ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோர்", நம்மிடையிலும் வாழத்தான் செய்கிறார்கள் !!



இந்த ஒரு ஷில்லிங்கிற்கு (1/20 Pound) பூக்கள் வாங்கி என் அண்ணனின் கல்லறையில் எனக்காக வைப்பீர்களா? மிஸ்டர் குப்தா?”

நடுத்தர வர்கத்தின் பிரச்சினைகள் நிறைந்த வாழ்வை மனதைத் தொடும் விதத்தில் அருமையான சிறுகதைகளாகத் தரும் வங்க எழுத்தாளர் பிரபாத் குமார் முகோபாத்யாயா எழுதிய “The Price of Flowers’ / ஆங்கில மொழியாக்கம் – Lila Ray எனும் கதையில் இந்தியாவில் போரில் கொல்லப்பட்டதால், அங்கேயே அடக்கம் செய்யப்பட்ட சகோதரனின் கல்லறையில் பூக்கள் வைக்க முடியுமா என இங்கிலாந்து வந்த இந்தியரான குப்தாவிடம் கேட்கும் 14 வயதுள்ள, வயதான தாயுடன் வாழும் மேகி எனும் மார்கரெட் க்ளிஃபோர்டின் வார்த்தைகள் தான் இவை
 
இந்தியாவில்  பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றும் மேகியின் அண்ணன், இந்தியாவிலுள்ள ஒரு யோகி கொடுத்த மந்திர சக்தியுள்ள ஒரு மோதிரம் என்று கூறி, ஒரு மோதிரத்தை மேகிக்கு அனுப்பியிருந்தார். இந்தியர்கள், அதில் பார்த்தால் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்ல முடியும் என்று அவர் சொல்லியிருந்ததால், ஒரு இந்திய உணவகத்தில் குப்தாவைக் கண்டதும், மிகவும் அக்கறையுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்ததை குப்தாவும் கவனித்தார். இரண்டாவது முறையாகவும், அடுத்த வாரம் அப்படி நிகழ, குப்தாவும், மேகியும் நண்பர்களானார்கள். மேகிக்கு ஒரு இந்தியரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று மோதிரத்தைக் காட்டி, தன் அண்ணனைப் பற்றி அறிய ஆவல். குப்தாவுக்கும்  இங்கிலாந்திலுள்ள ஏழைகளது வீட்டையும், வாழ்க்கையையும் காண ஆவல். அப்படி ஒரு நாள் மேகி, குப்தாவை வீட்டிற்கு அழைக்க, வீடு சென்று மாகியின் அம்மா மிஸஸ் க்ளிஃபோர்டிடம் பேசிக் கொண்டிருந்த போது, மேகி அந்த மந்திர மோதிரத்தை குப்தாவின் கையில் கொடுத்து அதைப் பார்த்து அண்ணனின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத்தைச் சொல்ல முடியுமா என்று கேட்க, அதை நீண்ட நேரம் பார்த்தும், குப்தாவுக்கு ஒன்றும் தெரியவில்லை
 
சிறிது நேரம் பேசிவிட்டு குப்தா விடை பெற்றுச் சென்றாலும், சில நாட்களுக்குப் பிறகு மேகியிடமிருந்து குப்தாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் தன் தாயின் உடல் நிலை மிக மோசமானதாகவும், அதற்கான முக்கியக் காரணம் அண்ணனைப் அற்றி ஒரு விவரமும் அறியாததால்தான் என்றும் கூறி குப்தாவை வீட்டிற்கு வர முடியுமா என்று கேட்டிருந்தாள். வீடு சென்ற குப்தாவிடம் அந்த மோதிரத்தைப் பார்த்து தன் அண்ணன் நலமே என்று ஒரு பொய் சொல்லி, தன் அம்மாவின் உயிரைக் காப்பாற்றி, தன்னையும் அநாதையாகாமல் காக்க மன்றாட, குப்தா அது போல் செய்து திரும்புகிறார். சில நாட்களுக்குப் பிறகு, மேகியின் ஒரு கடிதம் வந்தது. அதில் கடந்த மாதம் நடந்த போரில் தன் அண்ணன் கொல்லப்பட்டதாகவும், உடல் அங்கே அடக்கம் செய்யப்பட்டதாகவும் எழுதியிருந்தாள். அதை வாசித்து அதிர்ந்து போன குப்தா, மிஸஸ் க்ளிஃபோர்டைக்  காண தைரியமில்லாமல், ஒரு கடிதம் எழுதி, தன் அனுதாபத்தை தெரிவிக்கிறார். அதில் தனக்கு இந்தியாவில் கிடைத்திருக்கும் தன் பதவியை ஏற்க, இந்தியா செல்வதாகக் கூறுகிறார். குப்தா இந்தியா போகும் நாள், காலை அவரைக் காண வரும் மேகி ஒரு ஷில்லிங்கைக் குப்தாவின் கையில் கொடுத்து, இந்தியா சென்று தன் அண்ணனின் கல்லறையில் பூக்களை வைத்து அவருக்காகப் பிரார்த்திக்க வேண்டுகிறாள். பூக்கள் வாங்க பணம் வேண்டாம் என்று சொன்னதும் அவள் முகம் வாடியதைக் கண்டு பணத்தைப் பெற்றுக் கொண்டு, அப்பணத்தைக் கொண்டு பூக்கள் வாங்கி அவளது அண்ணனின் கல்லறையில் வைப்பதாக உறுதியளிக்கிறார், குப்தா.

70 ஆண்டுகளுக்கு முன் பிற நாடுகளில் இறக்க நேர்பவர்களின் உடல்கள் அவர்களது நாட்டிற்குக் கொண்டு செல்வது என்பது இயலாத காரியம். ஆனால், இப்போதெல்லாம், அது கொஞ்சம் சிரமப்பட்டால் நடக்கும் ஒன்றே. அப்படி இறப்பவர்களின் உடலை அவர்களது நாடுகளுக்குக் கொண்டு செல்ல, வெளிநாடுகளில், குறிப்பாக, அரேபிய நாடுகளில் இறப்பவர்களின் நண்பர்கள் படும் துயரம் கொஞ்சமல்ல. அத்தகையவர்களின் துயரத்தைப் போக்க எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் தேவையான உதவிகள் செய்து, இதுவரை ஏறத்தாழ 2000 பேரது உடல்களை அவர்களது குடும்பத்தினர்கள்  கண்டு, இறுதிச் சடங்குகளை நடத்தி அடக்கம் அல்லது தகனம் செய்ய உதவும் ஒரு தெய்வதூதன் தான் அஜ்மானில் வசிக்கும் இந்தியரான அஷ்ரப்  தாமரசேரிஇவ்வருடம் “பிரவாசி பாரதீய புரஸ்கார்” எனும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்குக் கொடுக்கப்படும் விருது பெற்றவர்.
வெளிநாடுகளில், முக்கியமாக அரபு நாடுகளில் இறக்க நேரிடும் இந்தியர்களுக்குச் செய்ய வேண்டிய உதவி என்பது அவரது உயிரற்ற உடலை அவர் பிறந்த மண்ணில் எரிக்கவோ, அடக்கவோ செய்யத் தேவையான உதவிகள் செய்வது என்பதுதான். இறந்தவரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல, ஏராளமானப் பிரச்சினைகள், அரபு நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில், காவல் நிலையங்களில், எம்பசியில், டிராவல் ஏஜன்சிகளில், விமான நிலையத்தில் ஏற்படுவதுண்டு. அதையெல்லாம் தன் அனுபவ அறிவால் தீர்த்த பின் அவ்வுடலை விமானத்தில் ஏற்றி விடும் வரை அஷ்ரப் தாமரசேரி கைமாறு ஏதும் எதிர்பாராமல் செய்யும் தன் புனித சேவையில் ஓய்வு கூட எடுப்பதில்லை. அது அஜ்மானிலுள்ள அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அவருக்குச் சொந்தமான பணிமனையிலுள்ளவர்களுக்கும் தெரியும். எனவே அவர்கள் அஷ்ரப்பை எதிர்பாராமல் அவர்களது பணிகளை செவ்வனே செய்வதன் மூலம்அஷ்ரப்பிற்குத் தன் புனித செயலைச் செய்ய எல்லா வகையிலும் உதவியாகவும் இருக்கிறார்கள்அப்படி அவர் UAE லிருந்து உலகின் பல பாகங்களிலுள்ள ஏறத்தாழ 40 நாடுகளைச் சேர்ந்தவர்களது உயிரற்ற உடல்களை அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் கண்டு இறுதிச் சடங்குகள் நடத்தி, அவ்வுடலுக்கு வேண்டிய மரியாதையுடன் அடக்கம் செய்ய உதவியிருக்கிறார். யாரேனும் இறக்க நேர்ந்தால் உடனேயே இறந்தவரது நண்பர்கள் அஷ்ரப் தாமரசேரியை கூப்பிடுவது வழக்கம்.  

எல்லோரையும் போல் 1999-ல் ஏராளமான கனவுகளைச் சுமந்து அரேபிய நாடு சென்ற அவர், 2000 த்தில், ஷார்ஜாவிலுள்ள ஒரூ நண்பனைக் காணச் சென்ற போது, குவைத்தி மருத்துவமனைக்கு முன்னால் அழுது கொண்டிருந்த ஒரு மனிதர்தான் அவர் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அம்மனிதரின் கண்ணீரைத் துடைக்கச் சென்ற அவர், அன்றிலிருந்து இன்று வரை உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்கள் பிறந்த நாட்டிற்கு அனுப்பி அவ் இறந்தவர்களின் முகம் தெரியாத உற்றார், உறவினர்களது கண்ணீரைத் துடைத்துக் கொண்டேயிருக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல, 2000ற்கும் மேற்பட்டவர்களது உயிரற்ற உடல்கள் அவர்களுக்கு உற்றவர்களைச் சென்றடைய உதவியிருக்கிறார். இப்படி "வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து, வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டு"ருக்கும், அஷ்ரப் தாமரசேரியை நாமும் வாழ்த்துவோம். அவர் இச்சேவையை நீண்ட காலம் செய்ய அவருக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் அளிக்க இறைவனை வேண்டுவோம்.

படங்கள் : கூகுள் 

 பின் குறிப்பு : எங்கள் கணினியில்தான் பிரச்சினை. எங்கள் தளத்திலும், பிற தளங்களிலும் பின்னூட்டம், கருத்துக்கள் இட முடியவில்லை.  வேறு  கணினியில் முயற்சித்த போது இட முடிந்ததால் சென்ற இடுகைகளுக்கு கருத்துக்கள், பின்னூட்டங்கள் இட  முயற்சிக்கின்றோம். வேறு கணினியிலிருந்து,  உபயோகிக்க சமயம் கிடைக்கும் போது  பிற தளங்களுக்குச் செல்வதற்கு முயற்சிக்கின்றோம். எங்கள் கணினி சரியாகும் வரை. நண்பர்கள் தவறாக நினைக்காதீர்கள்.


24 கருத்துகள்:

  1. சிறுகதையையும் ,உண்மையான நிகழ்வையும் பொருத்தமான தலைப்புடன் எழுதியுள்ள பதிவைப் படித்ததும் மகிழ்ச்சி ஏற்பட்டது .மனித நேயம் மிக்க மாமனிதர் அஸ்ரப் நீடுழி வாழ்க !
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான் ஜி ! ஓடோடி வந்து தங்கள் கருத்தையும், ஓட்டையும் பதிவிட்டதற்கு.

      நீக்கு
  2. அஷ்ரப் தாமரசேரி அவர்கள் மேலும் சிறக்கட்டும்... தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. திரு. அஷ்ரப் தாமரசேரி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..
    அவருக்கு எல்லா நலன்களும் விளைய வேண்டுகின்றேன்..

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    அண்ணா
    இப்படியான புண்ணியவான்கள் இந்த உலகத்தில் நீண்ட நாட்கள் வாழவேண்டும் அவரின் இந்த சேவையை யாராலும் மறக்க முடியாது.. வாழ்த்துக்கள் த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி. அஷ்ரப் தாமரசேரி அவர்களது தொடர்பு முகவரியைத் தந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    த.ம.5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு. நாங்களும் தேடிக் கொண்டிருக்கின்றோம் ஐயா. கில்லர்ஜி அவர்களுக்குக் கிடைத்தால் நமக்குக் கிடைத்துவிடும். அவர் அவரை நேரில் பார்க்கிறேன் என்று சொல்லி இருக்கின்றார்.

      நீக்கு
  6. நல்ல செய்திகள் தாங்கிய பதிவு.சேவை எண்ணம் இருந்தால் செய்ய ஏராளமான வழிகள் உண்டு. கருத்தினை ஈர்க்கும் கதைமனித நெயம் துளிர்க்கும் மனிதனின் செயல்கள். பதிவு சிறப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. திரு. அஷ்ரப் தாமரசேரி அவர்களின் செயல் உன்னதமானது அஜ்மானும், அபுதாபியும் இரு துருவங்கள் நான் பலமுறை போய்ருக்கின்றேன் இனி இவரைப்பற்றிய விசயங்களை தேடுவேன் கண்டிப்பாக சந்திப்பேன், பாராட்டுவேன். தகவலுக்கு நன்றி
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி! சந்தியுங்கள், பாராட்டுங்கள் ஜி! அப்படியே அவரது தொடர்புக்கானத் தகவல்களையும் தாருங்கள். பலருக்கும் உதவலாம். நம் இளங்கோ ஐயாவும் கேட்டிருக்கின்றார்.

      நீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    "வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோர்", நம்மிடையிலும் வாழத்தான் செய்கிறார்கள் !! அருமையான பதிவு. என் அண்ணனின் கல்லறையில் எனக்காக வைப்பீர்களா? பூக்களை வைத்து அவருக்காகப் பிரார்த்திக்க வேண்டுகிறாள்... அவள் வைக்கச் சொன்னது பூக்களல்ல... அவர்களின் இதயம்!

    அஷ்ரப் தாமரசேரியை UAE லிருந்து உலகின் பல பாகங்களிலுள்ள ஏறத்தாழ 40 நாடுகளைச் சேர்ந்தவர்களது உயிரற்ற உடல்களை அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் கண்டு இறுதிச் சடங்குகள் நடத்தி, அவ்வுடலுக்கு வேண்டிய மரியாதையுடன் அடக்கம் செய்ய உதவியிருக்கிறார் என்பதை எண்ணுகின்ற பொழுது... எந்தப் பிரதிபலனும் பாராமல் செய்கின்ற மகத்தான உதவி... உண்மையில் போற்றப்பட வேண்டிய ஒன்று! இந்தியரான அஷ்ரப் தாமரசேரி. இவ்வருடம் “பிரவாசி பாரதீய புரஸ்கார்” எனும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்குக் கொடுக்கப்படும் விருது அளித்துப் பெருமைப் படுத்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    அவருக்கு நமது ராயல் சல்யூட்!
    நன்றி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் விரிவான கருத்திற்கு! மிக அருமையான க்ருத்து!

      நீக்கு
  9. அருமையான பகிர்வுக்கு நன்றிகள்

    தமிழக மாணவர்சரவணகுமார் 2009ஆண்டு லண்டனில் கேவலம் :(போனுக்காக கொலை செய்யபட்டார் .அவர் உடலை நாட்டுக்கு அனுப்ப இந்திய தூதரகம் ஒன்னும் செய்யல அப்போ தமிழ் சங்கத்தை சேர்ந்த ஜேக்கப் என்பவர் 4000 பவுண்ட்ஸ் பணத்தை கலெக்ட் செய்து உடலை நாட்டுக்கு அனுப்பி வைத்தார் .இதில் பெரும் தொகை அவரின் சொந்த பணம் இந்துகளில் 24 மணியில் செய்து முடிக்க வேண்டிய rituals பாவம் அக்குடும்பம் ..இரண்டு மாதம் தள்ளி நடந்தது .அஷ்ரப் தாமரசேரி போன்றோரால்தான் மனிதம் தழைக்குது ...நீடூழி வாழணும் அஷ்ரப் போன்றோர் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி தங்களின் பின்னூட்டங்கள் மிகவும் அருமையானவை. எப்போதுமே. ஏதாவது ஒரு த்கவலுடன், எல்லோரும் அறியும் வண்ணம் கருத்து சொல்வதை நாங்கள் மிகவும் பாராட்டுகின்றொம் சகோதரி! தங்களின் பதிவுகளும் அது போன்றதே. தங்களது அறிவும், தேடலும் தங்களின் பதிவுகளிலும் சரி, கருத்துக்களிலும் சரி பளிச் என்று தெரிகின்றது.

      தகவல் மிகவும் மனதிற்கு வேதனையாக இருந்தது. மிக்க நன்றி சகோதரி!

      நீக்கு
  10. சிறுகதை மற்றும் உண்மையான நிகழ்வு இரண்டையும் இணைத்து அருமையான பகிர்வு சார்...
    அஷ்ரப் அவர்களை வாழ்த்துவோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் பாராட்டிற்கும், கருத்திற்கும்!

      நீக்கு
  11. திரு. அஷ்ரப் தாமரசேரி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..
    கணினி பழுது நீக்கி பொறுமையாக வாருங்கள் நண்பரே
    யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு! வந்து விட்டோம். மீண்டும்...

      நீக்கு
  12. நண்பரே! என் போல் வயதானவர்களும் (முதுமையால் அதிகம் படிக்க இயலாது) உள்ளவர்களுக்கு இப்படிப் பட்ட பதிவுகள் பயன்படும்!நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தாங்கள் தங்களுக்கு உடல் நலம் நன்றாக இருக்கும் போது வாசியுங்கள் ஐயா. தங்களின் உடல் நலக் குறைவிற்கு இடையிலும் வாசித்து கருத்து இட்டமைக்கு மிக்க நன்றி ஐயா!

      நீக்கு