நான் இது வரை மேற்கொண்ட ஒவ்வொரு பயணத்தின் போதும் சரி, பிற
சமயங்களிலும் சரி, திருநங்கைகளைக் கண்டதுண்டு.
அவர்கள் கைதட்டிப் பணம் பெறுவதையும், அப்படிக் கிடைக்கவில்லை என்றால்
ஏசுவதும், பணம் பெறும் வரை நின்று கொண்டு இருப்பதும், ஆண்களின் மீது இடித்தும், வசைபாடியும்
பெறுவதைக் கண்டதுண்டு. இதற்குப் பயந்தே பல
ஆண்கள் அவர்கள் வரும் போதே பணத்துடன் தயாராக இருந்துக் கொடுத்துவிட்டுத்
தப்பிப்பதையும் பார்த்திருக்கின்றேன். நானும் கொடுத்ததுண்டு. மனம் யோசித்தது உண்டு இவர்களின் பிழைப்பு ஏன்
இப்படியாகிப் போனது என்றும் பல சமயங்களில் இவர்களுக்காக இரக்கப்பட்டதுமுண்டு. எல்லோருமே இவர்களைக் கேலி செய்தோ, இல்லை வசை பாடியோதான்
பார்த்திருக்கின்றேன். இல்லையேல் இவர்களை
ஒரு காட்சிப் பொருள் போல் வேடிக்கைப் பார்ப்பதும் உண்டு.
ஒரு வேளை இவர்களது உடல் மொழியும், நடை உடை பாவனையும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், ஏனோ,
எனக்கு இவர்களின் மீது ஒரு தனி கழிவிரக்கம் உண்டு.
இதுவரை தூர நின்று
பார்த்திருந்த திருநங்கைகளிடமிருந்து சற்று வித்தியாசமான பாவனைகளுடன் இருந்த திருநங்கைகளை, எனது
இப்போதைய பயணத்தின் போது, கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில், சென்னை வரவேண்டி
ரயிலுக்காகக் காத்திருந்த சமயத்தில், காண நேர்ந்தது. தாங்களுண்டு, தங்கள் வேலை உண்டு என இவர்கள்
இருந்தாலும், அங்கிருந்தோர் எல்லோருமே இவர்களையே உற்று நோக்கிக் கொண்டு,
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நானும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாலும்,
எனது பார்வையும், மன நிலையும் அவர்களை அணுகலாமா, எப்படி அணுகுவது என்ற ஒரு
சிந்தனையுடன் இருந்ததை அந்த 3 திருநங்கைகளில் ஒருவர் உணர்ந்திருக்க வேண்டும். எனது பார்வையும் ஒரு நட்பினை உணர்த்தியதோ
என்னவோ, அவர் என்னைப் பார்த்துப் புன்முறுவலித்தார். அதைப் பார்த்ததும், இதுதான் தருணம் என நான்
அவர்களை சமீபத்து உரையாடத் தொடங்கினேன். இதுவே சற்று வித்தியாசமான சூழல் போலும்.
அங்கிருந்தோர் இப்போது என்னையும் வினோதமாக வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர்.
திருநங்கைகள்
என்று சொல்லப்பட்டாலும், அந்தத் “திரு” என்ற சொல்லுக்கான, ஒரு அர்த்தமாகிய, இந்த
சமூகத்தில், உலகில் வாழ வேண்டிய அந்தஸ்து என்பது அவர்களிடம் எந்த வடிவிலும் இல்லை.
ஆனால், திரு என்ற சொல்லின் பிரிதொரு அர்த்தம் அவர்களின் முகத்தில் மிகுதியாகவே
இருப்பதாகப்பட்டது. ஆம்! அவர்கள் அழகாக இருந்தார்கள். இல்லை ஒரு வேளை
எனது கண்களுக்கு அப்படித் தோன்றியதாகவும் இருக்கலாம். உரையாடியதில் அவர்கள்
மிகவும் நல்ல மனது படைத்தவர்களாகத் தெரிந்தார்கள். படித்தவர்கள். அவர்களது உடலமைப்பு, அவர்களை
ஆண்கள் என்று பறையடித்தாலும், தங்களைப் பெண்களைப் போன்றுதான்
அலங்கரித்திருந்தார்கள். மிகவும் தன்மையாகப் பேசினார்கள். நல்ல பண்புகளும், இந்த
சமூகம் தங்களைப் புறக்கணித்தாலும், சமூகம் பற்றிய நல்ல சிந்தனைகளும், சாதாரண
மக்களின் இன்னல்களையும் உணர்ந்தவர்களாகவே தெரிந்தார்கள். சமூக அவலங்களைப் பற்றிக் கவலைப்பட்டார்கள். எனது
நேரிடையான கேள்விகளுக்குக் கூட எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல், கோபப்படாமல், மிகவும்
நேர்த்தியாகப் பேசினார்கள்.
பங்களூரைச்
சேர்ந்தவர்கள். பிறப்பால் ஆண்களாக
இருந்தாலும், சிறுவயது முதலேயே, பெண்களாக வாழவேண்டும் என்ற மனநிலையுடன், தங்களைப்
பெண்களாக உருவகப்படுத்திக் கொண்டு வாழ விழைந்ததாகச் சொன்னார்கள். மூவரின் குடும்பங்களும் பொருளாதார அடிப்படையில்
மிகவும் உயர்ந்தவர்கள். இந்த மூவரில், 12 வருடங்களாக ஒரு திருநங்கையாக வாழ்ந்து
வருபவரின் பெற்றோர் இட்ட பெயர் க்ளைஜர், தற்போதைய பெயர் அமீஷா. 10 ஆம் வகுப்பு வரை
கல்வி கற்றவர், வீட்டிலிருந்து துரத்தப்பட்டதால் கல்வியைத் தொடரமுடியவில்லை. 8
வருடங்களாக இன்நிலையில் வாழ்பவர் ராகுல்
எனப்படும் ரம்யா. வீட்டின் ஆதரவு
இல்லாதவர். பெற்றோரும், சகோதரரும் மிகவும்
நல்ல பதவியில் இருப்பவர்கள். பி.காம் படித்திருப்பவர். மிக நன்றாக, தூய்மையான
ஆங்கிலத்தில் உரையாடுகிறார். தனது படிப்பிற்கான செலவை தானே ஈட்டிப் படித்தவர்.
இங்கு “ஈட்டி” எனப்படுவது நிஜத்தில் ஈட்டிதான்.
பணம் ஈட்டப்பட்ட முறை. படிப்பிற்குப் பிறகு, பங்களூரில் மிகப் பெரிய
தொழில்நுட்ப நிறுவனத்தில், ஹெச் ஆராக வேலை செய்திருக்கிறார் ஒரு வருடம். பின்னர்
அலுவலகத்தில் சில சலுகைகள் இவருக்கு வழங்கப்படுவதில் பிரச்சினைகள் ஏற்பட இவர்
புறம் தள்ளப்பட்டிருக்கின்றார். தற்போது பெரும்பான்மையான திருநங்கைகள் போல
வாழ்க்கை. மூன்றாமவர் பெயர் பரத். தற்போது
பூமிகா. 5 வருடங்களாக இந்த வாழ்க்கை. படித்திருப்பது +2. என்னுடன் முழுமையாக உரையாடிவர் ரம்யா.
படிக்கும்
காலத்தில் நடந்த சிலவற்றைச் சொல்லுவதற்கில்லை. அதை
எழுதினால் சில பிரச்சினைகள் வரக்கூடும்.
மதிப்பெண்கள் கிடைக்க வேண்டுமென்றால், ஒரு சில தகாத உறவுகள் போன்ற
இன்னல்கள் இருந்திருக்கின்றது.
இவர்களுக்கு குரு ஒருவர் இருப்பாராம். அவர் இவர்களுக்காக, ஒருவருக்கு 2
லட்சம் செலவழிப்பாராம். இவர்கள் அவருக்கு அதை 4 லட்சமாகத் திருப்பிக் கொடுக்க
வேண்டுமாம். இவர்கள் மிகவும் அழகாக வேண்டும் என்பதற்காக, 41 நாட்கள் யாரையும்
காணாமல், ஒவ்வொரு நாளும் ஒரு திருநங்கை இவர்களுக்கு முதலில் மஞ்சள் அரைத்து உடம்பு
முழுவதும் பூசுவார்களாம். பின்னர், 10, 15 அடி தூரத்தில் நின்று கொண்டு, கொதிக்கக்
கொதிக்கத் தண்ணீரை இவர்கள் மீது வீசிக் கொட்டுவார்களாம், பிறப்பு உறுப்புகள்
உட்பட. இவர்கள் அலறுவார்களாம். அதன் பின் படுக்க வைத்து தூய்மையான சந்தனம் இழைத்து
அதை உடம்பு முழுவதும் பூசுவார்களாம்.
வேப்பிலையால் உடம்பு முழுவதும் வருடுவார்களாம். இப்படி 41 நாட்கள் செய்த பிறகு உடம்பிலுள்ள
முடிகள் எல்லாம் போய்விடுமாம். 41 நாட்கள்
முடியும் அன்று, இவர்களை பாலூற்றிக் குளிக்க வைப்பார்களாம். இதற்குப் பெயர்
ஜல்சா.
அன்று வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளுக்கு
அலங்காரம் செய்வது போல் இவர்களுக்கும், அணிகலன்கள், மெட்டி, கொலுசு அணிவித்து,
இவர்களுக்குச் சேவை செய்த திருநங்கைகளுக்கு தங்கத்தில் சிறியதாக ஏதாவது பரிசு
அளிப்பாராம் குரு. அதைப் போல் அந்த சேவை
செய்த திருநங்கைகள் இவர்களுக்குப் பரிசு அளிப்பார்களாம். பின்னர் அன்று செருப்பு
தைப்பவர் ஒருவரை அழைத்து வந்து இவர்களுடன் முதலிரவுக்கு ஏற்பாடுகள்
நடக்குமாம். இதற்கு என்றே செருப்பு
தைப்பவர்கள் குழு இருக்கின்றதாம். வருபவர்
இவர்களுக்கு தாலி கட்டி விட்டு அன்று ஒரு இரவு தங்கிவிட்டுச்
சென்றுவிடுவாராம். பின்னர் இவர்களைத்
திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாராம்.
ஆனால் அவரது செருப்பு மட்டும் நினைவாக இவர்களோடு விட்டுச் செல்வாராம். இதற்குப் பெயர் தந்தா என்பதாம். இன்
நிகழ்வுகளுடன் இவர்களுக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகள் நடத்துவதற்கும் சேர்த்து
குரு 2 லட்சம் செலவழிப்பாராம். இவர்கள்
அவர்க்கு அதை 4 லட்சமாகத் திருப்பித் தரவேண்டுமாம். இன் நிகழ்வுக்குப் பின்னர்
அவர்கள் ஒவ்வொரு ஆணுடனும் இரவுகள் கழித்து பணம் சம்பாதிக்கலாமாம். மனதளவில்
மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கின்றார்கள். தங்களை பெற்றோரும், இந்த
சமூகமும் ஒதுக்குகின்றதே என்ற ஒரு மனப்பான்மையுடன் இருக்கின்றார்கள்.
இவர்களிடம்
நான் கேட்ட கேள்வி, ஏன் இப்படிப்பட்ட ஒரு அவல நிலை? எதற்காக இப்படி வாழ
வேண்டும்? இப்படித்தான் வாழ
வேண்டுமா? ஏன் உங்களுக்கு இருக்கும்
திறமையை வெளிக் கொண்டுவந்து, உங்கள் படிப்பை உபயோகப்படுத்தி உங்கள் காலில் நிற்க
முயற்சிக்கலாமே.
“எங்களுக்கும் ஆசை இருக்கின்றதுதான்
மேடம். சொல்லப் போனால், நான் நன்றாக
ஆங்கில வகுப்புகள் எடுப்பேன். நடன
வகுப்புகள் எடுப்போம். ஆனால், எங்களை யாரும்
சேர்த்துக் கொள்வதில்லை. எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. நாங்கள் எதிர்ப்பார்ப்பது எங்களிடமும் அன்பு
செலுத்தும் ஆண் துணை கிடைப்பாரா என்றுதான்” என்றார். தற்போது அவர்களை பங்களூரில், செல்வந்தர் ஒருவர்
– ஷிவானி – அவரும் இவர்களைப் போன்றவர்தானாம்.
ஆனால், ஆணுடைதான் அணிந்திருப்பாராம் - இவர்களைத் தத்தெடுத்து, கவனித்துக்
கொள்கின்றாராம். ஆனால், இவர்கள் பிச்சை
எடுத்துத்தான் பணம் ஈட்டுகின்றனராம். “மேடம் நீங்கள் இதை எழுதுவதினால், எங்களுக்கு
யாராவது ஏதாவது வேலை கொடுப்பார்களா?
எங்களுக்கு ஏதாவது நல்ல வேலை கிடைக்குமா?” என்று கேட்டார்.
“நான்
வேலை வாங்கித் தரமுடியும் என்று என்னால் எந்த உறுதியும் கொடுக்க முடியாது. ஏனென்றால், நான் அந்த அளவிலான நிலையில் இல்லை.
ஏதோ எழுதுபவள். இதையும் எழுதுகின்றேன்.
யாராவது இதைப் படிப்பவர்கள் உங்களுக்கு வேலை தர முன்வந்தால், நான் மிகவும்
மகிழ்வேன்” என்றேன். அவர்களின் விருப்பம் நிறைவேறினால் மிகவும் நன்று.
நான்
அவர்களிடம் சொன்னது இதுதான். “நீங்கள் பெண்களாக பாவித்து நடந்து கொள்வதிலோ, உடை
அணிவதிலோ தவறு இல்லை. ஆனால், அதையும், இன்னும், மிகவும் மதிப்பும் மரியாதையும்
கிடைக்கும் அளவு அணிந்து கொண்டு, பிறர் உங்களைப் பார்த்தால் உயர்வாக நினைக்கும்
அளவு உங்களை மாற்றிக் கொண்டு, உங்கள் திறமையை வெளிக் கொண்டுவந்து உங்களை நிலை
நிறுத்திக் கொள்ள ஏன் முயற்சி செய்யக் கூடாது? அப்படிச் செய்து பாருங்கள், உங்கள்
வேலை வாய்ப்பு நிச்சயமாக அதிகரிக்கும். முயன்றுதான் பாருங்களேன். இப்படிக்கு ரோஸ் எனும் நிகழ்ச்சியை நடத்திய
ரோஸ், மிகப் புகழ் வாய்ந்த நடனமணியான நர்த்தகியைப் போல ஒரு உயர்வான வாழ்க்கையைத்
தேடிக் கொள்ளலாமே.”
“கண்டிப்பாக
மேடம், நீங்கள் சொல்லுவது போல முயற்சிக்கின்றோம். நீங்கள் இப்படி, எங்களையும்
மதித்து, அன்புடனும், அக்கறையுடனும் பேசுவது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
எங்களுடன் தொடர்பில் இருங்கள். அவ்வப்போது
இது போன்று எங்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்லுங்கள் மேடம்” என்று சொல்லித் தனது அலைபேசி எண்ணையும்
கொடுத்தார்.
இவர்களும்
இந்த சமூகத்தின் ஒரு அங்கத்தினரே! இவர்களும் இந்த சமூகத்தில் வாழ வேண்டும். வாழ
உரிமை உள்ளவர்களே! நாம் இவர்களைப் புறக்கணிக்காமல், இவர்களையும் ஏற்றுக் கொண்டு,
இவர்களை ஆதரிக்கும் விதத்தில், அவர்களது திறமைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு அளித்து ஒரு
சமூக அந்தஸ்து அளிக்கலாமே. அரசும் சில நல்ல திட்டங்கள்
வகுத்திருக்கின்றதுதான். ஆனால், அதிகம்
பேசபடுவதில்லை. மறுவாழ்வு கொடுக்கும் விதத்தில், மனதளவில் பயிற்சி கொடுத்து,
தாழ்வு மனப்பான்மையை அகற்றி வேலை, கல்வி, வேலை வாய்ப்புகளும் கொடுத்து, தன்னம்பிக்கையும்,
தன் காலில் நிற்கும் அளவிற்கான வாழ்வியல் சூழலை உருவாக்கி அவர்களையும் நம்மிடையே
வாழ வழிவகுக்கலாமே.
-கீதா