திங்கள், 2 மே, 2022

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 15 - செந்நாரை (PURPLE HERON)

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - வீட்டருகே இருக்கும் இரு ஏரிகளில் நடைப்பயிற்சி செய்யும் ஒவ்வொரு தினமும் பார்த்து ரசித்த பறவைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் படங்களுடன் ஒவ்வொரு பதிவில். 

ஏதோ என் மூன்றாவதுவிழிக்கு எட்டிய வரையில், எனக்குப் புகைப்படக் கலை தெரியாவிட்டாலும் புகைப்படங்கள் எடுக்கும் ஆர்வத்தில் நான் ரசித்து எடுத்தவற்றைப் பகிர்கிறேன். மகனுக்காக வாங்கியிருந்த, சலீம் அலி அவர்கள் எழுதிய "இந்தியப் பறவைகள் புத்தகம் மற்றும் இணையத்தில் வாசித்ததிலிருந்து தெரிந்து கொண்டதையும் இங்கு பகிர்கிறேன். நான் பார்த்து ரசித்தவை அடைப்புக் குறிக்குள் கறுப்பு வண்ணத்தில் இருப்பவை. ஓவர் டு செந்நாரை

சத்திமுத்தப் புலவர் என்று புலவர் ஒருவர் இருந்தாராமே! அவர்  பாடிய நாராய் நாராய் செங்கால் நாராய் அல்ல நான். குழப்பிக் கொள்ளாதீர்கள்.  செங்கால் நாரைக்கும், செந்நாரையாகிய எனக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.  

வாருங்கள் என்னைப் பாருங்கள்.  நான்தான் செந்நாரை, செந்நீல நாரை. 

நாங்கள் (பறவைகள்) எல்லோருமே மிகவும் அழகாக இருப்போம். திருஷ்டி என்று நீங்கள் மனிதர்கள் ஏதோ சுத்துவீர்களே எங்களுக்கும் சுற்றிப் போடுங்கள். எங்கள் வாழ்விடங்கள், இருப்பிடங்கள் மிகவும் குறைந்து, ஊர் ஊராகச் சுற்ற வேண்டியுள்ளது.

அறிவியல் பெயர் அர்டியா பர்புரியா (ARDEA PURPUREA) - என் குடும்பப் பெயர் ஹெரான் குடும்பமான ஆர்டெய்டே (ARDEIDAE) 

கூடு கட்டி இனப்பெருக்க காலம் - ஜூனிலிருந்து மார்ச் வரை இருப்பிடங்களைப் பொருத்து. எங்கள் சொந்த காலனிக்குள்தான் கூடு கட்டுவோம். ஒரு வேளை வேறு ஹெரான்கள் இருந்தால் எங்கள் இனம் தனித்துதான். குச்சி எல்லாம் பொறுக்கி மரத்தின் மேல் அல்லது கோரைப்புல் படுக்கைகளில் கூடு கட்டுவோம்.

தோற்றத்தில், பரவலாகக் காணப்படும் என் நெருங்கிய உறவு சாம்பல்நிற நாரையைப் (கிரே ஹெரான் பின்னாடி வருவாங்க) போன்று இருந்தாலும், எங்களின் தனித்தன்மை உயரமும், வண்ணங்களும்.  செந்நீல வண்ண நிற உடலும், எங்களில் வளர்ந்தவர்களின் கருத்த பழுப்பு நிற உடலும்தான் சாம்பல் நிற நாரையிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.  

எங்கள் கழுத்தும் தலையும் அடர் சிவப்பு நிறம் அதாவது சிவப்பும் ப்ரௌனும் கலந்து இருப்பதைப் பார்க்கலாம். அடர் சிவப்பு ப்ரௌன் நிறம் கலந்த வரிகள்  கழுத்தின் கீழ் வரை இரு புறங்களிலும் இருப்பதைப் பாருங்கள், தெரிகிறதா. 

நேரடியான சூரிய வெளிச்சத்தில் நல்ல ஊதா நிறத்தில் நாங்கள் இருப்பதையும் நீங்கள் பார்க்கலாம். 

என் வேறு பெயர் ஜம்பு நாரை. (அதென்ன ஜம்புநாரை? பெயர்க்காரணம் தேடியும் கிடைக்கவில்லை. நீயே அதைச் சொல்லக் கூடாதா!) 

நான் தெரிகின்றேனா? பார்த்துச் சொல்லுங்கள்

நாங்கள் அடர்த்தியான நீர்நிலைத் தாவரங்கள், கோரைப்புற்கள் நிறைந்த வாழ்விடங்கள் குறிப்பாகச் சதுப்பு நிலங்கள், காயல்கள் மற்றும் ஏரிகளை வாழ்விடமாகக் கொள்வோம். பொதுவாக நன்னீர் வாழ்விடங்களைத் தேர்ந்தெடுப்போம். (இந்த ஏரிகளில் சாக்கடைத் தண்ணீர் கலந்து இருப்பது உனக்குத் தெரியவில்லை போலும்!) ஆழமற்ற நீரில் நடக்கும் எங்களுக்கு நீண்ட கால்கள். எங்கள் அலகு ப்ரௌனும் மஞ்சள் நிறமும் கலந்த கூரிய அலகு.

நான் எங்கேன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்! (மறைந்திருந்து பார்க்கும் மர்மம் ரொம்பப் பிடித்த விஷயம் இந்தச் செல்லங்களுக்கு! ஆனால் என் கண்ணிலிருந்து தப்ப முடியாதாக்கும்! )

இப்படித்தான் நாங்கள் தனித்து, மறைந்திருப்பதில் விருப்பம் உடையவர்கள். குறிப்பாக இனப்பெருக்கக்காலங்களில். ஆனால் எங்களின் வாழ்விடங்கள் குறைந்து வருகின்றன. (எங்கே, எப்போது பார்த்தாலும் தனியாகத்தான் இருக்கின்றன. கோரைப்புற்கள், செடிகள் குறைந்து வருவதால், இருக்கும் இடங்களில் ஒன்று ஒளிந்து கொண்டு இருந்தால், மற்றொன்று தனக்குக் கிடைத்த இடத்தில் வெளியே தெரியும் அளவு நிற்கின்றன.)

நாங்கள் அமைதியாக, அசையாமல் மணிக்கணக்கில் நிற்போம், எங்கள் உணவுக்காகவும்தான். (கால் வலிக்காதோ? ஆனால் நான் புகைப்படம் எடுக்கப் போறேன் என்று எப்படித்தான் தெரியுமோ சற்று தூரத்தில் இருந்தாக் கூட உடனே பறந்துவிடும். Birds are very Sensitive and alert!

என் கழுத்து பாம்பு போல இருக்கிறதோ!

எங்கள் கழுத்து மெல்லிதாக நீண்டும், கழுத்து முழுவதும் இருபுறமும் அடர் சிவப்பு நிறத்தில் கோடுகள் இருப்பதால் பாம்பு போன்று இருக்கிறது இல்லையா!

கழுத்தைத் தாழ்வாக வைத்துக் கொண்டு நீட்டிக் கொண்டு நிற்கும் போதும், நடக்கும் போதும், கோரைப்புற்கள் செடிகளின் நடுவில் மறைந்து கொண்டு கழுத்து மற்றும் தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் போதும், பாம்பு போன்று இருக்கிறதோ? எங்கள் கழுத்து. 


என் நடையழகை இங்கே பாருங்க...

https://youtu.be/W7mYaayoiBU

(மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்....நடக்கும் போது மெதுவாகக் கால்களைப் பின்பக்கம் தூக்கி மடக்கி முன்பக்கம் நீட்டி வைத்து நடப்பதைப் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.)  


மீன், தவளை, பாம்புகள், பூச்சிகள், கொறித்துண்ணிகள் இதெல்லாம்தான் எங்கள் சாப்பாடு. நான் எப்படிச் சாப்பிடுகிறேன் என்பதைப் பாருங்கள். இரையை அலகில் பிடித்தவுடன் அப்படியே சாப்பிடுவோம் அல்லது ஆட்டி ஆட்டி அவற்றை செயலிழக்கச் செய்தும் சாப்பிடுவோம். சில சமயம் மெதுவாக இரையைப் பின்தொடர்ந்து சென்றும் பிடிப்போம். 

இந்தக் காணோளியில் ஒரு செந்நாரை தனது இறக்கைகளை உயர்த்தி, ஓடு தளத்தில் விமானம் போவது போல் நடப்பதைக் காணலாம். அது பறக்கப் போகிறது என்று நினைத்து அது நடந்துசெல்வதையும், உயரே எழுவதையும் படம் பிடிக்கக் காத்திருந்தா அதுவோ டபக்குனு திரும்பி, விமானம் வேறொரு ஒடு தளத்தில் போவதைப் போல் திரும்பி நடக்கத் தொடங்கியது.  என்ன அழகான காட்சி! அது பறப்பதை எப்படியும் படம் பிடிக்கணும்னு காத்திருந்து காத்திருந்து.... அதுவோ அங்கேயே அசையாமல் நின்றுவிட்டது.  ச்சே! ஏமாத்திடுச்சே... ஒரு வேளை அதுக்குப் பறக்க சிக்னல் கிடைக்கவில்லையோ என்னவோ!!!!

என் மூன்றாவது விழியை மூட நினைத்த போது வாவ்! அங்கு கொஞ்சம் தள்ளி வேறொரு இடத்தில்  நின்றிருந்த செந்நாரை ஒன்று டக்கென்று பறந்தது. என் விழியைத் திறந்து காணொளியைத் தேர்ந்தெடுத்து எடுப்பதற்குள்ளும் அது என்ன நின்னுட்டேவா இருக்கும்? ஓரளவு எடுக்க முடிந்தது. சிறிய காணொளிதான் முடிந்தால் பாருங்கள்.

நாங்க ஹெரான்கள் அனைவரும் பறக்கும் போது ஆங்கில எழுத்தான "S" வடிவில் கழுத்தை மடித்து வைத்துக்கொண்டு பறப்போம். இந்தப் பழக்கம், எங்களைப் பொதுவாகக்  கழுத்தை நீட்டிக்கொண்டு பறக்கும் கொக்குகள், நாரைகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்.

கொஞ்சம் தூரம் பறந்து தரையிறகுகிறேன்.

https://youtu.be/70FDd_iwRyA

நாங்கள் பொதுவாக, அதிகமாகச் சத்தம் எழுப்புவதில்லை ஆனால்  திடுக்கிட்டால் கொஞ்சம் அதிகமான சுருதியில் கரகரத்தக் குரலில் சத்தம் எழுப்பிக் கொண்டு பறப்போம்.


 இவ்வளவு நேரம் பேசி, நடந்து, பறந்து உங்களுக்குக் காட்டிக் களைப்பாகிவிட்டது! இதோ கீழே பாருங்க 

இந்த நிலையில் இருந்தால் இதுக்குப் பெயர் ROOSTING - ரூஸ்டிங்க். அதாவது ஓய்வெடுக்கிறேன். 

கடைசியாக ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். எங்களையும் மகிழ்ச்சியாக வாழ விடுங்கள்! அடுத்தாற்போல் என் உறவுகள் வந்து  பேசி, நடந்து, பறந்து எல்லாம் காட்டுவார்கள்! என்னை/எங்களை ரசித்தீர்கள் என்றால் இரண்டு வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போங்களேன்!

வேறு சில படங்களுடன் தொகுப்பு - கணொளியாக
இச்சுட்டியின் பெட்டியில் செந்நாரையின் (சாப்பிடுவது, பறப்பது, நடப்பது) மற்ற காணொளிக்கான சுட்டிகளும் கொடுத்திருக்கிறேன்

https://youtu.be/C2rv8uEAi-s


------கீதா

47 கருத்துகள்:

  1. நாரையைப் பற்றிய விவரங்கள் சிறப்பாக  உள்ளன.ஆனால் அதிகமாக இருப்பதால் கொஞ்சம் திகட்டுகிறது.உயிரியல் பாடங்கள் அவசியம் இல்லை. நீங்கள் எடுத்த படங்கள், இணையத்தில் எடுத்தவை எவை என்பதை வேறு பிரித்து காண முடியவில்லை. படங்கள் அழகு. பறவைகளை படம் எடுப்பது கடினம். 

    கூத்தன்குளம் பறவை சரணாலயம் சென்றிருக்கிறீர்களா?

    திருவிளையாடல் புராணத்தில் நாரைக்கு முக்தி கொடுத்த படலம் என்று உண்டு. அதில் வரும் நாரை ஜம்பு நாரையாக இருக்கலாம். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜெ கே அண்ணா. அறிவியல் பெயர்கள் கொடுத்தது எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்காக. படங்கள், காணொளிகள் எல்லாமே நான் எடுத்தவை. படத்திலேயே கொடுத்திருக்கிறேன். gk's visuals என்று.

      தகவல்கள் மட்டுமே இணையத்திலும் புத்தகத்திலிருந்தும் தொகுத்தவை

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
    2. நேற்று தங்கையின் பேத்தி, பேரன்கள் வேறு உறவுக் குழந்தைகள் வந்திருந்தார்கள். அப்போது என் தங்கையின் பெண் குழந்தைகளுக்காகச் சொல்லச் சொன்னதால் அப்போது அதைச் சேர்த்தேன். நான் நினைத்திருந்தபடி சென்றா வாரம் பதிவு வெளியாகியிருந்தால் இதில் பல இருந்திருக்காது.

      அவள் ஆங்கிலத்தில் குரல் கொடுத்தும் போடச் சொன்னாள். அவளுமே பேச்சுமொழி மட்டுமே தமிழ் மற்றபடி மலையாளம்தான் என்பதால் ஆங்கிலத்திலும் போடச் சொன்னாள். காணொளியில் சில தகவல்கள் ஆங்கிலத்தில் கொடுத்துப் போடலாமா என்று யோசனை.

      திருவிளையாடல் புராணத்தில் அந்த நாரையின் கதை தெரியும், ஆனால் அதிலும் ஜம்பு நாரை என்று குறிப்பிடப்படவில்லையே. அதனால்தான் சொல்லவில்லை.

      மிக்க நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
  2. நாரைகள் பேசுவது போல, தகவல்கள் அனைத்தும் ரசிக்கத்தக்கவை...

    ப்டங்களின் தொகுப்பையும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  3. நாரை - செந்நாரை - செங்கால் நாரை - ஜம்புநாரை, கம்பு நாரை...  அம்மாடி.. ...   எனக்கு இவ்வளவு விவரங்களும் பிரிவினைகளும் தெரியாது.  என்னைப்பொறுத்தவரை இதெல்லாம் கொக்கு.  அஷ்டே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஸ்ரீராம் நானும் அப்படித்தான் இருந்தேன். எனக்கு ஆர்வம் இருந்தது என்றாலும் அப்போதெல்லாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதன் முதலில் நான் அறிந்து கொள்ள காரணம் மகன். அதன் பின் இப்போது என் தங்கையின் பேரன் பேத்தி, அவர்களுக்காகவும். நேற்று கேள்வி மேல் கேள்விகள் கேட்டு என்னை ஆச்சரியப்படுத்தி, உற்சாகத்தைக் கொடுத்தனர்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணிப் போகுமோ...  அதனால் ஜம்ப்பு நாரை என்று அழைக்கபப்டுகிறதோ!  டவுட்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ ஸ்ரீராம் ஹைஃபைவ்! நிஜம்மா எனக்கும் அந்த டவுட்டு இருந்தது. இதை நான் அந்த ஜம்பு நாரை பக்கத்தில் அடைப்புக் குறிக்குள் சொல்லியிருந்தேன். "நீ ஒன்றும் ஜம்ப் பண்ணிப் பார்க்கவே இல்லையே அப்புறம் ஏன் ஜம்புநாரை?" என்று சொல்லியிருந்ததை வெட்டினேன்!!!! ஹப்பா உங்களுக்குக் கருத்திற்காச்சு!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. படங்கள் தெளிவாக எடுத்திருக்கிறீர்கள்.  மறைந்து நின்று பார்க்கும் கொக்கைக் கூட..  ஓ ஸாரி..   நரையைக் கூட பார்க்க முடிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஹப்பா தெரிஞ்சுருச்சா!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம் ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
  6. நாரை ஆழகு. விவரங்கள் அருமை.தங்களைப்பற்றிய நிறைய விஷ்யங்களை நாரையே சொல்வது அருமை. பசுமையும் அதற்கு இடையில் நாரையும் அழகு. மறைந்து இருக்கும் நாரையும் தெரிகிறது.நாவல் கலரில் இருப்பதால் அதன் பேர் ஜம்பு நாரையோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாரை ஆழகு. விவரங்கள் அருமை.தங்களைப்பற்றிய நிறைய விஷ்யங்களை நாரையே சொல்வது அருமை. பசுமையும் அதற்கு இடையில் நாரையும் அழகு. //

      மிக்க நன்றி கோமதிக்கா. நீங்களும் ரசிப்பீர்கள் என்று தெரியும். முதலில் பொதுவாகத்தான் எழுதியிருந்தேன் அதுவும் தகவல்கள் இத்தனை இல்லாமல். நேற்று தங்கையின் மகள் அவள் குழந்தைகள் எல்லாரும் வந்த போது படங்களைக் காட்டிச் சொன்ன போது குழந்தைகளுக்காக ஆங்கிலத்தில் போடேன் என்று சொன்ன போது பதிவை பறவை பேசுவது போல மாற்றினேன். தகவல்களும் சேர்த்தேன்.

      படங்களின் தொகுப்புக் காணொளியில் தமிழில் என் குரலைப் பதியலாம் என்று நினைத்து எடுத்தும் வைத்தேன். குரலைச் சேர்க்கவில்லை கடைசியில். அவள் சொன்ன பிறகு ஆங்கிலத்தில் பேசியதைச் சேர்த்து மற்றொன்று யுட்யூபில் போட்டு அவளுக்கு அனுப்பலாம் என்று தோன்றியது. இன்னும் சில குழந்தைகளும் பார்ப்பார்கள் என்று சொன்னாள்.

      நாவல் கலரில் இருப்பதால் அதன் பேர் ஜம்பு நாரையோ!//

      ஓ இப்படி ஒரு பொருள் ஆஹா...இப்போது நினைவுக்கு வருகிறது அக்கா நாவல் பழத்தில் வேறு வகைகள் இருக்கிறதே...கரு நாவல், சம்பு நாவல் என்று ஒரு வேளை அந்த சம்பு நாவல் தான் ஜம்பு என்று ஆனதோ?!!!

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா


      நீக்கு
  7. காணொளியும் அருமை. நீரில் நாரையின் பிரதிபலிப்பு தெரிவது மிக அருமை.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது கீதா. ஏரியில் எடுத்த எல்லா படங்களும் இடபெறட்டும் பதிவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா. காணொளியும் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. ஆமாம் நீரில் நாரையின் பிரதிபலிப்பு.....அது போல வேறு சின்ன வெண் கொக்கு தண்ணீரில் பிரதிபலிப்பும் இருக்கிறது அவை எல்லாம் அதைப் பற்றிய பகுதியில் வரும்.

      கண்டிப்பாக எல்லாப்படங்களும் போடுகிறேன் கோமதிக்கா

      மிக்க நன்றி அக்கா

      கீதா

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. நாரைகளின் வகைகளை அதன் பெயர்களை நீங்கள் அடுக்கடுக்காக சொல்லி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நாராய், நாராய் என்ற அந்தப்பாட்டு தெரியும் அவ்வளவே..

    நாரைகள் தன் வரலாற்றை சொல்வது போல் அழகாக அதன் புகைப்படங்களை எடுத்துப் பகிர்ந்து. அதன் ஒவ்வொரு செயலையும் விளக்கி, இந்தப் பதிவுக்காக நீங்கள் எவ்வளவு உழைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

    நீங்கள் படமெடுப்பது அதற்கு தெரிந்து விட்டது போலும். புதரின் மறைவிலேயே நின்றபடி இருக்கிறது. ஆனால் நடக்கும் போதும் பறக்கும் போதும் தங்கள் உற்சாகம் அதற்கும் தொற்றிக் கொண்டது போலும்... அழகான படங்கள். காணொளிகளையும் ரசித்தேன். அடுத்தப் பகுதிக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலாக்கா படங்களை ரசித்தமைக்கு. ஆமாம் அக்கா அது மறைந்திருந்தால், நாம் நடப்பதைக் கண்டு வெளியில் வரவே வராது. வெளியில் பார்க்கும்படி இருந்தால் நான் புகைப்படக் கருவியைத் திறக்கும் அந்த மெலிய மிகவும் மெதுவான சத்தம் கூட அதற்குக் கேட்டுவிடும் கொஞ்ச தூரத்தில் இருந்தால் கூட என் அசைவு தெரிந்துவிடும் அதற்கு உடனே பறந்து இன்னும் சற்று தூரத்தில் சென்று அமரும் அல்லது மறைந்து கொள்ளும்.

      அப்படிப் பறக்கும் போது டக்கென்று எடுத்தவைதான் பறப்பது எல்லாம்.

      மிக்க நன்றி கமலாக்கா காணொளிகளையும் பார்த்து ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
  9. நாரை படங்கள் நல்லா வந்திருக்கு. நல்ல ஜூம் கேமராவை வைத்திருந்தால் இன்னும் சூப்பரா எடுத்திருக்கலாம். அந்த அளவு உங்களுக்கு ரசனையும் திறமையும் இருக்கு. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை மிக்க நன்றி உங்க பாராட்டிற்கும் வாழ்த்திற்கும். . //நல்ல ஜூம் கேமராவை வைத்திருந்தால் இன்னும் சூப்பரா எடுத்திருக்கலாம்.//

      ஆமாம் நெல்லை. இல்லாததை நினைக்க முடியாதே. இருப்பதை வைத்து சந்தோஷப்பட்டுக்குவோம்னுதான்...

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  10. படங்களும் தகவல்களும் நன்று. ரசித்து படமெடுப்பதொடு தகவல்களும் சேர்த்து பதிவிட்ட உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி, பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும், கருத்திற்கும்

      கீதா

      நீக்கு
  11. நாரைகள் பேசுவது போன்று பதிவு சிறப்பு படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி ரசித்ததற்கும் கருத்திற்கும்

      கீதா

      நீக்கு
  12. படங்கள் எடுத்தது சரிதான். நீச்சல் தெரியாமல் ஏரியில் கால்வைக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா சார், எனக்கு நீச்சல் தெரியுமாக்கும்! ஆனால் இந்த ஏரியில் நீந்த முடியாது அதுதான் கஷ்டம்!

      மிக்க நன்றி சார்

      கீதா

      நீக்கு
  13. பதிவு மிக அருமை. இதுபோன்ற இயற்கை சார்ந்த பதிவுகள் பலருக்கு பயனுடையதாகவும் காலம் கடந்தும் இனிமை மாறாததாகவும் இருக்கும். வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நாஞ்சில் சிவா. நீங்களும் எவ்வளவோ நல்ல பயனுள்ள தகவல்கள் கட்டுரைகள் எழுதுகின்றீர்களே.

      நன்றி சிவா

      கீதா

      நீக்கு
  14. அன்பின் கீதாமா,
    மிகச் சிறந்த பதிவு. காணொளிகளில்
    விமான நாரையை மட்டும் பார்த்தேன். மற்றவர்களைப்
    பிறகு பார்க்கிறேன்.
    அற்புதமான படங்களைப் பாராட்டி முடியாது.
    ஜம்புத் த்வீபே என்று வரும் இல்லையா.
    அதனால தான் இந்த பழுப்பு நாரைக்கும்
    அந்தப் பெயர் வந்ததோ!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா. மெதுவாகப் பாருங்கள். ரசித்தமைக்கு மிக்க நன்றி அம்மா.

      ஜம்புத் த்வீபே என்று வரும் இல்லையா.//

      ஓ இப்படி இருக்கிறதா! அட....ஒரு வேளை அதுதான் காரணமாக இருக்குமோ?!! அட! சூப்பர் அம்மா! புது தகவல்,....

      கீதா

      நீக்கு
    2. புத்தமதம் சார்ந்த சொல் போன்று இருக்கிறதே. அதான் நாரைகள் மணிக்கணக்காக அசையாமல் தியானம் செய்கின்றன போலும்!! ஹஹஹாஹா

      கீதா

      நீக்கு
    3. மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  15. அந்த நீல வண்ண ப்ரௌன் கலந்த நாரையின் கழுத்து நிஜமாகவே
    பாம்பை நினைவு படுத்திருக்கிறது.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா. நிஜமாகவே நான் ஏரியில் பார்க்கும் போது முதலில் டக்கென்று பாம்பு என்று நினைத்துவிட்டேன் அதன் உடல் செடிகளுக்குள் மறைந்து நின்று கழுத்து தலை மட்டும் வெளியே அதுவும் டக்கென்ற்று இருபக்கமும் திரும்பிப் பார்த்து அசைந்து கொண்டிருந்தது பாம்பு என்று நினைத்துவிட்டேன் அப்புறம் தெரிந்தது நாரை என்று

      மிக்க ந்னறி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  16. படங்களோடு ஒளிந்து வரும் நாரைகளின்
    தகவல்கள் மிக அருமை.

    பாவப்பட்ட ஜன்மங்களாகி விட்டன.
    வாழ்விடம் குறைந்து போய், என்ன தான் கால் கடுக்க நின்றாலும்
    இரை கிடைக்க வேண்டுமானால் நீர் நில வளம் வேண்டுமே.

    மனிதர்களின் சுய நலத்தில் மற்ற ஜீவ ராசிகள்
    அவதிப் பட்டால் அது தன்னையே திருப்பித் தாக்கும் என்பது

    உலகுக்குத் தெரிவதில்லை.
    தங்களின் அன்பு மனம் நன்மையைத் தேடி நல்ல
    படங்களையும் எடுத்துப்
    பதிவிட்டு இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவப்பட்ட ஜன்மங்களாகி விட்டன.
      வாழ்விடம் குறைந்து போய், என்ன தான் கால் கடுக்க நின்றாலும்
      இரை கிடைக்க வேண்டுமானால் நீர் நில வளம் வேண்டுமே.//

      ஆமாம் அம்மா அதுவும் ஏரி நீரில் சாக்கடை நீர் கலக்கின்றது. இந்த வகை நாரைகளோ நன்னீர் விருப்பம் உடையவை....என்ன சொல்ல?

      மனிதர்களின் சுய நலத்தில் மற்ற ஜீவ ராசிகள்
      அவதிப் பட்டால் அது தன்னையே திருப்பித் தாக்கும் என்பது//

      ஆமாம் ஆமாம் ஆமாம்...எனக்கு இதில் மிகுந்த நம்பிக்கை உண்டு.

      //உலகுக்குத் தெரிவதில்லை.//

      அனுபவித்தாலும் தெரிந்து கொள்வதில்லை அம்மா அதுதான் வருத்தம்.

      மிக்க நன்றி வல்லிம்மா உங்களின் அன்பான வரிகளுக்கு. நான் ரசித்ததை எல்லோருக்கும் தருகிறேன். நம் கோமதிக்கா போடுவாங்களே! இப்படி

      கீதா

      நீக்கு
  17. அனைத்து புகைப்படங்களும் அழகு! ஒளிந்து கொண்டிருக்கும் சில நாரைகளைப் பார்க்கும்போது ' மறைந்திருந்து பார்க்கும் மெளனம் என்ன?' பாடல் தானாகவே ஞாபகத்துக்கு வந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அந்தப் பாடல் தானாகவே வந்துவிடுகிறது.

      மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
  18. அழகான படங்கள். விரிவான தகவல்கள். இங்கேயும் காவிரிக்கு விதம் விதமான நாரை/கொக்குக் கூட்டங்கள் வருகின்றன. முன்னெல்லாம் மொட்டை மாடியில் நின்று கொண்டு அவற்றைப்பார்ப்பது ஒரு பொழுதுபோக்கு. இப்போல்லாம் மொட்டை மாடிக்கே போவதில்லை! :( காணொளியைப் பின்னர் பார்க்கிறேன். மறைந்திருந்து எட்டிப்பார்க்கும் நாரைகள் கூட நன்றாய்த் தெரிகின்றன. ஜம்பு நாரை என்னும் பெயரை இன்றே கேள்விப் படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா ஆற்றுப் பகுதிகளுக்கு நிறையவே வருமே. உங்களுக்குப் போக முடியவில்லை என்பதும் தெரியும் கீதாக்கா. முன்பு நீங்கள், வீட்டிற்கு வருபவர்கள் எல்லோருக்கும் மொட்டைமாடியைக் காட்டுவதுண்டே மகிழ்ச்சியாக! மீண்டும் மொட்டைமாடிக்கும் போகும் படி உங்கள் கால்கள் சரியாகிவிடும் கீதாக்கா.

      ஜம்புநாரை என்பதை நானும் இத்தகவல் வாசிக்கும் போதுதான் தெரிந்து கொண்டேன் கீதாக்கா. மெதுவா பார்த்துக்கோங்க அவசமில்லை. மறைந்திருந்து எட்டிப் பார்ப்பவையும் தெரிகிறது இல்லையா, மகிழ்ச்சி கீதாக்கா.

      மிக்க நன்றி கீதாக்கா ரசித்ததற்கு

      கீதா

      நீக்கு
  19. கருத்தை வெளியிட்டேன் போகலை. மெயில் பாக்ஸுக்கும் வரலை. நாரையின் படங்கள்/நாரைக்கூட்டங்களின் பழக்க, வழக்கங்கள் அனைத்துத் தகவல்களும் அருமையாக நாரையே சொல்லி இருக்கிறது. காணொளியைப் பின்னர் பார்க்கிறேன். ஜம்பு நாரை என்ற பெயரை இன்றே கேட்கிறேன். முன்னாடி என்ன எழுதினேன்னு நினைவில் வரலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரு கருத்துகளும் வந்துவிட்டன கீதாக்கா. நான் இப்போதுதான் கருத்தை வெளியிட்டேன்.

      //நாரையின் படங்கள்/நாரைக்கூட்டங்களின் பழக்க, வழக்கங்கள் அனைத்துத் தகவல்களும் அருமையாக நாரையே சொல்லி இருக்கிறது//.

      குழந்தைகளுக்காக டக்கென்று மாற்றினேன் இப்படி. சென்ற வாரம் நான் நினைத்தபடி வெளியிட்டிருந்தால் அது பொதுவாகச் சொல்லும் தகவல்கள் போலத்தான் இருந்திருக்கும்.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  20. நாரை தன் வரலாறு கூறும் பதிவு அருமை. போரடிக்காமல் தகவல்கள் தருவது ஒரு கலை. படங்களும், காணொளிகளும் சிறப்பு. Zoom செய்து எடுக்க முடியவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பானுக்கா.

      //போரடிக்காமல் தகவல்கள் தருவது ஒரு கலை.//

      !!!!!!!! நன்றி பானுக்கா

      ஜூம் செய்து எடுத்ததே இப்படித்தான். என் கேமராவில் தூரப்பார்வையைக் கிட்டப் பார்வையாக்கினாலும் இவ்வளவுதான் அதன் திறன்.

      கீதா

      நீக்கு
  21. வாழ்விடங்கள் குறைந்து ஊர் ஊராய் சுற்றித்திரிவதாய் சொல்லும் பறவைகளின் கூக்குரல் நிஜமாகவே கண்ணீரை வரவழைக்கின்றது.
    வந்த பெயர், சொந்த பெயர், அறிவியல் பெயரென detailed ஆக ஆராய்ந்து பதிவிட்ட பாங்கு அழகு. படங்களும் , காணொளிகளும் அவற்றின் குறிப்புகளும் பாராட்டிற்குரியது, படமெடுக்க பாம்பிடம் பாடம் கற்று தேர்ந்திருப்பது வெளிச்சமாக "க்ளிக்"கிடுகிறது.
    ஊர் ஊராய் சுற்றி நாரைக்குறித்த குறிப்புகளால் ஊரையே மகிழ்வித்த உங்களுக்கு ஊர் கண்ணு படாமலிருக்க சுற்றிப்போடவேண்டும் - நன்றிகள் பல.
    நிறைய ஆராய்ச்சி செய்து களைத்துவிட்டிருப்பீர்கள் உங்களுக்கு இப்போது Roosting தேவை.
    ரசிக்காமலா இத்தனை வார்த்தைகள் என் பின்னூட்டமாக?
    கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மிக்க நன்றி கோ, தெரிகிறது நீங்கள் ரசித்து வாசித்துக்கருத்திட்டிருப்பது. உங்கள் பாராட்டிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி கோ.

      //படமெடுக்க பாம்பிடம் பாடம் கற்று தேர்ந்திருப்பது வெளிச்சமாக "க்ளிக்"கிடுகிறது.//

      ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன் வார்த்தை விளையாட்டு மன்னன்!! (கோ)

      //நிறைய ஆராய்ச்சி செய்து களைத்துவிட்டிருப்பீர்கள் உங்களுக்கு இப்போது Roosting தேவை.
      ரசிக்காமலா இத்தனை வார்த்தைகள் என் பின்னூட்டமாக?//

      ஹாஹாஹாஹா ரூஸ்ட் எடுத்து அடுத்து இரு பதிவுகள் போட்டாயிற்று.

      மிக்க நன்றி கோ உங்கள் ரசனையான கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  22. பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ சதீஸ் முத்து கோபால். உங்களின் தளத்தில் பறவைகளின், விலங்குகளைப் பற்றிய தகவல்கள் அனுபவங்கள் ரொம்பவே சுவாரசியமானவை.

      கீதா

      நீக்கு