சனி, 8 மார்ச், 2014

I can’t agree with you....விஷ்ணு நாராயணன் நம்பூதிரி ஸார் மன்னிக்கவும்- 2

சென்ற இடுகையின் தொடர்ச்சி.....

     திராவிட மரபில் வந்த, தெலுங்கிற்கும், கன்னடத்திற்கும், மலையாளத்திற்கும், வட மொழி ஆதிக்கம், அந்த தேசத்தை ஆண்ட மன்னர்களின் வடமொழி பக்தியாலும், ஆர்வத்தாலும் ஏற்பட்ட போது, தமிழக மக்களும், மன்னர்களும் ஒன்று சேர வட மொழியை அண்டவிடாமல் செய்ததால்தான், நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது போல் தமிழ் "திராவிட முத்தச்சியாக" (திராவிடப் பாட்டி)இப்போதும் தென்னகத்தில் வலம் வருகிறது.  ஆனால், கேரளம், மலையாளத்தை விட சமஸ்கிருத்த்தைப் போற்றுகிறது. அதனால்தான், மலையாளிகள் மலையாளப் பல்கலைக்கழகத்திற்குப் பதிலாகக், காலடியிலுள்ள சமஸ்கிருத பல்கலைக்கழகத்தைத்தான் முதலில் போராடிப் பெற்றனர்.
மார்த்தாண்ட வர்மா

18ஆம் நூற்றாண்டில், திருவிதாங்கூரை ஆண்ட ஸ்ரீபத்மநாபதாஸனான மன்னர் மார்த்தாண்ட வர்மா, கேரளத்தில் பழைமைப் பொக்கிஷங்களாம் ஓலைச் சுவடிகளை எல்லாம் குழி தோண்டிப் புதைத்தால் உயர்ந்தெழுமோ என்ற பயத்தால் தீக்கிரையாக்கிவிட்டார்.  
நாளந்தா                                           தட்சசீலா 








அப்படி, வட இந்தியாவில் சுல்தான்கள், நாளந்தா மற்றும் தட்சசீலா பல்கலைக்கழகங்களைத் தீக்கிரையாக்கியதற்குச் சமமான ஒரு கொடுமையைத் தெற்கே திருவிதாங்கூரில் மார்த்தாண்டன், தான் படையோட்டம் நடத்திக் கைபற்றிய ஓலைகளை எல்லாம் தீக்கிரையாக்கி செய்திருக்கிறார். எப்படியோ, அவர் கவர்ந்தெடுத்த நவரத்தினங்கள், ஆபரணங்கள், உலோகச் சிலைகள் எல்லாவற்றையும் ஏழுமலையானுக்குச் சமர்ப்பிக்க  முடியாததால் (ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் ஆங்கிலேயர்கள் அறிந்தால் ஆபத்து என்பதால் பயந்து வெளியே காண்பிக்காமல் பாதுகாத்திருக்கிறார்) அனந்தசயனனின் அடியே உள்ள அறைகளில் அது இப்போதும் அடைபட்டுக் கிடக்கிறது. அதன்பின் புதியதோர் விதியை (புதிய கேரள வரலாறு) மனுஸ்ம்ருதியை ஆதாரமாகக் கொண்டு எழுதி வைத்திருக்கிறார்.  எனவே, அவர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதிய கேரள சரித்திரத்தில், கேரள மக்கள் ஸம்ஸ்க்ருதத்தைத் தான் பேசியிருந்தார்கள்.  இடையே, சோழ, பாண்டிய மன்னர்கள் வந்து தமிழைத் திணித்துவிட்டார்கள் என்றெல்லாம் எழுதியிருக்க வாய்ப்புண்டு.  250 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கேரள மற்றும், மலையாள மொழி வரலாற்றை பின் பற்றி வாதித்ததால்தான் தெலுங்கிற்கும், கன்னட மொழிக்கும் எளிதாகக் கிடைத்த பழம்பெருமை (க்ளாசிக்கல்) மொழிப் பதவி மலையாளத்திற்குக் கிடைக்காமல் போனது.  அவர்கள் எல்லாம் அவர்களது மொழிகளாகிய தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளைத் திராவிட மொழிகள் என்று வாதித்த போது, மலையாளிகள் சமஸ்கிருதத்தின் வாலைப் பிடித்து தொங்கியதால்தான் பழம்பெருமை (க்ளாசிக்கல்) பதவி மலையாளத்திற்குக் கிடைக்கவில்லை.

சும்மா சொல்லக் கூடாது ஸார்! உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு.  அதனால்தான் ஹிந்தி மொழியிலுள்ள “கித்னா வையும் தமிழில் உள்ள “எத்தனையையும்”  மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் போட்டு தமிழும் இந்தியும் வேத மொழியாம் சமஸ்க்ருதத்தின் பிள்ளைகள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள்.  அதுமட்டுமா, ஒன்று வடக்கே கங்கை நதிக்கரையில் மகத மொழியாகவும், மற்றொன்று தாமிரபரணி நதிக்கரையில் திராவிட மொழியாகவும் வளர்ந்தது என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்.  போதாததற்கு, திராவிடர்களின் இறைவனான(?!) சிவனைப் போற்றி யஜுர்வேதத்தில் நீண்ட ஒரு தோத்திரம் கூட உண்டு என்று அதிசயப்பட்டிருக்கிறீர்கள். இதில் அதிசயப்பட ஒன்றுமில்லையே!  A.D. 1400 ல் இமயம் முதல் குமரி வரை வாய்மொழியாக வழக்கில் இருந்தவையும், பல மொழிகளில் எழுதப்பட்ட ஒலைச் சுவடிகளில் இருந்த, சித்தர்கள் அருளிய வேதங்களும், மந்திரங்களும், புராணங்களும் சமஸ்க்ருதத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  அப்படியெல்லாம் இல்லை என்று சொல்பவர்களது சத்தம் பெரிதாக இருப்பதால் இந்த உண்மை அதிகமான ஆட்களின் செவியில் விழுவதில்லை.  இதுபோன்ற ஏராளமான உண்மைகள் பொதுமக்கள் காதில் விழுவதில்லை.  விழுவதே இல்லை என்று சொல்வதை விட விழ அனுமதிக்கப்படுவதே இல்லை என்பதுதான் உண்மை. 

1938ல் மனுஸ்ம்ருதியைத் தீக்கிரையாக்கிய டாக்டர் அம்பேத்கார் ஏன் அப்படிச் செய்தார் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்?  அதே போல் கேரளம் ஒரு (அன்று திரு-கொச்சி ராஜ்ஜியங்கள்) பிராந்தாலயம் (மனநிலை சரியில்லாதவர்கள் வசிக்கும் இடம்) என்று சுவாமி விவேகானந்தர் ஏன் சொன்னார் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அது மட்டுமா? கொடுங்கல்லூரில் கோவிலுக்குள்ளே போக பிராமணர் அல்லாத ஒரே காரணத்திற்காக அனுமதிக்கப்படாமல், அவர் 2 நாட்கள் மரத்தடியில் தியானத்திலிருந்தது எத்தனை பேருக்குத் தெரியும்? எனவே கேரளத்தைப் பொறுத்தமட்டில் அவருக்கு மிகவும் வருத்தம் தந்தது, மக்களை சாதியின் பெயரால் இறைவனிடமிருந்து அகற்றியதுதான். அதனால்தான் சுவாமி விவேகான்ந்தர், “ஒரு காலத்தில் சாதியின் பெயரால் ம்னிதனை இறைவனிடமிருந்து அகற்றிய தவறைச் செய்தவர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் என்றெல்லாம் சொல்ல வேண்டாம். அப்படி யாரும் எங்கிருந்தும் வரவில்லை.  நூற்றாண்டுகளுக்கு முன் இங்கிருந்த சில லாப நோக்குள்ள மனிதர்களின் செயல்தான் அது என்று சொல்லியிருக்கிறார்.  அதை நீங்கள் உங்களுக்குச் சாதகமாக எடுத்து உங்கள் கட்டுரையில் சேர்த்து, “திராவிடர்கள் என்பது “கால்ட்வெல்லின் கற்பனை என்று சொல்லி வாதிக்கிறீர்கள்.  அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், அதை நீங்கள் சொல்வதால் கேரள மக்களில் பெரும்பான்மையோர் அப்படியே நம்ப வாய்ப்புண்டு.

திரு எம்.டி வாசுதேவன் நாயர்

மட்டுமல்ல, கேரளத்தில் எல்லோராலும் போற்றப்படும் எழுத்தாளர்கள் இப்படி முன்னுக்குப் பின் முரணாக ஏதாவது எழுதி மலையாளிகளின் மனதைக் குழப்புவது வழக்கமாகிவிட்டது. உதாரணமாகத், திரு எம்.டி வாசுதேவன் நாயரை எடுத்துக் கொள்ளலாம்.  ஞானபீடம் விருது (1995) பெற்ற எழுத்து வல்லுநர்.  ஏராளமான நல்ல புத்தகங்களுக்கு உயிர்தந்தவர்.  இப்போதும் மலையாள இலக்கியத்திலும் ஏன் திரைப்படங்களில் கூட அவரது தாக்கம் இருக்கிறது.  எவ்வளவு எளிதாக அவர் “உன்னியார்ச்ச எனும் பெண்புலியை திருட்டுப் பூனையாக்கி, குள்ளநரியாம் ‘சந்துவை (சதிகாரச் சந்து) “பரியாக்கி (குதிரை) புரட்சியே செய்திருக்கிறார். 


அவர் அப்படியெல்லாம் எழுதியதற்கான காரணம் கண்டிப்பாக “உன்னியார்ச்சஒரு தீயாப் பெண் ஆனதுதான் என்று அந்த “ஒரு வடக்கன் வீரகதா என்னும் திரைப்படம் வெளிவந்த போது பலரும் குற்றம் சாட்டியதை நான் முதலில் நம்பவில்லை.  பிறகுதான் எனக்கு அதில் உண்மை இருந்தது தெரியவந்தது – வருடங்களுக்குப் பிறகு அதற்குக் காரணமான வேறு ஒரு சம்பவத்தைப் பற்றி தெரியவந்த போது.  கோகுலம் கோபாலன் எனும் வடகரையைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் இயக்குனர் ஹரிஹரனை அணுகி, தான் வடக்கன் வீர நாயகர்களைப் பற்றி ஒரு திரைப்படம் எடுக்க விரும்புவதாகக் கூற, அவர் உடனே எம்.டி. யைப் போய் பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். (வடக்கன் வீர நாயகர்களில் பெரும்பான்மையானவர்கள் ‘தீயா குலத்தைச் சேர்ந்தவர்கள். தீயர்கள் என்றதும் கேரளத்தில் தீயவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு சாதியே வைத்திருக்கிறார்களோ என்று குழம்ப வேண்டாம்.  250 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கேரளவரலாற்றில், முற்பட்டவர்களையும், நாட்டரசர்கள் எனும் குட்டி ஜமீன்தார்களையும் அனுசரிக்காதவர்கள், ஒன்று இஸ்லாம் அல்லது கிறித்தவ மதத்திற்கு விரட்டப்பட்டிருக்கிறார்கள்.  அப்படிப் போகாமல் “எங்களுக்கு எங்கள் வழி என்று சிவனே என்று வாழ்ந்தவர்களை எல்லாம், தெற்கே ஈழ நாட்டிலிருந்து (இலங்கை) வந்தவர்கள் என்று முத்திரையே குத்திவிட்டார்கள்.  இப்படிக் கேரளத்தில் உள்ள 24% பேர் இலங்கையிலிருந்து வந்தவர்களாம். எப்படி போகிறது கதை?!). எம்.டி யோ தீயர்களைப் போற்றி எழுதுவது எப்படி என்று குழம்பி “அதெல்லாம் வேண்டாம். பழசிராஜாவைப் பற்றி எடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். 


கோபாலன் சேட்டனும் அதற்கு சம்மதித்து அப்படி வெளிவந்த வெற்றிப் படம் தான் மம்முட்டியுடன் சரத்குமார் நடித்த பழசிராஜா. 

இப்படி வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு கடிவாளம் இடும் திறன் படைத்தவர்கள் எழுதுவது கேரளத்தில் வேதவாக்காவது இயல்புதானே1 அப்படி நீங்கள் எழுதியது (மாத்ருபூமியில் இரு பகுதிகளாக) வேதவாக்காக மாறக்கூடிய வாய்ப்புண்டு. நீங்கள் சொல்வது போல், கால்ட்வெல் இந்தியாவுக்கு மிக அதிக அளவில் துரோகம் செய்த ஒரு துரோகி அல்ல, "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.  தர்மம் மறுபடியும் வெல்லும்" எனும் உண்மையை உலகிற்கு உணர்த்திய உத்தமர் என்றே சொல்ல வேண்டும்..  அதற்காகத்தான் நான் என் கருத்தை இங்கே குறிப்பிடுகின்றேன். ஓரிருவராவது உண்மை என்ன என்று அறிய முயலலாமே!

எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.

என்பதுதானே உண்மை!

பின் குறிப்பு. ஸார், நாராயணராவ், கிருஷ்ணவாரியர் போன்ற ம்ண் குதிரையை நம்பி இனியேனும் ஆற்றில் இறங்காமல் கவனமாக இருக்க வேண்டுஎன்பதே என் வேண்டுகோள்.!

இரு பகுதிகளாக வந்த இந்த இடுகைக்கு ஏற்றத் தகவல்களுடன் வந்த ஒரு சில பின்னூட்டங்களை இந்த இடுகையுடன் இணைக்க விரும்பி இணைத்துள்ளோம். ஒரு வேளை, இதை வாசிப்பவர்களுக்கு பயன் தரலாம் என்ற நோக்குடன்.


மிகச் சிறந்த பதிவு ஐயா. திராவிட இனம் திராவிட மொழி என்பதையே எதோ கால்டுவேல் தான் உருவாக்கியது போன்ற பிரமையை இந்துத்வாவாதிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இந்தியா பல்லினம் ஐக்கியப்பட்ட சமூகம் என்பதில் ஐயமில்லை, இனவகையாக நோக்கினால் சுத்த ஆரியன் சுத்த திராவிடன் இங்கில்லை. ஆனாலும் இந்தியாவை மொழி கலாச்சாரம் வாழ்வியல் எனப் பிரித்தால் , இந்தியாவை பல பாகங்களாக பிரிக்கலாம். குறிப்பாக தென்னிந்தியா ஏனைய இந்திய பகுதியை விட மொழி, கலாச்சாரம் மற்றும் வாழ்வியல்களில் தனித்துவமாக இருக்கின்றது என்பது தெள்ளத் தெளிவு. குறிப்பாக கால்டுவேல் இந்தோ-ஆரிய மொழிகளில் இருந்து தென்னிந்திய மொழிகளை வேறுபட்டு உள்ளதை அறிந்து, இம் மொழிக் குடும்பத்துக்கு தனி பெயரிட்டார், அதுவும் தென்னிந்தியாவை குறிக்க ஆரியர்கள் பயன்படுத்திய திராவிட என்ற சொல்லை பயன்படுத்தினார். அது போக திராவிட மொழி பேசும் பழங்குடி இனங்களின் உடல் அளவுகள் மற்றும் மரபணுக்களை ஆராய்ந்த மானிட ஆய்வாளர்கள், இம் மக்கள் ஆஸ்திரோ ஆசியாடிக் கறுப்பின மக்களோடு பெரிதும் தொடர்பு பட்டு உள்ளதையும், மத்திய தரைக்கடல் மக்களோடு கலப்புற்று இருப்பதையும் மண்டை ஓட்டு அளவு, மூக்கின் அளவு மற்றும் மரபணுக்களை கொண்டு எடுத்துக் காட்டியுள்ளனர். தென்னிந்திய மக்களின் உணவு, உடை, கலப்பு நிறங்கள், முக்கியமாய் மொழி என்பவை தனித்துவமாய் உள்ளன என்பதை வெளிப்படையாகவே நாம் அறிவோம்.. இந்த வேறுபாடுகளைத் தான் திராவிட என்ற பொதுப் பெயரால் அழைக்கின்றோம்..! இதைக் கூட அறியாத சிலர் எதோ தாமே பேரறிஞர் போல எழுதியுள்ளமை ஏமாற்றம் அளிக்கின்றது..! குறிப்பாக வடமொழி பாசம் கொண்ட சிலர் தென்னிந்தியத்தை குறைத்துக் காட்ட இவ்வாறு செயல்படுவது ஏளனத்துக்குறியது.

நான் ஒரு முறை என் அண்ணாரவி (தமிழ்) சாரிடம் ஏன் சார் சேரநாடுங்குறது தமிழகத்தின் ஒரு பகுதினா ஒரு காலத்தில் கேரளா வே தமிழகத்தின் ஒரு பகுதிதானே அப்டின்னு கேட்டேன்.அப்போ நான் டென்த் படிச்சேன்.ரவி சார் இப்புடி நம்ம ஆளுங்க பேசிப்பேசிதான் நம்பூதிரிகள் எல்லாம் டென்சன் ஆகுறாங்கனு சொன்னார். இப்போ தான் புரியுது. ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ! மொழி ஆசிரியர் பொறுப்புணர்ந்து நீங்கள் வெளியிட்டிருக்கும் இப்பதிவிற்கு மற்றொரு மொழி ஆசிரியரின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!

சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன் மிக்க நன்றி!

சேரநாடு, மலைநாடு என்பது பண்டைய தமிழ் நாட்டின் ஒரு பாகம்தான்....கடலால் சூழப்பட்ட இந்தியாவின் தென்கோடியை சேர சோழ பாண்டியர்கள்தான் ஆண்டிருக்கிறார்கள். தென்பாகத்தை பாண்டியனும், வட பகுதியைச் சோழனும், மேற்குப் பகுதியை சேரனும் ஆண்டிருந்திருக்கிறார்கள்! நாளடைவில் மேற்கு பகுதி பல சிற்றர்சுகளாகப் பிரிந்திருக்கலாம்.
சுந்தரர் கொடுங்கல்லூரை ஆண்ட அரசரிடம் கோயில் கட்டுவதற்காக நிதி வசூலித்ததாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அதே போல் 12 அம் நூற்றாண்டில் எல்லாம் கேரளாவின் வட பகுதி சோழர்கள் ஆண்டிருந்தார்கள் என்பதற்கான சான்று கண்ணூர் தளிப்பரம்பில் அன்று புதுப்பிக்கப்பட்ட ராஜராஜேஸ்வர ஆலயமும், பெருஞ்ஜெல்லூர் செப்பேடும்தான்.
பெருஞ்ஜெல்லூர் செப்பேடு A.D.1145 கேரளாவில் முதன் முதலில் குடியேறிய பிராமணர்கள் குழுவாகிய பெருன்ஜெல்லூர் மற்றும் த்ரிச்சம்பரம் குழுக்களைப் பற்றியதுதான். இந்தப் பிராமணக் குழுக்களிடமிருந்து புகல்மலைச்சேரி சுவரன் தேவன் என்பவர், 707 ஆனைஅச்சு (அன்றைய நாணயம்-பொற்காசு) கடன் வாங்கியதாகவும் அதற்குப் பணயமாக பூமியும், வட்டியும் கொடுத்தது பற்றி உள்ள விவரங்கள்தான் அந்த செப்பேடில் உள்ளது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது,,,தமிழ் மன்னர்களாகிய சோழர்களும், பாண்டியர்களும் வட கேரளத்தை, 12ஆம் நூற்றாண்டிலும், அதற்கு முன்பும் ஆண்டிருந்தார்கள் என்பதும் 12ஆம் நூற்றாண்டில்தான் பிராமணர்களின் முதல் குடியேற்றம் நடந்தது என்பதும்தான்....மட்டுமல்ல ஆங்கில மொழிக்கு எப்படி ஆங்கிலோ -ஸாக்ஸன் (anglo-saxon ) மொழி ஆதாரமாகியதோ அது போலத்தான் மலையாள மொழிக்கு தமிழும். தமிழிலிருது உயிர் பெற்றதுதான் மலையாளம்! ஆங்கிலத்தில் ஃப்ரென்ஞ்சு வார்த்தைகள் கலந்தது போல் மலையாளத்திலும் சமஸ்க்ருத வார்த்தைகளும் கலந்திருக்கிறது.

MARIAPPAN RAVINDRAN ravindrashriram@yahoo.com

Mar 8 (1 day ago)
to me
Dear Brother Thulasidharan,

I have every right to call you as my brother being both of us are tamilians. I am a regular reader of your blogs in Tamilmanam.net. I have gone through your article 


Vishnu Narayanan Namboothiri Sir, I'm Sorry, I can't agree with you..... 1and 2

Really what you have written is 100% correct.These Malayali people are very much hesitating to accept their real mother Tamil. Instead they want to express themselves that they were born to Sanskrit infact it is not as such. It has been proved and established lot of times. These are all just because of Vishnu Narayanan Namboothiri and Krishna varior people like that. These people are perverted by birth itself (Vivekandhar has confirmed the same as told in your article). I have gone through lot of articles about the origin of Malayalam language and Malayalis (including the story of ETTU VEETTU PILLAIMAR). As per your article if a king has done such an atrocity like burning the ancient records in palmleaves. we can very well judge the attitude of these people. Really you have established very strongly (beyond doubt) at the last paragraph of your first part article about the specialities of Tamil.

Pl find a way to make these perverted people to go through your article and understand the real fact. Even then if they refuse to accept the fact, they will again prove themselves that they are perverted.

Really Our Mother Tongue "TAMIL" gives us strength to argue in such a good way.

Thanks a lot.

Enrum Anbudan,

M.Ravindran
09442738002
Madurai.

Thulasidharan thillaiakathu thulasithillaiakathu@gmail.com

6:48 PM (17 hours ago)
to MARIAPPAN
Dear Brother,   Thank you very much for your reading and for the
valuable comments and suggestions. Truth may be hidden for
sometime,but not forever,it will come out oneday.So I believe truth
lives in the mindS  and thoughts of the people like us.Its our duty to
sow the seeds of truth in the minds of as many people as we can,so
that it may  live forever.  Thanks.         With regards....
Thulasidharan.v.Thillaiakathu.


வெள்ளி, 7 மார்ச், 2014

Vishnu Narayanan Namboothiri Sir, I'm Sorry, I can't agree with you..... 1


மதிப்பிற்குரிய, விஷ்ணு நாராயணன் நம்பூதிரி ஸார், மன்னிக்க!

திரு.விஷ்ணு நாராயணன் நம்பூதிரி 

திரு. கிருஷ்ணவாரியர்

     தாங்கள் ஸ்வாமி விவேகானந்தரின் வாக்குகளை மேற்கோள் காட்டி Comparative Grammar of Dravidian Linguistics”, எனும் ஆராய்ச்சிப் புத்தகம் எழுதிய ராபர்ட் கால்ட்வெல் (Robert Caldwell - http://en.wikipedia.org/wiki/Robert_Caldwell) எனும் மனிதாபிமானமுள்ள ஒரு அறிஞரை துரோகி என்று சொல்லியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  இப்படிச் சொல்ல உங்களுக்குத் தைரியம் தந்தது என்று நீங்களே உங்கள் கட்டுரையில் (மாத்ருபூமி செய்தித்தாளின் வாராந்திர ஞாயிறு மலரில்-ஜனவரி 16 & 23) சொல்லியிருக்கும், திரு. C. நாராயணராவ் மற்றும் திரு N.V. கிருஷ்ணவாரியர் போன்றவர்கள் எழுதியவையும், சொல்லியவையும்தான் ஆதாரம் என்றதால், அதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  காரணம், திரு நாராயணராவ், “சுத்தமான திராவிட மொழி என்று ஒன்று இருக்குமேயானால் அது இந்தி மொழி அன்றி தமிழல்ல என்றெல்லாம் கண்மூடித்தனமாய் சொன்னதாலும், இப்படிச் சொல்லும் அவரது புத்தகத்தை வாசித்ததும், திரு கிருஷ்ணவாரியர் ஆவேசத்துடன் (நீங்கள் சொன்னதுதான்), “இந்தியாவுக்கு மிக அதிக அளவில் துரோகம் செய்தது ராபர்ட் கால்ட்வெல் தான், என்று சொன்னதும்தான்.

     இவர்கள் இருவரும் தமிழர்கள் அல்ல. மட்டுமல்ல, சமஸ்கிருதத்தை உயிருக்குயிராக நேசிப்பவர்கள் போல் தெரிகிறது. அதனால் திராவிடநாடு, திராவிட மொழி என்றெல்லாம் கேட்பதே இவர்களுக்கு எரிச்சல் மூட்டலாம்.  அதனால், அவர்கள் அப்படித்தானே சொல்வார்கள்! 

ராபர்ட் கால்ட்வெல்

மாக்ஸ்முல்லர்                            மோனியர் வில்லியம்ஸ்
மோனியர் வில்லியம்ஸ்

லார்ட்மெக்காலே

ஆனால் கால்ட்வெல், மாக்ஸ்முல்லர், லார்ட்மெக்காலே, மோனியர் வில்லியம்ஸ் போன்றவர்கள் அப்படி அல்ல.  அவர்களுக்குத் திராவிட மொழிகள் தாய் மொழி அல்லாததால், திராவிட மொழிகளைத் தலையில் தூக்கி வைத்து ஆடி, சமஸ்கிருதத்தைக் கீழே போட்டு மிதிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லையே!  இறைவன் பெயரால் இந்தியாவில் மட்டும் அவர்கள் கண்ட சில அநீதிகள் “ஏன் என்ற சிந்தனை, கால்ட்வெல் போன்றவர்களைச் சில ஆராய்சிகள் மேற்கொள்ள வைத்திருக்கலாம்.  அப்படி கால்ட்வெல் அறிந்ததைப் புத்தக வடிவில் அவர் இப்படிக் கொண்டு வந்திருக்கலாம்.

முல்லைப் பெரியாறு அணை             கர்னல் ஜான் பென்னிகுயிக்













ஜெனரல் டையர்

     






மனிதாபிமானமிக்க ஏராளமான இங்கிலாந்து நாட்டினர் இங்கு வாழ்ந்திருக்கின்றார்கள்.  முல்லைப் பெரியார் அணை கட்ட (1887-1895) (அன்றைய மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் நல்லெண்ணத்துடன்) பிரிட்டிஷ் அரசைக் கட்டாயப்படுத்தி, அணை கட்டி, பாதி நிலையில் பணப்பற்றாக்குறை காரணமாக நிறுத்த வேண்டிய நிலை வந்த போது, தன் சொந்த சொத்துக்களை எல்லாம் விற்று, 1895 ல் அணையைக் கட்டி முடித்த அந்த மனிதருள் மாணிக்கமாம் கர்னல் ஜான் பென்னிகுயிக் போன்றவர்களை நாம் இங்கு நினைவு கூற வேண்டும்.  இது போன்று நல்லவர்களுக்கிடையில் ஜெனரல் டையர் போன்ற வெறுக்கப்பட வேண்டியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். எனவே, ஆரியர்கள், திராவிடர்கள் என்று சொல்லி இந்தியர்களைப் பிரிக்கப் பார்க்கிறார்கள் என்று கால்ட்வெல் போன்றவர்களைக் குற்றம் சொல்லும், இந்தியர்களை ஒன்றாய் காண விரும்பும் இம்மனிதர்கள், பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று நான்காய் மனித குலத்தைப் பிரித்தெறிந்த அநீதியையும், பெண்களுக்கு சம உரிமை இல்லை என்பதை பறைசாற்றும் மனுஸ்ம்ருதி போன்றவற்றையும், ஏன் அப்படியே விழுங்குகிறார்கள் என்பதுதான் எனக்கு விளங்காத புதிர்!

     இங்குதான் ஸார், 32 வருடம் கல்லூரிகளில் ஆங்கில இலக்கியம் கற்பித்த, மலையாள கவிதை உலகில் உங்களுக்கெனத் தனி இடத்தைத் தக்க வைத்துள்ள, ஏராளமான விருதுகள் பெற்ற உங்களுடன் எனக்கு முரண்பாடு.  'நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என வாதித்த நக்கீரன் போன்றவர்களின் வாக்குகள் என் சிந்தனைகளில் வளர்ந்து மரமாய் நிற்பதால், என்னால் இதையெல்லாம் கேட்கும் போது மௌனம் சாதிக்க முடியவில்லை.

     பிரிட்டிஷ்காரர்கள், தமிழர்கள், மலையாளிகள், கன்னடியர் மற்றும் தெலுங்கர்களை “திராவிடர்கள் என்று சொன்னதால் மட்டும், சொல்லிய பிறகு “வாருங்கள் நாம் எல்லோரும் திராவிடர்கள் என்று ஆங்கிலேயர்கள் சொல்லிவிட்டார்கள்.  அதனால், நாம் இனி திராவிடர்களாக வாழ்வோம் என்று எவரும் தீர்மானிக்கவில்லை. தென்னிந்தியாவில் உள்ளவர்கள் மொழி, உருவம், மற்றும் பண்பாடு போன்றவற்றில், வட இந்தியர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே! வட இந்தியாவில் ராஜ்ஸ்தானியர்களுக்கும், குஜராத்தியர்களுக்கும் வித்தியாசம் எப்படியோ, அது போன்ற வித்தியாசங்கள்தான், ஒரு தமிழனுக்கும், மலையாளிக்கும் உள்ளது என்பது ஒவ்வொரு வட இந்தியனுக்கும், தென்னிந்தியனுக்கும் தெரிந்த ஒன்றே! 

இந்தியாவில் மிகவும் தொன்மையான, மற்ற மொழிகள் மற்றும் பண்பாடுகளின் தாக்கம் அதிகம் இல்லாமல், தனித் தன்மையுள்ள ஒரு பண்பாடு தென்னிந்தியர்களின் பண்பாடுதான் என்றும், அதில் வட இந்தியப் பண்பாடும், வடமொழி ஆதிக்கம் ஏதும் ஏற்படாமல், தன் தனித்தன்மையை முன்பு போல் பாதுகாக்கும் பகுதிதான் தமிழ்நாடு என்றும் ஒவ்வொரு இந்தியனுக்கும் (வரலாற்று அறிவுள்ள) தெரிந்ததுதானே!  அதைக் கண்டும், கேட்டும், ஆராய்ந்தும், அறிந்த ஆங்கிலேயர்கள், அதை எழுதவும், உலகுக்கு அறிவிக்கவும் செய்தார்கள் என்பதுதான் உண்மையில் நடந்த சம்பவம்.  எனவே, வெள்ளையர்கள் நம்மைப் பிரிக்கப் பார்த்து அதில் வெற்றி கொண்டார்கள் என்பதை விட, நான் நம்புவது மனுஸ்ம்ருதி போன்றவைகள்தான், இந்தியர்களைச் சாதி அடிப்படையில் பிரித்து, இந்தியர்களைச் சின்னாபின்னமாக்கியது என்பதையே!. எப்படியோ, நாம் இருவரும் ஒரு விஷயத்தில் ஒத்துப் போகிறோம்,  இந்தியர்களைப் பிரித்ததையும், அவர்களை ஒருவருக்கொருவர் பகைவர்களாக்க நடந்த முயற்சியையும் நாம் இருவரும் எதிர்க்கிறோம்.

இருப்பினும், திராவிடர்கள் என்ற ஒரு பிரிவினரே இந்தியாவில் இல்லை, அது வெறும் கற்பனை, கட்டுக்கதை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  தமிழகத்தில், ஆட்சிக்கு மாறி மாறி வரும் இரு கட்சிகளும் (திமுக, அதிமுக) திராவிடர்களின் முன்னேற்றம் கருதி உருவாக்கப்பட்டவைதான்.  ஒவ்வொரு தமிழனும் தான் இந்தியன் என்றும், இந்தியர்களில் திராவிடன் என்றும், திராவிடர்களில் தமிழன் என்றும் தான் பெருமையோடும் சொல்லிக் கொள்கிறான்.  அதற்கு முக்கியக் காரணம், அவனுக்கு வேதங்கள், மனுஸ்ம்ருதி, பகவத்கீதை போன்றவற்றை வாசிக்காமலேயே இறைவனையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் அறிந்து வாழ உதவும் ஏராளமான நூல்கள் தமிழில் உள்ளதுதான்.  சித்தர்களும், யோகிகளும் அருளிய திருமந்திரமும், தேவாரமும், திருவாசகமும் அவனுக்கு இறைவனை அறிய உதவியது போல், திருக்குறள், ஆத்திச்சூடி, இன்னாநாற்பது, இனியவை நாற்பது போன்றவை நல்வாழ்வு வாழ உதவுவதால்தான்.  நற்றிணையும், குறுந்தொகையும், அகநானூறும், புறநானூறும் அவனுக்கு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நல்வாழ்வு வாழ்ந்த தன் முன்னோர்களைப் பற்றி அறிய உதவி, தான் “கல்தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றி வளர்ந்த மூத்தக்குடித் தமிழன்”  மரபில் வழி வந்தோன் என்று பெருமையுடன் சொல்ல வைக்கிறது.  தமிழ் மரபையும், தமிழையும் உயிருக்கு மேலாக மதிப்பதால்தான், “தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று சொல்லிலும், குமரிமுனையில் வள்ளுவனுக்கு சிலைவைத்து செயலிலும் காட்டியிருக்கிறான் தமிழன். (வள்ளுவனுக்குச் சிலையெடுத்தக் கலைஞர் இங்கு 970 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராஜராஜ சோழனுக்குச் சமமாகிறார்).


இதன் தொடர்ச்சி நளைய இடுகையில் முடியும்.........   

செவ்வாய், 4 மார்ச், 2014

ஈஸ்வர அல்லா தேரே நாம்..........சிவ சேவை செய்யும் வசீம் குலாம் முகம்மது

          குல்மார்க் சிவன் கோயில்

         இறைவனுக்காகவும் , மதத்திற்காகவும், மனிதனை மனிதன் கொன்று குவிக்கும் இக் காலகட்டத்தில், கேட்கவேத் தித்திக்கும் ஒரு சம்பவம்.  கூடவே உண்டாகும் பயத்தையும் தவிர்க்க முடியவில்லை.  தித்திப்பது ஏன் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்.  தீவிரவாதிகளுக்குப் பயந்து பூசாரிகள் எல்லாம் ஓடிப்போன காஷ்மீரில், குல்மார்க் என்னும் இடத்திலுள்ள சிவாலயத்தில் பூஜை செய்யவும், கோயிலைத் திறந்து வைத்து பக்தர்களுக்கு சிவதரிசனம் கிடைக்கப் பெற உதவவும், ஆளில்லாத நிலை ஏற்பட்டு, அக் கோயில் நீண்டகாலம் அடைபட்டுக் கிடந்தது.

ராஜா ஹரிசிங்க்


          "ஈஸ்வர அல்லா தேரே நாம் (எல்லாம் வல்ல இறைவா, ஈஸ்வரன் என்பதும் அல்லாஹ் என்பதும் உன் பெயர்தானே!) என்ற உண்மையை உணர்ந்ததால் வசீமின் தாத்தா கோயிலைத் திறந்து, பக்தர்கள் சிவபிரானை வழிபட உதவ முன்வந்தார்.  1915 ல், காஷ்மீரை ஆண்ட கடைசி மன்னரான ஹரிசிங்கின் மனைவி மோஹினி பாய் சிசோடியாதான் "பூக்களின் பாதை" எனும் அர்த்தம் கொண்ட குல்மார்க் என்னும் இடத்திலுள்ள இந்த சிவன் கோயிலைக் கட்டியவர்.  1947 க்குப் பின் காஷ்மீரில் பிரிவு வாதப் பிரச்சினைகள் தொடங்கியதால், கோயில் பராமரிப்பு மிகவும் சிரமம் மிக்கதாக மாறியது.  அச் சமயத்தில்தான் வசீமின் தாத்தா, கோயிலைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் முன்வந்தார்.  அதன் பின் வசீமின் தந்தை முகமதுவும், தன் தந்தையின் பாதையைத் தொடர்ந்து, சிவ சேவை செய்ய முன்வந்தார்.  இடையே தீவிரவாதிகளால் முகம்மதுவுக்கு ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவர் தம் கடைமைகளைச் செய்வதிலிருந்து பின்வாங்கவில்லை.


         24 வயதான, 3 ஆம் தலைமுறையச் சேர்ந்த வசீம், தெமோகா எனும் தன் கிராமத்திலிருந்து, தினமும் அதிகாலை குல்மார்க் வந்து, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குச் சிவ தரிசனம் கிடைக்கச் செய்வதோடு, காலையிலும், மாலையிலும், சிவபகவானுக்குத் தீபாராதனையும் செய்கிறார்.  கோயிலின் பராமரிப்பு, ராஜா ஹரிசிங்கின் மகனான கரண்சிங்கின் தலைமையில் இயங்கும் "தர்மார்த் ட்ரஸ்ட்" ஆல் மேற்கொள்ளப்படுவதால் கோயிலைப் பராமரிக்கத் தேவையான உதவிகள் வசீமுக்குக் கிடைக்கிறது.  இந்துக்களும், முஸ்லீம்களும், அயோத்தியிலுள்ள ராமர் கோயிலுக்காக ஆயுதம் ஏந்திப் 'போர்' புரிந்த இந் நாட்டில்தான் இப்படிப்பட்ட சம்பவம்.  அதுவும், தீவிரவாதம் தலைவிரித்தாடும் காஷ்மீரில் நடக்கிறது என்பதை வாசித்ததும் உள்ளம் மகிழ்சியால் துள்ளியது.  மனமெல்லாம் மத்தாப்பு!  மனதில் உண்டாகும் தித்திப்பை விளக்க வார்த்தைகள் கிடைக்காமல் தத்தளிக்கும் நிலை எனக்கு!

          கூடவே தவிர்க்க இயலாத பயமும் உண்டாகத்தான் செய்கிறது.  ஊடகம், மற்றும் முகநூலில், கடந்த சில நாட்களாக நிறைந்து நிற்கும் வசீமை ஆயிரக் கணக்கான மக்கள் மனமார பாராட்டும் போதும், வாழ்த்தும் போதும் வசீம் மற்றும் அவரது குடும்பத்தினரின் நன்மைக்காகப் பிரார்த்திக்கும் போதும், சில மனிதாபிமானமற்ற, மத நோய் பாதித்த மன நோயாளிகளாம் தீவிரவாதிகளின் கண்களில் இச்செய்தி தென்படவும், செவிகளில் இச்செய்தி விழவும் வாய்ப்புண்டு என்பதுதான் அந்தப் பயத்திற்கு காரணம்.  அவர்களால் ஏதேனும் ஆபத்து இந்த மனிதாபிமானமுள்ள, உண்மையான இறையுணர்வு உள்ள வசீமுக்கு ஏற்படுமோ என்ற பயம்தான் மனதில் உண்டாகும் மகிழ்சிக்குத் தடையிடுகிறது.  அப்படி ஏதும் ஏற்படாமல் இருக்க நாம் அனைவரும் ஒன்றாய் இறைவனிடம் வேண்டுவோம்.  நாம் நமக்காகப் பிரார்த்திப்பதை விட மற்றவர்களுக்காகப் பிரார்த்திப்பதற்கு பலன் பன்மடங்கு என்பதால் நாம் எல்லோரும் வசீமுக்கும் அவரது குடும்பத்திற்கும் நன்மை பயக்கவும், இது போன்ற வசீம்களின் எண்ணிக்கை பெருகவும், மதத்தின் பெயரால் மல்லிடுபவர்களின் எண்ணிக்கை குறையவும் வேண்டி பிரார்த்தனை செய்வோம்.  பலன் உண்டாகும்!

இந்த இடுகைக்கு வந்த இரு  நல்ல பின்னூட்டங்கள் அபூர்வமான தகவலுடன்.  நன்றி யோகன், நன்றி அஸ்வின் ஜி!


இதைப் படித்த போது எனக்கு நாதஸ்வர வித்துவான் சேக் சின்ன மௌலானா, செனாய் வித்துவான் உஸ்ரத் பிஸ்மிலா கான் நினைப்பு வந்தது.
சேக் சின்ன மௌலானா திருப்புகழ் வாசித்தால், தனித்துவமான தெய்வீக ஒலி அது.
பிஸ்மிலா கானை காசியில் அவர் இருக்கும் வீடு வசதிக்குறைவாக இருப்பதால், வயது போனதாலும் அவர்
வெளிநாட்டு ரசிகர்கள், தங்களுடன் வந்து கடைசிக் காலத்தைக் குடும்பத்துடன் கழிக்கும் படி கேட்ட போது; பிஸ்மிலா கான் கேட்டாராம், "எல்லாவற்ரையும் தருவதுடன், எனக்கு தினமும் தரிசனம் செய்ய காசி விசுவநாதர் ஆலயத்தயும் கொண்டுவந்து தரமுடியுமா? என்ன? பற்றுதல்.
400 வருட உறவு, அவர் 8 தலைமுறை இக்கோவிலில் சேவகம் செய்துள்ளது.
தெளிந்த பற்று எதிலும் பிரிவைத் தேடாது

Great! I have seen many Muslims maintaining Hindu temples in Kashmir when i visited Amarnath Cave during July 2010. The reasons they say was it belongs to their predecessor of Hindu origin. Hats off.!!!!
I have also mentioned about this in my blog www.vedantavaibhavam.blogspot.in in the series of travellogue on Vaishnodevi and Amarnath Pilgrimage during 2010.

சனி, 1 மார்ச், 2014

உயிரே உன் மதிப்பென்ன?!


     உயிர் என்பது கண்ணுக்குப் புலப்படாத, உணர்வு பூர்வமான, மிகவும் அதிசயமான, அறிவிற்கும் எட்டாத ஒன்று! இந்த உடம்பை உயிர்ப்பித்து, அது எந்த உருவமாக இருந்தாலும், தன் இருப்பிடமாகக் கொண்டது.  இந்த உலகில் வாழும் எந்த ஜீவ ராசியாக இருந்தாலும், நுண்ணுயிரியிலிருந்து ஆறறிவு படைத்த மனிதன் வரை, வெளித் தோற்றம்தான் வேறு அல்லாது அதனுள் இருக்கும் உயிர் எல்லா ஜீவரசிகளுக்கும் ஒன்றுதான். இந்த உயிர் தன் இருப்பிடத்திற்குள் எந்த நொடியில் உருவாகின்றது, அந்த இருப்பிடத்தை விட்டு எந்த நொடியில் பிரியா விடை கொடுக்கின்றது என்பது, எந்த மருத்துவ நிபுணருக்கும், அறிவாளிக்கும், எக்காலத்தும் புலப்படாத விடை, புதிர்தான்! எத்தனை அறிவியல் விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் இதற்கு விளக்கம் இல்லை என்பதுதான் உண்மை!  ஏனென்றால், ஒரு உயிர் உருவாகி, இந்த உலகை எட்டிப் பார்த்து, இந்த உலகம் அதை வரவேற்கும் முன்னரேயே  கூடப் பிரிய வாய்ப்புண்டு!


     உருவாகும்போதே பாதியில் பிரிய வாய்ப்புள்ள உயிர், ஒருவேளை பாதியில் பிரியாமல், பல தடைகளைத் தாண்டி, அந்த உயிர் ஏதோ ஒரு வடிவில், விலங்காகவோ, பறவையாகவோ, பயிராகவோ,  இல்லை ஆறறிவு படைத்த மனிதனாகவோ இந்த உலகை எட்டிப் பார்த்தால், அந்த உயிரின் விலையில்லா மதிப்பை உணர்ந்து, மனதில் கொள்ளத்தானே வேண்டும்?! பொதுவாக, நாம், வாழ்க்கையில் எத்தனைத் துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்தாலும், நம் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புவதில்லைதானே! அபடித்தானே மற்ற உயிர்களும்? இந்த விலை மதிக்கமுடியாத உயிர் இன்று, உலகில், மனிதர்களிடம் அகப்பட்டுக் கொண்டு படாதபாடு படுகின்றதோ?!


     சிலநாட்களுக்கு முன் நான் சீருந்தில் (கார்) சென்று கொண்டிருந்த போது ஒரு பெரிய மேம்பாலத்தில், அது அரைவட்டமாக வளைந்து கீழிறங்கும் பகுதியில் மிகவும் மெதுவாகச் சென்று கொண்டிருந்தேன்.  அந்த அரைவட்டம் கீழிறங்கி பிரதான சாலையோடு இணையும் இடத்தில் நான் இறங்கிக் கொண்டிருந்த போது, என் இரு புறமும் புற்றீசல்கள் போல் இருசக்கர வாகனங்கள் மிக வேகமாக ‘விர் ‘விர் என்று பறந்தன. எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த அவசரம்? இந்த வேகத்தினால் இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்? யாரை வென்று எதை ஜெயிக்கப் போகின்றார்கள்? எதற்காக இந்த விவேகம் இல்லாத வேகம்?  இந்த வேகம் நல்லதல்லவே. அதுவும் சாலை இறங்கும் இடத்தில் பக்கவாட்டில் உள்ள இரு சாலைகளிலிருந்து பல வண்டிகள் வந்து பிரதான சாலையின் போக்குவரத்தோடு இணையும் அந்த இடத்தில் இந்த வேகம் ஆபத்தை விளைவிக்குமே என்ற எண்ண ஓட்டத்துடன் நான் ஓட்டிக் கொண்டிருந்தேன்.


என் கண் முன்னேயே, என்னைத் தாண்டிச் சென்ற அந்தப் புற்றீசல்களில் இரண்டு தடுமாறின. பல வண்டிகளுடன், ஒரு பெரிய வாகனம் பக்காவாட்டுச் சாலையில் இருந்து பிரதான சாலையில் இணைய, அது எதிர்பாராத விதமாக வேகத்தடையை உபயோகித்து நிற்க, மற்றொரு புற்றீசல் அதன் மீது மோதி தூக்கி எறியப்பட்டது.  நான் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், என் கண் முன் அது நடக்கும் போது சற்று அதிர்வாகத்தான் இருந்தது. அந்த உயிர் நிலை கொண்டதா இல்லை, அமைதியாகிப் பிரிந்ததா, இல்லைத் தடுமாறிக் கொண்டிருக்கின்றதா  என்று தெரியவில்லை! ஆனால், இந்த விபத்தால், அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அங்கிருந்த போக்குவரத்துக் காவலர் வந்ததும், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதும் மட்டும் தெரியும். “உயிரே!  உயிரே! வந்து என்னோடு கலந்து விடு! என்று மரணம் அழைக்கின்றதோ!

     விபத்துக்குள்ளானவர் இளைமையானவர், 28 வயதுக்குள் இருக்கலாம்.  இன்னும் அவர் தன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கலாம்! அவருக்குப்  பெற்றோர், மனைவி, குழந்தைகள், உடன்பிறந்தவர், சுற்றத்தார் இருக்கலாம். அவரையே சார்ந்து கூட அந்தக் குடும்பம் இருக்கலாம்! எத்தனையோ கனவுகளுடன் அவரும், அவரது குடும்பமும் இருந்திருக்கலாம். அப்படி இருக்கும் போது அவர் இன்னும் அதிகமான கவனத்துடன் வண்டி ஓட்டியிருக்க வேண்டும் இல்லையா? இந்த விபத்து பற்றி அறிய நேர்ந்தவுடன் அந்தக் குடும்பத்தின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? மனம் துடித்திருக்கும். ஒருவேளை அந்த மனிதர் காப்பீட்டுத்திட்டம் எடுத்திருந்தால், அதன் மதிப்புதான் இந்த உயிரின் விலையா?  மதிப்பா? இது ஒரு புறம் இருக்க...


சாலையில் குறுக்கிடும் விலங்குகள், பல சமயம், நமது கவனக் குறைவாலும், தவறான அணுகு முறையாலும் அடிபட்டு இறக்கின்றன!  அது “அது தானே என்ற அலட்சியப்போக்கா? அதே சமயம் அந்த விலங்குகள் வீட்டில் வளர்க்கப்படுபவையாக இருந்தால், அவற்றை வளர்ப்பவர்கள் வந்து, அதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லி (ஆடு, மாடு, கோழி...) அதற்கு நஷ்ட ஈடாகப் பணம் கேட்டுக் கோரிக்கை வைப்பதும் உண்டு! நியாயம்தான்! ஆனால், அந்தப் பணம் தான் அந்த உயிரின் மதிப்பா?  விலையா?  எத்தனை நாட்களுக்கு? இவ்வளவு ஏன்? மரம், செடி, கொடிகள் எல்லாவற்றிற்கும் கூட உயிர் உண்டுதான்! அவற்றின் காய்களையோ, பூக்களையோ நாம் பறிக்கும் போதும், அவற்றை நமது சுய லாபத்திற்காக வெட்டிச் சாய்க்கும் பொதும், விலங்குகளின் உயிரைப் பறிக்கும் போதும், அவற்றின் அனுமதியை நாம் பெறுகின்றோமா?


சுற்றுச் சூழலை மாசுபடுத்தியும் பல உயிர்களை வதைக்கின்றோம், பல உயிர் இனங்களை அவ்வின்ங்களே இல்லாது வேரோடும் அழித்து விடுகின்றோம்!


     நிற்க, மேற் சொன்ன சாலை விபத்துகள், அழிவுகள் ஒரு புறம் இருக்க மறுபுறம், ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நம்மில் எத்தனை பேர், இறைவனால்/இயற்கையால் தரப்பட்ட இந்த அற்புதமான, நம் அறிவுக்குப் புலப்படாத பல அதிசயங்களைச் சுமக்கும் இந்த உடலைப் பேணுகின்றோம்? அதன் உயிரை மதித்து அதன் ஆரோக்கியத்தைப் பாது காக்கின்றோம்? அதில்தான் எத்தனை அலட்சியப் போக்குகள்! நம் உடலானாலும் சரி, மனதின் ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையினாலும், அலட்சியப் போக்காலும் பல நோய்களை வரவழைத்துக் கொண்டு நம் உயிரை மாய்த்துக் கொள்வதும், மன ஆரோக்கியம் கெடுவதால் தற்கொலை செய்து கொள்வதும், நாம் நம் உயிரை மதிக்காமல் இழிவுபடுத்துவதைத்தானே குறிக்கின்றது?!

கடந்த மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சி. நண்பர் துளசியின் பள்ளி மேனஜ்மென்டின் உறுப்பினர் ஒருவரின் மகன் பொறியாளராகப் பங்களூரில் வேலை செய்கிறார். மணமாகி ஒன்றரை வருடமே ஆகியிருந்தது.  மனைவி ஒரு ஆயுர்வேத மருத்துவர்.  அவர்களுக்கிடையில் ஏதோ பிரச்சினை.  பிரச்சினையை தீர்க்க அந்த மருத்துவர் கண்ட ஒரே வழி தற்கொலை. இப்போது, கணவன் விசாரணைக் கைதி.  இதெற்கெல்லாம் என்ன நியாயங்கள் சொல்லப்பட்டாலும் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?  படித்தவர்கள் இப்படி நடப்பதை பார்க்கையில், உயிருக்கு என்ன மதிப்பு என்று மனது வலிக்கத்தான் செய்கிறது.

கரு வளரும் சமயம் அதன் உயிர் பிரிவதும், சிறு வயது மரணங்களும், அகால மரணங்களும் ஒரு புறம் இருக்க, வளரும் கரு, பெண் குழந்தை என்று தெரிந்தால் அதை அழிப்பதும், பிறந்த குழந்தை பெண் குழந்தையானால், அதை நெல் மணிக்கும், கள்ளிப் பாலுக்கும் தாரை வார்ப்பதும், நாம் ஒரு உயிரை எவ்வளவு துச்சமாகக் கருதுகின்றோம் என்பதற்கானச் சான்றுதானே!


அனாதைகளாக வாழ்ந்து உயிர் பிரியும் மனிதர்கள் எத்தனை பேர் உள்ளனர்! வயதானாலும் உயிர் பிரியாமல், படுத்த  படுக்கையாக இருந்தாலும் அது ஊசலாடிக் கொண்டிருக்கும் தருணங்களில், நாம் பொறுமையிழந்து “இந்தக் கிழம் எப்ப மண்டையப் போடுமோ என்று அங்கலாய்க்கும் தருணங்களும், மனிதர்களும் இருக்கத்தானேச் செய்கிறது நம் சமூகத்தினில்?!! அது சுற்றி இருப்பவர்களின், பணி செய்த களைப்பினால் வரும் வார்த்தைகளா இல்லை அந்த உயிர் பிரிந்து பிணத்தின் பின் வரும் பணத்திற்காக வரும் வார்த்தைகளா? எதுவாக இருந்தாலும் அந்த உயிர் இது போன்ற நிலைகெட்ட மனிதர்களின் வாயில் ஊசலாடிக் கொண்டுதான் இருக்கும்! ஆறறிவு படைத்த மனித குலம் எவ்வளவு கேவலாமாகவும், கீழ்தரமாகவும், ஆகிவிட்டது என்பதற்கான அடையாளங்கள் தானே மேற் சொல்லப்பட்ட உண்மைகள்? 

இது மட்டுமா? மனித குலம் மேற்கொள்ளும் போர்களும், குண்டுவெடிப்புகளும், காவல் துறை மேற்கொள்ளும் துப்பாக்கிச் சூடும் இதில் அடக்கம்தான்! உயிருக்கு மதிப்பு என்பது ரத்த வெள்ளம்தான்! பரிதாபம்!


இந்த இடத்தில், எங்கள் குடும்ப உறுப்பினரான ஒருவர்  மறதியாலும் (Alzheimer), நீரிழிவு நோயினாலும் (Diabetes) பாதிக்கப்பட்டத்  தனது அப்பாவை, அவரது இறுதி மூச்சு வரை மிக நேர்த்தியாக, எந்தவித மனவருத்தமுமோ, குறைபாடோ, அலுப்போ, சலிப்போ இல்லாமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கூடப்பிறந்தவர்கள் இருந்தும், தனி ஆளாகக் கவனித்துக் கொண்டதை இங்கு பதிவு செய்தே ஆக வேண்டும்! அவர் தன் வேலையில் இருக்கும் சமயம், அப்பா எழுந்தால் தெரிய வேண்டும் என்று அப்பாவின் கட்டிலுக்கடியில், அவரது கால் பதியும் இடத்திற்கருகில் ஒரு சென்சர் கருவி வைத்து, அது ஒலிஎழுப்பும் சமயத்தில் உடனே அப்பாவைக் கவனித்து, அவருக்குத் தேவையான பணிவிடை செய்து, அவர் மலம் கழிக்கக் கஷ்டப்பட்ட போது (மலம் வாதி வழியிலேயே நின்று விடும் சமயம்), கையில் உறை அணிந்து அதை மெதுவாக வெளியேற்றி, தந்தைக்கு கொடுக்க வேண்டிய நல்ல சத்துணவை அவ்வப்பொழுது செய்து கொடுத்து கவனித்துக் கொண்ட விதம் மிகவும் பாராட்டிற்குறியது!  இது போன்று, உயிருக்கு மதிப்பு கொடுக்கும், விரல் விட்டு எண்ணக் கூடிய மனிதர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றார்கள், நமக்குப் பாடம் புகட்டும் வகையில்!

மேலே சொல்லப்பட்ட எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்று: எல்லா உயிருமே ஒரு நாள், அது தங்கி இருக்கும் உடலாகிய இருப்பிடத்தை விட்டு, இந்த உலகை விட்டு விடை நல்கி, பிரிந்துதான் ஆகவேண்டும். அதுதான் உலகியல், அறிவியல் நியதி! இந்த மிகக் குறுகிய வாழ்க்கையில் கடுஞ் சொற்களால் நம்மைச் சுற்றி இருப்பவர்களை இழிவு படுத்துகின்றோம்! துன்புறுத்துகின்றோம்!  நம்மைச் சுற்றி இருப்பவர்களை அவர்கள் உயிரோடு நம்முடன் இருக்கும் வரை கவனிக்காமல், அன்பு செலுத்தாமல், அவர்கள் மனம் நோகும்படி சொற்களாலும், செயல்களாலும் வருத்தி விட்டு, அவர்கள இறந்ததும், மேளதாளங்களொடு வழி அனுப்புவதும், அவர்களுக்கு ஏதோ மரியாதை செலுத்துவது போல சடங்குகள் செய்வதும் விந்தையாகத்தான் உள்ளது! அப்படியென்றால், உயிர் பிரிந்த பிறகுதான் மதிப்போ? உயிர் இருக்கும் போது மதிப்பில்லையோ?

நம் உயிரின் மேல் மதிப்பும், காதலும் உள்ளவர்களாக இருந்தால், ஏன் சாலைகளில் வேகப் பயணமும், அலட்சியமும், விபத்துகளும்? நம் உடலின், மனதின் ஆரோக்கியத்தில் அலட்சியம்?

எனவே, நாம் உயிருடன் இருக்கும் போது நம் உயிரையும், உயிர் தன் இருப்பிடமாகக் கொண்ட இந்த உடலையும் சேர்த்துத்தான் மதிக்க வேண்டும். உயிர் பிரிந்தால் இந்த உடலுக்கேது மதிப்பு? நம் உயிரை மட்டுமல்லாது, நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஜீவ ராசிகள் ஏன், மரம் செடி கொடிகள் இன்ன பிற எல்லாவற்றையும், இந்த உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும், அவற்றின் உன்னதமான, விலை மதிக்க முடியாத உயிரையும், நாம் மதிக்க வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையை எழுதியதன் நோக்கம்!
-கீதா, துளசிதரன்