வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

திரு இராய செல்லப்பா அவர்களின் “தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்” சிறுகதைத் தொகுப்பு – ஒரு பார்வை.


  
   செல்லப்பா தமிழ் டைரி - http://chellappatamildiary.blogspot.com/   இமயத் தலைவன் - http://imayathalaivan.blogspot.in/, என்ற, தனது இரு வலைப்பூக்களில், அனாயாசமாக, தன் திறமை மிக்க எழுத்துக்களால் மாலை கோர்க்கும் திரு. இராய.செல்லப்பா அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பாகிய “தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காயை வாசிக்க நேர்ந்தது, அவரின் உபயத்தால். நாங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த வேளையில், புத்தகம் எங்கள் வீடு தேடி வந்ததை நினைத்து அளவற்ற மகிழ்சி அடைந்தோம்.  அவரது புத்தகத்தை அனுப்பித்தந்த திரு. இராய. செல்லப்பா அவர்களுக்கு எங்கள் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.



தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய், 12 சிறுகதைகளின் தொகுப்பு.  அகநாழிகை பதிப்பக வெளியீடு.  அவர் பணியின் நிமித்தம் 15 ஊர்களில் வாழ நேர்ந்த சந்தர்ப்பத்தினால் ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து பிறந்த கதைகள் என்பது ஊகிக்க முடிகின்றது! அதுவும் தற்போது அமெரிக்காவில் ஒரு காலும், இந்தியாவில் ஒரு காலுமாய் இருப்பவர்க்கு, அவரது அமெரிக்க அனுபவமும் பல கதைகள் பிறக்கக் காரணமாய் இருக்கக் கூடும் என்பதற்கு, இந்தத் தொகுப்பில், அமெரிக்காவை கதைத் தளமாகக் கொண்டுள்ள 3 கதைகள் அத்தாட்சியாய் உள்ளன!!

ஆரம்பமே, “கண்ணே கலைமானே என்ற கவித்துவமான தலைப்பில், அமெரிக்கப் பின்னணியில் நடக்கும் ஒரு கதை. மனிதரானாலும் சரி, விலங்குகளானாலும் சரி, தாய் சேய் பிணைப்பு என்பது உன்னதமான ஒன்று என்பதை ஒரு சிறுமிக்கும், மானிற்கும் இடையில் ஏற்படும் அன்பின் பிணைப்பினால் மிக அழகாகச் சொல்லிச் செல்கிறார். அவரது வார்தைகளிலேயே,
“மனுஷரோ, மிருகமோ, யாராயிருந்தாலும் தாய்க்கும், கொழந்தைக்கும் உள்ள உறவுதான் ரொம்ப ஒசந்த உறவுன்னு உனக்குப் புரிஞ்சுது இல்லையா? என்று, ராஜம்மா என்ற பாட்டி கதாபாத்திரம், தன் பேத்தி, சிறுமிக்குத் தாயின் மேன்மையைச் சொல்லியிருப்பது அருமை! இந்தக் கதையில் அமெரிக்கப் பள்ளிக்கும், இந்தியப் பள்ளிக்கும் உள்ள வித்தியாசத்தை இலை மறை காயாக, அதே ராஜம்மா கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

 “கடன் என்கின்ற இரண்டாவது கதையில்,  கதையைச் சொல்லும் கதாபாத்திரமாகிய சிறுவனுக்கும், சத்யா என்கின்ற சிறுமிக்கும், சிறு வயதில், படிக்கும்போது போட்டியில் ஆரம்பிக்கும் நட்பு, இடையில் பிரிந்தாலும், கல்லூரிக் காலம் வரும்போது. சத்யாவைப் பற்றி நண்பன் நினைவுபடுத்தும் போதுதான், அடிமனதில், மறைமுகமாக காதலுடன் அமிழ்ந்திருந்த அந்த ஆழமான நட்பு வெளிவந்து, காதல் என்பது புரிகின்றது. இதைக், கதையை வாசித்து வரும் போதே ஊகிக்க முடிகிறது என்றாலும், வித்தியாசமான. அந்த முடிவு, கதை சொல்லும் கதாபாத்திரத்திற்கு மட்டுமல்ல வாசிக்கும் நமக்கும் இதயத்தைக் கனக்க வைக்கிறது.

“பிருந்தாவனமும் மந்தாகினியும் என்ற கதை, கடிதம் மூலம் கதை சொல்லும் உத்தியில் சொல்லப்பட்ட அழகான கதை!  ஆங்கிலத்தில் இந்தக் கதை உத்திக்கு Epistolary என்று சொல்லுவர். இது மூன்று வகை Monologic – ஒரே ஒரு கதாபாத்திரம்.  Dialogic – இரண்டு கதாபாத்திரங்கள். Polylogic – பல கதாபாத்திரங்கள்.  கடிதம் மூலமாகவோ, டைரி மூலமாகவோ கதை நகரும் கதை உத்தி.  இந்தக் கதையில் மூன்று கதாபாத்திரங்கள் எழுதும் கடிதங்கள் மூலமாக கதை மிக நேர்த்தியாகச் சொல்லப்படுகிறது.  இந்தக் கதையின் முடிவும், கண்டிப்பாக, இதை வாசிக்கும் பலருக்கும் அவர்களது வாழ்வில் நிகழ்ந்த இது போன்ற சம்பவங்களை  நினைவுக்குக் கொண்டு வரும்!

இரண்டாவது கிருஷ்ணன் எனும் கதை மிகவும் அருமையான கதை! தனது இழப்புகளை மட்டுமே சிந்தித்து, மருகி வாழும் இந்தச் சமூகத்தில், தனது இழப்பின் வலியையும் பொருட்படுத்தாமல், தங்களுக்கு நேர்ந்த இழப்பு இனி ஒருவருக்கும் வரக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் ஒரு மருத்துவர், நேரில் கூடச் சந்திக்காத ஒருவருக்கு உதவுவது, மனித நேய மனோபாவமுள்ள மனிதர்களும் இந்தச் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பதைச் சித்தரிக்கின்றது!

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் கதை அச்சு அசலாகக் கிராமீய மணம் கமழும் கிராமத்தையும், அந்த மணத்தில் இழையோடி இருக்கும் ஒரு தாத்தாவின் அன்பையும் விவரிக்கும் கதை!  இந்தக் கதையை வாசிக்கும் பொழுது  பாரதி ராஜாவின் படத்தில் ஒரு கிராமம், எப்படி விரியுமோ, அதே போல அப்படியே மனக் கண் முன் விரிக்கின்றார் ஆசிரியர்.  நகரத்து வாழ்க்கைக்குப் பழக்கமாகியவர்களுக்கு, "நாமும் சிறுவனாகி, இது போல ஒரு அன்பான தாத்தாவும், கிராமமும் நமக்கும் கிடைக்காதா" என்று ஏங்க வைக்கும் என்பது சர்வ நிச்சயம்! ஆசிரியரின் சிறுவயது அனுபவங்களோ?!  அப்படி இருந்தால் கொடுத்து வைத்தவர்! தாத்தாவின் அன்பு அந்த வெள்ளரிக்காய்களில் தெரிகின்றது!

அன்னையைத் தேடி எனும் கதை, தாயின் சிறப்பைத் தாங்கி வரும் மற்றொரு கதை! ரயிலில் தன் தாய் செய்த பலகாரம் என்று விற்று தன் கல்வியைத் தொடரும் சிறுவன், இறுதியில் தன் தாயைத் தேடிப் போவது(தாயின் புகைப்படத்தை), இதயத்தை கனக்க வைக்கிறது!

ஊன்று கோல் நானுக்கு கதையின் தலைப்பே கதையைச் சொல்லி விடுகிறதோ?! கதைத் தளம் அமெரிக்கா. காலிழந்தாலும் நம்பிக்கையோடு வாழ்வை எதிர் நோக்கும் பெண்ணின் மனது, ஒரு சுயநலக் காதலனால் சிதைக்கப்பட்டாலும், அவளுக்கு ஊன்றுகோலாக இருக்க விழைந்து துளிர்க்கும் ஒரு காதலைப் பற்றி, அழகிய நடையில் சொல்லிச் செல்கிறார்!.  நமக்கு இப்படி ஒரு ஊன்றுகோல் கிடைக்காதா? என ஏங்க வைக்கும் கதை! 

  ஒரு தாயின் மேன்மையை மிகச் சிறப்பாகச் சொல்லிப் போகும் கதைதான்  பழமா பாசமா எனும் கதை! பழரசம் நம் கண்களில் கண்ணீராக எழும்பி, நம் தாயைக் கண்ணுக்கு முன் கொண்டு வந்து இதயத்தை உலுக்கி விடுகிறது!

நம் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களுக்கு நம்மால் காரணம் கற்பிக்க முடியாது. எல்லாமே கணக்குதான்! எங்கேயோ, அமெரிக்காவில் ஏதோ ஒரு மூலையில் ஒரு வண்ணத்துப் பூச்சி இறக்கையை அசைக்க, சில வருடங்கள் கழித்து கன்னியாகுமரியில் பெய்யும் மழைக்கு அதுதான் காரணம் என்று Chaotic Theory சொல்லுவது போல், நாம் நம் தத்துவங்களின் அடிப்படையில் பொதுவாகப் பாவ புண்ணியக் கணக்கைச் சொல்லி நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கு விடை தேட முயல்வதுண்டு!. கிட்டத்தட்ட அது போல,  வறுமையிலும் நேர்மையைக் கடைபிடிக்கும் ஏழை சாஸ்திரிகளுக்கு, பலன் எதிர்பாராமல் அவர் செய்யும் ஒரு நற் காரியத்தால், இறைவன், முன்பின் அறியாத ஒரு அரசியல்வாதியின் மூலம் சாஸ்திரியின் பெண் படிப்பதற்கு உதவித் தொகை கிடைக்க அருள்கிறார் என்று நேர்மறைக் கொள்கையைச் சொல்லும் கதை தான், “சாந்தி நிலவ வேண்டும். அதாவது "GOOD WILL BE REWARDED" எனப்தைச் சொல்லும் கதை. “கலைமகள்வழியாக நடத்தப்பட்ட அமரர் திருமதி பிரபா ராஜன் நினைவு சிறுகதைப் போட்டியில்(2013) இரண்டாம் பரிசு பெற்ற கதையாகும்!  
 
சாதிக் கலவரத்தில் தன் கணவனையும், குழந்தையையும் தொலைக்கும் ஓர் ஏழைப் பெண், அவர்கள் உயிரோடு இருக்கின்றனரா இல்லையா என்பதைக் கூட அறியாமல், நம்பிக்கையோடு தேடி, அதனால் மன நிலை பாதிக்கப்பட்ட போதும் கூட தன் “முடிவற்றத் தேடல்களைத் தொடரும் உயிரோட்டமுள்ள கதை. இதை வாசிப்பவர்கள், கடலூர் செல்ல நேர்ந்தால், கடலூர் பேருந்து நிலையத்தில் அந்தப் பெண் இருக்கின்றாளா என்று மனமும், கண்களும் தேட வாய்ப்புண்டு!

கந்துவட்டி வசூல் செய்ய வந்த வாலிபனுக்கும், ஒரு கன்னிப் பெண்ணிற்கும் இடையே மலரும் காதலை, கதாசிரியர்,  அவருக்கே உரிய நடையில் மிக அழகாகச் சொல்லிச் செல்கிறார், மனோரமா எனற, அந்தத் தைரியமான பெண்ணின் பெயரைத் தாங்கி வரும் கதையில்.!

பள்ளி ஆசிரியராகப் பொறுப்பேற்று, தான் செல்லும் கிராமத்தில், 7 இரவுகளில், தனக்கும், சக ஆசிரியர்களுக்கும், அந்த ஊரிலுள்ள் ஒரு சிலருக்கும் இடையே நடக்கும் வித்தியாசமான சம்பவங்களைக் கோர்வையாக ஒரு மாலையாகக் கோர்த்து தந்திருக்கிறார் 7 இரவுகள் என்ற கதையில்.  இந்தக் கதை கொஞ்சம் பெரிதாக இருந்தாலும், இன்னும் இரவுகள் இல்லையா எனக் கேட்கத் தோன்றுகிறது!

உயிர்ப்பான உயிரோட்டத்துடன், மனித வாழ்வைப் பற்றி, செழுமையான எழுத்துடன், தான் கண்ட மனிதர்களின் கதாபாத்திரங்கள் மூலம் சொல்லும் 12 கதைகளிலுமே ஆசிரியரின் அனுபவம் இழைந்து, வெகு இயல்பான, அவருக்கே உரித்தான அழகிய நடையில், ஒரு அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் போல், நம்மையும் அழத்துச் செல்லுகிறார்!  சில இடங்களில் சிறிய நகைச்சுவை இலைமறை காயாக வந்து பளிச்சுடுவது, எழுத்தாளர் சுஜாதா அவர்களை நினைவுக்குக் கொண்டுவருகின்றது! மொழி மற்றும் சொல் ஆளுமை, கதையைச் சொல்லிச் செல்லும் விதம், கற்பனை எல்லாமே ஆசிரியரின் கதை சொல்லும் ஆளுமையைப் பறைசாற்றுகின்றது எனலாம். சில இடங்கள் நம்மை அறியாமலேயே உதட்டோரம் புன்னகையை வரவழைக்கிறது! ஒரு சில கதைகள் நம் மனதை உலுக்கி, கண்களில் நீர் நிறைப்பதைத் தவிர்க்க முடியவில்லை! ஒரு எழுத்தாளர் தான் கண்டதையும், உணர்ந்ததையும், அது போலவே வாசிப்பவர்களுக்கும், தன் வசீகரிக்கும் வாக்குகளால் காண்பிப்பதிலும், உணர்த்துவதிலும், வெற்றி கண்டால் அந்தப் படைப்பு வெற்றிப் படைப்பாகிவிடும். அப்படி, வெற்றிப் படைப்பாகிவிட்ட இந்த “தாத்தா தோட்டத்து 12 வெள்ளரிக்காய்களைச் சுவைக்கும் பாக்கியம் பெற்றவர்கள், திரு. இராய. செல்லப்பா அவர்களுடன், அவரது மனம் என்னும் தோணி ஏறி அவர் கண்டதை எல்லாம் கண்டு, அவற்றை அவர் உணர்ந்தது போல் உணர்ந்து இன்புற வாய்ப்பு கிடைக்கப் பெற்ற அதிர்ஷ்டசாலிகள் என்பதுதான் உண்மை!
      
- துளசிதரன், கீதா
,  

புதன், 12 பிப்ரவரி, 2014

பெண் அன்றி நான் அல்ல பொம்மை....பொய் அல்ல நான் சொல்வது உண்மை!

       



            ஜானகி டீச்சரின் மகளது கல்யாணம் நாளை.  மாலை எங்கள் பள்ளியிலிருந்து, வகுப்புகள் முடிந்ததும், பெரும்பான்மையோர் ஜானகி டீச்சரின் வீட்டிற்குப் போய் பேசிக் கொண்டிருந்தோம்.  அது வரை நாளை அணியப் போகும் நகைகள் மற்றும் கல்யாணச் சேலையைப் பார்க்காத ஆசிரியைகள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  ஜானகி டீச்சரின் அக்கா மாதவி எங்களை எல்லாம் சிரித்து உபசரித்தாலும், ஏதோவொரு பிரச்சினை அவரை அலட்டுவது போல் எனக்குத் தோன்றியது.  இடையிடையே, தொலைபேசி அழைப்பு வந்தது.  சில அழைப்பை ஏற்றுக் கொண்டார்.  சிலவற்றை முணுமுணுத்துக் கொண்டே "கட்" செய்வதுமாக இருந்தார்.  மற்றவர்கள் கவனிக்காத போது "என்னப் பிரச்சினை?  ரொம்ப டென்ஷனாக இருக்கீங்க"  என்றேன்.



            "அந்த ஆள்தான்.  எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்காம ஒரே தொந்தரவு.  இனி வேறு வழியில்லை.  போலீசில் கம்ப்ளையின்ட்  கொடுக்கத்தான் போறேன்".  என்றார். 

                          மாதவி, பாலக்காடு கலெக்ட்ரேட்டில் பணிபுரிகிறார்.  56  வயது.  வரும் மார்ச் மாதம் ரிட்டையராகப் போகிறார்.  (கேரள அரசும் தமிழகம் போல் பென்ஷன் வயதைக் கூட்டினால், 58 வயது, மார்ச் வரை தொடரலாம்தான்)  ஒரே மகள், இந்து.  அவரும் ஒரு வங்கியில் பணி புரிகிறார்.  மகள் இந்துவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள்.  இருவரும் படிக்கிறார்கள்.  மருமகன், கடந்த வருடம் நடந்த விபத்தில் மரணமடைந்தார்.  எனவே மகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் மாதவிதான் ஆறுதலாக இருக்கிறார்.  ஜானகி டீச்சர் தன் விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வதால், அவ்விரு குடும்பங்களிலும் நடக்கும், நடந்த பல சம்பவங்கள் பற்றி எனக்கு ஓரளவு தெரியும்.


                            ஜானகி டீச்சரின் பெற்றோர், எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர்கள்.  டீச்சரின் அம்மாவுக்கு, பாலக்காடு அருகே உள்ள முண்டூர் என்னும் கிராமத்திலுள்ள L.P. பள்ளியில் (லோயர் ப்ரைமரி பள்ளி) ஆசிரியையாகப் பொறுப்பேற்றதால், இங்கு குடியேறியவர்கள்.  அப்பா, விவசாயமும், அரசியலுமாக பிசியாக இருந்தார்.  ஜானகி டீச்சருக்கும், அக்கா மாதவிக்கும் முறையே 5, 8 வயதிருக்கும் போது, ஒரு நாள் வீட்டிற்கு ஒரு ஆன்டியும், அவருடன் இரண்டு பையன்களும், 10,12 வயதுகளில் வந்தனர்.  அப்பாவுக்கு உறவாம்.  இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டு அந்தப் பையன்களின் அப்பா இறந்து கஷ்டப்படும் குடும்பம். அதன்பினஇவர்களுடன் நிரந்தரமாகத் தங்கத் தொடங்கிவிட்டனர். முரளி, மாதவன் இருவரிடமும் ஏராளமான விளையாட்டுப் பொருட்கள்.  அதன் பின் 4 பேருமே எந்நேரமும் விளையாட்டுதான்.  வீட்டில் ஏராள்மான மாற்றங்கள் அவர்கள் வந்த பின்.  கார், வேலையாட்கள், ரேடியோ, இரண்டு சைக்கிள்க்ள், இப்படி.  பிறகுதான் தெரிந்தது, முரளியின் அப்பா இறக்கக் காரண்மான, இடுக்கியிலுள்ள அந்த இடம் விற்கப்பட்டு, கிடைத்த 15 ஆயிரம் ரூபாய் அப்பாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது என்று..


         டீச்சரின் அம்மா பலமுறை, அப்பாவிடம் அந்தப் பணத்தில், ஆன்டிக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு வீடும், நிலமும் வாங்கிக் கொடுக்கச் சொல்லியும், அப்பா அதை செவிகொடுத்துக் கேட்கவில்லையாம்.  எப்படியோ, 8 ஆண்டுகள் பிரச்சினை இல்லாமல் போயிருக்கிறது.  பின் பணப் பற்றாக்குறை. அப்பாவினுடைய கையில் இருந்த 15000 ரூபாய் செலவாகிப் போனதால்.  அம்மாவின் சம்பளத்தை வைத்து அனைவரும் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட, ஆன்டிக்கும், அப்பாவுக்கும் இடையிடையே வாய் சண்டை ஏற்படத் தொடங்கியது.

                       " நாங்கள் எங்காவது வேறு வீட்டிற்கு போகிறோம்" என்று ஆன்டி இடையிடையே சொல்லத் தொடங்கினார்.  இதற்கிடையில், முரளியும், மாதவியும் மிகவும் நெருக்கமாகப் பழகுவதைப் பற்றி, கிராமத்தில் கிசுகிசுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.  டீச்சரின் அம்மாவுக்கும் இது இடையிடையே, வீண் வதந்தி அல்ல என்று தோன்றியது.  ஒரு நாள், டீச்சரின் அப்பாவும், அம்மாவும், ஆன்டியும் , பிள்ளைகள் அனைவரையும் அழைத்து, ஒரு நீண்ட அறிவுரை வகுப்பே எடுத்தார்களாம். முரளிக்குத்தான் மாதவி என்றும், ஆனால், முரளிக்கு ஒரு வேலை கிடைத்த பிறகுதான் கல்யாணம் என்றும் முடிவு எடுத்திருக்கின்றனர். மாதவனும், ஜானகியும், அறிவுரை கிடைத்ததாலோ என்னவோ, நண்பர்களாகத் தொடர்ந்த போது, முரளியும், மாதவியும் காதலர்களாகி விட்டதாலோ என்னவோ, அவர்கள் இருவரும் வீட்டிலுள்ள எல்லோரிடமும் எரிந்து விழுந்தார்கள்.  அப்பா இல்லாத போது, எரிந்து விழல் கூடுதலாக இருந்திருக்கிறது.


                             இடையில் ஒரு நாள் அம்மா ஒரே அழுகை.  சில நாட்களுக்கு முன், முரளியும், மாதவியும், "யாக்கரை" விஸ்வேஸ்வ்ரர் கோயிலில், பெற்றோர்கள் அறியாமல், மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டு விட்டார்களாம்.  அதனால் ஏற்பட்ட் அவமானத்தால், அதன் பின் டீச்சரின் அப்பா அதிகம் வெளியில் போகாமல் வீட்டிலேயே தங்க ஆரம்பிதுவிட்டார்.  அம்மா வேறு வழியின்றி ஸ்கூலுக்குப் போக வேண்டியிருந்தது.  கல்யாணச் சடங்கு இல்லாதது போல், பிரவத்திற்கு அழைத்துச் செல்லும் சடங்கும் இல்லாது போனது.



மாதங்களுக்குப் பின் ஒரு நாள் அந்த வீட்டிற்கு புதிதாய் ஒரு விருந்தாளி. மாதவிக்குப் பெண் குழந்தை பிறந்தது.  எல்லோருக்கும் சந்தோஷம்.  அம்மாவும், அப்பாவும் குழந்தை பிறந்த 28 ஆம் நாள் அரைஞாண் கட்டும் சடங்கை நன்றாகக் கொண்டாட முடிவு செய்தனர்.  பந்தல் போட்டு உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரையும் அழைத்து ஒரு விழாவாக கொண்டாடினர்.  அதன் பின் தான் தெரிந்தது அந்த நாள் எல்லோருக்கும் தீக்கனலாய் மனதை வாழ் நாள் எல்லாம் சுடும் நாள் என்று.

                           அன்று மாலை, முரளி "நான் இப்படி வேலை இல்லாமல் இனியும் இருந்தால் சரிவராது.  எர்ணாகுளத்தில் ஒரு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சில மாதங்களுக்குப் பிறகு, மாதவியையும், குழந்தையையும், நான் அங்கு அழைத்துப் போகிறேன்"  என்றெல்லாம்  சொல்லிப் போனார்.  வருத்தம் என்றாலும், எல்லோருக்கும் ஒரு விதத்தில் மகிழ்ச்சி. 'இப்போதாவது பொறுப்புணர்ச்சி வந்ததே என்று.  அன்று போன முரளி பின்பு வரவே இல்லை.  இடையே அப்பவின் மரணம்.  யாரோ சொன்னார்கள் முரளி சவூதி அரேபியா போயிருப்பதாய்.  இடையே ஆன்டியும், மாதவனும் என்னென்னவோ சொல்லி எர்ணாகுளம் போய்விட்டார்கள்.  பிறகுதான் தெரிந்தது, முரளி புதிதாய் கட்டிய வீட்டிற்குதான் அவர்கள் சென்றிருக்கிறார்கள் என்று.  விசாரிக்கவோ, சண்டை போடவோ போக யாருமின்றி, பெண்களாகிய அவர்கள் குமுறியும், அழுதும், ஒருவருக்கொருவர் ஆறுதலும் சொல்லிக் கொண்டார்கள். அப்பா, இறக்கும் முன் அம்மாவிடம், ஜானகிக்கும், மாதவிக்கும்,  யாரையும் எதிர்பாராமல் வாழ எப்படியாவது பென்ஷன் கிடைக்கும் அரசு வேலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றாராம்.

                       அதன்படி, அம்மா மாதவிக்கு அவரது பள்ளியில் UP (அப்பர் ப்ரைமரி) வேலைக்கு ஏற்பாடு செய்ய, மாதவி அதை ஜானகிக்குத் தானம் செய்தும் விட்டார்.  "ஜானகிக்கு வேலை இருந்தால் நல்ல கல்யாணம் அமையும்" என்று சொல்லி.  சொன்னது போல ஜானகி டீச்சரானார். ரயில்வேயில் பணிபுரிந்த ராதாக் கிருஷ்ணன் கணவர் ஆனார்.  இதற்கிடையில் படுத்தப் படுக்கையான, அம்மாவைக் காண வந்த மணி வாத்தியார் சொன்ன வார்த்தைகளை அவர்களால் நம்ப முடியவில்லை.  இந்துவுக்கு அரைஞாண் கட்டுவிழா முடிந்த அன்று மால எர்ணாகுளம் சென்ற முரளி, 2 வருடங்களுக்குப் பிறகு மணி வாத்தியாருக்கு கடிதம் எழுதியிருந்தாராம்.  அதில் "எங்களைப் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று எங்கள் சொத்தை எல்லாம் அபகரித்த அந்த மனிதனுக்கு (டீச்சரின் அப்பாவுக்கு) இது நான் கொடுக்கும் தண்டனை.  நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில், எங்கள் மாமா தந்த இடத்தில் ஒரு வீடு கட்டியிருக்கிறேன்.  இப்போது என் அம்மாவும், தம்பியும் இங்குதான் இருக்கிறார்கள்.  அடுத்த வருடம் நான் நாடு திரும்பும் போது ஒரு கல்யாணமும் செய்யப் போகிறேன்.  என்னுடைய ஒரே வருத்தம், கல்யாணத்திற்கு உங்கள் யாரையும் கூப்பிட முடியாதே என்பதுதான்".  என்று எழுதி அதை மறக்காமல் டீச்சரின் அப்பாவிடமும் கொடுக்கச் சொன்னாராம்.

                         வேறு வழியின்றி, முரளியை இனி எதிர்பார்த்து பலனில்லை என்பதைத் தெரிவிக்க, மணி வாத்தியார், டீச்சரின் அப்பாவிடம் அந்தக் கடிதத்தைக் காண்பித்திருக்கிறார்.  மனம் உடைந்த அவர் அதன் பின் சில மாதங்களிலேயே இறந்தும் விட்டார்.  ஆனால், இறப்பதற்கு முன் மணி வாத்தியாரிடம் " இந்தக் கடிதத்தை என் மனைவியும், பிள்ளைகளும் வாசித்து என்னைப் போல் செயலிழந்து இடிந்து உட்கார மாட்டார்கள் என்று உறுதியாகத் தோன்றும் போது மட்டும், அவர்கள் கையில் கொடுத்தால் போதும்." என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டாராம்.  அதனால் தான், இத்தனை நாளாக அக்கடிதத்தைப் பற்றிச் சொல்லவில்லை என்று சொல்லியிருக்கிறார் மணி வாத்தியார்.  வாசித்த இவர்களுக்கும் வருத்தம்தான்.   ஆனால், அந்த வருத்தம் அவர்கள் எதிர்காலத்தை இருட்டாக்கும் அளவுக்குப் பெரிதல்ல.  இப்போது அவர்கள் வாழும் அவர்களது வாழ்க்கை, அவர்களுக்குப் பழக்கப்பட்டு விட்டது.  புதிய எதிர்பாராத திருப்பங்கள் அவர்களை ஒன்றும் செய்யாது என்பதுதான் உண்மை.



                                   இப்படி இருக்க, காலச் சக்கரத்தின் சுழற்சியில் வருடங்களுப் பிறகு முரளி இந்தியாவுக்குத் திரும்பி தாய் மற்றும் சகோதரனின் மரணத்திற்குப் பிறகு மனைவி, மற்றும் குழதைகளுடன் மகிழ்ச்சியாக  வாழத் தொடங்கினாலும், ஒருவேளை மனதில் எங்கேயோ ஒரு மூலையில் குற்ற உணர்வு உறங்காமல் விழித்திருந்திருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ, இறையுணர்வை வளர்த்துக் கொள்ள "பிரம்மகுமாரி" எனும் ஆன்மீக இயயக்கத்தில் சேர்ந்து ராஜயோகம் பயின்று கொண்டிருக்கிறார்.  காலமும், வாழ்க்கை அனுபவங்களும் அவரது காயங்களைக் குணப்படுத்தி இருக்கலாம். அவரது பழி வாங்கும் உணர்வு செத்திருக்க வேண்டும்.  மனைவியையும், குழந்தையையும்  (இப்போது இரு இளஞர்களின் தாய்) பார்க்கவேண்டும் என்ற ஆசை அவருக்கு.  (மனைவியும், மகளும் மாத ஊதியம் பெற்று பொருளாதார நெருக்கடி இல்லாமல் வாழ்வதும் ஒரு காரணமாக இருக்கலாம்).  அவர்களைக் காண வேண்டும் என்றும், அவர்களுடன் வாழ வேண்டும் என்றும் விரும்பிய அவர், அவர்களுடன் பல முறை ஃபோன் மூலமும் தொடர்பு கொண்டிருக்கிறார்.


                மகள் தன் தந்தையின் தவறை மன்னித்து ஏற்றுக் கொண்டார்  இடையிடையே அப்பாவும், மகளும் பேரன்களும் சந்தித்து ஒன்றாய் தங்கிப் பேசி பிரச்சினை இல்லாமல் போகிறது  அவர்களது வாழ்க்கை.  ஆனால் மனைவி மாதவி மாற்றம் இல்லாமல் தொடர்கிறார்.  இதுதான் நான் இந்தக் கதையின் ஆரம்பத்தில் சொன்ன அந்த ஃப்ப்ன் கால் சம்பவம் உண்டாகக் காரணம். முரளி மாதவியை அழைத்தது.

"நான் பெண்தான், ஆனால், பொம்மை  அல்ல தோன்றும் போது கையிலெடுத்துக் கொஞ்சவும், வேண்டாத போது வீசி எறியவிம்.  கடந்த 35 வருடங்கள் தனியே வாழ்ந்த எனக்கு, இனியுள்ள 5, 10 வருடங்கள் தனியே வாழத் தெரியும். மட்டுமல்ல அவர் வேறு ஒருத்தியின் கணவனும், குழந்தைகளின் தந்தையும் கூட. அந்தப் பெண்ணின் கண்ணீர் என்னைச் சுடும்.  கணவனால் கைவிடப்பட்டு தனியே வாழும் ஒரு பெண்ணை இச்சமூகம்  எப்படியெல்லாம் ஏசும், ஏளனம் செய்யும்!  அதையெல்லாம் நான் இத்தனை வருடங்கள் சகித்தாகிவிட்டது.  இந்த வாழ்க்கையைத் தான் நான் மரணம் வரைத் தொடர்வேன்" என்றெல்லாம் மாதவி கொந்தளித்தார்.  

                                என்றாலும், எனக்கென்னவோ, சந்தேகமாகத்தான் இருக்கிறது.  காலம் எல்ல காயங்களையும், வலிகளையும் குணமாக்கும் திறனுடைய்துதானே. ஒருவேளை முரளியின் ப்ழிவாங்கும் உணர்ச்சியைப் போக்கியது போல் (வசதியுடம் சுகமாய் வாழ நடத்தும் தத்திரமாகவும் இருக்கலாம்).  காலம் ஒரு வேளை மாதவிக்கு முரளியிடம் உள்ள வெறுப்பையும் விரோதத்தையும் போக்கி விடுமோ?  அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்பார்களே !!  இப்படிக், 'கால் மேல் கால் வந்து '  வெறுப்பையும்,கோபத்தையும் நகர்த்தி விடுமோ? மகள் மற்றும் பேரங்களுடன் ஒன்றானது போல, முரளியும் மாதவியும் ஒன்றாவார்களா?
காலம்தான் பதில் சொல்லவேண்டும்!!! காத்திருப்போம்.!!!



      

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

ஆனைக்கு அடி சறுக்குவதெல்லாம் இல்லை...சறுக்குவது எல்லாம், வனத்துறைக்கும், சரிவதெல்லாம் அவர்கள் கட்டிய மின்சார வேலிகளும்தான்






        பாலக்காடு, வாளையார் வனப்பகுதியில், காட்டானைகளால்  பெரும் பிரச்சினையாக நீண்ட காலமாக இருந்து வருகின்றது. வனப்பகுதியொடு சேர்ந்து வாழும் மக்களின் வயல்களும் , வாழை மற்றும் தென்னை மரங்களும் காட்டானைகளால்  அழிக்கப்படுவது இடையிடையே நடந்து கொண்டுதான் இருக்கிறது.  பாவம், மனிதர்களும் பலியாவதும் உண்டு.










       


அது போல், ரயில் என்ஜினில் மோதி இடையிடையே யானைகளும், யானைக் குட்டிகளும் இறப்பதும் உண்டு. 





வனத்துறைக்கு, இங்கு, காட்டானைகளை உள்  வனப்பகுதிக்கு விரட்டி விடச், செய்யமுடிகின்ற ஒன்றே  ஒன்று, அவை வரும் வழிகளில் மின்சார வேலிகளைக் கட்டுவது என்பதுதான்.  அதிசயம் என்னவென்றால், வேலி  கட்டிய பின் ஒரு வாரம் வரை யானைகள் நல்ல பிள்ளைகளாக  வேலிக்கு இப்புறம் வராமல் விலகிப் போகுமாம்.  



பிறகு அவை கூடி ஆலோசிக்குமோ என்னமோ தெரியவில்லை.  ஒரு வாரத்திற்குப் பின் கூட்டமாக வந்து வேலிக்கு அருகே உள்ள மரங்களை, வேலிகளின் மேல் சாய்த்து வேலிகளைத் தகர்த்து, அது வழியாகக் கடத்தி விடப்படும் மின்சாரத்தை பூமிக்குள் போக வைத்த பின், எந்த வித ஷாக்கும் தங்களைத் தாக்காதவாறு, ஷாக்கை முழுவதுமாக வனத்துறைக்குக் கொடுத்து (என்ன ஒரு புத்திசாலித்தனம்! புன்னகை செய்யத் தெரியாததால் ஆனை நகை செய்து) எப்போதும் போல் வயல்களிலும், தோப்புகளிலும் மேய்ந்து தங்கள் பசியைப் போக்கிக் காடேறுகின்றனவாம்.  

வனத்துறையினரும் தங்கள் தலையைப் பிய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியாமல் தவிக்கின்றார்கள். மட்டுமல்ல சில மாதங்களுக்கு முன், பன்றிமடையில், ஒரு யானை ரயில் என்ஜினில் மோதி, கால் ஊனமானதன் பின் அவ்வழியாக யானைகள் வருவதே இல்லையாம். (அதற்கு வேறு மாநாடு அல்ல 'மா'காடு கூடியிருக்கலாம்)







காட்டை மனிதர்கள் அழிப்பதால் தான் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே போராட்டம் வருகின்றது.  காட்டை விழுங்கிய மனிதர்கள், யானைகள் தங்களுக்குத் தீனி கிடைக்காத வேளைகளில் மனிதர்கள் வாழும் பகுதியிலுள்ள யானைகளின் தீனிகளைத் தின்ன விடாமல் செய்கின்றனர். அப்படி அவர்கள் யானைகளை விரட்ட, செய்யும் ஒவ்வொரு தந்திரத்தையும் எப்படி முறியடிப்பது என்றுத் தீவிரமாகச் சிந்தித்து தீர்மானங்களை அந்த யானைகள் எடுக்கின்றனவோ? வனப்பகுதிகளில் இனி, ஆனைக் கிடங்குகளைத் தோண்டி, யானைகளிடமிருந்து மனிதர்களைக் காக்கத் திட்டம் தீட்டி, அதிகக் கோடிக் கணக்கானப் பணத்தை எப்படி விழுங்குவது என்று சிந்திக்காமல் வேறு பயனுள்ள, யானைகளைப் பாதுகாக்கும் வழிகளை ஆராய்வதுதான் நல்லது.












மனிதன் அவன் தேவைகளுக்காகப் புதிய, புதிய அதிக விளைச்சல் தரும் பயிர்களை எல்லாம் கண்டு பிடித்து விவசாயம் செய்து சுகமாய் வாழும் போது  யானை போன்ற வன விலங்குகளுக்கு, வருடம் முழுக்க உண்டு வாழ, காடுகளை அழிக்காமல் பாதுகாத்து, உள் வனத்தில் ஏன் மூங்கில் மற்றும் கற்றைக் காடுகளை மனிதன் வளர்த்துக் கொடுக்கக் கூடாது?  யானைகள்,தங்கள் பகுதிக்குள் வரும் போது  மின் வேலி கட்டி அவற்றை விரட்டுவதை விட, அவை நாட்டுப் பகுதிக்கு வர வேண்டிய அவசியம் நேரா வண்ணம் வனத்தில் அவர்களது பசிக்குத் தேவையானவற்றை நட்டு வளர்க்கக் கூடிய ஒரு திட்டம் தீட்டி யானைகள், அவற்றின் இடத்திலேயே தங்கக் கூடிய சூழலை ஏன் ஏற்படுத்தக் கூடாது? இந்த பூமி மனிதர்களாகிய நமக்கு மட்டும் சொந்தமான ஒன்று அல்லவே!  


படங்கள் : courtesy google

சனி, 8 பிப்ரவரி, 2014

தெய்வம் தந்த பூவே.............மரணம் மீண்ட ஜனனம் நீயே!





பாலேட்டன் - ஆஷா சேச்சி

ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை விளம்பரத்தின் பாகமாக திருச்சூர் வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பப்படும் பாலேட்டன் மற்றும் ஆஷா சேச்சி வாசிக்கும் கடிதங்கள் எனும் நிகழ்ச்சியில் இன்று மனதை நெகிழச் செய்யும் ஒரு சம்பவம்.


ஃபௌசியாவுக்குச் செய்யப்பட்ட ஒரு அறுவை சிகிச்சையில் நேர்ந்த தவறு, அவரைத் தன் கை, கால்களை முன்பு போல் எளிதாக இயக்க முடியாத ஒரு நிலைக்குத் தள்ளிவிட்ட்து.  பல மருத்துவர்களிடம் மாறி, மாறி மருத்துவம் செய்து வரும் அவருக்குத் திருப்தி அளிக்கத் தக்க ஒரு மாற்றமும் உண்டாக வில்லை. வயநாடு மாவட்டத்தில், மாநந்தவாடி எனும் இடத்திலுள்ள ஒரு மருத்துவமனை பற்றி யாரோ சொல்லிக் கேட்ட அவர், தன் கணவன், அண்ணன், மற்றும் அண்ணியுடன் திருச்சூரிலிருந்து பஸ் ஏறி கோழிக்கோடு KSRTC பேருந்து நிலையத்தை அடைந்த போது நேரம் இரவு 11.30.  மாநந்தவாடிக்கு இனி அடுத்தப் பேருந்து 12.30 க்குத்தான்.  1 மணி நேரம் அங்கு பயணியர் அமரும் இடத்தில் உட்கார முடிவு செய்து, ஆண்கள், ஆண்கள் பகுதியிலும், பெண்கள், பெண்களுக்கானப் பகுதியிலும் உட்கார்ந்தனர். 


பெண்களுக்கான இருப்பிட அறை ஒரு நான்கு அடி சுவரால் சுற்றிலும் கட்டப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருந்தது.  அதன் ஒரு மூலையில், ஒரு வேட்டியால் ஒரு பகுதி மறைக்கப்பட்டிருந்தது. நல்ல வெளிச்சமில்லை என்றாலும், யாரோ அந்த மறைவில் படுத்திருப்பது போல் தோன்றியது.  ஒரு சிறு குழந்தையின் சிணுங்கலும் கேட்டது.  சிறிது நேரத்திற்குப் பின், சற்றுத் தொலைவிலிருந்தக் கழிப்பறையிலிருந்து ஒரு பெண் மிகவும் தளர்ந்த நிலையில் மெதுவாக சிரமத்துடன் நடந்து, ஃபௌசியாவையும், அவரது அண்ணியையும் தாண்டி அவர்கள் அருகில் இடம் இருந்தும் உட்காராமல், துணியால் மறைத்த அந்த இடத்தை நோக்கி நடந்தார்.  உடனே அந்த மறைவிலிருந்து யாரோ எழுந்ததும் தெரிந்தது.  பார்த்த போது ஃபௌசியாவிற்கு அதிர்ச்சி! 


பெண்கள் மட்டுமே இருக்க வேண்டிய பகுதியில் ஒரு ஆண்!  என்ன செய்வதென்று அறியாமல் திகைத்த போது, அம் மனிதன், சிரமத்துடன் நடந்து வரும் பெண்ணைத் தாங்கிப் பிடித்துக் கீழே உட்கார உதவினார்உட்கார்ந்த அந்தப் பெண் அப்படியே தரையில் படுத்தார்.  மீண்டும் குழந்தையின் சிணுங்கல்கள். இப்போதுதான் புரிந்தது அந்த சிணுங்கல்களுக்குச் சொந்தக்காரரான குழந்தை இவ்வுலகிற்கு வந்து ஒரு சில மணி நேரங்களே ஆகியிருக்கிறது என்று.  எவ்வளவோ வசதிகள் உள்ள மருத்துவமனைகளில், உடன் பிறப்புகள், உறவினர்கள் ஆவலுடன் பிறந்த குழந்தையைக் கையில் வாங்கக் காத்திருக்கும் காட்சிகளைக் கண்ட, அதைப் பற்றிக் கேட்ட, வாசித்த நமக்கு, வேறு வழியின்றிப் பயணம் செய்து கொண்டிருக்கும் ட்ரெயினில், காரில், ஏன் ஆட்டோவில் கூட பிறந்த குழந்தைகளைப் பற்றிக் கேட்ட நமக்கு, இதோ, இப்போது இரவில் வேறு வழியின்றி, பயணத்திடையே ஒரு பேருந்து நிலையத்தில் தன் கணவனின் உதவி மட்டும் கிடைக்கப் பெற்ற நிலையில் தன் குழந்தையை ஈன்றெடுத்த ஒரு தாயைப் பற்றிக் கேட்கக் கூடிய வாய்ப்பு. தாய்க்கும், சேய்க்கும் எந்த வித தொற்றும் பற்றாது இருக்க எல்லாம் வல்ல இறைவன்தான் அருள் செய்ய வேண்டும்!

இதையெல்லாம், கண்டும் வாயடைத்து நின்ற ஃபௌசியாவை, அவள் கணவனும், அண்ணனும் வந்து “பஸ் வந்து விட்ட்து என்று கூறி கூப்பிட, எல்லாம் மறந்து நால்வரும் ஓடி பஸ் ஏற, உடனே பஸ்ஸும் புறப்பட்டும் விட்டது.  சற்று முன் தான் கண்ட காட்சிகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்த ஃபௌசியா, தன் அருகே இருந்த கணவனிடம் விவரிக்க, அவர், “அவர்களைப் பற்றி விசாரித்து அவர்களுக்கு வேண்டிய உதவி ஏதாவது செய்திருக்கலாமே என்றதும் தான், ஃபௌசியாவுக்கு “ஐயோ! தவறு செய்து விட்டோமே என்று தோன்றியிருக்கிறது.!

கடிதத்தை முடித்த ஃபௌசியா, அவர்களைப் பற்றி வேறு எந்த விவரமும் சொல்லாததால், நமக்கு ஒன்றும் ஊகித்துப் பார்க்க முடியவில்லை. அவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? பயணிகளா?  நாடோடிகளா?  எப்படியோ, KSRTC  ஊழியர்கள், காவலர்கள், நல்ல மனம் படைத்த மனிதர்கள் யாரேனும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கலாம்.  இறையருளால் தாய்க்கும், சேய்க்கும், பிரச்சினை இல்லாமல் பிரசவம் நடந்தது போல, இறையருளால் தாயும், சேயும் நோயற்ற வாழ்வு பெற்று, எங்கிருந்தாலும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை நாம் வேண்டுவதைத் தவிர, நமக்கு இங்கு செய்வதற்கு ஒன்றுமில்லை.  இருந்தாலும், இந்தச் சம்பவம் மனதிற்கு இனம் புரியாத ஒரு வலியை ஏற்படுத்துகிறது. அந்தக் கணவனும், மனைவியும் அனுபவித்த வேதனையையும். அல்லல்களையும், மன உளைச்சல்களையும் எண்ணிப் பார்க்கும் போது, இது போன்ற வலிகள் நம்மை நல்ல ஒரு மனிதனாகச் சிந்திக்க வைத்து, செயல்பட்டு வாழ உதவுகிறது.  மட்டுமல்ல “உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற கண்ணதாசனின் வரிகளை நினைக்க வைத்து, நமக்கு கிடைக்கப் பெற்ற நல்ல வாழ்க்கைக்கும், வாழ்க்கைச் சூழல்களுக்கும், இறைவனுக்கு நன்றி சொல்ல வைக்கிறது!


புதன், 5 பிப்ரவரி, 2014

குரு தட்சிணை





     திருச்சூர் பேருந்து நிலையம். குமரேசன், உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் தன் ஊராகிய சேலம் செல்வதRkuற்காக, பஸ்ஸிற்குக் காத்துக் கொண்டிருந்தார். ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர். ஒடிசலான தேகம். ஓய்வு பெற்ற ஆசிரியருக்கான எல்லா அடையாளங்களும் இருந்தன. கல்யாணம் செய்ய வேண்டிய வயதில் இரு பெண்கள் இருப்பதை அவர் நெற்றியில் இருந்த கவலை ரேகைகள் ஜோசியம் சொல்லியது. காத்திருந்ததில் கால்கள் வலிக்கத் தொடங்கவே உட்கார இடம் தேடினார். தமிழ் தெரிந்த முகம் ஏதாவது தென்படுகிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். சுற்றிலும் மலையாளக் குரல்கள்தான்!  மலையாள மாதம் மகரம் (தை மாதம்) தொடங்கி சபரி மலை மகர விளக்கு முடிந்த பின்னும் கூட, சற்று தூரத்தில் ஒரு டீக்கடையில், தாஸேட்டன் தனது இனிமையான குரலில், மகர விளக்கிற்கு ஐயப்பனை விளித்துக் கொண்டிருந்தார்.  அடுத்த கோவை பஸ் எத்தனை மணிக்கு என்று, குமரேசன் அருகிலிருந்த மலயாளச் சேட்டனிடம் கேட்டார்.


 “9.30 மணிக்காணு என்ற பதில் வந்தது. 8 மணிதான் ஆகியிருந்தது. இன்னும் 1 ½ மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பஸ்ஸும் பேருந்து நிலையத்திற்குள் வரும் போதும், அது செல்லும் இடம், புறப்படும் நேரம் எல்லாம் நேர்த்தியாக, நல்ல குரல் வளம் உடைய ஒருவர் பேருந்து நிலைய டைம் கீப்பர் அறையிலிருந்து, ஒலிபெருக்கியில் அறியிச்சுக் (அறிவித்துக்) கொண்டிருந்தார். எல்லா மலையாளிகளின் குரலும் இனிமையாக இருக்குமோ? தாஸேட்டனின் குரல் போன்றே! அவர் நின்றிருந்த இடத்திற்கு எதிர்த்தாற் போல இருந்த சுவரில்  கேரள நாட்டிளம் பெண் லக்ஷ்மி மேனன் அழகாய் கொஞ்சி சிரித்துக் கொண்டிருந்தார் விஷாலுடன். மலையாளத்துக் குட்டிகளுக்கு தமிழ் நாட்டில் காற்று அடிக்கின்றது!  மலையாள நாட்டில் இப்போது தமிழ் படங்களின் வருகை அதிகம் போலும்!


இவ்வாறான எண்ண ஓட்டத்தில் இருந்த குமரேசனுக்கு வயிறு கொஞ்சியது! கெஞ்சியது! அருகிலிருந்த சிற்றுண்டிக் கடைக்குச் சென்று சாப்பிடலாம் என்றால், இந்த வயதான காலத்தில் சாப்பிட்டாலும் தொந்தரவு, சாப்பிடாவிட்டாலும் தொந்தரவுதான்.  மாத்திரை சாப்பிட வேண்டும் என்று இரண்டு இட்லிகள் சாப்பிட்டு வயிற்றின் கெஞ்சலை அடக்கினார்.  தேங்காய் எண்ணையில் செய்த கேரள சிப்ஸ் கண்ணில் படவும், வீட்டிற்கு வாங்கலாம் என்று நினைத்த போது அடுத்த உபாதை.  கழிவறை எங்கே என்று தேடி, விசாரித்து இயற்கை அழைப்பை முடித்துக் கொண்டு திரும்பும் சமயம், திரும்பவும் அந்த சிப்ஸ் கடை கண்ணில் படவும், மணி 9.30 ஆக இன்னும் 10 நிமிடங்களே உள்ளது என்று கைக்கடிகாரத்தில் பார்த்ததும், தான் நின்று கொண்டிருந்த இடத்திற்கே விரைந்தார். திடீரென்று, அருகில் தமிழ் குரல்.

“ஸார் என்னை நினைவுருக்கா சார்?  சீனிவாசன். 10 வருஷத்துக்கு முன்னாடி, 12 ஆம் வகுபில் நீங்கள் எங்களுக்கு ஆங்கிலம் எடுத்தீர்கள்! 

வயதானதால் கண்ணில் சற்று மங்கல். கண்ணைக் கசக்கிக் கொண்டு அவனை உற்றுப் பார்த்து, மூளையைக் கசக்கிக் கொண்டு நெற்றியில் தேய்த்துக் கொண்டார்.

“ம்ம்ம்ம்ம்ம்....எந்த பாட்ச்?

“சார்... 2003 ஆம் பாட்ச்.ஆங்கிலம் கற்று நன்றாகப் பேச வேண்டும் என்று எங்களுக்கு எவ்வளவோ அறிவுரை சொன்னீங்க! அப்ப கேக்கலை...இப்ப.....என்னோட வாழ்க்கை எப்படியோ போயிடுச்சு. ஒருதடவ வகுப்புல ஒவ்வொருத்தரா எழுந்து நின்னு எங்களுக்குள்ள ஆங்கிலத்துல உரையாடல் பயிற்சி கொடுத்த போது, நான் தப்பா பேசினேன்னு வகுப்பே சிரிச்சிச்சு.  நீங்க அவங்களைத் திட்டினீங்க, அந்த மாதிரி சிரிக்கக் கூடாது, அது கேலி செய்யற வகுப்பு இல்ல, கற்பதற்கான வகுப்பு.  தவறு யார் வேணாலும் செய்ய வாய்ப்புண்டு.  திருத்திக்கறதுதான் விவேகமான வாழ்க்கை...அப்படினு எனக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடக் கூடாதுனு அவங்கள எல்லாம் திட்டினீங்க சார்..

“இப்ப நினைவுக்கு வருதுப்பா....தப்பா உச்சரிப்பு செய்து.......... இவ்வளவு நினைவு வைச்சுருக்கியாப்பா.....ரொம்பவே சந்தோஷமா இருக்கு....

“அதேதான் சார்.  உங்கள மாதிரி ஒரு நல்ல மனசுள்ள ஆசிரியரை எல்லாம் பார்க்கவே முடியாது சார்.  எங்களை நல்வழிப்படுத்தவும், ஆங்கிலத்துல பேசணும்னும் எவ்வளவோ முயற்சி எடுத்தீங்க சார்.  உங்களை மறக்கவே முடியாது............சார், நீங்க எப்படி இந்தப் பக்கம்?

“சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணம்பா.  ஆமாம் நீ என்னப்பா செய்யற? இங்கே?

“சார் நீங்க சொன்ன அட்வைஸ் எல்லாம் கேக்காம போனதால அப்புறம் படிப்பைத் தொடர முடியல. ஏதேதோ வேலை பார்த்து இப்ப இங்க சிப்ஸ் கடை போட்டுருக்கேன் சார்.  பக்கத்துல சின்ன ரூம் எடுத்து தங்கியிருக்கேன் சார். குடும்பம் அங்க தமிழ் நாட்டுலதான்.  கோயபுத்தூர்ல...........சார், நான் இதோ ஒரு 5 நிமிஷத்துல வந்திடறேன் சார்  என்று சொல்லிவிட்டு சிப்ஸ் பாக்கெட் எடுத்து வர ஓடினான்.


அதற்குள் கோவை செல்லும் பஸ் வந்து விட குமரேசன் ஓடினார்.  கூட்டம் நெருக்கித் தள்ளியது.  பையை வைத்துக் கொண்டு ஏற முயன்ற போது ஷர்ட் பாக்கெட்டை பின்புறமிருந்து ஒரு கை தொட்டு பர்ஸை அப்பேஸ் பண்ணியது. கத்திப் பயனில்லை.  எல்லோரும் ஏறி சீட் பிடிப்பதில் மும்முரமாக இருந்தனர். யாருக்கும் அருகில் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கும் எண்ணமும் இல்லை.  குமரேசன், பையைக் கீழே வைத்து விட்டு ஓடுவதா இல்லை பையைத் தூக்கிக் கொண்டு ஓடுவதா என்று குழம்பிவிட்டு பையோடு அவன் பின்னால் துரத்திக் கொண்டு ஓடினார்.  அங்கிருந்தவர்களில் சிலர்,


“சாரே அவண்ட கையில் ப்ளேடு காணும் .  கீறிக் களையும், அடுத்துப் போகிலது என்றும் எச்சரித்தனரே தவிர யாரும் உதவுவதாக இல்லை. இருட்டில் அவன் ஓடியே போய் விட்டான்.   கையில் காசில்லை! டிக்கெட் எடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். திரும்பவும் திருமண வீட்டிற்கே ஒரு ஆட்டோவில் சென்று விஷயம் சொல்லி உதவி கேட்கலமா, அது சரியா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம்....

அப்போது சிப்ஸ் பாக்கெட்டுகளுடன் அங்கு வந்த சீனிவாசன், அவர் கையில் சிப்ஸ் பாக்கெட்டுகளைக் கொடுத்து விட்டு, விஷயம் அறிந்தவுடன்,

“என்ன சார், நடந்தது நடந்து விட்ட்து, இங்கு இப்படித்தன் பல சமயங்களில் நடக்கும்.  நான் தான் இருக்கேனே சார், உங்களுக்கு உதவ...தயங்காதீங்க சார், நீங்க எனக்கு என் அப்பாவைப் போல சார்...


  அவரை மெதுவாக பஸ்ஸில் ஏற்றி, சீட்டில் அமர வைத்து ரூ. 500 ம் அவர் கையில் கொடுத்தான்.  குமரேசன் கண்களில் கண்ணீர் தளும்பியது!

“இந்த இக்கட்டான சமயத்துல ஆபத்பாந்தவனா, தெய்வம் மாதிரி வந்து உதவியிருக்கப்பா! ஆசிரியரை அந்த நிமிஷமே மறந்து போற இந்தக் காலத்துல, வருஷம் ஆகியும், என்னையும் மறக்காம ...அதுவும் உதவி வேற செய்யற.......நா ஒருபோதும் மறக்க மாட்டேன்! ரொம்ப நன்றிப்பா!.  நான் வீடு திரும்பியதும் உனக்கு நான் இந்தப் பணத்தை அனுப்பித் தரேன்.   கண்டிப்பா எங்க வீட்டுக்கு உன் குடும்பத்தை கூட்டிட்டு வரணும்.

“என்ன சார் இதுக்கு போயி இப்படி பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க. எனக்கு நீங்க பணத்தைத் திரும்பி எல்லாம் தர வேண்டாம் சார்.  என்னை உங்க மகனா நினைச்சுக்குங்க!  நீங்க எங்களுக்குச் செய்ததை விடவா சார்?  நீங்க எங்களை எல்லாம் நல்லவர்க்ளாக இருக்க வேண்டி சொன்ன வார்த்தைகள், அறிவுரைகள் எல்லாம் தான், நான் இப்ப வாழும் வாழ்க்கையைத் தந்திச்சு சார்.   இது ஒரு சின்ன குரு தட்சிணைனு நினைச்சுக்கங்க! கண்டிப்பா நானும் என் குடும்பத்தோட உங்க வீட்டுக்கு வருவேன். எங்க வீட்டுக்கு நீங்களும் வரணும் சார்பஸ் புறப்படப் போகுது.........சார், உடம்ப பாத்துக்கங்கஇதுதான் என் மொபைல் நம்பர் சார்.   என்ன உதவி வேணும்னாலும் என்னைக் கூப்பிடுங்க.  நான் வரேன் சார்


தான் ஆசிரியராக இருந்ததற்கு மிகவும் பெருமை அடைந்தார். சந்தோஷமடைந்தார். படிப்பு சரியாக இல்லாமல் போனாலும் நல்ல மனிதனாக வாழும் சீனிவாசனை நினைத்து சந்தோஷமும், பெருமையும் அடைந்தார்.  என்றோ தான் சொன்ன சிறு அறிவரைகள் ஒரு மாணவனை, நல்ல மனிதனாக மாற்றியிருப்பதும், இப்போது அதே மாணவன் இந்த இக்கட்டான நிலைமையில் தன் அறிவுரையை நினைவு கூர்ந்து, குரு தட்சிணை என்ற பெயரில் உதவியதையும் நினைத்து மிகவும் மகிழ்வுற்றார். அவனுக்காக இறைவனிடம் வேண்டி, மனதில் வாழ்த்தினார்!  பஸ்ஸும் ஒரு நல்ல ஆசிரியரைச் சுமந்து புறப்பட்டது.