வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

நாகர்கோவில் - கடம்போடுவாழ்வு - 2


//நீங்களும் வாருங்கள். கொஞ்சம் காத்திருங்கள். கடம்போடுவாழ்வு கிராமத்தைக் காட்டுகிறேன். என் உறவினர்களையும் அறிமுகப்படுத்துகிறேன். // என்று சொல்லியிருந்தேன்.  இதோ ஊருக்குள் நுழையப் போகிறோம்.

நுழையும் போதே நம்ம செல்லங்கள், எந்தப் போக்குவரத்துத் தொல்லையும் இல்லாமல் ஜாலி நடை போடுது பாருங்க. ஆனா பாவம் எல்லாம். பரிதாபமான ஜீவன்கள்.

வலப்பக்கம் ஒரு அறிவிப்பு பலகை தெரிகிறதா? ஏர்வாடி மொட்டை மலை படம் - பாருங்க இந்த மலைதான் (திருநெல்வேலி) ஏர்வாடியின் அடையாளம் - படம். அதில் ஏர்வாடி சிறப்புப் பேரூராட்சி எல்லை என்று சொல்லும் பலகை. பேரூராட்சி ஓகே. சிறப்புப் பேரூராட்சினா? 

உங்களுக்குத் தெரிந்திருக்கும் ஆனால் எனக்குத் தெரியவில்லை. கூகுள் செல்லத்துக்கிட்ட கேட்டப்ப அதன் சார்பில் இதோ விக்கி சொல்கிறார்.

பேரூராட்சிகள் ஐந்து வகையில் அதன் வருவாய்க்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளன. அவை :-

1.     மூன்றாம் நிலை பேரூராட்சி - ஆண்டிற்குப் பத்து இலட்சத்துக்கு குறைந்த வருவாய் உடையது

2.     இரண்டாம் நிலை பேரூராட்சி - ஆண்டிற்குப் பத்து இலட்சத்திற்கு மேல் வருவாய் உடையது

3.     முதல் நிலை பேரூராட்சி – ஆண்டிற்கு இருபத்து ஐந்து இலட்சத்துக்கு மேல் வருவாய் உடையது

4.     தேர்வு நிலை பேரூராட்சி - ஆண்டிற்கு ஐம்பது இலட்சத்துக்கு மேல் வருவாய் உடையது 

5.    சிறப்பு நிலை பேரூராட்சி - ஆண்டிற்கு ஒரு கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுபவை. இப்படி நகராட்சியைப் போலவே அதன் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்படுகிறது. இந்தப் பேரூராட்சிகள், நகராட்சியைப் போலவே தன்னிச்சையாகச் செயல்படும் தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளன.

நன்றி விக்கி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிக அழகான பசுமையான, வளமான - இப்படி  அடைமொழிகள் பல சொல்றதுல என்ன ஒரு சந்தோஷம் பாருங்க! - கிராமங்களில் ஒன்று கடம்போடுவாழ்வு. மிகச் சிறிய கிராமம். வள்ளியூர், களக்காடு, நாங்குனேரி, ஏர்வாடி, திருக்குறுங்குடிக்கு டக்குனு நினைச்சதும் போகக் கூடிய தூரத்தில்  அருகே இருக்கும் கிராமம். - திருக்குறுங்குடியும் என் மனதிற்கு நெருக்கமான ஊர்! எந்த ஊர் தான் உனக்குப் பிடிக்கலை அதைச் சொல்லு - ஒரு தொடக்கப்பள்ளி இருக்கிறது. தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி (ஊருக்கு வெளியே) களக்காடு சாலையில் இருக்கிறது.  

கடம்போடுவாழ்வு கிராமத்தின் தெற்குப் பகுதியில்தான் என் சித்திப்பாட்டியும் அவரது இரு மகள்களும் இருக்கின்றனர். கிராமத்திற்கும் தெற்குப் பகுதிக்கும் இடையே அரை கிலோமீட்டர். இந்த அரை கிலோமீட்டர் பகுதி இருபுறமும் வயல்களும், வாழைத்தோப்பும், ஓடைகளும் என்று பசுமை பசுமை. ஒரு வேளை நான் போனது மழை சமயம்ன்றதுனாலயோ? கோடைகாலத்துல போய்ப்பார்க்கணும் ஒருதடவையாவது.  

மளிகைப் பொருட்கள், பிற பொருட்கள் வாங்க களக்காடு டவுன் அல்லது ஏர்வாடிக்குச் செல்ல வேண்டும். வீட்டருகில் ஆபத்பாந்தவன் என்று வெகு சிறிய கடை உள்ளது.

அது சரி இப்படி, கடம்போடுவாழ்வு ன்னு ஒரு அழகான பெயர் இந்தக் கிராமத்துக்கு எப்படி வந்திருக்கும்னு மூளையில் நியூரான்களின் குடைச்சல். கடம்பர் எனும் குயவர்கள் இங்கு முன்னர் இருந்திருப்பாங்களா? ஆனால் பேருக்கு ஒரு சட்டி, பானை கூட கண்ணுல படலையே. கடம்ப மரம், நிறைய இருந்து கடம்பவனம் இருந்திருக்குமோ? கடம்ப மரம் ஒன்று கூடக் கண்ணில் படவில்லை. ஒரு வேளை கடம்பன் - முருகனோடு சம்பந்தப்பட்ட ஊராக இருக்குமோ? ஆனா முருகனையும் காணும். ஊர்மக்களுக்கும் தெரியவில்லை. 

(இந்தக் கடம்பமரம் படம் என்னிடம் ஏதேச்சையாக இருக்கிறது சென்னையில் எடுத்தது. முன்பு இங்கு பகிர்ந்து இது என்ன என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தேன். ஆனால் அப்போது பதில் கிடைக்கவில்லை. இப்போதுதான் அது கடம்ப மரம் என்று தெரிந்துகொண்டேன். மீண்டும் அதை 'என் மூன்றாவது விழியின் பார்வையில்' பகுதியில் போடுகிறேன்)

ஊரில் பிராபல்யம் முத்துமாரியம்மனும், சுடலையும். சரி விடு கீத்ஸ் அந்த ஊர்க்காரங்க அல்லது சுத்துப்பட்டு யாராச்சும் இதைப் பார்த்தா பெயர்க்காரணம் சொல்லலாம்.  நீ பாட்டுக்கு க்ளிக் பண்ணித் தள்ளு அதானே உன் வேலை!!

கடம்போடுவாழ்வு கிராமத்திற்குச் செல்லும் சாலை. போகும் போது ஆட்டோவிலிருந்தபடியே சில க்ளிக்ஸ்

ஆட்டோலருந்துதான் எடுத்தேன்னு அத்தாட்சி வேணாமா!!! 
இதற்குஅப்புறமான கீழே உள்ள படங்கள் ஆட்டோவிலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல!

இதோ ஊருக்குக் கிட்ட வந்தாச்சு. அதாவது தெற்கு கடம்போடுவாழ்வு. அந்த சர்ச் அடையாளம். அடுத்தாப்ல கீழ வரவேற்கும் போர்ட் 

வந்தாச்சு கடம்போடுவாழ்வு கிராமத்திற்குள். பாருங்க கிராமம் வரவேற்கிறது! பசுமையான கிராமத்துக்கு இப்படி அழுதுவடியும் ஒரு போர்ட்

அடுத்தாப்ல இப்படி ஒரு போர்ட்! 
ஒரு நீலக்கலர் வீடு தெரிகிறதா அதை ஒட்டிய அடுத்த தெருவில்தான் சித்திப் பாட்டி குடும்பத்தின் வீடு. இந்த நீலக்கலர் வீட்டின் நேர் மேலே மலையில் - களக்காடு மலைப்பகுதி - சின்னதாக இரு வெள்ளைக் கோடுகள் தெரிகிறதா? தெரியலைனா என்னை அடிக்க வராதீங்க!!! அது ஓர் அருவி. இந்த மலைப்பகுதியில்தான் திருக்குறுங்குடி மலைநம்பி கோயில் இருக்கிறது. சற்று பெரிய வெள்ளைப் புள்ளியாகத் தெரியும். அருவியும் தெரியும் கோடாக.  ஆங்கிள் பார்த்து கிளிக்கினோம்ல! அந்தப்படம் அப்புறம் வரும். மலைநம்பி இருக்கும் இடம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான, ரசித்த இடம்.  

வீட்டின் வாசலில் செல்லங்கள்! அம்மாவும் குட்டியும். புதுசா யாரோ வந்திருக்காங்களேன்னு ஆராய்ச்சி. செக்கிங்க்! மாஸ்க் போட்டிருக்காங்களான்னு பாக்குதோ?!! போஸ் கொடுத்தும் எடுக்கலைனு அந்தச் செல்லங்கள் வருத்தப்படக் கூடாதில்லையா! எனக்கும் தூக்கம் வராதே! 
வீட்டின் முன்புறம்

 என் அப்பாவின் சித்தி (எனக்குச் சித்திப்பாட்டி) அவரது கடைசி மகள், முதல் மகள் (என் அத்தைகள்)

சிறு வயதிலிருந்தே என் மனதிற்கு நெருக்கமான உறவுகள் இவர்கள். சித்திப்பாட்டி, கடம்போடுவாழ்வில் தாய்சேய் நல விடுதியில் பிரசவம் பார்த்தவர். ஆயா என்று அழைக்கப்பட்டவர்! சுற்றியுள்ள பத்மநேரி, களக்காடு, வள்ளியூர் அருகில் உள்ள செட்டிகுளம் கிராமப்பகுதிகளில் வேலையில் இருந்திருக்கிறார். ஆனால் கடம்போடுவாழ்வில்தான் அதிகமான வருடங்கள். 30 வருட செர்வீஸ். அதனால் இக்கிராமம் மற்றும் சுற்றுப்பட்டுக் கிராம மக்களிடையே ஆயா/ஆச்சி என்று பிரபலம். சித்தியின் வயது 87 (என் அப்பாவை விட சில மாதங்களே பெரியவர்)

கிராமத்திலேயே அவருடைய பெரிய மகளும் அங்கன்வாடி ஆசிரியையாக வேலை பார்த்துவந்தார். ஊர்மக்களால் டீச்சரம்மா என்று அழைக்கப்படுபவர். கடைசி மகள், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் உடன்குடி கிராமத்தில் (உடன்குடி கிராமப்பகுதியில் முக்கியமான தொழில் பனைதொழில். உடன்குடி கருப்பட்டி என்பது மிகவும் புகழ்பெற்றது. அது போன்று வெற்றிலைக்கும் சிறப்பு பெற்ற ஊர்) சுகாதார மேற்பார்வையாளராக வேலை பார்த்து ரிட்டையர் ஆனவர். தற்போது 70 வயதைத் தொடுகிறார். இந்த அத்தை ஜாதகம் பார்ப்பார். முறையாகக் கற்றவர்.  சித்திப்பாட்டிக்கு ஒரு மகன் (எனக்குச் சித்தப்பா) உண்டு. அவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் இருக்கிறார். 

என் அப்பாவழிப் பாட்டியும் தாத்தாவும், வள்ளியூரிலும், திருக்குறுங்குடியிலும் இருந்த போது சித்திப்பாட்டியும் குடும்பமும் அடிக்கடி வந்து சென்றதுண்டு. பாட்டியின் கடைசித் தங்கை இவர். அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த பாசம். என் தங்கைகளின் பிரசவ சமயத்தில் சித்திப்பாட்டிதான் உதவிக்கு வந்து 3, 4 மாதங்கள் வரை இருந்துவிட்டுச் செல்வார். 

சமீபகாலத்தில் அப்பா, ஊரில் இருந்த போது தீபாவளிக்கு அங்கு சென்றதுண்டு. அது தவிர திருக்குறுங்குடி செல்லும் போதெல்லாம் அங்கு தங்குவதுண்டு. சமீபத்தில் தீபாவளி சமயத்தில் ஊருக்குச் சென்றதால் இறங்கியதுமே நேரே கடம்போடுவாழ்வுக்குச் சென்று அவர்களுடன் தீபாவளி. மிகவும் மகிழ்ச்சியான நேரங்கள்.  

நாகர்கோவில், திருவனந்தபுரம்,  திருக்குறுங்குடி, இந்த ஊர், திருநெல்வேலி என்று பசுமையான சுற்றுப்பட்டில் இருக்க ரொம்பவே ஆசைதான். ஆசையை அடக்கு கீதா! யதார்த்தம் வேறு திசையில்!

ஊருக்குள் வரும் அதே சாலை வீட்டின் பின்புறம். இச்சாலைதான் களக்காடு செல்லும் முக்கிய சாலையில் இணைகிறது. 1 1/2 கிமீ. உழுதுவிட்டு வரும் விவசாயி! ட்ராக்டர் பாருங்க அழகு.

ஊரின் அழகும், பசுமையும் இங்கிருக்கும் ஒரு சில படங்களிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும். மற்ற படங்கள் அடுத்தடுத்த பதிவில்.
இப்படியான நிறைய படங்கள் உண்டு

இப்பத்தானே ஊருக்குள் வந்திருக்கோம். கொஞ்சம்  ஆற அமர உட்கார்ந்துவிட்டு ஊரின் வளத்தை, செழிப்பை, உழைப்பைப் பார்க்க அடுத்த பகுதியில் ஊர் சுற்றுவோம்.  

---கீதா


62 கருத்துகள்:

  1. பசுமையான காட்சிகள் மிகவும் அழகாக இருக்கிறது.
    விளக்கம் அருமை தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கும் ரசித்தமைக்கும்

      கீதா

      நீக்கு
  2. கடம்போடுவாழ்வு - எத்தனை அழகான ஊர். பார்க்கும் காட்சிகள் அனைத்துமே அழகு. மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி ரொம்ப அழகான ஊர். நடைப்பயிற்சி செய்ய மனம் ஈர்க்கும்..சுற்றிக் குளங்கள், பறவைகள் வயல்கள் வாழை என்று.

      மிக்க நன்றி வெங்கட்ஜி ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
  3. அன்பின் கீதாக்கா , படிக்க படிக்க சிறு வயதில் சுற்றியும் மலைகளும், கிராமங்களும் நிறைய உடைய , நான் பிறந்து வளர்ந்த ஊர் (ராசிபுரம்) ஞாபகம் வருகிறது. கடம்போடு வாழ்வு என்னும் பெயர் இனிமையாய் உள்ளது. ஆரல்வாய்மொழி என்னும் பெயரும் மிக இனிமை. "கடம்பு" என்னும் சொல்லுக்கு " கன்று ஈன்ற பசுவின் முதல் பால்- சீம்பால்" என்ற பொருளும் உண்டு. அதன் படி பார்த்தால் அவ்விடம் மிகுந்த வளமையான இடம் போலும். பசுமையான இடத்தில் பசுக்களுக்கு குறைவேது...அதனால் கடம்போடு வளமாக வாழ்ந்தார்கள் என குறுக்கின்றதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காயத்ரி. வருக...ஓ சேலம் அருகே - நாமக்கல், ராசிபுரமா? வாவ்! அதுவும் மலைகள் சூழ்ந்த அழகான ஊர்..

      ஆமாம் கடம்போடுவாழ்வு பெயரே ஈர்க்கிறது. கடம்பு - பசுவின் சீம்பால் ஆம் ஆனால் அதுவும் இல்லை. எல்லாம் பாக்கெட் பால்தான். வயல்கள் இருப்பதால் மாடுகள் சிலர் வைத்திருக்கிறார்கள் தான் ஆனால் அதன் பின்னணி இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால் ஊர் வளமைதான்.

      நான் இதுவும் யோசித்தேன் தான். நீங்கள் சொல்லுவது போல் இருக்கலாம்...

      மிக்க நன்றி காயத்ரி

      கீதா

      நீக்கு
  4. பளிச்சென்ற படங்கள்! அதே போல் பளிச்சென்ற சுத்தமான கிராமம். கிராமச் சாலைகள். உங்கள் உறவினர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. சித்தியின் கடைசிப் பெண் கொஞ்சம் உங்க ஜாடையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜாடை கொஞ்சம் இருக்கலாம்!

      ஆமாம் கீதாக்கா சாலைகள் எல்லாம் சுத்தமாக இருந்தன.

      மிக்க நன்றி கீதாக்கா

      நீக்கு
  5. ரோபோ படுத்தலில் இருந்து வெளியே வரதுக்குள்ளே போதும் போதும்னு ஆகிறது. அது சரி ஒரு சந்தேகம். அது இங்கே தேவையானும் மனதில் தோன்றியது. ஆனாலும் கேட்கத் தோன்றுகிறது. சித்திப்பாட்டிக்கு எண்பத்தேழு வயது என்றீர்கள். சித்திப்பாட்டியின் கடைசிப் பெண்ணிற்கு 70 வயது தொடும் என்கிறீர்கள். இதான் கொஞ்சம் இடிக்கிறதே! ஏனெனில் இன்னொரு மூத்த பெண்ணும்/பையர்(அவர் பெரியவரா, சின்னவரா?) இருக்காரே! அதான் கேட்டேன். _/\_

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா கேட்டால் என்ன இதில் என்ன தவறு இருக்கிறது?

      சித்தி 88 தொடுகிறார். சிறிய வயதில் திருமணம். எனக்கும் என் அம்மாவிற்குமே 17 வயதுதான் வித்தியாசம். மூன்று பேரும் கொஞ்சம் அடுத்தடுத்து...பெண், மகன், பெண்...

      ரோபோ எனக்கும் அடுத்து எப்ப வருமோ!! உங்களுக்கு வந்து நீங்கள் மீண்டதும் எனக்கு வந்து ரொம்ப நாளாகப் படுத்தியது. இப்ப அதனால எதிர்பார்க்கிறேன் எனக்கும் வருமோ என்று ...அதாவது வேறு பதிவுகளுக்குக் கருத்து போடும் போதுதான் வரும்

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  6. // ஆனா பாவம் எல்லாம். பரிதாபமான ஜீவன்கள். //

    ஏன் பரிதாபமான ஜீவன்கள்?  உணவுக்காக வளர்க்கப்படுபவையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். கொஞ்ச நாள் பிசினஸ் அப்புறம்...விடுங்க...

      கீதா

      நீக்கு
  7. சமீபத்தில் என் (ஆஸ்தான) ஆட்டோக்காரர் இந்த ஊராட்சி, பேரூராட்சி வித்தியாசங்கள் பற்றி இலக்கம் கொடுத்தபோது அசந்து போனேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரூராட்சி வரை தெரிந்திருந்தது ஸ்ரீராம். ஆனால் இந்த சிறப்புன்றது இப்பத்தான் பார்த்தேனா அதான். அட! ஆட்டோ

      இலக்கம் பார்த்த போது என்னென்னவோ மனதில் கேள்விகள் குடைந்தன!!!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. விளக்கம் இலக்கமாயிடுச்சு கீதா..  ஸாரி!

      நீக்கு
    3. விளக்கம் - இலக்கம்...ஆ இதுக்கு எதுக்கு ஸாரி....அதுவும் புரிந்தது நீங்க மேலேயே சொல்லிருக்கீங்க..அப்பவே புரிந்துவிட்டது...நான் சொன்னது, இலக்கம் ன்றதும் பொருந்தித்தானே போகிறது அந்த அமௌன்ட் பார்க்கும் போது...அந்த பெரிய அமௌன்ட் அதைச் சொல்லியிருந்தேன். இத்தனை அமௌன்ட் வருதான்னு ஆச்சரியம் அதனால் மனதில் கேள்விகள் ன்னு நான் சொன்னது....பாருங்க எதுவும் இப்ப முழுசா புரியும்படி எனக்கு எழுத வரமாட்டேங்குது. என்னவோ போங்க..

      அட! ஆட்டோ ந்னு பாருங்க முழுசா அந்த வாக்கியம் கூட முழுமையா வரலை...//அட! ஆட்டோ நண்பருக்குத் தெரிந்திருக்கிறதே...அவரின் பேக் க்ரவுன்ட் நீங்கள் சொன்னதுநினைவுக்கு வந்தது.!// இது நான் வேர்டிலிருந்து காப்பி பேஸ்ட் பண்ணும் போது விட்டுப் போச்சு!! ஹூம் இப்பல்லாம் கருத்து, பதிவு எல்லாமே கஷ்டமாகிறது!!!!

      கீதா

      நீக்கு
  8. இலக்கம் அல்ல.  விளக்கம்.  மாடரேஷன் இல்லைன்னா அந்தக் கமெண்ட்டை அழைச்சுட்டு மறுபடி போடலாம்.  இது எப்போ வெளியாகுமா!  எனவே திருத்தம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் ப்ளாகில் போட்ட கமென்டை அழிச்சுட்டு மறுபடி போடலாம்னா பிடிவாதமாத் திரும்பத் திரும்ப அதே தான் வருது. எத்தனையோ முறை ரீஃப்ரெஷும் பண்ணிப் பார்த்துட்டேன். லாக் அவுட் பண்ணித் திரும்ப லாகின் பண்ணி, அனானி பேரிலே கொடுக்கப் பார்த்து! போதும்டா சாமி! இப்போ என்ன செய்யப் போறதோ!

      நீக்கு
    2. அப்பாடா! இங்கே ஜெயிச்சுட்டேன் ரோபோவை!

      நீக்கு
    3. ஸ்ரீராம் இலக்கம் நு சொல்றதலியும் தப்பு இல்லை வருவாய் பார்த்து நான் சொன்னது. அதுவும் பொருந்திப் போகுதே உங்க கருத்துக்கு!!

      இது எப்போ வெளியாகுமா! எனவே திருத்தம்!// ஹாஹாஹாஹா
      வெளியாகிடுச்சு...ஆமாம் ஸ்ரீராம் இப்பல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப மெதுவாதான் தாமதமாகத்தான் எல்லாமே அதாவது வலையில் செய்வது பற்றி சொல்கிறேன்

      கீதா

      நீக்கு
    4. ஸ்ரீராம் விளக்கம் - இலக்கம் ரெண்டுமே பொருந்தித்தான் போகுது...உங்கள் ஸாரி (இது எதுக்கோ??) க்கு இங்க பதில் சொல்லிருக்கேனே...

      கீதா

      நீக்கு
    5. கீதாக்கா ரோபோ வந்தால், அந்த ரோபோ பாக்ஸ்ல் நாம கமென்ட் அடிச்சதும் மாற்று ன்னு ஒரு ஆப்ஷன் வரும் பாருங்க...அதை க்ளிக்கிட்டு அந்த பாக்ஸ்லியே கமென்டை அழிச்சுட்து புது கமென்ட் டைப் பண்ணி வெளியிடலாமே...

      கீதா

      நீக்கு
    6. அதை ஏன் கேட்கறீங்க? நேத்திக்கு "மாற்று" க்ளிக் செய்ததும் கருத்தைக் கொடுத்தால் கனெக்‌ஷன் ஃபெயில்யர்னு மெசேஜ் திரும்பத்திரும்பத்தீரும்பத்திரும்பத்திரும்ப வந்து கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருந்தது. அப்புறமாப் பார்த்தா கூகிள் அக்கவுன்டில் இருந்தே என்னை வெளியேற்றி விட்டது. மறுபடி லாகின் பண்ணி மறுபடி உள்ளே வந்து கமென்ட் கொடுக்கப் போனால் முன்னால் கொடுத்த கமென்ட் கொட்டைக் கொட்டையாய் முழித்துக் கொண்டு இருந்தது. வெளியிடு க்ளிக் செய்தால் ம்ஹூம்! நோ வெளியீடு! போதும்டா சாமினு ஆயிடுத்து! :) ஶ்ரீராமோட பதிவிலிருந்தே வெளியே வரமுடியுமானு யோசனையாப் போச்சு!

      நீக்கு
    7. ஆஹா கீதாக்கா உங்களுக்கும் அந்த எரர் வருகிறதா...எனக்கும் அப்படித்தான் படுத்தியது கொஞ்சம் மாதம் முன்ன. ரோபோ வந்து மாற்றினால் எரர் வரும். ரெஃப்ரெஷ் பண்ணி பண்ணி பார்த்தாலும் உங்களுக்கு வருவது போல கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ (ஹாஹாஹா) வந்து கொண்டே இருந்தது,

      இப்போதைக்கு வரலை டச் வுட்!!! அதே அதே பிரச்சனைதான் இந்த ரோபோ வந்தால். இடையில் ஒரு தடவை வந்தது நல்ல காலம் ஒரு நாளில் போய்விட்டது

      கீதா

      நீக்கு
  9. கடம்போடு வாழ்வு..என்ன ஒரு பெயர்! கடம்போடு என்றால் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடம்போடுவாழ்வு - ஆமாம் ஸ்ரீராம் எனக்கும் இப்பெயர் ஈர்த்தது கடம்போடு என்பதற்கு நானும் இதுவா இருக்குமோ அதுவா இருக்குமோன்னு யோசித்துச் சொல்லியிருக்கிறேன் பாருங்க.
      ஆனால் எனக்கு இன்னொன்றும் தோன்றியது ...கடம்போடு என்றால் உருப்போடுதல் இல்லையா....அப்படி யோசித்துப் பார்த்ததும் சிரிப்பு வந்தது!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. ஹா.. ஹா.. ஹா... வயலோடு வாழ்வு, வீட்டோடு மாப்பிள்ளை போல ஒலிக்கிறது கடம்போடு வாழ்வு!

      நீக்கு
    3. ஹாஹாஹாஹா ஸ்ரீராம் நல்ல ரைமிங்க்

      கடம் (கருவி) அதோடு வாழ்வு இல்லைனா உருப்போட்டு வாழ்தல்!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  10. பதிவில் கொஞ்ச வித்தியாசம் தெரிகிறது. வெவ்வேறு கலர்கள் font., மற்றும் துள்ளல் நடை. மேலும் இத்தவணை  படங்கள் கொஞ்சம் குறைவு. படங்களுக்கு அதிகம் மெனக்கெட முடியவில்லை. சாதாரண படங்கள் ஆக அமைந்து விட்டன

    . Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெகே அண்ணா முன்னர் நான் ஃபான்ட் கலர் மாற்றி வித்தியாசம் தெரிவதற்கு அப்படிப் போடுவதுண்டு. எபி க்கு அனுப்புவதில் கூட கதைகள், திங்க பதிவுகளில் அப்படிச் செய்ததுண்டு. முன்பு.

      அது போல பதிவுகளும் இப்படித்தான் எழுதியதுண்டு. எபியில் பெரும்பாலும் திங்க பதிவுகளில் கதையடிப்பேன் அதில் இப்படி வரும். நீங்கள் பார்த்திருக்கலாம் அல்லது அது நான் என்பது உங்களுக்கு அப்போது தெரிந்திருக்காமல் இருக்கலாம்.

      படங்கள் நிறைய போட்டால் பதிவு பெரிதாகிவிடுமே என்று அடுத்தடுத்த பதிவுகளுக்கு வைத்திருக்கிறேன். படங்களைத் தொகுக்க வேண்டுமே...கேமராவில் எடுப்பவற்றை பிக்ஸல் மாற்றித்தான் போடுகிறேன். எனவே நேரம் எடுக்கிறது...

      இரண்டாவது. நான் சென்ற போது மழை கொட்டு கொட்டு என்று கொட்டித் தீர்த்தது. இடையில் வெயில் வரும் போது எடுக்கப் போனால் லைட்டிங்க் போதவில்லை. மலைகளும் வெயில் பட்டு க்ளியராக இல்லை. என் கேமாராவுக்கும் அத்தனை சக்தி கிடையாதே. இருக்கும் ஆப்ஷன்ஸை பயன்படுத்திப் பார்க்கிறேன் தான். லான்ட்ஸ்கேப் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கு அதைப் பயன்படுத்தியும் இவ்வளவுதான் வந்தது. ரயிலில் போகும் போது எடுத்த படங்கள் மலையை நோக்கி சூரியன் லைட்டிங்க் பிரமாதமாக இருந்தது. இதே மலைகள் தான். ஆனால் க்ளியராக வந்தது. இங்கு போன சமயம் லைட்டிங்க் ரொம்பக் கம்மியாக. ஒரே ஒரு தினம் கொஞ்சம் நல்ல வெயில் அப்போது எடுத்த ஒரு சில இருக்கு அது பின்னால் வரும்.

      மிக்க நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
  11. திருக்குறுங்குடி பெருமாள் அந்தத் வெள்ளைக்கோட்டை (அருவி) என் பார்வையில் காட்டவில்லை. பாஸ் ஒருக்கா திருக்குறுங்குடி வந்திருக்கிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஸ்ரீராம் இது பெருமாள் கோயில் அருவி இல்லை இது அதற்கும் மேலே மலையில் உள்ள அருவி. வெள்ளைத் தீற்றலாகத்தான் தெரிகிறது!!

      திருக்குறுங்குடி பெருமாள் மலைநம்பி அப்படத்திலும் இதைவிடக் கம்மியாகத்தான் தெரியும் . அதுவும்வ் வரும் அடுத்து...

      பாஸ் போயிருக்கிறார் திருக்குறுங்குடி. அவர் சொல்லிய நினைவு. திருக்குறுங்குடி கோயிலுக்குப் பெரும்பாலும் எல்லாரும் போவாங்க. மலைநம்பிக் கோயிலுக்கு எல்லாரும் போவார்களா என்று தெரியவில்லை. நான் போனது எப்போதுமே ட்ரெக்கிங்க் தான் ஒரே ஒரு முறை தவிர.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. பெருமாள் கோவில் அருவி என்று நானும் நினைக்கவில்லை.  அந்தப் பக்கம் இருக்கும் தி. பெருமாள் அந்தக் காட்சியை என் கண்ணில் படவிடவில்லை என்று சொல்ல வந்தேன்.

      நீக்கு
    3. ஓகே ஓகே புரிந்தது ஸ்ரீராம்....

      எனக்கு உங்க கருத்து அது ரொம்ப லேட்டா ராத்திரி புரிஞ்சுச்சு...ஹிஹிஹீ....அப்புறம் புரிந்ததுன்னு இங்க வந்து சொல்ல முடியல...அதுக்குள்ள உங்க பதிலும் வந்தது பார்த்துட்டேன்... அப்ப தி கோயில் அந்த அருவி ம்ஹூம்!!! படாது...இருந்தாலும் நாங்க போட்டுருவோம்ல...பின்ன எடுத்தத சும்மா வைக்க முடியுமா என்ன ஹாஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  12. செல்லங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் காணப்படுகின்றன. உறவுகள் வெள்ளந்தியாய் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லங்கள் ஆமாம் ஒல்லியாகத்தான் இருக்கிறார்கள் ஆனால் சாப்பாடு கிடைக்கிறதுதான்.
      உறவுகள் வெள்ளந்திதான். பாசம் மிக்கவர்கள்.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  13. பசுமை என்றும் இனிமை...

    பேரூராட்சிகள் பற்றிய விளக்கம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் டிடி பசுமை இனிமைதான்

      //பேரூராட்சிகள் பற்றிய விளக்கம் அருமை...//

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  14. கடம்போடு வாழ்வு அழகான ஊர், அழகான பேர்.
    நீல நிறமலையும், வெண்மேகமும், பசுமையும், மஞ்ச்ள் பூக்களும் படங்கள் பார்க்க பார்க்க அருமை.

    உறவுகள் அறிமுகமும் அவர்கள் படமும் அருமை.
    ஆட்டோவில் போகும் போது எடுத்த படங்களும் நன்றாக இருக்கிறது.

    ஆடுகள், தாய் சேய் செல்லங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    //திருக்குறுங்குடியும் என் மனதிற்கு நெருக்கமான ஊர்! எந்த ஊர் தான் உனக்குப் பிடிக்கலை அதைச் சொல்லு -//

    அதானே! எல்லா ஊரும், எல்லா மக்களும் கீதாவுக்கு பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  15. நீல நிறமலையும், வெண்மேகமும், பசுமையும், மஞ்ச்ள் பூக்களும் படங்கள் பார்க்க பார்க்க அருமை.

    உறவுகள் அறிமுகமும் அவர்கள் படமும் அருமை.
    ஆட்டோவில் போகும் போது எடுத்த படங்களும் நன்றாக இருக்கிறது.//

    மிக்க நன்றி கோமதிக்கா..ரசித்தமைக்கு

    ////திருக்குறுங்குடியும் என் மனதிற்கு நெருக்கமான ஊர்! எந்த ஊர் தான் உனக்குப் பிடிக்கலை அதைச் சொல்லு -//

    அதானே! எல்லா ஊரும், எல்லா மக்களும் கீதாவுக்கு பிடிக்கும்.//

    ஹாஹாஹா. அக்கா உங்களை, வல்லிம்மாவை பார்த்தே நாங்களும் நிறைய கற்றுக் கொள்கிறோம் அக்கா

    மிக்க நன்றி கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. சின்னதாக இரு வெள்ளைக் கோடுகள் தெரிகிறதா? அது ஓர் அருவி.--ஆமாம்.. ஆமாம்.. தெரிகிறது!தெரிகிறது!! அருமையான தொடர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோ! ஆஹா உங்களுக்குத் தெரிந்துவிட்ட்டதா ஹப்பா !! தெரிஞ்சுச்சே!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  17. "கடமான்" என்று ஒரு மான் இனம் உண்டு. இதற்கு "கடம்பை மான்" என்று ஒரு பெயரும் உண்டு. இந்த மான்கள் இந்த பகுதியில் நிறைய வாழ்ந்து வந்ததால இந்த இடத்திற்கு "கடம்பை வாழ் நிலம்" என பெயர் வைத்தனர். கடம்பை வாழும் நிலம் என்பதே காலப்போக்கில் "கடம்போடு வாழ்வு" என்று ஆகிவிட்டது !!!...

    நமக்கு கொஞ்சம் எக்ஸ்ரா "Brain" இருக்கிறதால... இது நானே என்னோட மூளையை கசக்கி கண்டுபிடிச்சதாக்கும்... எப்புடி நம்மோட பிரைன்... (முறைக்காதீர்கள்...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு கொஞ்சம் எக்ஸ்ரா "Brain" இருக்கிறதால... இது நானே என்னோட மூளையை கசக்கி கண்டுபிடிச்சதாக்கும்... எப்புடி நம்மோட பிரைன்... (முறைக்காதீர்கள்...)//

      ஹாஹாஹா நாஞ்சில் சிவா, முறைக்கலப்பா...

      கடம்பை மான் தெரியும். அது இப்பகுதியில் இருந்ததான்னு நானும் ஆராய்ந்தேன். ம்ஹூம் ஒன்றும் சிக்கவில்லை. நீங்கள் சொல்லும் காரணமும் லாஜிக்கல்தான்.

      பொதுவாக அப்பகுதியில் இருந்த இருக்கும் என் பாட்டிகள் காரணம் ஏதாச்சும் சொல்வாங்க ஏர்வாடிக்குச் சொன்னது போல...ஆனால் இதற்குக் கிடைக்கவில்லை!

      மிக்க நன்றி சிவா, உங்கள் மூளையைக் கசக்கிக் கொண்டமைக்கு!!!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  18. அன்பின் கீதாமா,

    கடம்போடு வாழ்வு. அருமையான பெயர்
    அருமையான ஊர்.
    சின்னப் பாட்டியும், அவர்கள் மகள்கள்
    படமும் வெகு நேர்த்தி. 87 வயதா? தெரியவே இல்லை. நலமுடன் இருக்கட்டும்.
    அதுவும் உயர்வான சேவை செய்து வருபவர்.
    உங்கள் குடும்பமே மிக அழகு கீதாமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா 88 தொடப் போகிறார். இப்போதும் வீட்டில் காய் நறுக்குவது, பெருக்குவது, சமையலும், பாத்திரம் தேய்ப்பது என்று சமையல் மற்றும் பக்ஷ்ணங்கள் அவ்வப்போது என்று வேலை செய்கிறார் அம்மா. பெரிய பெண் தான் சமையல் பெரும்பாலும்.

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  19. படங்களின் பசுமையும், சாலையில் தென்பட்ட செல்லங்களும்
    அழகோ அழகு.

    மலைகளின் நீலமும், அதில் தெரியும் அருவிக்கோடுகளும்
    சிறப்பு. இவ்வளவு படங்கள் எடுக்கிறீர்கள். இன்னம் எல்லா வசதியும் கொண்ட
    காமிரா கையில் கிடைத்தால் அசத்தி விடுவீர்கள்.
    எப்படித்தான் இந்த ஊர்களை விட்டுப் பெங்களூரில் இருக்கிறீர்களோ!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னம் எல்லா வசதியும் கொண்ட
      காமிரா கையில் கிடைத்தால் அசத்தி விடுவீர்கள்.//

      ஹாஹாஹா அம்மா என் மனதிலும் இந்த ஆசை உண்டு ஆனால் இதற்கெல்லாம் ஆசைப்படாதே கீதா உன் லிமிட்டுக்கு மீறியது என்று என்னை நானே அடக்கிக் கொள்வதுண்டு. ஆனால் மகனுக்கும் ஆசை உண்டு....ஆனால நல்ல தருணம் வர வெயிட்டிங்க்.

      //எப்படித்தான் இந்த ஊர்களை விட்டுப் பெங்களூரில் இருக்கிறீர்களோ!!!//

      அம்மா இதற்கும் என்னை நானே குட்டிக் கொள்வதுண்டு!!!. யதார்த்தம் வேறு திசையில் என்ன செய்ய!!?

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  20. கூகிள் செல்லமா:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
    சரியாப் போச்சு. நாங்கள் கூகிள் ஆனடவனை அம்மா, ஆண்ட்டி
    என்று அழைக்க உங்களுக்கு அதுவும் ஒரு செல்லமா.


    கடம்பு என்றால் மலைன்னு கூட அர்த்தம் சொல்வார்கள் இல்லையா
    அம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா அம்மா நானும் கூகுள் தேவதை என்று சொல்லியதுண்டு. திரும்பவும் தேவதை என்று சொல்வதை விட செல்லமாக்கிவிட்டேன்!!

      கடம்பு என்றால் மலைன்னு அர்த்தம் இருக்கிறதா!! ஓ புதியதாய் தெரிந்து கொண்டேன் அம்மா. மலைகளுக்கு வெகு அருகில் இருப்பதால் மலையோடு வாழ் ஆஹா நல்ல பொருள் இல்லையா!

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  21. கடைசிப்படத்தின் நீலமும்
    மஞ்சள் மலர்களும் டாப் க்ளாஸ். கீதாமா.

    அழகுக்கிளி கொஞ்சுகிறது என்று பாட்டி சொல்வார்.
    அதுபோல இருக்கிறது உங்க ஊர்.
    ஆடுகள் பார்த்தால்
    பட்டுக்கோட்டையார் பாடல் 'இரை போடும் மனிதருக்கே இரையாகும்
    வெள்ளாடே ' பாட்டூதான் நினைவுக்கு வரும்.
    மிக மிக நன்றி கீதாமா.



    பதிலளிநீக்கு
  22. கடைசிப்படத்தின் நீலமும்
    மஞ்சள் மலர்களும் டாப் க்ளாஸ். கீதாமா.//

    மிக்க நன்றி அம்மா.

    அழகுக்கிளி கொஞ்சுகிறது என்று பாட்டி சொல்வார்.//

    அருமையான ரசனை மிக்க வாக்கியம்!!!!

    //ஆடுகள் பார்த்தால்
    பட்டுக்கோட்டையார் பாடல் 'இரை போடும் மனிதருக்கே இரையாகும்
    வெள்ளாடே ' பாட்டூதான் நினைவுக்கு வரும்.//

    பாட்டு கேட்டதில்லையே கேட்கிறேன் அம்மா...

    மிக்க நன்றி அம்மா

    கீதா

    பதிலளிநீக்கு
  23. ஆஹா, என்ன அழகு கீதா. வெளிநாடுகளில் வசிக்கும் என் போன்றோர் உங்கள் படங்களைப் பார்த்து ஆறுதல் கொள்ள வேண்டியது தான். இயற்கையின் அழகு ஒவ்வொரு படத்திலும் மிளிர்கிறது. செம. உங்கள் சித்திப் பாட்டி அத்தைகளையும் கண்டதும் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  24. கடம்போடுவாழ்வு என்றதும் நினைவில் வருவது அந்த கால வானொலி நேயர்.

    நெல்லை வானொலியில் அவர் பெயரை சொல்லாத நாட்கள் மிக குறைவு.

    அவரைப்பற்றி தகவல் இருக்கின்றதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லாங்குழி - சார் உங்கள் தளம் சென்று பார்த்தேன். உங்களைப் பற்றிய தகவலும் அறிந்து கொண்டோம். உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. உங்கள் தளத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.

      இல்லை அவரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. நான் இணையத்தில் நிறைய தேடினேன் ஊர் பற்றி வேறு ஏதேனும் இருக்கிறதா என்று.

      உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி சார்.

      கீதா

      நீக்கு
    2. இணையத்தில் தேடிய போது கடம்போடுவாழ்வு சி நல்லபெருமாள் பெருமாள் என்று ஆனால் ஃபேஸ்புக்கில் இது தென்றல் எஃப் ம் இல் கிடைத்தது. இவர்தானா அன்றைய நேயர் என்பது தெரியவில்லை

      கீதா

      நீக்கு
  25. மூன்று மாதங்களுக்கு முன்பு களக்காடு செல்லும் வழியில் "கடம்போடு வாழ்வு" என்னும் ஊரின் பெயரினைப் பார்த்ததும் மனதில் பெரு மகிழ்ச்சி. கடம்ப மரம் குறித்து நான் எழுதியுள்ள "நறுங்கடம்பு" நூலில் இந்த ஊரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளேன். தென்காசியில் உள்ள நண்பர் வாயிலாக இந்த ஊரில் மிகப் பழமையான கடம்ப மரம் உள்ளது என்பதை உறுதி செய்த பின்னரே எனது நூலில் பதிவு செய்துள்ளேன். கடம்போடு என்பது கடம்ப மரத்தினையேக் குறிக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மிக்க நன்றி கார்த்திகேயன் சகோ, உங்களின் தகவலுக்கு.
      நானும் கடம்ப மரமாக இருக்குமோ என்றுதான் நினைத்தேன் ஆனால் ஊரில் பார்க்கவில்லை. அருமையான ஊர் எளிமையான ஊர். அப்படி என்றால் அங்கு மிகப் பழமையான கடம்பமரம் இருக்கிறது இல்லையா? அடுத்த முறை செல்லும் போது போய்ப் பார்க்க வேண்டும்.

      மிக்க நன்றி மீண்டும்

      கீதா

      நீக்கு
  26. கடம்போடுவழ்வு அந்த ஊரில் நிறைய கடம்ப மரம் இருந்ததாம் அகவே இப்பெயர் வந்தது இந்த ஊரில் உள்ள குளத்தில் அதிக கடம்ப மரம் இருந்ததாக எனது தாத்தா கூறுவார்கள் அதனால் அங்கு உள்ள விநாயகர் கோயில் விநாயகருக்கு கடம்ப விநாயகர் என்று பெயர். மேலும் இங்கு சிவன் கோயில் உள்ளது சிவனுக்கு கைலாசநாதர் பொன் வள்ளி தாயார் என்று நாமம். இங்கு .பெருமாள் கோவில் உள்ளது .

    பதிலளிநீக்கு
  27. தற்சமயம் இந்த ஊரில் கடம்ப மரம் இல்லை

    பதிலளிநீக்கு