாட, கணவனும் மனைவியும் மெஸ் தொடங்கினர். என்றாலும் காஃபி பொடி பிஸினஸை எங்களுக்காகவேனும் விடவில்லை என்றும் சொல்லலாம். வேறு யாரும் அங்கு காஃபிபொடி வாங்குவதாகத் தெரியவில்லை.

இந்தச் சம்பவத்தின் முதல் நாள் காஃபி பொடி வாங்கி வர அவர் மெஸ்ஸிற்குச் சென்றேன். கரன்ட் இல்லை. வந்ததும் அரைத்துக் கொண்டு வந்து தருகிறேன் என்றார்.  அவர் சிரமப்பட வேண்டாம் என்றும் மதியம் மெஸ் மூடுவதற்குள்ளோ அல்லது மறுநாள் காலையிலோ வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.  அதனால் அவரை அந்த இரவு வேளையில் எதிர்பார்க்கவில்லை.

இப்போது 9.30-945 இந்த இடைப்பட்ட நேரத்திற்கு மீண்டும் வருவோம்.  நான் வேலை முடித்து கணினியை மூடும் வேலைகளைச் செய்யும் சமயம் அந்த நண்பர் அரைத்த காபி பொடியைக் கொண்டு வந்து கேட் பூட்டியிருந்ததால் அங்கிருந்தே சத்தம் கொடுத்திருக்கிறார்.

ஜன்னல் மூடியிருக்க, ஹெட்செட் காதில். கேட்டிருக்க வாய்ப்பில்லை. விளக்கு எரிந்து கொண்டிருந்தது என்பதால் அவர் பக்கத்து வீட்டுக்குச் சென்று கேட்டிட, அப்பெண்ணும் அவரது சிறிய பையனும் வீட்டின் வாசலில் வந்து கூப்பிட்டிருந்திருக்கிறார்கள். அப்போது என் மூன்றாவது காது பெட்டிக்குள்.

லைட் எரிந்தும் வீட்டிலிருந்து எந்த அறிகுறியும் இல்லை என்று அந்தச் சின்ன பையன் சுவர் தாண்டிக் குதித்து வந்து கதவை மெதுவாகத் தட்டியிருக்கிறான். காலிங்க் பெல்லை அழுத்தவில்லை. அழுத்தியிருந்தாலும் எனக்குக் கேட்டிருக்காது.

நான் இரவுக்கடனை முடிக்கச் சென்றிருந்த போதுதான்....அப்பெண் மொபைலிலும் கூப்பிட்டிருந்திருக்கிறார். வீட்டில் குரல் பதிவுகள் நடப்பதால் என் மொபைல் எப்போதுமே அமைதிகாக்கும். மொபைலை நான் பார்க்கவும் இல்லை.

இத்தனையும் சொல்லி மன்னிப்பும் நன்றியும் சொல்லிக் காபி பொடியை வாங்கிக் கொண்டு மீண்டும் மன்னிப்பு கேட்டு நன்றி சொன்னேன். “ஆனால், எப்படிக் கதவின் வெளியில் தாழ்ப்பாள் போட்டிருந்தது! என்பதுதான் குழப்பமாக இருக்கிறது” என்றேன். அவளுக்கும் குழப்பம். அப்போது குட்டிப் பையன் சொன்னான்,

“நான் தாழ்ப்பாளை பிடித்துக் கொண்டு ஆட்டி ஆட்டிப் பார்த்தேன்” என்று!

ஆ! ஆட்டியதில் தாழ்ப்பாள் ஓட்டைக்குள் புகுந்து தாழ்போட்டுக் கொண்டிருந்திருக்கிறது! எப்படியோ ஒரு வழியாய் மணிச்சித்திரத்தாழ் மர்மம் முடிவுக்கு வந்தது! 

பின்குறிப்பு: 1. இப்போது தாழ்ப்பாள் செருகும் ஓட்டைக்குள் பேப்பரைச் சுருட்டி அடைத்து விட்டேன்.

என் இரு செல்லப் பெண்களையும் நினைத்து மாய்ந்து போனேன். அழுகை பீறிட்டு வந்தது. என்னைப் பார்த்துக்கொண்டே என் அருகில் வந்தும் வாசல் பக்கம் ஓடியும் குரைத்து என்னை இழுக்காத குறையாக இழுத்திருப்பார்கள். அவர்கள் இருந்தவரை  24 மணி நேரமும், அருகில், தெருவில் என்ன நடக்கிறது, நடமாட்டம் எல்லாம் தெரிந்துவிடும். அதைப் பற்றி வேறொரு பதிவில். வரும் ஜூலை 4 கண்ணழகியின் முதலாண்டு நினைவுநாள். 


----கீதா

46 கருத்துகள்:

  1. திகில் திரைப்படம் பார்த்தது போலிருந்தது ஹா... ஹா.. ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா கில்லர்ஜி உண்மையில் இதை நான் அப்படியே கொஞ்சம் உல்டா பண்ணி கதையாக எழுத நினைத்து அதுவும் இருக்கிறது ஆனால் உல்டா இன்னும் எழுதவில்லை. இப்போது அதை எழுதி முடிக்க சிரமம் என்பதால் அனுபவத்தை அப்படியே போட்டுவிட்டேன்!

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  2. அப்பா... ஒரு வழியாக எனக்கும் நிம்மதி.. சின்னதொரு விஷயம்... எத்தனை பெரிய சஞ்சலம்!..

    ஐயப்பா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை அண்ணா, சின்ன விஷயம் தான் ஆனால் நம் மனம் அந்த சமயங்களில் மனதின் கற்பனை எங்கெல்லாமோ செல்லும்.

      மிக்க நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
  3. கண்ணழகி.. இறைநிழலில் இனிதே இருக்கட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அவள் இருந்த வரை உண்மையாகவே எனக்கு வலது கை போல இருந்தாள். நல்ல தோழியும் கூட! அவளிடம் எல்லாம் பேசுவேன். அவள் கேட்கும் அழகைப் பார்க்க வேண்டும்...

      நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    பதிவை (அதாவது தங்கள் வீட்டில் நடந்த உண்மை சம்பவத்தை) அருமையாக ரசித்து எழுதியுள்ளீர்கள். ஆனால் படிக்க படிக்க எனக்குள்ளும் திக், திக் என்ற உணர்ச்சி ஏற்பட்டது. அவ்வளவு திரிலிங்காக எழுதியிருக்கிறீர்கள். சில இடங்களில் உங்களுக்கு வந்த அபரிமிதமான சந்தேகங்கள் எனக்கும் எழும். எனக்கும் இந்த மாதிரி கற்பனைகள் அப்போதைக்கு கொடி கட்டி பறக்கும் ."பயங்கரமாக இப்படி எப்படித்தான் விபரீதமாக யோசிக்கிறாயோ என்ற வஞ்சப் புகழ்ச்சி கண்டனங்கள் வேறு வீட்டில் அனைவரிடமிருந்தும் அதன் பிறகு புறப்பட்டு வந்து தாக்கும்." ஹா.ஹா.ஹா

    /நான் இருப்பதோ பங்களூரின் வடக்கில். புலியின் இருப்பிடமோ தென்மேற்குப் பகுதியில். அதற்குத் தெரியுமா, காடாக இருந்த பன்னேர்கட்டா பகுதி முழுவதும் இப்போது கட்டிடக்காடாக மாறியிருப்பது? எங்கள் பகுதிக்கு வருவதற்குள், காரில் வந்தாலே 2.1/2 மணி நேர மொக்கைப் படத்தைப் பார்த்துவிடலாம் எனும் அளவிற்குப் போக்குவரத்து நெரிசல். “போதுமடா சாமி இதற்குத்தானா ஆசைப்பட்டாய்” என்று புலி மிரண்டே போய்விடும்.

    என் மனம் போகும் போக்கை நினைத்து எனக்கே சிரிப்பு வந்தது/

    இது போன்ற நகைச்சுவை கலந்து பல இடங்களில் நீங்கள் எழுதியிருப்பதைப் மிகவும் ரசித்தேன். சில இடங்களில் சிரித்தும் விட்டேன். நன்றாக எழுதியிருக்கும் உங்கள் எழுத்து திறமையை மிகவும் ரசித்தேன்.

    ஒரு ரகசியம் சொல்லவா? உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள். எனக்கும் இந்த மூன்றாவது செவியின் தேவையை நான் இன்னமும் வாங்கி உபயோகிக்காமல் வாழ்ந்து வருகிறேன். ஆனால் ஒரு காலத்தில் இந்த ஊசி கீழே விழுந்தால் ஒரு சத்தம் கேட்குமே.. அந்த செவித்திறனை உடையவள் நான். நாளாவட்டத்தில் இப்போது இப்படி ஒரு நிலைமை... என்ன செய்வது? வீட்டில் இதற்கும் மருத்துவரை பார்க்கச் சொல்லி ஏகப்பட்ட வலியுறுத்தல்கள்.இன்னமும் அவை நிறைவேறவில்லை. ஏனோ உங்கள் அனுபவங்களை கூறும் போது எனக்கும் சொல்ல வேண்டும் போல் இருந்தது. அதனால் இதை ரகசியமாக உங்களிடம் மட்டும் சொல்லியுள்ளேன். :)

    கடைசியில் அந்த பக்கத்து வீட்டு சிறுவனை குறிப்பிடும் போது, அவன்தான் விளையாட்டுத்தனமாய் தாழ்ப்பாள் இட்டிருப்பான் என நானும் ஊகித்தேன். முடிவு ஓரளவு சரியாகத்தான் இருந்தது. ஆனால் அதுவரை நம் வீட்டில் பெரியவர்களை சமாளிப்பது கஷ்டந்தான். நானும் இதை (மாமியார், அம்மா என்று ) அனுபவித்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு திரிலிங்காக எழுதியிருக்கிறீர்கள்.//

      மிக்க நன்றி கமலாக்கா

      //சில இடங்களில் உங்களுக்கு வந்த அபரிமிதமான சந்தேகங்கள் எனக்கும் எழும். எனக்கும் இந்த மாதிரி கற்பனைகள் அப்போதைக்கு கொடி கட்டி பறக்கும் ."பயங்கரமாக இப்படி எப்படித்தான் விபரீதமாக யோசிக்கிறாயோ என்ற வஞ்சப் புகழ்ச்சி கண்டனங்கள் வேறு வீட்டில் அனைவரிடமிருந்தும் அதன் பிறகு புறப்பட்டு வந்து தாக்கும்." ஹா.ஹா.ஹா//

      ஹாஹாஹா கமலாக்கா ஹைஃபைவ்! ஆனால் நாம் நினைப்பது சில சமயம் நடக்கவும் செய்யும்.
      அன்று எனக்குப் பயம் எதுவும் இல்லை ஒரு எச்சரிக்கை. எப்படியும் விடிந்ததும் பிரச்சனை தீர்ந்துவிடும்தான். அந்த நேரத்தில் மனித மனம் என்பதுதான்.

      //இது போன்ற நகைச்சுவை கலந்து பல இடங்களில் நீங்கள் எழுதியிருப்பதைப் மிகவும் ரசித்தேன். சில இடங்களில் சிரித்தும் விட்டேன். நன்றாக எழுதியிருக்கும் உங்கள் எழுத்து திறமையை மிகவும் ரசித்தேன்.//
      நன்றி கமலாக்கா

      அக்கா உங்களுக்கும் மூன்றாவது காதின் அவசியம் இருந்தால் உடனே சென்று பரிசோதித்து போட்டுக் கொண்டுவிடுங்கள். ஏனென்றால் போகப் போக அதிகம் திறன் குறையும் போது கடினமாகிவிடும். அக்கா வீட்டில் உள்ளவர்கள் சொல்வது நல்லதுக்குத்தானே வலியுறுத்தல்கள் என்பதை விட அவர்களுக்கும் சில சிரமங்கள் குறையலாம்.
      டம்ஷ்ரஸ் விளையாடும் பழக்கம் இருந்தால் அது மிகவும் பயன்படுகிறது சைகை மொழியில் உரையாடிக் கொள்ள.

      கடைசியில் அந்த பக்கத்து வீட்டு சிறுவனை குறிப்பிடும் போது, அவன்தான் விளையாட்டுத்தனமாய் தாழ்ப்பாள் இட்டிருப்பான் என நானும் ஊகித்தேன். முடிவு ஓரளவு சரியாகத்தான் இருந்தது. //

      ஆமாம் ஊகித்து விட முடியும்தான். பெரியவர்கள் அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையே வேறு விதமாக இருந்ததாலும் எல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்று நினைப்பதாலும் அப்படி ஆகிவிடுகிறது. நமக்கும் வயதாகிறதே!!!

      மிக்க நன்றி கமலாக்கா விரிவான கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  5. எதிர்பாரா திகில் அனுபவம்.  தற்செயலாய் நடக்கும் சில நிகழ்வுகள் நம்மை ஏகத்துக்கு குழப்பி விடுகின்றன.  ஆனாலும் நீங்கள் காட்டி இருக்கும் எச்சரிக்கைக்கு ஒரு சபாஷ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் எதிர்பாரா அனுபவம்.

      //தற்செயலாய் நடக்கும் சில நிகழ்வுகள் நம்மை ஏகத்துக்கு குழப்பி விடுகின்றன./

      ஆமாம் அதே அதே.

      //ஆனாலும் நீங்கள் காட்டி இருக்கும் எச்சரிக்கைக்கு ஒரு சபாஷ்.//

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  6. வயதானவர்களின் பிடிவாதம் தெரிந்தது, நானும் உணர்ந்திருப்பது.  சில சமயம் கோபப்படவும் முடியாது.  சும்மா இருக்கவும் முடியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கத்திப் பேச முடியவில்லை ஸ்ரீராம். எனக்கும் செவித்திறன் இல்லை என்பதால் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் ரொம்பவும் கத்திப் பேச முடியலை. அவருக்கு சைகை மொழி கொஞ்சம் கூடப் புரிவதில்லை. பயிற்சி கொடுத்தும் அவருக்குப் புரிவதில்லை. ஆமாம் கோபப்பட்டாலும் மனம் அடுத்து ரொம்ப வருந்திவிடும் குற்ற உணர்வு வேறு வந்துவிடுகிறது. என்ன செய்ய நமக்கும் ஒரு காலம் இருக்கிறதே!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. மெயில் பாக்ஸில் இருந்தன இந்த மூன்றும். போட்டு பதிலும் கொடுத்துவிட்டேன்

      கீதா

      நீக்கு
  7. நானும் கூட நள்ளிரவில் காலிங்பெல் ஒலித்த ஒரு திகில், அமானுஷ்ய அனுபவம் முன்னர் எழுதி இருந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ஸ்ரீராம், அதன் தலைப்பு என்ன? வாசிக்க வேண்டுமே. தேடிப் பார்க்கிறேன் எபியில்

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. பிளாக்கர் படுத்தும் பாட்டில், கமெண்ட் மாடரேஷன் உள்ள இடங்களில் இடும் கமெண்ட்ஸை அழிக்காமல் வைத்துக் கொள்கிறேன்.  மாடரேஷன் விடுபடும் நேரம், எல்லாம் சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே அழிக்கிறேன்!  வெங்கட் இதற்காகவே மாடரேஷனை எடுத்து விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாடரேஷன் எடுத்துவிட்டேன் ஸ்ரீராம். போன பதிவிலேயே எடுக்க வேண்டும் என்று நினைத்து மறந்து போய்விட்டேன். ஆமாம் வெங்கட்ஜி எடுத்துவிட்டார். இப்போது நானும் எடுத்துவிட்டேன் ஸ்ரீராம்

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
    2. நன்றி. இப்போது என் டிராஃப்டையும் அழித்து விட்டேன்! அதான் வந்துடுச்சே!

      நீக்கு
    3. ஹாஹாஹா ஆனால் கமென்ட் மாடரேஷன் எடுத்ததும் கமென்ட் எது புதிது எது பப்ளிஷ் ஆனது என்று தெரிவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. அப்ப்டி கோமதிக்காவின் கமென்ட் இடையில் மாட்டிக் கொண்டு!! பப்ளிஷ் ஆகாமல் அப்புறம் செக் பண்ணி அதை வெளியிட்டேன் இப்போதும் உங்கள் கமென்ட் வந்தது இடையில் இருந்தது. இது பழக கொஞ்சம் நாள் எடுக்கும் என்று நினைக்கிறேன்

      கீதா

      நீக்கு
  9. தாழ்ப்பாள் மர்மம் கடைசியில் விலகியது. நன்றி

    பதிலளிநீக்கு
  10. தாழ்ப்பாள் மர்மம், தெரிந்தவுடன் நிம்மதி பெருமூச்சு.
    கண்ணழகி இருந்தால் பயமில்லை. நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது இரு செல்லங்களும்.
    மர்ம கதை எழுதலாம் கீதா நீங்கள்.பயத்தை மிக அருமையாக சொன்னீர்கள்.
    நான் கதவில் சாவியை வைத்து விட்டு மூடி வீடுகிறேன். எதிர் வீட்டிலிருந்து வந்து திறந்து தந்தார்கள்.இப்போது நினைவாக வெளியில் போய் விட்டு வந்தவுடன் சாவியை நினைவாக எடுக்கிறேன்.வெளியில் போய் வந்து இருந்தால் பிள்ளைகள் கேட்கிறார்கள் சாவியை எடுத்து விட்டாயா? என்று.
    புலி வேறு கிலியை கிளப்பி இருக்கிறது. இன்னும் பிடிபடவில்லையா!


    வரும் ஜூலை 4 கண்ணழகியின் முதலாண்டு நினைவுநாள்.
    நினைவுகளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் கண்ணழகி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாழ்ப்பாள் மர்மம், தெரிந்தவுடன் நிம்மதி பெருமூச்சு.//

      ஆமாம் கோமதிக்கா நிஜமாவே.

      கண்ணழகி இருந்திருந்தால் ரொம்பவெ. உங்கள் நினைவிலும் இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு கோமதிக்கா

      அக்கா நான் இதை மர்மக் கதையாக எழுதத்தான் நினைத்து அது தனியாக இருக்கிறது இந்த நிகழ்வையே வைத்து.....கடைசியில் அதை இன்னும் முடிக்கவில்லை இப்போது முடிக்கும் நிலையிலும் இல்லை என்பதால் அனுபவத்தை அப்படியே போட்டுவிட்டேன்.

      ஹாஹா அக்கா நானும் சில சமயம் வாசலில் சாவியை தொங்க விட்டு வீட்டுக்குள் போய்விடுவேன் அப்புறம் நினைவாகச் செய்துவிடுகிறேன்.

      //இப்போது நினைவாக வெளியில் போய் விட்டு வந்தவுடன் சாவியை நினைவாக எடுக்கிறேன்.வெளியில் போய் வந்து இருந்தால் பிள்ளைகள் கேட்கிறார்கள் சாவியை எடுத்து விட்டாயா? என்று.//

      அக்கா நல்ல விஷயம் நீங்கள் மறந்து போனதுக்குக் காரணம் புரிந்து கொள்ள முடியும். பிள்ளைகளும் கேட்பது நல்லது..

      புலி இப்போது பிடிபட்டிருக்கும் என்று நினைக்கிறேன் அதன் பின் அதைப் பற்றி செய்தி வரவில்லை.

      ஆமாம் கோமதிக்கா கண்ணழகி நினைவுகளில் வாழ்கிறாள். ப்ரௌனியும்

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  11. தாழ் திறவாய் புராணம் கொஞ்சம் நீண்ட பதிவாக இருந்தாலும் படிக்க சுவாரசியமாக இருந்தது. கொஞ்சம் சுருக்கி சிறுகதையாக வெளியிட தகுதி படைத்தது. 

    மூன்றாவது காது எனக்கும் உண்டு என்பதால் உங்கள் திண்டாட்டம் நன்றாகவே புரிகிறது. 

    இது போன்ற அனுபவம் எனக்கும் உண்டு. நான் குளித்துக் கொண்டிருக்கும்போது மனைவி குளியலறை தாழ்ப்பாளை போட்டு விட்டார். குளித்து விட்டு வெளியில் வர கஷ்டப்பட்டு கடைசியில் ஒருவழியாய் அவர் வந்து திறந்தார்.  
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜெ கே அண்ணா முடித்ததும் தெரிந்தது கொஞ்சம் நீண்ட பதிவுதான். சுவாரசியமாக இருந்தது என்பதற்கு நன்றி.

      நான் முதலில் இதை மர்மக் கதையாகவே சஸ்பென்சோடு எழுதி வைத்து முடிக்கவில்லை. அதனால் இப்படி வெளியிட்டுவிட்டேன்.

      //கொஞ்சம் சுருக்கி சிறுகதையாக வெளியிட தகுதி படைத்தது. //

      மிக்க நன்றி அண்ணா.

      //மூன்றாவது காது எனக்கும் உண்டு என்பதால் உங்கள் திண்டாட்டம் நன்றாகவே புரிகிறது.//

      ஆமாம் நீங்கள் சொல்லியிருக்கீங்க.

      //இது போன்ற அனுபவம் எனக்கும் உண்டு. நான் குளித்துக் கொண்டிருக்கும்போது மனைவி குளியலறை தாழ்ப்பாளை போட்டு விட்டார். குளித்து விட்டு வெளியில் வர கஷ்டப்பட்டு கடைசியில் ஒருவழியாய் அவர் வந்து திறந்தார். //

      ஆ இதை வைத்துக் கதை எழுதலாம்!! ஓரிரு வருடங்கள் முன் மலையாளத்தில் ஒரு திரைப்படம் வந்ததே ஒரு பெண் உணவகத்தின் ஐஸ் அறைக்குள் மாட்டிக் கொண்டுவிடுவாள் எப்படி அவள் முயற்சி செய்கிறால் மீட்கப்படுகிறாள் என்று...நன்றாக எடுத்திருந்தார்ககள்

      மிக்க நன்றி அண்ணா

      கீதா


      நீக்கு
  12. நல்ல வேளை, திருடர்கள் யாரும் அடுத்த வீட்டுக்கு வந்திருப்பார்களோ என்று யோசித்தேன். பொதுவாக ஒரு வீட்டில் திருடப் போனால், அதன் வலது, இடது வீடுகளின் கதவுகளை வெளிப்புறம் தாழ் போடுவது திருடர்களின் பழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியில்லை என்னும்போது நிம்மதி ஏற்பட்டது.

    மூன்றாவ்து காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் செல்லப்பா சார் நானும் ஊரில் இருக்கும் போது கேட்டிருக்கிறேன். நான் இந்த நிகழ்வை ஒரு சஸ்பென்ஸ் கதையாக எழுதி பாதியில் இருக்கிறது. அதில் இதைச் சொல்லியிருக்கிறேன். நல்லகாலம் சார் அப்படி இல்லை, இதுவரை இப்பகுதியில் இப்படியான நிகழ்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. ஆமாம் சார் அடுத்த வீட்டுப் பெண் வந்த போதுதான் நிம்மதி எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை என்று...

      மிக்க நன்றி ராயசெல்லப்பா சார்

      கீதா

      நீக்கு
  13. வயதானால் குழந்தையாக மாறி விடுவார்கள்.. அப்பாவின் பிடிவாதம் வெளியே போகவிடாமல் வைத்து இருக்கும் குழந்தை அம்மாவிடம் வெளியே போக அடம்பிடிப்பது போல உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா. //அப்பாவின் பிடிவாதம் வெளியே போகவிடாமல் வைத்து இருக்கும் குழந்தை அம்மாவிடம் வெளியே போக அடம்பிடிப்பது போல உள்ளது.//

      ஹாஹாஹாஹா ஆமாம். அதுவும் அப்பாவுக்கு எல்லாம் அந்த நேரப்படி நடக்க வேண்டும். ரொம்ப சிஸ்டமாட்டிக், மெக்கானிக்கலாகவும் இருப்பார். அதுவும் பிரச்சனைகள் யதார்த்தமாக இருக்க வேண்டும் இல்லையா...

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  14. ஆகா Crime கதை எழுத தயாராகி விடலாம்...!

    // இப்பகுதி நினைவில் இருக்கட்டும்... //

    அது எப்படி மறந்து போகும்...? "அடுத்து என்ன நடந்தது ?" எனும் ஆவல், புலி துரத்தினாலும் தாவி தாவி தப்பிக்கும் குரங்கு போல, வாசக்கும் மனம் தவிக்கிறதே...!

    பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா மிக்க நன்றி டிடி.

      உண்மையா இதைக் கதையாகவே எழுத நினைத்தேன் எழுதி தொடர முடியவில்லை அப்படியே நிற்கிறது.

      அது எப்படி மறந்து போகும்...? "அடுத்து என்ன நடந்தது ?" எனும் ஆவல், புலி துரத்தினாலும் தாவி தாவி தப்பிக்கும் குரங்கு போல, வாசக்கும் மனம் தவிக்கிறதே...!//

      ஹாஹாஹா

      மிக்க நன்றி டிடி கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  15. ஸ்வாரஸ்யம்..... நீண்ட பதிவென்றாலும் இங்கேயும் அலுப்பு தட்டவில்லை. வித்தியாசமான அனுபவம் தான். தில்லியில் ஒரு முறை நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது வெளியே இருந்த கிரில் கேட்டை யாரோ வெளியில் தாழ்ப்பாள் போட்டு சென்றிருக்க காலையில் தான் தெரிந்தது. ஆனால் அந்தக் கதவில் ஒரு வசதி. சின்னதாய் கை மட்டும் வெளியே விட்டு வெளி தாழ்ப்பாளை திறக்க ஒரு சந்து போன்ற ஒரு அமைப்பு இருக்கும். ஆங்கிலத்தில் Wicket Gate என்று சொல்வார்களே அது போல! அதற்கு உள் பக்கம் ஒரு தாழ்ப்பாள் உண்டு. அதை திறந்து கை வெளியே விட்டு வெளி தாழ்ப்பாள் திறக்க முடியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி.

      உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      //ஆங்கிலத்தில் Wicket Gate என்று சொல்வார்களே அது போல! அதற்கு உள் பக்கம் ஒரு தாழ்ப்பாள் உண்டு. அதை திறந்து கை வெளியே விட்டு வெளி தாழ்ப்பாள் திறக்க முடியும்!//

      நல்லதாயிற்று

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  16. பதில்கள்
    1. ஹாஹா அது புரிந்து கொள்ள முடிந்தது ஜி.

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  17. வயதானவர்களிடம் சொல்லவும் முடியாது/ சொன்னால் புரிஞ்சுக்கவும் மாட்டாங்க. என்ன செய்வது! கடைசி வரை த்ரில்லிங்காகவே இருந்தது. முடிவும் ஓரளவுக்கு ஊகித்தது தான். ஒண்ணும் இல்லைனு ஆனவரைக்கும் நிம்மதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா. ஆனால் அப்பா அட்ஜஸ்டிங்க் வகைதான். என்னவென்றால் ரொம்ப சிஸ்டமாட்டிக். இந்த நேரத்தில் இதைச் செய்ய வேண்டும் என்று. அந்த நேரம் தப்பினால் அவர் கொஞ்சம் பதற்றப்படுவார். அதனால் இப்போது சொல்லிச் சொல்லி கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்.

      ஆமாம் ஊகிக்க முடியும். //ஒண்ணும் இல்லைனு ஆனவரைக்கும் நிம்மதி.//

      ஆமாம். கீதாக்கா

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  18. அன்பின் கீதாமா,
    என்றும் நலமுடன் இருங்கள் .
    முதலில் உங்களின் தன்னம்பிக்கைக்கும்,
    முன் யோசனைக்கும் ஒரு சபாஷ்.

    செவித்திறம் இருப்பவர்களின் பிரச்சினையே
    சிலசமயம் பூதாகாரமாகத் தெரியும்.

    உங்கள் பக்கத்து வீட்டாரின் பதட்டமும் புரிகிறது.
    உங்கள் அப்பாவின் நிலையும் நீங்கள் அதை சமாளிப்பதும்
    மனதை மிக யோசிக்க வைக்கின்றன.

    அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
    திகிலழகி கதையில் கண்ணழகியும் வந்து விட்டாள்.
    எங்கிருந்தாலும் காப்பாள்.

    இன்னும் பற்பல சாதனைகள் செய்து
    எங்களை மகிழ்விக்க வேண்டும்.
    நலமுடன் இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் என் சாதனைகள் என்று எதுவும் இல்லை வல்லிம்மா.

      உங்கள் அன்பான கருத்திற்கு மிக்க நன்றி

      செவித்திறன் இல்லாமல் இந்த மூன்றாவது காதின் பயன்பாடு மிக நல்லது என்றாலும் (செவித்திறன் இல்லாதவர்களுக்கு டெமன்ஷியா சீக்கிரம் வந்துவிடுமாமே!!) சத்தங்கள் தாறுமாறாக அல்லது அதீதமாக இருக்கும். அதைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன்

      அப்பா புரிந்து கொள்ளும் வகைதான். என்னவென்றால் ரொம்ப நேர மேலாண்மை அதை அப்படியே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.

      இப்போது சொல்லிச் சொல்லி மாற்றி வருகிறேன், நேர மேலாண்மை நல்லது ஆனால் ஒன்று கொஞ்சம் முன்ன பின்ன ஆனால் பதற்றம் கூடாது. நடைமுறை அனுசரித்து நம் செயல் இருக்க வேண்டும் யோசித்துச் செய்ய வேண்டும் என்று சொல்லி வருகிறேன்.

      அட்ஜஸ்ட் செய்து கொண்டுவிடுவார். தன்னால் முடிந்த வேலைகளைச் செய்வார். உதவிகள் உட்பட.

      //அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
      திகிலழகி கதையில் கண்ணழகியும் வந்து விட்டாள்.
      எங்கிருந்தாலும் காப்பாள்.//

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  19. ஒரு சிக்கலைப் பகிர்ந்தவிதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  20. "மர்ம மாளிகையில் மாயாவியின் சேட்டை
    யார் திறப்பார் மர்மத்தின் பூட்டை".

    "கதவை திற காபி வரட்டும்" - அருமை + திகில்.

    கோ

    பதிலளிநீக்கு
  21. "மர்ம மாளிகையில் மாயாவியின் சேட்டை
    யார் திறப்பார் மர்மத்தின் பூட்டை".//

    ஹாஹாஹாஹா இதுதான் கோ! தமிழ் விளையாடுகிறது! அடுத்தாப்ல காபியை வரவழைச்சீங்க பாருங்க....ஹாஹா

    //அருமை + திகில்.//

    மிக்க நன்றி, கோ

    கீதா.

    பதிலளிநீக்கு