வெள்ளி, 19 செப்டம்பர், 2014

பயணம் தரும் படிப்பினைகள்!

             

      இந்த வாரம் திங்களன்று, எனக்குக் காலையில், புனாவில் இருக்கும் என் கணவரின் தம்பியின் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு.  அவரது மகளுக்கு ஒரு சிறு அறுவை சிகிச்சை.  எனது உதவி வேண்டி அந்த அழைப்பு.  கணவரின் தம்பி மறைந்து இரு வருடங்கள் ஆன நிலையில், அவர்களுக்கு அவ்வப்போது சென்று உதவுவது எனது வழக்கம்.  இப்போதும் அப்படியே.  எனவே, செவ்வாயன்று மதியம் புறப்படும் ரயிலில் செல்ல வேண்டி, உடனடியாகத் தத்காலில் பயணச் சீட்டு பதிவு செய்து, செவ்வாயன்று ரயிலில் புறப்பட்டு இதோ இப்போது நான் புனாவில், சென்னையின் இறுக்கத்திற்குத் தற்காலிகமாக ஒருவாரம் விடை கொடுத்துத், தப்பித்து, இரவு ஊட்டி போன்ற ஒரு குளுமையில், பகலிலும், இரவிலும் மின் விசிறியின் தேவை இல்லாமல். 

      பயணம் என்பது எனக்குப் பெரும்பாலும் தனிமையில்தான். திருமணத்திற்கு முன்பிலிருந்தே, பின்பும் சரி, மகன் கைக் குழந்தையாக இருக்கும் போதும் சரி: சிறுவனாக இருந்த வரை அவனுடன் கதைகள் பேசி, இயற்கையை ரசித்து, காட்டையும், வழியில் வரும் நதிகளையும், பள்ளத்தாக்குகளையும், பறவைகளையும், விலங்குகளையும், மக்களையும் ரசித்துப், பயணங்களைப் பற்றிய ஒரு ரசனையை அவனுக்குள் ஏற்படுத்தி, நாங்கள் இருவரும் ரயிலின் கதவருகில் நின்று பயணித்த நினைவலைகளுடன், எனது இந்தப் பயணம் தொடங்கியது.  அவன் வளர்ந்த பிறகும் கூட அவனுக்கு நேரம் கிடைத்த போது அவனுடன் தான் எனது பயணம்.  சுற்றுலா என்றால் மட்டுமே, எப்பொழுதாவது, அதுவும் கணவருக்கு நேரம் இருந்தால் நாங்கள் மூவரும், இல்லையென்றால் குடும்பத்தினருடன் செல்வதுண்டு.  மகனும் கால்நடை மருத்துவனாகப் பணி செய்யத் தொடங்கி தற்போது அவனும் என்னுடன் இல்லாததால்  என் பயணங்கள், ரயிலானலும், பேருந்தானலும், விமானமாக இருந்தாலும் தனிமையில்தான்.  தனியாகப் பயணம் செய்து பழகியதால் எங்கு செல்வதற்கும் எனக்குப் பயம் இருப்பதில்லை. ஆனால், தற்போது ரயில்களில், எத்தனையோ வசதிகள் வந்துவிட்ட போதும், தமிழ்நாட்டைத் தாண்டிய வட இந்தியப் பயணங்கள் சில சமயங்களில் சிறிது ஆற்றாமையை ஏற்படுத்தத்தான் செய்கின்றது.


      ரயிலில் சென்ற போது, இயற்கைக் காட்சிகளைக் கண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டு, கையில் கொண்டு சென்ற விவேகானந்தரைப் பற்றிய புத்தகத்தை வாசித்துக் கொண்டும் இருந்த போது, என்னுடன் பயணித்த ஆண்கள் நான் ஜன்னலில் தொங்க விட்டிருந்தப் பையைப் பார்த்து, அதில் நான் காப்பி அருந்திய காதிதக் கோப்பைகளையும், கையில் கொண்டு வந்திருந்த உணவை அருந்திய பின் அந்த இலையையும் அதில் இடுவதைப் பார்த்து வியந்து விட்டுத், தாங்கள் கீழேயே குப்பைகள் போடுவதையும் சொல்லிக் கொண்டனரே அல்லாது அவர்கள் தங்களது செயலை மாற்றினாரில்லை. இது எனது சிறு வயது முதல் வந்த பழக்கம் மட்டுமல்ல, எனது மகனுக்கும் இந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது. அவர்கள் மீதம் வைத்த காப்பியும், தேனீரும் ரயிலின் சிருங்கார அசைவில் அரைவட்டம் அடித்து எனது காலைத் தொட்டுச் சென்றது.  இத்தனைக்கும் எல்லோரும் படித்தவர்கள். சிறிது நேரத்தில், ஒரு குடும்பம் கடப்பா ரயில் நிலையத்தில் ஏறியது.  புதிதாக மணம் முடிந்த மணமக்களும், வயதான மூதாட்டியும், இன்னும் சில ஆண்களும் ஏறினார்கள்.


பெண்ணுக்கு வந்த சீர்கள் போலும்! இருக்கைகளின் அடியில் திணித்தது போக எஞ்சியவற்றை எல்லோரது காலின் அடியிலும் வைத்துவிட்டு, ஜன்னலோரம் பாத்திர மூட்டையை வைக்க, நான் எனது காலை எங்கு வைத்துக் கொள்வது என்று யோசித்த வேளையில், எனது காலை அந்தப் பாத்திர மூட்டையின் மேல் வைத்துக் கொள்ளுமாறு அபிநய அறிவுரை வந்தது! நல்ல காலம் அந்தப் பெண்ணுக்குக் கட்டில், பீரோ, மேசை, நாற்காலிகள், குளிர்சாதனப் பெட்டி கொடுக்கவில்லை போலும், இல்லை அவை எல்லாம் ரயிலின் கூரை மேல் ஏற்றியிருப்பார்களோ? பேருந்து போன்று? தொலைக்காட்சிப்பெட்டியும், மேசை மின்விசிறியும், மிக்சியும், இருக்கை அடியில். இதற்கிடையில் அவர்களது பெட்டிகள்.  எல்லாமே ஏதோ அமெரிக்கா செல்லுவது போன்ற பெரிய பெட்டிகள்! ஒரு மினி வீடே பயணம் செய்தது என்றால் மிகை அல்ல.  நான் கால் வைத்து வெளியில் செல்ல வேண்டுமென்றால், நான் நீளம் தாண்டுதலில் சாம்பியனாக இருக்க வேண்டும். இந்த அரைக் கிழ வயதிலும் செய்ய தயார்தான்! ஆனால், எதிரில் பக்கவாட்டில் இருந்த பயணிகளின் மேல், வாமன அவதாரம் போல் (நான் நாலடியார்!) என் திருப்பாதங்கள் பதியுமே!  நல்ல காலம் உயரம் தாண்டும் அவசியம் இருக்கவில்லை.  புது அரசாங்கத்தின் ரயில்வே துறைக்கு பரிந்துரை செய்ய ஒரு பட்டியல் மனதில் உருவாகத் தொடங்கியது! 


      













     ஒரு ஆச்சரியம், புது அரசாங்கத்தினால் ரயில்வே துறையில் ஏற்பட்ட மாற்றம் போலும்.  பெட்டிகளைப் பெருக்கி, கிருமி நாசினி திரவம் தெளித்து துடைத்துச் சென்றனர் ஒரு சீருடை அணிந்த குழுவினர். இதற்கு முன் எனது பயணங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் கூடப் பார்த்தது இல்லை! அந்தக் குழுவினர் எங்கள் இருக்கைகளின் அருகில் வந்ததும், ஸ்தம்பித்து நின்றனர்!  இது வாடகைக்கு விடப்பட்ட வீடோ என்ற எண்ணம் கூட வந்திருக்கலாம், அங்கிருந்த தட்டி முட்டிச் சாமான்களைப் பார்த்து!  எப்படிப் பெருக்கித் துடைப்பது என்று! ஆனால், அந்த வீட்டம்மா, எல்லா பொருட்களையும் எடுத்து அங்கிருந்தோர் ஒவ்வொருவரின் தலையிலும் ஏற்றாத குறையாய் தூக்கிப் பிடிக்க வந்தவர்களும் தங்கள் பணியைச் செவ்வனே நிறைவேற்றினர்.  சிறிது நேரத்திலேயே அந்த இடம் மீண்டும் உணவு விடுதிகளின் சமையலறை போன்றானது என்பது வேறு வஷயம்!


எனது புகைப் படக் கருவியில் எடுக்கப்பட்டவை

“பரவாயில்லையே, வழக்கம் போல் ரயிலில் மாற்றுத் திறனாளிச் சிறுவர்கள், இளைஞர்கள் வந்துக் குப்பைகளைப் பெருக்கிவிட்டு பிரயாணிகளிடம் காசு வாங்கிச் செல்லுவது தடை செய்யப்பட்டது போலும்! எனவே, இரவும் வந்து செய்வார்கள்” என்று மகிழ்வுடன் நினைத்து புதிய அரசாங்கத்தை வாழ்த்திய வேளை கானல் நீராகி, மாலையில் சிறுவர்களும், இளைஞர்களும் துணியுடன் பெருக்க வந்துவிட்டனர்.  அப்போது தோன்றியது, சிறுவர்களை அரசு ஏன் தத்தெடுத்துப் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என்றும்,  இந்தச் சிறுவர்களையும், இளைஞர்களையும் விடுமுறை நாட்களில் அரசாங்கம் இது போன்று ரயிலில் ஊழியம் செய்து அவர்களுக்கு ஒரு ஊதியம் வழங்கைனால் என்ன என்றும் தோன்றியது.  மேலை நாடுகளில் இளைஞர்கள் பகுதி நேர வேலை செய்து படிக்கவில்லையா?  அது போன்று. ரயில் சினேகம் போன்று இதுவும் ரயில் கனவுகள்தான்! எனது மோடி ஜிக்கான பட்டியல் நீண்டது!

      சற்று நேரத்தில் குழு குழுவாக வந்தனர் திருநங்கைகள்.  இப்போது ஆண்களிடம் மட்டுமல்ல, பெண்களிடமும் கை நீட்டுகின்றார்கள்.  ஒரு சின்ன மாற்றம்.  ஆண்களிடம் கை தட்டி வாங்குகின்றனர்.  பெண்களிடம் பாட்டுப் பாடி வாங்குகின்றனர்!  கொடுக்காவிட்டால் அருகில் வந்து தொடுவதோ, திட்டுவதோ இல்லை. ஆனால், வாங்காமல் அந்த இடத்தை விட்டு நகருவதும் இல்லை! இவர்களைக் கண்ட போது மனதில் கழிவிரக்கம் வரத்தான் செய்தது.  என்றாலும் பல சமயங்களில் நாம் கொடுப்பதை ஏற்காமல், அதிகமாக பணம் கேட்பதும் மனதை நெருடுகின்றது.  இவர்களைச் சமூகம்தான் அப்புறப்படுத்துகின்றது என்றால், அரசாங்கமாவது கண்டுகொள்ளலாமே! அவர்கள் அப்படிப் பிறந்தமைக்கு அவர்கள் அல்லவே காரணம்! இயற்கையின் கொடூர விளையாட்டு, இல்லை அவர்களைப் பெற்றோரின் அறிவின்மையால் விளைந்த ஒன்று எனலாம், பிறப்பதும், கைவிடப்படுவதும்.

 மிக நீண்ட பாலம்....ஆயின் வறண்ட ஆற்றுப் படுகை மனம் கனத்தது

      நொடிக்கொருமுறை காப்பி, தேனீர், கூல் டிரிங்க்ஸ், தின்பண்டங்கள் என்று தூங்கிக் கொண்டிருந்த சிறுவரையும், பெரியோரையும் உயிர்ப்பித்துக் கொண்டிருந்த ரயில் ஊழியர்களிடம் எங்கள் பெட்டிக் குழுவினர் காப்பி வாங்க நானும் வாங்கினேன்.  அது காப்பியா என்று என்னிடம் கேட்காதீர்கள்!  அது ரயில் வெந்நீர்! அதற்கு 10 ரூபாய்! அதுவரை என்னிடம் இருந்த சில்லரை நோட்டுகள் எல்லாம் புனாக் குழந்தைகளுக்குச் சில புத்தகங்களாகவும், தின்பண்டங்களாகவும் உரு மாறியிருந்ததால் கையில் இருந்த 100 ரூபாய் நோட்டை நீட்டினேன்.  10 ரூபாய் காப்பிக்குப் போக மீதி 90 ரூபாய் தருவதற்குப் பதிலாக 40 ரூபாய் நீட்ட நான் 100 என்று சொல்ல அவர் 50 துதான் தந்தாய் என்று சொல்ல, நான் எப்போதோ ராஷ்ட்டிரபாஷா வரைக் கற்றுத் தேறிய, எனக்குத் தெரிந்த ஹிந்தியில் வாதிட, இதற்கு, காப்பி வாங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பே ஹிந்தியில் உரையாட மனதில் ஒரு முன்னோட்டம்! இலக்கணம் தடுமாறவில்லை என்றாலும், வட்டாரப் பேச்சு வழக்கு ஹிந்தி மொழிப் பயிற்சி இல்லாததால் கொஞ்சம் தடுமாற்றம்! எனதருகில் இருந்த அந்தக் குடும்பம் எனக்கு ஆதரவாக உதவிக்கு வர, என்றாலும் அந்த ஊழியர் 50தான் என்று அடித்துச் சொல்ல எனக்கு அதற்கு மேல் வாதிட சக்தி இல்லாமல், பாக்கியம் ராமசாமியின் சீதா பாட்டியாக இல்லாமல் அப்புசாமிக் கிழவனாகிப் போனேன்.

      மோடி ஜி க்கான பட்டியல் நீண்ண்ண்ண்ண்ண்டது! ஏதோ நான் தான் மோடி ஜி யின் வலதுகை போலவும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவும், ரயில்வே துறையில் என்ன ஆவன செய்யலாம் என்றும், யோசனைகள் சொல்ல வேண்டும் என்றும் அறிக்கைப் பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில், பக்கவாட்டு இருக்கையில் இருந்த ஒருவர் இரவு உணவு குறிப்பெடுப்பவரிடம் இரவு உணவுக்குச் சொல்ல உணவும் வந்தது.  மூன்று சப்பாத்திகள், இரண்டு, சப்ஜி என்று சொல்லப்படும் தொட்டுக் கொள்ளக் கொடுக்கப்படும் பதார்த்தங்கள், ஆனால் இரண்டும் ஒரே பனீர் சப்ஜிக்கள், வெவ்வேறு கூட இல்லை.  வெங்கட்ஜி தனது இடுகையில் சொல்லியிருந்தது போல பனீர் சாம்பாரா என்று தெரியவில்லை! ஒரு சிறிய அலுமினியம் ஃபாயில் கிண்ணத்தில் ஒரு பிடி ஜீரகச் சாதம், ஊறுகாய் அவ்வளவே!  அவர் ஏதோ ஒரு ஆர்வக் கோளாரில் ஆர்டர் செய்துவிட்டார் போலும், உண்டு முடித்த பின் பணம் வாங்க வந்த ஊழியர் 100 ரூபாய் என்றதும், உண்டவரின் திறந்த வாய் பிளந்து நின்றது.  எனக்குப் பயமாயிற்று. எங்கேனும் வயிற்றில் சென்றவற்றை மீண்டும் வாய் வழி எடுத்து, “இந்தா உன் சாப்பாடு. எடுத்துக் கொண்டுச் செல்” என்று சொல்லி விடுவாரோ என்று! அவர் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின் தான் தெரிந்தது, அவர் நம்மூர் திருநெல்வேலி அல்வா, அறுவாகாரத் தமிழர் என்று அவர் வாய் மொழி மூலம்! “எலேய் என்னல நினைச்ச என்னைய! நீ கொடுத்த இந்த எழவெடுத்த சாப்பாட்டுக்கு 100 ரூபாயாக்கும்! எங்கூரு சாம்பாரு, அல்வா தின்னுருக்கியாலே?  நீ வாலே எங்கூரு பக்கம் உன்ன கவனிக்கறம்லே” என்று வசை பாட அந்த ஹிந்திக்காரர் பெப்பே என்று முழிக்க 100 ரூபாய் பறிமாறப்பட்டது என்னவோ உண்மை!  என்னுடைய மோடி ஜி பட்டியலில் இந்த உணவும், 100 ரூபாயும் சேர்ந்தது!

      இப்படி மோடியின் வலது கையாக யோசித்தபடி உறங்கி அடுத்த நாள் காலை அதாவது நேற்றைய முன் தினம், புதன் கிழமை காலை எழுந்ததும், முந்தைய தினம் காப்பிக்காரரிடம் ஏமாந்தாலும், அந்தக் காப்பி ரயில் வெந்நீராக இருந்தாலும், காப்பி மோஹம் விடுகின்றதா? இப்போது வேறு ஒருவர்.  இளைஞர்!  ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையில், முந்தைய தினம் 50 என்று சொல்லிக் கொடுத்த இரண்டு 20 ரூபாய் நோட்டுக்களில் ஒன்றை எடுத்து நீட்டினேன்.  அருகில் இருந்த சிலரும் காப்பி வாங்கினர்.  என் அருகில் இருந்த அந்தக் குடும்பத்தில் ஒருவர் எனக்கும் ஒன்று சொல்லுங்கள் என்றவுடன் 2 வாங்கினேன்.  அந்தப் பையன் நான் காசு தரவே இல்லை என்று அடம் பிடிக்க, என்னுடன் காப்பி வாங்கியவர் எனக்கு ஆதரவாக ஹிந்தியில் சொல்ல, அந்தப் பையன் இல்லை என்று சொல்ல, இறுதியில் நான் ஒரு 10 ரூபாயை நீட்ட, இன்னும் 10 ரூபாய் தரவில்லை என்று அவன் என்னைத் திட்டிக் கொண்டே  செல்ல, எனது புதன் கிழமை விடிந்தது வசவுகளால்!  யாரப்பா சொன்னது?  “பொன் கொடுத்தாலும் புதன் கிடைக்காது” என்று?  30ரூபாய் கொடுத்து புதன் கிழமையை வசவுடன் வாங்கியதை அந்த மேதாவியிடம் சொல்ல வேண்டும்!  மோடியின் பட்டியலில் அடுத்து ஒன்று கூடியது! புதன் வசவு அல்ல!  அந்த 30 ரூபாய்!  அப்போது முந்தைய நாள் திருநங்கைகள் நினைவுக்கு வந்ததை மறுதலிக்க முடியவில்லை!  இந்தக் காப்பி காரர்களிடம் இழந்த தண்டக் காசிற்கு, அந்த திருநங்கைகள் அதிகம் கேட்டாலும், கொடுத்தது எத்தனை மேலானது என்பதே!

      பூனே வந்து இறங்கியவுடன், ஆட்டோ! எனக்கு பூனே சென்று சென்று (தனியாகப் பயணம் மெற்கொள்வதால் பல ஊர்கள்  நன்றாகத் தெரியும்) நன்றாகத் தெரியும் என்பதால், நான் செல்ல வேண்டிய இடம் சொன்னதும், 250 ரூபாய் என்று கூசாமல், சென்னையிலிருந்து பூனாவிற்கு வரும் பாதி தூரப் பயணக் கட்டணம் கேட்டு, ஆட்டோ சொசைட்டி என்றெல்லாம் அந்த ஆட்டோ ஓட்டுநர் சொல்ல, இனியும் இந்த புதன் கோல்ட் கவரிங்க் புதன் ஆகக் கூடாது என்று முடிவு செய்து நான் முன் கூட்டிக் கட்டணம் கட்டும் ப்ரீபெய்ட் கவுண்டர் சென்று ஆட்டோவிற்கு 170 ரூபாய் செலுத்திச் சென்றேன்.  இந்த அரசு சார்ந்த ப்ரீபெய்டு இருக்கும் போது எப்படி இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சைக்கிள் காப்பில் கஸ்டமர்கள் பிடிக்கின்றார்கள் என்பதும், மக்கள் ஏன் அந்த ப்ரீபெய்டை அணுகுவதில்லை என்பதும் எனக்குப் புரியாத புதிராக இருக்கின்றது. உங்களுக்கு?  புரிந்தால் சொல்லுங்களேன்!


சிக்னலில் க்ளிக்க முடியாததால்.......படங்கள் இணையத்திலிருந்து

      வழியில் ஒரு சிக்னலில் அணிவகுப்பு போல, விமானப் பணிப்பெண்கள் உடையில் 7 பேர், அருகில் சென்றதும் தான் தெரிந்தது அவர்கள் விமானப் பணிப்பெண்கள் உடையில் திருநங்கைகள்! இவர்கள் என்ன செய்கின்றார்கள்?  புதுவிதமான அணுகுமுறையோ? பணம் பெற என்ற என் எதிர்மறை எண்ணம் தவிடு பொடியாகியது!  விமானப் பணிப் பெண்கள் விமானத்தில் சீட் பெல்ட் அணிவது பற்றியும் பாதுகாப்பான பயணத்திற்கான வழிமுறைகள் எல்லாம் சொல்லுவது போன்று, கார் சீட்பெல்ட் அணிவதைப் பற்றியும், தலைக்கவசம் அணிவது பற்றியும் அறிவுறுத்தி, சாலை விதிகளைக் கடைபிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டி அபிநயம் பிடித்துக் காட்டியக் காட்சியிலும், சில்லென்று வீசிய காற்றிலும்  எனது ரயில் அனுபவங்களும், மோடியின் வலது கையாகத் தயாரித்த பட்டியல் எல்லாம் லேசாகிக் கரைந்து மாயமாகிப் போனது!  திருநங்கைகளின் மீதான எனது மதிப்பு பன்மடங்காகியது!  திருநங்கைகள்  வாழ்க!

                பயணங்கள் எப்போதும், அனுபவம் புதுமை என்பது போல், நமக்கு புதுப் புது அனுபவங்களையும், அர்த்தங்களையும், வாழ்வியல் தத்துவங்களையும் கற்றுக் கொடுக்கத்தான் செய்கின்றன! நாம் என்னதான் ஏட்டிலும், பெற்றோர், ஆசிரியர், சுற்றத்தார் போன்றோரின் அறிவுரைகளில் இருந்தும் கற்றுக் கொண்டாலும், அனுபவங்கள் போன்று ஒரு நல்ல ஆசிரியன் இருக்க முடியுமா என்பது கேள்விக் குறி மட்டுமல்ல, அதுதான் நல்ல ஆசிரியன் என்பதும் நிதர்சனமான உண்மை!  இனி திரும்பிச் சென்னை போகும் போதும், இனி மேற்கொள்ளப் போகும், பயணங்களின் போதும் ஏமாறாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற ஒரு நல்ல பாடம் கற்றுக் கொண்டேன்!

-கீதா

      

38 கருத்துகள்:

  1. ஆகமொத்தம் செலவு இல்லாமல் எங்களையும் புனாவுக்கு அழைத்துப் போய்விட்டீர்கள், நலமுடன் வீடு திரும்ப ஞானி ஸ்ரீபூவு ஆசி உண்டாகட்டும்.
    அன்புடன்
    கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா கில்லர் ஜி! அதுக்குள நீங்க புனாவிலிருந்து சென்னைக்கே போயாச்சு போல!!!!!!! மிக்க நன்றி ஞானி ஸ்ரீபூவு அவர்களின் ஆசிக்கு!!

      நீக்கு
  2. haa,,,,ha,,,,ha,,,,என்ன ஒரு ஹுமர் சென்ஸ் . படிச்சு படிச்சு சிரிச்சுகிட்டே இருக்கேன் தோழி! நீளம் தாண்டும் சாம்பியன் !! வாமன அவதாரம்...ஹா....ஹா....
    கூடவே பயணித்த அனுபவம்:) ஆனா பதிவை ரெண்டு பார்ட்டா போட்டிருக்கலாமோ? பாதி தான் படித்திருக்கிறேன். மீதியை நாளை வந்து படிக்கிறேன். good நைட்:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவால்ல மைதிலி நீங்க மெதுவா வாங்க நாளைக்கு வந்து படிச்சுட்டு சொல்லுங்க....அவசரமே இல்ல.....இரண்டு இடுகை எல்லாம் எங்களுக்கு வொர்க் அவுட் ஆக மாட்டேங்குது மைதிலி.....அதான்...ரயில் மாதிரி நீளமா போனாலும் பரவாயில்லைனு.....ஸ்லோ கோச்சா இருந்தாலும் போட்டுடறோம்.....

      நீங்க பாதி தூரம் வந்திருக்கீங்க !! அங்க பாருங்க கில்லர் ஜி என்னைய முந்திக்கிட்டு சென்னைக்கே போயாச்சு!!ஹ்ஹாஹ்ஹ்ஹ்...செம ஸ்பீடுப்பா அவரு...

      குட் னைட் பா....தூக்கத்துல புனாக்கு இங்க வந்துட்டு போங்க பா...

      நீக்கு
    2. நானும் அதை தான் சொல்லவந்தேன் சகோ அம்மு முந்திக்கிட்டா .

      நீக்கு
  3. ///நான் ஜன்னலில் தொங்க விட்டிருந்தப் பையைப் பார்த்து, அதில் நான் காப்பி அருந்திய காதிதக் கோப்பைகளையும், கையில் கொண்டு வந்திருந்த உணவை அருந்திய பின் அந்த இலையையும் அதில் இடுவதைப் பார்த்து வியந்து /////

    வாவ்வ்வ்வ்வ் மிக அருமையான ஒரு நல்ல பழக்கம் ஹேட் ஆப் மேடம்.... உங்களை போலவே எல்லோரும் இருந்திட்டால் வெளிநாடுகளை விட நம் நாடு மிக மிக சுத்தமாகிவிடும்.. சபாஷ் சபாஷ் சபாஷ் என்று உங்களை மீண்டும் மீண்டும் பாராட்ட தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மிக்க நன்றி மதுரைத் தமிழா! ரயில் பயணம் என்றில்லை எங்கு சென்றாலும் இதே ஆனால் பல சமயங்களில் அந்தக் குப்பையைப் போட குப்பைத் தொட்டிகளோ, குப்பைக் கிடங்கோ தேட வேண்டி உள்ளது.

      நீக்கு
  4. பதிவுகளை நீங்கள் இடும் போது இப்போது போட்டுள்ளது போல கீதா அல்லது துளசி என்று போடுங்கள் அப்போதுதான் உங்களின் சுய கருத்துக்களை அறிய முடியும். நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு பதிவிட்டால் இருவரின் பெயரையும் கிழே இடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மதுரைத் தமிழா நீங்கள் இதற்கு முன்பே சொல்லி விட்டீர்கள்! துளசியும் என்னிடம் முதலிலிருந்தே சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார். எங்கள் பதிவுகள் பதிவேற்றம் ஆவது எல்லாம் எனது கணினியில் நிகழ்வதால் நான் எனது பெயரைத் தவிர்த்துவிடுவேன். துளசியிடம் தினமும் இதற்குத் திட்டு வாங்குவதுண்டு. நேற்றும் அதை வலியுறுத்தி, நீங்கள் சொல்லியிருந்ததையும் சொல்லி என்னைப் போட வைத்தார். பார்க்கப்போனால் இந்தப் பதிவிலும் கூட எப்படி முடிக்க வேண்டும் என்று அவர் சொல்லியதுதான்......

      மிக்க நன்றி தமிழா! அப்படியே ஆகட்டும்!

      நீக்கு
  5. மீதி யும் சூப்பர் தோழி!
    பயணங்களில் பல முறை
    சோதனைக்கு உள்ளாகிறது
    என் கருணையின் ஆழம்
    எனும் என் ஹைக்கூ வில் நான் சொன்ன அனுபவத்தை உங்கள் கட்டுரையில் காண்கிறேன். ஒரு காபி குடிச்சது குத்தமாப்பா:))) ஆட்டோ பற்றிய செய்தியும் இனி பயன்படுத்தாதவர்களுக்கு பயனளிக்கும் என நினைக்கிறேன். முடித்த விதம் அட்டகாசம் தோழி!!
    thama1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மைதிலி! முடித்த விதத்திற்கு உங்கள் பாராட்டு துளசிக்குத்தான் செல்ல வேண்டும்! அவர்தான் முடிப்பது பற்றிச் சொல்லியது. என் நன்றியை துளசிக்குச் சொல்ல வேண்டும். நன்றி மைதிலி!

      நீக்கு
  6. இது கீதாவா துளசியா என்று எதிர்பார்ப்பை எகிற வைத்த பதிவு ...
    இந்தக் காணொளி ஒருமுறை முக்நூலில் பகிரப்பட்டது ...
    ஆனால் உண்மையிலேயே இப்படி செயல்படும் திருநங்கைகள் அதிசயம்..
    அந்த ஆரஞ்சு தோட்டம் நாக்பூருக்கு அருகிலா எடுக்கப்பட்டது...

    நல்ல பதிவு பகிர்வு சகோதரி...
    சிரித்து சிரித்து படித்தேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரை எதிர்பார்த்தீங்க மது நண்பரே!

      இப்போ திருநங்கைகளும் ஒரு விழிப்புணர்வுடன் வருவது நல்ல விஷயமே....

      அந்த புகைப்படம் ஆரஞ்சுத் தோட்டமா என்று தெரிய வில்லை! ஆந்திரா, மஹாராஷ்ட்ரா எல்லை........ஆனால் ஆந்திராதான்.....

      மிக்க நன்றி நண்பரே தங்கள் பாராட்டிற்கு!

      நீக்கு
  7. சுவாரஸ்யமான பயண அனுபவம். திருநங்கைகள் பற்றிய வருத்தம் எனக்கும் உண்டு. பின்னர் அவர்கள் செய்யும் சேவை பற்றியும் அறிந்தபோது நெகிழ்ச்சிதான்.

    ரயிலில் காபி மட்டும் சாப்பிடக் கூடாது என்று நானும் அறிந்திருக்கிறேன்! கூடவே ஒருமுறை சூப் மேல் ஆசைப்பட்டு ஆர்டர் செய்ய வந்தது தண்ணீர் ஊற்றிப் பெருக்கப்பட்ட ஒரு மோசமான ரசம்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். அவங்க இந்த மாதிரி செய்தது மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. சூப் படு கேவலம் சார்! தாங்கள் சொன்னது ரைட்டு!

      நீக்கு
  8. //நான் ஜன்னலில் தொங்க விட்டிருந்தப் பையைப் பார்த்து, அதில் நான் காப்பி அருந்திய காதிதக் கோப்பைகளையும், கையில் கொண்டு வந்திருந்த உணவை அருந்திய பின் அந்த இலையையும் அதில் இடுவதைப் பார்த்து வியந்து ///


    ஊர்ல எல்லோரும் ரயில்வே ட்ராக்ல ஓடும் போது நாம மட்டும் பிளாட்பாரத்தில் ஓடினால் நம்மை வித்தியாசமாகத்தான் பார்ப்பார்கள். அமெரிக்காவில் இருந்து வந்த போது எல்லா ரெட் சிகனல்களிலும் நின்ற என்னை வேற்றுகிரக வாசி போல் பார்த்த மக்களின் ரியாக்ஷனை உங்கள் பதிவோடு பொருத்திப் பார்க்க முடிந்தது.

    திருநங்கைகள் தொல்லை, ரயில் செந்நீர், ஆட்டோ டுபாக்கூர்ஸ் என பல விஷயங்களை ஒரே பதிவில் Stuff பண்ணீட்டீங்க.. பட் ஒகே..

    அந்த பெண்ணின் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்திருக்கும் என்று நம்புகிறேன். என் பிரார்த்தனைகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவி பெண் நன்றாக உள்ளாள்! பிரார்த்தனைகளுக்கு நன்றி!

      ஆவி எனக்கு இன்னும் சிக்னல் ஃபலோ பண்ற பழக்கம்...அதாவது நம்மூர் படி வர மாட்டேங்குது......நம்மூர் லைசன்ஸ் வாங்கும் போது என்ன படிச்சேனோ அதை அப்படியே ஃபாலோ பண்றேன். அதுக்கு அப்புறம் அமெரிக்க அனுபவத்திற்கு அப்புறம் அங்க கார் ஓட்டினதுனால அது இன்னும் அதிகமாகி உள்ளது. என்னையும் ரோட்டில் எல்லோரும் ஹாங்க் அடித்து திட்டுவார்கள். ஆனால் நான் அதை இக்னோர் பண்ணிவிடுவேன். நாம் செய்வது தவறில்லையே! இது போன்ற விஷய்ங்களிலாவது ஒரு இந்தியனாக இந்தியாவை மதித்து இருக்கலாமே என்றுதான்......

      ஆமாம் ஆவி எல்லாம் ஒரே இடுகைல.....2....3 ஆ போடலாம்னா வாசிப்பு குறைவு என்பதால்தான் இப்படி.....

      நீக்கு
    2. புரியுது நீங்க எவ்வளவு திட்டு வாங்கியிருப்பீங்கனு! ரோட்டுல

      நீக்கு
  9. பயணங்கள் நமக்கு பல அனுபவங்களையும் வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுத் தருகிறது........

    உங்கள் ரயில் பயண அனுபவங்கள் குறித்து பகிர்ந்தமை நன்று. பதிவில் “வெங்கட்ஜி” என்று படித்தேன்! யார் அவர்? :)

    பதிலளிநீக்கு
  10. பயணங்கள் தரும் பட்டறிவு - அடுத்த
    பயணங்கள் செல்ல வழிகாட்டுமே!

    பதிலளிநீக்கு
  11. பயணிக்காமலே புது அனுபவம் தந்த உங்களுக்கு மிக்க நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  12. விஜயவாடாவுக்கு அப்பால் இந்திய ரயில்களில் எந்த ஒழுங்குமுறையையும் காண முடியாது என்பதைக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் பயணத்தின்போது கண்டிருக்கிறேன். இன்றும் அப்படியே இருப்பதைக் கண்டு இறும்பூது எய்துகிறேன். (2) காப்பியும் உணவும் கூட அப்படியே மாறாமல் இருப்பதை உங்கள் பதிவு காட்டுகிறது.....'(அவர்) நேற்றும் இன்றும் என்றும் மாறாமல் இருக்கிறார்' என்று சில சுவர்களில் எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது. இதைத்தான் 'அமரத்துவம் எய்தல்' என்று பாரதியும் சொன்னானோ? (3) திருநங்கைகள் புரியும் அட்டூழியங்கள் சொல்லி மாளாது. சென்னையில் தினந்தோறும் திருட்டு, வழிப்பறி, மிரட்டல் ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள். ஒரு பெண் துணையோடு பயணம் செய்தால் தப்பலாம். தனி ஆணாகப் பயணம் செய்தால் இவர்கள் அவன்மீது நெருங்கியடித்துக்கொண்டும், அருவருப்பான சைகைகள் செய்தும், மோசமாகத் திட்டியும் வெறுப்பேற்றி விடுவார்கள். குறைந்தது ஐம்பது ரூபாயாவது வாங்காமல் போகமாட்டார்கள். அது ஒரு organised goondaism. கண்டிக்கப்படவேண்டியது. (இதேபோல் சென்னை முதல் காட்பாடி போகும் ரயில்களிலும் நடக்கிறதே, உங்களுக்குத் தெரியாதா?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்! சென்னை டு காட்பாடி ரயிலிலும் உண்டு தெரியும் சார்! அனுபவம் உண்டு!

      நீக்கு
  13. அடிக்கடி இப்படி பயணம் செய்யுங்கள் ,எங்களுக்கு இப்படி நகைச்சுவையான அருமையான பதிவு கிடைக்கும் என்பதால் !
    வடஇந்திய ரயில் பெட்டிகளில் ரிசர்வேசன் என்று ஒன்று இருப்பதாகவே சொல்ல முடியாது ,அன் ரிசர்வ் பெட்டிகளில் ஏறுவதைப் போலவே வந்து ஏறிக் கொள்வார்கள் .இதனால் நமக்கு ஏற்படும் சிரமத்தைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள் !இதனால் நமது உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போகும் !
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செஞ்சுட்டா போச்சு பகவான் ஜி! தங்கள் அனுபவம் போலும்! சமீபத்தில் தங்கள் வட இந்தியப் பயணம்!
      \மிக்க நன்றி ஜி!

      நீக்கு
  14. அருமையான பயணப் பதிவு
    நாங்களும் பயணம் செய்த ஓர் உணர்வு
    நன்றி

    பதிலளிநீக்கு
  15. அழகான இயற்கை கொஞ்சும் படங்களுடன் உங்களின் எழுத்து படிக்கத் தூண்டுகிறது. வாழ்த்துக்கள் சகோதரி.
    குப்பைகளை பையில் போதும் பழக்கம் சூப்பர். அந்த வரிகளை படித்துக்கொண்டு வரும்போது, மற்றவர்களும் தங்களுக்கு கீழே கடந்த குப்பைகளை எடுத்து அது மாதிரி செய்வார்கள் என்று நினைத்து ஏமாந்து போனேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரரே! நீங்கள் ஏமாந்தது போலத்தான் நானும் ஏமாந்து போனேன்! ஆனால் அது பழகிப் போன ஒன்று தானே! அதனால் ஒன்றும் சொல்லமுடியாது!

      மிக்க நன்றி சகோதரரே!

      நீக்கு
  16. வாசிப்பவரை, வார்த்தைகளை தாண்டி, அந்த வார்த்தைகள் விவரிக்க முயலும் நிகழ்வுகளுக்குள் அவரையும் அறியமாலேயே நுழைந்துவிடச்செய்யும் மாய எழுத்து வெகு சிலருக்கே சாத்தியம் ! அப்படிப்பட்ட வசிய எழுத்து உங்களுக்கு !

    இந்திய ரயில் பயணத்தை இத்தனை நுணுக்கமாக வர்ணித்து... சக வலைப்பூ எழுத்தாளன் என்ற வகையில் உங்கள் மீது செல்ல பொறாமை வருவதை இங்கு பதியவில்லையென்றால் நான் எனக்கே உண்மையற்றவனாகிவிடுவேன் !!!

    அங்கதமாக எழுதலாம், அறிவுரைகள் கூறும் கண்டிப்பான கட்டுரைகள் எழுதலாம் ஆனால் வரிக்கு வரி இயல்பான, நடைமுறை வாழ்க்கையின் யதார்த்த பகடிகளுடன் சிந்திக்கவும் செய்யும் பதிவுகள் கடினம் !

    திருநெல்வேலி அல்வா, அறுவாக்கார தமிழரின் அனுபவத்தை உங்கள் எழுத்தில் படித்தபோது நானும் அங்கிருந்த பிரமை !

    குப்பை பை, வேலை செய்யும் சிறுவர்கள், திருநங்கைகள் என இந்த கட்டுரை முழுவதுமே உங்களின் சமூக பொறுப்பு பளிச்சிடுகிறது.

    " பயணங்கள் எப்போதும், அனுபவம் புதுமை என்பது போல், நமக்கு புதுப் புது அனுபவங்களையும், அர்த்தங்களையும், வாழ்வியல் தத்துவங்களையும் கற்றுக் கொடுக்கத்தான் செய்கின்றன! "

    மிக உண்மையான வரிகள் ! சகோதரர் "ஊமைக்கனவுகள்" ஜோசப்விஜு குறிப்பிட்டது போல தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் பலர் தேசாந்திரிகளே !

    மேலே குறிப்பிட்ட முன்னணி வரிசையில் நீங்களும் விரைவில் இடம்பிடிக்க என் உளமார்ந்த வேண்டுதல்களும் வாழ்த்துகளும்.

    தொடருவோம்
    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை விடவா சகோதரரே! தாங்கள் 17 வயதிலேயே கடல் கடந்து சென்றாலும், இனிய தமிழ் சுவையில் புகுந்து விளையாடி வருகின்றீர்கள்! எங்களை இத்தனை உயர்வாகப் பாராட்டும் அளவிற்கு நாங்கள் தகுதி உள்ளவரா என்று தெரியவில்லை. என்றாலும் தங்களது இந்த வார்த்தைகள் எங்களை மிகவும் ஊக்கப் படுத்துகின்றது.

      தங்களின் இந்த நேர்மையான வேண்டுதல்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி! நாங்களும் தொடர்கின்றோம் சகோதரரே!

      நீக்கு
  17. அட்டகாசம்... மோடிஜியின் வலக்கைக்கு வாழ்த்துக்கள் ;-)

    முன்பொரு நாள் நானும் ரயில் பயணத்தை சிலாகித்து ஒரு பதிவு எழுதினேன்.. நீங்கள் பயணத்தில் இருந்த மக்களைக் கவனித்தீர்கள் நன் அவர்களைத் தவிர மற்ற எல்லோரையும் கவனித்தேன்..

    பயணமும் அதில் ரயில் பயணமும் என்னால் ஒருபோதும் தவிர்க்க முடியாத ஒன்று...

    சுவாரசியமான கட்டுரை :-)

    பதிலளிநீக்கு
  18. ஹாஹாஹா....தங்களது ரயில் பயணத்தைப் படிக்க வேண்டுமே சீனு! ஆம் சீனு, ரயில் பயணங்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்! பயணங்களும் அப்படியே! உங்கள் நாடோடி எக்ஸ்பிரஸை மிகவும் ரசிப்போம்! தங்கள் வர்ணனையும், நடையும்....

    மக்களையும் கவனிப்பதுண்டு, பிறவற்றையும் கவனிப்பதுண்டு. ஆனால் இதுவே மிக னீண்டு விட்டது எல்லாம் சொல்லப் போனால் இன்னும் நீண்டுவிடும்.....ம்ம்ம் இன்னும் போகும் போது இருக்கின்றதே அதில் என்ன அனுபவங்களோ பார்ப்போம்....

    மிக்க நன்றி சீனு உங்கள் பாராட்டிற்கு!

    பதிலளிநீக்கு
  19. நான் பாதி தான் வாசித்தேன் சகோ மிகுதி பின்னர்.ரொம்பவே ரசித்து சிரித்தேன் அதிலும் இதை ரொம்பவே ரசித்தேன் இது என்னக்கு ரொம்பவே பிடித்த விடயம் அது தான். இந்தப் பழக்கம் உள்ளவர்களை கண்டால் மரியாதையும் அன்பும் கூடி விடும் சகோ ஹா ஹா அதனால் உங்களை இன்னும் நன்றாக பிடித்து விட்டது சகோ ஏனெனில் நானும் அப்படித் தான். ///நான் ஜன்னலில் தொங்க விட்டிருந்தப் பையைப் பார்த்து, அதில் நான் காப்பி அருந்திய காதிதக் கோப்பைகளையும், கையில் கொண்டு வந்திருந்த உணவை அருந்திய பின் அந்த இலையையும் அதில் இடுவதைப் பார்த்து வியந்து ///// ஆஹா அருமை அருமை ! வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  20. அருமை! ரசித்தேன்!

    திருநங்கைகள்தான்........... ஹம்மா....எவ்ளோ அழகு!

    பதிலளிநீக்கு