11.01.2017 அன்றைய மாலைப் பொழுது, இந்தப் புதுவருடத்தில் எனக்கு மிகவும் இனிமையான முதல் மாலைப்பொழுது என்றால் அது மிகையல்ல. அரசியல் இல்லை. வம்பு இல்லை. கள்ளம், கபடம் இல்லை. பொறாமை இல்லை. சூதுவாது இல்லை. வெள்ளை மனம். பொய் சொல்லத் தெரியாத மனம். யாரையும் குற்றம் சொல்லத் தெரியாத மனம். எத்தனை வயதானாலும் குழந்தை உள்ளம் படைத்த நட்சத்திரக் குழந்தைகள்! நடிப்பு இல்லை. அன்பு மட்டுமே அறிந்த, அன்பிற்குக் கட்டுப்படும் குழந்தைகள். அப்படியான நட்சத்திரக் குழந்தைகளுடன் தான் எனது இனிய மாலைப்பொழுது! என் மாலைப் பொழுதை இனிதாக்கிய அந்தச் சிறப்பு நட்சத்திரக் குழந்தைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்.
எல்லா அறிவுத் திறனும் உள்ள குழந்தைகளைப் பெற்றவர்கள், தங்கள் குழந்தைகள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லை என்றாலும் குழந்தைகளைத் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப ஆட வேண்டும் என்றும், தங்கள் குழந்தைகளின் திறனை அறியாமல், உள்வாங்காமல் அவர்கள் என்னவாக வேண்டும் என்ற தங்கள் குறிக்கோளை அவர்கள் மீது திணித்து மூச்சுத் திணற வைத்து குழந்தைகளையும் தங்களையும் மன உளைச்சல்களுக்கு உட்படுத்தும் நிகழ்வுகள் எல்லாம், இக்குழந்தைகளைக் காணும் போதெல்லாம் என் மனதில் நிழலாடும்.
தங்கள் குழந்தைகளைக் குறித்து, அவர்கள் சரியாகப் படிப்பது இல்லை, வெற்றி பெறுவது இல்லை, எந்தத் திறனும் இல்லை என்று எப்போதும் வருத்தத்துடன் பேசும் பெற்றோர் வகை ஒரு புறம் என்றால், ஒரே அடியாகத் தன் குழந்தையைப் போல் யாரும் அறிவு படைத்தவர் இல்லை என்ற அதீத பெருமையில் உலவும் பெற்றோர் மறுபுறம்.
இந்த நட்சத்திரக் குழந்தைகளிடம் நாம் கற்க வேண்டியவை பல. மூளைவளர்ச்சி குன்றியிருந்தாலும், அவர்களது சில செயல்கள் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. அவர்களையும் தங்கள் தேவைகளைத் தாங்களே பார்த்துக் கொள்ளும்படி அவர்கள் பெற்றோரும், சிறப்புப் பயிற்சியாளர்களும், இதற்கான சிறப்புக் கல்விப் பயிற்சி பெற்ற ஒரு சிலரும் தன்னலம் பாராமல், சேவை மனப்பான்மையுடன் ஆற்றும் சேவையும், உழைப்பும் அளப்பற்கரியது.
பொறுமை நிறையவே வேண்டும்
இக்குழந்தைகள் தற்சார்பு நிலையை ஓரளவேனும் அடையும் வரை அவர்களுக்காக நேரம் நிறைய செலவிட வேண்டும். சில சமயம் வாழ்நாள் முழுவதும் கூட வேண்டிவரலாம்.
நமக்கு இப்படி ஒரு குழந்தை பிறந்துவிட்டதே என்ற வருத்தமோ, சோர்வோ இல்லாமல், அண்டை அயலார் மற்றும் இச்சமூகத்தின் பார்வை, பேச்சுக்களை ஏற்கும் மன நிலையும், தங்கள் குழந்தைகளின் குறையை ஏற்கும் மனப்பக்குவம் இருந்தால்தான் அக்குழந்தைகளின் உடன் பிறந்தவர்களிடமும், உறவினர்களிடமும், சமூகத்திலும் அவர்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும், அவர்களுடன் உறவாடும் மனநிலையையும் ஏற்படுத்த முடியும்.
சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்குக் கழிவிரக்கம் என்பது கூடவே கூடாது. யாரேனும் இரக்கத்துடன் பார்த்தாலும் மனக்கலக்கம் அடையாமல் அதைப் புறம்தள்ளி, இச்சமூகத்தில் சாதாரணக் குழந்தைகளைப் பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுடன் எப்படி உறவாடி வருகிறார்களோ அப்படியே உறவாடி வரலாம், வர வேண்டும்.
என் மகனின் கற்றல் குறைபாட்டைச் சமாளிக்கவே நான் பல முயற்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. நானும் பல விமர்சனங்களை எதிர்கொண்டவள். (அது + சில தகவல்கள் தனி பதிவு) அப்படியிருக்க இக்குழந்தைகளை வளர்ப்பதற்கு எவ்வளவு பொறுமையும், மனப்பக்குவமும் வேண்டும் என்பதை நான் ஒவ்வொரு முறை சிறப்புக் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் போது நினைத்துக் கொள்வது உண்டு.
நான் இங்கு சொல்லும் மூளை வளர்ச்சிக் குன்றிய சிறப்புக் குழந்தைகளை, இக்குழந்தைகளைப் போன்றே வளர்ப்பதற்குக் கஷ்டமான ஆனால், சற்று வித்தியாசமான, ஆட்டிசம், ஹைப்பர், செரிப்ரல் பால்சி, என்ற வகையிலான குறைபாடுகளுடன் உடைய குழந்தைகள் வகையில் சேர்க்க முடியாதென்றாலும், இவர்களிலும் மூளை வளர்ச்சியைப் பொருத்து, மேற் சொன்ன பிற வகைகளில் இருக்கும் குழந்தைகளிடம் காணப்படும் திறமைகள் போல, தனித்துவம் மிக்க குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் பல வேறுபாடுகள் உள்ளன. படிநிலைகள் உள்ளன. திறன்களும் வேறுபடும்.
உதாரணத்திற்கு, நான் அன்று கண்ட குழந்தைகளில் துர்கா என்ற குழந்தை ராகம் கண்டுபிடிப்பதில் திறன் பெற்றவளாக இருக்கிறாள்! அவளது வீட்டுச் சூழல் அப்படி! அவள் பேசுவது நமக்குப் புரியவில்லை என்றாலும், மழலை மொழி பேசினாலும், அதற்குத் தனி அகராதி உண்டு. அவளது பெற்றோருக்கும், பயிற்சியாளர்களுக்கும் அவள் மொழி புரிகிறது. அவளுடன் சிறிது நேரம் பேசியதில் எனக்கும் அவளது மொழி புரியத் தொடங்கிவிட்டது! அன்பிற்கு மொழி வேண்டாம்தான்!
அன்று கண்ட குழந்தைகளில் ஆண்களும், பெண்களும் இருக்கிறார்கள். 4 பேர் ஓரளவிற்குத் தற்சார்புப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்; தனியே சென்று வருகிறார்கள்; ஆனால் குறிப்பிட்ட பேருந்தில், குறிப்பிட்ட நேரத்தில் என்று அவர்கள் ஒரு கணக்கு வைத்திருக்கிறார்கள் அதில் மட்டுமே செல்ல முடியும். நேரமோ, சூழ்நிலையோ மாறினால் அதற்கு ஏற்றபடி அவர்களால் அதனைச் சமாளிக்க முடியாது. எனவே, ஒரு சில சமயங்களில் பெற்றோர் துணை நின்றுதான் ஆக வேண்டும்.
சில குழந்தைகள் திறன் பெற்றிருந்தாலும் பெற்றோர் துணையின்றி எதுவும் செய்ய இயலாத நிலை. இன்னும் சிலர் பெற்றோர் துணையின்றி எதுவுமே செய்ய இயலாத நிலை. நடப்பதற்குப் பயிற்சி பெற்றிருந்தாலும், பெற்றோரின் உதவி அவ்வப்போது வேண்டித்தான் இருந்தது.
ஓரளவு புரிந்து கொள்ளும் திறன் பெற்றவர்கள் நாம் சொல்வதைப் புரிந்து கொண்டு செய்கிறார்கள். அன்று விழாவில் ஒரு சில வேலைகளுக்கு அந்த நான்கு குழந்தைகளில் மூவர் புரிந்து கொண்டு உதவினர். இரு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை.
நான் இங்குக் குழந்தை குழந்தை என்று சொல்வதை வைத்து நீங்கள் சிறுமியர், சிறுவர் என்று நினைத்துவிடாதீர்கள்! எல்லோரும் 20 வயதிலிருந்து 40 ற்குள் உள்ள பெரிய குழந்தைகளின் யூனிட் இது.
பயிற்சி பெற்ற பெற்றோரும், சேவை மனப்பான்மையுடன் உதவுபவர்களும், இவர்களை எல்லாம் வழிநடத்தும் ஓர் ஒருங்கிணைப்பாளரும் இணைந்து வயதில் மூத்த சிறப்புக் குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோரால் தொடங்கப்பட்ட ஒரு குழுமம். யூனிட் 1, யூனிட் 2 என்று ஒவ்வொரு பகுதியிலும் தொடங்கியுள்ளார்கள். அந்தந்தப் பகுதியில் இருப்பவர்கள் இது போன்ற குழந்தைகளை உடையவர்கள் இக்குழுமத்தில் இணைந்து தங்கள் குழந்தைகளுக்கு என்ன செய்ய இயலுமோ அதைச் செய்ய வைக்கலாம்.
இக்குழந்தைகள், பெற்றோர், பயிற்சியாளர்கள் உதவியுடன் செய்யும் பேப்பர் கப், பைகள், நவீன நகைகள் போன்ற கைவினைப் பொருட்களை விற்று அதில் வரும் வருமானம் இவர்களுக்கு உதவுகிறது. ஒவ்வொரு யூனிட்டிலும் அந்தக் குழந்தைகளின் திறன் பொருத்து செய்யப்படும் கைவினைப் பொருட்கள் மாறுபடும். இதில் பயிற்சி பெற்ற பெற்றோர் சிலர் திநகர் குழுமத்தில் சேவை செய்வார்கள், குழந்தைகள் அடையார் அல்லது ஆழ்வார்பேட்டை யூனிட்டில் பயிற்சி பெறுகிறார்கள்.
குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் என்னை அறியாமல் என் கண்களில் நீர் பெருகியதைத் தடுக்க முடியவில்லை. இக்குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? என்ன தவறு செய்தார்கள்?
இக்குழந்தைகளின் பெற்றோர் பலரும் 60 வயதைக் கடந்தவர்கள். படி ஏறுவதற்கும் கஷ்டப்படும் பெற்றோர் உள்ளனர். இப்பெற்றோருக்கு உடல் நலன் மிகவும் நலிந்தாலோ, அவர்கள் காலத்திற்குப் பிறகோ இக்குழந்தைகளின் நிலை என்ன என்று என் மனம் வேதனைப்பட்டது. உடன் பிறந்தோர் இருந்தாலும், அவர்களுக்கு இவர்களை வைத்துக்கொள்ளும் மனம் இருந்தாலும் சூழ்நிலை எப்படி இருக்குமோ? ஒரே குழந்தையாக இருந்தால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் அன்றைய மாலைப்பொழுதின் இனிய நினைவுகளை மட்டும் தேக்கிக் கொண்டு, அடுத்து இவர்களுடன் நேரம் செலவழிக்க எப்போது செல்லலாம் என்று யோசித்தவாறே வெளியில் வந்தேன்.
------கீதா